Sunday, April 08, 2018

"டட்லி மசாலா வடை சுட்ட கதை" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்

பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் எடுத்துக் காட்டி, கம்யூனிசம் என்பது ஒரு பூச்சாண்டி என்று அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல.

அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் ஈடுபடுகின்றது.

ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், கம்யூனிசமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாக்கி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. LTTE என்ற புலிகள் கூட, ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள்.

அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம்.

ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர்.

அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது " சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஈழத்தமிழர்கள் "அரசியலற்ற விலங்குகள்" என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் இடதுசாரி, வலதுசாரி பிரிவினைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதும் வலதுசாரி அரசியல் தான். தொண்ணூறுகளில் உருவான, தோற்றவர்களுக்கு (இடதுசாரி) எதிரான வென்றவர்களின் (வலதுசாரி) மேலாதிக்க அரசியல்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் இடதுசாரி தலைவர்களை பற்றி கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். ஐம்பதுகளில் உருவான, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன, அன்றைய காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வாக்கோடு இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக தோன்றிய வலதுசாரிக் கட்சிகள்.

"சிங்களவர்களில் இடதுசாரிகள் உண்டு... தமிழர்களில் கிடையாது..." என்ற தவறான கருத்து, தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் காலத்தில் தான் உருவாக்கப் பட்டது. சிங்கள வலதுசாரிக் கட்சிகளும், சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய இதே மாதிரியான பிரச்சாரம் செய்து வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழர்களில் இடதுசாரிகள் இருக்கலாம். ஆனால், "சிங்களவர்கள் இடதுசாரி/வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்ட விலங்குகள்" என்பது அவர்களது வாதம்.

புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஒரு முக்கியமான உண்மையை வேண்டுமென்றே மறைப்பார்கள். எப்போது புலிகள் தமிழீழ அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்களோ, அப்போதே அங்கே இடதுசாரி, வலதுசாரி பிரிவினையும் தோன்றி விட்டது. அரசியல் பிரிவில் வெளிப்படையாக தெரிந்தது. போராளிகள் மத்தியில் மறைமுகமாக இருந்தது.

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் புலிகளை ஆதரித்து வந்த படியால், அவர்களது பிரசுரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விநியோகிக்கப் பட்டன. ஈழத்தில் புதிய தலைமுறையினர் மத்தியில், இடதுசாரி, பெரியாரிய கருத்துக்கள் பரவுவதற்கு, தவிர்க்க முடியாமல் புலிகளும் ஒரு காரணமாக இருந்தனர்.

எண்பதுகளில் புலிகளுக்கு ஆதரவான பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட தளிர் தொடர்ந்தும் இடதுசாரி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளியீடுகள் அடிக்கடி பிடல் காஸ்ட்ரோவையும், கியூப புரட்சியையும் மேற்கோள் காட்டி எழுதி வந்தன. யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர், போராளிகள், ஆதரவாளர்களின் மனோதிடத்தை உயர்த்துவதற்கு, லெனின்கிராட் முற்றுகை பற்றிய தகவல்கள் உதவின.

தமிழ் தேசியமும், இடதுசாரியமும் முரண்பாடான கொள்கைகள் அல்ல.

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன. இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: India Responsible for Dividing Sri Lanka, Training LTTE Terrorists - JR former SL President 1985) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

1 comment:

Unknown said...

இடதுசாரி, வலதுசாரி, மாக்சிசம், பாசிசம், முதலாளித்துவம், சோசலிசம் எல்லாம் ஒருவரை ஒருவர் சுரண்ட ஏற்படுத்திக் கொண்ட முறைகள்தான். இதைத்தவிர வேறு இல்லை. இவர் அதை விமர்சிப்பதும், அவர் இவரை விமர்சிப்தும் மக்களை போக்குக் காட்டும் செயல்.