Wednesday, July 19, 2017

"தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? ]
(பகுதி : எட்டு)

"யூதர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு யூதன். பாலஸ்தீனர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு பாலஸ்தீனன்." - Shehata Harun (எகிப்திய யூத கம்யூனிஸ்ட்)

யூதர்கள் என்றாலே அவர்களை தீவிர தேசியவாதிகள் போலவும், இனப்பற்றுக் கொண்டவர்களைப் போலவும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தமிழினவாதி, தன்னைப் போலவே யூதர்களையும் இனவாதிகளாக கருதுவதில் வியப்பில்லை. சில நேரம், "தூய" முதலாளித்துவவாதிகளும் யூதர்களை தேசிய உணர்வு கொண்டவர்களாக காட்ட விளைகின்றனர். அதற்கு ஒரு உதாரணம், "வார்சோ தடுப்பு முகாம் எழுச்சி." இரண்டாம் உலகப் போர் காலத்தில், வார்சோ நகர தடுப்பு முகாமில் இருந்த யூதர்கள், நாஸிப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரித்தார்கள். அந்த கிளர்ச்சியை ஒழுங்குபடுத்திய யூதர்கள் அனைவரும் சோஷலிச தொழிற்சங்கம் ஒன்றை சேர்ந்தவர்கள். "போலந்து, லிதுவேனியா யூத தொழிலாளர் சங்கம்" (General Jewish Labour Bund of Lithuania, Poland and Russia) அன்றைய ஐரோப்பாவில், சியோனிச தேசியவாதிகளுக்கு போட்டியாக உருவானது. வியன்னாவில் வாழ்ந்த தியோடோர் ஹெர்சல் உருவாக்கிய சியோனிச தேசியவாதம், முதலாளித்துவம் சார்பு கொண்டிருந்தது. யூத முதலாளிகளும் அதற்கு நிதி கொடுத்து வளர்த்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. ஐரோப்பாவில் யூத இனப்பிரச்சினைக்கு தீர்வாக, பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அமைக்கும் திட்டத்தை வரைந்தார்கள். நிச்சயமாக ஹிட்லரும் அந்த திட்டத்தை வரவேற்றிருப்பான். நாஸிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே யூத இனவழிப்பை ஆரம்பிக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் எடுத்தன. அது வரையில், பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பிய யூதர்களை, நாஸிகள் தடுக்கவில்லை. மாறாக யூதர்கள் தாமாகவே ஜெர்மனியை விட்டுச் செல்கிறார்கள் என்று மகிழ்ந்திருப்பார்கள்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. அன்று தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கேற்ப, தொழிலாளர்களும் பெருகிக் கொண்டிருந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவு யூத தொழிலாளர்கள் சோஷலிச தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டனர். காலப்போக்கில் யூதர்களுக்கு என்று தனியான தொழிற்சங்கம் உருவானது. போர்க்குணாம்சம் மிக்க யூத தொழிற்சங்கவாதிகள் வார்சோ எழுச்சியை ஒழுங்கமைத்தில் வியப்பில்லை. தமிழ் பிற்போக்குவாதிகள், யூதர்களின் சோஷலிச அரசியலை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்ல, அதனை யூத தேசிய இன எழுச்சியாக காட்ட விளைகின்றனர். அதனை இருட்டடிப்பு செய்தால் தானே, யூதர்கள் பாலஸ்தீன மண்ணுக்கு (இஸ்ரேலுக்கு) உரிமையானவர்கள் என்று நிறுவ முடியும்? யூத தொழிற்சங்கத்தினரின் முக்கிய கோஷங்களில் ஒன்று: "பாலஸ்தீனத்தின் பனை மரங்கள் எனக்கு அந்நியமானவை." யூத தொழிற்சங்கவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் சம உரிமை கோரினார்கள். அதே நேரம், சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வேண்டினார்கள். இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலத்தில், யூத தொழிற்சங்கம் தனது இறுதி மூச்சை விட்டது. இருப்பினும், யூதர்கள் கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து நாசிகளை எதிர்த்து போராடினார்கள்.

ஏற்கனவே ரஷ்யாவில் லெனினின் போல்ஷெவிக் கட்சியில் பெருமளவு யூதர்கள் சேர்ந்திருந்தார்கள். எத்தனையோ பேர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தனர். செம்படையின் தளபதி லியோன் ட்ராஸ்கி கூட ஒரு யூதர் தான். கம்யூனிச தத்துவ ஞானி, கார்ல் மார்க்ஸ் கூட ஒரு யூதர் என்பதை மறந்து விடலாகாது. உலகில் பிரபலமான யூத இடதுசாரிகளின் பட்டியலையே கொடுக்க முடியும். Karl Marx, Murray Bookchin, Judith Butler, Noam Chomsky, Eric Hobsbawm, Harold Laski, Harold Pinter, Erich Fromm, Naomi Klein and Howard Zinn,... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இன்றைய யூத இடதுசாரிகள், சியோனிச எதிர்ப்பாளர்களாகவும், பாலஸ்தீன விடுதலையின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். அவர்களின் அதே கருத்துகளை நாம் தமிழில் கூறினால், "இஸ்ரேலிய எதிர்ப்பாளர்" முத்திரை குத்துவார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் ஒரு கம்யூனிசக் கட்சி இருக்கின்றது. இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்ற அரேபியர்கள், தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் வாக்குப் போடுவார்கள். ஏனெனில் பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் யூதரின் கட்சி அது ஒன்று தான். பயங்கரமான கம்யூனிச எதிர்ப்பாளர்களான, தமிழ் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும் உண்மைகள் இவை. என்ன செய்வது?

பாலஸ்தீனத்தில் உருவான யூத காலனிகள் (கிப்பூத்ஸ் பண்ணைகள்) பிற்காலத்தில் இஸ்ரேலிய தேசமாகியது. யூத தேசிய நிதியம் வாங்கிக் கொடுத்த நிலத்தில் கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகின. அவை சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன. அன்று பாலஸ்தீனம் சென்று குடியேறிய யூதர்கள் முன்னால் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் கம்யூனிச தத்துவம் பிரபலமாக இருந்தது. மேலும் குடியேற வந்த யூதர்களும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் இருந்திருக்க மாட்டார்களா? ஆரம்ப கால கிபூத்ஸ் பண்ணைகள் பல கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சமூகம் கம்யூனிச சித்தாந்தப் படி இயங்கியது. உற்பத்தி சாதனங்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து வயலில் வேலை செய்தார்கள். பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு, கணவனும் மனைவியும் சேர்ந்தே வேலைக்கு சென்றார்கள். மூன்று வேளை உணவு, எல்லோருக்கும் பொதுவாக சமைத்து பரிமாறப்பட்டது. ஒரே மண்டபத்தில் அனைவரும் சேர்ந்தே உணவருந்துவார்கள். திருமணமான ஜோடிகளுக்கான வீடுகள் மட்டுமே தனித்தனியாக இருந்தன.

கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகளில், எங்கு பார்க்கிலும் "மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்" ஆகியோரின் உருவப்படங்கள் காணப்பட்டன. கூட்டுறவுப் பண்ணைக்கென்றே தனியான கம்யூனிசக் கட்சி இயங்கியது. பொதுக்குழு கிரமமாக கூட்டப்பட்டு, சமூகத்தின் தேவைகள் ஆராயப்பட்டன. கிப்பூத்ஸ் சமூகக் கட்டுப்பாடுகள், நிதிப் பங்கீடு, உறுப்பினர்களின் பிரச்சினைகள் போன்றனவற்றிற்கு கட்சியே பொறுப்பு. கம்யூனிச பண்ணைகளில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை. பண்டமாற்று மூலமே பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருந்தது. அதாவது ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ற தொழிலை செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை நல்கினார்கள். பாடசாலைகளிலும் குழந்தைகளுக்கு பொதுவுடமைக் கல்வியே வழங்கப் பட்டது. குழந்தைகளே கடவுள் இல்லை என்று கூறுமளவிற்கு, அங்கே மதத்திற்கு இடமளிக்கப் படவில்லை. ஆயினும், தனிப்பட்ட மத நம்பிக்கையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 1948 ல் இஸ்ரேல் உருவான பின்னர், கம்யூனிச பண்ணைகள் தனியார்மயமாக்கப் பட்டன. இளம் தலைமுறை அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நகரங்களை நோக்கி படையெடுத்தார்கள். பன்மடங்கு பலமான முதலாளித்துவத்தையும், நுகர்பொருள் கலாச்சாரத்தையும் எதிர்த்து நிற்க முடியாத கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. (Kibbutz Returns With Moneyed Communism)

இஸ்ரேல் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, 1934 ல், "சோஷலிச யூத தேசம்" உருவாகி விட்டது. ரஷ்யாவின் கிழக்கு சைபீரியப் பகுதியில், சீன எல்லையோரமாக அமைந்துள்ளது "யூத சுயாட்சிப் பிரதேசம்." (Jewish Autonomous Oblast) அன்றைய சோவியத் யூனியனில், அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டன. அதே போல, யூதர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசு, இன்றும் ரஷ்யாவில் இயங்கிக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக யிட்டிஷ் உள்ளது. "யிட்டிஷ்", ஹீபுரு, மற்றும் பல ஐரோப்பிய மொழிச் சொற்கள் கலந்த மொழி. ஐரோப்பிய யூதர்களால் பேசப்பட்டு வந்தது. இறந்த மொழியான ஹீபுருவுக்கு பதிலாக, புழக்கத்தில் இருந்த யிட்டிஷ் மொழியை மேம்படுத்துவதே சிறந்ததாக கருதினார்கள். சோஷலிசப் பொருளாதாரக் கட்டுமானங்கள் இருந்த போதிலும், யூத மத வழிபாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அங்குள்ள யூதர்கள், யாரோடும் யுத்தம் செய்யாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவன் நிலத்தை பறித்தால் தானே, அவனும் சண்டைக்கு வருவான்?

பாலஸ்தீனத்தில் குடியேற சென்ற சியோனிஸ்ட்கள், அறுபதாண்டுகளாக தீராத யுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் யாருமற்ற பாலைவனத்தில் சென்று குடியேறவில்லை. அரேபியரின் நிலங்களை அபகரித்து தமதாக்கிக் கொண்டார்கள். அன்று பாலஸ்தீனத்தில் குடியேறச் சென்ற ஐரோப்பிய யூதர்கள் மத்தியில் நிறவாதக் கருத்துகள் காணப்பட்டன. "நாகரீகமடையாத அரை நிர்வாண அரேபியருக்கு, உன்னதமான ஐரோப்பிய நாகரீகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்." என்று தம்மை உயர்வாகவே கருதிக் கொண்டனர். அன்று இந்தியாவை காலனியாக்கிய பிரிட்டிஷாரும் அதையே கூறினார்கள். அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள், செவ்விந்திய குடிகளின் நிலங்களை அபகரித்து, அங்கே ஒரு தேசத்தை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தில் குடியேறிய வெள்ளையின யூதர்கள், அரேபியரின் நிலங்களை அபகரித்து இஸ்ரேல் ஆக்கினார்கள். அதனால், பாலஸ்தீனம் "ஐரோப்பியரின் கடைசிக் காலனி" என்று அழைக்கப் படுகின்றது. சியோனிஸம் தோன்றிய காலத்தில், உகண்டா, அல்லது ஆர்ஜெந்தீனா சென்று குடியேறி, இஸ்ரேலை அங்கே உருவாக்குவது என்ற யோசனையும் முன்வைக்கப் பட்டது. ஆனால், விதி யாரை விட்டது? பாலஸ்தீனத்தில் வளைகுடா எண்ணெய் வளத்தை கண்காணிக்கும் அடியாளாக, பிரிட்டனின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா அரசுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆயுத விநியோகம் செய்த குற்றத்திற்காக, உலகத் தமிழர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். சீனாவும், ரஷ்யாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. சர்வதேச ஆயுத சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சீன, ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை புலிகளும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். இந்த உண்மை எல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை எதிர்க்க ஒரு சாட்டுக் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட "தமிழர்கள்", இஸ்ரேலின் கொள்கைக்கு மாறாகவே செயற்படுகின்றனர். பாலஸ்தீனர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிடினும், இஸ்ரேலில் யூதர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன. இஸ்ரேல், தான் "உன்னதமான மேற்குலக நாகரீகத்தை" பின்பற்றுகின்றது என்பதை உலகுக்கு காட்ட விரும்புகின்றது. அதனால் சோவியத் சார்பு யூத கம்யூனிஸ்ட்கள் மீது எந்தவொரு தருணத்திலும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. Hadash என்ற யூத கம்யூனிஸ்ட் கட்சி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இரகசிய தொடர்பை வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (அதாவது அந்தக் கட்சி பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருந்தது.)

ஐ.நா. சபையில் சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளன. அதே நேரம், இஸ்ரேலின் எதிரிகளான சிரியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு, சோவியத் யூனியன் ஆயுத விநியோகம் செய்தது, ஒன்றும் இரகசியமல்ல. சோவியத் ஆயுதங்கள் பாலஸ்தீன போராளிகளின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. அதைக் காரணமாக காட்டி, உலக யூதர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் என்று, ஒரு சராசரி யூத இனவாதி கூட பேசவில்லை. இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க சார்பு, முதலாளித்துவ அரசாக உருவெடுத்தது. அதனால் சர்வதேச அரசியல் அரங்கில் தனது பாத்திரம் என்ன என்பதையும், யாரையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்தார்கள். அதே நேரம், பெரும்பான்மை யூதர்கள் இஸ்ரேலிய அரசை ஆதரிக்கிறார்கள் என்பதால், கம்யூனிச யூதர்களை மட்டுமல்ல, மத அடிப்படைவாத யூதர்களையும் அவர்கள் கணக்கெடுக்கவில்லை. இன்று சிறிலங்காவில் ராஜபக்ச அரசு எந்தளவு நம்பிக்கையுடன் ஆட்சி நடத்துகின்றதோ, அதே நம்பிக்கையை மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த இஸ்ரேலிய அரசாங்கங்கள் கொண்டிருந்தன. ஐ.நா. மட்டத்தில் போர்க்குற்ற விசாரணை வந்தாலும் சீனாவும், ரஷ்யாவும் தன்னை காப்பாற்றும் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது. அதே போல போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. தண்டிக்க விடாது, அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னை காப்பாற்றும் என்று இஸ்ரேலிய அரசு நம்புகின்றது.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

5 comments:

Kajen said...

கலையரசன் அண்ணா உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமை. ஒரு படைப்பாளியின் படைப்பை திருடுவது முறையா?????. ஆகவே உங்கள் அனுமதியுடன் உங்கள் பதிவுகளை எனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளலாமா????

Kalaiyarasan said...

கஜன், நிறையப் பேர் எனது கட்டுரைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். சம்பந்தப் பட்ட பதிவின் இணைப்பை (URL) கொடுத்து விட்டால் போதும்.

கரடிமடை ஆனந்தன் said...

மிகவும் நல்ல பதிவு

sivakumar said...

தகவல்களும், கருத்துக்களும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை பலவிதமான் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி அதைப் பொய்ப்பித்திருக்கிறது.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

முந்தைய பதிவுகளின் இணைப்பை நீங்கள் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. நன்றி