Thursday, June 19, 2008

"இனம்" காணப்பட்ட தேசியம்


"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா?

"Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய", "கருப்பு-ஆப்பிரிக்க", "மஞ்சள்-சீன" வகை மனிதப்பிரிவுகளை குறிக்கவே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாது, கூடவே "Racism" என்ற ஒன்றையும் கற்பித்து விட்டு சென்றுள்ளனர். சிங்களவர்கள் ஆரியரின் வழித்தோன்றல்கள், தமிழர் திராவிடரின் வழிதோன்றல்கள் என்பது கூட சில ஆங்கிலேய அறிஞர்களின் கண்டுபிடிப்பு தான். அதற்கு முன்பு தாம் சார்ந்த மன்னனுடனும், அல்லது மதத்துடனும் அடையாளம் காணப் பழகிய மக்கள் மத்தியில் ஆரிய, திராவிட கருத்தியல்கள் தூவப்பட்டதும் அந்தக்காலகட்டத்தில் தான்.

இன்று இலங்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களிடமும் மரபணு(DNA) சோதனை செய்யப்பட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். மரபணு அடிப்படையில் இலங்கைத்தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையில் அதிக ஒற்றுமை இருக்கும். அதேநேரம் இலங்கைத்தமிழருக்கும், இந்தியத்தமிழருக்கும் இடையில் வேற்றுமையும் இருக்கும். அதே போல கணிசமான சிங்களவர்கள், இந்திய தமிழருடன் ஒத்த மரபணுக்களை கொண்டிருப்பர். உலகின் பலபாகங்களிலும் இனங்களின் கலப்பு நடந்ததும், பின்னர் மொழியடிப்படையில் பிரிந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஏற்கனவே இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள அயர்லாந்தில் மரபணு சோதனை செய்த விஞ்ஞானிகள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்தனர்.

மொழி அடிப்படையிலான தேசியம் கூட ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இராசதானிக்குள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்க மதம் உதவியது போல; மன்னனின், மதத்தின் ஏகபோக அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மத்தியதர வர்க்கம், புதிதாக "பிரசைகள்" என்று அழைக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க மொழியை பயன்படுத்தியது. அது பின்னர் ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கும் தனது பங்களிப்பை செய்தது. இலங்கையில் ஏகாதிபத்திய மொழியில் கல்விகற்ற உள்ளூர் மத்தியதர வர்க்கம் பின்னர் உள்ளூர் மொழிகளை தமது நன்மைகளுக்காக வளர்க்க வேண்டிய தேவை உருவாகியது. தன்னை போலவே சிந்திக்க வைப்பதற்காக கல்வியூட்டும் ஏகாதிபத்திய நிர்வாக முறை பண்டைய எகிப்திலும் நிலவியது. ஆங்கிலேயரும் அதையே செய்தனர். எல்லாவற்றிலும் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளது போலவே, இந்த கல்விமுறையும் அமைந்தது. ஒருபக்கம் ஏகாதியபத்திய நலன்களை பாதுகாக்கும் அதேநேரம், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் என்பன மறுமலர்ச்சி காண்கின்றன. எகிப்தில் தோன்றிய அரபு-இஸ்லாமிய மறுமலர்ச்சி, இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி, இலங்கையில் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி என்பன பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழே தான் தோன்றின.

எல்லாவற்றையும் கற்றுகொடுத்த ஐரோப்பியர்கள், தேசியம் என்ற சொல்லை தமது தாயகங்களை குறிக்கவே நீண்ட காலமாக பயன்படுத்தினர். பிற்காலத்தில் காலனிய காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட நிர்வாக அலகுகள் சுதந்திர நாடுகளாக மாறியபோது, அவற்றிற்கும் தேசியம் பொருத்தப்பட்டது. அன்றிருந்த ஐரோப்பிய மையவாத கண்ணோட்டம், ஆப்பிரிக்க, ஆசியாவில் இருந்த பல்வேறுபட்ட மக்கட்குழுக்களை "இனங்கள்" என்ற வரையறைக்குள் பார்த்தது. அதனால் தான் மேற்கத்தைய ஊடகங்கள், அரசாங்கங்கள் இன்றும் இலங்கையில் நடப்பதை "இனப்பிரச்சினை" என்று குறிப்பிடும் அதே சமயம், அயர்லாந்தில், யூகோஸ்லேவியாவில் நடந்ததை "மதப்பிரச்சினை" என்றனர். ருவண்டாவில் "இனப்"படுகொலைகளில் இறங்கிய ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை சேர்ந்த ஹூட்டு, துட்சி பிரிவுகள் எந்த அடிப்படையில் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன? ஒரே மாதிரி(கருப்பினத்தை சேர்ந்த) தோற்றமளிக்கும், சூடான் அரபு மொழி பேசுவோருக்கும், டார்பூர் பிராந்திய மொழி பேசும் மக்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம், எதற்கு இனவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது? ஒரே மொழியை பேசுபவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் "செர்போ-குரவசிய" மொழி பேசும் செர்பியரும், குரவசியர்களும் எப்படி வேறு இனங்களாகும்?

பல கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விடை தான் கிடைக்காது. மிகவும் பொருந்தக்கூடிய பதில் ஒன்று மட்டுமே உள்ளது. 19 ம் நூற்றாண்டில் தோன்றிய புதிய அரசியல் தத்துவமான "தேசியம்" என்ற சொற்பதம் இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும், தமக்குள் இலகுவாக தொடர்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மொழி பேசும் மக்கள் குழுக்கள் தாம் ஒரு தேசியமாக பரிணாம வளர்ச்சி அடைவதை விரும்புகின்றனர். ஒரு சில வேளைகளில் அது மதம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியாவில் (கத்தோலிக்கரான) குறோவசியர்கள், (கிரேக்க-கிறிஸ்தவ) செர்பியரிடம் இருந்து தம்மை வேறுபடுத்தி பார்த்தனர். வேறு சில நேரம் அது பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு அரபு மொழி பேசும், அதேநேரம் மதத்தால் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களுமான பாலஸ்தீனியர்கள், தமக்கென "பாலஸ்தீன தேசியம்" ஒன்றை உருவாக்கினர். அதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் யூத மதத்தால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுள்ளனர். அவர்களுக்கிடையில் இருந்த பல்வேறு மொழி பேசுவோர், மறைந்த ஹீப்ரு மொழியை புதிதாக கற்றுக்கொண்டு புதிய தேசியம் படைத்தனர். யூதர்களிடையே காணப்படும் இன/நிற வேறுபாடுகள், அந்த தேசியம் வலிந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றது.

இனம் தொடர்பான சிக்கல்கள் இத்துடன் முடியவில்லை. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதமாக இனங்காணப்படுகின்றன. ஒருபக்கம் தமது "வேர்களை தேடும்" இனங்கள் தேசியங்களை உருவாக்கி நிலைநிறுத்த பட்டுபட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்; மறுபக்கம் இனப்பிரச்சினையின் வேர்களை தேடும் ஆய்வுகளும் தொடரட்டும்.

_____________________________________________________

Friday, June 06, 2008

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி


கத்தோலிக்க பல்கலைக்கழகம், "கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகம்" என்று மறுபெயர் சூட்டப்பட்டது. மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரது படங்கள் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை அலங்கரித்தன. அவை நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சி தந்த விளைவுகள் பற்றி திரும்பி பார்க்கும் வேளை, அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டே, வரலாற்றை பார்க்க மறுக்கும் பலர் எம்மிடையே உள்ளதையும் கவனிக்க வேண்டும். இன்று "ஐரோப்பிய கலாச்சாரம்" என்றும், "ஐரோப்பிய ஜனநாயகம்" என்றும் நாம் காணும் பல மேற்கு ஐரோப்பிய மாணவர் போராட்டங்களின் பலன்கள் என்பதை பலர் அறிவதில்லை. தற்போதும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும், இடதுசாரி எழுத்தாளர்களும் 1968 புரட்சியை பற்றி, மக்களுக்கு தவறாக காட்ட விளைகின்றனர். அன்றைய இளைஞர்கள் கட்டற்ற பாலியல் உறவு வேண்டினர் என்று கொச்சைப்படுத்தும் "ட்ரீமர்ஸ்" படம், மக்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கின்றது. "கனவு காண்பவர்கள்" என்ற தலைப்பே, புரட்சி என்பது வெறும் கனவு மட்டுமே என்று எடுத்தியம்புகின்றது.

உண்மையில் 1968 மே மாதம் பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர் புரட்சி, சூனியத்தில் இருந்து தோன்றவில்லை. அதற்கு முன்னரே ஜேர்மனிய மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். "ஹிட்லரின் பிள்ளைகள் நாம், நாசிச கடந்த காலத்துடன் கணக்கு தீர்க்க வந்திருக்கிறோம்." என்ற முழக்கத்துடன் பெர்லின் மாணவர் போராட்டம், மேற்கு ஜெர்மனியில் பதவிகளில் இருந்த முன்னாள் நாசிச அனுதாபிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஆரம்பத்தில் முன்வைத்தது. பின்னர் "செம்படை பிரிவு"(RAF) என்ற ஆயுதகலச்சாரத்தை நம்பும் தீவிரவாத குழுவாகியது வேறு கதை. அதே போல தசாப்த காலம் நீடித்த வியட்நாம் போரை நிறுத்திய அமெரிக்க மாணவர் போராட்டம், பின்னர் ஹிப்பி கலாச்சாரமாக சீரழிந்தது தனிக்கதை.
பிரான்ஸ் மட்டுமே புரட்சியின் விளிம்பிற்கு சென்று மீண்டது. பாரிஸ் நகர பல்கலைக்கழக நிர்வாகத்தை கைப்பற்றிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர் மத்தியிலும் புரட்சியை முன்னெடுப்பது குறித்து வகுப்புகள் எடுத்து, இயக்கமாக்கினர். தொழிற்சாலைகளை கைப்பற்றிய தொழிலாளர்கள், அவற்றை தாமே நிர்வகித்தனர். இருப்பினும் வன்முறை பிரயோகிக்க தயாராக இருந்த அரச இயந்திரம், அதனோடு ஒத்துழைத்த கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற காரணங்களால் புரட்சி வெற்றியடையவில்லை. அன்று மாணவர் தலைவர்களாக இருந்தவர்கள், தற்போது நிர்வாகிகளாகவும், முதலாளிகளாகவும் மாறியுள்ளனர். உண்மையில் மேற்கு ஐரோப்பா அன்றும் புரட்சிக்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் கேட்ட சீர்திருத்தங்களை வழங்கி விட்டு, தமது இருப்பை காப்பாற்றிக் கொண்டன அரசாங்கங்கள்.

அப்போது ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி (அரச ஆசீர்வாதத்துடன்) மக்களின் வாழ்க்கையை, சிந்தனையோட்டங்களை மாற்றியது. மதங்கள் நிர்ணயித்த பழமைவாத கட்டுப்பாடுகள் தளர்ந்தன. பாலியல் சுதந்திரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஓரங்கமாகியது. மேலும் மார்க்சையும், மாவோவையும் படித்து விட்டு மாணவர்கள் கோரிய "அதிகபட்ச ஜனநாயகம்", வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, தொழிலாளர் நலன் குறித்து தீர்மானிப்பதில் தொழிற்சங்கத்தின் பங்கு என்பன அதன் பின்னரே ஏற்பட்டன. பலர் நினைப்பது போல, இத்தகைய அம்சங்கள் "ஐரோப்பாவின் மூலவளங்கள்" அல்ல. அவை யாவும் அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பலன்கள்.

அன்று இருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் யாவும் புரட்சிக்கு விரோதமாக இருந்ததால், மாணவர்கள் வெறுப்படைந்திருந்தனர். அதனால் தான் ஆங்காங்கே பல ஆயுதபோரட்டத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. பிரான்சில் Action Directe, ஜெர்மனியில் Rotte Armee Fraktion, இத்தாலியில் Red brigade, பெல்ஜியத்தில் CCC, என்பன குண்டுவெடிப்புகள், அரசியல் தலைவர்கள், முதலாளிகளை கொலைசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டன. ஜனநாயக வழியில் போராட நினைத்த மாணவர்கள் மாவோயிச கட்சிகளை நிறுவினர். இன்று தீவிரவாத இயக்கங்கள் மறைந்து விட்டன. மாவோயிச கட்சிகள் ஓரளவிற்கு நிலைத்து நிற்கின்றன.

அன்றிருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள், "ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, மிதவாத நிலைஎடுத்ததும், புரட்சி ஏன் வெல்லவில்லை என்பதற்கான காரணம். ஸ்டாலினுக்கு பின்னர் வந்த குருஷேவ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நிராகரித்து, "சமாதான சகவாழ்வு" என்ற புது சித்தாந்தம் வகுத்தால்; கருத்து வேறுபாடுகளை கொண்ட சீன, அல்பேனிய கொம்யூனிஸ்டுகள் மூன்றாம் கொம்யூனிச அகிலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ரஷ்ய வழியை பின்பற்றிய பிற கொம்யூனிஸ்ட் கட்சிகளை "திரிபுவாதிகள்" என்றழைத்தனர். தாம் மட்டுமே புரட்சிகர பாதையில் செல்வதாக கூறினர். இதனாலேயே அறுபதுகளில் மேற்கு ஐரோப்பாவில் எழுச்சியுற்ற மாணவர்கள், மாவோவை பின்பற்றினர். இந்த வரலாற்று தொடர்ச்சியை காண மறுக்கும் சில இடதுசாரி எழுத்தாளர்கள், "1968 புரட்சியின் தோல்விக்கு" வேறு காரணங்களை தேடுகின்றனர்.

உண்மையில் அன்றைய புரட்சி வெற்றியடையாவிட்டாலும், நிச்சயமாக தோல்வியடையவில்லை. காலம்காலமாக ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை தீர்மானித்த பழமைவாதிகள் செல்வாக்கற்ற சிறுபான்மயினராகினர். அந்த இடத்தை தனி மனித சுதந்திரம் பிடித்துக்கொண்டது. உண்மையில் லிபரல்களுக்கும் பிடித்த விடயம் அது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை, பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தமை என்பன, அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பெறுபேறுகள். மேற்கு ஐரோப்பிய அரசுகள் அவ்வப்போது வெடிக்கும் மக்கள் போராட்டங்களை அங்கீகரித்து, சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் தனது இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை, ஆண்டாண்டு காலமாக மக்கள் போராடி பெற்ற உரிமைகளை, தான் "மனவுந்து கொடுத்த" சலுகைகள் போல காட்டிக்கொள்ள உதவுகின்றது. அதனாலே தான் இன்று உலகில் பலர், 1968 பிரெஞ்சு புரட்சியை போன்ற பல விடயங்களைப் பற்றி கேள்விப்படாதவர்களாக உள்ளனர்.

______________________________________________