Showing posts with label ஐரோப்பிய சொர்க்கம். Show all posts
Showing posts with label ஐரோப்பிய சொர்க்கம். Show all posts

Saturday, February 06, 2010

ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்

பெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலியா மதில்கள் பற்றி...? தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். மொரோக்கோ நாட்டின் வட பகுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சிறு துண்டு நிலப்பகுதிகளே செயுத்தா, மெலியா. இவை வறிய மூன்றாம் உலகமான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அமைந்திருகின்றன. ஐரோப்பாவினுள் நுழைய விரும்பும் அகதிகள் சுலபமாக ஊடுருவலாம் என்ற அச்சம், முதலாம் உலகைச் சேர்ந்த ஸ்பெயினுக்கு எழவே மதில் கட்டவாரம்பித்தது.

இங்கே கட்டப்பட்டுள்ள மதில்கள், பெர்லின் மதிலை விட நீளமானதும், மிகவும் பாதுகாப்பானதுமாகும். இரும்புக் கம்பிகளினால் ஆக்கப்பட்ட இந்த மதில்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதைமீறி எந்த அகதியும் ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழைய முடியாது. நுழைபவர் உயிரோடு திரும்ப முடியாது.


இந்த நுழைவாயில் மதில்களை ஊடுருவ முடியாது என்பதை அறிந்துள்ள அகதிகள் வேறு வழியை நாடுகின்றனர். மொரோக்கொவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையில் ஜிப்ரால்டர் நீரினை உள்ளது. இதன் தூரம் வெறும் 20 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு சிறு வள்ளத்தின் உதவியோடு கடந்து விடலாம். ஆனால் கடற்படையினர் கண்ணில் எண்ணையை விட்டு ரோந்து செல்கின்றனர். சில வேளை கடற்படையினர் அகதி வள்ளங்களை வழி மறித்து தாக்கலாம். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் என்ன? தினம் தினம் இந்த நீரிணையை தாண்டி அக்கரை செல்வதற்கு, மொரோக்கோவில் ஒரு அகதிகள் பட்டாளமே காத்திருக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அட்லாண்டிக் சமுத்திரம் உள்ளது. இந்த வழியாக வருவதானால் கப்பல் மூலம் தான் வந்திறங்க வேண்டும்.

2001 ம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள், தென் பிரான்சின் கரையை வந்தடைந்த மாலுமிகளற்ற கப்பலில் 908 குர்திய அகதிகள் வந்திறங்கினர். அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ஐரோப்பாவெங்கும் எச்சரிக்கை மணி அடித்தது. சில நாட்களின் பின்னர் நெதர்லாந்தை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை, அகதிக் கப்பல் என தவறாக புரிந்து கொண்டு ஹெலிகப்டர்கள் வட்டமிட்டன. சோதனையின் பின்னர் அது நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் என்று தெரிந்த பின்பும் அரசியல்வாதிகளின் மனதில் எழுந்த கிலி அகலவில்லை.

பிரித்தானியா, ஐரோப்பிய பெரு நிலத்தோடு ஒட்டாத தனித் தீவு. இதனால் அங்கு சட்டவிரோதமாக நுழைவதும் சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்து செல்வதை தமது வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மூன்றாம் உலகைச் சேர்ந்த பல அகதிகள், தடை பல கடந்து லொறிகளுக்குள் ஒளிந்திருந்து செல்வதுண்டு. அப்படியொரு முறை நெதர்லாந்தில் இருந்து சென்ற லாரி ஒன்றினுள், பொருட்களோடு பொருட்களாக மறைந்திருந்து சென்ற சீன அகதிகள், இங்கிலாந்தினுள் நுழைந்த போது உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த செய்தி ஏற்படுத்திய உணர்வலைகளின் பின்னால் உண்மை மறைந்து போனது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது பலருக்கு தெரியாது. அந்த அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி நெதர்லாந்தில் இருந்து புறப்படும் போதே, அதனுள் சீன அகதிகள் ஒளிந்திருக்கின்றனர் என்ற விடயம் (நெதர்லாந்து) அரச அதிகாரிகளுக்கு தெரியும்! இந்தக் ஆட் கடத்தலை ஒழுங்கு செய்த நபர்களை கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக லாரி இங்கிலாந்து எல்லை வரை செல்ல விடப்பட்டது. இங்கிலாந்து காவல்துறை லாரியை ஒரு நாள் முழுவதும் மறித்து வைத்து, வேண்டுமென்றே தாமதப் படுத்தியதாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு அகதிகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்படியான சட்டங்களும், எல்லைகள் இறுக்கப் பட்டதுமே, மேற்படி மரணங்கள் நிகழ வழி சமைத்துள்ளன, என்ற விமர்சனம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருப்பவை, "முன்னாள் சோஷலிச முகாம்" நாடுகள். மேற்கைரோப்பிய பாணி ஜனநாயகத்தை தழுவியதில் இருந்து வறுமையில் வாடும் நாடுகளுக்கு, அகதிகள் பட்டாளம் வந்து சேர்கின்றது. இங்கிருந்தபடியே கண்ணுக்கு புலப்படாத கிழக்குப் புற மதில்களை ஊடுருவி, ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழையும் முயற்சிகள் இடையறாது இடம்பெறும். எல்லையை கண்காணிக்கும், இருட்டில் துல்லியமாகப் படம்பிடிக்கும் கமெராக்கள். அகதிகளின் படையெடுப்பு இடம்பெறுவதை எல்லைக் காவல் பணி மனைக்கு அறிவிக்கும். பிறகென்ன, "ஊடுருவல்காரர்கள்" கைது செய்யப்பட்டு வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுவர்.

சில எல்லைப்புற நுழைவாயில்கள் ஆபத்து நிறைந்த மலைப் பாதைகளாகவிருக்கும். குளிர்காலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பனி படர்ந்த மலையுச்சியில் ஏறி இறங்கி வர வேண்டியிருக்கும். வலையில், கூட வருவோர் செத்து மடிந்தாலும் அதைப் பார்க்காது தொடர்ந்து நடக்க வேண்டும். இது சிலவேளை சீனாவில் மாவோ தலைமையில் நடந்த நீண்ட நீண்ட அணிவகுப்பை நினைவுபடுத்தலாம். ஆனால் எமது அகதிப்படையின் லட்சியம் ஐரோப்பிய சொர்க்கத்தை அடைவது மட்டும் தான்.

இதுவரை கூறப்பட்ட விவரணங்கள் யாவும் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள், பலமான கோட்டை மதில்களைப் போல பாதுகாக்கப் படுவதை தெரிவிக்கின்றன. ஐரோப்பியக் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த எல்லைப்புற மதில்களைத் தாண்டி, உள்ளே நுழைய முயன்ற சுமார் 2000 அகதிகள் உயிரிழந்துள்ளனர். காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்த போதிலும், ஐரோப்பாவினுள் நுழைவதற்காக எல்லைப்புற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். ஐரோப்பியர் இவர்களை, "அரசியல் அகதிகள்", "பொருளாதார அகதிகள்" என வகைப் படுத்தலாம். ஆனால் அவர்கள் எப்படி அழைத்த போதிலும், எல்லோரும் ஒரே மாதிரியான பிரச்சினையை கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களல்ல.

சில நாடுகளில் நடைபெறும் யுத்தங்களின் பின்னால் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. வேறு பல நாடுகளில் அமைதி நிலவுவது போல தோன்றினாலும், அது புயலுக்கு முன்னாலான அமைதி தான். இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வசதி வாய்ப்புகளற்று வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர். இவர்களனைவரும் வறுமை நிலையில் இருந்து மீளவும் வசதிபடைத்தோர் போல வாழவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே, குறைகளைப் போக்க ஆண்டவனிடம் சென்று முறையிடுமாறு கூறப்பட்டது. இந்தக் கோட்பாடு, பின்னர் சிறிதே மாற்றப்பட்டு, பணக்கார நாடுகளுக்கு செல்லுமாறு வழிகாட்டப்பட்டது. இதுவே யதார்த்தம் என நம்பும் அப்பாவி மக்கள், தமது உறவை விட்டு, ஊரை விட்டு ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

உலகமயமாக்கல் திட்டத்தில் ஒன்று, வறிய நாடுகளில் உள்ள மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்வதாகும். இந்நாட்டு தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியம், எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தையும் முதலீடு செய்யத் தூண்டும். குறைந்தளவு முதலீட்டில் கூடிய லாபமீட்ட எதுவாயிருக்கும். மூன்றாம் உலக நாடுகளில் வறுமை நிலை மாற எந்தவொரு வர்த்தக நிறுவனமும் விரும்பப் போவதில்லை. இந்நாடுகளில் நடக்கும் ஊழலாட்சிகள் பற்றி கூட, தமது வர்த்தகத்தை பாதிக்கும் போது மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்நாடுகளின் மீது சுமத்தப்படும் கடன் சுமை, வறுமையிலிருந்து மீள்வதை தடுக்கும் இன்னொரு காரணம்.

சில நாடுகள், ஐ.எம்.எப்., உலகவங்கிக்கு திருப்பி செலுத்தும் வட்டியே, அந்நாடுகளின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை எடுக்கின்றன. மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில் கணிசமான அளவு, கடனுக்கு வட்டியாக பணக்கார நாடுகளுக்கு போகின்றது. இதிலிருந்து பணக்கார நாடுகள், அந்நிய நாட்டுக் கடன்கள் மூலம் தமது நிரந்தர வருமானத்தை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகும். பணக்கார நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்குமான உறவை வைத்து பார்க்கும் பொழுது, பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயரும் அகதிகளின் பக்கமுள்ள நியாயத்தன்மை புலனாகும்.

மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் இந்த உண்மைகளை அறிந்திரா விட்டாலும், பணக்கார நாடுகளின் அரசுகள் இது பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. செல்வத்தில் தமக்கும் பங்கு கேட்டு, வறிய நாடுகளின் மக்கள் படையெடுக்கலாம் என்ற அச்சமே கோட்டை மதில்கள் கட்டத் தூண்டியது. அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் கூட அத்தகைய மதில் கட்டப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தமது நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை, பணக்கார நாடுகள் எதிரிகளாக பார்க்கின்றனவா? ஆயுதந் தரிக்காத எதிரிகளின் படையெடுப்பில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் எல்லைகளைப் பலப்படுத்துகின்றனவா?

(தொடரும்)

["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]