Saturday, November 21, 2020

பாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு

இன்று தமிழர்களால் "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும், பாரிஸ் வடக்கை சேர்ந்த லா ஷாப்பல் பகுதி முன்னொரு காலத்தில் "பாரிஸ் மெதீனா" என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அது அல்ஜீரிய- அரேபியர்களின் கோட்டையாக கருதப் பட்டது. அந்தப் பகுதிகளில் பெருமளவு அல்ஜீரிய குடியேறிகள் வசித்தனர். 

அடித்தட்டு மக்களின் வாழிடமான பாரிஸ் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களுக்கும் குறைவில்லை. பிரெஞ்சுப் பொலிஸ் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை. ஐரோப்பியர்கள் அங்கு செல்ல அஞ்சினார்கள். குறிப்பாக rue de la Charbonniere, rue de la Chartres, rue Myrha ஆகிய தெருக்களும், Berbes மெட்ரோ ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளும் மிகவும் ஆபத்தானவை. 

ஐம்பதுகளில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த அல்ஜீரியர்களும் பெருமளவில் ஆதரித்தனர். அதனால் அல்ஜீரிய விடுதலை இயக்கங்கள் அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. அவர்களது கைகளில் ஆயுதங்களும் இருந்தன. உண்மையில் அன்று இதையெல்லாம் பிரெஞ்சு அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு சக்தி, அதாவது சோவியத் யூனியன் உதவி இல்லாமல் அல்ஜீரிய விடுதலைப் போர் நடக்க சாத்தியம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டது. 

1957 ம் ஆண்டளவில், லா சாப்பல் பகுதியை அண்டிய பிரதேசம், அல்ஜீரியா ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பட்டப் பகலில் கூட சில அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதைக் காணலாம். அடிக்கடி போட்டிக் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் நடக்கும். "அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும்" என்று பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்ளாமல் விடும். 

இந்த ஆயுத மோதல்களுக்கு காரணமானவர்கள், அல்ஜீரிய விடுதலைக்கு போராடிய தேசியவாத இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள். குறிப்பாக FLN, MTLD, PPA ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இறுதியில் FLN மட்டும் "அல்ஜீரியர்களின் ஏக பிரதிநிதியாக" வெற்றி வாகை சூடிக் கொண்டது. ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. 

சுருக்கமாக, தமிழர்களுக்கு LTTE மாதிரி, அல்ஜீரியர்களுக்கு FLN இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய LTTE, PLOTE ஆகிய தேசியவாத இயக்க இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் சுடு பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த புலி - புளொட் மோதல் மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்களிலும் இடம்பெற்றது. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் தானே? அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா? அரபு அண்ணன் எப்படியோ, தமிழ் தம்பியும் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் என்ன? 

அத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட லா சாப்பல் அல்லது பாரிஸ் மெதினா, இன்று குட்டி யாழ்ப்பாணமாக காட்சியளிக்கிறது. இப்போதும் அது குழு மோதல்களுக்கு பெயர் போன இடம். அதற்குக் காரணம் ஒரு சில தமிழ் ஆயுதபாணிக் குழுக்கள். அதாவது Gang என்று சொல்லப் படும் கிரிமினல் குழுக்கள், போட்டிக் குழு உறுப்பினர்களை தெருவில் கண்டால் துப்பாக்கியால் சுடுபட்டுக் கொள்வார்கள். சில நேரம் இந்த சண்டைக்குள் அகப்படும் தமிழ்ப் பொது மக்களும் காயமடைவதுண்டு. 

என்ன நடந்தாலும், பொலிஸ் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்காது. இப்போதும் அங்கே ஒரு கொலை நடந்தால் கூட, பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புலிகள் இயக்க முக்கியஸ்தர், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். (போர் முடிந்த பின்னரான நிதி அபகரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.) ஆனால், இன்று வரையில் பொலிஸ் அது குறித்த விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. 

பிரெஞ்சுப் போலிஸை பொருத்தவரையில் பாரிஸ் நகரில் சுடுபட்டு சாவது அல்ஜீரியர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான். பிரான்சில் அரேபியரும், தமிழரும் "விரும்பத் தகாத வெளிநாட்டு குடியேறிகள்" தான். எது எப்படி இருப்பினும், முன்பிருந்த அல்ஜீரிய- அரேபியரின் வன்முறை மரபு, இன்று ஈழத் தமிழர்களால் சற்றும் குறையேதும் இல்லாது பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. 

அல்ஜீரிய- தமிழர் சகோதரத்துவம் நீடூழி வாழ்க!

Friday, November 20, 2020

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்!

 

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது! சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளுக்கும் சைவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! 

அதற்கான விளக்கத்தை சுருக்கமாக ஆதாரங்களுடன் தருகிறேன்:

1.
 புலிகளின் மாவீரர் வாரம் என்பது போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதுடன், அவர்களது தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும் உள்ளடக்கியது. அதே மாதிரி ஷியா முஸ்லீம்கள் மாவீரர் மாதம் என்று நினைவுகூர்வார்கள். அது சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர்(10 அக்டோபர் 680) ஈராக்கில் நடந்த போரில் மரணமடைந்த ஹுசைன் தலைமையை பின்பற்றிய போராளிகளை நினைவுகூரும் சடங்கு ஆகும். ஷியாக்களை பொறுத்த வரையில் அது ஒரு விடுதலைப் போர். அந்த மாவீரர் மாதம் ஷியாக்களின் தலைவர் ஹுசைனின் பிறந்தநாளை உள்ளடக்கியது. மாவீரர் மாதத்தின் இறுதி நாள் அஷுரா என்று அழைக்கப் படுகிறது. அஷுரா அன்று, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஷியா முஸ்லீம்களும், ஹுசைனின் விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்வார்கள். (இந்த விடயத்தில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் வித்தியாசம் உள்ளது. சன்னி முஸ்லிம்களை பொறுத்தவரையில், இது மோசேஸ் தனது மக்களை இஸ்ரேல் என்ற வாக்களிக்கப் பட்ட பூமிக்கு அழைத்துச் சென்ற நாள்.)


2.
 புலிகளைப் பொறுத்தவரையில் மாவீரர் வாரத்தின் இறுதியில் வரும் நவம்பர் 27 ஒரு விசேட தினம். அதே மாதிரி ஷியாக்களுக்கு முஹரம் மாதத்தின் பத்தாவது நாளான அஷூரா ஒரு விசேட தினம். முஹரம் மாதம் அனைத்து இஸ்லாமியருக்கும் புனிதமானது. முஹரம் என்ற சொல் ஹராம் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்த படியால், அந்த புனித மாதத்தில் பல விடயங்கள் தடுக்கப் பட்டுள்ளன. புலி ஆதரவாளர்களும் இன்று வரை அதே சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

3.
இந்து/சைவ மத சம்பிரதாயத்திற்கு முரணாக புலிகள் தமது இறந்த போராளிகளை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள். அந்த இடம் "மாவீரர் துயிலும் இல்லம்" என அழைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் மாவீரர் துயிலும் இல்லம் புலிக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள் உணர்வு பொங்க நினைவுகூர்வார்கள். இந்த வழக்கம் ஈரான் அல்லது லெபனானில் இருந்து வந்திருக்க வேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் ஈராக்குடன் போர் நடந்தது. அப்போது போரில் கொல்லப் பட்ட வீரர்கள் தனியாக ஓரிடத்தில் புதைக்கப் பட்டனர். அது பார்சி மொழியில் "மாவீரர் துயிலும் இல்லம்" என்றே அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் அந்த நடைமுறையை பின்பற்றியது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் லெபனானுக்கு சென்று பார்க்கலாம். முன்பு புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் என்னென்ன சடங்குகள் நடந்தனவோ அதெல்லாம் ஹிஸ்புல்லாவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பதை நேரில் காணலாம். மாவீரர்களின் உருவப் படங்கள் கட் அவுட்களாக பொது இடங்களில் வைக்கும் வழக்கமும் பொதுவானது.

4.
புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் அதன் முக்கிய உறுப்பினர்கள் லெபனானில் பயிற்சி பெற்றனர். ஆகவே புலிகளுக்கு லெபனான் பற்றியோ, ஷியா முஸ்லிம்களின் சடங்கு பற்றியோ எதுவும் தெரியாது என்று வாதிட முடியாது. இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப் படவும் தேவையில்லை. உலகில் ஒருவர் இன்னொருவரை பார்த்து பின்பற்றுவது வழமையானது. 

5.
மாவீரர்களை புனிதர்களாக வழிபடும் நடைமுறை கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே பாரம்பரியத்தை பின்பற்றும் சகோதர மதங்கள்.) இன்றைக்கும் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் புனித பிரான்சிஸ், புனித மார்ட்டின், புனித நிக்கொலாஸ் ஆகிய தினங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக, ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக தம்முயுரை அர்ப்பணித்த புனிதர்கள். கிறிஸ்தவ மத வரலாற்றில் இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாவீரர்கள் இருந்துள்ளனர். அவர்களது நினைவாக, நவம்பர் 1 அன்று, "அனைத்து புனிதர்களின் தினம்" நினைவுகூரப் படுகிறது.

Saturday, November 14, 2020

தீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை!

 

3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக  அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக்களும் அரச வம்சத்தின் பெயரால் அசுரர்கள் என அழைக்கப் படலாயினர். உண்மையில் அவர்கள் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருக்கும் மொங்கோலொயிட் இன மக்கள். சில நேரம் அவர்கள் ஆதிக்க சமூகமாக இருந்திருக்கலாம். அவர்களது ஆட்சியின் கீழ்  கறுப்பின- திராவிட மக்கள் பழங்குடி இனத்தவராக இருந்திருக்கலாம். அனேகமாக நரகாசுரன் அந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். 

இந்த அசுர அரச பரம்பரையில் குறிப்பிடத் தக்க மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:

ஹதகாசுரன், சம்பராசுரன், ரத்னாசுரன், கதகாசுரன். கி.மு. 14ம் நூற்றாண்டு அளவில் நடந்த போரில் கதகாசுரனை கொன்று  நரகாசுரன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனது பெயரால் நரக அரச பரம்பரை உருவான போதிலும், அது பிற்காலத்தில் தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. 

யார் இந்த தேவர்கள்?

தோற்றத்தில் ஐரோப்பியர் போன்றிருக்கும் இந்தோ- ஆரிய இன மக்கள். எல்லா ஆரியரும் வெள்ளை தோல் கொண்டவர்கள் அல்ல. உள்நாட்டு இந்திய பூர்வ குடிகளுடன் ஒன்று கலந்த கலப்பினமாகவும் இருந்தனர். அதனால் தான் ஆரியமயப் பட்ட கருமை நிற கிருஷ்ணன் ஒரு மன்னனாக வர முடிந்தது. 

அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிறம், இனம், மொழி ஓர் அடையாளமாக இருக்கவில்லை. ஆட்சியாளர்களிடமும் அப்படி ஓர் உணர்வு இருக்கவில்லை. 

ஆகவே கிருஷ்ணன்- நரகாசுரன் போர் இன/மொழி அடிப்படையில் நடந்த போர் அல்ல. இருப்பினும், அந்தக் காலத்து மக்கள், தம்மை நாகரீக அடிப்படையில் வேறு படுத்தி பார்த்தார்கள். தேவர்கள் என்றால் நாகரிகத்தில் சிறந்தவர்கள். அசுரர்கள் என்றால் நாகரிகமடையாத காட்டுவாசிகள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருந்தது. அந்த வகையில், கிழக்கிந்திய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய நரகாசுரன், தேவர்களின் எதிரியாக மட்டுமல்லாமல் தீமையின் வடிவமாகவும் கருதப்பட்டான். 

அநேகமாக இந்த நரகாசுரன் ஒடுக்கப் பட்ட  பழங்குடி இனத்தை சேர்ந்த புரட்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவனால் தான் அசுரர்கள் என பெயர் சூட்டிக் கொண்ட 'டனவா' அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. அந்த வம்சத்தில் கடைசியாக வந்த கதகாசுரனை போரில் கொன்ற நரகன், மன்னனாக முடி சூட்டிக் கொண்டதும் தனது பெயரை நரகாசுரன் என்று மாற்றிக் கொண்டான். இருப்பினும் அவன் உருவாக்கிய அரச பரம்பரை நரகர் வம்சம் என்றே அழைக்கப் படலாயிற்று. 

கிருஷ்ணன் - நரகாசுரன் போருக்கு காரணமாக நாகரிக முரண்பாடு மட்டுமல்லாது, மத முரண்பாடும் இருந்திருக்கலாம். கிருஷ்ணனும், அவனது நாட்டு மக்களும் விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள். அதற்கு மாறாக நரகாசுரனும் அவனது நாட்டவரும் தாந்திரிக சைவர்கள். அவர்கள் சிவனை வழிபட்டாலும், மந்திரம், மாயம், சூனியம் போன்ற நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இதுவும் தேவர்கள் கண்களுக்கு காட்டுமிராண்டித்தனமாக தெரிந்திருக்கலாம். 

அன்று நடந்த போரில் நரகாசுரன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டான். அதற்குப் பிறகு அவனது நாடு தேவர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. நரக வம்சத்தில் வந்தவர்கள் கிருஷ்ணனின் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர்.  இருப்பினும் நரகாசுரன் மரணத்துடன் இந்திய பழங்குடியின மக்களின் கடைசி ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து விட்டது. அதற்குப் பிறகு தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு  சவாலான நாடு எதுவும் இருக்கவில்லை. பிற்காலத்தில் தேவர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக் கொண்டனர். அது தான் மகாபாரதப் போர். 

இந்திய பூர்வ குடியின மக்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வந்த, பழங்குடியின மன்னன் நரகாசுரன் தோற்கடிக்கப் பட்ட நாள், இப்றைக்கும் தீபாவளி என்ற பெயரில் ஒரு வெற்றித் திருநாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.

Thursday, November 12, 2020

கமலா ஹாரிஸ் ஓர் "அமெரிக்க கதிர்காமர்"!

 

- அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 வருடங்களுக்கு பிறகு தான் கமலா ஹாரிஸ் என்ற ஒரு பெண் துணை ஜனாதிபதியாக வர முடிந்துள்ளது. இது அமெரிக்கர்கள் எந்தளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. 

- உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 2 தடவைகள் போட்டியிட்டு வென்று பிரதமர் பதவி வகித்தார். இலங்கை வாக்காளர்கள் நினைத்திருந்தால் அவர் பெண் என்பதற்காக நிராகரித்திருக்க முடியும். இந்த விடயத்தில் இலங்கையர்கள் அமெரிக்கர்களை விட முற்போக்காக இருந்துள்ளனர். 

- (குறைந்த பட்சம் ஒரு பொதுத் தேர்தலில் ஆவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் ஒரு பெண் பிரதமராக வர முடிந்தது. இந்தோனேசியா, துருக்கி ஆகிய முஸ்லிம் நாடுகளில் கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வர முடிந்தது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. வெட்கக் கேடு!

- ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் மட்டுமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன்  போட்டியிட்டாலும்  பேரினவாதத்திற்கு அடிவருடாமல் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர முடியாது. அது தான் யதார்த்தம். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, உலகின் எந்த நாட்டை எடுத்தாலும் அது தான் நிலைமை. 

- கமலா தன்னை ஒரு கறுப்பின சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டே அந்த மக்களுக்கு செய்த துரோகத்தை வெளியுலகம் அறியாது. அவர் ஒரு சட்ட வல்லுனராக இருந்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். Black Lives Matter இயக்கத்தை ஆதரிக்காமல் அதை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, "எதிராளியான" டிரம்ப் அரசின் பக்கம் நின்று, ஒரு விடுதலைக்கான போராட்டத்தை "அர்த்தமற்ற வன்முறை" என்று கண்டித்து வந்தார். 

- இலங்கையில் கதிர்காமர் மாதிரி அமெரிக்காவில் கமலாவும்   பேரினவாதத்திற்கு ஒத்தூதிய படியால் தான் இன்று துணை ஜனாதிபதியாக வந்துள்ளார். ஆகவே, அவர் இனிமேலும் சிறுபான்மையினருக்கு எதிரான தனது துரோக அரசியலை முன்னெடுப்பார். ஏற்கனவே ஒபாமா ஆட்சிக் காலத்தில் கூட கறுப்பின சிறுபான்மையின மக்களுக்கு எதிரான  ஒடுக்குமுறை குறையவில்லை.

- கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக் காலம் ஆரம்பித்ததும் தானே சிறந்த பேரினவாதி என்பதை நிரூபிப்பார். அப்போதும் நமது தமிழர்கள் சிலர் துரோகிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

Tuesday, October 20, 2020

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இந்த சர்ச்சை வளர்ந்து வந்தது.

தமிழகத்தின் புதிய தமிழ்த்தேசியவாதிகளால் "துரோகி" முத்திரை குத்தப்பட்ட முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில், அரசியல் உணர்வுள்ள குணச்சித்திர நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். முத்தையா முரளிதரன் "இனப்படுகொலையை நியாயப் படுத்தி வந்தார், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்", அதனால் அப்படியானவரின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று "அன்புக் கட்டளை" இட்டனர். பகிரங்க மிரட்டல்களுக்கு "வேண்டுகோள்", "அறிவுரை" என்றும் அர்த்தம் இருப்பதாக இப்போது தான் தெரிகிறது.

இங்கே உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் விளையாட்டு சாதனைகள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அவர் பேசிய அபத்தமான அரசியல் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் உணர்வாளர்கள், ஒரு திரைப்படத் தயாரிப்பில் தலையிடுவது மட்டுமல்லாது, கருத்து சுதந்திர மறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் இன்னமும் ஜனநாயக சூழல் வளரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரத்தை கூட எதிராளிக்கு தர மறுப்பதையும், சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்த தமிழ்த்தேசிய அடிப்படைவாதிகள், தாம் ஈழத் தமிழர்களின் பெயரால் பேசுவதாக காட்டிக் கொண்டாலும், இவர்களது போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்பது தெரியவில்லை. இவர்களிடம் அது பற்றிக் கேட்டால், தாம் இனப்படுகொலைக்கு நீதிகோருவதாகவும், இந்த செய்தி சிறிலங்கா அரசை பிடித்து உலுக்கி விடும் என்றும் கூறுகிறார்கள். நான் அறிந்த வரையில், இலங்கையில் யாரும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

பொதுவாகவே தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை  இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட பெரிது படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு பொழுதுபோக்கு சினிமாப் படத்திற்காக உணர்ச்சிகரமாக பொங்கியெழும் யாரும், உண்மையான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன், தமிழ்நாடு மாதிரி, ஈழத்தில் சினிமா அரசியல் பெருமளவு தாக்கம் செலுத்துவதில்லை. ஒரு சினிமா நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ அரசியல் கருத்துக் கூற வேண்டும் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்ப்பதில்லை.

அந்த வகையில் அன்று முரளிதரன் தெரிவித்த "அரசியல்" கருத்துக்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். பெட்டைக் கோழி கூவி பொழுது விடிவதில்லை. ஒரு தடவை முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் தேர்தல் பிரச்சாரம் செய்தும், அவர் வெல்லவில்லை. இன்னொரு தடவை, கொழும்பில் UNP ஆதரவுடன் தேர்தலில் நின்ற மனோ கணேசனுக்கு எதிராக, மகிந்த ராஜபக்சேவின் கட்சியான SLFP முரளிதரனை கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்வித்தது. அப்படி இருந்தும் மனோகணேசன் வென்றார். இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.  அந்தளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் அரசியலையும், விளையாட்டையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

முரளிதரன் தனது அரச ஆதரவுக் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மட்டும் சொல்லி இருந்திருந்தால், அது இந்தளவு தூரம் சர்ச்சையை கொண்டு வந்திருக்காது. அங்கு ஏற்கனவே பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தத்துப் பித்து என்று உளறி இருக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் ஒரு சொல் தவறாக சொன்னாலும், அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் கருத்துருவாக்கிகள். விளையாட்டு வீரர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களிடம் விளையாட்டை தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

சிங்களவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்று தான் கூர்ந்து கவனிப்பார்கள். முன்பு ஜெயலலிதா, அதற்கு முன்னர் கருணாநிதி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிங்கள ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படும். அவை பொது மக்கள் மத்தியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும். தீவிர இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளும், அமைப்புகளும் "இந்திய விஸ்தரிப்புவாதிகளுக்கு" எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால், சீமான், தாமரை, பாரதிராஜா போன்ற தீவிர தமிழினப் பற்றாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்கள் யார் என்பதே சிங்கள மக்களுக்கு தெரியாது.

இலங்கையில் எந்தவொரு சிங்களவரும், இது போன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. காரணம் மிக இலகு. தற்போதைய 800 திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் எப்படி தெரிவிக்கும்?  "தமிழ்நாட்டில் தமிழர்கள் முரளிதரன் என்ற ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தமிழ்ப் படத்தை எதிர்க்கிறார்கள்!" சுருக்கமாக, இது தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சினை. இவ்வாறு தான் அந்த செய்தி வெளிவரும். இதைப் பார்க்கும் ஒரு சராசரி சிங்களவர், "தமிழர்கள் தங்கள் இனத்தில் ஒருவன் முன்னுக்கு வருவதை விரும்பாத அளவுக்கு பொறாமை மிக்கவர்கள் போலிருக்கிறது..." என்று நினைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்.

"அப்படி அல்ல, தமிழர்கள் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்" என்று சிங்கள ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யுத்தம் நடந்த காலங்களில், இராணுவத்தால் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களிடம் இதை விட வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? சில நேரம், இராணுவத்தால் பொது மக்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவை புலிகளின் தாக்குதலின் எதிர்வினையாக நடந்தவை என்றும் குறிப்பிடத் தவறுவதில்லை. தமது தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்பதற்காக போர்க்குற்றம் பற்றிக் கூட பேச மறுத்து வருகின்றனர். 

முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளில் பாரதூரமானது, காணாமல்போனவர்களை தேடி போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப் படுத்தியது தான். இதனை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி கூட விமர்சித்து இருந்தது. அவர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற பதில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத கூற்று. இது பாதிக்கப் பட்ட மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் தான் ஆதரிக்கும் அரசை நியாயப் படுத்த நினைத்தாலும், இது போன்ற பதில்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அநேகமாக அரசியல் அனுபவமின்மை காரணமாக அந்தக் கூற்று அவரது வாயில் இருந்து வந்திருக்கலாம். இருந்தாலும் தவறு தவறு தான்.

அதற்காக, அன்று முரளிதரன் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டித்திருக்க வேண்டும், இனப்படுகொலை பற்றிப் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் அவர் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், அது தேசத்துரோகமாக கருதப்பட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாடவே முடியாமல் தடைசெய்திருப்பார்கள். அன்றைய காலத்தில், அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அதிக பட்சம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஈழப் போர் முடிந்தது தொடர்பாக முரளிதரன் தெரிவித்த கருத்தானது, "இனப்படுகொலையை ஆதரித்தார்" என்பதாக திரிபுபடுத்தி பரப்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் சில அரசியல் அறிஞர்கள் கூட கண்ணை மூடிக் கொண்டு இப்படி ஒரு பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர். முரளிதரன் அவ்வாறு சொன்னதாக நான் எங்கேயும் கேள்விப் படவில்லை. இவர்களே அப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அன்று அவர் போர் முடிந்ததால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருந்தாலும், அது ஒரு சாமானியனின் கூற்றாக கருதப் பட வேண்டும். ஏனெனில் அன்று சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் முப்பதாண்டு கால போர் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் எந்த நாடாக இருந்தாலும், போர் முடிந்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சாதாரண விடயம். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையா? அதைக் கொண்டாடவில்லையா? ஜெர்மனியிலும் பலருக்கு போரின் முடிவு திருப்திகரமாக இருக்கவில்லை.

உண்மையில் இறுதிப் போர்கூட தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் நடந்தது. அதிகம் பேசுவானேன். புலிகள் இயக்கப் போராளிகளே இந்தப் போர் போதும் என்ற கட்டத்திற்கு வந்து விட்டிருந்தனர். அந்தளவுக்கு எல்லோரும் போரினால் களைத்துப் போயிருந்தனர். அன்று அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இது சாதாரண மக்களின் மனநிலை. நீண்ட காலப் போரினால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும், வார்த்தையில் வடிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்த மக்களிடம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களில் மிகுந்த மனச்சோர்வை தரும் விடயம் என்னவென்றால், பலரிடம் வர்க்கப் பார்வை மருந்துக்கும் கிடையாது. ஒரு சில இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்த முன்னாள் மார்க்சிஸ்ட் தியாகு கூட தட்டையான இனவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் நடப்பது வர்க்கப் போராட்டம் என்பவர்கள் கூட, ஈழம் என்று வந்து விட்டால் மட்டும் சிங்களவர் எதிர் தமிழர் என்று இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் முரண்நகையை புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளிதரனின் குடும்பம், இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டியில் வாழ்ந்து வருகின்றது. அவரது தந்தை முத்தையா, லக்கிலேன்ட் பிஸ்கட் கம்பனி நடத்திய ஒரு முதலாளி. அப்படியானால் முரளிதரனின் வர்க்கம் என்னவென்று நான் சொல்லியா புரிய வேண்டும்? அவர் கல்விகற்றதும் மத்தியதர வர்க்க பிள்ளைகள் செல்லும் தனியார் பாடசாலை ஒன்றில் தான். அதனால் தான் கிரிக்கெட் விளையாட்டில் முன்னுக்கு வந்து, தேசிய அணியில் இடம்பெற முடிந்தது. இலங்கையில் இன்றைக்கும் சாதாரண அரசு பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவது ஒரு கனவாக மட்டுமே உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் கிரிக்கெட் எப்போதும் மேட்டுக்குடியினரின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாகவே, தேசிய கிரிக்கெட் அணியில் தமிழ் விளையாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இதுவும் இனப் பிரச்சினையின் ஓரங்கம் தான் என்பதை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். எப்போதாவது ஓரிருவர் சேர்க்கப் பட்டாலும், அவர் நிச்சயம் ஏதாவதொரு மேட்டுக்குடி பாடசாலையில் கல்வி கற்றிருப்பார். அந்த வகையில் முரளிதரன் தமிழனாக இருந்தாலும், அவரது வர்க்க அடிப்படை தான் கிரிக்கெட்டில் முன்னுக்கு வர உதவியது எனலாம். நிச்சயமாக இதெல்லாம் திரைப்படத்தில் பேசப் படப் போவதில்லை. நமது பெரு மதிப்புக்குரிய தமிழின உணர்வாளர்களும் வாய் திறக்க மாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது முத்தையா குடும்பத்திற்கு சொந்தமான வணிக நிறுவனம் சிங்களக் காடையரினால் கொளுத்தப் பட்டது. முரளியின் தந்தைக்கு வெட்டு விழுந்தது. ஆகவே அவர்களும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் தான். இருப்பினும், இழந்த செல்வத்தை மீண்டும் திரட்டிக் கொண்டதும் தமது மேட்டுக்குடி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டனர். கிரிக்கெட்டால் நிறைய சம்பாதித்த முரளிதரனும் தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலிட்டுள்ளார். ஆகையினால், முதலாளிகளின் இடத்தில் இருந்து பார்த்தால், அரசுக்கு ஆதரவாக இருப்பது அவர்களது வர்க்க நலன்களுக்கு அனுகூலமானது.

தென்னிலங்கையில் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் தமிழ் முதலாளிகள் எல்லோரும் அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த விடயத்தில், தென்னிலங்கையில் வாழும் வட மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலதிபர்களும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் கோடீஸ்வரரான மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் நீண்ட காலமாக UNP அனுதாபி. UNP எனும் வலதுசாரி பேரினவாதக் கட்சி தான் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது. பேரழிவு தந்த ஈழப்போரை தொடங்கி வைத்த பெருமைக்குரியது.

அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமோக்கிராட்டிக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். அதனால் அந்நாட்டில் உள்ள முதலாளிகளும் இவ்விரு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பார்கள். அதே மாதிரியான நிலைமை தான் இலங்கையிலும் நிலவுகிறது. மகாராஜா முதலாளி UNP அனுதாபி என்றால், முத்தையா முரளிதரன் SLFP அனுதாபி. அவ்வளவு தான் வித்தியாசம். அதிகம் பேசுவானேன். போர் முடியும் வரை தீவிர புலி விசுவாசிகளாக வெளிநாடுகளில் நிதி சேகரித்து மூலதனம் திரட்டியவர்கள், இன்று இலங்கைக்கு சென்று ராஜபக்சே ஆசீர்வாதத்துடன் முதலிட்டுள்ளனர். அதிலென்ன ஆச்சரியம்? இனம் இனத்தோடு தான் சேரும். முதலாளிகள் எப்போதும் அதிகார வர்க்கம் சார்ந்து நிற்பார்கள். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நிழல் அரசை ஆதரித்த அதே முதலாளிகள், பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அரச ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். அது முதலாளிகளின் இயற்கையான வர்க்கக் குணாம்சம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

இன்னும் தயாரிக்கப் படாத திரைப்படம் ஒன்றுக்காக, இல்லாத எதிரிக்காக காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திடீர் தமிழின உணர்வாளர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் புரியப் போவதில்லை. முதலில், முரளிதரன் போன்ற முதலாளித்துவவாதிகள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதே மடமைத்தனம். "ஐயா, இது காளை மாடு, பால் தராது" என்கிறேன். அவர்களோ "இல்லை இல்லை, மாடென்றால் பால் தரத் தானே வேண்டும்?" என்று அடம் பிடிக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழின ஆதரவு, தமிழினத் துரோகம் என்று தட்டையாக பார்த்து பழகி விட்டனர். அவர்களிடம் சென்று வர்க்க அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வார்களா? இந்த விடயத்தில் முத்தையா முரளிதரன் மட்டுமல்லாது, அவரை எதிர்ப்பவர்களும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்கின்றனர்.

 

- கலையரசன் - 

20-10-2020