Showing posts with label தனியுடைமை. Show all posts
Showing posts with label தனியுடைமை. Show all posts

Friday, June 06, 2014

தனியுடைமையை முதலாளித்துவமே ஒழித்து விடும்


கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஓரிடத்தில் இவ்வாறு எழுதி இருந்தார். "கம்யூனிஸ்டுகளான நாங்கள் தனியுடைமையை ஒழிக்கப் போவதாக, எம் மீது குற்றஞ் சாட்டுகின்றீர்கள். அதை நாங்கள் செய்யத் தேவையில்லை. தனி உடமையை முதலாளித்துவமே ஒழித்துக் கட்டி விடும்." இன்றைய நெதர்லாந்து தினசரிப் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.

உலகம் முழுவதும் நடப்பதைப் போல, நெதர்லாந்திலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. சமூகத்தில் சமத்துவமின்மையை அளவிடும் புள்ளிவிபரம் வெளியிடப் பட்டுள்ளது. அது இன்று முக்கியமான விவாதப் பொருளாகி உள்ளது.

சமத்துவமின்மை பற்றிய புள்ளிவிபரத்தில் இருந்து தெரிய வருவதாவது, "சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள செல்வந்தர்களான 10%, சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள், நாட்டில் உள்ள மொத்த தனியார் சொத்தில் 60% ஆகும்! அதி உச்சத்தில் உள்ள 2% பணக்காரர்கள் மட்டும், மூன்றில் ஒரு பங்கு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர்." 
சமூகத்தில் அடி மட்டத்தில் உள்ள 10% மக்களிடம் சொத்து எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் கடன் மட்டும் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும், தமிழர்களில் பலர், அடித்தட்டில் உள்ள 10% ற்குள் அடங்குகின்றனர். "சொந்தமாக" வீடு வாங்கி வைத்திருப்பதாக, "சொந்தமாக" கார் வாங்கி வைத்திருப்பதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவை அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல. மாறாக, வங்கிகளுக்கு சொந்தமான கடன்கள்.

அரச கொள்கை வகுப்பதற்கான ஆலோசனை சபை (Wetenschappelijke Raad voor het Regeringsbeleid சுருக்கமாக: WRR)அந்த அறிக்கையை தயாரித்து இருந்தது. ஆமாம், அது ஒரு நெதர்லாந்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம் தான். அதனால் கூட இந்த கசப்பான உண்மைகளை மறைக்க முடியவில்லை: "பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள்  மென்மேலும் ஏழைகள் ஆகிறார்கள்."

நெதர்லாந்தில் எந்தளவுக்கு சமத்துவமின்மை நிலவுகின்றது என்பதை கண்டறிந்த ஆய்வின் முடிவுகளை இங்கே சுருக்கமாகத் தருகிறேன். சமூகத்தின் மேல் தட்டில் உள்ள பணக்கார 10% கும், கீழ்த்தட்டில் உள்ள வறுமையான 10% இடையிலான வேறுபாடு விரிவடைந்து கொண்டு செல்கின்றது. உதாரணத்திற்கு, சில புள்ளிவிபரங்கள்:
  • 1977 ம் ஆண்டு, அடித்தட்டில் வாழும் பத்து சதவீதத்தின் சராசரி வருடாந்த வருமானம் 10700 யூரோக்கள். 2011 ம் ஆண்டு, அந்தப் பிரிவினரின் வருமானம் 10300 யூரோக்கள். அதாவது 4% இழப்பு.
  • அதே வருட காலத்தில், மேல்தட்டு பணக்கார பத்து சதவீதத்தின் வருமானம் 112000 யூரோக்களில் இருந்து, 144000 யூரோக்களாக அதிகரித்துள்ளது. அதாவது 28% வருமான அதிகரிப்பு.


இந்த இடைவெளி எவ்வாறு அதிகரித்தது? ஆய்வாளர்களின் கருத்துப் படி, அண்மைக் கால தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். உயர்ந்த கல்வித் தகைமை கொண்டவர்கள், கணனிக்கு முன்னால் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அதே நேரம், அதே கணனிகள் தான் குறைந்தளவு கல்வித் தகைமை கொண்ட தொழிலாளர்களுக்கு பதிலாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அடித்தட்டு மக்களிடம் இருந்து வேலைகள் பறிக்கப் பட்டதால், அவர்கள் ஏழைகள் ஆகின்றனர். பறிமுதலான வேலைகள் காரணமாக மிச்சம் பிடிக்கப் படும் செலவுகள், இலாபமாக மாறி மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் பைகளை நிரப்புகின்றது. 

அதற்கு அடுத்த படியாக உலகமயமாக்கல். தொலைபேசி, இணையம் ஆகியவை தற்போது இலகுவாகவும், மலிவாகவும் கிடைப்பதால், பணக்காரர்களுக்கு தான் அதிக இலாபம். ஊதியம் குறைந்த நாடொன்றில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு, வருமான வரி குறைவாக உள்ள நாட்டில் அலுவலகம் அமைத்துக் கொண்டு, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடிகின்றது. குறைக்கப்படும் உற்பத்திச் செலவுகளில் இருந்து கிடைக்கும் நிகர இலாபம், பணக்காரர்களின் கஜானாவை நிரப்புகின்றது. இது போன்ற நடவடிக்கைகளால், நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளுக்கு நேரடியான பலன்களும், பங்குச் சந்தையில் முதலிடும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மறைமுகமான நன்மைகளும் கிடைக்கின்றன. 

மேல்தட்டு வர்க்கப் பெண்களும் நிர்வாகத் துறைகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அந்த வர்க்கத்தில் வருமானமீட்டுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும், குறைந்த வருமானம் ஈட்டும் ஏழைப் பெண் தொழிலாளியை விட, உத்தியோகம் பார்க்கும் பெண்கள் அதிகமாக சம்பாதிக்கின்றனர். பெண்களை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பிரிவினராக, சில பெண்ணியவாதிகளும் கருதுகின்றனர். இறுதியில், வர்க்கமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது என்பதை, இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றது.

நடுத்தர வர்க்கத்தில் ஒரு கணிசமான தொகையினர், எந்த சொத்தையும் சேர்த்து வைப்பதில்லை. அதுவும், சமத்துவமின்மை அதிகரிக்க காரணமாக உள்ளது. ஏனென்றால், நெதர்லாந்தில் பல தசாப்தங்களாக நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. (சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்ற, மக்கள் நலன்களுக்கான முற்போக்கு பொருளாதார திட்டங்கள்.) அதனால், பலருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் இருக்கவில்லை. குறிப்பாக, கீழ் நடுத்தர வர்க்கம் சொத்து எதையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கவில்லை. (மறுபக்கத்தில், அவர்களும் அதிக கடன்களை வாங்கி வைத்துள்ளனர்.)

நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிய காரணத்தினால், நெதர்லாந்தில் சமத்துவமின்மை இடைவெளி குறைவு என்று பலர் நினைத்தார்கள். வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களும் அப்படி நினைத்துக் கொண்டார்கள். ஒரு கம்பனி நிர்வாகி எவ்வளவு அதிகமான சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? என்று பலரிடம் கேள்வி கேட்கப் பட்டது.

அதாவது, ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளி, மாதம் ஒன்றுக்கு 1000 யூரோ சம்பளம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நிறுவனத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் நிர்வாகியின் சம்பளம் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்?

ஒரு நிர்வாகி, சாதாரண தொழிலாளியை விட பதினோரு மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில், ஐந்து மடங்கு அதிக சம்பளம் வாங்குவது நியாயமானது. ஆனால், உண்மை நிலவரம் என்ன தெரியுமா? ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட, நிர்வாகியின் சம்பளம் பதினேழு மடங்கு அதிகமாக உள்ளது!

இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

WRR  சில ஆலோசனைகளை முன்வைக்கின்றது.
  • சொத்துக்களுக்கான வரி அதிகரிக்கப் பட வேண்டும். அதே நேரம், குறைந்தளவு ஊதியம் வாங்கும் வேலை செய்து சம்பாதிப்பவரின் வருமான வரி குறைக்கப் பட வேண்டும்.
  • அடி மட்டத்தில் வேலை செய்வோரின், அதி குறைந்த அடிப்படை சம்பளத்தின் அளவு கூட்டப் பட வேண்டும். தொழிலாளர்களும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும் திட்டம் வரவேற்கப் பட வேண்டியது.
  • சந்தையில் விற்கும் பொருட்களில் ஒரு தர நிர்ணய லேபிள் ஒட்டி விடலாம். உதாரணத்திற்கு, கனடாவில் சந்தையில் விற்கப்படும் சில பொருட்களின் மேல் ஒரு லேபிள் ஓட்டப் பட்டிருக்கும். அந்தப் பொருள் உற்பத்தி செய்யப் பட்ட நிறுவனத்தில், குறைந்த பட்ச, அதிக பட்ச சம்பள வேறுபாடு 1:8 என்ற விகிதத்தில் இருக்கிறது என்று, அந்த லேபிள் குறிப்பிடுகின்றது. ஆகவே, பாவனையாளர்களும் அத்தகைய நிறுவனங்களை ஊக்கவிக்க முன்வருவார்கள்.