Friday, October 26, 2012

மலாலா மீதான தாக்குதல், தாலிபானின் வீழ்ச்சிக்கு வித்திடுமா?

பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய  முயன்ற தாலிபானின் வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன. அவற்றை நமக்கு காண்பித்த சர்வதேச ஊடகங்கள், "தாலிபானுக்கு எதிரான மக்கள் எழுச்சி" நடந்ததைப் போன்று அறிவித்துக் கொண்டிருந்தன. ஆனால், பாகிஸ்தானில் உண்மையான நிலவரத்தை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுவதில்லை. ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத பாகிஸ்தானின் மறுபக்கத்தை, நாம் இங்கு ஆராய்வோம்.

பாகிஸ்தானுக்கும், நவீன இஸ்ரேலுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் மதத்தின் பெயரால் உருவான தேசங்கள். இஸ்ரேல், தன்னை ஒரு உலக யூதர்களின் தாயகமாக காட்டுவதைப் போன்று, பாகிஸ்தான் குறிப்பாக தெற்காசிய முஸ்லிம்களின் தாயகமாக காட்டிக் கொண்டது. பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டாலும், உண்மையில் அது ஒரு மேற்கத்திய சார்புடைய, தாராளவாத கொள்கை கொண்ட  நாடாகவே இருந்தது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய, ஸியா உல் ஹக் காலத்தில் எல்லாமே தலைகீழாக மாறின. சியா, பாகிஸ்தானை ஷரியா சட்டத்தினால் ஆளப்படும், ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாத நாடாக்க விரும்பினார். அதற்காக ஆர்வமுடைய மாணவர்களை தெரிவு செய்து, இஸ்லாமியக் கல்வி கற்க சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார். 

முல்லா, மௌலவி போன்ற இஸ்லாமிய மதகுரு ஆவதற்கான, இடைநிலை, உயர்தர கற்கைகளை சவூதி அரேபியா இலவசமாகவே வழங்கியது. சவூதி அரசு, வாஹபிசம் என்ற இஸ்லாமியப் பிரிவை பின்பற்றி வருகின்றது. தமது பிரிவினரே, இஸ்லாமிய மதத்தை தூய்மையாக கடைப்பிடிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானிய மாணவர்களின் மூளைகளையும்  அதற்கேற்ப தயார்படுத்தினார்கள். பாரம்பரிய பாகிஸ்தானிய இஸ்லாம் (சூபிசம்), தாராளவாதக் கொள்கை கொண்டது. அத்தகைய சமூகத்தில், கடும்போக்கு சவூதி இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட்டது மட்டுமல்ல, மக்களின் பேராதரவுடன் நடைமுறைப் படுத்தப் பட்டது. பாகிஸ்தானிய மக்கள் அத்தனை இலகுவாக மாறி இருக்க  மாட்டார்கள். அதற்கான சமூக அரசியல் தளம் அங்கே இருந்திருக்க வேண்டும்.

இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக் கொள்வதைப் போன்று, பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை எவ்வாறு கட்டியாள்வது என்பது தான் ஆட்சியாளர்களின் பிரச்சினை. பாகிஸ்தானில் ஐந்து மொழிகளைப் பேசும், நாகரிக வளர்ச்சி அடைந்த இனங்களும், அதைத் தவிர பத்துக்கும் குறையாத தனித்துவமான மொழிகளைப் பேசும் பழங்குடி இனங்களும் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இஸ்லாம் என்ற மதம் மட்டும் தான் ஒன்றிணைக்கின்றது. அப்படி இருந்தாலும், கிறிஸ்தவ, இந்து மதங்களைப் பின்பற்றுவோரும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இந்த சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோர் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆவர். அது மட்டுமல்ல, அவர்கள் பாகிஸ்தானின் பூர்வீக மக்களுமாவார். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில், இந்தியாவில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் இன்றைக்கு ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். ஆனால், இன்று கிறிஸ்தவ, இந்து மதங்களை பின்பற்றும் தலித் மக்களின் மூதாதையர் ஆயிரமாயிரம் வருடங்களாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர்கள்.

மதவாதிகள் முதலில், பலவீனமான சமூகங்களை குறிவைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மதத்தால் மட்டும் வேறுபட்டவர்கள் அல்ல. சாதியமைப்பிலும் தாழ்ந்தவர்கள். அதனால், அவர்களை தாக்கினால் கேட்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை. ஸியா அரசு கொண்டு வந்த, மத நிந்தனைச் சட்டம் அவர்களை ஊக்குவித்தது. அண்மையில் ஒரு மூளை வளர்ச்சி குறைந்த கிறிஸ்தவ சிறுமி, "குரான் நூலை எரித்ததாக" குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த இளம்பெண் குற்றமற்றவர் என்று நிரூபணமானது. அந்த கிராமத்து பள்ளிவாசலின் முல்லா, எரிந்த குரான் தாள்களை, அந்த சிறுமியின் பையில் ஒளித்து வைத்திருக்கிறார். அந்த உண்மையை கூறியவர், பள்ளி வாசலில் தொழுகையை அறிவிக்கும் மூசேன். இருப்பினும், அந்த கிறிஸ்தவ சிறுமி, மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. குற்றமிழைத்த முல்லாவின் ஈனச் செயலுக்குப் பின்னால், அந்த ஊரில் வாழும் கிறிஸ்தவர்களை விரட்டும் சதித் திட்டம் மறைந்திருக்கலாம்.

பாகிஸ்தான் கிராமங்களில் பாதிக்கப்படும், எல்லா கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், சர்வதேச கவனம் கிடைப்பதில்லை. ஒரு தடவை, விவசாய கூலிப் பெண்களுக்கு இடையில் நடந்த சண்டை ஒன்று, நீதிமன்றம் வரை சென்றது. அதில் குற்றஞ் சாட்டப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தப் பெண் செய்த குற்றம், வாய்த் தர்க்கத்தின் போது, மற்றவரின் (இஸ்லாமிய) மதம் பற்றி தரக் குறைவாக பேசியது. அங்கு நடந்த சச்சரவுக்கான காரணம் எதுவாக இருப்பினும், மத நிந்தனையானது நீதிபதியினால் கடுமையான குற்றமாக கருதப் பட்டது. உண்மையில் அன்று அங்கே நடந்தது என்ன? வயல் வேலையின் நடுவில், கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த கிறிஸ்தவப் பெண்ணிடம், நீர் வாங்கிப் பருக சில பெண்கள் மறுத்துள்ளனர். அதற்குக் காரணம், அந்த கிறிஸ்தவப் பெண் ஒரு தீண்டத்தகாத சாதியை சேர்ந்தவர். இந்தியாவில், இலங்கையில் இருப்பதைப் போல, பாகிஸ்தானிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது கூட தீட்டு என்று கருதப் படுகின்றது. இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம், மத முரண்பாடாக வளர்ந்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீதிபதி உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால், ஒரு சிறிய குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளார். இது தெற்காசிய நாடுகளுக்குரிய பொதுவான குணம். இன்றைக்கு யாரும் சாதி ஆதிக்க அரசியலை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். மதப் பிரச்சினை, இனப்பிரச்சினைகளுக்கு பின்னால் முகத்தை புதைத்துக் கொள்வார்கள்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு, அங்கே தாலிபான் என்ற அமைப்பை உருவாக்கியமை எல்லோருக்கும் தெரியும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றது. அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆப்கானிய ஆயுதக்குழுக்களுக்கு கொடுத்து யுத்தம் செய்ய விட்டு, ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடந்த முப்பதாண்டுகளாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இவர்கள் ஆயுதங்களுக்கு செலவிட்ட பணத்தை, நாட்டை அபிவிருத்தி செய்வதில் செலவிட்டிருந்தால், பாகிஸ்தானிலும் தாலிபான் உருவாவதை தடுத்திருக்கலாம். பாகிஸ்தான் அரசு, அயல்நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தை உருவாக்கி விட்டது. அவர்களின் அசுர வளர்ச்சியைக் கண்டு பிரமித்த பாகிஸ்தானிய இளைஞர்கள், தாங்களும் ஒரு தாலிபான் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு Tehrik-e-Taliban of Pakistan (TTP) என்று பெயரிட்டார்கள்.  2007 இலிருந்து, 2009 வரையில், ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள மேல் மாகாணத்தின் பல பகுதிகள் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் புலிகளை அழிக்கும் நோக்குடன், ஸ்ரீலங்கா அரசு இராணுவ நடவடிக்கை எடுத்திருந்தமை அனைவருக்கும் தெரியும். அதே வருடம், அதே காலத்தில், பாகிஸ்தான் இராணுவம் தாலிபான் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது போர் தொடுத்திருந்தது. ஸ்ரீலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரித்த சர்வதேச நாடுகள், பாகிஸ்தான் அரசையும் ஆதரித்தன. போரின் முடிவும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. முற்றுகைக்குள் சிக்கிய தாலிபான்கள், இலட்சக் கணக்கான பொது மக்களை வெளியேற விடாது தம்மோடு வைத்திருந்தனர். பாகிஸ்தான் இராணுவம் கண்மூடித் தனமாக எறிகணைகளை வீசி, ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தது. அந்த வருடம் நடந்த போரின் இறுதியில், தாலிபான் பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தானிய அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. இருப்பினும், தாலிபான் முற்றாக அழிக்கப் படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் தொடர்ந்தன. சமீபத்தில் நடந்த, மலாலா மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தாலிபான் இன்னமும் அங்கே இயங்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

பாகிஸ்தானில் மீண்டும் தாலிபான் தலையெடுப்பதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் அரசின், மக்கள் நலனை புறக்கணிக்கும் ஊழல் மய  அரசியல் ஒரு முக்கிய காரணம். 2010, 2011 ல் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணப் பொருட்களை வழங்குவதில், வழக்கம் போல அரசு அசமந்தப் போக்கை காட்டியது. இத்தனைக்கும், சர்வதேச நாடுகளின் உதவிகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. வெள்ள நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெறவில்லை. அந்த தருணத்தில், தாலிபான் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. பாகிஸ்தானிய அரசினால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மனங்களை தாலிபான் வென்றது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிப்பார்கள்?

பாகிஸ்தானில் அபிவிருத்தியால் பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்கள், மிகவும் வறுமை நிலையிலும், எழுத்தறிவின்றியும் வாழ்கின்றனர். அத்தகைய சமூகத்தில், தாலிபான் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்ததில் வியப்பில்லை. அந்தப் பகுதியில், அரச பாடசாலைகளின் செலவினத்திற்காக, அரசு செலவிடும் தொகை மிகவும் சொற்பம். அந்த இடங்களில், சவூதி நிதியில் தாலிபான் கட்டிய குரான் பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே கல்வி இலவசம். அத்துடன், பிள்ளைகளுக்கு உணவும், ஆடைகளும் தருகிறார்கள். பணம் செலவழித்து பட்டணத்திற்கு அனுப்பி, தனியார் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கும் வசதியற்ற ஏழைப் பெற்றோர், தாலிபான் நடத்தும் மதராசாக்களால் ஈர்க்கப் படுவதில் வியப்பில்லை. ஆனால், அந்தப் பாடசாலைகளில், குரான் படிப்பு, கணிதம், அரபு மொழி மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள். சமூகத்தில் படித்து முன்னேற வேண்டுமானால் அரசுப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். அதனை தடுக்கும் நோக்குடன், தாலிபான் அரசுப் பாடசாலைகளை குண்டு வைத்து தகர்த்தது. மேலும், மேற்கத்திய கல்வியமைப்பு, பெண் கல்வி ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையாகவும் அது நடந்தது. தாலிபான்களின் கல்வி மறுப்பை எதிர்த்து போராடி பிரபலமானவர் தான், தாலிபானால் சுடப்பட்ட சிறுமி மலாலா.

தாலிபான் உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களை நம்பியிருக்கும் மக்கள் மனதிலும், மதவெறி, சகிப்புத் தன்மை இன்மை,போன்றன விதைக்கப் படுகின்றன. அவர்களுக்கு எதிராக பேசும் நிராயுதபாணிகளான மக்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை தான். அதை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு, மலாலா துப்பாக்கிச்சூடு விடயத்தில், தாலிபானின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்த்தது எல்லாம் வெறும் காட்சிப் படிமங்கள் மட்டுமே. நிஜத்தில், இன்றைக்கும் மக்கள் தாலிபானை விமர்சிக்க அஞ்சுகின்றார்கள். நேர்மையான அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள விரும்பும் இம்ரான் கான் போன்ற பிரபலங்கள் கூட தாலிபானை எதிர்த்து பேசுவதில்லை. அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான, இம்ரான்கானின் அமைதிவழியிலான ஊர்வலம் ஒன்றை தாலிபான் தடை செய்தது. அப்படி இருந்தும், மலாலா மீதான துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாத செயலாக கண்டித்த இம்ரான்கான், தாலிபானை நேரடியாக கண்டிக்க தயங்குகின்றார். அதற்கு என்ன காரணம்? 

இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் யாராவது புலிகளை விமர்சித்துப் பேசினால் என்ன விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்? அந்த நிலைமை தான் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது. தாலிபானின் செயற்பாடுகளுடன் எல்லோரும் உடன்படுவதில்லை. அவற்றை விமர்சனத்துடன் அணுகும் மக்களும் இருக்கின்றனர். ஆனால், அதை எல்லாம் வெளியில் பேசத் தயங்குவார்கள். அப்படிப் பேசினால், அரச ஆதரவாளர் முத்திரை குத்தப்பட்டு விடும் என்ற அச்சம் மட்டும் காரணம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய இராணுவம் பிரயோகிக்கும் வன்முறை, தாலிபான் வன்முறையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால், எந்தக் குறை இருந்தாலும், மக்கள் தாலிபானை ஆதரிக்க வேண்டிய நிலை. இதே போன்ற நிலைமையில் தான், பெரும்பாலான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை, இங்கே நான் குறிப்பிட வேண்டியதில்லை. 

பாகிஸ்தானில் இன்னமும் தொடரும், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்களின் (ட்ரோன்) தாக்குதல்களால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஓரிரு தடவைகள், விமானக் குண்டு வீச்சில் சில பாகிஸ்தானிய படையினரும் கொல்லப்பட்டனர். அப்படி இருந்த போதிலும், பாகிஸ்தானிய அரசினால், அமெரிக்க விமானக் குண்டுவீச்சை தடுக்க முடியவில்லை. அத்தகைய கையாலாகாத அரசின் பக்கம் இனங் காட்டிக் கொள்வதற்கு யார் விரும்புவார்கள்? மலாலா விவகாரத்தில், பாகிஸ்தானிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேல் தாலிபானின் கதை முடிந்து விடும் என்றும் நினைப்பது வெறும் கனவு. அப்படி ஒன்று நடக்க வேண்டுமென்று, பாகிஸ்தானிய, அமெரிக்க அரசுகள் மனப்பூர்வமாக விரும்பினால், முதலில் ட்ரோன் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.


பாகிஸ்தான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்
2.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
3.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி
4.காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை


3 comments:

சிவக்குமார் said...

http://pakmuzone.info/2012/10/15/malala-yousafzai-the-hidden-truth/

சீனு said...

//இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் யாராவது புலிகளை விமர்சித்துப் பேசினால் என்ன விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்? அந்த நிலைமை தான் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது.//

இது தவறான ஒப்பீடு என்பது என் கருத்து.

Kalaiyarasan said...

//இது தவறான ஒப்பீடு என்பது என் கருத்து.//
என்ன தவறு என்று விளக்கமாக கூற முடியுமா? என்னைப் பொறுத்த வரையில், இவ்விரண்டு பகுதியை சேர்ந்தவர்களும் பேசுவதில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அவர்கள் கூறும் நியாயங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.