Wednesday, March 08, 2017

8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் குறிப்பு


பெண் விடுதலையும் சமூக விடுதலையின் ஓர் அங்கம் தான். அதனால் சர்வதேச மகளிர் தினமும், சோஷலிச தொழிலாளர் இயக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. மேதினம் மாதிரி, அதுவும் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக உருவானது. தொழிற்சாலைகளில் பரிதாபகரமான சூழலுக்குள் வேலை செய்த பெண்களின் குருதியாலும், வியர்வையாலும் உருவானது.

1910 ம் ஆண்டு, டென்மார்க், கோபென்ஹெகன் நகரில் இரண்டாவது சோஷலிசப் பெண்களின் மகாநாடு நடந்தது. பதினேழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் காலகட்டம் முதலாம் உலகப்போரை எதிர்நோக்கி இருந்தது. அதே நேரம் எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் படவில்லை. அதனால், போர்வெறிக்கு எதிராகவும், பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அந்த மகாநாட்டில், ஜெர்மன் சோஷலிஸ்ட் கிளாரா ஜெட்சின் ஒரு யோசனையை முன்மொழிந்தார். பெண் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசமயப் படுத்தவும், கட்சி சார்பற்ற பெண்களை கவர்வதற்கும் ஒரு சர்வதேச தினம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். சுருக்கமாக, சர்வதேச மகளிர் தினம், வருடந்தோறும் பெண் விடுதலைப் போராட்டத்தை குறிக்கும் வகையில் கொண்டு வரப் பட்டது.

அன்றிலிருந்து பல உலக நாடுகளை சேர்ந்த பெண்கள், தங்கள் கலகக் குரலைக் கேட்க வைப்பதற்காக தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1911 ம் ஆண்டிலிருந்து, ஐந்து நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. 


அப்போது அந்தத் தினம் மார்ச் 19 ஆக இருந்தது. அந்தத் தினத்தை நிச்சயிப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1908 ம் நியூ யார்க் புடவைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. அதே நேரம், 1871 ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை நினைவுகூரவும் அந்தத் தினம் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு, மார்ச் 8 (பழைய ரஷ்யக் கலண்டரில் பெப்ரவரி 23) அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினம், சென் பீட்டர்பெர்க் நகர புடவைத் தொழிற்சாலையை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதில் பங்கெடுக்குமாறு நகரின் பிற தொழிலகங்களுக்கும் பிரதிநிதிகள் அனுப்பப் பட்டனர்.சென் பீட்டர்பெர்க் நகரின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தது. அதே நேரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஷ்ய பாராளுமன்றம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும், பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.

தொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக அனுப்பப் பட்ட அரச படையினர், போராட்டக் காரர் பக்கம் சேர்ந்து கொண்டனர். அவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டனர். போராட்டத்தின் விளைவாக தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடைப் பட்டது. ஆங்காங்கே பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. இருப்பினும் அன்றைய நாளின் முடிவில் நகரம் வழமைக்குத் திரும்பியது.

பெண்களின் உரிமைப் போராட்டம் நடந்த ஒரு சில நாட்களின் பின்னர், ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி நடந்தது. சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர், மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் இரண்டு தடவை புரட்சிகள் நடந்துள்ளன. பெப்ரவரி புரட்சியிலும் தொழிலாளர்கள் பங்கெடுத்திருந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகவாதிகளே அதற்குப் பிறகு இடைக்கால அரசு அமைத்தனர். அதனால், மீண்டும் அக்டோபரில் போல்ஷெவிக்குகளின் (கம்யூனிஸ்டுகள்) புரட்சி நடந்தது. 

1921 ம் ஆண்டு, சர்வதேச அமைப்பான கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெண் பிரதிநிதிகள் சோவியத் யூனியனில் ஒன்றுகூடினார்கள். 1917 பெப்ரவரி புரட்சியின் பொழுது நடந்த பெண்களின் போராட்டத்தை நினைவுகூர்வதர்காக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக தீர்மானிக்கப் பட்டது. சோவியத் சோஷலிஸ்ட் குடியரசில் விடுதலை பெற்ற பெண்களின் முன்மாதிரியை பின்பற்றும் முகமாக அது பல்வேறு உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ள பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பெண்கள் தமது உரிமைகளுக்காக போராடும் தினமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றனர். 

"இது என்னுடைய வேலை அல்ல" பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சோவியத் கால சுவரொட்டி

No comments: