1986, டிசம்பர், TELO, PLOTE இந்த வரிசையில் இறுதியாக EPRLF இயக்கமும் புலிகளால் தடை செய்யப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு:
புலிகள் TELO வை அழித்த பின்னர் EPRLF மீது கைவைக்க மாட்டார்கள் என்று அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நம்பினார்கள். அதற்கு காரணம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏனைய இயக்கங்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. (ஆனால் அந்தளவுக்கு ஆயுத பலம் இருக்கவில்லை.)
குறிப்பாக, 1986 ம் ஆண்டு TELO அழிக்கப்பட்ட பின்னரான காலங்களில், டிசம்பர் மாதம் தடை செய்யப்படும் வரையில் EPRLF புலிகளை விமர்சிக்கும் பொது கூட்டங்களை நடத்தி இருந்தது. இருப்பினும் அந்த எதிர்ப்பு அஹிம்சா வழியில் இருந்ததே தவிர, எந்தக் கட்டத்திலும் வன்முறை பிரயோகிக்கப் படவில்லை. அதை விட EPRLF க்கு கீழே பல வெகுஜன அமைப்புகள் இயங்கின. இது போன்ற காரணங்களினால் புலிகளால் தம்மை அழிக்க முடியாது என்று EPRLF காரர்கள் நினைத்து இருக்கலாம்.
திடீரென ஒரு நாள் EPRLF தடை செய்யப்பட்டுள்ளது என புலிகள் அறிவித்தனர். அப்போது கூட எந்த இடத்திலும் ஆயுதமேந்திய எதிர்ப்பு இருக்கவில்லை. அதற்கு காரணம் EPRLF ஒரு சகோதர யுத்தத்திற்கு தயாராக இருக்கவில்லை. ஒருவேளை இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்த படியால், ஏற்கனவே EPRLF மேல் மட்ட தலைவர்கள் இந்தியாவுக்கு சென்று விட்டனர். ஒன்றுமறியாத இடை மட்ட தலைவர்களும் சாதாரண உறுப்பினர்களும் அகப்பட்டுக் கொண்டனர்.
இராணுவ சுற்றிவளைப்பு மாதிரி புலிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று EPRLF உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கைது செய்து சிறைப் பிடித்துச் சென்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளை கையளிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்க பட்டனர். "சிங்கள இராணுவத்திடமிருந்து கூட தப்பலாம். ஆனால் புலிகளிடமிருந்து தப்ப முடியாது. முன்பு இராணுவத்துக்கு பயந்து ஒளிந்த மாதிரி புலிகளுக்கு பயந்து எங்கேயும் ஒளிய முடியாது..." என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
உண்மையில், இராணுவ சுற்றிவளைப்புகளில் இளைஞர்களை கைது செய்து முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மாதிரி தான், மாற்று இயக்கங்களை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் புலிகளின் இராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். EPRLF உறுப்பினர்களில் முக்கியமானவர்கள், அதாவது தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களை மாத்திரம் தெரிந்தெடுத்து தனியாக கொண்டு சென்றனர். அவர்களை விடுவிக்கவில்லை. ஏனையவர்கள், அதாவது சாதாரண உறுப்பினர்களை, பச்சை மட்டை அடி போட்டு இனிமேல் EPRLF உடன் சேரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்க பட்டனர்.
ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக "பச்சை மட்டை அடி" என்ற சொல் வழக்கு அப்போது தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதன் அர்த்தம் வேறு. பொதுவாக இராணுவம் சாதாரண இளைஞர்களை பிடித்து சில நாட்கள் தடுத்து வைத்திருந்து (பச்சை மட்டை) அடி போட்ட பின்னர் விடுதலை செய்யும். தமிழ் மக்களின் பார்வையில், அன்று புலிகளின் நடவடிக்கையும் அவ்வாறு தான் அமைந்திருந்தது.
மேலதிக தகவல்: புலிகள் EPRLF இயக்கத்தை தடை செய்த அதே காலகட்டத்தில் சிங்கள இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறவில்லை. இத்தனைக்கும் இராணுவ முகாம்களை சுற்றி இருந்த இடங்களில் காவலரண்கள் வெறுமையாக இருந்தன. காரணம் அங்கு காவல் கடமையில் இருந்த EPRLF உறுப்பினர்களும் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே நேரம் EPRLF எதிர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி காவல் கடமையில் இருந்த LTTE உறுப்பினர்களும் விலக்கப்பட்டு இருந்தனர்.
உண்மையில் சிங்கள இராணுவம் நினைத்திருந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கை எடுத்து முன்னேறி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒருவேளை இந்த தமிழ் ஆயுதபாணி இயக்கங்கள் தமக்குள் சண்டையிட்டு அழிந்து போவார்கள், அதனால் தமக்கு வேலை மிச்சம் என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

No comments:
Post a Comment