Tuesday, March 31, 2009

செர்பியா மீதான நேட்டோ தாக்குதல்- 10 வது ஆண்டு நிறைவு

கொசோவோ பிரச்சினையில் பத்து வருடங்களுக்கு முன்னர் நேட்டோ (NATO) படைகள் செர்பியா மீது தாக்குதல் நடத்தின. செர்பிய பிரசைகள் மேற்கத்திய இராணுவ ஆக்கிரமிப்பை எவ்வாறு நினைவு கூறுகின்றனர்?

Serbia: ten years on

புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்

"நான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) நள்ளிரவு திடீரெனச் செல்கள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நான் போய் பார்த்த போது, முகாம் முற்றிலும் சேதமாகியிருந்தது. யாரும் உயிரோடு தப்பியதாகத் தெரியவில்லை. " - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த "மஷடத் கொட்" இராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் பற்றி ஒரு வயோதிபர் பத்திரிகையாளரிடம் விபரித்தபோது கூறியவை இவை.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கப்படைகள் ஆப்கானியத் துணைப்படைகளுடன் இணைந்து கைப்பற்றிய போது எதிர்காலக் கொரில்லா யுத்தம் பற்றிக் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். தலிபான் பிரதிநிதிகள் தமக்கு வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அவை இதுவரை போரில் பயன்படுத்தப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளனர். எப்படியோ இந்தச் செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தலிபான் உறுப்பினர்களை நன்கு அறிந்த பஷ்ரூன் இனக் குழுத்தலைவர்கள் ஆயுதத் தளபாடங்கள், வெடிமருந்துகள் தாராளமாக இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் என்பதுகளில் நடந்த கெரில்லாப் போரைப்போல தற்போதும் அமெரிக்கப் படையினரை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றும் நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அமைப்பை மீளக்கட்டமைத்துவரும் தலிபான்கள் தலைமறைவாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதனால் மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் பெருத்த இடைவெளியிருக்கின்றது. இந்த இடைவெளியைக் குறைக்க இரகசிய நடமாடும் வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. தற்போது ஒருசில பகுதிகளில் மட்டுமே இந்த ஒலிபரப்பு கேட்கக்கூடியதாகவுள்ளது. இதன்மூலம் அந்நியப்படைகளை வெளியேற்ற ஜிகாத்திற்கு தயாராகுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுகின்றது.

வானொலிச் சேவையைவிட துண்டுப்பிரசுரங்கள் மூலமும் அறிவித்தல்கள், தாக்குதல்களுக்கு உரிமை கோரல்கள் என்பன அறிவிக்கப்படுகின்றன. இந்தத் துண்டுப்பிரசுரங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பரப்பப்படுகின்றன. அண்மையில் வந்த துண்டுப்பிரசுரம் ஒன்று தற்கால ஆப்கான் பிரதமர் கர்சாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. கர்சாயும் பிற அரசாங்க உறுப்பினர்களும் ஆப்கானியர்கள் அல்ல என்றும் அந்நியப்படைகளுக்குக் குறிவைக்கும்போது அவர்களும் சேர்ந்தே தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. பஷ்ரூன் மொழியில் எழுதப்படும் இந்தப் பிரசுரங்கள் கர்சாய் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும், அந்நியப்படைகளுடன் தொடர்பு கொள்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்களை எச்சரிக்கின்றன. பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் ரொய்ட்டர் கூட மேற்படி செய்திகளை உறுதிசெய்துள்ளது: "தெற்கு ஆப்கானிஸ்தான் நகரமொன்றின் மக்கள் ஒருநாள் அதிகாலை விழித்தபோது முக்கிய சந்திகளில் திடீர்ச் சுவரொட்டிகளைக் கண்டார்கள். அதில் அமெரிக்க சார்பு கர்சாயின் பொம்மை அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. " (ரொய்ட்டர்).

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எரிபொருளை பக்கத்து நாடான ஈரானில் இருந்து வாங்கலாம். ஆனால் அமெரிக்கா அதனை விரும்பவில்லை. இதனால் பாகிஸ்தானியக் கம்பனிகளுக்கு அமெரிக்க இராணுவத்திற்கு பெட்ரோல் விநியோகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. தாலிபான் போராளிகள், விநியோகப் பாதையைத் தடுக்கும் நோக்கோடு, பாகிஸ்தானில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு வரும் பவுசர்களையும், ட்ரக் வண்டிகளையும், தீயிடுகின்றனர்.

தலிபான் தனது போர்த் தந்திரங்களை மாற்றிவருவதாக அமெரிக்கப் படைகளின் தலைமைச் செயலாளர் அமெரிக்காவில் தெரிவித்தார். "கண்டஹார் தெருக்களில் நாம் நடக்கும்போது எம்மைக் கடந்து போபவர்கள் தலிபான்களாகத் தெரிகின்றனர்" என்று கூறினார், அங்கு முகாமிட்டுள்ள "கிறீன்பெரட்" கொமாண்டோப் பிரிவின் வீரர் ஒருவர். இராணுவ நடமாட்டம் பற்றி உளவுபார்க்கச் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர் தலிபான் கொரில்லாக்கள். ஒருமுறை வழியில் நடந்த திடீர் மோதலின் பின்பு தான், தாம் பின்தொடரப்படுவதை உணர்ந்ததாகத் தெரிவித்தார் ஒரு கிறீன்பெரட் வீரர். முன்பு பிக்-அப் வாகனங்களில் பவனி வந்த தலிபான் கொரில்லாக்கள் தற்போது மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண குடிமக்கள் போல கழுதைகளையும் இரகசியமாக ஆயதங்களைக் கடத்தப் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே யுத்த தந்திரங்களில் அதிக பயிற்சி பெற்றிருந்த அல்கைதா போராளிகள் பிரமாண்டமான அமெரிக்க இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கக் கற்றுள்ளனர். "பறக்கும் யுத்தக்கப்பல்" என்றழைக்கப்படும் நான்கு எஞ்சின்கள் பூட்டிய AC-130 வருவதை சத்தத்தால் அறிந்து பதுங்கிக் கொள்வதுடன், இரவில் பார்க்கும் கண்ணாடிக்கும் புலப்படாதவாறு தம்மைப் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.

அதேபோல ஆளற்ற வேவு விமானம் வருவதையோ அல்லது ஏவுகணைகள் ஏவப்பட்டதையோ சத்தத்தைக் கொண்டு அறிந்து தப்பிக் கொள்ளுமளவிற்கு அறிந்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் அதியுயர் தொழில் நுட்பத்தை சாதாரண உத்திகளைப் பயன்படுத்தி சமாளிப்பதாக இராணுவச் சஞ்சிகையொன்று சரியாகவே குறிப்பிட்டெழுதியிருந்தது. இதைவிட தொலைபேசியையோ, சாதாரண வயர்லெஸ் கருவிகளையோ பாவிப்பதை அல்கைதா உறுப்பினர்கள் தவிர்த்து வருகின்றனர். அவற்றிற்குப் பதிலாக மரபுவழித் தகவற் பரிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு மறைவிடத்திலிருந்து கைவிடப்பட்ட செய்மதித் தொலைபேசிக் கருவிகளை கண்டுபிடித்த பின்னர் அமெரிக்க இராணுவமும் இதனைப்புரிந்து கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் தவிர வேறுசில அமைப்புகளும் அரசை எதிர்க்கின்றன. மாவோயிச "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" , "ஆப்கானிஸ்தான் பெண்களின் புரட்சிகர அமைப்பு" என்பன தலிபான் ஆட்சிக்காலத்திலிருந்தே தலைமறைவாக இயங்கிவருகி;ன்றன. இஸ்லாமிய வாதத்தை நிராகரித்து சோஸலிசக் கொள்கைகளை முன்னெடுக்கும் இந்த அமைப்புகள் இன்றுவரை மிகப் பலவீனமான நிலையியே உள்ளன. முன்பு சி.என்.என், பி.பி.சி தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கக்கூடியதாகவிருந்த தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வீடியோப்படங்களில் பல இரகசியமாக ஊடுருவிய புரட்சிகரப் பெண்கள் அமைப்பினால் எடுக்கப்பட்டவை. அன்று அந்த வீடியோக்களை தனது தலிபான் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது அமெரிக்கா. இதற்கு "நன்றியறிதலாக" புதிய ஆப்கான் அரசு அமைக்கும்போது புரட்சிகரப் பெண்கள் அமைப்பிற்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்தது. அப்படியிருந்தும் ஒரேயொரு பெண் அமைச்சரை தொடர்பு கொண்ட இந்த அமைப்பினர் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை முன்வைத்தபோது "அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இதையெல்லாம் அவர்கள் (அரசாங்கத்திலுள்ள மத அடிப்படைவாதிகள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்." என்று அந்த அமைச்சர் தட்டிக்கழித்தாராம்.

மதச்சார்பற்ற சோஷலிசவாதிகளை ஆதரிப்பதைவிட, மத அடிப்படைவாதிகள் மீண்டும் தலையெடுப்பதையே அமெரிக்கா விரும்புகின்றது. முன்பு தலிபான்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியதைப்பற்றி ஒரு பிரஞ்சுப்பத்திரிகை அமெரிக்க அதிகாரியொருவரை விசாரித்தபோது அவர் சொன்ன பதில்: "எது முக்கியமானது? தலிபான்களா அல்லது சோவியத் யூனியனின் வீழ்ச்சியா? ஒரு சில பித்துப்பிடித்த இஸ்லாமியவாதிகளா அல்லது பனிப்போரில் இருந்து மத்திய ஆசியாவை விடுதலை செய்தலா?" (Le Nouvelle Observateur, 15.01.1998)

Monday, March 30, 2009

பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி

நவீன உலகின் "முதலாவது இஸ்லாமியக் குடியரசு" பாகிஸ்தான் என்பது பலர் மறந்துவிட்ட விடயம். ஆனால் அந்த இஸ்லாமியக் குடியரசு, புதிய தேசிய அரசின் அடிப்படையாக இருந்ததே தவிர, மதம் அங்கே அரசாளவில்லை. அதாவது பிரிட்டிஸார் சொல்லிக் கொடுத்தபடிதான் பாகிஸ்தானின் அரசு நிர்வாகம் அமைந்தது. பஞ்சாபியர், சிந்திகள், பட்டாணியர் எனப் பல்வேறு மொழி பேசும் இன மக்களையும் மதம் மட்டுமே இணைக்கிறது. இதனாலும் இஸ்லாம் அங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆங்கிலேயக் கல்வி கற்ற பஞ்சாபியரும், சிந்திகளுமே பாகிஸ்தானில் அன்று முதல் இன்றுவரை அரசியல் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இதற்கு மாறாக ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் வாழும் பட்டாணியரும் (அல்லது பஷ்டூனியர்) பிற பழங்குடி மக்களும் அபிவிருத்தியடையாத பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவற்ற இன்னும் பண்டைய நிலவுடைமைச் சமுதாய முறையில் வாழும் பாமரர்கள் மிகுந்த மத நம்பிக்கையாளர்களாகவிருப்பதும் மதத் தலைவர்கள் அவர்கள் சொல்வதைக் கேட்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆப்கானிஸ்தானின் பட்டாணியர் பிரதேசங்களிலும் இதுதான் நிலைமை. நிலப்பிரபுக்களினதும், மதத்தலைவர்களினதும் கட்சிகளான பல்வேறு மதவாதக் கட்சிகளும் சவூதி அரேபியா, அமெரிக்கா வழங்கிய பணத்தில் மதக்கல்வி நிலையங்களை நிறுவியதும், அங்கே பயின்ற தலிபான் உறுப்பினர்கள் நான்காண்டுகள் ஆப்கானிஸ்தானைக் கலக்கியதும் பலரும் அறிந்த கதைதான்.

2001 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், தலிபான் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய மத அரசு அமைக்க விரும்பிய தலிபான் குழுவிற்கு பின்தளமாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானின் மேற்கு மாகாணங்கள் கொந்தளித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றிய தினசரி "அமெரிக்க எதிர்ப்பு- தலிபான்ஆதரவு" ஆர்ப்பாட்டங்களைக் காட்டிய அமெரிக்கத் தொ(ல்)லைக்காட்சிகள் கிறிஸ்தவ அமெரிக்காவிற்கெதிராக முஸ்லீம்கள் புனிதப்போருக்குத் தயாராவதாகப் பயமுறுத்தின. பின்னர் அதே தொலைக்காட்சிகளில் அரசியல் அவதானிகள் என்று கூறிக்கொண்ட சிலர் தோன்றி "பயப்படாதீர்கள் போன தேர்தல்களில் இவை கவனிக்கப்படாத சிறிய கட்சிகளாகவிருந்தன." என ஆறுதல் கூறினர். இந்த ஆரம்பத்திற்கு மத்தியில், அமெரிக்க அரசின் செயல்கள்தான் இந்த மதவாதக் கட்சிகளை வளர்த்து விடுகின்றன என சிலர் கூறிய விமர்சனங்கள் எடுபடாமல் போயின.

2001 அமெரிக்கக் குண்டுவீச்சில் தமது மாணவர்கள் அடிவாங்கியதைக்கண்டு கொதித்துப்போன மதத் தலைவர்கள் தமது ஆதரவாளர்களுடன் வீதியல்இறங்கி அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டஙகள், கண்டன ஊர்வல்ஙகள் நடத்தியதும் அவ்வாறே புரிந்து கொள்ளக்கூடியவைதான். ஆப்கானியச் சகோதரர்களைக் காட்டி அவர்கள் தமது ஆதரவைப் பெருக்கிக் கொணடனர். ஒரு காலத்தில் தலிபானுக்கு ஆதரவாக இருந்த முஷ்ராப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் தலிபான்களைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவின் பக்கம் போய் நின்றாலும், பொது மக்களால் அவ்வளவு இலகுவாக மாறமுடியவில்லை. தலிபான்களுக்குத் தமது அரசு துரோகம் இழைத்துவிட்டது என்பதே பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயம். மதவாதக் கட்சிகள் இந்த உணர்வலைகளை தமக்குச் சார்பான ஆதரவாக மாற்றிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் அதிகம் கவனிக்கப்படாதிருந்த மதவாதக் கட்சிகள் ஆப்கானிஸ்தானின் மீதான அமெரிக்கத் தலையீட்டினால் திடீர் வளர்ச்சியைக் கண்டன. இதனால் நடந்த தேர்தலில் இந்தக் கட்சிகள் பெருமளவு வாக்குகளைப் பெற்றமை வெளிநாடுகளில் அதிர்ச்சியைத் தோற்றுவித்த அளவுக்கு பாகிஸ்தானில் நடக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையோரமாகவிருக்கும் பலூச்சிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய மாநில சபைகளுக்கான தேர்தலில் மதவாதக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளன. இதனால் மாநில அளவில் அவர்கள் அதிகாரம் செலுத்தலாம்.மதவாதக் கட்சிகள், மாநிலங்களில் கொண்டுவந்திருக்கும் பல முக்கிய மாற்றங்களாவன: ஞாயிறுக்குப் பதிலாக வெள்ளியை விடுமுறை நாளாக்கல், பெண்கள் உடலைமூடும் ஆடையணியுமாறு கட்டாயப்படுத்தப்படல், ஆண்கள் ஜீன்ஸ் அணியத் தடைவிதித்தல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் புறம்பான தனித்தனிப்பாடசாலைகளை , வாகனங்களில் தனித்தனி இருக்கைகளை ஒதுக்குதல், இஸலாமிய ஷரியாச் சட்டத்தை நீதிமன்றங்களில் அமுல் படுத்துதல் என்பனவையாகும். மேலும் அமெரிக்க இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையின் கீழ் வருவதால் அது நடைமுறைச் சாத்தியமற்றது.

தேர்தல் ஜனநாயகத்தை உலகிற்கே போதனை செய்யும் மேற்குலக நாடுகள், அதன் விரும்பத்தகாத விளைவுகளைப்பற்றியும் அறிந்து வைத்துள்ளன. முன்பு இடது சாரிச் சக்திகளும், தற்போது மதவாத, தேசியவாதச் சக்திகளும் தேர்தல்மூலம் ஆட்சிக்கு வருவது தடுக்கப்படுவதை நாம் பல நாடுகளில் காணலாம். அல்ஜீரியாவில் இஸ்லாமியக் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்பு அங்கு தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு, இராணுவச் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டது. பாகிஸ்தானிலும் 98 வீத இஸ்லாமிய மதத்தவரைக்கொண்டுள்ள ஒரு நாட்டில் மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவது ஒன்றும் அதிசயமல்ல. (அதேபோல பெரும்பான்மை இந்துக்களைக்கொண்ட இந்தியாவில் இந்துமதவாதக் கட்சி ஆட்சிக்கு வருவதும் எதிர்பாராததல்ல.) மதத்தைப் போதிப்பவர்கள் அரசியலுக்கு வரும்போது, பிற அரசியல்வாதிகளைப்போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போது பலர் ஒரு முக்கிய விடயத்தை மறந்துவிட்டார்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கெதிரான போரின்போது அமெரிக்கா இதே மதவாதக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தது. ஆகவே தனது பழைய நண்பர்களைப்பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும். புதிய சக்தியாக வளர்ந்து வரும் மதவாதக் கட்சிகளும் சாதாரண அரசியலில் சிக்கி சீரழியப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பிரதான தொடர்பூடகங்களின் மிகைப்படுத்திய கதைகளுக்கு அப்பால், மதவாதக்கட்சிகளின் வளர்ச்சிக்கான காரணிகளை ஆராய வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கக் குண்டுவீச்சுகளும், அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான போர் பொதுவாக முஸ்லீம்களுக்கெதிரானது, என்ற அபிப்பிராயமும் மதவாதக் கட்சிகளுக்கான ஆதரவு வாக்குகளை அள்ளிக் கொடுத்தமை மறுக்கப்படக்கூடியதல்ல. அதேவேளை பாகிஸ்தானை மாறிமாறி ஆண்ட பெரிய கட்சிகளான முஸ்லீம் லீக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஊழல்வாதிகளாக தமது பதவிக்காலத்தில் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்தவர்களாக பொது மக்களால் வெறுக்கப்படுகின்றனர். இந்த ஊழல் அரசியல் கட்சிகளுக்கு மாற்றீடாக புதிய மதவாதக் கட்சிகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பு வாக்குகளைப் போட்டுள்ளனர்.

இனிவருங்காலம், அரசியற்கட்சிகள் மக்களின் நலன்பேணும் திட்டங்களை முன்வைத்தல் அவசியம். அல்லாவிடின், அதிருப்தியுறும் மக்கள் மதவாதக் கட்சிகளின் பின்னே இழுபட்டுப்போவார்கள். மதவாதக் கட்சிகளும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லையென்பது அவர்களின் பலவீனம். "மதநெறிகளுக்கேற்ற ஆட்சி நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற பிரச்சாரம், நடைமுறைக்கு வரும்போது நீண்டகாலம் எடுபடாது. பாகிஸ்தானின் இஸ்லாமிய மதக் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் இந்துமதக்கட்சிகளும் ஐரோப்பாவின் கிறிஸ்தவ மதக்கட்சிகளும் ஒரே அரசியல் நீரோட்டத்தில்தான் போய்க் கொண்டிருக்கின்றன.


(குறிப்பு: வன்முறையில் ஈடுபடாத இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. )


Saturday, March 28, 2009

சூடான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல், ஈரானுக்கு எச்சரிக்கை?


வட சூடான் பகுதியில், இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் ஒரு வாகனத் தொடரணியை குண்டு வீசித் தாக்கியுள்ளன. ஹமாசிற்கு ஈரானில் இருந்து ஆயுத விநியோகம் செய்த வாகனங்களையே தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. "போர்ட் சூடான்" என்ற துறைமுக நகரில் இருந்து எகிப்து நோக்கி சென்ற வாகனங்கள், பாலைவனப் பகுதியில் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகின. கொல்லப்பட்டவர்கள் எரித்திரிய அகதிகள் என்று சூடான் அரசு தெரிவிக்கின்றது. தாக்குதலுக்குள்ளான வாகனங்களுக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது. ஹமாசிற்கான ஆயுதங்கள் சூடானில் இருந்து கடத்தப்படுவதாக நீண்ட காலமாகவே இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. இதே நேரம், ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா செல்லும் (அல்லது கடத்தப்படும்) அகதிகள்/குடியேறிகள் சூடானில் தாக்குதலுக்குள்ளான பாதை ஊடாகவே பயணிப்பது வழக்கம் என்றும் தெரிய வருகின்றது. Asharq Al-Awsat பத்திரிகை இது போன்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த விமானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சூடான் குற்றஞ்சாட்டியிருந்தது. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க அதிகாரிகளை இது குறித்து விசாரித்தது. அப்போது தான் இந்த தாக்குதலை இஸ்ரேலிய விமானங்களே நடத்தியதாக தெரிவித்தனர். இறைமையுள்ள நாடொன்றின் வான் பரப்பினுள் புகுந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், எவருடைய கண்டனத்தையும் பெறவில்லை. பிரிட்டிஷ் நாளேடு ஒன்று, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு பங்கிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நாளேடான "ஹாரெட்ஸ்", பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்த செய்தியின் படி: "ஈரான் ஹமாசிற்கு Fajr ஏவுகணைகளை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றது. இஸ்ரேலின் தொழிற்துறை நகரமான "டெல் அவிவ்" வை தாக்கக் கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்கள் இவை. ஹமாசின் கைக்கு கிடைத்தால், இஸ்ரேலின் மீதான போரில் ஹமாஸ் வெல்லும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கும். இதனால் முன் கூட்டிய தடுப்பு நடவடிக்கை அவசியம்." என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடான் அதிபர் பஷீரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப் பட்டிருப்பதால், அமெரிக்க இராணுவ தலையீடு இடம்பெறலாம் என்று சூடான் அஞ்சுகின்றது. டார்பூர் பிராந்தியத்தில், சூடான் அரசு இன அழிப்புப் போரில் ஈடுபடுவதாக, ஐ.நா.மன்றமும், அமெரிக்காவும் ஏற்கனவே கண்டனக் கணைகளை வீசிக் கொண்டிருந்தன. சூடான் எண்ணை வளம் கொண்ட நாடு என்பதும், சீன நிறுவனங்களே அவற்றை நிர்வகித்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

Sudan suspects Israel of attacks

சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்:
சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்
சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

இலங்கை நிலவரம்: ஐ.நா. மன்ற அறிக்கை [வீடியோ]

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போரை தற்காலிகமாக நிறுத்தி, மனிதாபிமான பிரச்சினைக்கு முடிவு காணும் படி, ஐ.நா.சபையும், அமெரிக்காவும், பிரிட்டனும் வற்புறுத்தியுள்ளன. ஐ.நா.மனிதாபிமான பணிகளுக்கான செயலதிபர் ஜோன் ஹோல்ம்ஸ், பாதுகாப்பு கவுன்சிலில் தான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து, பத்திரிகையாளர் மாநாட்டில் அளித்த விளக்கம்:

Thursday, March 26, 2009

இடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி

வவுனியாவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சில, கடந்த 13 வருடங்களாக இயங்கி வருகின்றன. அரசு வாக்களித்த படி, இவர்களை மீளக் குடியேற்றுவதற்கான நிலங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. Ya TV (ஐ.நா. நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம்) தொலைக்காட்சி சேவை, வாழும் மக்கள் தமது பிரச்சினைகளை, , நேரே சென்று கண்டு பதிவு செய்துள்ளது. மக்களின் குறைபாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனும், ஐ.நா. அபிவிருத்தி பணியக பிரதிநிதியுடனும் செவ்வி கண்டுள்ளது.





Thanks to: Ya TV
http://www.yatv.net



Wednesday, March 25, 2009

"Armsdog Millionaire": ஆயுத வியாபாரிகளின் விளம்பரப் படம்

பாலஸ்தீனிய மக்கள் மீது பரிசோதித்த ஏவுகணைகளை, இந்திய சந்தையில் விற்பதற்காக,
இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான Rafael Advanced Defense Systems தயாரித்த விளம்பரப்படம் இது. "தகாத பாதுகாப்பு விளம்பரப்படம்" என்ற கண்டனத்தைப் பெற்றுள்ளது.

Rafael Advanced Defense Systems, Israel's armament development authority, has launched a promotional film that was dubbed "the most atrocious defense video of all time" by Wired, the popular technology magazine.

Israeli Armsdog-Millionaires Assault Bollywood

Tuesday, March 24, 2009

தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை



Growing again in the shadows

by C Shivakumar

நாயகன் கோட்டை, தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு மாநிலத்தில், நக்சலைட் தலைவர்களான அப்பு, பாலன் ஆகியோருக்கு சிலை வைக்கபட்டுள்ள ஒரேயொரு இடம் இது தான். "எமது இயக்கம் உச்சத்தில் இருந்த 1970 ம் ஆண்டு காலப்பகுதியில், சாதிப் பாகுபாட்டின் சின்னங்களான இரட்டைக் குவளைகள் முறையை ஒழிப்பதில் வெற்றி கண்டோம்." இவ்வாறு கூறினார் நக்சலைட் இயக்கத்தின் முன்னோடியான சித்தானந்தம். 

54 வயதான சித்தானந்தம், கடந்த 24 வருடங்களாக போலீசிடம் அகப்படாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும், கம்யூனிச சீனாவின் மாற்றங்களையும் கண்டுள்ளார். இன்றைய பொருளாதார பிரச்சினை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. "எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவம் தொலைந்து விட்டது. இது சோஷலிசத்தின் வெற்றி."

பல தலைவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டு, அல்லது கைது செய்யப்பட்டு விட்டதால், 2003 ம் ஆண்டு தர்மபுரியில் மாவோயிஸ்ட் இயக்கம் கலைக்கப்பட்டது. இருப்பினும் இன்று தனது தளங்களை மாவட்டத்தில் மீண்டும் கட்டி எழுப்பலாம், என்று கட்சி எதிர்பார்க்கிறது. இன்றைய நவ-லிபரலிச கொள்கைகள், சமூக-அரசியல் முரண்பாடுகளை அதிகரித்துள்ளது. இன்றைய தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும் மேலும் மக்கள் இயக்கத்துடன் வந்து இணைந்து கொள்கின்றனர். கட்சி தலைமறைவாக இருந்த போதிலும், தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய நாட்களில், மாவோயிஸ்ட்கள் கிராமங்களுப் பதிலாக நகரங்களை குறி வைக்கின்றனர். காரணம்: புதிய பொருளாதாரக் கொள்கை, நகர மக்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல லட்சக் கணக்கான மக்களை, நகரங்களில் (நாட்டுப்புறங்களிலும்) இருந்து இடம்பெயர்த்துள்ளது. சேரிகளும், ஏழ்மையும் அதிகரிக்கின்றன. நகர்க்கட்டுமானப் பணிகளால், நிறுவனப்படுத்தப்படாத தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். 

இது கண்ணியமான வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாவோயிச கொள்கைகளை கொண்டு செல்ல உதவியுள்ளது. நக்சலைட்கள் கூறுவதன் படி: "தமிழ் நாட்டில் 40 நகரங்கள், பெருமளவு இடம்பெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளன. இவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வசதி குறைந்தவர்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களையும் குறி வைக்கிறோம். அவர்கள் ஊழலாலும், தமது இன்னல்களைக் களைய முடியாத அரச இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தாலும் விரக்தியுற்றுள்ளனர்."

"தமிழ் நாடு மாநிலம் பெருமளவு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறைக்காக நாட்டுப்புறங்களில் கோடிக்கணக்கில் முதலிட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், சிறு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." நாட்டுப்புறங்களில் ஊடுருவுதில் இயக்கம் தோல்வி கண்டுள்ளதா? நக்சலைட்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஊடுருவ முடியாமைக்கு தலித் கட்சிகளும், இயக்கங்களும் தடையாக இருப்பது ஒரு காரணம். 

தலித் கட்சிகள் தமது வாக்கு வங்கியாக கருதும் மக்கள் மத்தியில் இருந்து, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாக உள்ளது. பல தடவை அவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். நாட்டுப்புறங்களில் வேலையின்மை, விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் இன்மை, ஆகிய காரணங்களால் பெருமளவு இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். இது இயக்கத்தின் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.

சரியான திட்டமிடல் இல்லாததும் அண்மைக்காலமாக இயக்கத்தை முடக்கி விட்டுள்ளதாக, சில நக்சலைட்கள் நம்புகின்றனர். "தலைமையகம் அனைத்து உறுப்பினர்களையும் தருமபுரி நோக்கி நகர்த்தியது. ஆந்திர, கர்நாடக, தமிழ் நாடு மாநில போராளிகளுக்கிடையில் முக்கோண தொடர்பை பேணுவதே திட்டமாகும். ஆனால் போலிஸ் நடவடிக்கையால் கர்நாடகா மாவோயிஸ்ட்கள் தமது தளங்களை கைவிட்டு பின்வாங்கினர். சரியான பயிற்சியின்மையால், பொலிஸ் இயக்கத்தை நசுக்க முடிந்தது."

மாவோயிஸ்ட்கள் தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் பிற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை பேணுவதாக ஒப்புக் கொள்கின்றனர். மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில்; பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பலுசிஸ்தான், காஷ்மீர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. (அசாமிய) ULFA தமக்கு ஆயுதங்கள் தருவதாக ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார். "ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதில்லை. அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எமது நடவடிக்கைகளுக்கு உகந்ததல்ல."

தமிழ் நாடு நடவடிக்கைகளுக்காக கட்சி ஒதுக்கும் 15 லட்சம் ரூபாய்களில் பெரும்பகுதி, பிரச்சாரத்திற்காகவும், முழுநேர உறுப்பினர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் செலவிடப்படுகின்றது. என்பதுகளில் நசுக்கப்பட்ட இயக்கத்தின் மீளுயிர்ப்பிற்கான காரணங்களாக, "ஊழலையும், நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாத நிலை தொடர்வதையும்" நக்சலைட்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (அரசு நியமித்த) திட்டமிடல் கமிஷன் நிபுணர்கள் கூட மேற்குறிப்பிட்ட காரணங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். 

"அரச திணைக்களங்கள் செயற்படுத்தாது விட்ட வெற்றிடத்தில் நக்சலைட்கள் இயங்குகின்றனர். அநீதி இழைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. மாறாக சமூக-பொருளாதார பரிமாணங்களைக் கொண்டுள்ளது." மத்திய அரசு நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இதுவரை 3,677.67 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூறுவதன் படி, பொலிஸ் மட்டும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நகர்ப்புற பிரதேசங்களில் தமது தளத்தை விரிவுபடுத்துவதற்கு, மாவோயிஸ்ட்கள் பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்துகின்றனர். பெண்களை வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டே பிரச்சாரம் செய்து, புதிய உறுப்பினர்களை திரட்டிவருகின்றனர். "தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களை நடைமுறைப் படுத்தாமையும், நிறுவனப்படுத்தப் படாத தொழிலாளர், உழவர்களின் பிரச்சினையும்" மாவோயிஸ்ட்களுக்கு சாதகமான நிலைமையாகும். தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றது.

மக்களை அணி திரட்டுவதற்காக, அவர்கள் ஈழப் பிரச்சினையையும் பயன்படுத்துகின்றனர். ஈழப் பிரச்சினையை தவிர்த்து விட்டு, தமிழ் நாட்டில் எந்தவொரு சக்தியும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்கின்றனர். "நீங்கள் பாலஸ்தீனம், கொசோவோ மற்றும் பல தேசிய விடுதலைப் போராட்டங்களை உங்களால் ஆதரிக்க முடியுமானால், இலங்கையில் ஈழம் கோரும் தமிழர்களை ஏன் ஆதரிக்க முடியாது? 

மாவோயிஸ்ட்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு, பல புதிய உறுப்பினர்களை வழங்கியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்குமிடையில் தொடர்பு இருக்கிறதா?" இயக்கத்தை விட்டு வெளியேறிய சில முன்னாள் புலிகள் தமக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிரேஷ்ட நக்சலைட் ஒருவர், "இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை." என்று கூறினார்.

shivakumarc@epmltd.com

(Growing again in the shadows என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Published : 22 Mar 2009

Thanks to:

Monday, March 23, 2009

சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

ஆபிரிக்காவின் நிலப்பரப்பால் பெரிய நாடான சூடானின் அரபு-இஸ்லாமியப் பேரினவாத அரசுக்கும், தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின மக்களின் விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நடந்த, இலட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இருபதுவருட யுத்தம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தினால், வெளிநாட்டு நிர்ப்பந்தங்களால், கென்யாவில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கும், ஆபிரிக்காவிற்குமிடையில் சிக்குண்ட சூடான், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கே எகிப்திய நாகரீகம் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் இன்று சூடான் இருக்குமிடத்தில் "நுபியா" என்ற ஆபிரிக்கப் பேரரசு இருந்தது. நுபியாவில் சிறப்புற்றிருந்த பண்டைய கறுப்பின நாகரீகம் அழிந்ததற்கு வடக்கேயிருந்து வந்த எகிப்தியப் படையெடுப்பும் , பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்பும் முக்கிய காரணங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமென்ற புதிய மதத்தைப் பரப்ப வந்த அரேபியர் சூடானின் வடபகுதியல் தங்கிவிட்டதுடன் உள்ளூர் நுபியப் பெண்களையும் மணம் முடித்தனர். இதனால்தான் இவர்களின் சந்ததியான சூடானிய அரேபியர்கள், பிற அரேபியரிடமிருந்து வித்தியாசமாக, கருநிற மேனியுடையவராகக் காணப்படுகின்றனர். உண்மையில் "அரேபியர்" என்ற சொல்லின் அர்த்தம் அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் குறிக்கும்.

பிற மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வடக்குச் சூடானில் இஸ்லாமிய நாகரீகம் வளர்ந்தது. அதேநேரம் தெற்குச் சூடானில் வாழ்ந்த ஆபிரிக்கப் பழங்குடியினர் தமது பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை (இன்றுவரை) பின்பற்றி வருகின்றனர். 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சூடான் முழுவதையும் தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்த போதும் இந்த "வடக்கு-தெற்கு" முரண்பாடு தொடர்ந்தது. புதிய வகை ஆட்சிமுறையை, நிர்வாக முறையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் அதற்காக அரேபியச் சூடானியரை மட்டும்தான் பயிற்றுவித்தனர். இதனால் சுதந்திரத்தின் பின்பு இவர்களின் கையில் ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டது.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூட்சி சூடானிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய-அரேபியர்கள் ஆங்கிலேயரினால் செல்லப்பிள்ளைகள் போலவும், பழங்குடியின மக்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள்போலவும் நடத்தப்பட்டனர். பாடசாலைகள், பல்கலைக்கழகம், நிர்வாக அலகுகள் எல்லாம் வடக்கே மட்டும் கட்டப்பட்டன. தெற்கின் தலைவிதி "கடவுளின் பொறுப்பில்" விடப்பட்டது. கிறிஸ்தவ மதச்சபைகளிடம் பழங்குடியின மக்களை "நாகரீகப்படுத்தும்" பணி ஒப்படைக்கப்பட்டது. தெற்குச் சூடானிய மக்கள் வடக்கே வந்து வேலை செய்யவோ, குடியேறவோ அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தென்பகுதி இன்றுவரை அபிவிருத்தியடையாமலே காணப்படுகின்றது.

சுதந்திரத்தின் பின்பு, ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சிப்பொறுப்பைப் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய-அரேபிய அரசாங்கம் தனது பேரினவாத முகத்தை வெளிக்காட்டியது. தெற்கில் செயற்பட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சாரச் சபைகளை நாட்டைவிட்டு வெளியேறப்பணித்தது. தொடர்ந்து, தெற்குப்பகுதியல் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியின மக்கள் அரபு மொழியைப் பயிலவேண்டுமெனக் கட்டாயப்படுத்தியது. சில வருடங்களின் பின்பு பழங்குடியினரின் அதிருப்தி வன்முறையாக வெடித்தது. இராணுவத்தில் இருந்த தென்பகுதி வீரர்கள் அரசுக்கெதிரான கிளர்ச்சியை நடாத்தினர். குறுகிய காலமே நீடித்த இந்தக் கிளர்ச்சி ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டு இறுதியில் சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றது. தெற்குப் பகுதிக்குப் (பெயரளவில்) பிரதேசச் சுயாட்சி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், வடக்கே திடீர்ச் சதிப்புரட்சிமூலம், 1969 ல், கேர்ணல் நிமேரி ஆட்சிக்கு வந்தார். இவர் ஆரம்பகாலங்களில் இடதுசாரிக் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே நிமேரியின் சாயம் வெளுத்துச் சுயரூபம் வெளிப்பட்டது. வலதுசாரி இஸ்லாமிய மதவாதக் கட்சிகளுடன் நிமேரி நெருங்கிய உறவு கொள்ளவே கம்யூனிஸ்ட் கட்சி சதிப்புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்ற எத்தனித்தது. ஆனால் அயல்நாடுகளின் இராணுவ உதவிகளுடன் நிமேரி இந்தச் சதியை முறியடித்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலிடப்பட்டனர். இதைத்தொடர்ந்து 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா போன்ற நாடுகளின் நண்பராகவிருந்தார்.

1983 ல் சவூதி ஆரேபியாவுடனும் நெருங்கிய நட்புக்கொண்டிருந்த நிமேரியின் அரசு, மத அடிப்படைவாத சவூதியின் விண்ணப்பத்திற்கிணங்க, நாடுமுழுவதும் இஸ்லாமிய "ஷரியா" சட்டத்தை அமுல்படுத்தியது. இது இஸ்லாமியரல்லாத தென்சூடானியர் மத்தியில் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிடவே "பொர்" என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது. இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட அதே 'பொர்' ஐப்பிறப்பிடமாகக் கொண்ட ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து கொள்ளவே பிரச்சினை சூடுபிடித்தது. ஜோன் கரெங் தலைமையில் "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" உருவானது. இதன் இராணுவப்பிரிவான "சூடான் மக்கள் விடுதலை இராணுவம்"(SPLA) அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. போராட்டம் தொடங்கிச் சில வருடங்களிலேயே அரச படைகள் நகரங்களில் இருந்த முக்கிய இராணுவ முகாம்களுக்குள் முடங்கிக் கொள்ளவே அவர்களைச் சுற்றிவளைத்து நின்ற SPLA போராளிகள் நாட்டுப்புறங்களைக் கட்டுப்படுத்தினர்.

SPLA இனர் ஆரம்ப காலங்களில் சோஷலிசம் கதைத்தாலும், பின்னர் இப்போக்கைக் கைவிட்டு விட்டு அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டனர். அமெரிக்க அரசு கென்யா வழியாக ஆயுதத் தளபாடங்களை அனுப்பி உதவியது. SPLA ன் அரசியற் கொள்கைகள், சித்தாந்தங்கள் தெளிவற்றன. தென்சூடானின் பிரிவினையா அல்லது சுயாட்சியா எனபதிலும் குழப்பம். மேலும் ஜேன் கரெங்கின் 'டிங்கா' இனத்தவரே இயக்கத்தில் அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டி பிற இனங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களின் மோதல்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. ஜோன் கரெங்கின் தலைமையுடன் முரண்பட்டு பிரிந்து சென்ற நசீர் குழு (குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்) தான் SPLA ல் இடம்பெற்ற பெரிய பிளவு. இவர்களுக்கிடையிலான மோதலைப் பயன்படுத்திக்கொண்ட அரசபடைகள் பெருமளவு முனைப்புடன் (பிரான்ஸிலிருந்து பெற்ற) நவீன ஆயுதங்களுடன் படையெடுத்தது. SPLA ன் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் கைப்பற்றப்பட்டன.

தொண்னூறுகளின் ஆரம்பத்தில் நடந்த சதிப்புரட்சியின் மூலம் ஜெனரல் பஷீர் ஆட்சியைப்பிடித்து இராணுவ அரசை அமைத்ததுடன், சூடானை இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பாதையில் இட்டுச்சென்றார். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியும் அதன் தலைவரான பாரீஸில் சட்டக்கல்வி பயின்ற ஹசன் துரபியும்தான் பஷீருக்கு ஆதரவாக் கொள்கை வகுத்துக் கொடுத்தவர்கள். ஓசமா பின் லாடனுக்கும் அவரது போராளிகளுக்கும் கூட சூடானில் அடைக்கலம் வழங்கப்பட்டது. சூடானின் போக்கில் வெறுப்படைந்த அமெரிக்க அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இந்நாட்டுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை விதித்தது. 1998 ம் ஆண்டு சூடானில் மலேரியாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு ஏவுகணை வீசி அத்தொழிற்சாலையை அழித்தது. இதன் விளைவாக பத்தாயிரம் நோயாளிகள் மருந்து கிடைக்காமல் மலேரியாவால் இறந்துபோன செய்தியை எந்தவொரு சர்வதேசச் செய்தி நிறுவனமும் கவனத்தில் எடுக்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக சூடான் பின்லாடனை வெளியேற்றியது. தொடர்ந்து மெல்ல மெல்ல அமெரிக்காவுடனும் இராஜதந்திர உறவுகளை விரும்புவதாகக் காட்டிக்கொண்டது. 11 செப்டம்பர் 2001 ல் மாறிய உலகைப்பார்த்து சூடானும் ஒரேயடியாக மாறிவிட்டது. ஒரு தசாப்தமாக சூடானில் அமெரிக்கக் கம்பனிகள் விட்ட வெற்றிடத்தை பிரான்ஸ், சீனக் கம்பனிகள் நிரப்பியுள்ளன. சூடானில் எண்ணையகழும் வேலையையும் அவை பொறுப்பெடுத்துள்ளன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் பொருளாதாரத் தடை மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டது.

சூடான் அரசாங்கமே இறங்கி வருகையில் SPLA கிளர்ச்சியாளருக்குத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. அனுமார் வால்போல் இழுபட்டுச் செல்லும் உள்நாட்டு யுத்தம் இனியும் தொடர்ந்தால் பெற்றோலிய உற்பத்தி போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே சூடானிய அரசும் SPLA ம் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்ததாகக் கருதப்படுகின்றது.



சூடான் தொடர்பான முன்னைய பதிவு:

சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

Saturday, March 21, 2009

சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

பிரான்சிற்கு நிகரான பரப்பளவை கொண்ட, சூடான் நாட்டின் டார்பூர்(Darfur) மாநிலத்தில் இனப்படுகொலை நடப்பதாக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சூடான் நாட்டு அதிபர் பஷீரை கைது செய்ய உத்தரவிட்டது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, மனிதநேய நடவடிக்கையாக தோன்றும் அரசியல் வியூகத்தின் பின்னே, வல்லரசுகளின் எண்ணை வளத்திற்கான போட்டி மறைந்து கொள்கின்றது. டார்பூர் விடுதலை இயக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது இரகசியமல்ல. சூடானின் நட்பு நாடான சீனாவை வெளியேற்றி விட்டு, டார்பூர் எண்ணை வயல்களை அமெரிக்கா அபகரிக்கப் பார்க்கிறது. டார்பூர் பிரச்சினையின் பொருளாதார பின்னணியை ஆராய்கின்றது இந்த ஆவணப்படம்.

Darfur Conflict: It’s always for OIL

Friday, March 20, 2009

எல்சல்வடோர் புரட்சியாளர்களின் தேர்தல் வெற்றி


பத்தாண்டுகளுக்கு முன்னர் எல் சல்வடோர் ஏழை மக்களுக்காக ஆயுதமேந்தி போராடிய FMLN என்ற இயக்கம், கடைசியாக நடந்த தேர்தலில் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. என்பதுகளில் FMLN இயக்கத்தினர் ஆட்சியை கைப்பற்றுமளவிற்கு பலமாக இருந்த போதிலும், ஆளும் கட்சிக்கான அமெரிக்க உதவி காரணமாக சமாதான பேச்சுவார்த்தைக்கு தள்ளப்பட்டனர். அந்த இயக்கம் கிறிஸ்தவ விடுதலை இறையியல் பாதிரிமாரின் ஆதரவை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் முதலாளிகளுக்கு சார்பான Arena கட்சி வெற்றி பெற்று வந்த போதும், வறுமையில் வாடும் 70% மக்கள், கடைசியாக நடந்த தேர்தலில் தமது வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் FMLN இயக்கத்தை சேர்ந்த ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதனால் எல் சல்வடோரும், வெனிசுவேலா, பொலிவியா, நிகராகுவா வரிசையில் தென் அமெரிக்காவின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சோஷலிச அரசுகளின் வரிசையில் சேர்ந்துள்ளது.


Historic power shift in El Salvador

இலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்

தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ:

Thursday, March 19, 2009

வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்



பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை.

 பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய ஐரோப்பாவில், 19 ம் நூற்றாண்டு வரை தேர்தலில் வாக்களிப்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. வீட்டுவேலை செய்வதே பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை, என்ற சிந்தனை கோலோச்சிய காலத்தில், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற விடயத்தை ஆணாதிக்கம் நிலவிய ஆளும்வர்க்கமும், மத நிறுவனங்களும் நினைத்தே பார்க்கவில்லை. 1901 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சில வருடங்களுக்கு, வாக்குரிமை கோரிப் போராடிய பெண்ணிய அமைப்பொன்று வன்முறை பிரயோகித்த போது, அரசாங்கத்தால் "பயங்கரவாதிகள்" என அடக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் 1903 ம் ஆண்டு, மகளிர் சமூக அரசியல் ஒன்றியம் (WSPU) ஸ்தாபிக்கப்பட்டத்தில் இருந்து, தமது இலக்கை அடைவதற்காக, தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்திருந்தனர். ஒரு பக்கம் பெண்கள் மத்தியில் பெண்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். மறு பக்கம், பெண்விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சில உறுப்பினர்கள், தலைமறைவாக இருந்து கொண்டு அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசாங்க கட்டடங்களின் ஜன்னல்களை உடைக்கும் போராட்டம் தீவிரமடைந்து, ஸ்கொட்லாந்தில் மன்னரின் வாகனத்தை தாக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது. அதனை அரச குடும்பத்தின் மீதான தாக்குதலாக கண்ட பொது மக்கள் அப்போது கொதிப்படைந்திருந்தனர். போலீசார் கைது செய்யப்பட்ட உறுப்பினரை மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ திருச்சபையும் பெண்களின் வாக்குரிமையை எதிர்த்து வந்ததால், சில தேவாலயங்களும் எரிக்கப்பட்டன.

WSPU உறுப்பினர்கள், "The Suffragettes" என அழைக்கப்பட்டனர். 1910 ம் ஆண்டிற்குப் பிறகு Suffragettes போராட்டம் தீவிரமடைந்தது. அரச கட்டடங்களை எரிப்பது, குண்டுகள் வைப்பது பரவலாக நடந்தது. அவர்களின் கட்சிப்பத்திரிகையான The Suffragettes, இதுவரை 337 தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. குண்டுகள் பல அடிப்படைத் தரம் வாய்ந்ததாக இருந்த போதிலும், சில கட்டடங்களை தகர்க்கும் அளவு பாரிய சேதம் விளைவிக்கும் வெடிபொருட்களை (Chlorate based high explosive) கொண்டிருந்தன. எந்தவொரு வெடிகுண்டுத் தாக்குதலும் ஆளரவம் இல்லாத தருணத்திலேயே வெடிக்க வைக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசாங்கத்தால் பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் பெருமளவு மாற்றத்தை உருவாக்கா விட்டாலும், அரசின் பிடி தளர்ந்தது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட WSPU உறுப்பினர்கள், சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதும், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடக்க வலுக்கட்டாயமாக உணவு ஊட்டப்பட்ட சம்பவங்களும், பொது மக்கள் மத்தியில் Suffragettes மீது அனுதாப லையை தோற்றுவித்தது. அதைப் பயன்படுத்தி பெண்ணியவாதிகள் மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். தமது போராட்ட தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டனர்.

லண்டன் நகர தெருக்களில், அரச பவனி வரும் வீதியோர மாடி வீடுகளை ஏற்கனவே வாடகைக்கு எடுத்து வைத்திருப்பர். அரசரை வரவேற்க மக்கள் குழுமியிருக்கும் தருணம், மேலே இருந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவர். ஜூன் 1913 ம் ஆண்டு, மன்னரின் குதிரை வண்டிக்கு குறுக்காக ஓடிய WSPU உறுப்பினர் ஒருவர், ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட துயர சம்பவம், போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பின் பெருமளவு மக்கள் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவளித்தனர். ஆளும் லிபரல் கட்சியும் மெல்ல மெல்ல வாக்குரிமைச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் துணிவைப் பெற்றது.

பிரித்தானியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த WSPU அமைப்பினதும், அதன் தலைவி Emmelinne Pankhurst இனதும் பங்களிப்பு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கத்தக்கவை. பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் Emmelinne க்கு சிலை வைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் எடுத்தன. அனைத்துலக பெண்களும் நன்றியுடன் நினைவு கூற வேண்டிய Emmelinne யார்? அவரும் ஒரு காலத்தில் வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த பெண் தான். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான், என்றும் சொல்லலாம். Emmelinne திருமணம் முடித்த, "சிவப்பு டாக்டர்" என அழைக்கப்பட்ட Richard Marsden Pankhurst தான் அந்த பெருமைக்குரிய ஆண்.

கருத்துரிமைக்காக, அரசியலில் மதத்தின் தலையீட்டை எதிர்த்து, பிரபுக்கள் சபையின் அதிகாரத்திற்கு எதிராக, அயர்லாந்தின் சுயநிர்ணய உரிமைக்காக, இந்தியாவின் சுதந்திரத்திற்காக சளைக்காமல் போராடியவர். ஒரு சோஷலிஸ்ட்டான Richard தனது முற்போக்கு கருத்துகளை ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்றுவிடவில்லை. வீட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தினார். தனது இளம் மனைவி பிற பெண்களைப் போல வீட்டு வேலை செய்யும் இயந்திரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது அரசியல் கருத்துகளை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார். பெண்ணுரிமைக்காக பெண்களே போராட வேண்டும் என்ற கருத்தை விதைத்தார். அதன் பலனாக அவரது மனைவி Emmelinne ம், மகள் Christabel ம் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காக போராடும் Women's Political and Social Union என்ற அமைப்பை கட்டி எழுப்பினர். அன்று பெண் விடுதலைக்காக போராடியவர்களை பற்றி, இன்றைய பெண்கள் அறியாதவாறு வரலாறு மறைக்கப்படுகின்றது.



Books:
1. The Act of Militancy: Violence and the  Suffragettes - by Brian Harrison
2. The Women's Suffrage Movement in 
Scotland - By Leah Leneman
3. Emmeline Pankhurst: a Biography - by June Purvis

Web Site:
The Women's Library

Wednesday, March 18, 2009

மக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி ஒன்றில், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர், இரு சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

In a military operation taking place in balata refugee camp (nablus, occupied palestine), israeli occupation troops forced two youngsters to serve as human shields.

போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா! - ஒரு வரலாறு


ஐரோப்பிய நாடுகளில் வந்து குடியேறும் மக்கள், வறுமை காரணமாக புலம்பெயர்ந்த பரதேசிகள், என்ற எண்ணம் ஐரோப்பியரின் மனதில் உள்ளது. அவர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துப்போகாது, தமது பிற்போக்கு கலாச்சாரத்தை கட்டிபிடித்துக் கொண்டு இருப்பதாகவும், அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் தப்பெண்ணம் நிலவுகின்றது.

இதே ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய போது, அங்கே ஏற்கனவே தம்மை நிலைப்படுத்திக் கொண்ட ஆங்கிலேய-அமெரிக்க பெரும்பான்மை சமூகத்தால் சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர். தற்போது குடிவரவாளர்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவதில், பெருமை கொள்ளும் நாடு நெதர்லாந்து. அந்த நாட்டு மக்களின் அமெரிக்கா நோக்கிய குடி அகல்வு பற்றிய வரலாறு, இன்றைய நிலைமையுடன் அதிசயத்தக்க விதமாக பொருந்திப் போகிறது.

நியூ யார்க் நகரம் ஒரு காலத்தில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்த நகரம் டச்சுக் காலனியவாதிகளால் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டதால் அந்த பெயர் மாற்றம். 1840 ம் ஆண்டிலிருந்து, 1940 ம் ஆண்டு வரை 2 லட்சமும், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் குறைந்தது பத்தாயிரம் பேராவது நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சென்று குடியேறி உள்ளனர். ஆங்கிலேய கலாச்சார ஆதிக்கம் நிலவிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த ஒல்லாந்துக் குடியேறிகள் இருகரம் கூப்பி வரவேற்கப்பட்டனர். கடும் உழைப்பாளிகளாகவும், புரட்டஸ்தாந்து மத நம்பிக்கை உடையவர்களாகவும் விரும்பப்பட்டனர்.

ஆனால் தாயகமான நெதர்லாந்தில், அமெரிக்கா சென்று குடியேறுபவர்களுக்கு என்றைக்குமே  நல்ல பெயர் இருக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் கிரிமினல்களாகவும், தேசத் துரோகிகளாகவும் தூற்றப்பட்டனர். அல்லது எந்த வேலையும் செய்யாத உதவாக்கரைகளாக கணிக்கப்பட்டனர். வட அமெரிக்க நீராவிக் கப்பல் நிறுவனம் (N.A.S.M.) என்ற கப்பல் போக்குவரத்து சேவை, புகலிடம் தேடுவோரை அமெரிக்கா கொண்டு சென்றது. அந்தக் கப்பல் சேவைக்கு உள்ளூர் மக்கள் "Neem Alle Schurken Mee" (அனைத்துப் போக்கிரிகளையும் கொண்டு செல்) என்ற வேடிக்கையான பெயர் இட்டனர்.

இரண்டாம் உலகப்போர் வரையில் பெரும்பான்மை ஐரோப்பிய நாட்டு மக்கள் வறுமையில் வாடினர். நெதர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. விவசாய சமூகத்தை கொண்ட நாட்டில், நட்டமடைந்த விவசாயிகள் அமெரிக்கா சென்று குடியேறினால் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்பினர். அவர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துக் கொண்டிருந்த முகவர்கள், அங்கே சென்றால் ஏக்கர் கணக்கில் நிலமும், சொந்த வீடும் கிடைக்கும் என ஆசை காட்டினர். இருப்பினும் அமெரிக்காவில் கால் பத்தித்த மறுகணமே பிறருடைய வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். சொந்த நாட்டில் விவசாயிகளாக இருந்தவர்கள், அமெரிக்கா வந்து விவசாயக்கூலிகளான துர்ப்பாக்கிய நிலை நேர்ந்த போதும், சம்பாதித்து சேர்க்கும் பணத்தில் வீடும், நிலமும் வாங்கும் கனவுகளில் மிதந்தனர்.

நெதர்லாந்துக் குடிவரவாளரின் பின்தங்கிய நிலைமைக்கு, ஆங்கில மொழித் தேர்ச்சி இன்மையும் ஒரு காரணம். விவசாயத் தொழிலாளிகளுக்கான வீட்டு வசதியும் திருப்திகரமானதாக இருக்கவில்லை. மின்சாரமோ, குடிநீரோ இல்லாத, சிறிய மரப்பலகை வீட்டை, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆண்கள் வயல்களில் வேலை செய்கையில், பிள்ளைகள் பாடசாலை செல்கையில், பெண்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். இதனால் ஆங்கிலம் கற்க, சூழலை தெரிந்து கொள்ள வாய்ப்பற்ற பெண்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.

குடிவரவாளர்களை பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்ற விடாது தடுப்பதில் மத நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. இன்று ஐரோப்பிய முஸ்லீம் பிரசைகளை, இஸ்லாமிய மதம் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றது, என குற்றஞ்சாட்டுவது போல, அப்போதும் அமெரிக்காவில் சிறுபான்மை மத நிறுவனங்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்கப்பட்டன. ஆமாம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரே கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கவில்லை.

ஆரம்பத்தில் நெதர்லாந்துக் கத்தோலிக்க குடியேறிகள் மட்டுமே அமெரிக்க பெரும்பான்மை சமூகத்தின் தேவாலயங்களை ஏற்றுக் கொண்டனர். அதற்கு மாறாக புரட்டஸ்தாந்து பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், புகலிடத்திலும் குழுவாதத்தை தொடர்ந்தனர். அமெரிக்காவில் ஒல்லாந்து சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்திய புரட்டஸ்தாந்து திருச்சபைகள், பிள்ளைகளுக்கு டச்சு மொழியை போதிக்கும் பாடசாலைகளாகவும் அமைந்திருந்தன. தமது தேவாலயங்களில் அமெரிக்க கொடியை பறக்கவிட மறுத்தது போன்ற விடயங்கள், பெரும்பான்மை அமெரிக்கரை எரிச்சலூட்டியது. சில தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறிய மக்களில் பெரும்பான்மையினர் சீர்திருத்தப்பட்ட புரட்டஸ்தாந்து சபைகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரச மதமான புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்துடன் முரண்பட்டு, சுதந்திரமான சிறு குழுக்களாக இயங்கி வந்தனர்.(1834-1886) "சீர்திருத்தப்பட்ட புரட்டஸ்தாந்து தேவாலயங்கள்" என்ற பெயரில் இயங்கி வந்த மத நிறுவனங்களை அன்றைய அரசாங்கம் பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த அமைப்புகளை சட்டவிரோதம் என அறிவித்தது. பிரார்த்தனை கூட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

தேவாலயங்களில் பிரார்த்தனை நடக்கும் வேளை, போலிஸ் உள்நுளைந்து வழிபாட்டாளர்களை விரட்டியது. பாதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வாறு அரச அடக்குமுறைக்கு உள்ளான கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் புகலிடம் தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது வியப்பல்ல. இன்று மதச் சுதந்திரம், மத நல்லிணக்கம் பற்றி உலகம் முழுக்க போதிக்கும் அதே நெதர்லாந்து நாட்டில் தான் இவ்வளவும் நடந்துள்ளன. ஆமாம், "ஜனநாயக" நாடுகளின் வரலாற்றில் இது போன்ற இருண்ட பக்கங்கள் நிறைய உள்ளன.


Web Sites:
Dutch Americans
Dutch Reformed Church
Dutch Heritage Village in America

Tuesday, March 17, 2009

பொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி?

வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.

The Crisis of Credit Visualized

The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.

Monday, March 16, 2009

வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)

வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் குழுவொன்று தொழிலாளரால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது எடுத்த வீடியோ இது:

[VIDEO] Sanitarios Maracay under workers' control
Hands Off Venezuela delegation tours Sanitarios Maracay, a factory in Venezuela under workers control, to learn more about the revolutionary process taking place there, and to offer solidarity to the workers.


[Video] Venezuela Sanitarios Maracay Workers' Assembly

யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்


யேமென் நாட்டில் உல்லாசப்பிரயாணிகள் சிலர் மீண்டும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். ஷிபம் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் நான்கு கோரிய பிரசைகள் கொல்லப்பட்டனர். Unesco வினால் பண்டைய காலாச்சார பாரம்பரியம் மிக்க நகரமாக பாதுகாக்கப்படும் "ஷிபம்" உல்லாசப்பிரயாணிகளை அதிகளவில் கவர்ந்து வருகின்றது. மிக வறுமையான மத்திய-கிழக்கு நாடான ஏமனில், தீவிரவாதம் இன்னமும் குறைந்தபாடில்லை.

2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் "யு.எஸ்.எஸ் கோல்" மீது வெடிமருந்து நிரப்பிய சிறிய படகொன்று மோதிச் சிதறுண்டது. ஒரு தற்கொலைக் குண்டுதாரி அந்தப் படகை ஓட்டி வந்து மோதியிருக்கலாம் என நம்பப்படும் அந்தத் தாக்குதலில் 17 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திலிருந்து சர்வதேசக் கவனம் அரபிக்குடா நாட்டின் ஓரத்தில் இருக்கும் யேமன் என்ற நாட்டின் மீதும் பதிகின்றது. அல்-கைதாவைப்பற்றி அப்போது அதிகமானோர் அறியாதிருந்த காலமது. ஆப்கானிஸ்தானில் தளமமைத்திருந்த அல்-கைதா இயக்கத்தின் அரசியற் பிரச்சாரப் பிரிவு வெளியிட்ட வீடியோவில் யு.எஸ்.எஸ் கோல் தாக்குதலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்ட தொண்டர்படையில் பெருமளவு யேமனியர்களும் சேர்ந்திருந்தனர். இன்றைய சர்வதேசத் திரையரங்கின் பிரதான வில்லன் ஒசமா பின்லாடனின் குடும்பமும் யேமனியர்தான். ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் வெளியேறியபின் யுத்தம் முடிவடைந்து நாடுதிரும்பிய யேமனியத் தொண்டர்கள் இன்று அல்-கைதா உறுப்பினர்களாகவிருப்பதும் பின்லாடனுக்கு விசுவாசமாகவிருப்பதும் ஆச்சரியப்படக்கூடிய விடயங்களல்ல. ஆனால், யேமன் உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முன்பு இணைபிரியா நண்பர்களாகவிருந்த யேமன் ஜனாதிபதியும் பின்லாடன் விசுவாசிகளும் இன்று எதிரிகளாக மாறியிருப்பதுதான் ஆச்சரியம். நண்பர்கள் பகைவர்களான அரசியலைப் புரிந்து கொள்ள வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.

இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கண்ட பெருமைக்குரியது யேமன். கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்த யேமனியர்கள் பிற்காலத்தில் பரவிய இஸ்லாமிய மதத்தில் பெரும்பான்மையாகச் சேர்ந்தனர். இன்றுகூட சிறுசிறு இனக்குழுக்களாக யேமனிய சமூகம் பிளவுபட்டிருந்தாலும், பல இனக்குழுத்தலைவர்கள் மதகுருக்களாகவும் தமது மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். வடக்கு யேமனில் இந்த நிலை இன்னும் மாறவில்லை. தெற்கு யேமன் இதற்கு மாறான போக்கைக் கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஏடன் துறைமுகத்தைக் கைப்பற்றிய, அங்கிருந்து பல தெற்கு யேமன் பகுதிகளை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள் தமது காலனிய ஆட்சியை ஆரம்பித்தனர். இந்தக் காலனிய காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வி கற்ற, படித்த யேமனியர்கள் காலணியாட்சியை எதிர்த்தனர். கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்போர், பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, 1967ம் ஆண்டு யேமன் மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தது. மாக்ஸீய-லெனினிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசமைந்த ஒரேயொரு அரபுநாடும் அதுதான்.

தொடர்ந்து சோவியத் யூனியனின் உதவியால் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டது. வீடுகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் பரவலாகக் கட்டப்பட்டன. ஆண்-பெண் பிள்ளைகளுக்குச் சமமான நவீன கல்வியளிக்கப்பட்டது. சோசலிஸ அரசாங்கம் அதிககாலம் நீடிக்க முடியவில்லை. 1991 ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மட்டும் காரணமல்ல. அதற்கு முன்பே ஆட்சியதிகாரத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த போட்டி, தெருக்களில் துப்பாக்கிச்சண்டை போடுமளவிற்கு மோசமடைந்தது. சோவியத் சார்பு, சீனச் சார்பு கம்யூனிஸ்டுக்களுக்கிடையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் முழு தேசமும் பாதிக்கப்பட்டது. பலவீனமடைந்த அரசாங்கம் இறுதியில் வடக்கு யேமனுடன் இணைவதற்குச் சம்மதித்தது. தென்யேமனியர்கள் அரசு அதிகாரம் சமஷ்டிமுறையில் பகிரப்படவேண்டுமென எதிர்பார்த்தார்கள்.

ஒரு சில மாதங்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஈராக் குவைத்மீது படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது. சர்வதேச அரங்கில் யார் ஈராக் பக்கம் ? யார் அமெரிக்கா பக்கம் என கணக்கெடுப்பு நடந்தது. துரதிஸ்டவசமாக யேமன் ஈராக்கின் பக்கம் நின்றது. ஆத்திரமடைந்த அயல் நாடான சவூதி அரேபியா தனது நாட்டில் வேலைபார்த்த இலட்சக்கணக்கான யேமன் தொழிலாளர்களை எந்தவொரு நட்ட ஈடும் கொடுக்காமல் வெளியேற்றியது. ஒரே நாளில் வெளிநாட்டு உழைப்பாளிகளின் வருமானம் வருவது நின்றுபோனதுடன் உள்நாட்டில் வேலையற்றோர் தொகையும் அதிகரித்தது. ஏற்கெனவே வறிய நாடான யேமனுக்கு இது பலத்த அடி.

இதன் தாக்கம் பலவிடங்களிலும் எதிரொலித்தது. பொருட்களின் விலைகள் உயர்ந்தன. நகரங்களில் உணவிற்காகக் கலகங்கள் ஏற்பட்டன. தென் யேமனியர்கள் தாம் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தனர். முன்னர் சோசலிச நலன்புரி அரசின்கீழ் கிடைத்த வேலையற்றோர் ஊதியம் போன்ற பல சலுகைகள் இப்போது பகற்கனவாய்ப் போய்விட்தைக் கண்டனர்.தென்யேமனிய அரசியல்வாதிகளும், அதுவரை கலைக்கப்படாதிருந்த அவர்களது இராணுவமும் பிரிவினை கோரிக் கிளர்ச்சி செய்தனர். வடயேமன் ஜனாதிபதி சாலே கிளர்ச்சியாளர்கள்மீது இராணுவத்தை ஏவிவிட்டார். அப்போதுதான் ஆப்கானிஸ்தானிலிருந்து நாடு திரும்பியிருந்த அல்-கைதா போராளிகள் வடயேமன் இராணுவத்துடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு கிளர்ச்சியாளரை அடக்கினர். பெரும் அழிவை ஏற்படுத்திய அந்த உள்நாட்டு யுத்தம் முன்னாள் தென்யேமன் தலைநகர் ஏடன் நகர முற்றுகையுடன் முடிவுக்கு வந்தது. வடயேமன் படைகளுக்கு உதவியழித்த பிராந்திய வல்லரசான சவூதி அரேபியா, இஸ்லாமிய மதத்தலைவர்கள், இஸ்லாமிய மதவாதக் கட்சி ஆகியன கம்யூனிஸ்ட்டுக்களை பூண்டோடு அழித்த மகிழ்ச்சியில் திழைத்தனர்.

உள்நாட்டுப்போரை அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி சாலேயின் கட்சி மாபெரும் வெற்றிபெற்றது. அதோடு கூட்டுச்சேர்ந்த மதவாத "இஸ்லா" கட்சி இரண்டாமிடத்திற்கு வந்தது. இன்று மாறிவிட்ட உலகில் இதே இஸ்லா கட்சி அரசுடன் முரண்பட்டுநிற்கிறது. முன்பு சவூதி அரேபியா இந்தக்கட்சியை ஆதரித்தது. இப்போது இக்கட்சி அல்-கைதா உறுப்பினர்களின் ஆதரவுத்தளத்தில் இயங்கிவருகின்றது. கடந்த தசாப்தத்தில் யேமன் இவ்வாறு பல எதிர்பாராத மாற்றங்களை கண்டுள்ளது. சென்ற ஆண்டின் இறுதி நாட்களில் நடந்த மூன்று அமெரிக்கக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்களின் கொலை, சோசலிசக் கட்சித் தலைவரொருவரின் கொலை போன்றவற்றை செய்தவர்கள் தாம் இஸலாக் கட்சி உறுப்பினர்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் ஜனாதிபதிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பயங்கரவாதத்தை அடக்குமாறு கூறும் அமெரிக்க அரசின் நெருக்குதல் ஒருபுறம், தனது ஆட்சிக்கு இதுவரை பக்கபலமாகவிருந்த மதவாத நண்பர்கள் மறுபுறம் என தர்மசங்கட நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஜனாதிபதி சாலே சர்வாதிகாரி என்று பெயரெடுத்துள்ளார். மதவாதிகளுக்கெதிரான நடவடிக்கை அவரது ஆதரவுத் தளத்தை பாதிப்பதுடன், மக்கள் மத்தியில் சர்வாதியாரியாக நிச்சயப்படுத்தப்படுவார். சாவே வரவர அமெரிக்கா பக்கம் சரிந்து வருவதால் நாட்டின் பிற அரசியற் சக்திகளிடமிருந்து அந்நியப்பட்டு, தனிமைப்பட்டு நிற்பதால் அவருக்குச் சர்வாதிகாரி என்ற பெயர் சரியாகப் பொருந்துகிறது.

மேற்கத்தைய தொடர்பு சாதனங்களில் யேமன் பற்றிய செய்திகள் வருவது அவர்கள் நாட்டுப்பிரஜைகள் பாதிக்கப்படும்போது மட்டும்தான். 1990 ம் ஆண்டுக்குப் பிறகு யேமன் போகும் உல்லாசப் பயணிகள் தொகை அதிகரித்துள்ளது. அதேநேரம் ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அடிக்கடி கடத்தப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளதால் யேமன் பாதுகாப்பாற்ற நாடாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடத்தப்பட்ட பல மேற்கத்தைய உல்லாசப்பயணிகள் ஆபத்தான சூழலில் பணயம் வைக்கப்படவில்லை. பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் மிக நன்றாகக் கவனிக்கப்பட்டார்கள். இத்தகைய சமபவங்கள் நகரில் இருந்து தூரத்தில் நாட்டுப்புறங்களிலேயே நடப்பதுண்டு. நாட்டுப்புறக் கிராமங்கள் பல இனக்குழுக்கள் வாரியாகப் பிரிந்துள்ளன. சாதிச் சமூகங்கள் போல தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்படும் இவ்வினக்குழுக்களுக்கென சில கிராமங்களை உள்ளடக்கிய தனியான பிரதேசமும் அதற்கென ஒரு தலைவரையும் கொண்டுள்ளன. இந்தத் தலைவரின் கீழ் சிறு ஆயுதக்குழுவும் இருக்கும். பண்டைய காலத்தில் இருந்து யேமனிய சமூகம் இவ்வாறு வாழ்ந்து வருகிறது.


நாட்டுப்புறங்களை பார்வையிடப்போகும் உல்லாசப்பிரயாணிகள் ஏதோவொரு இனக்குழுவிற்குச் சொந்தமான பிரதேசத்திற்குள் போய்விட்டால் அந்தப்பகுதி ஆயுதக்குழுக்கள் அவர்களைக் கடத்திக் கொண்டு போய்விடும். அப்படிக் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் கிராமங்களில் உள்ளூர் மக்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு, அவர்களைக் பொறுப்பேற்கும் குடும்பங்களில் விருந்தினர்போல பராமரிக்கப்பட்டனர். இதனால் உல்லாசப் பிரயாணிகள் உள்ளூர் மக்களின் அவலமான வாழ்க்கையை , வசதிக்குறைபாடுகளை நேரடியாகப் பார்க்க முடிந்தது. இந்தக் காலத்தில் கடத்தல் பற்றிய செய்தி வெளிநாடுகளில்தெரியவர நெருக்குதலால் சங்கடப்படும் அரசாங்கம் கடத்தல்காரருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகும். கடத்தல்காரரின் பெரும்பாலான கோரிக்கைகள் சிறைகளில் இருக்கும் தமது தலைவரை விடுவிக்குமாறோ, அல்லது தமது குடியிருப்புகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறோ கேட்பதாகவேதானிருக்கும். இந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தைப் பணியவைத்தபின்பு உல்லாசப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடத்தல் நாடகங்களால் தமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உணர்ந்த உல்லாசப் பயணிகள் கடத்தல்காரருடன் ஒத்தழைத்து வந்தனர். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த துயரச்சம்பவம் ஒன்று இந்த ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பயணக்கைதிகளை விடுவிக்க அனுப்பப்பட்ட இராணுவத்திற்கும் , ஆயுதக்குழுவிற்குமிடையில் நடந்த சண்டையொன்றில் சில வெளிநாட்டவரும் மரணமடைந்த பின்பு உல்லாசப்பிரயாணிகளின் வருகையில் வீழ்ச்சியேற்பட்டது.

மேலே கூறப்பட்ட தகவல்கள் யேமன் பற்றி வெளியுலகில் நிலவும் பல தவறான அபிப்பிராயங்களைத் தெளிவாக்குகின்றன. உல்லாசப்பிரயாணிகள் கடத்தப்படும்போதெல்லாம், இது இஸ்லாமியத்தீவிரவாதிகள் செயல் என்று மேற்கத்தையச் செய்தி ஊடகங்கள் எடுத்த உடனேயே சொல்லிவிடுகின்றன. அதன் பின்னணிபற்றி ஆராய்வது கிடையாது. யேமனின் பல பகுதிகள் இன்னமும் அபிவிருத்தி செய்யப்படாமல் பினதங்கிய நிலையில் காணப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இப்போதும் அரசாங்கம் அல்-கைதாப் பயங்கரவாதிகளை அடக்குவதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறையைப் பாவித்து, அரசாங்கத்திற்கு அபிவிருத்தி பற்றி நினைவுபடுத்தும் சிறுசிறு ஆயுதக்குழுக்கள், தமது சக்தியை ஒன்றுதிரட்டி இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமாக மாறினால் அதன் விளைவுகள் பாரதூரமாகவிருக்கும். அதைத் தான் இப்போது யேமென் அறுவடை செய்து கொண்டிருக்கிறது.

Sunday, March 15, 2009

தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு

"Concentration Camps" என அழைக்கப்படும் "தடுப்பு முகாம்கள்", முதன்முதலாக உலக வரலாற்றில் ஜெர்மனியில் நாசிகளால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக இப்போதும் பலர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1901 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்கள் தடுப்பு முகாம்களை அமைத்து மக்களை வதைத்த சரித்திரம் இன்று மறக்கப்பட்டு விட்டது. அதே காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அமெரிக்கர்களால் தடுப்பு முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன.

தென் ஆப்பிரிக்காவில் டச்சு மொழி பேசும் மக்கள் 17 ம் நூற்றாண்டிலேயே சென்று குடியேறி, காலனிகளை அமைத்திருந்தனர். இன்றைய நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சென்றவர்கள் தம்மை "ஆப்பிரிக்கானர்கள்" என அழைத்துக் கொண்டனர். இவர்கள் பேசிய மொழி பெருமளவு டச்சு மொழியை ஒத்திருந்தாலும், அதனை "ஆப்பிரிகானர் மொழி" என அழைத்தனர். 19 ம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவை கைப்பற்றி காலனிப்படுத்த வந்திறங்கிய ஆங்கிலேயருக்கும் இவர்களுக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால், வடக்கு நோக்கி நகர்ந்த ஆப்பிரிக்கானர்கள், அங்கே "Transval", "Orange Free State" ஆகிய குடியரசுகளை ஸ்தாபித்தனர். ஆங்கிலேயர்கள் அந்த குடியரசுகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் படையெடுத்தனர். பல ஆண்டுகளாக நடந்த இந்த போர், வரலாற்றில் "பூர் யுத்தங்கள்" என அழைக்கப்படுகின்றன. Boer(உச்சரிப்பு: பூர்) என்றால் விவசாயி என்று அர்த்தம்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்து, ஆப்பிரிகானர் பிரதேசங்கள் யாவும் ஆங்கிலேயர் வசம் வந்து விட்டன. ஆனால் பூர்களின் கெரில்லா யுத்தம் தொடர்ந்தது. "மக்கள் என்னும் நீருக்குள் நீந்தும் மீன்களே கெரில்லாக்கள்" என்பது போர் நியதி. அதனால் நீரை வெளியேற்றி விட்டால் மீன்கள் இறந்து விடும் என்று கணக்குப் போட்டது ஆங்கிலேய அரசு. அந்த சிந்தனையில் உதித்த திட்டம் தான் "தடுப்பு முகாம்கள்." ஆப்பிரிகானர் குடியிருப்புகளில் இருந்த பெண்கள், குழைந்தைகள் எல்லோரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுற்றிவர முட்கம்பி வேலி இடப்பட்டு, ஆங்கிலேய இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். 26730 ஆப்பிரிகானர்கள் இந்த தடுப்பு முகாம்களில் மரணமுற்றனர். இதில் பெரும்பான்மையான சாவுகள் வசதிக் குறைபாடுகளால் நேர்ந்தவை.

காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை தொடர்ந்த பூர் படையினர், இறுதியில் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். புதிய தென் ஆப்பிரிக்கக் குடியரசில் ஆப்பிரிகானர்கள் "தேசியக் கட்சி" என்ற பெயரில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் இணைந்து கொண்டனர். ஆங்கிலேயர்கள் போரில் வெற்றியடைந்ததாலும், அவர்களின் ஆதிக்கம் அடுத்து வரும் நூறாண்டுகளுக்கும் நிலைத்து நின்றதால், இத்தகைய வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை இலகுவாக மறைக்க முடிந்தது. ஆங்கிலேயர்கள் தமது தடுப்பு முகாம் பரிசோதனையை, தமது நட்பு நாடுகளிலும் அறிமுகப்படுத்தினர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்: மலேசியா.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவை இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தியது. தனது காலனியை இழந்த பிரிட்டன், கம்யூனிஸ்ட்களின் போராட்டத்திற்கு நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவு நேச நாடுகளுக்கு சாதகமாக அமைந்ததால், ஜப்பானியப் படைகள் பின்வாங்கி ஓடவும், பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை மீளக் கைப்பற்றின. போருக்குப் பின்னர் மலேசியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்த ஆங்கிலேயர்கள், ஆக்கிரமிப்புக் காலத்தில் ஜப்பானியருடன் சேர்ந்து வேலை செய்த மலேய மேட்டுக்குடியினரின் கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததனர். ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்த அட்டூழியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கம்யூனிஸ்ட்கள் மீண்டும் ஆயுதங்களை கையிலெடுத்தனர்.

தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்ற புதிய மலேய இராணுவத்தால் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களை எதிர்த்துப் போரிட இயலவில்லை. ஒரு சில வருடங்கள் போர் நீடித்தால் மலேசியா கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சிய பிரிட்டன், மலேசிய அரசிற்கு உதவி வழங்க முன்வந்தது. வெறுமனே இராணுவ ஆலோசனையுடன் நின்று விடாது, பிரிட்டிஷ் வீரர்களும் களத்தில் இறங்கினர். அப்போதும் கம்யூனிச கெரில்லாகளை அடக்க முடியவில்லை. அப்போது தான் பிரிட்டன் தனது "தென் ஆப்பிரிக்க தடுப்பு முகாம் பரிசோதனையை" மலேசியாவிற்கும் சொல்லிக் கொடுத்தது.

மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, அப்போது சீனாவில் வெற்றிவாகை சூடிய மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. அதற்கு அந்தக் கட்சி மலேசிய சிறுபான்மை இனமான சீனர்களில் இருந்து உருவானதும் ஒரு காரணமாக இருக்கலாம். மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும், பெரும்பாலான உறுப்பினர்களும் சீனர்களாக இருந்தனர். மலேய, இந்திய உறுப்பினர்களும் இருந்த போதும் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அவர்களது பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருந்தது. கட்சியின் ஆதரவுத்தளமும் சீன சிறுபான்மைச் சமூகமாகவே இருந்தது. இந்த இனரீதியான வேறுபாட்டை, மலேசிய அரசும், பிரிட்டனும் தமக்குச் சார்பாக பயன்படுத்தினர்.

மலேசியாவில் இருந்த சீனர்களின் நகரக் குடியிருப்புகள், கிராமங்கள் யாவும் சுற்றி வளைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். தொலைதூரங்களில் அமைக்கப்பட்ட, இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். மக்களின் சுதந்திர நடமாட்டம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களை விட்டு யாரும் வெளியேற விடாமலும், வெளியில் இருந்து யாரும் உட்புக முடியாமலும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டன. காடுகளுக்குள் மறைந்திருந்த கெரிலாக்கள் அழிக்கப்படும் வரை, மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் வருடக்கணக்காக வைத்திருக்கப்பட்டனர். என்பதுகளின் இறுதியில் போராட்டத்தை தொடர முடியாத கம்யூனிஸ்ட் கட்சி அரசுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு சரணடைந்தது. முக்கிய தலைவர்களும், சில உறுப்பினர்களும் தமது குடும்பத்துடன் தாய்லாந்தில் புகலிடம் கேட்டு அங்கேயே தங்கி விட்டனர்.

தடுப்பு முகாம்கள் அமைப்பதில் ஆங்கிலேயரின் பேரப்பிள்ளைகளான அமெரிக்கர்களும் சளைத்தவர்கள் அல்ல. அமெரிக்க நாட்டின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, அம் மக்கள் Reservation என அழைக்கப்படும் குறுகிய பிரதேசத்திற்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்றைக்கும் அமெரிக்காவிலும், கனடாவிலும் காணப்படும் இந்த Reservation கிராமங்கள், முட்கம்பி வேலி இடப்படாத, இராணுவ காவல் இல்லாத தடுப்பு முகாம்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கெல்லாம் தெரிந்த தடுப்பு முகாம்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தோன்றி இருந்தன. அப்போது அமெரிக்க ஜப்பானுடன் போரில் ஈடுபட்ட காலமது. அமெரிக்காவில் இருந்த ஜப்பானிய சிறுபான்மைச் சமூகத்தினர் அனைவரும் எதிரிகளாக சந்தேகிக்கப்பட்டனர். அதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட முழு ஜப்பானிய மக்களும், அமெரிக்கா எங்கும் நிறுவப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். போரில் ஜப்பான் தோற்ற பின்னர் தான் அந்த முகாம்கள் திறந்து விடப்பட்டன.

இந்தக் கட்டுரை ஆங்கிலேயர் அமைத்த தடுப்பு முகாம்கள், என்ற வரையறைக்குள் மட்டுப்படுத்தப் படுகின்றது. இஸ்ரேலில் உள்ள தடுப்பு முகாமான பாலஸ்தீன அரபுக்களின் கிராமங்கள், மொரோக்கோவின் மேற்கு சஹாரா மாநிலத்தில் முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட சஹாராவி என்ற சிறுபான்மை இனத்தவர்கள், "நாகரீகமடைந்த" ஐரோப்பிய நாடான செக் குடியரசில் ரோமா (ஜிப்சி) மக்களின் குடியிருப்புக்களை சுற்றி கட்டப்பட்ட மதில்கள், இவை பற்றி எல்லாம் எழுதப் போனால் இந்தக் கட்டுரை நீண்டு விடும்.

உசாத்துணை:
The Concentration Camp in South Africa
The British in Malaysia
Indian reservation in America

கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கால அங்கத்துவ நாடுகளில் ஒன்று. அதே நேரம் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மீறப்படும் குற்றச் சாட்டுகளிலும் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஆப்கானிய அகதி ஒருவரை போலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பெப்ருவரி 15 ம் திகதி இடம்பெற்ற அந்த ஆப்கானிய அகதியின் மரணம் தொடர்பாக, அவரின் உறவினர்கள் கிரேக்க போலீசாரை குற்றவாளிகளாக நிறுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் குளியறையில் தற்கொலை செய்து கொண்டதாக கிரேக்க போலிஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் உடலில் காணப்படும் தழும்புகள், அந்த அகதியை போலீசார் சித்திரவதை செய்து கொன்றிருக்கலாம், அல்லது சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என அவரின் உறவினர்கள் நம்புகின்றனர். கிரீஸ் நாட்டு சட்டப்படி போலிஸ் சித்திரவதை செய்வது சட்டவிரோதம் என்பதுடன், நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்..

வழக்கை பதிவு செய்தவர்கள் சார்பான சட்டத்தரணி கூறும் போது, "சடலத்தை ஒப்படைக்க 6 மாதங்கள் எடுக்கலாம் என போலீசார் கூறியதாகவும், ஆனால் இறுதிக் கிரியைகளுக்காக உடலை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு தருமாறு கேட்டிருப்பதாகவும்" தெரிவித்தார். கிரேக்க பொலிசாரினால் அகதிகள் அடிக்கடி தாக்கப்படுவதை சுட்டிக்காட்டும் "சர்வதேச மன்னிப்புச் சபை" போன்ற மனித உரிமை ஸ்தாபனங்கள், போலிஸ் மீதான நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களை கோடிட்டுக் காட்டியுள்ளன.

இதே நேரம் மதச் சகிப்புத்தன்மை இல்லாத மேற்குலக நாடாகவும் கிரீஸ் உள்ளது. ஓட்டோமான் துருக்கியர்கள் கிரீசை ஆட்சி செய்த காலத்திற்கு பின்பு, அதாவது 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இதுவரை புதிய மசூதிகள் எதுவும் அங்கே கட்டப்படவில்லை. உலகமயமாக்கப்பட்ட உலகில், கிரீசில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் முஸ்லீம்கள், தொழுகை நடத்துவதற்கு பள்ளிவாசல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஏதென்ஸ் நகரில் புறநகர்ப் பகுதி ஒன்றில் பாகிஸ்தானிய குடிவரவாளர்கள், ஒரு வீட்டின் நிலக்கீழ் அறையை மசூதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்விடத்தில் அதிகளவான பாகிஸ்தானியர்கள் கூடுவதைக் கண்ட அயலார்கள் பொலிசிற்கு முறைப்பாடு செய்தனர். போலிஸ் விசாரணையின் போது அந்த வீட்டில் சட்டவிரோத மசூதி இயங்குவதை கண்டறிந்த பின்னால், வீட்டின் உரிமையாளருக்கு 90000 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்துமாறு நகரசபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிறுவனமொன்று,இந்த விடயத்தில் அரசாங்கத்தில் இருக்கும் வலதுசாரிகள், இனவாதக் கண்ணோட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சில கிரேக்கர்கள், "எங்களை நிறவெறியர்கள் என்று அழையுங்கள். பரவாயில்லை. நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்." என கருத்து தெரிவித்தனர். 2004 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, சர்வதேச கவனம் கிரீஸின் மீது குவிந்திருந்த வேளை, அரசே ஒரு மசூதி கட்டித் தருவதாக வாக்களித்தது. இருப்பினும் கிரேக்க கிறிஸ்தவ சபையினரின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அந்த திட்டம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. அதே போல உலகம் முழுவதும் தனது செலவில் மசூதி கட்டிக் கொடுக்கும் சவூதி அரேபியாவின் கோரிக்கைக்கும், பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கிரேக்க மக்களின் வாழ்க்கையிலும், அரசாங்கத்திலும், கிரேக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு அதிகமாக காணப்படுவதால், அங்கே பிற மதங்களுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை. இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் இந்த நிலைமை என்றில்லை. கிரீஸின் கூடப்பிறந்த தம்பி முறை கொண்டாடும் சைப்பிரசில், பௌத்தர்கள் தமக்கென புத்த கோயில் கட்ட விண்ணப்பித்த போது, "வாகன தரிப்பிட வசதி இல்லை" என்ற காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் இந்துக்கள் சொற்ப தொகையில் வாழ்வதால் அவர்களின் கோயில் கட்டும் ஆசையும் நிறைவேறப்போவதில்லை.

கிரீஸின் மனித உரிமைகள் பாதுகாக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. அந்த நாட்டில் புகலிடம் கேட்கும் அகதிகளில் ஒரு வீதமானோர் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறனர். இருப்பினும் ஐரோப்பிய கோட்டைக்குள் நுழைய விரும்புவர்கள் கிரீசிற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Saturday, March 14, 2009

மேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்

இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய உலகிற்கு உபதேசம் செய்யும் நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளில் அகதிகளையும், சட்டவிரோதமாக தங்கி இருப்போரையும், வருடக்கணக்காக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைப்பது அரசின் கொள்கையாக உள்ளது.

*** நெதர்லாந்தில் உள்ள தடுப்புமுகாம் பற்றிய ஆவணப்படம்
*** "அவுஸ்திரேலியாவின் அகதிகள் சிறைச்சாலை" - ஆவணப்படம்

அவுஸ்திரேலிய தடுப்புமுகாம் பற்றிய காணொளி:

கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்


ஏதென்ஸ் நகரத்தில், அமெரிக்காவின் சர்வதேச வங்கியான City Bank தலைமைக் கட்டிடத்தை கார்க் குண்டு வைத்து தகர்க்க முயற்சி. 125 கிலோ குண்டு வெடித்தாலும் சேதம் அதிகம் இல்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பபட்ட புரட்சிகர யுத்தம் என்ற அமைப்பின் உரிமை கோரல் கடிதம், "நிதி நெருக்கடிக்கு பொறுப்பான, சர்வதேச மூலதனத்தின் கிரிமினல் தலைமையகம் City Bank..." என்று தமது செயலை நியாயப்படுத்தி உள்ளது. இன்று லட்சக்கணக்கில் வேலையிழந்து வரும் மக்கள் பலர் புதிதாக துளிர் விடும் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இரகசியமல்ல. புரட்சிகர யுத்தம் தனது கடிதத்தில், "முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களையும், அரசியல்-பொருளாதார மேட்டுக்குடியினரையும், இலக்கு வைக்கப் போவதாக" எச்சரித்துள்ளது.

பெப்ரவரி மாதம் இதைத்தவிர வேறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசிற்கு ஆதரவு வழங்கும் பிரபல வெகுஜன தொலைக்காட்சி காரியாலயம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உரிமை கோரும் குறுந்தகடு, சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் சமாதி மீது கண்டெடுக்கப்பட்டது. அதிலும் ஊழல் அரசிற்கு ஆதரவளிக்கும் ஊடகவியலாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிற அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில முன்னணி ஊடகவியலாளர்களும் தாக்குதல் பட்டியலில் அடங்குவதாக தெரிய வந்துள்ளது. ஏதென்ஸ் நகர ரயில் நிலையமொன்றில் தரித்து நின்ற ரயிலில் இருந்த பயணிகளை முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அப்புறப்படுத்தி விட்டு ரயில் பெட்டிகளுக்கு தீவைத்துள்ளனர். பிறிதொரு சம்பவத்தில், தென் மேற்குப் பகுதி ரயில் தண்டவாளங்கள் நாசமாக்கப்பட்டிருந்தன. இவற்றால் ரயில் திணைக்களத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


எழுபதுகளில் ஆரம்பித்து அடுத்து வந்த பத்தாண்டுகளாக கிரீசை அதிர வைத்த நவம்பர் 17 என்ற புரட்சி இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தொண்ணூறுகளின் இறுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கிரீசில் இனிமேல் தீவிரவாதம் தலையெடுக்காது என்றே பலரும் நம்பி இருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ், கடந்த டிசம்பர் மாதம் தினசரி கலவரங்களை சந்தித்து வந்தது. கலவரங்களில் சில தீவிரவாத இளைஞர்கள் மட்டும் அல்லாது, பொது மக்களும் கணிசமான அளவில் பங்கு பற்றி இருந்தனர்.

பொலிசிற்கு கல்லெறியும் 12, 13 வயது சிறுவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. தமது பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், தவிர்க்கவியலாது பெற்றோரும் அரச எதிர்ப்பு கலவரங்களில் பங்கேற்றனர். அரசு நிலமையை பொறுமையாக கையாண்டது. "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கலகம் செய்வார்கள்? அவர்களே களைத்துப் போய் கைவிட்டு விடுவார்கள்." என்று கணக்குப் போட்டது. வீதிகளில் பொலிசிற்கு கல் வீசும் போராட்டம் தற்போது ஓய்ந்து விட்டது உண்மை தான். ஆனால் அதுவே சில இளைஞர்களை ஆயுதமேந்தி போராடும் நிலைக்கு தள்ளி உள்ளது. "இந்த புதிய தலைமுறை புரட்சியாளர்கள் மிகவும் தீவிரமானவர்கள். அதனால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் போர் வெடிக்கலாம்." என பல கிரேக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Death threat to Greek media as terrorists plot bomb havoc
Greek terror group: Citibank attacked over crisis

Friday, March 13, 2009

போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா?

பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது.

சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரேமதுங்கே எழுதிய இறுதி வரிகள் இங்கே ஞாபகமூட்டத் தக்கவை: "பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."

விக்கிரமதுங்கே இந்த வரிகளை தான் கொல்லப்பட்ட பின்னர் பிரசுரிக்குமாறு, தனது கணனியில் விட்டு விட்டு சென்றுவிட்டார். தனது மரணம் சம்பவிக்கப் போகின்றது என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதற்கு யார் காரணம் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. இலங்கை அரசே பொறுப்பு என்பதற்காக, தனது மரணசாசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிட்டு எழுதி இருந்தார். சுமார் கால் நூற்றாண்டு காலமாக லசந்தவும், மகிந்தவும் நண்பர்கள் என்பது அந்த சாசனத்தை படித்த பின்பு தான் அவரின் வாசகர்கள் பலருக்கு தெரிந்தது. உண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். "எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."

அமெரிக்காவில் புஷ் நிர்வாகத்தின் கீழ் நடந்ததைப் போல, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சட்டத்திற்கு மதிப்பளிப்பதை இலங்கை நிறுத்தி விட்டது. 1983 ம் ஆண்டில் இருந்து தமிழ்ச் சிறுபான்மை தனியரசு கோரி நடத்திய போராட்டத்தில் இதுவரை 70000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானோர் பொது மக்கள். 2004 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், 14 ஊடகவியலாளர்கள் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் கூட வடக்கு கிழக்கில் சுமார் 15000 சதுர கி.மீ. பரப்பு நிலத்தை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கே ஒரு இறைமையுள்ள நாட்டிற்கே உரிய அனைத்து நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் தளராத இராணுவ நடவடிக்கை, அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்தை சில நூறு கிலோ மீட்டருக்குள் சுருக்கி விட்டது.

ஒரு சில வாரங்களுக்குள், தமிழ்ப் புலிகளின் நிழல் இராச்சியப் பகுதிகள் மறைந்து போகலாம். கேள்விகேட்காமல் கீழ்ப்படிய வைப்பதற்காக, தமிழரையும் கொன்றது மட்டுமல்ல, அவர்களது தற்கொலைக் குண்டுதாரிகளால் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதையே காரணமாக காட்டி, இலங்கை அரசு 1983 க்கு முன்பிருந்த நிலைமைக்கு திரும்ப வேண்டுமென்று நியாயப்படுத்த முடியாது. தமிழர்கள் கிளர்ச்சிக்கு நியாயமான காரணங்களை கொண்டுள்ளனர். தமிழ் பேசும் இந்துக்கள் இலங்கையின் சிக்கலான இன விகிதாசார சமூகத்திற்குள் வாழ்ந்து வந்தனர். ஆனால் மொத்த சனத்தொகையில் 12 வீதத்தையே கொண்டுள்ளனர். 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை முழுவதையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் வரை, தமிழர்கள் சிங்களம் பேசும் பௌத்த பெரும்பான்மையினருடன் சுமுகமான உறவைப் பேணி வந்தனர். ஆனால் அந்தக் காலகட்டத்தின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது.

பிரிட்டிஷாரின் வழக்கமான பிரித்தாளும் கொள்கையின் கீழ், கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்ச் சிறுபான்மையினர் சார்பாக நடந்துகொண்டனர். அதற்கெதிரான சிங்கள அதிருப்தி வளர்ந்து, 1939 ல் கலவரம் ஏற்பட வழிவகுத்தது. கலவரத்தில் தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். 1948 ல் சுதந்திரம் வந்த பின்னர், சிங்களவர்கள் தமது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக அனுமதியிலும், அரச தொழில்களிலும் தமது இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினர். அதே நேரம் சிங்களம் மட்டுமே தேசிய மொழியாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் தேசியவாதங்கள் கூர்மையடைந்த வேளை, 1960 களிலும், 1970 களிலும் தமிழ் விரோத கலவரங்கள் ஏற்பட்டன.


1970 ன் இறுதியில், வட- கிழக்கில் தமிழ் நிழல் அரசு ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது. 1983 ல் யுத்தம் வெடித்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ்ப் புலிகள், போட்டித் தமிழ் பிரிவினைவாத குழுக்களை ஒழித்துக் கட்டியதுடன், தமிழ் மக்களை தமது முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னர், இறுதியில் தமிழ்ப் புலிகளின் இராணுவம் நசுக்கப்பட்டதன் பின்னர், இலங்கை அரசு (நடைமுறையில் சிங்கள அரசு) வெற்றியடைந்துள்ளது. ஆனால் 12 வீத தமிழர்கள், இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கு இதுவே ஏற்ற தருணம். ஆனால் அது நடக்கப் போவதாக தெரியவில்லை.

சிங்கள தேசியவாதம் எதையும் சகித்துக் கொண்டதில்லை, தற்போது வெற்றி பெற்ற மமதை அதனை ஊக்குவிக்கும். மேலதிகமாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் "தேசிய பாதுகாப்பு அரசு" துரித வளர்ச்சி கண்டுள்ளதுடன், ஜனநாயகத்தை தகர்த்து, எதிர்க்கருத்தாளரை வாயடைக்கப் பண்ணியுள்ளது. அதனால் வடக்கில் கெரில்லாப் போராட்டம் திரும்புவதுடன், அரசினதும் தமிழ் தீவிரவாதிகளினதும் கொலைகள் தொடரும் என்று எதிர்வுகூரலாம்.

- Gwynne Dyer is a London based independent journalist whose articles are published in 45 countries.

Thanks to: Cyprus Mail 5/03/2009

Gwynne Dyer's web site