Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு


[தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : ஏழு)
"இஸ்ரேலின் (முதலாவது) பிரதமர் மெனகம் பெகின் ஒரு பாசிஸ்ட்!" - பிரபல யூத விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Letter to the New York Times, December 4, 1948)
"யூத தேசக் கோட்பாடு, யூத மதத்திற்கே பாதகமாக அமையும்... யூதர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதை விட, அரேபியருடன் சமாதான சகவாழ்வு வாழ்வதே மேல்..." - Albert Einstein (April 17, 1938, in a speech at the Commodore Hotel in New York City)
[Einstein on Israel and Zionism: His Provocative Ideas About the Middle East, by Fred Jerome, (New York: St. Martin’s Press, 2009)]

"நாடற்ற மக்களுக்கு, ஒரு மக்களற்ற நாடு காத்திருக்கின்றது." சியோனிசவாதிகளின் இத்தகைய பிரச்சாரங்களை செவிமடுத்த ஐரோப்பிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனம் யாருமே வாழாத பாலைவனப் பிரதேசம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். பாலஸ்தீனத்தின் (இன்றைய இஸ்ரேல்) தென் பகுதியில் மட்டுமே (நகேவ்) பாலைவனம் உள்ளது என்பதும், பிற பகுதிகள் பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஐரோப்பிய யூதர்கள் குடியேறுவதற்கு முன்னரே, பாலஸ்தீன ஒரேஞ் பழங்கள் ஐரோப்பிய சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தாம் வந்த பின்னரே, பாலைவனத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, இஸ்ரேலில் குடியேறி வாழும் யூத பாமரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத பாமரர்களின் அறியாமையை, சில படித்த தமிழர்களும் பிரதிபலிக்குமளவுக்கு, அது ஒரு பிரச்சார உத்தியாக முன்னெடுக்கப் பட்டது.
1891 ல், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து பாலஸ்தீனம் சென்று வந்த யூதரின் வாக்குமூலம் இது:
"இஸ்ரேல் யாருமே வாழாத பாலைவனம் என்று, இஸ்ரேலுக்கு வெளியே வாழும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு சில அரேபிய நாடோடிக் குழுக்கள், கழுதைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். அங்கே நிலம் யாருமே வாங்காமல் தரிசாக கிடப்பதாக கருதுகிறோம். ஆனால் உண்மை அதற்கு எதிர்மறையானது. செம் (நோவாவின் புதல்வன்) மின் வழித்தோன்றல்களான அரேபியர்களும் புத்திசாலிகள் தான்...." (ரஷ்ய யூதரான
Asher Ginzberg எழுதிய நூலில் இருந்து.)

அன்றைய பாலஸ்தீனாவின் சனத்தொகை விகிதாசாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:
முஸ்லிம்கள் 600000
கிறிஸ்தவர்கள் 70000
யூதர்கள் 80000
(பாலஸ்தீன யூதர்கள் 80000 பேர் மட்டில் அங்கே வாழ்ந்து வந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய யூதர்கள் மட்டுமே வாழ்ந்ததாக, ஐரோப்பாவில் சியோனிசவாதிகள் பரப்புரை செய்தனர்.)

மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 60 % பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் யூத விவசாயிகளும் அடக்கம். ஜெருசலேம் ஆண்டு தோறும், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புனித நகராகும். ஆகவே ஜெருசலேமில் வாழ்ந்த மக்கள் சுற்றுலாத் துறையால் நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். யூதர்கள் விவசாயிகளாக மட்டுமல்லாது, அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் போன்ற பதவிகளையும் வகித்து வந்தனர். பாலஸ்தீனத்தில் அரைவாசி காணிகள், முஸ்லிம் நிலவுடமையாளர்களின் சொத்தாக இருந்தது. அவர்கள் தமது நிலத்தை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, பெய்ரூட், டமாஸ்கஸ், இஸ்தான்புல் போன்ற நகரங்களில் சுக போகமாக வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தின் தலைஎழுத்தை மாற்றியதில் இந்த நிலவுடமையாளர்களுக்கும் பங்குண்டு.

முதலாம் உலகப்போரில், பாலஸ்தீனத்தை ஆட்சி செய்து வந்த துருக்கி (ஓட்டோமான் சாம்ராஜ்யம்) தோல்வியுற்றது. பலவீனமடைந்த துருக்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக அரேபியர்கள் விடுதலைப் போரை நடத்தினார்கள். அரபு விடுதலைப் போராளிகளுக்கு பிரித்தானியா ஆயுத விநியோகம் செய்தது. (பார்க்க : Lawrence of Arabia திரைப்படம்) ஆனால் துருக்கியர்கள் வெளியேறிய உடனேயே, பிரிட்டன் பாலஸ்தீனாவை காலனிப்படுத்தியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக பாலஸ்தீன தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அன்று அரேபியரும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினார்கள். பாலஸ்தீன தேசிய காங்கிரஸ், லிபரல் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயகக் கட்சிகள், சுதந்திர பாலஸ்தீனத்தை பொறுப்பேற்க தயாராக இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்கின. பாலஸ்தீன எழுச்சியை நிரந்தரமாக ஒடுக்குவதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனதில் ஒரு சூழ்ச்சித் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

Mawat Land Ordinance (1920), என்ற நிலவுரிமைச் சட்டம் யூத குடியேற்றங்களை இலகுவாக்கியது. அந்த சட்டத்தின் படி, தொடர்ந்து மூன்று வருடங்கள் பயிர் செய்யப்படாத நிலம் அரசுடமையாகும். மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் யூத முதலாளிகளின் நிதியில் இயங்கிய "யூத தேசிய நிதியம்", சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன நிலங்களை வாங்கியது. அரபு நிலவுடமையாளர்களும் நல்ல விலைக்கு நிலங்களை விற்று விட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கி விட்டனர். யூத தேசிய நிதியம் வாங்கிய நிலங்களில், கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றம் இடம்பெற்றது. உண்மையில் பிரிட்டனும் அதை விரும்பியது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பல்போர் எழுதிய பிரகடனம், யூதர்களை தனி இனமாகவும், இஸ்ரேலை அவர்களுக்கான தேசமாகவும் ஏற்றுக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட காலப்பகுதியில், மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 2 % மட்டுமே யூதர்கள்! ஆனால் பல்போரின் நோக்கம் வேறு. அமெரிக்க யூத முதலாளிகளின் முதலீட்டில், ரஷ்ய யூதர்களை குடியேற்ற விரும்பினார். இதனால் பிரிட்டனுக்கு என்ன இலாபம்? அமெரிக்க யூதர்களிடம் இருந்து கடன் பெறலாம். அப்போது தான் உருவாகியிருந்த கம்யூனிச ரஷ்யாவில் இருந்து யூதர்களைப் பிரிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இல்லை, மூன்று மாங்காய்கள் விழுந்தன. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.

யூத குடியேற்றங்கள் அன்று கிப்பூத்ஸ் (Kibbutz) என்று அழைக்கப்பட்டன. அதாவது கூட்டுறவுப் பண்ணைகள். கிப்பூத்ஸ் உறுப்பினர்கள், சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல. பலதரப்பட்ட தொழில்நுட்ப அறிவு படைத்தோராகவும் இருந்தனர். கைத்தொழில் பட்டறைகள், சிறு தொழிற்சாலைகள் என்பன கூட்டுறவுப் பண்ணையில் தோன்றின. எந்த தேவைக்காகவும் அவர்கள் பண்ணையை விட்டு வெளியேறத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைத்தன. ஆரம்ப கால கிப்பூத்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். மேற்கு ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறுவதை விட, அமெரிக்கா செல்வதையே விரும்பினார்கள். கிழக்கைரோப்பிய யூதர்களும் அவர்களை பின்பற்றி அமெரிக்கா சென்று கொண்டிருந்தார்கள். சாதாரண மனிதர்கள் எப்போதும் தொழில் வாய்ப்பை, பணத்தை தேடித் தான் ஓடுவார்கள். யூதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழத்தமிழர்கள் எதற்காக இந்தியா செல்வதை விட, செல்வந்த நாடுகளுக்கு சென்று குடியேறுவதை விரும்புகிறார்கள்? ஒரு சாதாரண இந்திய இளைஞன், அமெரிக்கா சென்று வாழ விரும்புவானா, அல்லது ஆப்பிரிக்கா சென்று வாழ விரும்புவானா? அன்று யூதர்களிடம், "இஸ்ரேலில் குடியேற வருகிறீர்களா?" என்று யாராவது கேட்டால், பைத்தியம் என்று நினைப்பார்கள். "அங்கே சென்று என்ன செய்வது? வேலை கிடைக்குமா?" என்று பதில் கேள்வி போடுவார்கள். அதனால் அவர்களுக்கு வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. "யூதர்கள் தமது மத நம்பிக்கை காரணமாக, அல்லது கொள்கைப் பிடிப்பு காரணமாக இஸ்ரேலுக்கு செல்ல விரும்பினார்கள்." என்பதெல்லாம் சியோனிஸ்ட்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகள். ஆனால், ஹிட்லரின் யூத இனவழிப்புக்கு பிறகு, பெருமளவு யூதர்கள் உணர்வுபூர்வமாக இஸ்ரேல் செல்ல விரும்பியது உண்மை தான். அப்போதும் இஸ்ரேலுக்கு சென்றவர்களை விட, அமெரிக்கா சென்றவர்களே அதிகம். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழ்பவர்களை விட இரண்டு மடங்கு யூதர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றார்கள்.

சியோனிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள் பல ரகசியத் திட்டங்கள் வைத்திருந்தார்கள். கூட்டுறவுப் பண்ணைகளில் வசித்த குழந்தைகளுக்கு ஹீபுரு மொழி வகுப்புகளை நடத்தினார்கள். அவர்களது பாடத்திட்டம், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கல்விக்கு போட்டியாக அமைந்தது. யூதர்கள் மூடப்பட்ட கல்விக் கூடங்களில் ஹீபுரு மொழி பயின்றது மட்டுமல்ல, மொழியோடு கூடவே தேசியவாதத்தையும் வளர்த்தனர். பாலஸ்தீனர்கள் ஆங்கிலக் கல்வி கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். ஆனால் தமது சமூகத்திற்கென தனியான அரபு வழிக் கல்வியைக் கொண்டிருக்கவில்லை. அன்று பிரிட்டிஷார் அதற்கு அனுமதிக்கவுமில்லை. அதனால் பாலஸ்தீன தேசியவாதம் தோன்ற நீண்ட காலம் எடுத்தது. அது பிற்காலத்தில், யூத பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. "பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் பாலஸ்தீன தேசியவாதத்தை வளர்த்தது.

இலங்கையின் இனப்பிரச்சினையும் இதே மாதிரியான மூலத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்திலேயே, பௌத்த சங்கங்கள் சிங்கள மொழிக் கல்வியளித்து வந்தன. சிங்களத் தேசியவாதமும் கூடவே வளர்ந்தது. பாலஸ்தீனரைப் போலவே, தமிழர்களும் ஆங்கிலம் கற்ற மத்திய தர வர்க்கமாக பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். அதனால் அன்று தமிழ்த் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழல் நிலவவில்லை. அது பிற்காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. இனப்பிரச்சினை தீவிரமடைந்த பின்னரே, "தமிழர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் உருவாகின. தமது புலம்பெயர் வாழ்வுக்கு, "யூதர்களை உதாரணமாக காட்டுவது" தமிழர்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களும் அவ்வாறே சொல்லிக் கொள்கின்றனர். (பாலஸ்தீனர்கள், தாமும் யூதர்களைப் போல இரண்டாயிரம் வருடம் காத்திருந்தேனும் பாலஸ்தீனம் அமைக்கப் போவதாக சபதமெடுக்கின்றனர்.)

கிப்பூத்ஸ் பண்ணைகள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கிக் கொண்டிருந்தன. மேற்குலக யூத நிறுவனங்கள் இரகசியமாக ஆயுதங்களைக் கடத்தி வந்தார்கள். கிப்பூத்ஸ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. முன்னர் ஒரு காலத்தில் "கிப்பூத்ஸ் ஆயுதக் குழுவாக" இருந்த "ஹகானா", பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாகியது. 1929 ம் ஆண்டு, ஜெருசலேம் நகரில், சீருடை தரித்த யூத இளைஞர்கள் இஸ்ரேலிய கொடியுடன் அணிவகுப்பு செய்த பொழுது, அரேபியருடன் கைகலப்பு ஏற்பட்டது. உண்மையில் கூட்டுறவுப் பண்ணைகளில் என்ன நடக்கின்றது என்பது அரேபியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தமது அயலில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறுவதை, அரேபியர்கள் அச்சத்துடன் அவதானித்தார்கள். ஜெருசலேம் அணிவகுப்பு அந்த அச்சத்தை அதிகரித்தது. இதனால் அரேபியரும், யூதரும் ஆங்காங்கே மோதிக் கொண்டார்கள். பாலஸ்தீன யூதர்களும், இனவுணர்வு கொண்டவர்களாக ஐரோப்பிய யூதர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அரேபியர்களையும், யூதர்களையும் நிரந்தரமாக பிரித்து வைத்த மகிழ்ச்சியில் பிரிட்டிஷ் கனவான்கள், ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், பிரிட்டனின் அனுமதி இன்றி பாலஸ்தீனாவில் குடியேறி இருக்க முடியாது. யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு தமது மூதாதையர் வாழ்ந்த இடம் என்ற உரிமை பாராட்டினார்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் அதனை ஐரோப்பியரின் காலனியாதிக்கமாக பார்த்தார்கள். ஏனெனில் பாலஸ்தீனாவில் வந்து குடியேறிய அனைவரும் வெள்ளை நிற ஐரோப்பியர்கள். யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக உரிமை பாராட்டிக் கொண்டு, சிங்களக் குடும்பங்கள் குடியேறி வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் எத்தனை ஆக்ரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் தேசியவாதிகள் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் நடப்பதாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். இதே போன்ற நிலையில் தானே அன்று பாலஸ்தீன அரேபியர்கள் இருந்திருப்பார்கள்?

அரேபியரின் எதிர்ப்புக் காரணமாக, மேலதிக யூதர்களின் வருகையை பிரிட்டன் தடை செய்தது. இரண்டாம் உலகப்போர் முடிவில், சைப்ரசில் இருந்து யூத அகதிகளை ஏற்றி வந்த கப்பல் கரையை அண்ட விடாமல் தடுத்தது. ஹைபா துறைமுகத்தில் நிறுத்தி வைத்த கப்பலை கிளம்ப விடாமல் தடுப்பதற்காக ஹகானா வைத்த குண்டு, நூற்றுக் கணக்கான அகதிகளை கொன்றதுடன் கப்பலை மூழ்கடித்தது. இந்தப் பிரச்சினை காரணமாக ஹகானாவுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையில் போர் மூண்டது. ஆனால், சர்வதேச அரங்கில், ஐ.நா. மன்றில் இஸ்ரேலை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேறியதால், பிரிட்டன் பாலஸ்தீனாவை விட்டு வெளியேறியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய புதிய வல்லரசுகளின் அழுத்தமும் அதற்கு முக்கிய காரணம். அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பின. அதனால் பாலஸ்தீன பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காணாமலே, பிரிட்டன் வெளியேறியது.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
6.
இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி : நான்கு )
மேலைத்தேய ஏகாதிபத்திய விசுவாசிகளான சில தமிழர்கள், அதே ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ஒடுக்கப்பட்ட யூதர்களை முன்னுதாரணமாகக் கொள்ளும் வினோதமான அரசியல் தோன்றியுள்ளது. பிரிட்டனும், அமெரிக்காவும் தமது ஏகாதிபத்திய நலன்களுக்காக இஸ்ரேல் என்ற அடியாளை உருவாக்கியது. இதன் மூலம் ஐரோப்பியர்கள் தமது கடந்த கால யூத அடக்குமுறைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டனர். அது ஒன்றும் இதயசுத்தியுடனான பாவவிமோசனம் அல்ல. ஐரோப்பிய நரிகளின் குள்ள புத்தியில் உதித்த யோசனை அது. ஐரோப்பிய கண்டத்தினுள் இஸ்ரேல் என்ற தேசம் உருவாவது தடுக்கப்பட்டது. அதே நேரம் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த அரபு நாடுகளுடன், யூதர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்தார்கள். கடந்த 60௦ வருடங்களாக, நிரந்தர யுத்தத்தில் சிக்குண்டு மரணிப்பது அரபுக்களும், யூதர்களும் தான். மேற்கத்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியை அறியாது, (அல்லது தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாது) தமிழர்களை யூதர்களின் உதாரணத்தை பின்தொடர வருமாறு அழைக்கின்றனர்.

"யூதர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்கள் இஸ்ரேல் என்ற தாயகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்." போன்ற புராணக் கதைகளை ஒதுக்கி விட்டு அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை இது. நாடிழந்து நாடோடியாக அலைவதற்காக, நரிக்குறவர்களும் தாயக உரிமை கோரி ஐ.நா.வில் மனுப் போடலாம். மத்திய அமெரிக்காவில், எட்டு நாடுகளில் வாழும், எட்டு மில்லியன் மாயா மக்களுக்கு ஒரு தேசமில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பானிய காலனியதிக்கவாதிகள் மாயாக்களின் தேசத்தை அழித்து, அந்த மக்களை அடிமைகளாக்கினார்கள். இவை சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன. முன்னாள் காலனிய எஜமானான ஸ்பெயின் தலையிட்டு மாயாக்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று யாரும் ஐ.நா. சபையில் குரல் எழுப்பவில்லை.

யூதர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்ததாக கூறப்படும் அதே காலத்தில் தான், இந்திய உப கண்டத்தில் இருந்து ரோமா இன மக்கள் வெளியேறினார்கள். ரோமா இன மக்களும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்களைப் போலவே அவர்களும் மோசமாக அடக்கப்பட்டார்கள், ஈவிரக்கம் பாராது படுகொலை செய்யப்பட்டனர். ஜெர்மன் நாஸிகள், லட்சக் கணக்கான ரோமா மக்களையும் நச்சு வாயு பிரயோகித்து இனவழிப்பு செய்தார்கள். ரோமா இன மக்களுக்கு தனி நாடு வேண்டுமென்று யாரும் வாதாடுவதில்லை. இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் நியாயவான்களும் இந்த விஷயத்தில் மூச்சு விடுவதில்லை. (தெரிந்தெடுத்த சில இனங்களுக்கு மட்டுமே இவர்கள் சுயநிர்ணய உரிமை கோருவார்கள்.) இஸ்ரேலின் உதாரணத்தை பின் தொடர்ந்து, ஐரோப்பாவில் இனவழிப்பில் எஞ்சிய ரோமா இன மக்களை கூட்டிச் சென்று இந்தியாவில் குடியேற்றியிருக்க முடியாதா? இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஒரு பகுதியை ரோமா மக்களின் தாயகமாக அங்கீகரித்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத இந்திய தேசியவாதிகள், "ரோமா தேசிய அரசை" ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க அரசு நிதி, ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, இந்தியாவில் அத்தகைய குட்டி அரசை தக்க வைத்திருக்கலாம். அது "இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை போல", இந்திய உப கண்டத்தில் தீராத யுத்தத்தை கொண்டு வந்திருக்கும்.

யூதர்களின் பிரச்சினை, ஒரு ஐரோப்பியரின் பிரச்சினை. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அல்லது வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்து கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொணா அடக்குமுறைகளை சந்தித்துள்ளனர். யூதர்கள் ஐரோப்பாவில் மட்டும் வாழவில்லை. மத்திய ஆசியாவிலும், அரபு நாடுகளிலும், சுருக்கமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்கெல்லாம் ஐரோப்பாவில் இருந்த அளவுக்கு, மோசமான அடக்குமுறை நிலவியதாக எந்தவொரு வரலாற்று சான்றும் கிடையாது. அப்படிக் கூறுபவர்கள் இதுவரை ஒரே ஒரு ஆதாரத்தையேனும் காட்டவில்லை.(சிலுவைப்போர் காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை ஒரு கட்டுரையாளர் எடுத்துக் காட்டினார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஜெருசலேம் கிறிஸ்தவ நாடாக இருந்த உண்மையை மட்டும் மறைத்து விட்டார்.)

ஏன் ஐரோப்பாவில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்டது போல அரபு நாடுகளில் நடக்கவில்லை? யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளே அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் புனித நூலின் மக்களாக கருதினார்கள். திருக்குர்ஆன் அவர்களை சகோதர மதத்தவர்களாக நடத்தக் கோரியது. இஸ்லாமிய கலீபாக்கள், அந்த மதங்களை சேர்ந்தவர்கள் மீது வரி மட்டும் விதித்தார்கள். அதனால் தான், ஸ்பெயினை கத்தோலிக்க படைகள் கைப்பற்றிய நேரம் யூதர்கள் இஸ்லாமிய மொரோக்கோவில் அகதித் தஞ்சம் கோரினார்கள்.

அன்றைய ஐரோப்பாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மத சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ ஐரோப்பாவில் வாழ்ந்த பிற மதத்தவர்கள் யூதர்கள் மட்டுமே. "எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த அல்லது கொலை செய்த பாவிகள் யூதர்கள்" என்று தேவாலயங்களில் கிறிஸ்தவ பாதிரிகள் பிரசங்கம் செய்தனர்.

உதாரணத்திற்கு விவிலிய நூலில் இருந்து சில மேற்கோள்கள்:
You suffered from your own countrymen the same things those churches suffered from the Jews, who killed the Lord Jesus and the prophets and also drove us out. They displease God and are hostile to all men in their effort to keep us from speaking to the Gentiles so that they may be saved. In this way they always heap up their sins to the limit. The wrath of God has come upon them at last. (1 Thessalonians 2:14-16)
I will make those who are of the synagogue of Satan, who claim to be Jews though they are not, but are liars - I will make them come and fall down at your feet and acknowledge that I have loved you.(Revelation 3:9)
ரோமர்களின் காலத்தில் யூதர்கள் மீது அவ்வளவு வெறுப்பு இருந்ததில்லை. ஆயினும், யூதர்களின் வினோதமான பழக்க வழக்கங்களையிட்டு, ரோமாபுரியின் குடிமக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ரோமர்களின் குறிப்புகளில் இருந்து தெரிய வருவதாவது:
"ரோமாபுரியில் குடியேறிய முதலாவது தலைமுறையை சேர்ந்த கிரேக்க, ஆப்பிரிக்க, ஜேர்மனிய மக்கள் மட்டுமே தமது தாயகத்தில் இருந்து எடுத்து வந்த பண்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் சில காலம் அவற்றை பின்பற்றலாம். ஆனால் படிப்படியாக ரோமாபுரி பிரஜைகளாக இயைபாக்கம் அடைகின்றனர். தமது தாயகத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். இரண்டாவது தலைமுறை தன்னை ரோமர்களாக அடையாள படுத்துகின்றது. யூதர்கள் அதற்கு மாறாக தமது குடியிருப்புகளுக்குள் ஒதுங்கிக் கொள்கின்றனர். தமது மூதாதையரைப் போன்ற வாழ்க்கை நெறிகளின் படி வாழ்கின்றனர். தலைமுறை தலைமுறையாக ரோமர்களுடன் ஒன்று கலக்காது ஒதுங்கி வாழ்கின்றனர்." (Cassius Dio,ரோமாபுரியின் சரித்திரம் 17,1-2)
மேலேயுள்ள வாக்கியங்களை வாசிக்கும் பொழுது இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் பற்றி, இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. அன்று யூத மதம் கிறிஸ்தவத்திற்கு அடுத்த சிறுபான்மையின மதமாக இருந்தது. இன்று அதே இடத்தை இஸ்லாம் பிடித்துள்ளது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட யூதர்களில் எஞ்சியவர்களை இஸ்ரேலில் கொண்டு சென்று குடியேற்றி விட்டார்கள். அதனால் இன்றைய தீவிர வலதுசாரிகளின் பார்வையில், யூதர்களை விட இஸ்லாமியர்களே ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.

இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களுக்கும், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கும் இடையில் என்ன ஒற்றுமை? வரலாறு கூறுவதன் படி, இஸ்ரேலியரின் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டது. அதனால் அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியான ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். அதாவது தங்கள் தாயகத்தை அழித்த எதிரியின் தேசத்தினுள் தான் அகதிகளானார்கள். (கி.பி. 637 ல் இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்பு தான் முதன் முதலாக இஸ்ரேலிய பகுதியை, ரோம சாம்ராஜ்யத்தில் இருந்து துண்டித்தது. பிற்காலத்தில் போப்பாண்டவர், சிலுவைப் படைகளை அனுப்பி இழந்த ஜெருசலேமை மீட்டெடுத்தார்.)

தமிழர்களை யூதர்களை ஒப்பிட்டு வரும் அரசியல் அறிஞர்கள், சிங்கள தேசத்தினுள் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் அகதிகளை மனதில் கொண்டு சொல்லவில்லை. கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு புலம்பெயர்ந்த மக்களை குறித்தே பேசுகின்றனர். இஸ்ரேலை ரோம ஏகாதிபத்தியம் அழித்தது போல, தமிழீழத்தை சிங்கள ஏகாதிபத்தியம் அழித்தது. "சிங்கள ஏகாதிபத்தியம்" என்பது வழக்கமாக தமிழ் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொற்தொடர். ரோம சாம்ராஜ்யத்தில் அகதிகளாக அலைந்த யூதர்களை போல, மலையகத்திலும், கொழும்பிலும் பெருந்தொகை தமிழர்கள் (இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7 %) இன்னலுறுகின்றனர். ஆகவே, இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றி, அவர்கள் எதிர்கால ஈழத்தை நோக்கி அணிதிரட்டப் படுவார்கள் என நம்புவோமாக.

ரோமாபுரியின் தலைநகரில் வாழ்ந்த யூதர்கள் கூட, ரோம ஏகாதிபத்திய விசுவாசமாக இருந்ததில்லை. ரோமர்கள் எத்தனை அடக்குமுறைகளை பிரயோகித்த போதிலும், ஒரு யூதர் கூட ரோமர்களின் மதத்தை தழுவவில்லை. யூதர்கள் ஹீபுரு பேசுவதை மறந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஹீபுரு மொழிப் பெயர்களை மட்டுமே சூட்டினார்கள். அன்று யூதர்கள் வாழ்ந்த மேற்கத்திய நாடுகளில், இன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையோ, யூதர்களுக்கு எதிர்மாறானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை. ஆங்கில மொழி, அல்லது ஐரோப்பிய உச்சரிப்பு கொண்ட பெயரிடுவது பரவலாக காணப்படுகின்றது. இதனால் இரண்டாவது தலைமுறை தமிழர்களை, பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. தமிழ் பேசுவதை கைவிடும் இரண்டாவது தலைமுறை, ஐரோப்பிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விடும்.

யூதர்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகள், எப்போதும் அடக்குமுறை இயந்திரங்களாகவே இருந்தன. யூதர்களின் இரண்டாயிரம் வருட புலம்பெயர் வாழ்வில், ஒரு ஐரோப்பிய அரசு கூட அவர்களிடம் இரக்கம் காட்டியதில்லை. இன ஒடுக்குமுறையால், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒரு நாளும் மேற்கத்திய விசுவாசிகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. யூதர்கள் ஐரோப்பியர்களை அரக்கர்களாக கருதி வெறுத்திருந்தால், அந்த உணர்வு புரிந்து கொள்ளத் தக்கதே. யூதர்கள், கொடுமைக்கார ஐரோப்பியர்கள் வசிக்காத பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பியிருந்தால், அதுவும் புரிந்து கொள்ளத் தக்கதே. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள், யூதர்களை விட முற்றிலும் மாறுபட்ட குணாம்சத்தை கொண்டுள்ளனர். ஐரோப்பிய குடியுரிமை கிடைத்தவுடனே விருந்து வைப்பார்கள். தாம் குடியேறிய ஐரோப்பிய நாட்டிற்கான விசுவாசத்தை காட்டும் வண்ணம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். சுவிட்சர்லாந்தில் பிறந்த குழந்தைக்கு "சுவிஸ்த்ரா", டென்மார்க்கில் பிறந்த குழந்தைக்கு "டேனிஷா". இவ்வாறு சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. தமிழீழத் தனியரசை அழித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் கூட, தமிழர்கள் அகதிகளாக அலைகின்றனர். ஆனால் எத்தனையோ தமிழர்கள் தம்மை மேற்குலக விசுவாசிகளாக காட்டிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

(தொடரும்)

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : மூன்று )

"அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாக" கூறும் இந்துத்வா பரப்புரை போல, "ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு ஒமார் மசூதி கட்டியதாக" சியோனிசவாதிகள் கூறுகின்றனர். ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்லாமியர்கள், அங்கிருந்த யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு மசூதி கட்டியதாகவும், அதற்கு இஸ்லாமியப் படையெடுப்பை நிகழ்த்திய ஒமாரின் நாமம் சூட்டப்பட்டதாகவும் ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. யூதர்களையும், இஸ்லாமியர்களையும் மோத விட்டு குளிர்காயும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு சில தமிழர்களும் இரையாகியுள்ளனர். வரலாற்றை திரிபுபடுத்தி புனையப்பட்ட இந்தக் கதை, இஸ்லாமியர் மீதான பகைமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ரோமர்கள் இடித்த யூத ஆலயத்தை, இஸ்லாமியர் இடித்தாதாக கூறுவது ஒரு வரலாற்று மோசடி. அதிலும் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது "ஒமாரின் மசூதி" என்பது காதிலே பூச்சுற்றும் வேலை. அது ஒரு மசூதியல்ல. அதைக் கட்டியது ஒமாருமல்ல.

கி.மு. 70 ல் ரோமர்களால் ஜெருசலேம் தரைமட்டமாக்கப் பட்ட பொழுது, யூதர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெருசலேமில் ரோமர்களின் அடிச்சுவட்டில் கிறிஸ்தவ ராஜ்ஜியம் பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது. கி.பி. 638 ல் இஸ்லாமியப் படைகள் ஜெருசலேமை வந்தடைந்தன. ஜெருசலேமில் மிகப் புனிதமான, இயேசுவின் தேவாலயத்தை நிர்வகித்த தலைமைப் பாதிரியார் சொப்ரோனியுஸ், இஸ்லாமியப் படைகளின் தளபதி ஒமார் முன்னிலையில் சரணடைய சம்மதித்தார். சொப்ரோனியுஸ் ஒமாருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களின் அருகில் முஸ்லிம்கள் நடமாட முடியாது என்றும், அதே நேரம் யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க முடியாது என்றும் எழுதப்பட்டது. ("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy) இஸ்லாமிய மதத்தில் புனித நகரான ஜெருசலேத்தின் தனித்துவம் முஸ்லிம்களால் மதிக்கப்பட்டது. ஆனால் யூதர்கள் வசிக்க முடியாது என்ற வாக்கியம் ரோமர்களின் சட்டத்தை அடியொற்றி கிறிஸ்தவ பாதிரிகளால் சேர்க்கப்பட்டது.

இஸ்லாமியத் தளபதி ஒமார், ஜெருசலேமில் இயேசுவின் தேவாலயத்தை பார்வையிட சென்ற பொழுது, தொழுகைக்கு நேரமாகி விட்டது. உடனே ஒமார் தொழுவதற்கு ஏற்ற இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தலைமைப் பாதிரி, தேவாலயத்தின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஒமார் கூறிய விளக்கம் இது: "நான் இந்த இடத்தில் தொழுகை நடத்தினால், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தேவாலயத்திற்கு உரிமை கோருவார்கள்." ஒமார் பின்னர் தேவாலயத்தின் வெளியே சென்று தொழுகையை நடத்தி முடித்தார். இன்றைய அல் அக்சா மசூதி அந்த இடத்திலேயே கட்டப்பட்டது. இந்தக் குறிப்புகளை அரபு-கிறிஸ்தவ சரித்திர ஆசிரியர் Said Batriq எழுதி வைத்துள்ளார்.
("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy)

Ka ' ab al Ahbar
என்ற, இஸ்லாமியராக மதம் மாறிய முன்னாள் யூத மதகுரு, யூதர்களின் இடிந்த ஆலயம் இருந்த இடத்தில் மசூதி கட்டுமாறு, ஒமாருக்கு வழிகாட்டினார். ஆனால் அந்த கோரிக்கையை மறுதலித்த ஒமார், யூத ஆலய இடிபாடுகளை மூடியிருந்த குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். (கிறிஸ்தவ ஆட்சிக் காலத்தில் அந்த இடம் பாரிய திறந்தவெளி குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டது.) யூத ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒமார் கட்டிய சிறிய மரத்தாலான மசூதி புனரமைக்கப்பட்டு, இன்று "அல் அக்சா மசூதி" என்று அழைக்கப்படுகின்றது.("The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy) உயரமான குன்றின் மேலே கட்டப்பட்ட குவிமாடம் ஒன்றை பலர் மசூதி என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரஹாம், தனது பிள்ளையை பலி கொடுக்க எத்தனித்த இடம் என்று நம்பப் படுகின்றது. ஒமாருக்கு பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தை ஆண்ட மாலிக்கின் காலத்தில் அந்த அழகான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் ஜெருசலேம் நகரின் அடையாளமாக விளங்கும் தங்க நிற குவிமாடத்தைக் கொண்ட கட்டிடம் ஒரு மசூதியல்ல என்ற உண்மை பலருக்கு தெரியாது. (http://nl.wikipedia.org/wiki/Rotskoepel)

சியோனிஸ்ட் பரப்புரையாளர்கள் : "உலகெங்கும் யூதர்கள் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள். அவர்களது சொந்த நாட்டில் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமியப் படையெடுப்பு." என்று கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர். கி.மு. 70 களிலேயே யூதர்களின் ஐரோப்பா நோக்கிய புலப்பெயர்வு நடந்தன என்ற எடுகோளுடன் முரண்படுகின்றது அந்தக் கருத்து. ரோமர்களில் காலத்திலேயே யூதர்களின் தேசம் தனது சுதந்திரத்தை இழந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வல்லரசால் "இஸ்லாமிய தாலிபான்" அரசு விரட்டப்பட்டது போல, கி.மு. 70 ல் ரோமர்கள் "யூத தாலிபான்" அரசை அகற்றினார்கள். (அன்றைக்கும் கடும்போக்கு யூத மத அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை, ரோமர்கள் படையெடுப்புக்கு காரணமாக அறிவித்தார்கள்.) ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முதல் எதிரியாக கருதிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அமெரிக்கர்களை வலிந்து அழைத்திருந்தனர். சோவியத் படைகள் வெளியேறிய சில வருடங்களில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. கிட்டத்தட்ட அதே போன்ற வரலாற்றைக் கொண்டவர்கள் தான் யூதர்களும். வரலாறு திரும்புகிறது என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

யூத மத அடிப்படைவாத அரசு, கிரேக்கர்களுடன் போரிட்டு விடுதலை அடைந்திருந்தது. அன்று அவர்களைப் பொறுத்த வரை, சிரியாவை தளமாக கொண்டு ஆதிக்கம் செலுத்திய கிரேக்க சாம்ராஜ்யமே முதல் எதிரியாக தெரிந்தது. யூத அரசு தனது இறைமையை பாதுகாப்பதற்காக, எங்கோ இருந்த ரோம சாம்ராஜ்யத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிரகாரம், "யூத அரசுக்கு ரோமாபுரி பாதுகாப்பு வழங்குமென்றும், ஒன்றின் எதிரி மற்றொன்றாலும் எதிரியாக கருதப்படும் எனவும், யுத்தத்தில் இரு தரப்பும் ஒரே பக்கத்தில் நின்று போரிடுவர் என்றும்," உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. (பார்க்க: 1 மாக்காபீ 8:23-28) ரோமர்களை நண்பர்களாக கருதி செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் யூத அரசின் பலத்தை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் சைமன் (கி.மு 140 - 4) என்ற தலைவர், மதகுருமார் பேரவையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். சைமன் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஆன்மீக தலைவரும் கூட. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமாரின் பேரவையில் முல்லா ஒமார் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவம் அது.

இன்று இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் இருப்பதைப் போல, சுதந்திர யூத தேசத்தை சூழ இருந்தவை அனைத்தும் கிரேக்க நாடுகள். கிரேக்கம் அரசு மொழியாக இருந்தது, ஆனால் வேறு மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்ந்தனர். அன்று பொதுவாக கிரேக்க மொழி பேசும் நாடுகளில் யூதர்கள் மீதான வெறுப்புக் (Anti Semitism) காணப்பட்டது. அது பிற்காலத்தில் கிரேக்கர்களால் கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டது. கிரேக்க சரித்திர ஆசிரியர் Diodorus Siculus பதிவு செய்த குறிப்புகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
"யூதர்கள் பிற இனக் குழுக்களை பகைவர்களாக கருதுகின்றனர். யூதர்கள் எகிப்தில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர்கள் தொழு நோயாளிகளையும், தேகத்தில் வெள்ளைப்புள்ளி கொண்டவர்களையும் சபிக்கப் பட்டவர்களாக கருதி எல்லைக்கு வெளியே விரட்டி விட்டார்கள். அகதிகளாக வெளியேறியவர்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பின்னர் தான் தம்மை யூதர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் மனித குலத்திற்கு எதிராக வெறுப்புக் கொண்ட காரணத்தால், வேடிக்கையான சட்டங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அந்நியர்களுடன் தமது ரொட்டியை பகிர்ந்துண்ண மாட்டார்கள்." (Diodorus Siculus 34-35,1)

மத்திய கிழக்கில் அலெக்சாண்டர் நிறுவிய கிரேக்க சாம்ராஜ்யம் அழிந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் மேற்கே தோன்றிய ரோம சாம்ராஜ்யம் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மத்திய கிழக்கில் கால் பதிக்க இடம் தேடிக் கொண்டிருந்த ரோமர்கள், யூதர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒரு வல்லரசை விரட்டிய யூத தேசம், இன்னொரு வல்லரசுக்கு அடிமையாகும் என்று அன்று யாரும் நினைக்கவில்லை. சுமார் நூறாண்டு கால சுதந்திரம், பொம்பியுஸ் என்ற ரோம தளபதியினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறு தேசங்களின் இறையாண்மை சாம்ராஜ்யவாதிகளின் நலன்களுக்கு குறுக்கே நிற்குமாயின், அந்த தேசங்கள் அழிக்கப்படும். இன்று தாலிபான்களை ஆப்கானிஸ்தானை அமெரிக்க ஏகாதிபத்தியம் இலகுவாக தூக்கி எறிந்தது போல, அன்று ரோம ஏகாதிபத்தியம் யூத தேசத்தை ஆக்கிரமித்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மத நம்பிக்கை போதும் என்று தாலிபான்கள் கருதியது போல, அன்றைய யூதர்களும் நம்பினார்கள்.

ரோம ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லாப்போர் நடத்திய யூதர்களின் சீலோட்
(Zealot) இயக்கம், நவீன பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். (Early History of Terrorism ) அன்றைய சீலோட் இயக்கத்திற்கும், நமது கால தாலிபானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு குழுக்களும் கடும்போக்கு மத அடிப்படைவாதிகளை கொண்டிருந்தன. தாமே உண்மையான மத நம்பிக்கையாளர்கள், இறைவன் தமது பக்கமே நிற்கிறார் என நம்பினார்கள். பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஒரு பெரிய வல்லரசு இராணுவத்தை வெளியேற்றலாம் என கருதினார்கள். அன்று ரோமர்களால் இறுதியில் சீலோட் கிளர்ச்சி அடக்கப்பட்ட பொழுது, அமைப்பில் இருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். பிற்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் சீலோட் அனுதாபிகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. சீலோட் சைமன் என்று பெயரிடப்பட்ட ஒருவரை விவிலிய நூல் குறிப்பிடுகின்றது. ஜூதாஸ் கூட சீலோட் பாணியில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், இயேசு அதற்கு மறுத்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு. ரோமர்களும் மிதவாத இயேசுவை ஹீரோவாக்கி, தீவிரவாத ஜூதாசை துரோகியாக்கி விட்டிருக்க சாத்தியமுண்டு. ஏகாதிபத்திய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி தான் இருக்கின்றது.

யூத தேசம் மீதான ரோம ஆக்கிரமிப்புப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக
ஜோசெபுஸ் என்பவர் எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. போரைப் பற்றிய சரித்திரத்தை அவர் மட்டுமே எழுதி வைத்துள்ளார். (The Jewish War )அவரின் எழுத்துகளை ஆராய்வதற்கு முன்னர், பின்வரும் தகவல்கள் முக்கியமானவை. முதலாவதாக அன்று இருந்த யூத தேசம் இஸ்ரேல் என்று அழைக்கப்படவில்லை. அதன் பெயர் யூதேயா. இரண்டாவதாக ஜோசெபுஸ் ரோமர்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிப்படையின் தளபதியாக இருந்தவர். போரின் நடுவில் ரோமர்களிடம் சரணடைந்து ரோம பிரஜையாக மாறியவர். அதனால் அன்றைய யூதர்கள் ஜோசெபுஸ் ஒரு துரோகி என்றழைத்தனர். மூன்றாவதாக, ஜோசெபுஸ் தனது நூலில் இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடுகின்றார். அதைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்பவர் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரமாக காட்டுகின்றனர். ஜோசெபுஸ் போன்றவர்கள் எழுதி விட்டதாலேயே, அவற்றை ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனெனில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரேக்கர்களுடன், ரோமர்களுடன் கூட்டுச் சேர்ந்த யூதர்கள். அதாவது அன்றைய யூதர்கள் கிறிஸ்தவத்தை "துரோகிகளின் மதம்" என அழைத்தனர்.

ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை நிர்மூலமாக்கிய ரோமர்கள், ஜெருசலேமை ரோம நகரமாக மாற்றினார்கள். அங்கே யூதர்கள் குடியேறக் கூடாது என தடையுத்தரவு போட்டனர். அது மட்டுமல்ல யூத வரி (Fiscus Judaicus) என்றொரு அநியாய வரி அறவிடப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு முன்னர் யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்திற்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். தற்போது சக்கரவர்த்தியின் உத்தரவுக்கிணங்க, ரோமாபுரியில் கட்டப்படும் ஜூபிட்டர் ஆலயத்திற்கு யூதர்கள் வரி கட்டினார்கள். இது சம்பந்தமாக ரோம வரித் திணைக்களத்திற்கு நிறைய முறைப்பாடுகள் வந்தன. சிலர் தாம் யூதர்கள் இல்லை என்று மறைத்தனர். யூதர்களை ஒத்த கலாச்சாரத்தை கொண்டிருந்த பிற மதத்தவரும் பாதிக்கப்பட்டனர். "ஒரு தடவை 90 வயது வயோதிபர் ஒருவர் (யூத மத சடங்கின் படி) சுன்னத்து செய்திருக்கிறாரா என, அதிகாரிகளின் முன்னிலையில் ஆடை அவிழ்த்து ஆராயப்பட்டதாக..." நேரில் கண்ட சாட்சியான Suetonius என்பவர் எழுதியுள்ளார்.

ஜெருசலேம் ஆலயத்தை நிர்மூலமாக்கிய காலகட்டத்தின் பின்னர் தான் யூதர்கள் உலகம் முழுக்க அகதிகளாக அலைந்தனர் என்று நினைப்பது தவறு. ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அலெக்சாண்டிரியா (எகிப்து), சிரேனே (லிபியா) ஆகிய நகரங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அன்று அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை, ஜெருசலேம் யூதர்களை விட பல மடங்கு அதிகம். அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் இரண்டாவது பெரிய நகரத்தின் மொத்த அரை மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் யூதர்கள். அலெக்சாண்டரியாவில் வாழ்ந்த யூதர்களும் ஆரம்பத்தில் ரோமர்கள் பக்கம் நின்றனர். இதனால் மனதில் வன்மம் கொண்ட கிரேக்கர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இனக்கலவரத்தில் இறங்கினார்கள். சிறு சச்சரவு கூட கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. எண்ணிக்கையில் அதிகம் என்பதால், சில நேரம் யூதர்களின் கை ஓங்கியிருந்தது. ஆனால் ரோம ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், கிரேக்க சமூகத்தின் சார்பாக இருந்தன. ரோமர்களின் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு யூதர்கள் எதிர்த்ததும் அதற்கு காரணம்.

கலவரங்கள் காரணமாக அலெக்சாண்ட்ரியா யூதர்கள், தலைநகரான ரோமாபுரிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதே நேரம் அங்கே ஏற்கனவே குடியேறிய யூத சமூகம் ஒன்றும் இருந்தது. ரோமர்களுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட மக்காபீக்களின் காலத்தில், பல ஜெருசலேம் யூதர்கள் ரோமாபுரியில் குடியேறினர். கி.மு. 63 ல், யூத தேசத்தை வெற்றி கொண்ட ரோம தளபதி பொம்பியுஸ், போர்க் கைதிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தான். இவர்களும் ரோமாபுரியில் வாழ்ந்த யூதர்களுடன் கலந்து விட்டனர். ரோம சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரம் காணப்பட்டது. யூதர்கள் அதைப் பயன்படுத்தி, ரோமர்களையும் தமது மதத்தில் மாற்றிக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ மத ஆதிக்கம் வந்த பின்னர் தான் மத மாற்றம் சட்டப்படி தடை செய்யப்பட்டது.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?
உசாத்துணை:
- "The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In" by Hugh Kennedy
- "Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations" by Martin Goodman
- "Vreemd Volk" by Fik Meijer

இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்


("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : இரண்டு)
"பைபிளை ஆதாரமாக கொண்டு இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை உரிமை கோருகிறார்கள்." கவனிக்கவும்: "ஆதாரம்", ஒரு மத நூலான பைபிள். இந்த வாதம் அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இராமாயணத்தை ஆதாரமாக கொண்டு இந்துத்துவவாதிகள் இராமர் அணைக்கும், பாபர் மசூதிக்கும் உரிமை கோருகின்றனர். மகாவம்சத்தை ஆதாரமாக கொண்டு பௌத்த-சிங்கள அடிப்படைவாதிகள், முழு இலங்கைக்கும் உரிமை கோருகின்றனர். விஞ்ஞானம், மெய்ஞானம் வளர்ச்சியடைந்த 21 ம் நூற்றாண்டிலும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய புராணங்களை ஆதாரமாக அடுக்குகிறார்கள். இதை எல்லாம் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் "தமிழ் சியோனிஸ்ட்கள்" ஏற்றுக் கொள்கிறார்களா?

விவிலிய நூலில் வரும் டேவிட் மன்னன் ஸ்தாபித்த ராஜ்ஜியம் பின்னர் இஸ்ரேல், ஜுதேயா என இரண்டாக உடைந்தது. யூதர்கள் என்றால், யூதேயா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பொருள்படும். பாபிலோனியர்களின் படையெடுப்பின் பின்னர் அந்த ராஜ்ஜியம் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. யூதர்களின் தேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதையிட்டு விவிலிய நூல் என்ன கூறுகின்றது? "பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களை எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்," என்று ஆண்டவர் ஜோசுவா என்ற தீர்க்கதரிசிக்கு அருள்வாக்கு வழங்கினார். இஸ்ரேலியர்களின் தீய செயல்களுக்கு தண்டனையாக ஆண்டவர் பாபிலோனியர்களை படையெடுக்க வைப்பார் என்று ஜோசுவாவின் தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டுள்ளது. “இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையை மறந்து பல தெய்வங்களை வழிபட்டது, யூதர்களின் கடவுளால் பொறுக்க முடியாத குற்றம்.” இத்தால் விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.

சியோனிச அரசியல் ஆதரவாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்திய பைபிள் கதைகளை வைத்து இஸ்ரேலுக்கு உரிமை கோரவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, கடைசி இஸ்ரேலிய அரசு, ரோமர்களால் தூக்கியெறியப் பட்டது. 1900 அல்லது 2000 வருடங்களுக்கு முன்னர் அது நடந்தது. அந்த கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை ரோம, கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். அந்த குறிப்புகளில் இருந்து மக்கபீ என்ற யூத அரசு (கி.மு.164 -63 ) இருந்துள்ளமை நமக்குத் தெரிய வருகின்றது. யார் இந்த மக்காபீ? சுருக்கமாக சொன்னால். அந்தக் கால "யூத தாலிபான்கள்"! இஸ்ரேலில் மக்காபீக்களின் ஆட்சிக்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆட்சியாளர்களும் தமது மத சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார்கள். ஒவ்வொரு பிரஜையும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவலர்களை நியமித்தார்கள். மதச்சார்பற்றவர்களும், பிற மதத்தவர்களும் ஒன்றில் கொல்லப்பட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தாலிபான்கள் புத்தர் சிலைகளை தகர்த்தனர், மக்காபீக்கள் கிரேக்க மதக் கடவுள் சிலைகளை உடைத்தார்கள்.

மக்காபீக்கள் தமது வரலாற்றை நூல்களாக(Books of the Maccabees) எழுதி வைத்துள்ளனர். அவற்றில் இருந்து மக்காபீ தலைமையிலான யூதர்களின் எழுச்சிக்கு காரணம், மத அடிப்படைவாதம் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மாசிடோனியா சக்கரவர்த்தி அலெக்சாண்டர் ஆசியா முழுவதையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான். யூதர்களின் நாடும் அதில் அடக்கம். அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னர், அவன் தளபதிகள் சாம்ராஜ்யத்தை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். யூதர்கள் செலியுசிட் என்ற புதிய ராஜ்யத்தின் கீழ் வந்தார்கள். செலியுசிட் ராஜ்யத்தை ஆண்டவர்கள் கிரேக்கர்கள். (அலெக்சாண்டரும் ஒரு கிரேக்கன் தான்) அவர்கள் செயுஸ் போன்ற தமது மதக் கடவுள்களுக்கு ஆலயங்களை கட்டினார்கள். கிரேக்க மதமே அரச மதமாக இருந்தது.

கிரேக்க செலியுசிட் ஆட்சிக் காலத்தில் யூத சமூகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. (யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்.) நகரங்களில் வாழ்ந்த படித்த யூதர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். நிர்வாகத்துறையில் கிடைத்த பதவிகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டனர். இன்றைக்கும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய கலாச்சாரத்தில் வாழும் ஒரு பிரிவு இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும். நமது நாடுகளில் அவ்வாறானவர்கள் மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தை தழுவியதைப் போலவே, அன்றைய யூதர்கள் பலர் கிரேக்க கடவுள்களை வழிபட்டும் வந்துள்ளனர்.

ஜெருசலேம் நகரில் யூதர்களின் பெரிய ஆலயம் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தின் தலைமை மதகுருவை கத்தோலிக்கர்களின் பாப்பரசரோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு யூதர்கள் ஆனவர் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒருவர். மேலும் ஒவ்வொரு யூதனும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த ஆலயத்திற்கு நிதி வழங்க வேண்டும். இந்தியாவின் திருப்பதி கோயில் போல, ஜெருசலேம் ஆலயமும் அன்று "பணக்கார ஆலயம்" என்று அழைக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், கிரேக்க ஆதரவு யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்தின் தலமைப் பதவிக்காக போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கிரேக்க மன்னனுக்கு லஞ்சம் கொடுத்தேனும் அந்தப் பதவியைப் பெற முடிந்தது. இதனால் பழமைவாத யூதர்கள் அதிருப்தியுற்றனர். பழமைவாத யூதர்கள் கிளர்ச்சி செய்தனர். கிரேக்க மன்னன் Antiochus IV, பெரும்படை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்கினான்.

கிரேக்கமயப்பட்ட யூதர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஜெருசலேம் ஆலயம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் அவர்களும் ஈடுபட்டனர். யூதர்கள் எவ்வாறு யூதக் கோயிலை உடைத்தார்கள் என்று ஆச்சரியப்படலாம். பிரெஞ்சுப் புரட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படவில்லையா? லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கவில்லையா? அப்படியானவர்கள் தம்மை முற்போக்கானவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். கடும்போக்கு மதவாதிகளை பழமைவாதிகளாக கருதி வெறுக்கிறார்கள். (From the Maccabees to the Mishnah)

மொடைன் என்ற கிராமத்தில் நடந்த அசம்பாவிதம் யூதர்களின் புனிதப்போருக்கான தூண்டுதலாக அமைந்தது. கிரேக்க அதிகாரிகள் அந்த கிராமத்தின் யூத மதகுருவான மத்ததியாசை அழைத்து, கிரேக்க முதற்கடவுள் செயுசுக்கு பூஜை செய்ய உத்தரவிட்டனர். மத்ததியாஸ் மறுக்கவே, இன்னொரு யூதர் முன்வந்து பூஜையை நடத்தினார். யூத மதம் தவிர்ந்த பிற தெய்வங்களுக்கு பூஜை செய்த குற்றத்திற்காக, அவரை மத்ததியாஸ் அந்த இடத்திலேயே படுகொலை செய்தார். படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து தனது மகன்மாருடன் பாலைவனத்திற்கு சென்று ஒளிந்து கொண்ட மத்ததியாஸ், (யூதர்களின்) புனிதப்போரை பிரகடனம் செய்தார். புனித நூலான தோரா வை பின்பற்றுவோர் அனைவரும் தான் பின்னால் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார். வரலாற்றில் அது மக்காபீக்களின் எழுச்சி என அழைக்கப்படுகின்றது. கெரில்லாப் போராட்டம் மூலம் கிரேக்கர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜெருசலேமை விடுவித்தனர்.(Maccabees, the revolt)

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. மக்காபீக்களின் ஆட்சி மன்னராட்சி அல்ல. அது ஒரு யூத தேசிய குடியரசும் அல்ல. மாறாக, ஆப்கானிஸ்தானில், ஈரானில் இருந்ததைப் போல மதத்தின் ஆட்சி. நாட்டின் தலைவர்களாக ஆட்சி செய்தவர்கள் அனைவரும் மதகுருக்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இஸ்ரேலியரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொண்டிருந்தால், அது மக்காபீக்களின் வரலாறாக இருந்திருக்கும். தாலிபான் தலைவர் முல்லா ஒமார் கூட மத்ததியாஸ் போல ஒரு கிராமிய மதகுரு என்பதும், மக்காபீக்கள் போல தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமைகள்.

இருபதாம் நூற்றாண்டில், மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இரு தேசிய அரசுகள் தோன்றின. ஒன்று, இஸ்ரேல். மற்றது, பாகிஸ்தான். இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மக்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அனைத்து பிரஜைகளும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரு புதிய மொழியை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் உருது, இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம். அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு, துண்டாகி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய மதத்-தேசிய அரசு, நவீன மத அடிப்படைவாதிகள் உருவாகும் விளைநிலமாக உள்ளது.
(தொடரும்)

"தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? ]
(பகுதி : எட்டு)

"யூதர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு யூதன். பாலஸ்தீனர்கள் அடக்கப்படும் போது, நான் ஒரு பாலஸ்தீனன்." - Shehata Harun (எகிப்திய யூத கம்யூனிஸ்ட்)

யூதர்கள் என்றாலே அவர்களை தீவிர தேசியவாதிகள் போலவும், இனப்பற்றுக் கொண்டவர்களைப் போலவும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தமிழினவாதி, தன்னைப் போலவே யூதர்களையும் இனவாதிகளாக கருதுவதில் வியப்பில்லை. சில நேரம், "தூய" முதலாளித்துவவாதிகளும் யூதர்களை தேசிய உணர்வு கொண்டவர்களாக காட்ட விளைகின்றனர். அதற்கு ஒரு உதாரணம், "வார்சோ தடுப்பு முகாம் எழுச்சி." இரண்டாம் உலகப் போர் காலத்தில், வார்சோ நகர தடுப்பு முகாமில் இருந்த யூதர்கள், நாஸிப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரித்தார்கள். அந்த கிளர்ச்சியை ஒழுங்குபடுத்திய யூதர்கள் அனைவரும் சோஷலிச தொழிற்சங்கம் ஒன்றை சேர்ந்தவர்கள். "போலந்து, லிதுவேனியா யூத தொழிலாளர் சங்கம்" (General Jewish Labour Bund of Lithuania, Poland and Russia) அன்றைய ஐரோப்பாவில், சியோனிச தேசியவாதிகளுக்கு போட்டியாக உருவானது. வியன்னாவில் வாழ்ந்த தியோடோர் ஹெர்சல் உருவாக்கிய சியோனிச தேசியவாதம், முதலாளித்துவம் சார்பு கொண்டிருந்தது. யூத முதலாளிகளும் அதற்கு நிதி கொடுத்து வளர்த்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. ஐரோப்பாவில் யூத இனப்பிரச்சினைக்கு தீர்வாக, பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அமைக்கும் திட்டத்தை வரைந்தார்கள். நிச்சயமாக ஹிட்லரும் அந்த திட்டத்தை வரவேற்றிருப்பான். நாஸிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே யூத இனவழிப்பை ஆரம்பிக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் எடுத்தன. அது வரையில், பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பிய யூதர்களை, நாஸிகள் தடுக்கவில்லை. மாறாக யூதர்கள் தாமாகவே ஜெர்மனியை விட்டுச் செல்கிறார்கள் என்று மகிழ்ந்திருப்பார்கள்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. அன்று தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கேற்ப, தொழிலாளர்களும் பெருகிக் கொண்டிருந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவு யூத தொழிலாளர்கள் சோஷலிச தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டனர். காலப்போக்கில் யூதர்களுக்கு என்று தனியான தொழிற்சங்கம் உருவானது. போர்க்குணாம்சம் மிக்க யூத தொழிற்சங்கவாதிகள் வார்சோ எழுச்சியை ஒழுங்கமைத்தில் வியப்பில்லை. தமிழ் பிற்போக்குவாதிகள், யூதர்களின் சோஷலிச அரசியலை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்ல, அதனை யூத தேசிய இன எழுச்சியாக காட்ட விளைகின்றனர். அதனை இருட்டடிப்பு செய்தால் தானே, யூதர்கள் பாலஸ்தீன மண்ணுக்கு (இஸ்ரேலுக்கு) உரிமையானவர்கள் என்று நிறுவ முடியும்? யூத தொழிற்சங்கத்தினரின் முக்கிய கோஷங்களில் ஒன்று: "பாலஸ்தீனத்தின் பனை மரங்கள் எனக்கு அந்நியமானவை." யூத தொழிற்சங்கவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் சம உரிமை கோரினார்கள். அதே நேரம், சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வேண்டினார்கள். இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலத்தில், யூத தொழிற்சங்கம் தனது இறுதி மூச்சை விட்டது. இருப்பினும், யூதர்கள் கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து நாசிகளை எதிர்த்து போராடினார்கள்.

ஏற்கனவே ரஷ்யாவில் லெனினின் போல்ஷெவிக் கட்சியில் பெருமளவு யூதர்கள் சேர்ந்திருந்தார்கள். எத்தனையோ பேர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தனர். செம்படையின் தளபதி லியோன் ட்ராஸ்கி கூட ஒரு யூதர் தான். கம்யூனிச தத்துவ ஞானி, கார்ல் மார்க்ஸ் கூட ஒரு யூதர் என்பதை மறந்து விடலாகாது. உலகில் பிரபலமான யூத இடதுசாரிகளின் பட்டியலையே கொடுக்க முடியும். Karl Marx, Murray Bookchin, Judith Butler, Noam Chomsky, Eric Hobsbawm, Harold Laski, Harold Pinter, Erich Fromm, Naomi Klein and Howard Zinn,... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இன்றைய யூத இடதுசாரிகள், சியோனிச எதிர்ப்பாளர்களாகவும், பாலஸ்தீன விடுதலையின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். அவர்களின் அதே கருத்துகளை நாம் தமிழில் கூறினால், "இஸ்ரேலிய எதிர்ப்பாளர்" முத்திரை குத்துவார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் ஒரு கம்யூனிசக் கட்சி இருக்கின்றது. இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்ற அரேபியர்கள், தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் வாக்குப் போடுவார்கள். ஏனெனில் பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் யூதரின் கட்சி அது ஒன்று தான். பயங்கரமான கம்யூனிச எதிர்ப்பாளர்களான, தமிழ் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும் உண்மைகள் இவை. என்ன செய்வது?

பாலஸ்தீனத்தில் உருவான யூத காலனிகள் (கிப்பூத்ஸ் பண்ணைகள்) பிற்காலத்தில் இஸ்ரேலிய தேசமாகியது. யூத தேசிய நிதியம் வாங்கிக் கொடுத்த நிலத்தில் கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகின. அவை சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன. அன்று பாலஸ்தீனம் சென்று குடியேறிய யூதர்கள் முன்னால் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் கம்யூனிச தத்துவம் பிரபலமாக இருந்தது. மேலும் குடியேற வந்த யூதர்களும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் இருந்திருக்க மாட்டார்களா? ஆரம்ப கால கிபூத்ஸ் பண்ணைகள் பல கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சமூகம் கம்யூனிச சித்தாந்தப் படி இயங்கியது. உற்பத்தி சாதனங்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து வயலில் வேலை செய்தார்கள். பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு, கணவனும் மனைவியும் சேர்ந்தே வேலைக்கு சென்றார்கள். மூன்று வேளை உணவு, எல்லோருக்கும் பொதுவாக சமைத்து பரிமாறப்பட்டது. ஒரே மண்டபத்தில் அனைவரும் சேர்ந்தே உணவருந்துவார்கள். திருமணமான ஜோடிகளுக்கான வீடுகள் மட்டுமே தனித்தனியாக இருந்தன.

கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகளில், எங்கு பார்க்கிலும் "மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்" ஆகியோரின் உருவப்படங்கள் காணப்பட்டன. கூட்டுறவுப் பண்ணைக்கென்றே தனியான கம்யூனிசக் கட்சி இயங்கியது. பொதுக்குழு கிரமமாக கூட்டப்பட்டு, சமூகத்தின் தேவைகள் ஆராயப்பட்டன. கிப்பூத்ஸ் சமூகக் கட்டுப்பாடுகள், நிதிப் பங்கீடு, உறுப்பினர்களின் பிரச்சினைகள் போன்றனவற்றிற்கு கட்சியே பொறுப்பு. கம்யூனிச பண்ணைகளில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை. பண்டமாற்று மூலமே பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருந்தது. அதாவது ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ற தொழிலை செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை நல்கினார்கள். பாடசாலைகளிலும் குழந்தைகளுக்கு பொதுவுடமைக் கல்வியே வழங்கப் பட்டது. குழந்தைகளே கடவுள் இல்லை என்று கூறுமளவிற்கு, அங்கே மதத்திற்கு இடமளிக்கப் படவில்லை. ஆயினும், தனிப்பட்ட மத நம்பிக்கையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 1948 ல் இஸ்ரேல் உருவான பின்னர், கம்யூனிச பண்ணைகள் தனியார்மயமாக்கப் பட்டன. இளம் தலைமுறை அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நகரங்களை நோக்கி படையெடுத்தார்கள். பன்மடங்கு பலமான முதலாளித்துவத்தையும், நுகர்பொருள் கலாச்சாரத்தையும் எதிர்த்து நிற்க முடியாத கம்யூனிச கிப்பூத்ஸ் பண்ணைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. (Kibbutz Returns With Moneyed Communism)

இஸ்ரேல் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, 1934 ல், "சோஷலிச யூத தேசம்" உருவாகி விட்டது. ரஷ்யாவின் கிழக்கு சைபீரியப் பகுதியில், சீன எல்லையோரமாக அமைந்துள்ளது "யூத சுயாட்சிப் பிரதேசம்." (Jewish Autonomous Oblast) அன்றைய சோவியத் யூனியனில், அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டன. அதே போல, யூதர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசு, இன்றும் ரஷ்யாவில் இயங்கிக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக யிட்டிஷ் உள்ளது. "யிட்டிஷ்", ஹீபுரு, மற்றும் பல ஐரோப்பிய மொழிச் சொற்கள் கலந்த மொழி. ஐரோப்பிய யூதர்களால் பேசப்பட்டு வந்தது. இறந்த மொழியான ஹீபுருவுக்கு பதிலாக, புழக்கத்தில் இருந்த யிட்டிஷ் மொழியை மேம்படுத்துவதே சிறந்ததாக கருதினார்கள். சோஷலிசப் பொருளாதாரக் கட்டுமானங்கள் இருந்த போதிலும், யூத மத வழிபாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அங்குள்ள யூதர்கள், யாரோடும் யுத்தம் செய்யாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவன் நிலத்தை பறித்தால் தானே, அவனும் சண்டைக்கு வருவான்?

பாலஸ்தீனத்தில் குடியேற சென்ற சியோனிஸ்ட்கள், அறுபதாண்டுகளாக தீராத யுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் யாருமற்ற பாலைவனத்தில் சென்று குடியேறவில்லை. அரேபியரின் நிலங்களை அபகரித்து தமதாக்கிக் கொண்டார்கள். அன்று பாலஸ்தீனத்தில் குடியேறச் சென்ற ஐரோப்பிய யூதர்கள் மத்தியில் நிறவாதக் கருத்துகள் காணப்பட்டன. "நாகரீகமடையாத அரை நிர்வாண அரேபியருக்கு, உன்னதமான ஐரோப்பிய நாகரீகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்." என்று தம்மை உயர்வாகவே கருதிக் கொண்டனர். அன்று இந்தியாவை காலனியாக்கிய பிரிட்டிஷாரும் அதையே கூறினார்கள். அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள், செவ்விந்திய குடிகளின் நிலங்களை அபகரித்து, அங்கே ஒரு தேசத்தை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தில் குடியேறிய வெள்ளையின யூதர்கள், அரேபியரின் நிலங்களை அபகரித்து இஸ்ரேல் ஆக்கினார்கள். அதனால், பாலஸ்தீனம் "ஐரோப்பியரின் கடைசிக் காலனி" என்று அழைக்கப் படுகின்றது. சியோனிஸம் தோன்றிய காலத்தில், உகண்டா, அல்லது ஆர்ஜெந்தீனா சென்று குடியேறி, இஸ்ரேலை அங்கே உருவாக்குவது என்ற யோசனையும் முன்வைக்கப் பட்டது. ஆனால், விதி யாரை விட்டது? பாலஸ்தீனத்தில் வளைகுடா எண்ணெய் வளத்தை கண்காணிக்கும் அடியாளாக, பிரிட்டனின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா அரசுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆயுத விநியோகம் செய்த குற்றத்திற்காக, உலகத் தமிழர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். சீனாவும், ரஷ்யாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. சர்வதேச ஆயுத சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சீன, ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை புலிகளும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். இந்த உண்மை எல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை எதிர்க்க ஒரு சாட்டுக் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட "தமிழர்கள்", இஸ்ரேலின் கொள்கைக்கு மாறாகவே செயற்படுகின்றனர். பாலஸ்தீனர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிடினும், இஸ்ரேலில் யூதர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன. இஸ்ரேல், தான் "உன்னதமான மேற்குலக நாகரீகத்தை" பின்பற்றுகின்றது என்பதை உலகுக்கு காட்ட விரும்புகின்றது. அதனால் சோவியத் சார்பு யூத கம்யூனிஸ்ட்கள் மீது எந்தவொரு தருணத்திலும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. Hadash என்ற யூத கம்யூனிஸ்ட் கட்சி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இரகசிய தொடர்பை வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (அதாவது அந்தக் கட்சி பாலஸ்தீனரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருந்தது.)

ஐ.நா. சபையில் சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளன. அதே நேரம், இஸ்ரேலின் எதிரிகளான சிரியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு, சோவியத் யூனியன் ஆயுத விநியோகம் செய்தது, ஒன்றும் இரகசியமல்ல. சோவியத் ஆயுதங்கள் பாலஸ்தீன போராளிகளின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. அதைக் காரணமாக காட்டி, உலக யூதர்கள் அனைவரும் கம்யூனிசத்தை வெறுக்க வேண்டும் என்று, ஒரு சராசரி யூத இனவாதி கூட பேசவில்லை. இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க சார்பு, முதலாளித்துவ அரசாக உருவெடுத்தது. அதனால் சர்வதேச அரசியல் அரங்கில் தனது பாத்திரம் என்ன என்பதையும், யாரையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்தார்கள். அதே நேரம், பெரும்பான்மை யூதர்கள் இஸ்ரேலிய அரசை ஆதரிக்கிறார்கள் என்பதால், கம்யூனிச யூதர்களை மட்டுமல்ல, மத அடிப்படைவாத யூதர்களையும் அவர்கள் கணக்கெடுக்கவில்லை. இன்று சிறிலங்காவில் ராஜபக்ச அரசு எந்தளவு நம்பிக்கையுடன் ஆட்சி நடத்துகின்றதோ, அதே நம்பிக்கையை மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த இஸ்ரேலிய அரசாங்கங்கள் கொண்டிருந்தன. ஐ.நா. மட்டத்தில் போர்க்குற்ற விசாரணை வந்தாலும் சீனாவும், ரஷ்யாவும் தன்னை காப்பாற்றும் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது. அதே போல போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. தண்டிக்க விடாது, அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னை காப்பாற்றும் என்று இஸ்ரேலிய அரசு நம்புகின்றது.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?]
(பகுதி : ஒன்பது)
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைக்கு உந்துசக்தியாக மட்டுமல்ல, உதவும் கரமாகவும், ஆதர்ச முன்னணியாகவும் இருந்து வந்துள்ளது. ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், பாராளுமன்ற அரசியலை நிராகரித்து தான் எழுந்தது. சிறிலங்கா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இடம்பெறும் தமிழர் விரோத இனக்கலவரங்களை, தமிழ் தேசியக் கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தி, இரண்டாவது தலைமுறையை ஆயுதபோராட்டம் நோக்கிச் செல்ல தூண்டியது.
பாலஸ்தீனரின் வரலாறும் அதே போன்ற கதைகளை கூறுகின்றது. பாலஸ்தீன தேசியக் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சியினர் போன்றே, பிரிட்டன் அரேபியர் பக்கம் நிற்பதாக நம்பிக் கொண்டிருந்தன. யூத ஆயுதக் குழுக்கள், பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கிய பொழுது, அந்த முன் அனுமானம் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கும். எனினும் பாலஸ்தீனத்தில் யூதர்களிடமும், இலங்கையில் சிங்களவர்களிடமும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதென்பது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் முடிந்த முடிவாக இருந்துள்ளது. ஈழத் தமிழரின் முதலாவது அரசியல் தலைமுறை விட்ட தவறுகளை திருத்தவே தாம் ஆயுதம் என்துவதாக, தமிழ் இளைஞர்கள் கூறினார்கள். பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் தோன்றிய காலத்திலும், அதே மாதிரியான கருத்துகள் முன்வைக்கப் பட்டன.

இன்று யூதர்கள் வாழும் இஸ்ரேலிய நகரங்களில் வாழ்ந்த அரேபியர்கள், ஆயுதமேந்திய யூதர்களால் விரட்டியடிக்கப் பட்டனர். மேற்குக்கரை, காஸா போன்ற பிரதேசங்கள் பாலஸ்தீனரின் "தாயக பூமி" யாகியது. இலங்கையிலும், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் அடுத்தடுத்த இனக்கலவரங்களால் விரட்டியடிக்கப் பட்டனர். அவர்கள் பெரும்பான்மை தமிழர்கள் வாழ்ந்த வட-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இஸ்ரேலிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான இனப்படுகொலை இடம்பெற்றது. இஸ்ரேலில் அப்பாவி அரேபிய பொது மக்கள், யூத இனவெறியர்களால் கொலை செய்யப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். அரேபியரின் வீடுகள் எரிக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் யூதரால் அபகரிக்கப் பட்டன. இலங்கையில் சிங்கள இனவெறியர்கள், இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றினார்கள். இஸ்ரேலில் அரேபியருக்கு நேர்ந்த அதே கொடுமைகள், இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்டன. நிச்சயமாக, ஆரம்ப கால கட்டங்களில், ஈழ விடுதலை இயக்கங்கள் அத்தகைய ஒப்பீடுகளை தமது பிரச்சாரத்தில் இடம்பெறச் செய்தனர்.

1977 ல், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற கப்பலில் சென்ற சிலரிடம் ஆயுதப் போராட்டம் குறித்த சிந்தனைகள் தோன்றின. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கியூபாவின் உதவியை நாட வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. அருளர் எழுதிய, "லங்கா ராணி" என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலங்களிலேயே, சர்வதேச விடுதலை அமைப்புகளுடனான தொடர்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், இந்தியாவின் உள்நோக்கம் தெளிவானது. அவ்வாறான சுயநலம் மிகுந்த உலகில், பாலஸ்தீனர்கள் மட்டுமே எதையும் எதிர்பாராமல், தமது ஈழச் சகோதரர்களுக்கு உதவி செய்தார்கள். "லெபனான் பயிற்சி" என்ற பெயரில் பல நூறு தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனரின் முகாம்களில் இராணுவப் பயிற்சி பெற்றனர். அன்றைய காலத்தில், இந்தியா வழங்கிய இராணுவப் பயிற்சியை விட, அது உயர்வாகக் கருதப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இரண்டு அமைப்புகள் மட்டுமே ஆயுதப் போராட்டத்தை முதன்மைப் படுத்தி வந்தன. ஒன்று: இலங்கையில் தலைமறைவாக இயங்கிய தேசியவாத "புதிய தமிழ்ப் புலிகள்". இரண்டு: லண்டனில் வாழ்ந்த மார்க்சிய தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட "ஈழப் புரட்சி அமைப்பு" (EROS). பல்வேறு நாடுகளை சேர்ந்த புரட்சியாளர்கள் புகலிடம் கோரியிருந்த லண்டனில், பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது சிறந்ததாகப் பட்டது. ஈரோஸ் செயலதிபர் ரத்னசபாபதி லண்டனில் இருந்த பாலஸ்தீன தூதுவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். ஈழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்கு பயிற்சி வழங்குமாறு முன்வைத்த கோரிக்கையை, பாலஸ்தீனர்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள். PLO இராணுவ தளபதி அபு ஜிகாத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், தமிழ்ப் போராளிகள் இராணுவப் பயிற்சி பெற்றனர்.

தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனர்களிடம் பயிற்சி எடுப்பது, ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. பாமர மக்கள் கூட "லெபனான் பயிற்சி" பற்றி பேச ஆரம்பித்தனர். லெபனான் அன்று சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சிரிய எல்லையோரமாக உள்ள பால்பெக் எனும் பிரதேசத்திலேயே சர்வதேச பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. அன்று சோவியத் யூனியன், பாலஸ்தீன இயக்கங்களுக்கு (குறிப்பாக PLFP) பெருமளவு நிதியும், ஆயுதங்களையும் வழங்கி வந்தது. அந்த உதவியைக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. வெனிசுவேலா முதல் ஜப்பான் வரையிலான நாடுகளை சேர்ந்த பல இளைஞர்கள், லெபனானிலும், ஜோர்டானிலும் இருந்த பாலஸ்தீன முகாம்களில் பயிற்சி பெற்று வந்தனர். பாலஸ்தீனர்கள் அதனை சர்வதேச புரட்சியின் ஓர் அங்கமாக கருதினார்கள். இதே கருத்தை தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கிய பாலஸ்தீன முகாம் பொறுப்பாளர்களும் அன்று பிரதிபலித்தனர். "தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகும்."

1976 ம் ஆண்டிலேயே பாலஸ்தீனர்கள் இராணுவப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருந்தனர். அன்று லெபனான் கூட பாதுகாப்பான பிரதேசமாக இருக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவம் எல்லை தாண்டி வந்து, லெபனானுக்குள் பாலஸ்தீனர்களுடன் யுத்தம் செய்தது. பயிற்சிக்கு சென்ற தமிழ் இளைஞர்களும், தமது பாலஸ்தீன தோழர்களுடன் இணைந்து இஸ்ரேலிய படையினரை எதிர்த்து சண்டையிட்டார்கள். பாலஸ்தீன- ஈழ சகோதரத்துவம் அன்றே இரத்தத்தால் எழுதப்பட்டது. மிகவும் காலந்தாழ்த்தி, அதாவது 1983 ல், இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியது. அது வரையில் பாலஸ்தீன பயிற்சி பெற்றவர்களே ஈழ மண்ணிலும் பயிற்சி முகாம்களை நிறுவினார்கள். பாலஸ்தீன தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த ஈரோஸ், அன்று ஈழத்தில் இராணுவப் பிரிவை வைத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக வவுனியா காட்டினுள், புலிகள் இராணுவப் பயிற்சி கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். விடுதலைப் புலிகள் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவரான உமாமகேஸ்வரன் பாலஸ்தீன பயிற்சி பெற்றவர். அவர் பின்னர் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்று, PLOT என்ற இயக்கம் அமைத்ததும், பாலஸ்தீன பயிற்சியாளர்களுடன் தனியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

சிறிலங்கா இராணுவம் வன்னியில் புரிந்த தமிழ் இனப் படுகொலைகளை கண்டித்து குரல் எழுப்பிய உலகப் புகழ் பெற்ற பிரபலங்களில், மாயா அருட்பிரகாசம் ஒருவர். பிரிட்டிஷ் தமிழரான மாயா உலகம் முழுவதும் பிரபலமான இசைக் கலைஞர். அவர் தனது பாடல்கள் மூலம், விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், பாலஸ்தீனரின் போராட்டத்தையும் ஆதரித்து வந்தார். இதனால் மாயா புலி ஆதரவாளர் என்று, இலங்கை அரசு சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. மறு பக்கத்தில் மாயா பாலஸ்தீன ஆதரவாளர் என்று, அமெரிக்க அரசு சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா மறுக்கப்பட்டது. புலிகளாக இருந்தாலென்ன, ஹமாஸ் ஆக இருந்தாலென்ன, அவர்களின் போராட்டம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக கருதப்பட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்க அரச மட்டத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்கவில்லை. பிரபல பாப் பாடகி மாயாவின் தந்தை அருளர் என அழைக்கப்படும் அருட்பிரகாசம், பாலஸ்தீனர்களிடம் பயிற்சி பெற்ற ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.

பாலஸ்தீன பயிற்சி பெறுவதில் சில ராஜதந்திர சிக்கல்கள் ஏற்பட்டன. ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகிய காலங்களில் சிறிமாவோவின் அரசு ஆட்சியில் இருந்தது. சிறிமாவோ அரசு PLO வுடன் நல்லுறவைப் பேணி வந்தது. "சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டாம்" என்று, சிறிமாவோ யாசிர் அரபாத்துக்கு கடிதம் எழுதினார். ஆனால் பாலஸ்தீனர்கள் அந்த கடிதத்தை புறக்கணித்து விட்டு, பயிற்சியை தொடர்ந்தார்கள். மேலும் PLO என்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த, மார்க்சிய PLFP தான் மும்முரமாக தமிழர்களுக்கு பயிற்சியளித்து வந்தது. அவர்கள் சர்வதேச கம்யூனிச புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்தியாவில், அதே கால கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசு இருந்தது. இந்திரா காந்தி அரசும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், தமிழ்ப் போராளிகள் அவர்களிடம் பயிற்சி எடுப்பதை விரும்பவில்லை. 1983 ல், அனைத்து போராளிக் குழுக்களுக்கும் இந்தியா பயிற்சி வழங்கியதற்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்தியாவில் இயங்கிய கம்யூனிச புரட்சியாளர்கள், அல்லது பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுவதையும் இந்திய அரசு விரும்பவில்லை.

ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டுமென்பதில், இந்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே அவதானமாக இருந்து வந்துள்ளது. இறுதியில் இந்தியா எவ்வாறு ஈழ விடுதலை அமைப்புகளை கைவிட்டதோ, அதே போன்று ஜோர்டான் போன்ற அரபு நாடுகள் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைகழுவி விட்டன. "எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும்." என்பதை பாலஸ்தீன-ஈழ விடுதலை அமைப்புகள் காலந்தாழ்த்தி புரிந்து கொண்டன.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Sunday, July 09, 2017

G20: ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம்!முதலாளித்துவத்திற்கு எதிராக போராடியவர்களை,
தெருவில் அடித்து நொறுக்கும் ஜெர்மன் பொலிஸ். 


G20 மகாநாட்டை எதிர்த்து நடந்த கலவரங்கள் தொடர்பாக நான் இட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு:
ஹம்பூர்க், ஜெர்மனி. G20, ஜேர்ம‌னி, ஹ‌ம்பூர்க்: முத‌லாளித்துவ‌த்திற்கு எதிரான‌ போர்க்க‌ள‌ம். 
- வானில் வ‌ட்டம‌டிக்கும் அமெரிக்க‌ இராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள். 
- டிர‌ம்ப் த‌ங்குவ‌த‌ற்கு எந்த‌க் ஹோட்டேலிலும் இட‌ம் கிடைக்க‌வில்லை! (வ‌ர‌வேற்பில்லை) அத‌னால், அர‌ச‌ விருந்தின‌ர் மாளிகையில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்டுள்ளார். 
- வ‌ங்கிக‌ள் த‌ம‌து ஊழிய‌ர்க‌ள‌ விடுமுறை எடுக்க‌ச் சொல்லி இருக்கின்ற‌ன‌. 
- க‌டைக‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. 
(5 July at 07:29 )


 "Welcome to Hell", "ந‌ர‌க‌த்திற்கு ந‌ல்வ‌ர‌வு"! - ஜேர்ம‌னியில் ந‌ட‌க்கும் முத‌லாளித்துவ‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள்: 

உல‌கில்‌ 20 தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ நாடுக‌ள் ஒன்று கூடும் G20 ம‌காநாடு இன்று ஜேர்ம‌னி, ஹம்பூர்க் ந‌க‌ரில் ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்று கூடி வ‌ர்த்த‌க‌ம் ப‌ற்றிப் பேச‌வுள்ள‌ன‌ர்.

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பூட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ 
வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள். 
கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்று 
பலகை அடித்து மூடி இருக்கிறார்கள்.
ஜேர்ம‌னியின் இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், பார‌ம்ப‌ரிய‌மாக‌ ஒரு இட‌துசாரி ந‌க‌ர‌ம். பெருமள‌வில் க‌ம்யூனிஸ்டுக‌ள், அனார்க்கிஸ்டுக‌ள், தீவிர‌ இட‌துசாரிக‌ளைக் கொண்ட‌ ந‌க‌ர‌ம். 

முத‌லாம் உல‌க‌ப் போர் முடிவில், வெற்றிக‌ர‌மான‌ பாட்டாளிவ‌ர்க்க‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஹ‌ம்பூர்க் சோவிய‌த் அமைக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. ஜேர்ம‌னியின் பிர‌தான‌மான‌ துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், இப்போதும் இட‌துசாரிக‌ளின் கோட்டையாக‌ க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து. 

ம‌காநாட்டுக்கும், முத‌லாளித்துவ‌த்திற்கும் எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ ஒரு இல‌ட்ச‌ம் ஆர்வல‌ர்க‌ள் ந‌க‌ர‌த்தில் கூடி இருக்க‌லாம் என்றும், அதில் ஆயிர‌க் க‌ண‌க்கானோர் வ‌ன்முறையில் ஈடுப‌ட‌லாம் என‌வும்‌ காவ‌ல்துறை க‌ண‌க்கிட்டுள்ள‌து. 

அங்கு எந்த‌ நேர‌மும் க‌லவ‌ர‌ம் ந‌ட‌க்க‌லாம் என்ற‌ அச்ச‌ம் கார‌ண‌மாக‌ வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. பொதும‌க்க‌ளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்க‌ள். 

பொலிஸ் வ‌ண்டிக‌ள் தாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ர‌யில் த‌ண்ட‌வாள‌ங்க‌ளை தொடுக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் நாச‌மாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் ந‌க‌ரில் ர‌யில் போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. 
(6 July at 11:16)


"They are coming", "அவர்கள் வருகிறார்கள்" : 
போர்வெறி பிடித்த, நவ தாராளவாத 
கொடுங்கோலர்கள் வருகிறார்கள்.
முத‌லாளித்துவ‌ எதிர்ப்பு கிள‌ர்ச்சிக்கு அஞ்சி,  ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து. ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்த‌த் த‌டை. ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ந‌க‌ர‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌மாகிற‌து. பொலிஸ் வாக‌ன‌ங்க‌ளை விட‌ வேறெந்த‌ வாக‌ன‌மும் தெருவில் காண‌ முடிய‌வில்லை. 

அமைதியாக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌விருந்த‌வ‌ர்க‌ளுக்கு பொலிஸ் அனும‌தி த‌ர‌ ம‌றுத்த‌து. த‌ண்ணீர் பீர‌ங்கிக‌ள் பொருத்திய‌ வாக‌ன‌ங்க‌ளை கொண்டு வ‌ந்திருந்த‌து. ஆர்ப்பாட்ட‌க் கார‌ர்க‌ள் பொலிசாரை தாக்கிய‌தாக‌ சொல்லி த‌ண்ணீர் பாய்ச்சி கூட்ட‌த்தை க‌லைத்த‌து. த‌ம்மை நோக்கி போத்த‌ல்க‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக,‌ பொலிஸ் த‌ன‌து தாக்குத‌லுக்கு நியாய‌ம் க‌ற்பித்த‌து. ஆனால் ஒரு குடிகார‌ன் ம‌ட்டுமே ஒரேயொரு போத்த‌லை வீசிய‌தாக‌ நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌. 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பொலிஸ் வ‌ன்முறையை எதிர்த்து பெரிய‌தொரு ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணி ந‌ட‌ந்தது. இத‌ற்கிடையே, அய‌ல் நாடுக‌ளில் இருந்து ஜேர்ம‌னிக்கு செல்ல‌ முய‌ன்ற‌ அர‌சிய‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ள் த‌டுத்து வைக்க‌ப் ப‌ட்டு, பாஸ்போர்ட் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிய‌ வ‌ருகின்ற‌து. 
(6 July at 23:00)


ச‌க்திவாய்ந்த‌ 20 உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்றுகூடியுள்ள‌ ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ச‌ட்ட‌ம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள‌து. தெருக்க‌ளில் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் உடைத்து சூறையாட‌ப் ப‌டுகின்ற‌ன‌. பொலிசார் குறைந்த‌து நூறு பேரை கைது செய்துள்ள‌ன‌ர். 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரின் சில‌ ப‌குதிக‌ளை பொலிஸ் க‌ட்டுப்பாட்டில் வைத்திருக்க‌ முடிய‌வில்லை. இராணுவ‌ம் வ‌ர‌வ‌ழைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கு இர‌ண்டாவ‌து நாளாக‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌க்கிற‌து. இட‌துசாரிக‌ளின் கோட்டைக‌ளாக‌ க‌ருத‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் பொலிஸ் வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து வீதித் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. 

ப‌ல‌ இட‌ங்க‌ளில் BMW, பென்ஸ் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ள் எரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. ந‌க‌ர‌ம் எங்கும் புகை மூட்ட‌மாக‌ காண‌ப் ப‌டுகின்ற‌து. ஜேர்ம‌ன் ஊட‌க‌ங்க‌ள் "உள்நாட்டுப் போர்" என்று வ‌ர்ணிக்கும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்து வ‌ருகின்ற‌து. 
(7 July at 22:59)
ஹ‌ம்பூர்க் ந‌க‌ர‌ம் பற்றி எரியும் காட்சி. 
"முற்ப‌க‌ல் செய்யின் பிற்ப‌க‌ல் விளையும்." - பழமொழி 

 இல‌ங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற‌ நாடுக‌ளில் பேர‌ழிவு த‌ந்த‌ போர்களை உருவாக்கி, இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அக‌திக‌ளாக‌ அலைய‌விட்ட‌வ‌ர்க‌ள், G20 என்ற‌ பெய‌ரில் கூட்ட‌ம் போடுகிறார்க‌ள். இன்னும் எத்த‌னை பேரைக் கொன்றொழிக்க‌ திட்ட‌ம் போடுகிறார்க‌ளோ தெரிய‌வில்லை. 

அதைக் கண்டு இரத்தம் கொதிக்காதவர்கள், அதையெல்லாம் க‌ண்டுகொள்ளாத‌வ‌ர்க‌ள், "ஐயோ... காரை எரிக்கிறார்க‌ள். க‌டைக‌ளை உடைக்கிறார்க‌ள்." என்று கூப்பாடு போடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ந‌ல‌னை ம‌ட்டும் பெரிதென‌ எண்ணும் ப‌ச்சையான‌ சுய‌ந‌ல‌வாதிக‌ள். 

 முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, இல‌ட்ச‌க் கணக்கானோர் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். வேலை‌யிழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்தனை இலட்சம்? அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கோப‌த்தை வெளிப்ப‌டுத்தும் போது இப்ப‌டித் தான் இருக்கும். இது இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தார்மீக‌க் கோப‌ம். த‌ங்க‌ளை இந்த‌ நிலைக்கு த‌ள்ளிய‌ முத‌லாளிக‌ள், அர‌சுக்கு எதிரான‌ கோபம். இது முத‌லாளித்துவ‌த்தின் அவமானகரமான தோல்வி.

"தினை விதைத்த‌வ‌ன் தினை அறுப்பான். வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்." - பழமொழி

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுச்சி கொள். 
சோஷலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்.

Sunday, July 02, 2017

வட கொரியாவில் பொருளாதாரம் வளர்கிறது! மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது!!


"வ‌ட‌ கொரிய‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌க்கிறார்க‌ள்... புல்லைச் சாப்பிடுகிறார்க‌ள்" என்று வாய் கூசாம‌ல் புளுகிய‌ ப‌ன்னாடைக‌ளைக் க‌ண்டால் இதைத் தெரிவியுங்க‌ள்:

பொருளாதார‌த் த‌டைக‌ளுக்கு ம‌த்தியிலும் வட‌ கொரிய‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ந்து கொண்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ளிட‌ம் தாராள‌மான‌ ப‌ண‌ப் புழ‌க்க‌ம் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், நெத‌ர்லாந்து ப‌த்திரிகையான‌ NRC Handelsblad (1-7-17) த‌கவ‌ல் தெரிவித்துள்ள‌து.

பியாங்கியாங் ந‌க‌ரில் வ‌ருடாந்த‌ம் ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ வ‌ர்த்த‌க‌ ச‌ந்தையில் ட‌ச்சு வ‌ணிக‌ர்க‌ளும் க‌டை போட்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுட‌ன் சென்ற‌ செய்தியாள‌ர் தெரிவித்த‌ விப‌ர‌ங்க‌ள்:

ச‌ந்தையில் பெரும‌ள‌வு சீன‌ வியாபாரிக‌ளை காண‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து. அடுத்த‌ இட‌த்தில் ஈரானிய‌ர்க‌ள் அதிக‌ம். இந்த‌ இரு நாடுக‌ளும் வ‌ட‌ கொரியாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பால் அதிக‌ ஆதாய‌ம் பெறுகின்ற‌ன‌. வ‌ருடாவ‌ருட‌ம் க‌ண்காட்சி போன்று ந‌ட‌க்கும் ச‌ந்தையில், சாதார‌ண‌ வீட்டுப் பாவ‌னைப் பொருட்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, கார் கூட‌ விற்ப‌னையாகிற‌து.

அங்கு வ‌ரும் வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்கள் ம‌ருந்துக‌ள், மின்ன‌ணு உப‌க‌ர‌ண‌ங்க‌ள், என்று ப‌ல‌ பாவ‌னைப் பொருட்க‌ளை பெட்டி பெட்டியாக‌ வாங்கிச் செல்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு வ‌ருட‌மும் விற்ப‌னை கூடிக் கொண்டு செல்வ‌தாக‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

"என‌து நிறுவ‌ன‌த்திற்கு இலாப‌ம் வ‌ர‌வில்லை என்றால், என்னை எத‌ற்கு வ‌ட‌ கொரியாவுக்கு அனுப்ப‌ப் போகிறார்க‌ள்?" என்று ஒரு சீன‌ விற்ப‌னையாள‌ர் கேட்டார். "தான் முத‌ல் த‌ட‌வையாக,‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் வ‌ந்த‌ நேர‌ம், இந்த‌ள‌வு வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்று நினைத்திருக்க‌வில்லை" என்று ஓர் ஈரானிய‌ர் கூறினார்.

வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்க‌ள் கைக‌ளில் அமெரிக்க‌ டால‌ர், சீன‌ ரென்மினி போன்ற‌ ச‌ர்வ‌தேச‌ நாண‌ய‌ங்க‌ள் தாராள‌மாக‌ப் புழ‌ங்குகின்ற‌ன‌. அந்த‌ ச‌ந்தையில் பொருட்க‌ளை வாங்குவ‌த‌ற்கு அந்நிய‌ செலாவ‌ணி அவ‌சிய‌ம். அங்கு யாருமே வ‌ட‌ கொரிய‌ நாண‌ய‌ம் கொடுத்து வாங்க‌வில்லை.

பொருளாதார‌த் த‌டைக‌ளால் நாற்புற‌மும் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ வ‌ட‌ கொரியாவுக்குள், அந்நிய‌ நாண‌ய‌ங்க‌ள் செல்வ‌து எப்ப‌டி என்ப‌து ஒரு புரியாத‌ புதிர். சீனாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பு ம‌ட்டும் கார‌ணம் அல்ல‌. ஏராள‌மான‌ வ‌ட‌ கொரிய‌ர்க‌ள், ர‌ஷ்யா, சீனா, ம‌ற்றும் ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வேலை செய்து ப‌ண‌ம் அனுப்புகிறார்க‌ள். அத்துட‌ன் க‌ட‌த்த‌லும் தாராள‌மாக‌ ந‌ட‌க்கிற‌து.

வ‌ட‌ கொரியாவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌, 2011 ம் ஆண்டில் இருந்து வட‌ கொரிய‌ உழைப்பாளிக‌ளின் ச‌ம்ப‌ள‌ம் வ‌ருட‌த்திற்கு 2% கூடிக் கொண்டிருக்கிற‌து. வீட்டு வாட‌கை இல்லை. கல்வி, மருத்துவ செலவு இலவசம். எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌க் குறைவு. இத‌னால் சராசரி வட கொரியரின் கையில் மிஞ்சும் ப‌ண‌மும் கூடியுள்ள‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ட‌ கொரிய‌ பொருளாதார‌த்தில் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ சீர்திருத்த‌ங்க‌ளும் அத‌ன் வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ண‌ம். தென்கொரிய‌ பொருளிய‌ல் நிபுண‌ர்க‌ளே இதை உறுதிப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

தென் அமெரிக்க மத்திய வங்கியின் கணிப்பின் படி, வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு 1,5 முதல் 3 சதவீதமாக இருக்கலாம். கடந்த ஐந்து வருடங்களில், வட கொரியர்களின் வருடாந்த சம்பளம் 1.000 இலிருந்து 1.500 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பெருமளவு வர்த்தகம் சீனாவுடன் நடக்கிறது என்பது வெள்ளிடைமலை. சந்தையில் நவீன சீன வாகனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. வட கொரிய தெருக்களில் சீன வாகனங்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சீன இயந்திரங்களே வேலை செய்கின்றன.

சீனாவுடனான மொத்த வர்த்தகம், 1995 ம் ஆண்டு அரை பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2016 ம் ஆண்டு அது 5,5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவை சீன சுங்கத்துறை, மற்றும் உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து எடுத்த தகவல்கள். சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துடன் (44 பில்லியன் டாலர்) ஒப்பிடும் பொழுது அது ஒன்றுமே இல்லை. இருப்பினும் அந்தத் தொகையானது வட கொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மறைந்து கொண்டிருக்கிறது. உழவர்கள் வயல்களில் மாடு கட்டி உழுவதும், கையால் உபகரணங்களை பாவிப்பதும், இன்னமும் சில இடங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களும் விரைவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. வொன்சான் போகும் வழி நெடுகிலும், கூரையில் சூரிய ஒளிக் கலங்களுடன், புதிய கல்வீடுகள் கட்டப்படும் காட்சியைக் காணலாம்.

வட கொரிய பொருளியல் நிபுணர்களுடன் பேசினால், இப்போதும் அவர்கள் "தேசியத் தலைவர்" கிம் இல் சுங் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தயங்குவதில்லை. தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, கிம் இல் சுங் உருவாக்கிய ஜூச்சே சித்தாந்தம் தற்போதும் நடைமுறையில் இருப்பதாக அரசு சொல்லிக் கொள்கிறது. இருப்பினும், வட கொரியப் பொருளாதாரம் பெருமளவு சீனாவில் தங்கியுள்ளது. எண்ணை கூட சீனாவில் இருந்து தான் வருகின்றது.

சீனாவில் தங்கியிருப்பதானது, ஒரு பக்கத்தில் வரப்பிரசாதமாகவும், மறுபக்கத்தில் பெரும் ஆபத்தாகவும் கருதப் படுகின்றது. அண்மையில், சீன பெற்றோலிய நிறுவனம், இன்னமும் கட்ட வேண்டிய பணம் பாக்கி இருப்பதாக கூறி, வட கொரியாவுக்கான எண்ணை விநியோகத்தை துண்டித்தது. 

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனா அவ்வாறு நடந்து கொண்டது என்று வட கொரிய அரசு குற்றம் சாட்டுகின்றது. அணுவாயுத ஏவுகணைத் திட்டத்தை கைவிடச் சொல்லியே அந்த அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தம்மைத் தலைநிமிர வைத்த அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்கு வட கொரியர்கள் தயாராக இல்லை.