Showing posts with label அரேபியர். Show all posts
Showing posts with label அரேபியர். Show all posts

Wednesday, May 09, 2012

அரேபியருக்கு ஜனநாயகம் தெரியாது!

உலகில் எதுவுமே நிலைத்து நின்றதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை ஒரு சில மாதங்களுக்குள் மாற்றி விட்டது. எந்த நாட்டில் இந்த புரட்சி அலை கரை சேரும், என்று ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரபுலகை அடக்கியாள, அல்கைதா பயங்கரவாதம் தேவைப்பட்டது. இல்லை, அது அரபுகளை பயமுறுத்தவல்ல. அரபுக்களை காட்டி, ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் பயமுறுத்தி வைப்பதற்காக, மேற்கத்திய அரசுகளால் பேணி வளர்க்கப் பட்டது. 

எட்வர்ட் சையித் போன்ற பிரபல அறிவுஜீவிகள், கீழைத்தேய "ஓரியண்டலிசம்" குறித்து ஐரோப்பியர் கொண்டுள்ள அச்சத்தை ஆவணப் படுத்தியுள்ளனர். உலக நாகரீகங்களின் வரலாற்றில், ஐரோப்பியரின் நாகரீகம் காலத்தால் பிந்தியது. பெரும்பாலும் அரேபிய நாகரீகம் ஐரோப்பாவுக்கு வழங்கிய கொடைகள் ஏராளம். அறிவியலுக்கும், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், ஐரோப்பியர் அரேபியருக்கு கடமைப் பட்டுள்ளனர். உலக வரலாற்றில், கொலை பாதகச் செயல்களுக்கு அஞ்சாத தேசங்கள், தம்மை விட நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளை அடிமை கொண்டுள்ளன. அதன் பின்னர், தாமே நாகரீகத்தில் சிறந்தவர்களாக பிரகடனம் செய்து கொள்ளும். அரபுலகிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவும் அப்படிப் பட்டதே.

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் இருந்து, இன்று வரை அரேபிய நாடுகளில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது சர்வசாதாரணம். பல சர்வாதிகாரிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்ததால், "ஜனநாயகம் பேசும் கனவான்கள்" மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர்கள், "அரேபியர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்கு பக்குவப் படவில்லை." என்று கூறி வந்தார்கள். ஆப்பிரிக்கர்கள் குறித்தும் அதே போன்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.

துனிசியாவில் புரட்சி செய்த மக்கள், மேலைத்தேய கற்பிதங்களை பொய்யாக்கியுள்ளனர். "ஜனநாயகம் என்பது மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியப்படும்." என்ற கருதுகோளை தவறென நிரூபித்துள்ளனர். "துனிசியாவில் நடந்தது புரட்சி இல்லை!" என்று, வலதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அறிவுஜீவிகளும் பல்வேறு காரணங்களுடன் விளக்கி வருகின்றனர். மேற்கத்திய சார்பு சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சி, வலதுசாரிகள் எதிர்பாராத ஒன்று. இடதுசாரிகளோ வரட்டுத்தனமான மார்க்சிய விளக்கங்களை கொடுக்கின்றனர். இவ்விரு தரப்பினரும், அரபுலகின் கடந்த கால வரலாற்று உண்மைகளை கணக்கில் எடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நினைவூட்டவே, அரபுலகை காலனிப்படுத்திய ஐரோப்பியரின் வருகையுடன் இந்தக் கட்டுரையை தொடங்கினேன்.

மேற்குலக நாடுகள், எப்போதும் தமக்கு சார்பான ஆட்சி மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் தான், அதனை "புரட்சி" என்று அழைப்பார்கள். மற்றவை எல்லாம், "சதிப்புரட்சி", "இராணுவ சதி", "ஆட்சிக் கவிழ்ப்பு", "காடையர் கும்பலின் வன்முறை" என்று அழைக்கபப்டும். இன்றைக்கும் மேற்குலக பாடநூல்கள், "லெனின் தலைமையில் 1917 ல் ரஷ்யாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி" என்று தான் எழுதி வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் புரட்சி நடக்கவில்லை. அவையெல்லாம் "ஆயுதமேந்திய சிறு குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு" மாத்திரமே.

பெர்லின் மதில் உடைப்பையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் தான், அவர்கள் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள். அடுத்தடுத்து செர்பியாவில், ஜோர்ஜியாவில், உக்ரைனில் எல்லாம் "புரட்சி" இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், "சிரிய இராணுவ ஆக்கிரமிப்பை" எதிர்த்து லெபனாலில் புரட்சி நடந்தது. அதே லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலை எதிர்த்த போராட்டம், "ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம்" என்று அழைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை கொண்டோர், இது போன்ற "பிரச்சார யுக்திகளை" அவதானிப்பதில்லை. மாறாக, பாமர மக்களை கவரும் முதல் கட்ட அரசியலிலேயே பலவீனமாகவுள்ளனர். இந்த வெற்றிடத்தை, தீவிர வலதுசாரிகள் இலகுவாக நிரப்பிக் கொள்கின்றனர்.


வட ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சிகள் இல்லை. ஆனால் புரட்சிக்கேற்ற சூழ்நிலை நிலவியது. ஆண்டாண்டுகால வறுமை, வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் எழுச்சி, என்ன சொல்ல வருகின்றது? மார்க்சியமோ, வேறெந்த சித்தாந்தமோ அறிந்திராத மக்கள் தலைவர்கள் தான் அவர்களை வழிநடாத்தினார்கள். அவற்றை அறிந்தவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும், எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தனர். மூன்று தசாப்த கால வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்குள் வார்ந்த இளந்தலைமுறையிடம், அவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது அறிவீனம். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில், மார்க்ஸியம் போன்ற மாற்றுக் கருத்துகளை ஆர்வமாகக் கேட்கும் அறிவுத் தேடல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியுள்ள அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்தமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. "முஸ்லிம் நாடுகள் என்றாலே பழமைவாதிகள், அல்லது மதவெறியர்களைக் கொண்டுள்ளன." அரேபியர் என்றாலே, அத்தகைய தவறான முத்திரை குத்தப் பட்டு விடும்.


இருபதாம் நூற்றாண்டில் உலகை வலம் வந்த "கம்யூனிச அலை", அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஈராக் முதல் மொரோக்கோ வரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத நாடுகளைக் காண்பதரிது. தென் யேமனை, ஒரு மார்க்சிய லெனினிசக் கட்சி ஆட்சி செய்தது. தென் ஓமானில் ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிசப் புரட்சியாளர்களை ஒடுக்க பிரிட்டிஷ் SAS படையினர் களமிறங்கினார்கள். பனிப்போர் உச்சத்தில் இருந்த நாட்களில், மேலதிக அரபு நாடுகளும் சோவியத் அணியில் சேருவதை, மேற்குலகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கம்யூனிசப் பேயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. "உனக்கு இறை நம்பிக்கை இருந்தால், நாஸ்திக கம்யூனிஸ்டுகளுடன் சேராதே!" என்று அவர்களே மக்களை அடக்கி வைத்தார்கள். வேறு சில நாடுகளில், மேற்குலகின் சொற்கேட்டு நடக்கும் சர்வாதிகாரிகள், அந்தப் பணியை திறம்படச் செய்தனர்.


சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் , அமெரிக்கா தன்னிகரற்ற ஏகாதிபத்திய வல்லரசாகியது. குறிப்பாக 11 செப். 2001 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், அமெரிக்கா லிபியா மீது படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் கடாபி மேற்குலகின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார். பேரழிவு விளைவிக்கும் ஆயுத உற்பத்தியை தானாகவே நிறுத்திக் கொண்டார். புன்முறுவல் பூக்கும் மேற்கத்திய தலைவர்களின் அன்புக்கு மயங்கினார். "இஸ்லாமிய சோஷலிச அரசு" அமைப்பது குறித்து, அவர் எழுதிய "பசுமை நூல்" இன், கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டார். எந்த அளவு நல்ல பிள்ளையாக நடந்தாலும், ஐரோப்பியர்கள் பழசை மறப்பதில்லை. "ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் தலைவர்", காலனிய அடிமை நாட்டை ஆளுவதை அவர்கள் மன்னிக்கப் போவதில்லை. ஈரானில் மொசாடேக், ஈராக்கில் சதாம் ஹுசைன், எல்லோரும் குறிப்பிட்ட காலத்தில் மேற்குலக நலன்களுக்கு எதிராக ஆள விரும்பியவர்கள். அதற்காகவே பதவியிறக்கி தண்டிக்கப்பட்டார்கள்.  கடாபிக்கு நடந்ததும் அது தான். ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவன் இந்தப் பூமியில் தான் வாழ்கிறான்.


வட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சி அல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்து போராடிய மக்களுடன், லிபிய கிளர்ச்சியாளர்களை ஒப்பிட முடியாது. அவர்களில் யாரும் லிபியர்கள் போல, மன்னர் கால கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. இன,மத, குல வேறுபாடுகளை மறந்து அனைவரும் தேசியக் கொடியை முத்தமிட்டனர். எகிப்திலும், துனிசியாவிலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இராணுவத்துடன் மோதும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. லிபியாவில், ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. வெகு விரைவிலேயே, போர்கோலம் பூண்டு, இராணுவத்துடன் மோதினார்கள். லிபிய இராணுவத்தின் தாக்குதல்களை, "கடாபியின் ஆப்பிரிக்க கூலிப்படை" தாக்குகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். லிபியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றனர். லிபியாவில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர், அவர்கள் அரசு இராணுவத்திலும் இருந்தார்கள். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பேசியதால்,  "லிபிய மக்கள் எழுச்சி" பற்றிய விம்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இவர்கள் லிபியாவின் எந்த மக்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்?


உலகில் ஐரோப்பிய காலனியாதிக்கம் முழுமையாக மறைந்து விட்டதா? இன்றைக்கும் முன்னாள் காலனிகள் மீதான ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடர்கின்றது. தமக்குப் பிடிக்கும், தமது நலன் காக்கும் ஆட்சியாளர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக தம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இராஜதந்திர அழுத்தங்கள் கொடுப்பதற்கு, ஊடகங்கள், மனித உரிமை நிறுவனங்கள், ஐ.நா. சபை என்பன உள்ளன. இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. முன்பெல்லாம் காலனிகளை பங்கு போடுவதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் மோதிக் கொண்டன. இன்று அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்படுகின்றார்கள். "ஆண்டவரின் சூழ்ச்சிக்கு" பலியான, அடிமை நாடுகளின் மக்களோ, வேள்விக்கு வளர்க்கப் படுவதை உணராத மந்தைகளாக வாழ்கின்றனர்.