கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்ள மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது சொத்துக்களை சூறையாடிய காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இன்றைய கடாரம் மலேசியாவின் தனி மாகாணமாக உள்ளது. அங்கு வாழும் மக்கள் இன்றைக்கும் சோழப் படைகள் செய்த இனப்படுகொலைகளை நினைவுகூர்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், அன்றைய ராஜராஜசோழன், இன்றைய ராஜபக்சே மாதிரியான ஒருவன். |
---|
மதிகெட்ட தமிழினவாதிகள் மறைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை!
ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பாண்டிய நாட்டையும், ஈழ நாட்டையும் ஆக்கிரமித்த சோழப் படைகள் அங்கு வாழ்ந்த மக்களை பிராமணர்கள், தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் இனப்படுகொலை செய்துள்ளனர். சோழப் படைகள் சென்றவிடமெல்லாம் மக்களை இனப்படுகொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் வழமையானவை.
அயல்நாடுகளில் வாழ்ந்த மக்கள் சோழ இராணுவத்தைக் கண்டு அஞ்சினார்கள். ஆனால், படுகொலைகளையும், சூறையாடுவதையும் சோழர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர். பிற நாடுகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு பகுதி கோயில்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் ராஜராஜசோழன் முன்னூறு கிலோ தங்கம் தானம் கொடுத்ததாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
சோழ நாட்டு பொருளாதாரம் கோயில் நகரங்களில் தங்கி இருந்தது. பெருமளவு நிலங்களை கையகப் படுத்தி வைத்திருந்த, கோயிலை மையமாகக் கொண்டு இயங்கும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வணிகர் சங்கங்கள் அரசனுக்கு வரி கட்டுவதில்லை. ஆகையினால், அரச கஜானாவை நிரப்புவதற்காக அயல் நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை சோழர்கள் ஒரு கொள்கையாக வைத்திருந்தனர்.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, by Paul Michel Munoz)
******
ராஜராஜசோழன் - செங்கிஸ்கான் நட்புறவு வாழ்க!
ராஜராஜசோழன் - செங்கிஸ்கான் நட்புறவு வாழ்க!
"மொங்கோலிய- ராஜராஜசோழன்" செங்கிஸ்கானை, தமிழினவாதிகள் தமது "தமிழ்- செங்கிஸ்கான்" ராஜராஜசோழனுடன் ஒப்பிட்டு பெருமைப் படுவதில் தவறில்லை. அதற்காக "தமிழீழத் தேசியத் தலைவர் மகிந்த ராஜபக்ச...." என்ற மாதிரி தப்புத் தப்பாக எழுதி பதிவு போடுவது நல்ல நகைச்சுவை.
"மொங்கோலிய ராஜராஜ சோழன்" செங்கிஸ்கானின் படையெடுப்புகளை தடுப்பதற்காகத் தான் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டது. அப்படி இருந்தும் மொங்கோலியப் படைகள் சீனாவை கைப்பற்றி ஆக்கிரமித்தன. செங்கிஸ்கானின் பேரனின் ஆட்சிக் காலம் வரையில் சீனா மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் கீழான அடிமை நாடாக இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பீரங்கியான "ஈழத்து மாரிதாஸ்" என அழைக்கப்படும் வாசு முருகவேள், மொங்கோலியாவை சீனாவுடன் போட்டு குழப்பிக் கொள்கிறார். இப்படி ஒரு அரைவேக்காட்டுத் தனமான பதிவு எழுத முன்னர் கொஞ்சம் வரலாறு படிக்க வேண்டும். பொல்லுக் கொடுத்து அடிவாங்கக் கூடாது.
தமிழ்த் தேசியத்தை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு "ராஜராஜ சோழன் எம் முப்பாட்டன்" என்று கூவும் சில தமிழர்கள் மாதிரி, "செங்கிஸ்கான் எம் முப்பாட்டன்" என்று சில மொங்கோலியர்கள் கூவுகிறார்கள். தமிழ்த் தேசியத் தந்தை ராஜராஜசோழன் என்றால், மொங்கோலியத் தேசியத் தந்தை செங்கிஸ்கான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
அது மட்டுமல்ல, உங்களுடைய ராஜராஜ சோழனும், அவர்களுடைய செங்கிஸ்கானும் ஒரே காலகட்டத்தில் ஒரே மாதிரி நடந்து கொண்டனர். உண்மையிலேயே அன்றைய செங்கிஸ்கானின் பேரரசு, சோழப் பேரரசுடன் நட்பாக இருந்தது. சீனாவில் சோழ வணிகர்களின் குடியிருப்பும் இருந்தது. அப்போது கட்டிய சைவக் கோயில் இன்னமும் இடிபாடுகளுடன் அங்குள்ளது.
தமிழ்நாடாக இருந்தாலும், மொங்கோலியாவாக இருந்தாலும் தேசியவாத/இனவாதக் கொள்கை ஒன்று தான். இனம் இனத்தோடு தானே சேரும்? இனி என்ன? மொங்கோலிய இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் இடையிலான மாமன், மச்சான் உறவை புதுப்பிக்க வேண்டியது தானே?