Sunday, January 23, 2022

கிளப் ஹவுசில் புலி வேடமிட்டு களமாடுவோரின் வர்க்கப் பின்னணி

கிளப் ஹவுஸ் கூட்டங்களில் அவதானித்தவை: 

- மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழர்கள் தான் புலிகளுக்கு ஆதரவாக களமாடுவதாக காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன உணர்வு அல்ல. அவர்களது வர்க்க உணர்வு சார்ந்த அரசியல்.

- இவர்கள் ஒன்றில் பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இலங்கையிலேயே அதிக சம்பளம் வாங்கும் white-collar work எனப்படும் மத்தியதர வர்க்க தொழில்களை செய்து கொண்டிருப்பார்கள்.

- இவர்களுக்கு இடையிலான பொதுவான அம்சம், இவர்கள் எல்லோரும் சமூகத்தில் வசதியாக வாழ்பவர்கள். மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர்கள். தாம் ஒன்றில் ஆதிக்க சாதி அல்லது ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பார்கள்.

- இவர்களது நோக்கம் புலிகளை ஆதரிப்பது அல்ல. புலிகளை மீளுருவாக்கம் செய்வதோ, மீண்டும் ஒரு போருக்கு செல்வதோ தமது நோக்கம் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். இந்தக் குழுவில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்ட நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதுவே இவர்களது வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விடுகிறது.

- உண்மையில் ஏதோ ஒரு வகையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட பிரிவினர் தான், இன்று தீவிர புலி ஆதரவாளர் வேஷம் போடுகிறார்கள். ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் நிர்வாகம் "போராடக் கூடிய வயதில் இருந்த" யாரையும் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு வெளியே செல்ல விடவில்லை. அவர்களது உத்தரவை மீறிச் சென்றவர்கள் துரோகிகளாக, எதிரியுடன் ஒத்துழைப்பவர்களாக கருதப்பட்டனர்.

- யாழ் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றவர்களும், படித்து பட்டம் பெற்று உயர்தொழில் பார்த்தவர்களும் தான் இன்று "புலி ஆதரவு அரசியல்" பேசுகிறார்கள்.

- இவர்கள் அனேகமாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட, தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்கள் அல்லது வளர்ந்தவர்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழப் பிடிக்காமல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். வன்னியில் போர் நடந்தால் பரவாயில்லை, யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற சுயநலம் காரணமாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்தவர்கள்.

- திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்த "புலி ஆதரவாளர்களும்" அப்படித்தான். இவர்கள் எல்லோரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் என்பது ஒரு பொதுவான அம்சம். திருகோணமலையும், மட்டக்களப்பு எழுவான்கரை பிரதேசமும் (கிழக்கு கரையோரப் பகுதி) எந்தக் காலத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான படித்த மத்தியதர வர்க்கத்தினர் இந்தப் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அவர்களுக்கு மட்டும் தான் அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

- இன்று தீவிர புலி ஆதரவு வேஷம் போடும் நடிகர்கள், தனிப்பட்ட வாழ்வில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். அன்று ஊரில் வாழ்ந்த காலத்தில், புலிகள் விட்டுக்கொடுக்காமல் போரிடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று விசனப் பட்டவர்கள். (ஆனால் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தது ஒரு முரண்நகை.) உயர்கல்வி கற்று, பட்டம் பெற்று, உடுப்புக் குலையாத உத்தியோகம் பார்ப்பதை கௌரவமாக கருதும் மத்தியதரவர்க்க பரம்பரையில் வந்தவர்களுக்கு இது மிகப்பெரிய வருத்தம் தான்.

- மேற்படி சமூக- வர்க்கப் பின்னணி கொண்டவர்கள், கடந்த காலத்தில் தாம் ஈழ விடுதலைக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காக தான் இன்று புலிகளுக்கு விசுவாசமானவர்கள் போன்று காட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களது வர்க்க நலன் சார்ந்த சுயநல அரசியல். இது ஒரு மிகச் சிறிய குழு மட்டுமே. அவர்கள் யாரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர் அல்ல.

No comments: