Saturday, January 14, 2012

தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்



அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!

மேற்கத்திய நாட்டு மக்கள் "கிறிஸ்துமஸ்" என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், "உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்." என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

உலகத்தில் தமிழர்கள் மட்டுமே வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் "அறிவுஜீவிகள்", இன்றைக்கும் அவ்வாறு தான் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், "தைப்பொங்கல் தினத்தை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமா?" என்று, நமது தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். உழவர் திருநாளான பொங்கலும், புது வருடப் பிறப்பும் ஒரே காலத்தில் வருகின்றது. இரண்டுமே சரி தான். அதே நேரம், பண்டிகையின் வேறு சில கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

பண்டைய தமிழர்களைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல், புது வருடம் என்பதற்கு அப்பால்,அந்த தினம் வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் பெறுகின்றது.
சாதி, மத, வர்க்கங்களைக் கடந்த ஒரேயொரு சமத்துவமான பண்டிகை நாள் பொங்கல் மட்டுமே. பொங்கல் கொண்டாடுவது, தமிழர்களுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு அல்ல. உலகின் பண்டைய நாகரீகங்களுக்குப் பொதுவான தினம் அது. பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே விசேஷமான பண்டிகை அல்ல, பல உலக இனங்களுக்குப் பொதுவானது. 

பிற்காலத்தில் தோன்றிய மதங்கள், அதன் முக்கியத்துவத்தை மறைத்து விட்டன. மேற்குலகில் கிறிஸ்தவ மதமும், இந்தியாவில் இந்து மதமும் அந்த மாபெரும் இருட்டடிப்பு வேலையை நிறைவேற்றின. தமிழகத்தில் நீண்ட காலமாக "இந்து எதிர்ப்பு போர்" நடந்து வந்ததால், இந்து மதம் மிகவும் தாமதமாகத் தான் அதனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டியது. அதனால் தான், பண்டைய தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பொங்கல் எதற்காகக் கொண்டாடப் படுகின்றது? விவசாயிகள் தமது வயலில் விளைந்த தானியத்தை, பானையில் இட்டுப் பொங்கி சூரியக் கடவுளுக்கு படைப்பார்கள். (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்.) அமெரிக்க கண்டத்தில் வாழும் செவ்விந்தியர்கள், அறுவடை செய்த சோளத்தை கடவுளுக்கு படைக்கும் பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகின்றனர்.

பழந் தமிழர்கள் பொங்கலுக்கு முதல் நாள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து வந்து,ஊரில் உள்ள பொது இடத்தில் போட்டு எரித்தார்கள்.(Bonfire) இந்தப் பழக்கம், பாபிலோன், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப் பட்டது. அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் சென்றிருந்த வேளை, ஈஸ்டர் தினத்தன்று கிராமங்களில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கேயும், கிராம மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு வந்து போட்டு, ஊர் கூடி எரிப்பார்கள்.

உலகின் பிற இனங்களும் விவசாய சமூகங்களாக இருந்துள்ளன, இருந்து வருகின்றன. பிற இனங்ககளைச் சேர்ந்த விவசாயிகளும், அறுவடை நாள் என்று ஒன்றைக் கொண்டாடும் சாத்தியக்கூறுகள் உண்டல்லவா? தமிழ்ப் பெருமை பேசுவோர், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகை கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. அதனால் தான், "கிறிஸ்தவ" ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த, "பொங்கல் பண்டிகைகள்" அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்திற்கும், தைப் பொங்கலுக்கும் என்ன தொடர்பு? அதற்கு கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை சற்று அறிந்து கொள்ள வேண்டும்.

வட ஐரோப்பிய பகுதிகளில், அதாவது ஸ்கண்டிநேவிய நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம், "யூல்" (அல்லது யூலே) என்று அழைக்கப் படுகின்றது. இங்கிலாந்தில், சில இடங்களில் யூல் பண்டிகை கிறிஸ்துமஸ் தினத்தை விட்டு தனியாக கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய பாரம்பரியத்தின் படி, யூல் பண்டிகை, விவசாயிகளின் அறுவடை நாளாகவே கொண்டாடப் படுகின்றது. ஆனால், அந்த நாடுகளில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைக்க முடியாது. அங்கெல்லாம், குளிர் காலத்தில் மாதம் முழுவதும் சூரியனைக் காண முடியாது.

டிசம்பர் 21 - ஜனவரி 21 வரையிலான நாட்கள், வருடத்திலேயே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் நாட்கள். அந்த நேரத்தில், சூரியனின் வரவுக்காக வேண்டி வழிபாடு நடத்தும் நோக்குடன், பண்டிகை கொண்டாடுவது உசிதமல்லவா? வட ஐரோப்பாவில், கோடை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பனிக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியது தான். பனிக்காலம் ஆரம்பமாகும் முன்னர், பயிரிட்ட உணவுப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து களஞ்சியப் படுத்தி வைத்திருப்பார்கள். யூல் பண்டிகையின் போது, அறுவடை செய்த பொருட்களை உண்டு, களித்து அனுபவிப்பார்கள். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் இறைச்சியும் அப்போது நுகரப்படும்.

ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 21 அன்று, சூரியன் இடம் மாறுகின்றது. (பூமியின் வட பகுதியில் டிசம்பர் 21 என்றால், தென் பகுதியில் டிசம்பர் 25 அளவில் அந்த மாற்றம் நடக்கலாம்.) ரஷ்யாவின் துருவப் பகுதியில், அல்லது நோர்வேயின் வட முனையில் வாழ்பவர்கள், சூரியன் இடம் மாறும் அதிசயத்தை கண்ணால் காணலாம். இந்தியாவில், இந்து மத நம்பிக்கையின் படி, "சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதாக" கூறுகின்றனர். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை, உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

பண்டைய தமிழர்கள், அதனை தைப்பொங்கல் தினம் என்று அழைத்தனர். பெயர்கள் வேறாக இருந்த போதிலும், பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் ஒன்று தான். பொங்கல் பண்டிகையை புது வருடப் பிறப்பாக கருதினால் அதில் தவறெதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். குறிப்பாக, இஸ்லாத்திற்கு முந்திய ஈரானில், டிசம்பர் 25, யால்டா தினம் கொண்டாடப் பட்டது. யால்டாவில் இருந்து மருவியது தான் யூல். அது மித்ரா (மேஹ்ர்) கடவுளின் பிறந்த தினமாகவும் கொண்டாடப் பட்டது. பண்டைய ஈரானில் யால்டா ஒரு அறுவடை நாளாகவும், அதே நேரத்தில் புது வருடம் பிறப்பதாகவும் கருதப் பட்டது. "யால்டா" என்றால், பிறப்பு என்று அர்த்தம் வரும்.

ஐரோப்பியக் கண்டத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை, மக்கள் ஆதரவு பெற்ற வேற்று மத கொண்டாட்டங்களை உள்வாங்கிக் கொண்டது, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாம் அவ்வாறு கிறிஸ்தவத்திற்கு மாற்றப் பட்ட பண்டிகைகள் தான். கிறிஸ்துமஸ், சூரிய ஒளி மிகக் குறைவாகக் கிடைக்கும் தினம். ஈஸ்டர், இரவும், பகலும் சரிசமமாக வரும் இளவேனில் காலத்தின் தொடக்கம். இந்தக் காரணங்களுக்காகத் தான், அந்தப் பண்டிகைகள் கொண்டாடப் பட்டனவே தவிர, அவற்றிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்த இடத்தில் யாராவது "புத்திசாலித் தனமான" கேள்வி ஒன்றை எழுப்பலாம். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வருகின்றது, ஆனால் பொங்கல் ஜனவரி 15 அல்லவா வருகின்றது?

சூரியனின் பருவகால மாற்றம், உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப் படுவதில்லை. ஜப்பானியர்கள், சீனர்கள், யூதர்கள், ஆப்பிரிக்காவில் டோகன் இனத்தவர்கள், என்று பலவிதமான மக்கள் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரியான பண்டிகையை கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25 அன்று தான் கிறிஸ்துமஸ் என்று, தீர்மானம் நிறைவேற்றியது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. கிரேக்க, ரஷ்ய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 ம் தேதி அன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் சூரியக் கலண்டரை அமுல் படுத்தியது. அதற்கு முன்னர், சந்திரக் கலண்டர் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பாவனையில் இருந்தது. அந்தக் கலண்டரின் படி, நாட்கள் மாறி மாறி வரும்.

சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை வேறு விதமாகக் கொண்டாடப் பட்டது. மார்கழி மாதம், பெண்கள் பாவை நோன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருமணமாகாத கன்னிப் பெண்கள், காலையில் எழுந்து நீராடி, ஒரு மாதம் விரதம் இருப்பார்கள். அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது. பொங்கல் பண்டிகையின் போது, அனைவரும் சாதி,மத வேறுபாடின்றி கலந்து கொள்வார்கள். அன்றைக்கு மட்டும் வர்க்க வேறுபாடுகளும் தளர்த்தப் படும். அதனால், பொங்கல் பண்டிகையை, பண்டைய தமிழரின் சமதர்மத் திருவிழா என்றும் அழைக்கலாம்.

இன்று பல வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கு, அரிவாளும், சுட்டியலும் சின்னத்தைக் கண்டாலே ஒவ்வாமை நோய் வந்து விடுகின்றது. எமது முன்னோர்கள், பொங்கல் தினத்தன்று, நெற் கதிர் அறுக்கும் அரிவாளுக்கும், நிலத்தைப் பண்படுத்தும் கலப்பைக்கும், சந்தனம் பூசி மரியாதை செலுத்துவார்கள். இராணுவ கலாச்சாரத்தை வளர்க்கும் பார்ப்பனீய ஆயுதபூஜையை விட, தமிழ் உழைக்கும் வர்க்கப் பொங்கல் திருநாள் பல மடங்கு சிறந்தது.

பண்டைய பாபிலோன், அல்லது ஈரானில், இது இன்னும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அன்றைக்கு மட்டும், அடிமைகள் எஜமானர்கள் போன்று நடந்து கொள்ள அனுமதிக்கப் படுவர். எஜமானர்கள் அடிமைகளாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கும் சுதந்திரம் வழங்கப் படும். இது போன்ற நடைமுறையினால், நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து, குழப்பகரமான சூழ்நிலை நிலவுவது போன்று காணப்படும். பாபிலோனியரின், இறையியல் நம்பிக்கை அதிலிருந்து ஆரம்பமாகின்றது. அதாவது, பூமியில் ஆரம்பத்தில் குழப்பகரமான சூழ்நிலை இருந்ததாகவும், அதன் பிறகே அதிகாரம் நிலைநாட்டப் பட்டதாகவும் நம்புகிறார்கள். எது எப்படி இருப்பினும், அந்த சில நாட்களுக்காவது, எஜமானர்களும், அடிமைகளும் நண்பர்களாக நடந்து கொள்வது குறிப்பிடத் தக்கது. இந்த சமதர்மப் பண்டிகைக் கலாச்சாரம், ஒரு காலத்தில் ரோமாபுரி வரையில் பரவி இருந்தது.

பழந் தமிழரின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமாயின், நாம் பொங்கல் பண்டிகையை, வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாளாக கொண்டாட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:

1 Pongal History
2 List of harvest festivals
3 Yule festival
****************************************


பொங்கலுடன் தொடர்புடைய யால்டா தினம் பற்றிய கட்டுரை:

4 comments:

சிவக்குமார் said...

சிறப்பான கருத்துக்கள்!!
/பொங்கல் பண்டிகையை, வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாளாக கொண்டாட வேண்டும்./

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வழிமொழிகிறேன்

Natrayan.M said...

தை பொங்கல் தமிழருக்கானதுதான். சந்தேகமில்லை.ஆனால் தமிழ் நாட்டில் உள்ள எந்த கிருத்துவர்களும் முஸ்லீம்களும் பொங்கலை கொண்டாடுவதில்லை. இவர்களை எல்லாம் எப்படி தமிழர்கள் என்று கூறுவது. உண்மை தமிழர்கள் யார் என்று உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். கிருத்துவத்தை யும் இஸ்லாமியத்தையம் ஏற்றுக்கொண்டவர்களை தமிழர்கள் என்று கூறமுடியாது. முதலில் அவர்களது பெயர்களை முதலில் தமிழ் பெயராக மாற்ற வேண்டும்.

ஹேமா said...

அறியாத ஆனால் தேவையான பல பதிவுகள் படித்தேன்.மிக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் இன்னும் நிறையப் படித்தறிய இருக்கிறது உங்கள் பதிவுகளில்.தொடருங்கள்.மிக்க நன்றி !

Prithiviraj kulasinghan said...

மிகவும் முக்கியமான பதிவு.

கிறிஸ்தவர்களிடையே அறுவடைப் பண்டிகை என்ற ஒன்று சில நாடுகளில் கொண்டாடப் படுகின்றது. நன்றி செலுத்தும் நாள் (Thanksgiving Day) என்று அதற்குப் பெயர். அதுவும் தைப்பொங்கல் போல இருக்கும். இங்கும் சில கிராமங்களில் அது கொண்டாடப் படுகிறது. அநேகமாக வருட முடிவில் அல்லது ஏதெனும் ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட காலப் பகுதியில் இது நடக்கும். கழுத்துறைப் பகுதியிலள்ள சில கிறிஸ்தவர்கள் ஆடி ஆவணி மாதங்களில் கொண்டாடுவர். அங்கு சற்று வித்தியாசமாக அது கொண்டாடப்புடும். அந்த நாட்களில் பாடசாலை விடுமுறைகளில் கைவினைப் பொருட்களைச் செய்து படைப்பதும் அதனை விற்று வரும் கொடையை ஆலயத்திற்கு வழங்குவதும் வழக்கம். (அவர்கள் இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களிடையே அறுவடை என்று ஏதுமிராது.)

எனக்குத் தெரிந்தவரை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கலை நேரடியாகக் கொண்டாடாதமைக்கான பிரதான காரணங்கள்
1. அங்கு வரும் சூரிய வழிபாடு (அவர்கள் சூரியன் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புபவர்கள். படைக்கப்பட்ட ஒன்றை வணங்குவது பாவம் - ஹராம்),
2. தைப்பொங்கல் தினம் கணிப்பிடப்படும் முறை. இன்று இது கணிப்பிடப்படுவது இந்து வருட மற்றும் சுபநேரக் கணிப்பின் படியே. இதனால் தான் தைப் பொங்கல் நாட்கள் வருடத்திற்கு வருடம் 13-15 வரையான நாட்களுக்குள் மாறி மாறி வருகிறது. இது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது. எனவே அதே தைப்பொங்கல் நாளில் அவர்களால் கொண்டாட முடியாது.

கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல புரட்டஸ்தாந்து மதத்திலுள்ளும் கிறிஸ்தவத்தை சுதேசியமாக்கும் போக்கு இருக்கிறது. அவர்கள் இதனை அறுவடைப் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது போலவே மலையக கிறிஸ்தவர்களிடையே மேதினத்தன்று தமது கொழுந்துக் கூடை முதலியவற்றைப் படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. (சிலர் இதனை ஆயுத பூஜையுடன் ஒப்பிடுவர்)

முக்கியமான ஒரு கேள்வியையும் நாம் ஆராய்வது நல்லது. சிங்கள மக்களிடையே ஏன் இந்த வழக்கம் இல்லை? இதற்கு வடக்கு - சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையிலும் ஏனைய பிரதேச மக்கள் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையிலும் தங்கியிருப்பது காரணமா? ஏனனில் சிங்கள மக்கள் சித்திரை வருடப் பிறப்பையே அறுவடைப் பண்டிகை போன்று கொண்டாடுகின்றனர்.