Saturday, March 10, 2012

பணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்! உதாரணத்திற்கு ஒருவர்!!

"நம்மால் பணம் இல்லாமல் வாழ முடியுமா?" இப்படியான "புத்திசாலித்தனமான" கேள்விகளை, உங்களது "அரசியல் ஆர்வமற்ற" நண்பர்கள் கேட்டிருப்பார்கள். முதலாளித்துவ அரசியலால் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள், பணம் என்பதும் ஒரு போதைவஸ்து என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். "உலகில் பல தீமைகளுக்கு காரணமான காசு, ஒரு பிசாசின் கருவி", என்று கருதுவோரும் இருக்கின்றனர். உலகின் அனைத்து மதங்களும் பணத்தை வெறுக்கின்றன.

ஆதி கால பொதுவுடைமை சமுதாயத்தில், பணப்புழக்கம் இருக்கவில்லை. மக்கள் பண்டமாற்று மூலம் வாழப் பழகி இருந்தனர். "மனிதகுல நாகரீகத்தின் உச்சமான கம்யூனிச சமுதாயத்தில், பணம் பாவனையில் இருக்காது." என்று பூவுலக சொர்க்கத்திற்காக கனவு கண்ட அறிஞர்களும் கூறியுள்ளனர். இன்றைய "நாகரீகமடைத்த" (அப்படி நாங்கள் கருதிக் கொண்டிருக்கும்) காலத்தில், பணம் இல்லாமல் வாழ முடியுமா? முடியும்! என்று பலர் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். யாரையும் சுரண்டி வாழாமல், உழைத்து உண்பது, அவசியமான பொருட்களை பண்டமாற்று செய்து பெற்றுக் கொள்வது, என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வாழ்க்கை வாழும் ஜெர்மன் மூதாட்டி ஒருவர் பற்றிய ஆவணப்படம் இது.

எந்த தருணத்திலும், பணத்தை பயன்படுத்தாமல், உங்களால் ஒரு வாரம் வாழ முடியுமா? இந்த மூதாட்டி 16 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! ஆரம்பத்தில் அவரது பிள்ளைகளும், நண்பர்களும், அந்த மூதாட்டியின் நலன் குறித்து கவலையடைந்தனர். ஆனால், போகப் போக அவரது வாழ்க்கை முறைக்கு மதிப்புக் கொடுத்து ஏற்றுக் கொண்டனர். ஹைடெமாரி ஷ்வெர்மர் (Heidemarie Schwermer ) , ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். (இன்று போலந்து, ரஷ்ய பகுதியான) பிரஷியாவை சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போரில், ரஷ்யப் படைகளால் விரட்டப் பட்டு, எல்லாவற்றையும் இழந்த அகதிகளாக ஜெர்மனி வந்து சேர்ந்தார்கள். ஜெர்மனியில் வணிகம் செய்து பொருளீட்டி, மீண்டும் வசதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

16 வருடங்களுக்கு முன்னர், ஹைடெமாரி தனது வீடு, சொத்துக்கள் எல்லாவற்றையும், கேட்பவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார். அன்றில் இருந்து இன்று வரை, பணத்தை பயன்படுத்தாமல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஒரு பண்டமாற்று கடை நடத்தி வந்தார். அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களிடம் இருந்த தேவையற்ற பொருட்களை கொண்டு வருவார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தேடும் பொருள் மற்றவரிடம் இருந்தால், கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். பண்டமாற்றுக் கடை, அந்த ஊர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அதன் வெற்றியைக் கண்டு பிரமித்த ஹைடெமாரி, வாழ்க்கை முழுவதும் பணமில்லாமல் வாழ முடிவு செய்தார்.

பணமில்லாமல் வாழ்வது எப்படி? முன்னர் ஒரு காலத்தில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஹைடெமாரி, தனது ஓய்வூதியப் பணத்தையும் வேண்டாமென்று கூறி விட்டார். கடைகளை கூட்டித் துப்பரவாக்குவது, தோட்ட வேலை, மற்றும் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றார். அவரது உழைப்பைப் பெற்றுக் கொண்டவர்கள், பணத்திற்குப் பதிலாக உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். உணவு மட்டுமல்ல, தங்குமிடம், உடைகள் போன்றவற்றை கூட வேலைக்கு கூலியாக பெற்றுக் கொள்கின்றார். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியப் படுவதில்லை. குறிப்பாக வேறு இடங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தால், பணம் கொண்டு செல்வது தவிர்க்க முடியாததாகின்றது. வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வாழும் நண்பர்கள், பயணச்சீட்டு அனுப்பி வரச் சொல்கின்றனர். அங்கு சென்று "பணமில்லாத வாழ்க்கை" பற்றி விரிவுரையாற்றுவதன் மூலம், அந்த செலவை ஈடுகட்டுகின்றார்.

இத்தாலியில் ஒரு பாடசாலையில் விரிவுரையாற்றும் காட்சி, ஆவணப் படத்தின் தொடக்கத்தில் வருகின்றது. "பணமில்லாமல் வாழ்வதாக கூறிக் கொள்ளும் இந்த மாது, மற்றவர் உழைப்பில் வாழ்வதாக..." மாணவர்கள் தவறாக நினைக்கின்றனர். உலகம் தன்னை எவ்வாறு பார்க்கின்றது என்பதை ஹைடமாரி பின்வருமாறு விளக்குகிறார்: "சிலரைப் பொறுத்த வரையில் நான் பிரச்சினையை உருவாக்குகிறேன். சிலருக்கு நான் பிரச்சினைக்கான தீர்வாகத் தெரிகிறேன்." தன்னைப் பார்த்து பரிகசிக்கும் கூட்டம் குறித்தும் விசனமுற்றிருக்கிறார். ஹைடமாரியின் வினோதமான வாழ்க்கை பற்றி கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், அவரை நேர்கண்டு ஒளிபரப்புகின்றன. ஒரு தடவை இத்தாலியின் RAI தொலைக்காட்சி, வீடியோவை "எடிட்" செய்து, பிழையான சித்திரத்தைக் காட்டியது. அதன் பிறகு, வர்த்தக நோக்கம் கொண்ட ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்று முடிவு செய்தார். ஹைடமாரி, "பணமில்லாமல் வாழ்வது எப்படி?" என்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நூல் விற்பனையில் கிடைக்கும் "ராயல்ட்டி" தொகையை, தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

இன்று , அமெரிக்காவிலும், பல்வேறு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், பணமில்லாமல் வாழுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலாளித்துவத்தின் மிகப் பெரிய குறைபாடான நிதி நெருக்கடிக்கு தீர்வாக, அதைக் கருதுகின்றனர். இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், தேவையில்லையென வீசப்படும் பொருட்கள், இவற்றை பயன்படுத்தியே சந்தோஷமான வாழ்க்கை வாழலாம். நெதர்லாந்தில், பணமில்லாமல் வாழ விரும்புவோர் அமைப்பு ரீதியான தொடர்பாடலைக் கொண்டுள்ளனர். அந்த வலையமைப்பில் யாரும் சேரலாம். முதலில், உங்களுக்கு என்னென்ன வேலை தெரியும் என்பதை தெரிவிக்க வேண்டும். தேவைப் படுவோர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் அவருக்கு செய்து கொடுக்கும் வேலைநேரத்தை கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதேயளவு நேரத்திற்கு, அல்லது அதை விட அதிகமாக, அவர் உங்களுக்கு தேவையான வேலைகளை வந்து செய்து கொடுப்பார். சேவைகளை தவிர, பொருட்களையும் பண்டமாற்று செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், எல்லோரும் பயனடையலாம். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணப்புழக்கம் இருக்காது என்பது குறிப்பிடத் தக்கது.

பணமில்லாமல் வாழும் வயோதிப மாது பற்றிய ஆவணப் படத்தின் DVD யை, ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பார்க்கவும்.
அதற்கான இணைப்பு:LIVING WITHOUT MONEY

Living Without Money - trailer from Without Money on Vimeo.


1 comment:

ABUBAKKAR K M said...

puraathana commumism patriya oru BOOK-il ithupatri patithu irukkiraen. adippadaiyil naam ovoruvarum COMMUNIST-kalae, athaavathu , naam namathu kutumbaththai nesikkirom, nammaal mutinthathai seithu ,uLaikkirom, aanaal thevaiyanaathai mattum petrukkoLkirom,i.e,
athikam panam sambaathikkum appavkku 10 idli-yum , pension vaangum Thaathaavukku 2 idli-yum, patikka sellum thambi/thangaikku oru idli-yum koduppathu illai- thevaikku erppa kotukkirom. ATHU MAATHIRI THAAN ITHUVUM. NAMATHU KUDUMAM ENPATHAIYUM THAANDI NAMATHU SAMUHAM ENDRU NESITHTHU PAARUNGAL, ithu nichchayam mudiyum