Wednesday, November 18, 2009

இனியொரு சதி செய்வோம்


இனியொரு இணையத்தளத்தில், என்னைப் பற்றி வந்த பின்னூட்டம் ஒன்று, பல வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. இதையிட்டு என் மேல் கரிசனை கொண்ட, பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது. INSD என்ற ஜெர்மனியை தளமாக கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், இனியொரு கட்டுரையின் மையப்பொருளாக இருந்துள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் (ஆகஸ்ட் 2009 ) இந்தியாவில் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் பங்குபற்றிய "குற்றத்திற்காக" எஸ்.வி. ராஜதுரை போன்ற பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது. "NGO எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதியில் இயங்குகின்றன. அங்கே ராஜதுரை போன்ற மாரக்சியர்களுக்கு என்ன வேலை" என்பது கட்டுரையின் சாராம்சம். கட்டுரையை எழுதியவர் இனியொரு ஆசிரியர் குழுவில் ஒருவரான அசோக். தன்னை ஒரு "தூய்மைவாத மார்க்சியராக"(?) காட்டிக் கொள்ளும் அசோக், முற்றுமுழுதாக தன்னார்வ நிறுவன தொடர்பேதும் இல்லாதவரா? அசோக் என்ற தனி நபரை விட, அவரது கருத்துகளே எமக்கு முக்கியமானவை. முன்பொரு தடவை டிராஸ்கியை படித்து விட்டு, ஸ்டாலினை பற்றி அவதூறான கட்டுரைகள் எழுதினார். மார்க்ஸை படித்து விட்டு, "கார்ல் மார்க்ஸ் தனது மனைவி ஜென்னியை பட்டினி போட்டதாக" எழுதினார். பெரியாரை படித்து விட்டு, "பெரியார் ஒரு தலித் விரோதி" என்று தொடர் கட்டுரைகள் வரைந்தார்.

இனியொருவில் அசோக் எழுதிய எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!: கட்டுரைக்கு வந்த பின்னூட்டமொன்றில் ராஜேஸ்வரன் என்பவர் நான் ஐ.என்.எஸ்.டி.யின் முக்கிய உறுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த அநாமதேயம் சுமத்திய குற்றச்சாட்டை இனியொரு அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இனியொருவில் மட்டுமல்ல, வினவு தளத்திலும் ஓடிப்போய் பின்னூட்டமிட்ட ராஜேஸ்வரனுக்கு, "கலையகம்" இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை.
ராஜேஸ்வரன் பின்னூட்டமும், அதற்கு இனியொரு அளித்த பதிலும் பின்வருமாறு:
...........................................................................................................................................................
#
Rajaswaran
Posted on 11/14/2009 at 11:18 am

இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.
Reply
#
இனியொரு
Posted on 11/14/2009 at 2:39 pm

ராஜேஸ்வரன், இனியொரு மீதான உங்கள் விமர்சனத்தை கவனம் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிடும் கொலன்டைச் சேர்ந்த கலையரசன் அவர்கள், ஐஎன்எஸ்டி என்ற நிதி நிறுவனத்தோடு மிக நெருக்கம் கொண்ட அதன் அங்கத்தவர் என்பது எமக்கு தெரிந்த பின்னர் அவரின் கட்டுரைகளை பதிவிடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இறுதியாக அவரின் கட்டுரை 31 ஜனவரி 2009 திகதிக்கு பிற்பாடு பதிவிடப்படவில்லை என்பதை தயவு செய்து கவனம் கொள்ளவும். .
...............................................................................................................................................

இந்த ராஜேஸ்வரன் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, என்று எவருக்கும் தெரியாது. அப்படி ஒரு பின்னூட்டம் கிடைக்கபெற்ற இனியொரு என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். (இனியொரு எனது கட்டுரைகளை பிரசுரித்ததன் மூலம் என்னோடு சிறந்த நட்புறவைப் பேணியது பின்னூட்டத்தில் இருந்து தெளிவாகின்றது.) ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் யாரோ ஒரு அநாமதேயம் சொன்னதை ஆமோதித்து பதில் கூறியுள்ளனர். இனியொருவின் கூற்றுப்படி, நான் ஐ.என்.எஸ்.டி.யுடன் நெருக்கமானவன் என்பதை ஜனவரி 2009 ல் தான் அறிந்து கொண்டார்களாம். நன்று.

ஐ.என்.எஸ்.டி. என்ற புலம்பெயர்ந்த (சிங்கள/தமிழ்) இலங்கையரின் அமைப்பு இயங்கி வருவதை, முதன் முதலாக அசோக் வீட்டில் தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், "ஐ.என்.எஸ்.டி. பற்றியும், அதிலே கலந்து கொள்பவர்களையும் நார் நாராக கிழித்து தொங்கப் போட்ட" அதே அசோக் மூலமாக தான் ஐ.என்.எஸ்.டி. பற்றி தெரிந்து கொண்டேன். 2006 ம் ஆண்டு, அன்று பாரிசில் உள்ள அசோக் வீட்டிற்கு ஐ.என்.எஸ்.டி. உறுப்பினரான அவரது நண்பர் வந்திருந்தார். அவர் கொண்டுவந்த, ஐ.என்.எஸ்.டி. ஒன்றுகூடல் புகைப்படங்களில் இருந்த, நபர்களில் பாதிப் பேராவது அசோக்கிற்கு தெரிந்தவர்களாக இருந்தனர். (அசோக் முன்னிலையில்) அவரது நண்பர், அடுத்த ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிற்கு எனக்கு அழைப்பு விடுவதாக அறிவித்தார்.

அதற்குப் பிறகு, ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் ஐ.என்.எஸ்.டி. வருடம் தோறும் நடத்தும் seminar குறித்து மின்னஞ்சல்கள் வந்த போதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே ஐ.என்,எஸ்.டி. செயற்பாடுகள் குறித்து பல தடவை அசோக்குடன் தொலைபேசியில் கதைத்துள்ளேன். அப்போதெல்லாம் அவரிடம் எதிர்மறையான கருத்துகள் இருக்கவில்லை. நான் முதன் முதலாக ஐ.என்.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டது 2008 ம் ஆண்டு, பெப்ரவரி 1-3 திகதிகளில். அது கூட புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலங்கையரின் ஒன்றுகூடலாக மட்டுமே இருந்தது. அங்கே நடந்த கருத்தரங்கில் இலங்கையில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை குறித்து ஆராயப்பட்டது. அப்போது போர் ஆரம்பமாகி இருந்ததால், இலங்கையில் சமாதானம் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டனர். கருத்தரங்கில் பல தரப்பட்ட அரசியல் பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு செலவுகளுக்காக, அன்று அங்கு புதிதாக வந்தவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்ததன் மூலம் ஒரு தொகை பணம் சேகரித்தார்கள்.

அதே போன்ற கருத்தரங்கை நோர்வேயிலும் நடத்த விரும்பினர். மே மாதம் 2008, ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற கருத்தரங்கு மட்டுமே நான் கடைசியாக கலந்து கொண்டது. அந்தக் கருத்தரங்கில், ஐ.என்.எஸ்.டி. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக இயங்குவதையிட்டு எனது அதிருப்தியை தெரிவித்தேன். இலங்கையில் சமாதானத்திற்கான இயக்கம் ஒன்றிற்கு, ஐரோப்பிய யூனியன் நிதியுதவி, அதனால் விளையும் ஆபத்தையும் எடுத்தியம்பினேன். ஒரு என்.ஜி.ஒ. தனக்குரிய எல்லைகளுக்குள் மட்டுமே இயங்க முடியும். அது தான் ஐ.என்.எஸ்.டி.யின் நிலைப்பாடுமாக இருந்தது. ஒஸ்லோ கருத்தரங்கில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு பிற்பாடு, நான் இதுவரை எந்தவொரு ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிலும் கலந்து கொள்ளவில்லை. ஒஸ்லோ கருத்தரங்கில், விமர்சித்து கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனியொரு ஆசிரியர் குழு இதயசுத்தியோடு என்னை அணுகியிருந்தால், மேற்படி விளக்கத்தை அப்போதே அளித்திருப்பேன்.

ஜனவரி 2009 க்குப் பின்னர் எனது கட்டுரைகளை பிரசுரிக்காமல் தவிர்த்ததாக, "இனியொரு" தெரிவிக்கின்றது. அதாவது நான் "ஐ.என்.எஸ்.டி. என்ற ஏகாதிபத்திய தன்னார்வு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்" என்று தெரிந்து கொண்ட பின்னர், அந்த முடிவை எடுத்தார்களாம். நான் ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்குகளில் கலந்து கொண்டது இரு தடவைகள் மட்டுமே. 2008 ம் ஆண்டு, பெப்ரவரி, மே ஆகிய மாதங்களில் அந்த கருத்தரங்குகள் இடம்பெற்றன. "இனியொரு" இணையத்தளத்தில் முதன்முதலாக, ஆகஸ்ட் 2008 ல் தான், எனது கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அதே மாதம், "இனியொரு" ஆசிரியர் குழுவில் என்னையும் இணைந்து பணியாற்ற வருமாறு அசோக், மற்றும் சபா நாவலன் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பல தடவைகள், என்னிடம் கட்டுரைகளை கேட்டு வாங்கினார்கள். அப்போதெல்லாம் என்னுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவையேனும், ஐ.என்.எஸ்.டி.யுடனான தொடர்பு குறித்து என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. இனியொரு பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

1 comment:

Anonymous said...

தோழர் கலையரசன்,மிக அருமையாக "இனியொரு"வை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.இனியொரு தனது திருட்டுதனத்தை மறைப்பதற்கு மற்றவர்கள்மீது அவதூருகளை வீசியது.இவர்கள் "திடீர்" மார்க்சிய கரிசனம் போடும் நாடகம், இவர்களின்முந்தைய அரசியல் செயல்பாடு,இலங்கைஇராணுவத்திற்கு பல்இலித்தது,NGO visa வில் திருமதி அசோக்கின் பயணம்,அமைச்சரின் பாதுகாப்பில் நாவலன் மச்சாள் என ஏகப்பட்ட கழிவுகளை..... இனியொரு அரசுக்கு உளவு வேலைசெய்துகொண்டுமற்றவர்களை ஆதரமில்லாமல் ...இந்த பண்ணாடை "இனியொரு" வின் முகத்திறையை அம்பலபடுத்தியதற்கு நன்றி.
ஆதி