"தவறு செய்யாதீர்கள், ஒபாமா! வெனிசுவேலா மீதான படையெடுப்பு நூறாண்டு கால போருக்கு அடிகோலும். முழு லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இழுத்து விடும்." அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்தார். அன் நாட்டு அரச தொலைக்காட்சியில் வாராந்த "அலோ பிரேசிடேண்டே" நிகழ்ச்சியிலேயே மேற்குறிப்பிட்ட வீராவேசப் பேச்சு வெளிப்பட்டது. சாவேசின் போர்ப் பிரகடனத்திற்கு காரணம் இல்லாமலில்லை. அயல் நாடான கொலம்பியா கடந்த மாதம் 30 ம் திகதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஏழு கொலம்பிய இராணுவ தளங்கள் அமெரிக்காவுக்கு என ஒதுக்கப்படும். கொலம்பிய தளங்களில் நிலை கொள்ளும் அமெரிக்க படைகள் போதைவஸ்து கடத்தலுக்கு எதிராகவும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் எதிராக போரிடுவர். அவ்வாறு கொலம்பிய அரசு கூறுகின்றது. ஆனால் சாவேஸ் இந்த ஒப்பந்தம், வெனிசுவேலா மீதான படையெடுப்புக்கான முகாந்திரமாக கருதுகின்றார். (வலதுசாரி அரசால் நிர்வகிக்கப்படும்) கொலம்பியா அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றார்.
கொலம்பியாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படைகள், சாவேஸ் அரசை தூக்கியெறியும் சதிகார எண்ணத்துடன் வந்திருப்பதாக வெனிசுவேலா அரசு நம்புகின்றது. இதனால் கொலம்பிய எல்லையோரமாக வெனிசுவேலா துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெனிசுவேலா எல்லையோர கிராமமான "பாரினாஸ்"ல் காணப்பட்ட நூற்றுக்காக்கான கொலம்பிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அடையாள பத்திரம் எதுவும் இன்றி தங்கி இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாவேசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கொலம்பிய அரசு, வெனிசுவேலா FARC இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவுவதாக தன் பங்கிற்கு குற்றம் சுமத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதால், போர் மூளுவது சாத்தியமாகலாம். எனினும் இரு வருடங்களுக்கு முன்னரும் இது போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தன. இதற்கிடையே வெனிசுவேலா, ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதுடன், ரஷ்ய ஆயுதங்களையும் இறக்குமதி செய்கின்றது.
U.S. Military Documents Show Colombia Base Agreement Poses Threat to Region
1 comment:
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Post a Comment