Monday, September 05, 2011

சமூக விஞ்ஞான கல்வி வட்டத்தின் கேள்விகள்

(முகநூலில், சமூக விஞ்ஞான கல்வி வட்ட அங்கத்தவர்கள் கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு கலையரசன் பதில்கள் தருகிறார்.)
**************************************************

கேள்வி: ஈழத்தின் சாதியப் போராட்டம் பற்றியும் அதன் இன்றைய நிலை பற்றியும்?

பதில்: வட இலங்கையில் நடந்த முதலாவது சமூகப் புரட்சி அது தான். போராட்டத்தில் உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டார்கள். அத்தோடு சிங்கள முற்போக்காளர்களின் அனுதாபமும் கிட்டியது. அதுவே சாதியப் போராட்டத்தின் வெற்றிக்கு மூல காரணம். போராட்டத்தின் மூலமே தீண்டாமையை ஒழிக்க முடிந்தது, சம வாய்ப்புகளை பெற முடிந்தது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் அரசியல் தலைமையும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதமாற்றம் போன்ற ஆபத்துகளை எண்ணிப் பயந்திருக்கலாம்.

மேலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியிலும், ஒரு நடுத்தர வர்க்கம் தோன்றியிருந்தது. அவர்கள் மோதலை தவிர்த்து, சமரசப் பாதையை தேர்ந்தெடுத்தனர். இன்று சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, அகமண முறை மூலம் சாதிகளை பாதுகாப்பதில் அனைவரும் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய பிரிவுக்கு இன்றைய நிலைமை திருப்திகரமாக உள்ளது.

ஆயினும் நிலம் சார்ந்த பொருளாதார பிரச்சினைகள் தொடருவதால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த சமூகங்களில் ஏழைகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினரின் இயல்பான (நடுத்தர) வர்க்க குணாம்சம், தற்கால சாதிய பிரச்சனைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றது.

கேள்வி:தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன? (விமல்)

பதில்: 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியுடன் தேசியம் என்ற புதிய சிந்தனை உருவானது. அதற்கு முன்னர், மன்னராட்சிக்கு உட்பட்ட நாடுகள் இருந்தன. குடிமக்கள் கடவுளுக்கும், கடவுளின் பூலோக பிரதிநிதியான மன்னருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். தேசியம் பற்றிய கற்பிதம், தேசம் மீதான விசுவாசத்தைக் கோரியது. அதற்காக பொதுவான மொழியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேசத்திற்குள் வாழ்ந்த அனைத்து குடிமக்கள் மீதும் அந்த மொழி திணிக்கப் பட்டது. அதற்கு முன்னர், எழுத்தறிவற்ற காலத்தில் பல்வேறு பேச்சு மொழிகள் வழக்கில் இருந்தன.

மன்னராட்சிக் காலத்தில், மக்கள் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரஜையும் மதத்தின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும். மதகுருக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். தேசியவாதம் மதத்தின் அதிகாரத்தை எதிர்த்தே எழுந்தது. தேசியவாதிகள், மக்களிடம் மத நம்பிக்கைக்கு பதிலாக, தேசபக்தியை எதிர்பார்த்தார்கள். மண்ணுக்குரிய மக்கள் என்பது, தேசபக்தியை மத நம்பிக்கையில் இருந்து வேறு படுத்தியது. தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. ஒரே தேசியத்திற்குள் அடங்க மறுத்த சிறுபான்மையினங்களை, துரோகம் செய்பவர்களாக கருதினார்கள்.


கேள்வி: தரகு முதலாளித்துவம் என்றால் என்ன?

பதில்: இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியை, ஒரு வருட வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா? உலகிலேயே மிகப் பெரிய மூலதனத்துடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ளன. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்று அழைக்கப் படும் இவை, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. அதனால் தான் அவற்றை முதலாளித்துவ நாடுகள் என்று அழைக்கிறோம். அதாவது "முதல்" (மூலதனம்) அங்கே தான் போய்க் குவிந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து அனுப்பும் பொருட்கள் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. நாம் காலையில் எழுந்தவுடன் பல்துலக்க பாவிக்கும் பற்பசை முதல், போக்குவரத்திற்கான வாகனம் வரை எல்லாமே அவர்களின் தயாரிப்புகள் தான். மற்றைய நாடுகளில் உள்ள முதலாளிகள், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள். சில நேரம், உள்நாட்டில் கூட்டுத் தயாரிப்பாகவும் உற்பத்தி செய்வார்கள். ஆகவே அவர்களை தரகு முதலாளிகள் என்று அழைக்கின்றோம். நமது நாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தரகு முதலாளிகள் தாம்.


கேள்வி: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமாக வத்திக்கான் திருச்சபை மாறியது எப்போது? தவிர அது எப்போது தோற்றுவிக்கப்பட்டது? ( விமல்)

பதில்: ஆரம்பத்தில் இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் பொதுவுடமைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். அதாவது தமக்குத் தேவையான உணவை, கூட்டுறவு பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து பகிர்ந்துண்டார்கள். ஆதி கால கிறிஸ்தவர்கள், அரசதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அபிலாஷைகளை கொண்டிருக்கவில்லை. கொன்ஸ்ட்டான்டின் என்ற கிரேக்க-ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர், கிறிஸ்தவம் அரச மதமானது. அந்தக் காலத்தில் விவிலிய நூல் முழுமையான வடிவம் பெற்றது.

பிற்காலத்தில் ரோம சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது. இத்தாலியில் ரோமை தலைநகராகக் கொண்ட மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தில், அதற்கென தனித்துவமான கத்தோலிக்க மதம் தோன்றியது. கிழக்கத்திய கிரேக்க கிறிஸ்தவத்திற்கும், மேற்கத்திய ரோம கிறிஸ்தவத்திற்கும் இடையில் வழிபாட்டு முறைகளில் வித்தியாசம் உண்டு. இருப்பினும், தலைமையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தான், இந்தப் பிளவுக்கு காரணம். ரோமில் அரச அதிகாரத்தை கைப்பற்றிய முதலாவது பாப்பரசர் புனித பீட்டர் வத்திகானை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். அதுவே, உலக கத்தோலிக்க மத நிறுவனத்தின் தலைமையகமாக மாறியது. கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூறாண்டுகளில் நடைபெற்ற மாற்றங்கள் இவை.

கேள்வி: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வி என்ன சொல்கிறது?

பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட திரிபுவாதக் கட்சிகள். அவை தேர்தல் சாக்கடையில் மூழ்கி பல வருடங்களாகின்றன. கட்சித் தலைவர்கள், தம்மை மேற்கத்திய சோஷலிசக் கட்சிகளுடன் (உதாரணத்திற்கு: பிரிட்டிஷ் லேபர் கட்சி) ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். கட்சியின் தொண்டர்களுக்கே கம்யூனிசக் கொள்கைகள் பற்றிய விடய ஞானம் மிகக் குறைவு. பத்தோடு பதினொன்றாவதாக, "சிவப்புக் கொடி பிடிக்கும்" கட்சிகளாக சீரழிந்து விட்டன. அவர்கள் தேர்தல் பாதைக்கு வந்த பின்னர் சாதித்தவை மிக அரிது. கட்சியோடு செல்வாக்கு கொண்டவர்களைத் தவிர, பெரும்பான்மை மக்களுக்கு கிடைத்த நன்மைகள் மிகக் குறைவு. அவர்கள் ஆட்சியிலேயே பல முதலாளித்துவ சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஊழல், அதிகார மமதை என்பன, மக்களை வேறு கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டின. இதனால் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதை விட, முதலாளித்துவ நலன் சார்ந்த கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதே சிறந்தது.

கேள்வி: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்?

பதில்: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்? என்று கேட்பது, பாராளுமன்ற ஜனநாயக வழி வந்த சிந்தனையாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் போட்டியிடும் கட்சிகள் தான், மக்களுக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். மாவோயிஸ்டுகள் அதற்கு மாறாக, அடித்தட்டு மக்களின் போராட்ட இயக்கமாகும். அதாவது அரசியல் அதிகாரமற்ற மக்கள், தாமே அந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கான அமைப்பு வடிவம். போராட்டக் காலத்திலேயே, கெரில்லாப் பிரதேசம், விடுவிக்கப் பட்ட பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அங்கெல்லாம் இதுவரை காலமும் அரசியல் அதிகாரத்தை கைகளில் வைத்திருந்த, நிலப்பிரபுக்கள், முதலாளிகள், மற்றும் அரசு அதிகாரிகளின் செல்வாக்கு பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது. முதலாளிகள் சொந்தம் கொண்டாடி வந்த இலாபத்தில் ஒரு பகுதி தொழிலாளருக்கு போய்ச் சேருமாறு மறு சீரமைக்கப் படுகின்றது. வங்கிகளில் அடவு வைத்த ஏழை விவசாயிகளின் கடன் பத்திரங்கள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் அரசு தலையிடா வண்ணம், அரசு அதிகாரிகள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களுக்கு, அதிக விலை கிடைக்குமாறு கவனிக்கப்பட்டது. இவையெல்லாம் மாவோயிஸ்டுகளின் ஆயுத பலத்தினால் சாதிக்கப்பட்டன. மாவோயிஸ்டுகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, ஆண்டாண்டு காலமாக ஏழைகளின் குறைகளைத் தீர்க்காத அரசின் கையாலாகத் தனத்தை விமர்சித்துள்ளனர்.


கேள்வி: தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோல்வி என்ன சொல்ல வருகிறது?

பதில்: எதையுமே சொல்லவில்லை. காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவு குறைந்து விட்டது. காங்கிரஸ் எந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடாது. திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்துக் கொள்வது வழமை. கூட்டணியில் இருக்கும் கட்சி தோற்றால், காங்கிரசும் தோல்வியடையும். காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள், மக்கள் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்தார்கள், என்று விளக்கம் கூறலாம். ஆனால், அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட எண்ணிக்கை மிகக் குறைவு.

கேள்வி: மக்கள் அரசியல் என்றால் என்ன?

பதில்: உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அங்கே உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள். உழைக்கும் மக்கள் தங்கள் உடல், மூளை உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். மூலதனத்தை முதலீடு செய்யும் முதலாளிகள் இலாபம் என்ற பெயரில் உழைப்பின் பலன்களை அறுவடை செய்கின்றனர். இவர்கள் எங்கேயும் சிறுபான்மையினர் தான். ஆனால் பண பலம் இருப்பதால் யாரையும் இலகுவாக வாங்க முடிகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களை தம் பக்கம் வைத்திருப்பதால், பெரும்பான்மை உழைக்கும் மக்களை கட்டுப்படுத்த முடிகின்றது. ஆகவே பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களை சார்ந்து, அவர்களது நலன்களுக்காக நடத்தப் படும் அரசியலே மக்கள் அரசியல் ஆகும். மக்கள் அரசியல் எந்தவொரு சித்தாந்தம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் ஆட்சி அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு சில தத்துவார்த்த நடைமுறைகள் அவசியம்.


கேள்வி : வர்க்க முரண்பாட்டின் தோற்றம் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது?

பதில்: பதில்: சமுதாயத்தில் பெரும்பான்மை மக்கள் உழைப்பை விற்பதும், முதலாளிகள் மூலதனத்தை முதலீடு செய்வதும் வழமையான பொருளாதார செயற்பாடுகளாக உள்ளன.
மூலதனம் உட்பட அனைத்துப் பொருட்களும் உழைப்பினால் உருவாகியுள்ளன. ஆனால் முதலிடும் ஒரே காரணத்திற்காக, இலாபம் என்ற பெயரில் கிடைக்கும் உபரி உழைப்பை மீண்டும் மூலதனமாக்குவதன் மூலம், முதலாளிகள் தமது பலத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு அளவுக்கு அதிகமாக சுரண்டப்படும் பொழுது, அதனை வறுமை என்றழைக்கிறோம். பூமியின் செல்வம் எங்கே போய்க் குவிகின்றது? யாருக்கு பயன்படுகின்றது? இது போன்ற கேள்விகள் வர்க்க முரண்பாட்டில் இருந்தே எழுகின்றன.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கிடைத்ததை பகிர்ந்துண்டு வாழ்ந்தார்கள். இப்போதும் சில பழங்குடியின சமுதாயங்கள் இவ்வாறான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் வளங்கள் அரிதாக கிடைக்கவே, பேராசை கொண்ட சிலர் அதனை தான் மட்டும் அனுபவிக்க விரும்பினார்கள். ஒரு மனிதனின் உழைப்பில் இன்னொரு மனிதன் வசதியாக வாழும் பொருளாதாரம் தோன்றிய போதே, வர்க்க முரண்பாடுகளும் தோன்றி விட்டன.


கேள்வி: இடதுசாரியத்தால் மட்டுமா முழுமையான ஜனநாயகத்தை கொண்டுவரமுடியும்?

பதில்: பொதுவாக இடதுசாரியம் என்று கூறி விட முடியாது. மேற்கு ஐரோப்பாவில் சமூக- ஜனநாயக கொள்கை பல வருடங்களாக நீடித்தது. அது கூட இடதுசாரியம் தான். அவர்களால் பெரும் முதலாளிகளுடன் சமரசம் செய்து மக்கள் நலன் பேணும் திட்டங்களை கொண்டு வர முடிந்தது. அதுவும் ஜனநாயகம் தான். இருப்பினும் மேற்கு ஐரோப்பிய ஜனநாயகத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமல்ல. ஏனெனில் பெரும் முதலாளிகள் உலகம் முழுவதும் அத்தகைய சமரசங்களுக்கு உடன்பட மாட்டார்கள். மேற்கு ஐரோப்பாவிலும் நிலைமை மாறிக் கொண்டு வருகின்றது. இடதுசாரிகள் எல்லாம் வலதுசாரிகளாகி விட்டனர். பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தல் முறை, ஒரு வகை ஜனநாயகம் மட்டுமே. அது தான் ஜனநாயகம் என்ற மாயையை களைய வேண்டும். ஆட்சியதிகாரத்தில் மக்கள் நேரடிப் பொறுப்பேற்பதும், பொருளாதார உற்பத்தியை மக்கள் நலனுக்காக திட்டமிடுவதும் அவசியமானவை. மக்களுக்கு அரசியல், பொருளாதார அறிவு புகட்டுவதும் சமூகத்தை ஜனநாயகமயப் படுத்த உதவும். சோஷலிச நாடுகளில் நடந்த ஜனநாயகத்திற்கான செயற்திட்டங்கள் குறித்து வெளியில் பலர் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் அது கூட முழுமையான ஜனநாயகம் என்று சொல்வதற்கில்லை. புராதன காலத்தில், ஆப்பிரிக்க சமுதாயங்களிலும், கிரேக்கத்திலும் ஜனநாயக நடைமுறைகள் இருந்துள்ளன. அது போன்ற, அல்லது அதை விடச் சிறந்த ஜனநாயக சமுதாயம் குறித்து பல தத்துவஞானிகள் சிந்தித்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்கான பரிசோதனை முயற்சிகளை நடைமுறைப் படுத்தியவர்களே நமது காலத்து இடதுசாரிகள். இருப்பினும் காலப்போக்கில் எழுந்த தத்துவார்த்த முரண்பாடுகள், இடதுசாரியத்தில் பல பிரிவுகளை தோற்றுவித்தது.

கேள்வி:( Vijayakumar Sugumaran )
இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித உழைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாகவும் உற்பத்தி உறவில் மனித உழைப்பின் தாக்கம் குறைவடைந்திருப்பதால் உழைப்பு மூலதனத்தை அடிப்படையாக கொண்ட வர்க்க போராட்ட அரசியல் என்பது பொருத்தமற்றது/ சாத்தியமற்றது என்ற வாதங்கள் தொடர்பில்.....?


பதில்: நிச்சயமாக, நூறு வருடங்களுக்கு இருந்த உலகம் இன்றில்லை. தொழிற்புரட்சி காரணமாக இயந்திரங்களும், ஆலைகளும் நொடிக்கு பல்லாயிரம் பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. அவற்றின் வேகத்துக்கும், திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் குடிசைக் கைத்தொழில்கள் மறைந்து போயின. அப்போதும் இதே போன்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தொழிற்புரட்சி மனித உழைப்பை மறு வார்ப்புச் செய்தது. நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாக வாழ்ந்த மக்களை, ஆலைத் தொழிலாளர்களாக்கியது. இத்தகைய மாற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே சீராக நடைபெறவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மேற்படி மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், பிற நாடுகள் விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன.

இன்று தொழிற்துறை வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளன. அது தான் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்பப் புரட்சி. இந்த மாற்றத்தின் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. ஆலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அதற்கு மாறாக சேவைத் துறை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இவை எல்லாம் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே. பிற உலக நாடுகளில் இது மிக சொற்ப அளவிலேயே நடைபெற்றுள்ளது. குறிப்பாக விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் தங்கியிருக்கும் மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மத்தியதர வர்க்கத்தையும் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டால்; மேற்படி வாதத்தில் நியாயம் இருப்பதைப் போல தோன்றும். பெரும்பான்மை உலக மக்கள் அத்தகைய மாற்றங்களை அறியாதவராக, அல்லது அதன் பலன்களைப் பெறாதவர்களாக இருக்கின்றனர்.

இன்று எத்தனையோ மேற்குலக நாடுகளில் விவசாயம் புறக்கணிக்கப் படுகின்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வறிய நாடுகள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. சேவைத்துறைக்கு மாறிய மேற்குலகில், ஆலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டன. அவர்களுக்கு தேவையான உடைகளையும், பாவனைப் பொருட்களையும் சீனர்கள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மூலதனம் தனது நாட்டின் எல்லை கடந்து, உலகமயமாக்கல் என்ற பெயரில், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தொழிலாளர் வர்க்கமும் பன்னாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ளது. சில வளர்ச்சியடைந்த நாடுகளில், தொழிலாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய தேசத்தவர்களாக காணப்படுகின்றனர்.

ஆகவே இன்று மனித உழைப்போ, அதன் தாக்கமோ சிறிதேனும் குறையவில்லை. மாறாக அது சர்வதேசமயப் பட்டுள்ளது. அது எமது கண்ணுக்கு புலனாவதில்லை. இன்று வர்க்கப் போராட்டம் சாத்தியமற்றது என்ற மயக்கம் ஏற்படலாம். பல்லின கலாச்சாரங்களை கொண்ட தொழிலாளர்களை ஒற்றுமைப் படுத்துவது சிரமம். அதே நேரம் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் உழைக்கும் வர்க்கம், தன்னிலை மறந்து போராட்டத்தை புறந்தள்ளும். இந்த நிலைமை வளர்ந்த நாடுகளில் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில், "பாரம்பரிய முதலாளி-தொழிலாளி பாகுபாடு" அதிகம் மாறவில்லை. ஆனால் இன,மத, சாதிப் பூசல்கள், உழைக்கும் வர்க்க மக்களை பிரித்து வைக்க பயன்படுகின்றன.


கேள்வி: சீனாவிலும் ரஷ்யாவிலும் பொதுவுடமைக் கொள்கை தோற்றதாக இருப்பது பற்றி?

பதில்: பொதுவுடமைக் கொள்கை எங்கேயும் தோற்கவில்லை. உலகில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொதுவுடமைச் சமுதாயங்கள் இருந்துள்ளன. நவீன உலக வரலாற்றில், பொதுவுடமைத் தேசம் இன்னும் எங்கேயும் தோன்றவில்லை.

ரஷ்யாவும், சீனாவும் சோஷலிச (சமதர்ம) நாடுகளாக இருந்தன. ஒரு கம்யூனிசக் கட்சி மட்டுமே சோஷலிச பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஸ்வீடன் போன்ற சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில், முதலாளித்துவம், பல கட்சி தேர்தல் போன்றவற்றுடன் சோஷலிச பொருளாதாரமும் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள "ஜனநாயக சோஷலிசம்" உலகின் பிற நாடுகளில் சாத்தியமல்ல. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை பிறகு பார்ப்போம்.

ரஷ்யாவிலும், சீனாவிலும் ஒரு வர்க்கப் போருக்குப் பிறகு தான் சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த தலைமுறையினர், பூமியிலே ஒரு சொர்க்கத்தை படைக்கப் போவதாக நம்பினார்கள். பலர் அந்த நம்பிக்கைக்காக உயிர்த் தியாகம் செய்தனர்.

போராட்டத்தினால் கிடைத்த பலன்களை அனுபவித்த இரண்டாவது தலைமுறை "சோஷலிச சொர்க்கத்தில்" வாழும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களுக்கு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அருமை தெரியவில்லை.

கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்த பெற்றோரையும், சேர்த்த பணத்தை செலவழிக்கும் பிள்ளைகளையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

தொழிற்துறை மயமாக்கல், அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி, நிச்சயிக்கப்பட்ட வேலை வாய்ப்பு, வருமானம், ஓய்வு, அரச செலவில் விடுமுறை, இவை யாவும் சோஷலிசத்தின் சாதனைகள்.

இவற்றை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த மக்கள் தான் சோஷலிச பொருளாதாரத்தை வீழ்த்த துணை நின்றார்கள். அதற்கு முக்கிய காரணம், மேற்குலகமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும் இடையறாது நடத்திய பிரச்சாரம்.

மேற்கத்திய பாணி ஜனநாயகம் ஏற்பட்டால், இப்போது அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளுடன், கூடுதல் சுதந்திரம் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தார்கள். "கூடுதல் சுதந்திரம்" என்பது, அளவுக்கதிகமாக பணம் சேர்ப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என்று சாமானியர்கள் புரிந்து கொண்டார்கள்.

ஹாலிவூட் திரைப்படங்களை பார்க்கும் எமது மக்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கட்சி ஆட்சி முறை, முதலாளித்துவம் வந்தால், அமெரிக்கத் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல வாழலாம் என்று நம்பினார்கள்.

அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே சிலர் சுயநலத்துடன் செயற்பட்டு வந்தனர். கட்சி பிரமுகர்கள் சிலரின் ஊழலை தட்டிக் கேட்க முடியாதிருந்தது. அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை, சொத்துகளை பதுக்கி வைத்தனர். அவற்றை எல்லாம் அனுபவிப்பதற்கு சோஷலிச பொருளாதார அமைப்பு தடையாக இருந்தது. மாளிகைக்குள் நடக்கும் சதிப்புரட்சி போல, கட்சிப் பிரமுகர்களே சோஷலிசத்தை வீழ்த்தினார்கள்.

ஸ்டாலின், மாவோ பதவியில் இருந்த காலத்தில் அத்தகைய சுயநலமிகளின் தலை உருண்டது. ஸ்டாலின், மாவோ காலத்தில் தண்டிக்கப் பட்டவர்கள், அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.

உண்மையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் அப்போதே மெல்ல மெல்ல அறிமுகப் படுத்தப் பட்டன. ரஷ்யாவில் குருஷேவ், சீனாவில் டென்க்சியோபிங் ஆகியோர் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.


கேள்வி: தொடர்ச்சியாக அரபு நாடுகளில் தோன்றி வரும் மக்கள் புரட்சி பற்றி?

பதில்: உண்மையில் இது அரபு நாடுகளில் மட்டுமே தோன்றவில்லை. உலகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் எழுச்சி. வயிற்றுக்கு உணவில்லா விட்டால், மக்கள் கலகம் செய்வார்கள். உலகில் மோசமான சர்வாதிகாரி கூட, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியம் அளிப்பது வழக்கம். இன்றைய உலகில், ஐ.எம்.எப்., உலகவங்கியிடம் கடன் வாங்காத நாடுகள் மிகக் குறைவு. கடன் வழங்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும், அல்லது குறைக்க வேண்டும் என உத்தரவிடுகின்றன. ஆட்சியாளர்கள் அதற்கு கீழ்ப் படிந்தனர். உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. விளைவு, விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கலகம் செய்தனர். அரபு நாடுகளில் மட்டுமல்ல, மொசாம்பிக், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளிலும் உணவுக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.

துனிசியாவில் நடந்த புரட்சி எவரும் எதிர்பாராதவொன்று. அது மக்கள் சக்தியை நிரூபித்த ஜனநாயகப் புரட்சி மட்டுமே. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு இருக்கவில்லை. அதனால் புதிய ஆட்சியாளர்களின் காலத்தில், முன்னைய பிரச்சினைகள் தொடரவே செய்யும். எகிப்தில் நடந்த புரட்சியின் முடிவு, மேற்கத்திய நாடுகளை திருப்திப் படுத்தியது. அதே நேரம் பாஹ்ரைன் புரட்சி வன்முறை கொண்டு ஒடுக்கப்பட்டது. லிபியாவில் எண்ணையை தேசியமயமாக்கியதாலும், நீண்ட காலமாக மேற்குலகிற்கு சவாலாக விளங்கிய கடாபியை அகற்றவும், ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தூபமிட்டனர். ஆகவே எல்லாவித எழுச்சியும் மக்கள் நலன் சார்ந்து எழவில்லை.

மேலும் அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியை தூண்டி விடுவதில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய பங்காற்றியது. அதன் தலைமையகம் அமைந்துள்ள கட்டார், இன்னமும் அமைதியாக காட்சியளிப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் நீண்ட காலமாக ஆட்சி நடத்தும் மன்னர்கள், சர்வாதிகாரிகள் மக்களின் மதிப்பை இழந்து விட்டனர். இதனால் அவர்களால் ஆதரிப்பதால் ஏற்படப் போகும் ஆபத்தை மேற்குலகம் நன்கு உணர்ந்துள்ளது. ஆளுபவரை மாற்றுவதன் மூலம் மக்கள் மனக்குமுறலுக்கு வடிகால் தேடிக் கொடுக்கிறார்கள்.

இலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் ஜனநாயகம் இதற்காகவே கொண்டு வரப் பட்டது. மக்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லையா? அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியை வெல்ல வைப்பார்கள். ஆண்டாண்டு காலமாக இரண்டில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் சந்தர்ப்பம் உள்ளதால், அங்கெல்லாம் புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை.


சமூக விஞ்ஞான கல்வி வட்டம்

6 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே!
அருமையான் பதில்கள்

/ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய பிரிவுக்கு இன்றைய நிலைமை திருப்திகரமாக உள்ளது.

ஆயினும் நிலம் சார்ந்த பொருளாதார பிரச்சினைகள் தொடருவதால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த சமூகங்களில் ஏழைகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது./

மிக சரியான அவதானிப்பு. இட ஒதுக்கீடு என்பது இவர்கள் மாதிரி ஒரு குழுவை ஒவ்வொரு சாதியிலும் தோற்றுவிக்கிறது.இவர்கள் தங்கள் சாதியினருக்குள்ளேயே ஒரு முன்னேறிய சாதி போல் நடந்து கொள்வர்.இவர்களே பல்ன்களை அறுவடை செய்வதால் பிறருக்கு கிட்டாது.
_________
/தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. ஒரே தேசியத்திற்குள் அடங்க மறுத்த சிறுபான்மையினங்களை, துரோகம் செய்பவர்களாக கருதினார்கள். /
_________
தேசப்பற்று என்றவரை எல்லைக்குள் இருந்தால் சரிதான்
பக்தி என்று வந்து விட்டால் இது தவிர்க்க முடியாது!!!!!!!!!!.

நன்றி

சார்வாகன் said...

என் கேள்வி

பணமில்லாத உலகம் சாத்தியமா?. வேறு வழிமுறையாக உழைப்பிற்கேற்ற பலன் என்னும் முறை ஏதேனும் உள்ளதா? இத்ற்கான் முயற்சி எதுவும் நடைபெற்று உள்ளதா?

Kalaiyarasan said...

//என் கேள்வி
பணமில்லாத உலகம் சாத்தியமா?. வேறு வழிமுறையாக உழைப்பிற்கேற்ற பலன் என்னும் முறை ஏதேனும் உள்ளதா? இத்ற்கான் முயற்சி எதுவும் நடைபெற்று உள்ளதா? //

ஆமாம், இன்றைய நவீன உலகில் பணம் கண்ணுக்குத் தெரியாத வகையில் பயன்பாட்டில் உள்ளது. இணைய பணப்பரிமாற்றம், கிரெடிட் கார்ட் போன்றவற்றை நினைவில் கொள்ளவும். உண்மையில் பணம் சாதாரண மக்களுக்கு புலனாகாத வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாணய நோட்டுகளை வைத்திருப்பதன் மூலம் பணத்தை எம் கையில் வைத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். அரசாங்கம் திடீரென நாணயத்தின் மதிப்பை இறக்கினால், அந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாக மாறி விடுகின்றன.

பணப்புழக்கம் இல்லாத சமூகத்தில், பொருட்களின் விலைகள், பெறுமதி எல்லாம் குறிப்பிட ஒரு அளவீடு இருக்கும். அவற்றை பண்டமாற்று செய்யும் பொழுது கணக்கிடப் படும். ஒருவரது உழைப்பு, சேவை எல்லாவற்றின் பெறுமதியும் கணக்கிடப்படும். ஒருவரின் உழைப்புக்கு சமமான பெறுமதி கொண்ட பொருட்களை வாங்குவதற்கு அவருக்கு உரிமை உண்டு. குறைந்த பட்சம், இலஞ்சத்தை ஒழிப்பதற்கு இது சிறந்த வழியாக தோன்றுகிறது. ஏற்கனவே சில சமூகங்கள், பணம் இல்லாத சமுதாயத்தை நடைமுறைப் படுத்திக் காட்டியுள்ளன. உதாரணத்திற்கு: ஆதி கிறிஸ்தவர்களின் சமூக அமைப்பு.

சீனிவாசன் said...

தோழர் கலையரசன், ஆதி கிருத்துவர்களின் சமூக அமைப்பை பற்றி நீங்கள் விரிவான கட்டுரை இட்டால் நன்றாக இருக்கும். ஒரு முறை ஞானியின் கட்டுரையில் இதை போன்றதொரு சமூகம் இப்பொழுதும் வாழந்துவருவதாக படித்த ஞாபகம்.

Kalaiyarasan said...

தோழர் சீனிவாசன், அதை பற்றி நானும் யோசித்து வைத்திருந்தேன். நேரம் கிடைத்தால், பல தகவல்களை திரட்டிக் கொண்டு அது பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதுகின்றேன்.

aotspr said...

மிகவும் அருமையான பதில்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com