Sunday, December 17, 2023

மியான்மரில் உயிர்த்தெழுந்த மக்கள் விடுதலைப் படை

 


மியான்மரில் உயிர்த்தெழுந்த கம்யூனிச விடுதலை இயக்கம். மியான்மரில் 2021 ம் நடந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து, அங்கு பல இயக்கங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னாள் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) உருவாக்கிய மக்கள் விடுதலைப் படையும்(PLA) ஒன்று. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

நிச்சயமாக இது எண்பதுகளில் இயங்கிய பழைய PLA அல்ல. எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய மூத்த கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில், இளைய தலைமுறையினரால் உருவாக்கப் பட்ட புதிய மக்கள் விடுதலைப் படை இது. அவர்களுடன் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 2 வருடங்களுக்கு முன்னர், 32 இளைஞர்களால் உருவாக்கப் பட்ட மக்கள் விடுதலைப் படையில் இன்று 1000 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் உள்ளனர். புதிய PLA, பெரும்பான்மையின பர்மியர்களைத் தவிர, பிற மொழிச் சிறுபான்மையினங்களை சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

உண்மையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த தலைவர்களே புதிய கம்யூனிச இராணுவத்தை வழிநடத்துகின்றனர். மியான்மரில் கம்யூனிச மீள் உயிர்ப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். (எண்பதுகளில் நடந்த போராட்டத்தின் போது கட்சியின் தலைவர்களாக பெரும்பாலும் பர்மியர்களே இருந்தனர்.) விதிவிலக்காக காரென் சிறுபான்மையினத்தவரின் பிரதேசத்தில் மட்டும் முரண்பாடு நிலவுகிறது. ஏனெனில் அங்கு வலதுசாரிய காரென் தேசியவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது.

கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், பிற விடுதலை அமைப்புகளுடனான நட்புறவு. குறிப்பாக இராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் தற்போது நிழல் அரசொன்றை நடத்துகின்றனர். அவர்கள் மூலம் PLA க்கு நிதி உதவி கிடைக்கிறது. இதை விட மறைமுகமான சீன உதவியும் இருக்க வாய்ப்புண்டு. அதை உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், வடக்கில் நீண்ட காலமாக கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்கும் சிறுபான்மையின தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சீன உதவி கிடைப்பது இரகசியம் அல்ல.

புதிய மக்கள் விடுதலைப் படை ஏற்கனவே பல இடங்களை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு உடனடியாக தமது கம்யூனிச கொள்கைகளை பரப்புரை செய்யவில்லை. "கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவார்கள்" என்று மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஏற்கனவே மியான்மர் இராணுவ அரசு மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்துள்ளமையும் ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன்னர் மியான்மர் இராணுவம் ஒரு மிகப் பலமான கம்யூனிச விடுதலைப் படையை எதிர்த்து போரிட்டமை குறிப்பிடத் தக்கது.

No comments: