Showing posts with label ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். Show all posts
Showing posts with label ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். Show all posts

Friday, February 05, 2010

கடவுளின் நிறம் என்ன?

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை "மல்கம் எக்ஸ்" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை போலீசார் தாக்குவதும், அமெரிக்க தேசியக்கொடி தீப்பற்றி எரிவதுமாக படத்தின் ஆரம்பக் காட்சிகள் அமைந்துள்ளன.

பிற்காலத்தில் தலைவராவதற்கு உரிய எந்த அறிகுறியும், இளம் மல்கமிடம் இருக்கவில்லை. சராசரி கறுப்பின இளைஞனாக தனது நண்பர்களுடன் வீதியில் வலம் வருகிறார். வெள்ளை நிறக் காதலியுடன் உல்லாசமாக பொழுது போக்குகிறார். இதைவிட நிழல் உலகத் தொடர்புகள், போதைப் பொருள் பாவனை, இரவு விடுதிகள், திருட்டுகள் என வாழ்ந்து வந்தவர். வீடுடைப்பு திருட்டில் அகப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகின்றார். தனிமைச் சிறையில் வாடும் போது, அங்கே ஒரு கிறிஸ்தவ மத போதகர் வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க மல்கம் விரும்பவில்லை. "உங்கள் இயேசு எனக்கு எதுவுமே செய்யவில்லை. வெள்ளையர் பக்கமே நிற்கிறார்." என விரக்தியின் விளிம்பில் கதறுகின்றார்.

எந்த மாற்றமும் இன்றி நகரும் சிறை வாழ்க்கையில் ஒரு கறுப்பின இஸ்லாமிய மத போதகர் குறுக்கிடுகிறார். உன்னை சிறையில் இருந்து விடுவிக்கும் வழி தெரியும், என மல்கமை கவருகின்றார். அவரோடு சமூக-அரசியல் உரையாடலை நடத்துகிறார்.
மதபோதகர்: கடவுளின் நிறம் என்ன?
மல்கம்: வெள்ளை
மத போதகர்: இல்லை கருப்பு.
மல்கம்: (சிறு அதிர்ச்சி) கடவுள் அழகானவர், வெள்ளை நிறமானவர் எனத்தான் படித்திருக்கிறேன்.
மத போதகர்: வெள்ளைக்காரன் உருவாக்கிய கடவுள் வெள்ளையாகத் தான் இருப்பார்.
இந்த உரையாடல் மல்கமின் சிந்தனையை தூண்டுகிறது. அவர் மேலும் இஸ்லாமிய தத்துவங்களை படித்து தெளிவடைகிறார்.

ஒரு முறை கிறஸ்தவ மத போதகர் ஒருவரின் பிரசங்கம் இடம்பெறுகின்றது. பைபிளை விபரித்து விட்டு யாராவது கேள்வி கேட்கலாம் என்கிறார். அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த மல்கம், "கர்த்தரின் குமாரரான இயேசு கிறிஸ்துவின் நிறம் என்ன?" என வினவுகின்றார். வெள்ளை எனப் பதில் வருகின்றது.
"பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஹீபுரு மொழி பேசுவோரின் நிறம் என்ன?"
"இது பற்றி சரியாகத் தெரியாது. ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் வரவில்லை."
"அவர்களின் நிறம் வெள்ளை அல்ல."
"ஆம்"
"ஆகவே யூத இனத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவும் வெள்ளையாக இருக்க முடியாது."
"இல்லை...இல்லை... அவர் வெள்ளை நிறமும் நீலக் கண்களும் கொண்டவர். அப்படித்தான் வரைபடங்கள் காட்டுகின்றன."
"அவை வெள்ளையர்களால் வரையப் பட்டவை. ஆதி கால முதல் மனிதன் வெள்ளை நிறத்தவனாக இருந்திருக்க முடியாது."

சிறையிலிருந்து விடுதலையான மல்கம், புது மனிதனாக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். கிறிஸ்தவ மதம் வெள்ளையர் உடையது. அடிமைத்தளையை உடைக்க விரும்பும் கருப்பர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும், எனப் பிரச்சாரம் செய்கிறார். இவரின் அமைப்புக்கு பல்லாயிரக்கணக்கான கருப்பர்கள் வருகின்றார்கள். மல்கமின் பேச்சாற்றல் பலரைக் கவருகின்றது. ஒரு முறை, பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்ட கறுப்பின இளைஞனை மீட்க, படை திரட்டி வருகிறார் மல்கம். அவருக்குப் பின்னால் திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து போலிஸ் அதிகாரிகள் பிரமித்துப் போகிறார்கள்.

அமெரிக்கா முழுவதும் பிரபலமான கறுப்பினத் தலைவரான மல்கமை, தொலைக்காட்சி பேட்டி எடுக்கின்றது. அதில் ஒரு கேள்வி: "உங்கள் பெயருடன் எக்ஸ் (X ) சேர்த்துக்கொள்ள காரணம் என்ன?"
மால்கம்: "நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கறுப்பர்களுக்கு, அவர்களின் எஜமானின் பெயரே குலப் பெயராக சூட்டப்பட்டது. தமது நாட்டை, பெயரை இழந்த கறுப்பின அடிமைகள், தமது எஜமானின் பெயரால் இனங் காணப்பட்டனர். இவர்களது மூதாதையரின் பெயர் தெரியாததால் எக்ஸ் எனப் போட்டுக் கொள்ள விரும்புகின்றேன்." (தமது பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற பெயரை சூட்டும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம்.)

முஸ்லீமாக மதம் மாறிய மால்கம் எக்ஸ், மெக்காவுக்கு யாத்திரை போகின்றார். இதன் பின்னர் உலகின் பல்லின மக்களை இஸ்லாம் இணைப்பதை காண்கிறார். (மத மாற்றம் மட்டுமே மக்களின் விடுதலையை பெற்றுத் தராது. இருப்பினும் மால்கம் எக்ஸ் இவ்வழியை சிறந்தது எனக் கருதினார்.) கருப்பர்கள் தமக்குள்ள ஒற்றுமையாக வாழ வேண்டும். இனங்களுக்கு இடையிலான பிரிவினை நிரந்தரமாக்கப் பட வேண்டும்." என்று தனது இறுதிக் காலத்தில் மால்கம் எக்ஸ் முழங்கினார். பொதுக் கூட்ட மேடை ஒன்றில் பேச வருகையில், போட்டி இயக்கத்தை சேர்ந்த சதிகாரர்களால் சுடப்பட்டு மரணிக்கிறார்.

ஒரு தலைவனின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது. மால்கம் எக்ஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராகள் இடையே எழுச்சியை உருவாக்கினார். உலகில் நிற வேற்றுமை மறையும் வரையில் இந்த எழுச்சி நீடிக்கும்.

[சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த "தமிழ் எடு" (மார்ச்-ஏப்ரல் 1994 ) மாதப் பத்திரிகையில் பிரசுரமானது.]