Tuesday, March 21, 2017

மக்கள் நல வாதம் (Populism) என்றால் என்ன? - ஓர் அரசியல் ஆய்வு


ஐரோப்பிய அரசியல் அரங்கில் பொப்புலிசம் (Populism) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றது. அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளை குறிப்பதற்கு அந்தச் சொல்லை பயன்படுத்திகிறார்கள். அந்தச் சொல்லை உருவாக்கியவர் யார் என்று தெரியாது.ஆனால், ஊடகங்களால் பிரபலமானது என்பது மட்டும் நிச்சயம். அதை தத்துவார்த்த நோக்கில் அலசுவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் பொபுலிசம் என்ற வார்த்தை தமிழில் பெரியளவில் பயன்பாட்டில் வரவில்லை. அதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன என்று முகநூல் நண்பர்களிடம் கேட்ட பொழுது, "ஜனரஞ்சகவாதம், பெருந்திரள்வாதம்..." என்று பலவற்றை சொன்னார்கள். அவற்றில் மக்கள் நலவாதம் பொருத்தமானதாகப் படுகின்றது. அதனால் அதையே கட்டுரை முழுவதும் பயன்படுத்துகிறேன். மொழிபெயர்ப்பில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான ஐரோப்பிய அரசியலில், பாரம்பரிய கோட்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. இனவாதம் பேசிய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு பரந்தளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. மிகச் சிறிய கட்சிகளான அவை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. எந்த நாட்டிலாவது ஒரேயொரு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தோன்றிய, மக்களைக் கவர்ந்த வசீகரமான, ஜனரஞ்சகத் தலைவர்கள், தீவிர வலதுசாரி அரசியலுக்கு உந்துசக்தியாக இருந்தனர். ஆஸ்திரியாவில் ஹைடர், பிரான்ஸில் லெ பென், நெதர்லாந்தில் வில்டர்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களால் தலைமை தாங்கப் பட்ட கட்சிகள் யாவும் தனிமனித வழிபாட்டைக் கொண்டிருந்தன. அதாவது, கட்சிக்கென கொள்கை இருந்த காலம் மாறி, கட்சித் தலைவர் சொல்வெதெல்லாம் கொள்கை என்ற நிலைமை தோன்றியது.

புதிதாகத் தோன்றிய ஜனரஞ்சகத் தலைவர்கள், பாரம்பரிய தீவிர வலதுசாரிகள் மாதிரி வெளிப்படையாக இனவாதம் பேசவில்லை. அலங்காரச் சொற்களை பயன்படுத்தி, மக்கள் நலன் என்ற பெயரில், நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசினார்கள். இதிலே முக்கியமானது என்னவெனில், அரசாங்கத்தில் இருந்த ஆளும் கட்சிகள் பொதுவாக இனவாதம் வெறுக்கத் தக்க விடயம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தன. அல்லது அப்படி காட்டிக் கொண்டன. ஆனால், ஜனரஞ்சக அரசியல்வாதிகள் பேசிய "நாகரிகமான இனவாதம்" ஏற்றுக் கொள்ளத் தக்கது போன்று நடந்து கொண்டன. காலப்போக்கில் அவர்களே அவற்றைப் பேசத் தொடங்கினார்கள்.

இந்திய, இலங்கை நிலைமைகளுடன் ஒப்பிட்டு சொன்னால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்து மதவெறிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மிகவும் குறைவு. அதனால், தேர்தலில் போட்டியிட்டாலும் பெருமளவில் ஜெயிப்பதில்லை. அதே நேரம், இந்து மதவெறியை நாகரிகமாக, நாசூக்காக பேசினால் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியதும் அப்படித் தான்.

இனி ஐரோப்பாவுக்கு வருவோம். மக்கள் நலவாதக் கட்சிகள் எப்போதும் வலதுசாரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளும் உள்ளன. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் பற்றி ஆழமாக ஆராய்வது முக்கியமானது. ஏனெனில் அவை தான் பொதுத் தேர்தல்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக வருகின்றன. ஒரு காலத்தில் அரசாங்கம் அமைக்கலாம் என்ற நிலைமையில் உள்ளன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, பாரம்பரிய நாஸிகள், பாசிஸ்டுகளுடன் தொடர்பு கொண்ட கட்சிகள். இரண்டு, அப்படி எந்தத் தொடர்பும் இல்லாத "தூய்மையான" கட்சிகள். முதலாவது வகைக்குள் ஆஸ்திரியாவின் FPÖ, மற்றும் பெல்ஜியத்தின் Vlaams Blok/belang ஆகிய கட்சிகள் அடங்குகின்றன. இரண்டாவது வகைக்குள் நெதர்லாந்தின் PVV, ஜெர்மனியின் AfD ஆகிய கட்சிகள் அடங்குகின்றன.

ஐரோப்பாவில் இன்றைக்கும் நாசிஸம், அல்லது பாஸிசம் வெறுக்கத் தக்க கொள்கையாக, சிலநேரம் தடைசெய்யப் பட்டதாக உள்ளது. உதாரணத்திற்கு, பெல்ஜியத்தில் Vlaams Blok மீது நாசிஸ தொடர்பு, இனவாதம் பேசிய குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டதால், அது தடை செய்யப் பட்டது. அது பின்னர் Vlaams Belang புதிய பெயரில் தோன்றிய போதும் பெருமளவு வளர்ச்சி பெற முடியவில்லை. அதே நேரம் Nieuw-Vlaamse Alliantie (N-VA) என்ற புதிய கட்சி அதே அரசியலை முன்னெடுத்து பெல்ஜியத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றானது. N-VA நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசத் தெரிந்த மக்கள் நலக் கட்சி என்பதால் தான் அதன் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்தன.

இனி தத்துவத்திற்கு வருவோம். மக்கள் நலவாதம் என்றால் என்ன? ஆளும் கட்சிகளுக்கு மாற்றீடாக, ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதாக, பொது மக்கள் நலனில் இருந்து பேசுவதாக காட்டிக் கொள்ளும் தத்துவம் அது. உண்மையில் ஐரோப்பிய அரசியல் சூழல் ஒரு நெருக்கடிக்குள் சிக்கி உள்ளதை அது எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இது வரை காலமும் மாறி மாறி ஆண்டு வந்த பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் நலனை கணக்கெடுக்காத ஆளும் வர்க்கத்தை தேர்தலில் தண்டிக்க நினைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நெதர்லாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த சமூக ஜனநாயகக் கட்சியை எடுக்கலாம். ஒவ்வொரு தடவையும் நடக்கும் தேர்தல்களில் முப்பது ஆசனங்களுக்கு குறையாமல் வென்று வந்த டச்சு தொழிற்கட்சி (PvdA), இந்தத் தடவை ஒன்பது ஆசனங்களை மட்டுமே எடுத்திருந்தது. 

நெதர்லாந்து வரலாற்றில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சமூக ஜனாயகக் கட்சி இத்தகைய அவமானகரமான தோல்வியை சந்திக்கவில்லை. பாரம்பரிய சமூக ஜனநாயகவாத, இடதுசாரிக் கட்சியான PvdA, ஆட்சியில் அமர்ந்ததும் ஒரு வலதுசாரிக் கட்சியாகி சீரழிந்தது. அதனால் பெருமளவு ஆதரவாளர்களை இழந்து விட்டது.

சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவுத் தளமாக இருந்த உழைக்கும் வர்க்க வாக்காளர்களில் ஒரு பகுதி SP என்ற புதிய இடதுசாரிக் கட்சிக்கும், இன்னொரு பகுதி PVV என்ற புதிய வலதுசாரிக் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர். SP (சோஷலிஸ்ட் கட்சி), PVV (சுதந்திரக் கட்சி) இரண்டுமே கொள்கை அடிப்படையில் எதிரெதிர் நிலையில் நிற்கும் கட்சிகள். ஆனால் இரண்டுமே ஆளும் வர்க்கத்திற்கு எதிரானதாகவும், ஆளும் கட்சிகளுக்கு மாற்றாகவும் தம்மை காட்டிக் கொள்கின்றன. 

இடதுசாரி வெகுஜனம் SP யையும், வலதுசாரி வெகுஜனம் PVV யையும் ஆதரிக்கின்றது. அதனால் தான் அத்தகைய கட்சிகளை நாங்கள் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று அழைக்கிறோம். நெதர்லாந்தின் SP மட்டுமல்ல, ஜெர்மனியின் Die Linke, கிரேக்கத்தின் Syriza போன்ற இடதுசாரிக் கட்சிகளையும் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று தான் அழைக்கிறார்கள். ஆகவே, இந்த சொற்பதம் தனியே வலதுசாரிகளை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகும்.

மக்கள் நலவாதம் என்றால் என்ன? சுருக்கமாக சொன்னால், அது பனிப்போருக்கு பிந்திய "பின் நவீனத்துவ அரசியல் போக்கு"! பனிப்போர் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தமது மக்களை அரசியல் நீக்கம் செய்யும் பணியை திறம் பட செய்து வந்தன. நீண்ட காலமாக அரசியல் ஆர்வமற்று ஒதுங்கியிருந்த மக்கள், 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்கள்.

அதற்குக் காரணம், அதுவரை காலமும் மக்கள் அனுபவித்து வந்த சலுகைகளை அரசு வெட்டத் தொடங்கியது. குறிப்பாக புதிதாக உருவான மத்திய தர வர்க்கம் எண்ணிக்கையில் பெருகி இருந்தது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பின்னர் உருவான புதிய மத்தியதர வர்க்கத்துடன் இதனை ஒப்பிடலாம். தொண்ணூறுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்து வந்த பொருளாதார நெருக்கடிகளால் அந்தப் புதிய மத்தியதர வர்க்கமும் பாதிக்கப் பட்டது.

உலகமயமாக்கல் இன்னொரு முக்கியமான காரணம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ள பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களின் சம்பளம் குறைவு என்ற காரணத்தால், மேற்கு ஐரோப்பிய முதலாளிகள் தமது தொழிற்சாலைகளை கிழக்கு ஐரோப்பா நோக்கி நகர்த்தினார்கள். இதனால் மேற்கு ஐரோப்பாவில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழந்தனர். 

அதே நேரம், விசாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதால் கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் வேலை தேடி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தனர். இத்தகைய அரசியல் - பொருளாதாரப் பின்னணியில் தான் மக்கள் நலவாதக் கட்சிகள் தோன்றின. 

இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாப் பிரச்சனைகளை உருவாக்கும் முதலாளிகளை நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றன. பெரும் வணிக நிறுவனங்கள், செல்வந்தர்களிடம் அதிக வரி அறவிட்டு, அந்தப் பணத்தை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த  பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் உலகமயமாக்கலுக்கு காரணமான முதலாளிகளை குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக, அகதிகள், குடியேறிகள் உள்ளூர் மக்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அது மட்டும் தான் பிரச்சினை என்று பிரச்சாரம் செய்கின்றன.

மேற்குலக அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் மக்கள் நலவாதம் என்ற புதிய அரசியல் தத்துவம் இருப்பதாக சொல்வதற்கு, பலரும் கவனிக்காத காரணம் ஒன்றுள்ளது. இன்றைய அரசியல் சூழலில், பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் தோற்று விட்டதாக கருதப் படுகின்றது. 

பொபுலிசம் என்பது ஐரோப்பாவில் உருவாக்கப் பட்ட  ஒரு பின்நவீனத்துவ சொல்லாடல். பனிப்போர் முடிவுடன் சோஷலிசம் மட்டுமல்லாது, முதலாளித்துவம், லிபரலிசம், ஜனநாயகம் போன்றனவும் காலாவதியாகி விட்டன என்று இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வந்தவை தான் மக்கள் நலவாதக் கட்சிகள். அதாவது, எந்த கோட்பாட்டையும் பின்பற்றாத அரசியல் கட்சிகள்.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள், பழமைவாதம், தேசியவாதம், இனவாதம், கலந்த கலவையாக உள்ளன. புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்வார்கள். அதே தான். மறுபக்கத்தில் இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் மார்க்சியத்திற்கு புதிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு மார்க்சியக் கருத்தை கட்சியின் கருத்தாக தெரிவித்து விட்டு, தமது கட்சி மார்க்சியத்தை பின்பற்றவில்லை என்று காட்டிக் கொள்வார்கள். சீட்டாட்டம் மாதிரி எல்லோரும் தமது துருப்புச் சீட்டுக்களை ஒளித்து வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.

பொதுவாக மக்கள் நலவாதக் கட்சிகள் எதுவும் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிக்கவில்லை. தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் பெரிய மாற்றம் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணரவில்லை.

உதாரணத்திற்கு, வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அகதிகள், குடியேறிகள் வருகையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், உலகின் மறு பக்கத்தில் யுத்தங்கள் நடப்பது குறையவில்லை. வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும், சுரண்டலும் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் வரையில் ஐரோப்பாவை நோக்கி குடியேறிகள் படையெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதே மாதிரி, இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், செல்வத்தை எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியாது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து தமது பைக்குள் போடும் முதலாளிகள் அந்தளவு இலகுவாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி முதலாளித்துவத்தை தூக்கி எறிவது தான். பாராளுமன்றத்திற்கு அந்தளவு சக்தி கிடையாது.

No comments: