Saturday, December 27, 2008

ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)


சைப்ரஸ் என்ற சிறிய தீவில், இரண்டு சுதந்திர நாடுகள் ஒரு தலைநகரத்தை கொண்டுள்ளன. அதைவிட முன்னாள் காலனிய எஜமானான பிரித்தானியா ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளர். இனப்பிரச்சினையால் பிளவுபட்ட தேசம், முப்பது ஆண்டுகள் அமைதியின் பின்னரும் ஆறுதலடையவில்லை.


ஐரோப்பாவின் பிரிட்டிஷ் காலனி நாடான சைப்ரஸ், விடுதலைக்காக போராடியது EOKAS என்ற வலதுசாரி தேசியவாத இயக்கம். சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியமைத்த அந்த இயக்க வழிவந்த தலைவர் ஒருவரின் அண்மைய மரணம், மீண்டும் இனப்பிரச்சினை சர்ச்சைகளை உருவாக்கியது. சில தினங்களுக்கு முன்னர்(12 டிசம்பர்) சுவாசப்பை புற்றுநோயால் காலமான முன்னாள் சைப்ரஸ் ஜனாதிபதி தசொஸ் பபடோபுலோஸ்(Tassos Papadopoulos), இறந்த பின்னும் நீருபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையை கிளறிவிட்டார். தெற்கு கிரேக்க சைப்ரஸ் ஊடகங்கள் யாவும் அவரை ஒரு தன்னிகரற்ற தேசியத் தலைவராக பாராட்டிக் கொண்டிருந்தன. என்னோடு பேசிய கிரேக்க சைப்ரஸ்காரர்கள், பிரிவினைவாத துருக்கி இனத்தவருக்கு ஒரு அங்குல நிலமேனும் விட்டுக்கொடுக்காத அரசியல் தலைவராக பார்த்தனர். இது சைப்ரஸ் இனப்பிரச்சினை தொடர்பாக அவர்களது புரிதல் சம்பந்தமானது. பெரும்பாலான கிரேக்க மொழிபேசுவோர் தமது நாட்டில் இனபிரச்சினை ஒருநாளும் இருந்ததில்லை என்றும், துருக்கியின் நில ஆக்கிரமிப்பு மட்டுமே ஒரு பிரச்சினை எனக் கூறினர். வயதான கிரேக்க சைப்ரஸ்காரர்கள் தமது இளமைக்காலத்தில் துருக்கி இன நண்பர்கள் இருந்ததாகவும், தமக்கிடையே எந்தவித பகை முரண்பாடுகள் இருக்கவில்லை என்றும் கூறினர்.



வடக்கு துருக்கி சைப்ரஸ் ஊடகங்கள் அதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை முன்வைத்தன. தசொஸ் பபடோபுலோசின் இறுதிச்சடங்குகளில் துருக்கியினத் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாதது சரியானதே என்றும், துருக்கி இனப்படுகொலைகளுக்கு காரணமான கடும்போக்கு கிரேக்க இனவாதியின் மரணம் சரித்திரமாகிப் போகட்டும் என்றும் குறிப்பிட்டன. அவை மேலும் கடந்த கால கசப்பான நினைவுகளை மீண்டும் இரைமீட்டன. EOKAS ஆயுதபாணிகள் வீதித்தடை சோதனை அரண்களை
அமைத்து, துருக்கி இளைஞர்களை வேறுபடுத்தி பிடித்துச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தமை. துருக்கி கிராமங்களில் நுழைந்து வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடு பார்க்காமல் கொன்று குவித்து மனிதப்புதைகுழிகளுக்குள் புதைத்தமை, அது மட்டுமல்லாது சில கிரேக்க மக்களையே உளவாளிகள் என்று சந்தேகத்தின் பேரில் கொலை செய்தமை... துருக்கி ஊடகங்கள் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு நீண்டு செல்கின்றது. இது போன்ற சம்பவங்கள் சைப்ரசில் (1974 ம ஆண்டு துருக்கி படையெடுப்பிற்கு முன்னும் பின்னும்) நடந்துள்ளன என்பதையும், அதற்கு பொறுப்பான EOKAS ஆயுதபாணிகள் குற்றவாளிகள் என்பதையும் மிதவாத கிரேக்க மக்கள் மறுக்கவில்லை. ஆனால் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி(EOKAS தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும்) அந்த குற்றங்களை செய்யவில்லை என்கின்றனர். இது போன்ற இருதரப்பு சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்ற உண்மை, இரண்டு இனங்களும் எவ்வளவு தூரம் பிரிந்து வாழ்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.


வடக்கு சைப்ரஸ் பகுதிகளில் தமக்கென தனிநாடு கண்ட துருக்கி இனத்தவர்கள், தமது தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்காத காரணத்தால், பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். வீதிகளில் துருக்கி மொழியிலான பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் துருக்கி மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது.(ஆங்கில மொழிவழி சர்வதேச கல்லூரிகள் விதிவிலக்கு) ஆண்டு தோறும் துருக்கி வழங்கும் மில்லியன் டாலர் மானியம் மட்டும் இல்லையென்றால், இந்த தனி நாடு என்றோ திவாலாகி இருக்கும். வடக்கு சைப்ரசில் நான் சுற்றுப் பயணம் செய்த போது, துருக்கி நாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது. கடைகளில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாக காணப்பட்டன. துருக்கி நாணயமான லீரா புழக்கத்தில் உள்ளது. வடக்கு சைப்ரசின் பாதுகாப்பு முழுவதும், அங்கே நிலை கொண்டுள்ள துருக்கி இராணுவத்தின் கையில் உள்ளது. கணிசமான துருக்கியின சைப்ரஸ்காரர்கள் மத்தியில் துருக்கிக்கு எதிரான வெறுப்பு காணப்படுகின்றது. தமது சொந்த நாட்டில் தாம் சிறுபான்மையாகி வருவதாகவும், துருக்கியில் இருந்து வந்து குடியேறுபவர்கள் அதிகரித்து வருவதாக குறைப்படுகின்றனர். பல தொழில்வாய்ப்புகளை துருக்கியில் இருந்து வந்து குடியேறியவர்கள் அபகரிப்பதாகவும், சிறு வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அவர்கள் நடத்துவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

கிரேக்க சைப்ரஸ் பகுதிகள் எதிரான பிம்பம் ஒன்றை வழங்குகின்றது. வீதிகளில் கிரேக்க மொழியில் பெயர்ப்பலகைகள் தொடக்கம் எங்கும் எதிலும் கிரேக்க மொழி கோலோச்சுகின்றது. இரண்டு பகுதிகளிலும் ஆங்கில மொழி பயன்படுத்தப் படுகின்றது. கிரேக்க இன - துருக்கி இன இளம்தலைமுறை காலனிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். கிரேக்க பகுதிகளில் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரித்தானியாவின் ஆதிக்கம் தொடர்கின்றது. பிரிட்டிஷ் வர்த்தக நிலையங்கள் பெரும் முதலீட்டில் கடை விரித்துள்ளன. அது தவிர அதிகளவு தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் அதிகமான வீடுகளை வாங்குபவர்களும் பிரிட்டிஷ்காரர்கள் தான்.


தெற்கு சைப்ரசில் லிமசோல்(Limassol) நகரத்திற்கு அருகிலும், வடக்கு சைப்ரசில் பாமகுஸ்தா(Famagusta) நகரத்திற்கு அருகிலும், இரண்டு பிரிட்டிஷ் இராணுவத்தளங்கள் இப்போதும் உள்ளன. ஒவ்வொரு இராணுவ தளமும் குறைந்தது 20 அல்லது 30 கி.மி. பரப்பளவான சைப்ரஸ் நிலத்திற்கு வாடகை கொடுக்கின்றன. இந்த தளங்களுக்கென தனியான விமானநிலையங்கள் உள்ளன. இந்த இராணுவத்தளங்கள் சுயாதீனமானவை. சுருக்கமாக சொன்னால், பிரிட்டிஷ் அரசிற்கு சொந்தமானவை. அங்கே பிரிட்டிஷ் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். பெருமளவு பிரிட்டிஷ் இராணுவவீரர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பிற பணியாளர்கள் அந்த தளங்களில் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். அங்கே பவுன் நாணயம் புழக்கத்தில் உள்ளது. (சைப்ரஸ் நாணயம் யூரோ). இதைவிட மலைப்பகுதியான துரூடோசில்(Troodos) பிரிட்டிஷ் செய்மதி தொடர்பு நிலையமொன்று, மத்திய கிழக்கு நாடுகளை கண்காணித்து வருகின்றது. ஈராக்கிற்கு அனுப்பபட்ட அமெரிக்க படைகள், இந்த தளங்களை பயன்படுத்தின.

சைப்ரஸ் என்ற குட்டித் தீவில், வடக்கே துருக்கி நாடு, தெற்கே கிரேக்க நாடு, பிரிட்டனின் கடல்கடந்த பகுதி என்ற மூன்று தேசங்கள் உள்ளன. அதனை மெய்ப்பிப்பது போல, வடக்கே துருக்கி கொடியும், தெற்கே கிரேக்க கொடியும், பிரிட்டிஷ் இராணுவதளங்களில் பிரிட்டிஷ் கொடியும் பறக்கின்றன.

- தொடரும்.....

முன்னைய பதிவு:
இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்




Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Wednesday, December 24, 2008

இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்


வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான உசாத்துனையாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், துருக்கிக்கும், கிரீசிற்கும் இடையிலான அதிகாகரப் போட்டியில் சிக்கி, இனரீதியாக இரண்டாக பிரிந்திருக்கும் தேசம் சைப்பிரஸ். பெரும்பான்மை கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும், தீவின் 60% நிலப்பரப்பை கொண்ட, தெற்கு பகுதியே " சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கே சிறுபான்மை துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும், 40 % நிலப்பரப்பை கொண்ட " வடக்கு சைப்ரஸ் துருக்கி குடியரசு" (சுருக்கமாக TRNC) தன்னை சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தாலும், இதுவரை துருக்கியை தவிர வேறு எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

"பெர்லின் மதில்" வீழ்ந்ததை, குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வாக எல்லோரும் அன்று கொண்டாடினார்கள். பெர்லின் மதில், இரண்டு அரசியல் கோட்பாடுகளை கொண்ட தேசங்களை பிரித்ததால், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். சைப்பிரஸ் தீவை பிரிப்பது, இருநாடுகளுக்கிடயிலான சர்வதேச எல்லையாக, எவராலும் (வடக்கு சைப்ரஸ் தவிர) கருதப்படவில்லை. அதனால் அதனை "பச்சைக் கோடு" (Green Line) என்ற பெயரில், ஐ.நா. சமாதானப்படை பாதுகாக்கின்றது. எல்லையில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால், குறிக்கப்பட்ட எல்லைக்காவல் நிலையங்களூடாகத்தான் பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியும்.

தலைநகரம் நிகோசியா, பெர்லின் நகரம் போல இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரபல கடைத்தெருவான "லேட்ரா தெரு" முடிவில் எல்லைக்காவல் நிலையம் உள்ளது. கிரேக்க சைப்ரசில் இருந்து செல்பவர்களுக்கு, துருக்கி பொலிஸ் ஒரு சிறிய துண்டில், நுழைவு விசா குத்தி தருகின்றது. முன்பு பாஸ்போர்ட்டில் இந்த விசா இருந்தால், கிரேக்க சைப்பிரசினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துருக்கி சைப்பிரசின் எந்தவொரு அரசாங்க பத்திரத்தையும், கிரேக்க சைப்ரஸ் சட்டவிரோதமாக பார்க்கின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் தான், இரண்டு பகுதிகளுக்குமிடையில் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. "வடக்கு சைப்ரஸ் அரச வர்த்தக ஆணையகம்" வழங்கும் பத்திரங்களை, தெற்கு சைப்ரஸ் ஏற்க மறுத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இரு தரப்புக்குமிடையில், அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றது. தெற்கு சைப்ரஸ் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான பின்னர் தான், இது சாத்தியமாகியது. வடக்கு சைப்ரஸ் பகுதிகளுக்கும் சேர்த்து, (கிரேக்க) சைப்ரஸ் குடியரசு உரிமை கொண்டாடுவதை, சர்வதேசம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் வடக்கு சைப்ரஸ், தனி நாடாக செய்யற்பட்டு வருவது கண்கூடாக தெரியும் யதார்த்தம் என்பதால், அங்கே கிரேக்க சைப்ரஸ் குடியரசின் அதிகாரம் செல்லாது என்பதாலும் தான், ஐரோப்பிய ஒன்றிய அனுசரணை கோரப்பட்டது.

சைப்ரசை இரண்டு துண்டுகளாக்கிய 1974 ம் ஆண்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. போருக்கு முன்னர், வடக்கு பகுதியில் கிரேக்க மக்களும், தெற்கு பகுதியில் துருக்கி மக்களும், கணிசமான தொகையினராக ஒன்று கலந்து வாழ்ந்து வந்தனர். இனப்பிரச்சினை முற்றி இனக்கலவரமாகி, அதனால் சிறுபான்மை துருக்கி இனத்தவர்கள், தமக்கென தனி நாடு கோரி வந்தார்கள். கடல் கடந்து வாழும் தனது சகோதர இனத்தவர்கள் கொல்லப்படுவதாக காரணம் காட்டி, துருக்கி இராணுவம் படையெடுத்தது. இப்போதிருக்கும் பச்சைக் கோடு வரை முன்னேறிய துருக்கி இராணுவத்தை, எதிர்க்க முடியாத கிரேக்க சைப்ரஸ் இராணுவம் பின்வாங்கி, போர்நிறுத்தம் வந்தது.

அத்தோடு பிரச்சினை தீரவில்லை. வடக்கில் வாழ்ந்த கிரேக்க இனத்தவர்கள் பலர், (துருக்கி தேசியவாதிகளாலும், ஆக்கிரமிப்பு படைகளாலும்) படுகொலை செய்யப்பட்டதால், கிரேக்க மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அதேபோல தெற்கில் வாழ்ந்த துருக்கி இனத்தவர்கள் பலர், (கிரேக்க பேரினவாதிகளால்) படுகொலை செய்யப்பட்டதால், துருக்கி மொழி பேசும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். பிற்காலத்தில் பொஸ்னியாவில் நடந்த இனச்சுத்திகரிப்பு நாடகம், அப்போதே சைப்ரசில் அரங்கேறியது. இந்த கடந்தகால இனப்படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை எதிரொலிக்கின்றது. தேசத்தை ஒன்றிணைப்பதற்கு, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தடையாக உள்ளனர். இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இருக்கும் கடும்போக்காளர்கள், கடந்த கால இழப்புகளை வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், நிலங்கள், உடமைகள் யாவும் அகதிகளாக வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இது இரண்டு பக்கமும் நிகழ்ந்தது. கிரேக்க மக்கள் பெரும்பான்மையினர் என்பதால், அவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கு சைபிரசில் அவர்கள் அதிகளவு நிலங்களை இழந்தனர். மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவான துருக்கி மக்கள், தற்போது 40% சைப்ரசிற்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று வரை வடக்கு சைப்ரசில் நிலை கொண்டுள்ளது. அதனால் கிரேக்க மக்கள் இன்றும் கூட வடக்கு சைப்ரசை தனி நாடாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என கூறி வருகின்றனர். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

வடக்கு சைப்ரசில் துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம், தீவின் இனவிகிதாசாரத்தை மாற்றும் வகை, துருக்கி மொழி பேசும் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில், திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. துருக்கி குடியரசில் இருந்து பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள், வீடு, நிலம், பிற வசதிகளை செய்து தருவாதாக வாக்குறுதியளித்து, வடக்கு சைப்ரசில் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது தேசத்தை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, கிரேக்க சைப்ரஸ் இந்த குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும், என்று கோரி வருகின்றது. பேச்சுவார்த்தை முறிவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது.

நிலப்பிரச்சினை அண்மையில் இன்னொரு பரிமாணத்தை கண்டது. வடக்கு சைப்ரஸ் மொத்த தீவிலும், பல அழகான பகுதிகளை கொண்டது. இதனால் (முன்னாள் காலனித்துவ நாடான) பிரித்தானியாவை சேர்ந்த, ஓய்வூதியம் பெறும் வயோதிப ஆங்கிலேயர்கள், அங்கே வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். தெற்கு சைப்ரசை விட வீடுகளின் விலை வடக்கில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வீட்டுமனைகள் பல, குடிபெயர்ந்த கிரேக்க இனத்தவருக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக, சைப்ரஸ் குடியரசு ஆட்சேபித்து வருகின்றது. நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை, அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் போனது. இடம்பெயர்ந்து வாழும் கிரேக்க சைப்ரஸ் மனுதாரர் ஒருவர், வடக்கு சைப்ரசில் தனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வீடு கட்டி இருப்பதாக, ஆவணங்களை கொண்டு நிரூபித்ததால், அந்த வீட்டை இடிக்கும் படி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வடக்கு சைப்ரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரிட்டிஷ் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை இழக்கப்போவது ஒரு புறமிருக்க, தெற்கு சைப்ரசில் துருக்கி மக்களுக்கு சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை பன்முகப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரசை விட தெற்கு சைப்ரஸ் குடியரசு, பல வழிகளிலும் முன்னேறி உள்ளது. எப்படியோ சம்பள விகிதம் வடக்கை விட தெற்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகம். இதனால் அண்மைக்காலத்தில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தொடர்ந்து, பல துருக்கி இனத்தவர்கள் தெற்கு சைப்ரஸ் வந்து வேலை செய்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இணைவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது. பெரும்பாலான வடக்கத்திய துருக்கி மக்கள் இணைவுக்கு ஆதரவாகவும், அதேநேரம் தெற்கத்திய கிரேக்க மக்கள் இணைப்புக்கு எதிராகவும் உள்ளனர்.


கிரேக்க சைப்ரஸ்காரர்களின் பணபலம் அவர்களுக்கு திமிரையும் கொடுத்துள்ளது. பலர் இனப்பெருமை கொள்பவர்களாகவும், அதுவே சிலவேளை வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதமாக மாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தீவொன்றில் வாழும் காரணமாக இருக்கலாம் என்று, என்னோடு பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதம் சைப்ரசில் எந்தளவிற்கு உள்ளது என்பது பற்றியும், வளர்ந்த நாட்டில் எவ்வாறு ஊழலும் வளர்ந்துள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

- தொடரும்...........
________________________________________
முன்னைய பதிவு:
சைப்பிரசில் ஓர் ஈழம்

Video : North Cyprus(in Dutch)


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Friday, December 19, 2008

கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிரீஸ் மாணவர் எழுச்சி அலை, பத்து நாட்களாகியும் இன்னும் ஓயவில்லை. ஆளும் வலதுசாரி அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்த பின்னரும் கலவரங்கள் தணியவில்லை. வாரக்கணக்காக தொடர்ந்த கலவரங்கள் காரணமாகத் தான், நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினை என்பதையும், அதனை இல்லாதொழிக்க வேண்டிய அவசியத்தையும் கிரீஸ் அரசாங்கம் உணர்ந்து கொண்டது. (நமது அரசாங்கங்களும், இது போன்ற கலவரங்கள் நடக்கும் வரை காத்திருக்கிறார்கள் போலும்.) இருப்பினும் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் தான் மாணவர் எழுச்சிக்கு காரணம் என்ற போதும், அதை தவிர வேறு பொருளாதார நடைமுறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு தெரியாதாம். அதனால் ஏற்கனவே பாதிப்படைந்த தேசப் பொருளாதாரத்தை, கலவரங்கள் மேலும் பின்னடைய வைத்துள்ளதாக கிரீஸ் பிரதமர் கவலைப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தில் மட்டும் 400 க்கும் அதிகமான வர்த்தக ஸ்தாபனங்கள் தீக்கிரையாகியுள்ளன. நகரமத்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வைக்கப்பட்டிருந்த பாரிய கிறிஸ்துமஸ் மரம் கூட தீயிடப்பட்டது. (இது பண்டிகைக் காலமாகையால், வியாபாரத்தை அதிகரிக்க ஐரோப்பிய நகரத்தெருக்களில் சோடனை அலங்காரங்கள் காணப்படும் ) பொருளாதார பிரச்சினை காரணமாக பெருமளவு மக்கள், பண்டிகை காலங்களில் செலவிட அதிக பணமில்லாமல் இருக்கும் வேளை, பணக்காரர்கள் மட்டும் வழமை போல வாங்கிக் குவிக்கின்றனர். இது போன்ற வர்க்க வேறுபாடு தான், கலவரக்காரர்களை மக்கள் ஆதரிக்க காரணம்.

டிசம்பர் 16 ம் திகதி, ஒரு இளைஞர் குழு தேசிய தொலைக்காட்சியின்(NET) செய்தி நேரத்தின் போது, அந்த நிலையத்தினுள் புகுந்தது. அப்போது அந்த தொலைக்காட்சி, கிரேக்க பிரதமரின் பாராளுமன்ற உரையை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தது. சிறிது நேரம் அந்த ஒளிபரப்பு தடைப்பட்டு, தொலைக்காட்சி கமெராக்கள் புரட்சி வாசகங்களை தாங்கி இருந்த இளைஞர்களை படம் பிடித்தன. "தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டு, வீதிக்கு வந்து போராடுங்கள்" என்று கிரேக்க மொழியில் எழுதியிருந்த வாசகங்களை, நாடு முழுவதும் மக்கள் கண்டுகளித்தனர். அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


VIDEO of the Police Bus set on fire in Athens




________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Saturday, December 13, 2008

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை


12 ஜனவரி, 2007 ம் ஆண்டு, ஏதென்சில், கிறீஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தின் மீது, ராக்கெட் லோன்ஜெர் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது குளியலறை சேதமடைந்தது. “புரட்சிகர யுத்தம்” என்ற இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையில்: “ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பரிசு.” என்று உரிமை கோரியது.

2003 ம் ஆண்டில் இருந்து, ஏதென்ஸ் நகரம் பல குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. ஒரு பொலிஸ் நிலையம், பொலிஸ் வாகனம், ஒரு நீதிமன்றம், தொழில் அமைச்சு, இவ்வாறான இலக்குகளில், வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும் மேற்படி இயக்கம் என அறியப்படுகின்றது. இதை தவிர தொழிலாளர் வேலைநிறுத்தம், மாணவர் போராட்டம் என்பன அடிக்கடி நகரங்களை ஸ்தம்பிக்க வைக்கும். பண்டிகை காலங்களுக்காக வியாபாரம் களைகட்டியிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில், வங்கிகள், கடைகள், வாகனங்கள் என்பன ஆர்ப்பாட்டக்காரரால் எரிக்கப்பட்டன.

மன்னிக்கவும், இந்த சம்பவங்கள் நடந்தது பாக்தாத்தில் அல்ல. அமைதிப்பூங்கா என்று கருதப்படும் ஐரோப்பாவின் ஒரு பகுதியில், கிறீசின் தலைநகரம் ஏதென்ஸ் கொந்தளிக்கிறது. ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கு நாகரீகம், ஜனநாயகம் பற்றி சொல்லிக் கொடுத்த கிரேக்க நாடு அது. இப்போதும் ஐரோப்பிய பாடநூல்கள், கிரேக்கத்தை “ஜனநாயகத்தின் தொட்டில்” என்று பழம்பெருமை பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து விடுதலை பெற்ற பிறகே, நவீன கிரேக்க குடியரசின் வரலாறு ஆரம்பமாகின்றது.

இரண்டாவது உலகப்போர் காலங்களில், நாசி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போதும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின்(KKE) கெரில்லா இராணுவம், தனந்தனியாக போராடி தேசத்தை விடுவித்தது. இருப்பினும் நாசிசம் தோற்றுக்கொண்டிருந்த வேளை, பிரித்தானியா கேந்திர முக்கியத்துவம் கருதி கிறீசிற்கு உரிமை கோரியது. பிரிட்டிஷ் “கனவான்களின்” மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலினும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆயுத உதவி செய்யவில்லை. விளைவு? கிறீஸ் குடியரசு உருவாகிய பின்னர், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் போர் மூண்டது. இறுதியில் பிரிட்டிஷ் வல்லரசின் கை ஓங்கவே, ஆயிரக்கணக்கான போராளிகளும், அவர்களது குடும்பங்களும், சோஷலிச நாடுகளில் அடைக்கலம் பெற்றனர். தொடர்ந்து கிறீசை “பாதுகாக்கும்” பொறுப்பை, பிரித்தானியா அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது.

கிரேக்க நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட்களை அடித்து விரட்டி விட்டாலும், அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவாலும், சுற்றவர சோஷலிச நாடுகள் இருந்ததாலும், மீண்டும் கம்யூனிச புரட்சி தலையெடுக்கலாம் என்று அமெரிக்கா அஞ்சியது. அதனால் “எப்பாடு பட்டாவது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தனது கடமை” என்று கருதிய அமெரிக்கா, 1967 ம் ஆண்டு சில வலதுசாரி இராணுவ ஜெனரல்கள் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற உதவியது.

“ஜனநாயகத்திற்கும் இராணுவ ஆட்சிக்கும் இடையில் என்ன சம்பந்தம்?” என்று யாரும் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. அது தான் அமெரிக்கா! சி.ஐ.ஏ. ஆசியுடன் இந்த இராணுவ ஜெனரல்களின் கொடுங்கோலாட்சி ஏழு வருடங்கள் (அதாவது 1974 வரை) நீடித்தது. எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அல்லது தொலைதூர தீவுகளில் சிறைவைக்கப்பட்டனர். அந்தக் காலங்களிலும் கிரேக்க தீவுகளில், பெருவாரியாக தமது விடுமுறைகளை கழிக்க வந்த மேலைத்தேய சுற்றுலா பயணிகளுக்கு வெயில் சுடுவது மட்டும் பெரிய கொடுமையாக தெரிந்திருக்கும்.

கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) சதிப்புரட்சிக்கு முன்னரே தடைசெய்யப்பட்டு விட்டாலும், இராணுவ சர்வாதிகாரத்திற்கு மிகப்பெரிய சவால் மாணவர்கள் மத்தியில் இருந்தே வந்தது. ஏதென்ஸ் நகர மத்தியில் அமைந்திருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Polytechnic), அதன் மாணவர்களால் எதிர்ப்பு அரசியல் தளமாக பயன்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு செல்லாமல், பல்கலைக்கழகத்தில் தங்கி மறியல் செய்தனர். சிறிய வானொலி நிலையம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் மக்களை கிளர்ந்தெழுந்து, இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து, புரட்சி செய்யுமாறு அறைகூவல் விடுத்தனர்.

அவர்களது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு பெருகுவதை காணச் சகியாத இராணுவ அரசு, படையினரை ஏவி விட்டு போராட்டத்தை நசுக்கியது. 1973 ம் ஆண்டு நவம்பர் 17 ம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த இராணுவ தாங்கிகள் நசுக்கியத்திலும், சுட்டதிலும், சில மாணவர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஆனால் அன்று நிலவிய, கடுமையான தணிக்கை காரணமாக சேதவிபரங்கள் மிகக் குறைவாக காட்டப்பட்டது.

இந்த துயர சம்பவம் நடைபெற்று, ஒரு வருடத்தின் பின்னர் சைப்பிரஸ் பிரச்சினை காரணமாக, அயல்நாடான துருக்கியுடனான மோதலை தவிர்ப்பதற்கு, வேறுவழியில்லாமல் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனநாயக பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கொஞ்சம் பொறுங்கள், இத்துடன் கதை முடியவில்லை. நவம்பர் 17 சம்பவத்திற்கு பழிவாங்கப் போவதாக, சிலர் சபதமெடுத்தனர்.

நம்பிக்கைக்குரிய, இருபதுக்கும் குறையாத உறுப்பினர்களை கொண்டு, “நவம்பர் 17 இயக்கம்” என்ற தலைமறைவு ஆயுதக்குழு தனது நடவடிக்கைகளை தொடங்கியது. மார்க்ஸிஸத்துடன், அதற்கு முந்திய இடதுசாரி தத்துவமான அனார்கிசத்தையும் கலந்து, அதேநேரம் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தமது சித்தாந்தமாக பிரகடனப்படுத்தினர். சர்வாதிகார ஆட்சியை நடாத்திய, அல்லது ஆதரித்த இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசதரப்பு வக்கீல்கள், தொழிலதிபர்கள் பலர் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆதரவு கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க அதிகாரிகள் சிலரும் கொலைசெய்யப்பட்டனர். இந்த பழிதீர்க்கும் படலம், 2000 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.


நீண்ட காலமாக மக்கள் ஆதரவு காரணமாக, எந்த ஒரு கொலையாளியும் கைது செய்யப்படவில்லை. கிறீஸ் அரசாங்கம் தீவிரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இறுதியில், ஓரிடத்தில் குண்டு வைக்கப்போய் காயமடைந்த நபர் ஒருவர், போலீசிடம் மாட்டிக் கொண்டதால், நவம்பர் 17 இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த “தீவிரவாதிகளை” மக்கள் அடையாளம் கண்டுகொண்ட போது, நாடே அதிர்ச்சியில் உறைந்தது. ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், ஒரு பொருளியல் பட்டதாரி, ஒரு இயந்திர பட்டறை வல்லுநர், என்று அனைவரும் நல்ல சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பகலில் தொழிலில் முனைப்புடன் ஈடுபடும் சாதாரண மனிதர்கள், இரவில் வெடிகுண்டு தயாரிக்கும் தீவிரவாதிகள்!

இடதுசாரி தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது. மக்களும் மேற்கு ஐரோப்பிய வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கின்றனர். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் நாடு சுபீட்சமடையும் என்று கிரேக்க அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுக்கும் அமெரிக்காவும் நம்பின. ஆனால் உலகம் முழுவதும் அப்படி இருந்தால் பரவாயில்லை. பாலஸ்தீன பிரச்சினை, ஈராக் போர் என்பன பெருமளவு கிரேக்க மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருந்தது. போர் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தால், ஐரோப்பாவிலேயே அதிக சனம் சேருவது கிறீசாக இருக்கும். அதனால் அரசாங்கமும் அமெரிக்க ஆதரவை அடக்கி வாசிக்க வேண்டிய நிலை.

இன்றைய நடைமுறை புரட்சியாளர்கள் பலர் அஹிம்சாவழியில் போராடி வருகின்றனர். இவர்கள் “பாலஸ்தீன ஆதரவு அமைப்பு”, “ஈராக் போருக்கெதிரான அமைப்பு”, போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிவர். இருப்பினும் எப்போதாவது ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தால், அதிலும் பங்குபற்றுவர். அப்போது பொலிஸ் கண்ணீர்புகை பிரயோகம் செய்து, தடியடி நடத்தும் போது அகப்பட்டு சிறை செல்ல வேண்டியும் நேரிடலாம். இவ்வாறான தொழில்முறை புரட்சியாளர்கள், பல நூற்றுக்கணக்கில் கிறீசில் உள்ளனர்.

வெளிநாட்டு ஊடகங்கள், கிறீஸ் நாட்டை அமைதிப் பூங்காவாக தான் காட்ட விழைகின்றன. அதனால் நான் இங்கே கூறிய பல தகவல்கள் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். கிறீஸ் வருடந்தோறும் பெருமளவு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருவதால், “எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை” என்று அமெரிக்கா உட்பட, பல மேற்கத்திய அரசு அறிக்கைகள், நற்சான்றிதழ் வழங்குகின்றன. இடையில் உலகமயமாக்கலும், நிதிநெருக்கடியும் வந்து பாழ்படுத்தியிராவிட்டால்,அப்படியே இருந்திருக்கும். உலகம் முழுக்க உணவுவிலை ஏறும் போது, விவசாயத்தை கைவிட்டு விட்டு, உல்லாசப்பிரயாண தொழில்துறைக்கு மாறிவிட்ட கிரேக்க பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா?

அதிகரிக்கும் செலவினத்தை ஈடுகட்ட, இடதுசாரி இளைஞர்கள் மாற்றுவழி காட்டினர். பல இடங்களில் பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டன. உணவுப்பொருட்களை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்தனர். அண்மையில் போலீசுடன் மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்த போது, பன்னாட்டு வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட ஆடம்பர பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகின. இந்த கிளர்ச்சியாளர்கள், சிறுவணிகர்களின் கடைகளை ஒருபோதும் சேதமாக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் புரட்சியானது, பெரும் மூலதனத்தை குவிக்கும் வர்த்தக கழகங்களை மட்டுமே இல்லாதொழிக்க விரும்புகின்றது.


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Friday, December 12, 2008

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை செய்த குற்றத்திற்காக நாட்டை விட்டு ஓடுவது. இரண்டு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவது. நிதி நெருக்கடிக்குப் பின்னர், கிறீசில் பாமரனுக்கும் அரசியல்-பொருளாதாரம் புரிகின்றது: "அரசாங்கம் வழக்கமாக கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிற பொதுநல சேவைகளுக்கு செலவிட பணமில்லை என்று கையை விரிக்கிறது. அதேநேரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது?"

அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தையின் வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்திய விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சூரியனை சுற்றும் கோள்கள் போல, அமெரிக்காவை சுற்றியே உலக பொருளாதாரம் அமைந்திருந்ததால், பழைய வல்லரசான ஐரோப்பா முதல், எதிர்கால வல்லரசான சீனா வரை பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரம் நன்றாக இருந்த காலங்களில், தமது பிரசைகள் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி போன்ற பல சலுகைகளை வழங்கி வந்தன. ஆனால் அந்த உரிமைகள் யாவும் தற்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் தான் அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்து, முதலாளித்துவ சொர்க்கத்திற்கு குழி தோண்டியது.

பிரிட்டன் முதல் இந்தியா வரை நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா வேண்டிக்கொண்டதன் படி, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கி முதலாளிகளை காப்பாற்றியது போல தான், கிறீசின் வலதுசாரி அரசாங்கம் செய்தது. அதன் விளைவு தான் நாடளாவிய கலவரம். இந்த நிலைமை நாளை இந்தியாவிலும் வரலாம். அதனால் தான் வர்த்தக உலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் ஆயத்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு முன்பு, (அடித்தட்டு மக்களை ஆயுதமயப்படுத்தும்) "நக்சலைட் பிரச்சினை" பெரிய சவாலாக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.

மீண்டும் கிறீசிற்கு வருவோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்கள், அங்கே நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றது என்றும் தெரிவிக்கின்றன. நான் முன்பு குறிப்பிட்டது போல, எங்கேயாவது சண்டை, கலவரம் என்றால் தான் ஊடகங்கள் அக்கறை செலுத்தும். அது ஓய்ந்து விட்டால், அந்த நாட்டையே மறந்து விடுவார்கள். கிறீசின் தலைநகரான ஏதென்ஸ் இப்போதும் போரால் பாதிக்கபட்ட பூமி போல காட்சி தருகின்றது.


கலவரத்தை தொடக்கி வைத்த (16 வயது சிறுவனை போலிஸ் சுட்டதன் காரணமாக), ஏதென்ஸ் நகராட்சிக்குட்பட்ட பகுதியான "எக்சாரியா" முழுவதும் அனார்கிஸ்டுகள் என்ற இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரத்தின் மையப் பகுதியான "ஒமானியா", கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகங்களை அனைத்து இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த இடங்களில் எல்லாம் பொலிஸ் பிரசன்னம் இல்லை. (இரகசிய பொலிஸார் சிவில் உடையில் நடமாட வாய்ப்புண்டு.) மேலும் இந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுற்றி தெருக்களில் தடை அரண்கள் போடப்பட்டுள்ளன. பொலிஸ் அதற்கு வெளியில் இருந்து கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை அடித்துக் கொண்டிருக்கிறது. (கையிருப்பில் இல்லாததால், மேலதிக புகைக்குண்டுகள் தருவிக்கப்படுகின்றன). நாடு முழுவதும் 25 பொலிஸ் நிலையங்கள் மாணவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. முற்றுகைக்குள்ளான பொலிஸ்காரர்கள் தினசரி கல்வீச்சுக்கு உள்ளாகின்றனர். (இந்த செய்தி பி.பி.சி.யிலும் வந்தது.)


ஏதென்ஸ் நகர பொருளாதாரம் அனேகமாக ஸ்தம்பித்து விட்டது. நிலைமை சீரடையும் என்று நம்பி ஏமாந்த அரசாங்கமும், முதலீட்டாளர்களும் இரகசிய இடங்களில் கூட்டம் கூட வேண்டி உள்ளது. நகரத்தில் இருந்த ஆடம்பர வணிக வளாகங்கள் எல்லாம் தீயில் கருகி சாம்பலாகி கிடக்கின்றன. நகரின் ஐ.டி. நிறுவனங்களின், கணணி விற்பனை நிலையங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் தங்கி நின்று, அரசியல் கூட்டங்கள் போடும் மாணவர்கள், தமது உணவுத் தேவைக்காக அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகின்றனர். அங்கு இருக்கும் பொது மக்களுடன், "முதலாளிகளின் சொத்தில் இருந்து அபகரித்த" உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவு பாடசாலை மாணவர்களும் வருகின்றனர். இப்போது அங்கே 12 வயது சிறுவனுக்கும் பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி என்று தெரியும்.

ஏதென்ஸ் நகர தெருக்களில் செங்கொடிகள் அதிகமாக காணப்படுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கான அறைகூவல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்களும், பத்திரிகைகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கல்லூரி வளாகத்தினுள்ளே அச்சடிக்கப்படுகின்றன. இணையம், எஸ்.எம்.எஸ். என்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் போராட்டங்களுக்கு தயார்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. (திட்டமிட்டபடி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.) வானொலி நிலையம் ஒன்று அமைக்கும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். பெருமளவு வெளிநாட்டு குடிவரவாளர்கள், அகதிகள், போராட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.



கிறீஸ் பிரச்சினை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தோன்ற ஆரம்பித்துள்ளன. பிரித்தானியாவிலும், ஜெர்மனியிலும் கிறீஸ் தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. லண்டனில் பொலிஸ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்பெயினிலும், டென்மார்க்கிலும் நிலைமை எல்லை தாண்டியது. ஆர்ப்பாட்டக்காரருக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வந்ததால், சிறிய கலவரம் வெடித்தது. வண்டிகள், கடைகள், வங்கிகள் என்பன தீக்கிரையாயின. பலர் கைது செய்யப்பட்டனர்.

பிற ஐரோப்பிய நகரங்களில் நடந்த கலவரங்கள், ஊடகங்களின் கவனத்தை பெறாவிட்டாலும், அரச மட்டத்தில் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக இத்தாலிய அரசு, அண்மையில் கல்விக்கான செலவினத்தை குறைத்ததை எதிர்த்து, அங்கேயும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜெர்மன் மாணவர்கள் இலவச கல்வி கோரி போராடினார்கள். இன்றுவரை அமைதியான வழியில் நடந்து வரும் மாணவர் போராட்டம், வன்முறையாக மாறுவதற்கு தேவைப்படுவது, ஒரு சிறு பொறி மட்டுமே. கிறீசிலும் அதுதான் நடந்தது. ஒரு சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்காரனின் முன்யோசனையற்ற செயல், இளைஞர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோபத்தை, எரிமலையாக வெடிக்க வைத்தது.



Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Wednesday, December 10, 2008

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது


அமெரிக்க சரித்திரத்தில் முதல்தடவையாக தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வந்த, "Republic Windows" என்ற தொழிலகம் அண்மைய நிதிநெருக்கடி காரணமாக, நஷ்டத்தில் நடத்த முடியாமல் இழுத்து மூடிவிட்டது. தொழிற்சாலை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5 ம் திகதியன்று, அதாவது கடைசி வேலை நாளன்று, வேலை செய்த அனைத்து தொழிலாளருக்கும் 3 நாள் நோட்டீஸ் கொடுத்து பணி நீக்கம் செய்தது. சட்டத்திற்கு மாறான இந்த திடீர் பணி நீக்கத்தை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை விட்டு விலக மறுத்து, அங்கேயே தங்கி விட்டனர். நிர்வாகத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டு, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் ஜெர்மனியில் நடந்தது போல தொழிலாளர்கள் தொழிற்சாலையை எடுத்து நடத்துவார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இன்று வரை தொழிலகத்தை ஆக்கிரமித்து மறியல் செய்யும் தொழிலாளருக்கு, அவர்கள் அங்கம் வகிக்கும் United Electrical, Radio and Machine Workers of America (UE)என்ற தொழிற்சங்கம் பக்கபலமாக இருக்கின்றது. தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு புஷ் வழங்கிய 700 பில்லியன் உதவித் திட்டத்தின் கீழ் லாபமடைந்த "Bank of America" வங்கி தான், இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு காலமும் கடன் வழங்கி வந்தது. ஆனால் தன்னை காப்பாற்றிக் கொண்ட வங்கி, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க மறுத்து விட்டதாகவும், அதனாலேயே தொழிற்சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை நம்பிய தொழிலாளர்கள் டிசம்பர் 3 ம் திகதி, சிக்காக்கோ நகரில் உள்ள வங்கி காரியாலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களது குறைகளை கேட்டறிந்த வங்கி, தொழிற்சாலை நிர்வாகத்தை பேச வருமாறு அழைத்து. ஆனால் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அங்கே சமூகமளிக்க மறுத்து விட்டனர். அதற்கு எதிர்வினையாகவே, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். நிர்வாகம் பல கோடி டாலர் பணத்தை திருடியிருக்கலாம் என்று வதந்தி ஒன்று பரவியதால், தொழிலாளர்கள் தொழிற்சாலை கணக்கு புத்தகங்களை பரிசோதித்துள்ளனர். சிக்காகோ தொழிலாளர் போராட்டம் இன்றுவரை(நான்காவது நாளாக) தொடர்கின்றது. நிதிநெருக்கடி காரணமாக அமெரிக்கா முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தமது உரிமைக்காக எப்படி போராடுவது என்பதைக் காட்டிய சிக்காகோ தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:
Workers, facing shutdown, take over Chicago factory building

Video: Angry Workers Occupy Factory in Chicago



Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Tuesday, December 09, 2008

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது


ஐரோப்பாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், நான்காவது நாளாக எரிகின்றது. வங்கிகள் யாவும் (வெளிப்புறமாக) அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக்கிய, ஆடம்பர வர்த்தக நிலையங்கள் சாம்பலாக கிடக்கின்றன. துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள் சில, இனந்தெரியாதவர்களால் சூறையாடப்பட்டுள்ளன. வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கைகளில் துப்பாக்கிகள் காணப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுகின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஆசிரியர்களும் ஊர்வலமாக போகின்றனர். பல நகரங்களில் பொலிஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்படுள்ளன. நான்காவது நாளாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளனர். மக்களிடம் இருந்து அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கும் பணியில், பொலிஸ் படை அதிக அக்கறை காட்டுகின்றது.

தெருக்களில் போலீசுடன் மோதுபவர்களின் வயது குறைந்து கொண்டே போகின்றது. ஆர்ப்பாட்டக்காரரில் அதிகளவில் பதின்ம வயதினர் காணப்படுவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அரசியல்மயப்படுத்தப்படாத விடலைப்பருவ சிறுவர்கள், கண்ணில் காணும் கடைகளையும், மோட்டார் வண்டிகளையும் கொளுத்துவதே போராட்டம் என்று பிழையாக புரிந்து கொள்கின்றனர். அப்படியான சம்பவங்களை ஊக்குவிப்பது போல, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது.

அரசாங்கமும் அதைக்காட்டி மக்களையும், போராட்டக்காரரையும் பிரித்து வைக்க முயற்சிக்கிறது. என்ன அதிசயம்! முதலாளித்துவத்தின் சின்னங்களான, வங்கிகளும், பெரிய வணிக நிலையங்களும் எரிக்கப்படுவதை, ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை, ஒரு சில இடதுசாரி வன்முறையாளரின் கலகமாக சித்தரித்த பி.பி.சி. செய்தியாளர், நான்கு நாட்களுக்குப் பிறகு தான், கிறீசில் வர்க்கப்போராட்டம் நடப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பொலிஸ் வன்முறைக்கு பலியான ஒரு சிறுவனின் கொலை, தேசம் முழுவதையும் கிளர்ந்து எழ வைக்கும், என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது தான். ஆனால் கிறீசில் பகை முரண்பாடுகளை கொண்ட இரண்டு வர்க்கங்கள் இருப்பது, இப்போது தான் மேற்கத்திய ஊடகவியலாளருக்கு தெரிய வந்திருக்கிறது! ஐரோப்பிய மக்கள், "வர்க்க பேதங்களை மறந்து, சகோதர பாசத்துடன் வாழ்கிறார்கள்", என்ற பரப்புரை இவ்வளவு விரைவில் அம்பலப்படும், என்று அந்த ஊடகவியலாளரைப் போலவே பலர் கனவிலும் நினைக்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி கிறீசையும் கடுமையாக பாதித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை, ஏழைகளின் தொகை அதிகரித்தல், கல்வி கற்பது பெரும் பணச்செலவாகி விட்டதால் ஏற்பட்ட மாணவரின் அதிருப்தி, போன்ற பல பிரச்சினைகள், கிறீசில் இருக்கின்றன என்ற உண்மை, பி.பி.சி. போன்ற ஊடகங்களுக்கு இப்போது தான் தெரிகின்றதாம்.

பெரும்பான்மை கிரேக்க மக்கள்,அரசாங்கத்தின் நவீனமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளால் வெறுப்படைந்து வருகின்றனர்.
அந்த அதிருப்தியின் வெளிப்பாடே, ஆர்ப்பாட்டக்காரருக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவும், அதனால் ஒதுங்கி நிற்கும் பொலிஸ் நடவடிக்கையும் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு சேவை செய்த அரசு நிறுவனங்களை, தனியார்மயமாக்கியதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த மக்கள் தான் பொங்கி எழுகிறார்கள். ஜனநாயகம், அமைதிவழி போராட்டம், என்று கூறி இன்றைய மக்கள் எழுச்சி அடக்கப்படுமா? அல்லது போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் புரட்சிகர மாற்றங்களை கொண்டுவருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.




முன்னைய பதிவுகள்:
கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, December 07, 2008

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது


Greece, நேற்றிரவு (6 டிசம்பர்), ஏதென்ஸ் நகரில், இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் எக்சர்கியா பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் பொலிஸாரால் சுடப்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, கிறீஸ் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கே ஏதென்ஸ் நகரம் முதல் வடக்கே தெஸ்ஸலொநிகி வரை காட்டுத்தீ போல பரவிய இந்த கலவரத்தில் பல போலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன, வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மட்டும் 16 வங்கிகள், 20 கடைகள், டசின் கணக்கான கார்கள் தீக்கிரையாக்கப்படன. "அவர்கள் தமது எதிர்ப்பை காட்ட உரிமை உண்டு, ஆனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது." எனக் கூறிய உள்துறை அமைச்சர், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பான இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறீஸ் கலவரத்தின் பின்னணி என்ன? சம்பவம் நடந்த இடத்தில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாலேயே, அந்த 16 வயது சிறுவன் சுடப்பட்டான், என்பது அரசதரப்பு வாதம். ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பிற இளைஞர்கள் வேறுவிதமாக கூறுகின்றனர். (அனார்க்கிச, கம்யூனிச) இடதுசாரிகளின் செல்வாக்கு மிக்க அந்த பகுதியில், அடிக்கடி காவல்துறையினர் அடாவடித்தனம் புரிந்துவருவது வழக்கம். அன்றைய தினம், சில இளைஞர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை மோசமடைந்து, எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை, ஒரு பொலிஸ்காரர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, ஒரு இளைஞனின் நெஞ்சுப் பகுதியை நோக்கி சுட்டதாகவும், அந்த இடத்திலேயே சூடு வாங்கிய இளைஞன் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வீதியில் கூடிய வாலிபர்களையும், பொதுமக்களையும் நூற்றுக்கணக்கான கலவரத்தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். இருப்பினும் ஏதென்ஸ் நகரம் பற்றி எரிவதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இளைஞர்கள் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸ் படையை எதிர்த்து சண்டை போட்டனர்.

அடுத்த நாள் பல வெகுஜன ஊடகங்கள் கலவர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போதும், கடந்த பல நாட்களாகவே கிறீஸ் நாடாளாவிய, அதேநேரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் எழுச்சிக்கு முகம் கொடுத்து வருவதை செய்தியாக கூட தெரிவிக்கவில்லை. கிரேக்க அரசு கொண்டு வந்த கல்வி சீர்திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரு நாட்களாகவே, மருத்துவ பீட மாணவர்களும், மருத்துவ தாதிகளும் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பதில் சுகாதார அமைச்சரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். (பார்க்க:Medical students held Deputy Health Minister hostage) புதிய கல்வி சட்டத்தை எதிர்த்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசார் ஒரு மாணவனை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது. அப்போதும் இதை எதிர்த்த மாணவர்கள் போலீசுடன் சண்டையிட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு இதெல்லாம் செய்திகளல்ல. வர்த்தக நிலையங்களை, வாகனங்களை கொளுத்தினால் மட்டுமே கவனமெடுத்து செய்தி வெளியிடுவார்கள். (இதுவன்றோ பத்திரிகாதர்மம்! )

சில நாட்களுக்கு முன்னர் தான், குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளரும், எந்த உரிமைகளுமற்ற அகதிகளும் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் குறைந்தளவு தஞ்ச விண்ணப்பங்களை மட்டுமே எடுப்பதாலும், பொலிஸ் நெருக்குதலில் ஒரு அகதி படுகாயமுற்றதாலும், ஆத்திரமடைந்த கும்பல் கலவரத்தில் இறங்கியதாக தெரியவருகின்றது. கிறீசிற்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வருகை தருகின்ற போதும், மிக மிக குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக் கொல்லப்படுவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
- Greece: 16year old murdered by police, heavy riots
- Medical students held Deputy Health Minister hostage
- Asylum seekers riot in Athens

Video: Greece Riots



கிறீஸ் தொடர்பான முன்னைய பதிவு:
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

இலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்


இலங்கை தமிழ் ஊடகவியலாளர் திசைநாயகம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆங்கில மொழி பத்தி எழுத்தாளரான இவரது விமரிசனக் கட்டுரைகள் சில இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதன் காரணமாக, இவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால், மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டதை காரணமாகக் காட்டி, இவரை பிணையில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இலங்கையில் சுதந்திர ஊடகத்திற்கான இயக்கம், திசைநாயகத்தை விடுதலை செய்யக்கோரி சாத்வீக போராட்டங்களை நடத்தி வருகின்றது. இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் நேரம், ஊடகவியலாளருக்கு சுதந்திரமாக செய்யல்பட தடைகள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இதனால் விரைவில் யுத்தைதை நிறுத்தி சமாதானத்தை மீட்பதன் அவசியத்தை பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலதிக விபரங்களுக்கு இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவையும் (நன்றி: YA டிவி), இணையத் தொடுப்புகளையும் பார்வையிடவும்.
Release Tissainayagam

Violence Against media


________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Saturday, December 06, 2008

ஆதலினால் போர் செய்வீர்!


ஒரு சிறு தீப்பொறி கூட இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போரை ஆரம்பித்து வைத்து விடும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தை போருக்கான துரித தயார்படுத்தலில் கொண்டுவந்து விட்டுள்ளது. Dawn பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் அல்லது அந்த அமைச்சு அலுவலகத்தில் இருந்து ஒரு அனாமதேய பேர்வழி, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். "மும்பை தாக்குதல் தொடர்பாக தேடப்படும் தீவிரவாதிகளை ஒப்படைக்காவிட்டால், இந்தியா பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, அந்த ஆசாமி தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு வந்த உடனே இந்திய ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து பாகிஸ்தான் இராணும் விழிப்புடன் இருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ போல பாவனை செய்த அந்த அனாமதேய நபர், அமெரிக்க இராஜாங்க அதிகாரி கொண்டோலீசா ரைசுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கடுமையான பாதுகாப்பு ஏற்பட்டுகள் காரணமாக, அலுவலகத்தில் அந்த அழைப்பு தொடர்பு படுத்த மறுத்து விட்டனர். இதை அறிந்த ரைஸ், பிரணாப் முகர்ஜீயை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர் தான் அப்படி யாருக்கும் தொலைபேசி எடுக்கவில்லை என்று மறுத்து விட்டார். சர்தாரியின் அலுவலகத்தில் தொலைபேசி அழைப்பினை அடையாளம் காணும் சாதனமான CLI (caller's line identification) பொருத்தப் பட்டுள்ளது. அதன் மூலம் அந்த அழைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இருந்து வந்தது என்பதாலேயே சர்தாரிக்கு தொடர்பு கொடுக்கப்பட்டது, என்று அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நடைபெற்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, இந்திய அரசு மட்டத்தில் சில சக்திகள், இந்தியாவை பாகிஸ்தானுடன் போரிட வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கின்றமை தெளிவாகின்றது. உலக வல்லரசுகளும் அப்படி ஒரு போர் மூண்டால் தாம் ஆயுத விற்பனை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா என்பன இந்தியாவுக்கும், சீனா பாகிஸ்தானுக்கும் ஆயுத விநியோகம் செய்ய தயாராக இருப்பதை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் சண்டை பிடித்தால், வல்லரசு கழுகுகளுக்கு கொண்டாட்டம். போரினால் ஆயுத உற்பத்திசாலைகள் லாபமீட்டுவது, நிதி நெருக்கடியில் இருந்து மீள ஒரு குறுக்கு வழியாகும். ஆதலினால் போர் செய்வீர்!

இதற்கிடையே அமெரிக்கா, நான்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளின் பெயர்களை, தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் போடுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வழங்கியுள்ளது. இதனை அமெரிக்கா தனது "இந்திய நண்பர்களுக்கு உதவும் நன்னோக்கோடு" செய்யவில்லை. இதற்குப் பின்னால் அமெரிக்க நலன்கள் ஒளிந்திருக்கின்றன. குறிப்பாக அந்த நான்கு பேரில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐ.எஸ்.ஐ. ஜெனரல் ஹமிட் குல் முக்கியமானவர். அந்நாள் சோவியத் எதிர்ப்பு ஆப்கான் முஜாகிதீன் குழுக்களின் பிதாமகன். இந்நாள் தாலிபான் மற்றும் காஷ்மீர் இயக்கங்களின் தீவிர ஆதரவாளர். அதேநேரம் பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராக பேசி வரும் உயர்மட்டத் தலைவர். அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என அழைக்கப்படும் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக முஸ்லீம்கள் ஓரணியில் திரள வேண்டும், என்று முழங்கிவரும் கொள்கைப் பற்றாளர். அமெரிக்கா பாகிஸ்தான் அரசமட்டத்தில் தனக்கு எதிராக இருக்கும் இது போன்ற சக்திகளை ஓரங்கட்ட விரும்புகின்றது. அமெரிக்காவின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாத சர்தாரி போன்ற கையாலாகாத நபர்கள் ஆளவேண்டும் என எதிர்பார்க்கின்றது.

மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தான் அரசிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தாலும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது அழுத்தம் பிரயோகித்து, தாலிபானுக்கு எதிரான போரை தொடர விரும்புகின்றது. அதேநேரம் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தாய்நாட்டை பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து, இந்தியாவை எதிர்த்து போரிட தயாராக உள்ளதாக தாலிபான் கொமான்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவினுள் ஊடுருவ ஆயிரக்கணக்கான தற்கொலைப் போராளிகள் காத்திருப்பதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஆகவே அப்படிட்ட போர் இன்று எதிரிகளாக உள்ள பாகிஸ்தான் இராணுவத்தையும், தாலிபானையும் ஒன்று சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் மும்பை தாக்குதல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், அதற்காக பழிக்குப்பழி வாங்குதல் தீர்வாகாது, என்பது இருபக்க சமாதான விரும்பிகளின் கருத்து. "கண்ணுக்கு கண் என்று பழிவாங்க துடித்தால், உலகில் அரைவாசிப் பேர் கண்ணில்லாமல் இருப்பார்கள்." என்று கூறிய மகாத்மா காந்தி பிறந்த இந்தியா, இன்று பேரழிவு தரும் போர் வேண்டி நிற்கின்றது. இதுவரை பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும், அவை யாவும் சாதாரண உழைக்கும் மக்கள் கூடும் இடங்களில் நடந்ததால், "பாகிஸ்தான் மீது போர் தொடு" என்று அப்போது யாரும் கோரவில்லை. ஆனால் மும்பையில் உயர்வர்க்க மக்கள் கூடும் ஐந்து நட்சத்திர ஹொட்டேல் போன்றன தாக்கப்பட்டதும், உடனே அமெரிக்காவின் 9/11 தாக்குதலுடன் ஒப்பிடப்பட்டது. உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதுவும் போதாதென்று, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், என்று இந்திய மத்திய தர வர்க்கம் தேசபக்தி கோஷம் எழுப்புகின்றது. அப்படியான போர் தொடங்கினால், மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை காட்டிலும், பலமடங்கு அதிகமான மக்களை பலி கொடுக்க நேரிடும் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

இது தொடர்பான முன்னைய பதிவு:
மும்பையில் அரங்கேறிய சதி நாடகம்


_______________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Friday, December 05, 2008

கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்


டிசம்பர் 5 ம் திகதி நெதர்லாந்து மொழி பேசும் நாடுகளில் (நெதர்லாந்து, பெல்ஜியம்) "சின்டர் கிளாஸ்" (st. Klaas) என்ற தேசிய தினம் கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் "சாந்தா கிளவுஸ்" என்று அறியப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தான் இந்த சின்டர் கிளாஸ். 

இவரைப் பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. புனித க்ளாஸ்(st.Klaas)துருக்கியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு.( சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி கிறிஸ்தவ நாடாக இருந்தது). துருக்கியில் இருந்து ஸ்பெயின் வரை கப்பலில் வந்த இந்த தாத்தா, பின்னர் வெண்புரவி ஒன்றில் ஏறி நெதர்லாந்து வந்தாராம். அவர் கூடவே ஆப்பிரிக்காவில் இருந்து சில கறுப்பின அடிமைகளையும் கூட்டி வந்தாராம். 

நெதர்லாந்து நாட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பரிசுப் பொருட்களை, தனது கறுப்பின அடிமைகளிடம் கொடுத்து விடுவாராம். வீடுகளின் சமையலறை புகை போக்கி ஊடாக குதிக்கும் அடிமைகள், இந்த பரிசுப் பொருட்களை சிறு பிள்ளைகளின் காலுறைகளினுள் வைத்து விட்டு மறைந்து விடுவார்களாம். எல்லா வீடுகளிலும் பெற்றோர் இந்த பரிசுப் பொருட்களை தமது பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தாலும், சிறு பிள்ளைகள் இப்போதும் சின்டர் கிளாஸ் என்று ஒருவர் வாழ்வதாக நம்புகின்றனர்.

மதச் சார்பின்மை கொள்கையை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நெதர்லாந்து நாட்டில், "சின்டர் கிளாஸ் தினம்" கிறிஸ்தவ நாளாக அல்லாமல், தேசிய தினம் போல கொண்டாடப்படுகின்றது. டிசம்பர் 5 ம் திகதி, இந்நாட்டில் விடுமுறை தினமாக இல்லாத போதிலும், சிறுவர்க்கான விசேட தினமாக, பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது. 


வயதான சின்டர் கிளாஸ் போலவும், கருப்பு அடிமைகள் போலவும் மாறுவேடம் பூண்ட வயதுவந்தோர் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு செல்கின்றனர். சின்டர் கிளாஸ் தினத்தில் தொக்கி நிற்கும் மத வாத, நிறவாத அம்சங்களை ஏற்றுகொள்ளாத நெதர்லாந்து வெள்ளையின பெற்றோர் கூட, இந்த தினம் வர்த்தகமயப்படுத்தப் பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றனர். அண்மையில் கைத்தொலைபேசி நிறுவனங்கள் இலவச தொலைபேசிகளை வழங்கி கடும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

முதலாவதாக நெதர்லாந்து/பெல்ஜிய அரசாங்கங்கள் சொல்வது போல சின்டர் கிளாஸ் தினம் மதச் சார்பற்றதா? அப்படியானால் சின்டர் கிளாஸ் அணியும் தொப்பியில் சிலுவை அடையாளம் காணப்படுவதேன்? ஆங்கிலேயர்கள் எதற்காக தமிழில் "கிறிஸ்துமஸ் தாத்தா" என்று மொழிபெயர்த்தார்கள்? சின்டர் கிளாஸ் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்று கர்ணபரம்பரைக்கதை சொல்கின்றதே? 


இரண்டாவதாக வருடந்தோறும் மாறுவேடம் பூணும் வெள்ளையின மக்கள், சின்டர் கிளாசும், அவரது சேவகர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நடித்துக் காட்டுகின்றனர். இங்கே தான் நிறவாதம் ஒளிந்திருக்கிறது. வெண்தாடியுடன் வரும் சின்டர் கிளாஸ், புத்திசாதுர்யம் மிக்க வயதான நபராக காட்சி தருகிறார். அதற்கு மாறாக அவரது சேவகர்களாக நடிக்கும் கறுப்பின அடிமைகள், முட்டாள்களாக குரங்குச் சேட்டைகள் செய்து குழந்தைகளை குஷிப் படுத்துபவர்களாக காட்சி தருகின்றனர்.

சின்டர் கிளாஸ் தினத்தின் வசீகரத்தால் கவரப்படும் வெள்ளையின குழந்தைகள் மனதில், கறுப்பின மக்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் பதிந்து விடுகின்றது. வெள்ளையினத்தவர்களை புத்திசாலிகளாகவும், கறுப்பினத்தவர்கள் விவேகமற்ற முட்டாள்களாகவும், மனிதக் குரங்குகளைப் போலவும் கற்பனை செய்கின்றனர். அந்தக் குழந்தைகள் தெருவில் கறுப்பின மக்களைப் பார்க்கும் போது, "கறுப்பு சேவகன்" அல்லது "மனிதக்குரங்கு" என்று அழைப்பதாக, பல வெள்ளையின நெதர்லாந்து பெற்றோர்கள் கூறுகின்றனர்.


இத்தகைய மறைமுகமான நிறவாத பிரச்சாரம் காரணமாக, சின்டர் கிளாஸ் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் கறுப்பின மக்களும், இடதுசாரிகளும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.  ஆனால் பெரும்பான்மை வெள்ளையினத்தவர்கள் இதனை ஒரு "மக்கள் தினமாக" கருதுவதாலும், வர்த்தக நிறுவனங்களின் நன்மை கருதியும், இந்த தினத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

சாந்தா கிளவுஸ் அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கும் ஆங்கிலேயர்கள், இயேசு பிறந்த மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அந்நியமான வட துருவ மனிதனை அறிமுகப் படுத்துகின்றனர். பனி உறைந்த பாதையில், துருவ மான்கள் இழுத்து வரும் வண்டியில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா, ஸ்கண்டிநேவிய நாடுகளின் வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார். இவருக்கும், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளை அலங்கரிக்கும் "கிறிஸ்துமஸ் மரம்" கூட டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் மட்டும் தான் காணப்படுகின்றது.

இவையெல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா வட ஐரோப்பிய மக்களின் கலாச்சாரம் என்பதையும், இதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன. மேலும் டிசம்பர் 25 ம் திகதி தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என்று பலர் இன்றும் நம்புகின்றனர். இது தவறு. பைபிளில் எங்கேயும் இது குறிப்பிடப்படவில்லை. 


இத்தாலியில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர், ரோமர்கள் தமது "மித்திரா" கடவுளுக்கு, டிசம்பர் 25 ம் திகதி விழா எடுத்தனர். இது அனேகமாக சூரியக் கடவுளின் வணக்கமாக இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தில் குறைந்தளவு சூரிய ஒளி கிடைக்கின்றது. பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் அந்த தினத்தை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக மாற்றி விட்டனர்.
>

Thursday, December 04, 2008

மும்பையில் அரங்கேறிய சதி நாடகம்


இந்தியாவின் 9/11 என்று வர்ணிக்கப்படும் மும்பை தாக்குதல்கள் நாடளாவிய அதிர்வலைகளை தோற்றுவித்த போதும், பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் மர்மமாக உள்ளன. இந்தப் பதில்கள் இனிமேலும் கிடைக்காமல் போகலாம். உணர்ச்சிவசப்பட்ட நாட்டுப்பற்று என்னும் பேரலை, எந்த சந்தேகத்தையும் தன்னுள் அடக்கி வைக்கலாம். இந்நேரத்தில், இந்திய அரசு மட்டுமல்ல, யாரும் ஆதாரங்களற்ற கருத்தமைவுகளை முன்வைப்பது சரியல்ல என்பதால், அதிகம் பேசப்படாத பொருள்கள் பற்றி மட்டுமே இங்கே அலசவிருக்கிறேன்.

நவம்பர் 26 ம் திகதி மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து பத்துக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதில் 200 பேரளவில் மரணமடைந்துள்ளனர். இவர்களது தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டேல்களில் பலர் பணையக்கைதிகளாக அகப்பட்டனர். உயர்வர்க்கத்தினர் கூடும் இடங்களை மட்டுமே குறிவைத்தமை, மும்பையின் சர்வதேச வணிகத்தை குழப்புவதை நோக்காக கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக வந்துள்ளனர். ஆகவே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு. அதற்கு பழி தீர்க்க பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். இதுவே இந்திய அரசும், ஊடகங்களும் தெரிவித்த, அந்த மூன்று நாட்களுக்குள் நடந்த சம்பவங்களின் சுருக்கம். ஆனால் கள நிலைமை நாம் நினைப்பது போல அவ்வளவு இலகுவானது அல்ல.

உடனுக்குடன் செய்தி அளிக்கக் கூடிய ஊடக வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில், பல முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வருவது கூட தவிர்க்கவியலாது. தீவிரவாதிகள் பணயக்கைதிகளை வைத்திருந்த ஹோட்டேல்களை கைப்பற்றுவதில் பாதுகாப்புப் படையினர் காட்டிய குழப்பகரமான நடவடிக்கை போன்றே, செய்திகளை வழங்குவதிலும் ஒரே குழப்பம். ஊடகங்களை கேட்டால், தாம் அரச அதிகாரிகள் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்கிறோம் என்கின்றனர். அரச மட்ட தகவல்கள் பல உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை. "ஒரு அனாமதேய அதிகாரி இப்படி கூறினார்..." என்ற அளவில் தான் பல செய்திகளின் அடிப்படை அமைந்துள்ளது. இந்திய அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள குளறுபடி பற்றிய உதாரணம் ஒன்று: "உயிரோடு பிடிபட்ட ஒரேயொரு தீவிரவாதி, தாங்கள் பத்து பேர் வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளான்." ஆனால் பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, தீவிரவாதிகள் வந்ததாக கருதப்படும் மீன்பிடி வள்ளத்தில், 15 குளிர் மேலங்கிகளும், 15 பாவனைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மும்பை தாக்குதலை மொத்தம் 15 பேர் நடத்தியிருக்கலாம் என்றும், அரசாங்கம் சொல்வது போல ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டால், மிகுதி ஐந்து பேர் தப்பியோடி இருக்க வேண்டும்.
"A British expert on CNN stated that it was not likely that 10 men, could carry out attacks at 9 locations, within a period of 30 minutes.–November 30, 2008"

செய்திகளை வழங்குவதில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டு பொதுவாக இந்தியாவில் மட்டும் தான் எடுபடுகின்றது. சர்வதேச நாடுகளை அதிகளவில் நம்பவைக்க முடியவில்லை. பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆரம்பத்தில் இருந்தே மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தம்மை இனம் காணாது கண்டித்து வந்தனர். ஆனால் இந்திய அரசின் குற்றச் சாட்டுகள் நேரடியாக பாகிஸ்தான் அரசை நோக்கி வீசப்பட்ட போது, பிரச்சினை வேறு மட்டத்திற்கு தாவியது. கடந்த காலங்களில் இந்தியாவில் எந்த தாக்குதல் நடந்தாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுவது வழமை. அதேபோல பாகிஸ்தானில் எந்த தாக்குதல் நடந்தாலும், இந்தியா மீது குற்றம் சாட்டப்படும். பொதுவாக நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை மையமாக கொண்டு இயங்குவதால், சமநிலைப்படுத்தப் பட்ட செய்திகள் வருவதில்லை.

இந்திய-பாகிஸ்தான் பனிப்போருக்கு இரு நாட்டு ஊடகங்களும், கலைஞர்களும் தமது பங்கை வழங்கி வருகின்றனர். இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானியர்கள் வில்லன்களாக காட்டப்படுவது போல, பாகிஸ்தானிய திரைப்படங்களில் இந்தியர்கள் வில்லன்களாக காட்டப்படுகின்றனர். இதனால் இரு நாட்டு மக்களும் எந்த அளவிற்கு தேசியவெறி ஊட்டப்பட்டுள்ளனர் என்பதை நான் இங்கே கூறத்தேவையில்லை. மும்பை தாக்குதல், கடந்த 5 ஆண்டு காலமாக இரு நாடுகளுக்கிடையே நிலவிய சுமுகமான உறவை பாதித்து, மீண்டும் எதிரிகளாக்கியுள்ளது. இங்கே தான் தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கம் குறித்த சந்தேகம் எழுகின்றது. அணுவாயுத வல்லரசுகளான, இந்தியாவையும், பாகிஸ்தானையும் போருக்குள் இழுத்து விட்டு, ஆதாயமடைய நினைத்தவர்களின் செயலா இது?

முதலில் யார் செய்திருக்கலாம்? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். மும்பை தாக்குதலை நடாத்தியவர்கள் "டெக்கான் முஜாகிதீன்" என்ற பெயரில் உரிமை கோரியுள்ளனர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் தான் டெக்கான். மும்பையும் அந்தப் பிரதேசத்தினுள் அடங்குகின்றது. மேலும் இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றை தொடர்பு கொண்ட தீவிரவாதி கூறிய கருத்துகள் இவை: " காஷ்மீரில் எத்தனை ஆயிரம் மக்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியுமா?" பேசியவர் காஷ்மீர் உச்சரிப்புடன் உருது பேசியதால், ஆயுதபாணிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. உருது பேசுவோர் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அதே நேரம் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும், உயிரோடு பிடிக்கப்பட்ட இருவருமாக, மொத்தம் நான்கு பேர் (பாகிஸ்தானிய)பிரிட்டிஷ் பிரசைகள் என்று அறிவிக்கப்பட்டது. உடனே பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. பின்னர் இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் அந்த தகவல் தவறானது என்று சொல்லி, அப்படியே அமுக்கி விட்டன.
"They did not look Indian, they looked foreign. One of them, I thought, had blonde hair. The other had a punkish hairstyle. They were neatly dressed,"(BBC, 27 Nov.)

ஒபரோய் ஹோட்டலில் புகுந்த ஆயுததாரிகள் பிரிட்டிஷ், அமெரிக்க கடவுச் சீட்டு உள்ளவர்களை தேடியதாக பி.பி.சி. நிருபர் திரும்ப திரும்ப கூறினார். அதனை வைத்தே இது அல் கைதாவின் வேலை என்று அடித்துச் சொன்னார்கள். அப்படியா? எமக்குத் தெரிந்து இது தான் முதல் தடவையாக, அல் கைதா தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தாமல், அமெரிக்க பாடசாலைகளில் நடப்பதைப் போல கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். மேலும் ஒருவர் கைது செய்யப்படும் அளவிற்கு, தீவிரவாதிகள் தம்மை தாமே காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த செயல்முறை அல் கைதாவின் வழக்கமான பாணியான "எதிரியிடம் அகப்படாமல் தற்கொலை செய்யும்" கோட்பாட்டுக்கு மாறாக நடந்துள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள்(இந்துக்கள், முஸ்லீம்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு, அகில இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான "சிமி", அரச எதிர்ப்பு பிரச்சாரத்தை காரணமாக காட்டி தடை செய்யப்பட்டது. அப்போது தலைமறைவான சிமி உறுப்பினர்கள், தீவிரவாத வன்முறையை நாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதத்தின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் சிமி, கடந்த காலத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கும் என்றால் நம்பலாம். தற்போது மும்பையில் நடைபெற்ற தாக்குதல், நன்கு திட்டமிட்டு, சிறந்த தயாரிப்புடன், பெருமளவு பணச் செலவில், வேண்டிய அளவு ஆயுதங்களுடன் நடந்துள்ளது. அதனால் இதிலே வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் நம்புகின்றனர்.

இந்திய அரசைப் பொறுத்த வரை இது பாகிஸ்தானை தளமாக கொண்ட "லக்ஸர்-இ-தொய்பா" வின் வேலை. அதற்கு பாகிஸ்தானிய அரசு உடந்தை. வேறு கருத்திற்கு இடமில்லை. சரி, அப்படியே இருந்தாலும், இதிலே பாகிஸ்தான் அரசை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் குறைவு. லக்ஸர்-இ-தொய்பா ஒரு காஷ்மீர் சார்ந்த இயக்கம் என்ற போதிலும், ஏற்கனவே அது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது. சில பாகிஸ்தானிய ISI அதிகாரிகளின் ஆதரவுடன், அல் கைதாவும், தாலிபானும் அந்த இயக்கத்துடன் கூட்டு நடவடிக்கையில் இறங்க சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. லக்சர்-இ-தொய்பா ஏற்கனவே காஷ்மீர் விடுதலை என்ற கோட்பாட்டை கடந்து, சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் ஐக்கியமானதை, அதன் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அவ்வாறு ஒரு கூட்டு நடவடிக்கை இந்த மும்பை தாக்குதலை நடத்தி இருந்தால், அதாவது லக்சர்-இ-தொய்பா, தாலிபான், அல் கைதா ஆகியன சம்பந்தப்பட்டிருந்தால், இந்தியாவையும், பாகிஸ்தானையும் போர் முனைப்புக்குள் தள்ளிவிடும் நோக்கம் இருந்திருக்கும். அவர்களது நோக்கம் நிறைவேறும் காலம் கனிந்து வருகின்றது. இந்தியா ஏற்கனவே தேசிய வெறியை தூண்டி விட்டு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என மக்களை அணிதிரட்டி வருகின்றது. இதனால் இந்தியாவுடனான தனது எல்லையை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிய பாகிஸ்தான், அங்கே தனது படைகளை குவித்து வருகின்றது. நிலைமை இன்னும் மோசமாகி போர் தவிர்க்கவியலாது என்று வரும் வேளை, வட-மேற்கு மாகாணங்களில் தாலிபானை எதிர்த்து போராடும் படைகளை விலத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இப்போது பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணங்கள் வரை பரவியுள்ளது. பாகிஸ்தானின் இறைமை காரணமாக, அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்காக ஒரு லட்சம் பாகிஸ்தான் இராணுவம் அந்த மாகாணங்களில் நிலை கொண்டுள்ளது. அல் கைதா, தாலிபான் இயக்கங்களுக்கு எதிராக கடுமையான போரை நடத்தி வரும் பாகிஸ்தான் இராணுவம், ஒரு வீரர் மிச்சமின்றி வாபஸ் வாங்கப்படும் என்று, பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. அத்தகைய நிலைமை அல் கைதாவிற்கும், தாலிபானுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மீதான தாலிபான் தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் மூளுவதை அமெரிக்கா தலையிட்டு தடுக்கப் பார்க்கும். போர் மூண்டால் அமெரிக்கா தனது பக்கம் நிற்க வேண்டுமென்று இந்தியாவும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையே பாகிஸ்தான் சீனாவின் உதவியையும் கோரியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத வேறொரு சக்தி நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 200 பேரளவில் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு முக்கியமான நபரும் அடங்குகின்றார். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஆயுதபாணி "கண்மூடித்தனமாக" சுட்டதில், சாதாரண பொது மக்கள் மட்டும் பலியாகவில்லை. மும்பை நகரின் "பயங்கரவாத தடுப்பு பிரிவின்" உயர் போலிஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயும், அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அந்த அதிகாரியின் நடமாட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததா? அல்லது ஒரு தற்செயல் நிகழ்ச்சியா? ஹேமந்த் கர்கரே இறப்பதற்கு முதல் நாள் தான், தொலைபேசி ஊடாக அவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவர் தனது நெருங்கிய நண்பர் இளைப்பாறிய கேணல் ராகுல் கோவர்த்தனை தொடர்பு கொண்டிருக்கிறார். முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். "டைம்ஸ் ஒப் இந்தியா" நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.Close friend received secret letter from Hemant Karkare அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை கூற கோவர்த்தன் மறுத்து விட்டார். ஆகவே ஹேமந்த் கொலை ஒரு தற்செயல் நிகழ்ச்சியா?Karkare's wife declines 'Modi's compensation' offer


யார் இந்த ஹேமந்த்? அவரைக் கொல்வதால் யாருக்கு லாபம் அதிகம்? சில வருடங்களுக்கு முன்னர் மும்பை நகரிலிருந்து சிறு தொலைவில் உள்ள மலேகான் என்ற சிறு நகரில் ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் சில முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். போலிசும், ஊடகங்களும் வழக்கம் போல இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வேலை என்று சொல்லி விட்டன. ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் துப்புத்துலக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். பி.ஜெ.பி.,பஜ்ரங்தள் போன்ற இந்து மதவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இளம் பெண் சாமியார், ஒரு பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி உட்பட பல இந்து பயங்கரவாதிகளின் வேலை இது என்பது தெரிய வந்தது. "இந்து பயங்கரவாதிகள்" கைது செய்யப்பட்ட செய்தி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. நேர்மையான அதிகாரியான ஹேமந்தின் விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என ஊகிக்கப்பட்டது. விசாரணையை முடக்கவும், கைதிகளை விடுவிக்கவும் பி.ஜெ.பி. எடுத்த முயற்சிகள் எதுவும் அதிக பலனளிக்கவில்லை.

The first police official who uncovered the soft coup in New Delhi by the Hindu right-wingers was Hemant Karkare, the anti-terrorism chief of the Mumbai police. Karkare was the first target when the attacks in Mumbai began, but it is certain that his knowledge of ties between Hindu terrorists and Indian RAW intelligence in carrying out “false flag” attacks later blamed on Muslims likely earned Karkare a death sentence from the Hindus and their RAW friends. One of the terrorists caught on CCTV at the Mumbai train station was seen wearing an orange wristband, which is commonly worn by Hindu fundamentalists.Mumbai attacks more complicated than corporate press reports

இதுவரை எந்த தாக்குதல்களும் ஏற்படுத்தாத விளைவுகளை மும்பை தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. என்றுமில்லாதவாறு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உட்பட பல பெரிய தலைகள் இராஜினாமா செய்துள்ளன. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தாக்குதலுக்கு ஒரு வெளிநாட்டு சக்தியை(பாகிஸ்தான்) சுட்டிக் காட்டியதன் மூலம், பிரச்சினையின் மூலவேர்கள் உள்நாட்டில் இல்லை என்று சொல்ல வருகின்றது, அல்லது புறக்கணிக்கின்றது. அப்படியானால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாக இருக்கிறதா? அப்படி செய்யாவிட்டால் அல்லது இது போன்று இன்னொரு தாக்குதல் நடக்குமாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சி நிலைத்து நிற்க முடியாது. விரைவில் வரப்போகும் அடுத்த பொதுத் தேர்தலில் இந்து-தேசியவாத பி.ஜெ.பி. தேர்ந்தெடுக்கப்படலாம். அந்த அரசு பாகிஸ்தானுடன் மட்டுமல்ல சீனாவுடன் கூட போருக்கு செல்ல தயங்காது. எது எப்படி இருப்பினும் எதிர்கால இந்தியா வலது-தீவிரவாத அரசியலை முன்னெடுக்க தயங்காது. இதனை ஒரு அமைதியான சதிப்புரட்சி என்றும் கூறலாம்.


உசாத்துணை தொடுப்புகள்:
- Search for Mumbai gunman's roots only deepens mystery
- This is India's 9/11? Think again
- China official daily says don’t rule out Hindu radicals
- Video: MOSSAD Behind Mumbai Terror Attacks?
- Mumbai attack: Was Nariman House the terror hub?
- Mumbai Terror Attacks: The Mossad Angle
இந்திய பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்





There are some questions being raised about Qasab and his claims. The so-called security camera shot of Qasab, who is being billed by the media as the “lone surviving gunman,” at Chatrapathi Sivaji train terminal in Mumbai, appears fake. The angle is too narrow for a train station which would have a wider angle and be shot from higher up than the photo being shopped by the Indian police. However, according to Asian intelligence sources, Qasab may have been trained by Hindu militants and was rushed to the scene of the attack for a photo opportunity hastily arranged by the Hindu right-wing Bharatiya Janata Party (BJP) propaganda team. Mumbai attacks more complicated than corporate press reports


_______________________________________

Wednesday, December 03, 2008

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை



எழுபதுகளில் மேற்கு-ஜெர்மனி அரசுடன் போரில் ஈடுபட்டிருந்த, “செம்படைப் பிரிவு”(Red Army Faction,ஜெர்மன் மொழியில் Rotte Armee Fraktion, அல்லது சுருக்கமாக RAF) என்ற மார்க்சிய புரட்சிவாத அமைப்பைப் பற்றிய திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இயக்க வரலாற்றை, ஒரேயடியாக பயங்கரவாதம் என்று நிராகரிக்காமல், சம்பத்தப்பட்ட தீவிரவாத இளைஞர்களின் பார்வையில் இருந்தே சொல்வது போல படக்கதை அமைந்துள்ளது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வந்த,புரூஸ் வில்லீஸ் நடித்த, “Die Hard” ஹோலிவூட் படம் RAF தீவிரவாதிகளை வில்லன்களாக, கிரிமினல்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தது. அது ஒரு கற்பனைக்கதை. ஆனால் தற்போது வந்திருக்கும் “Der Baader Meinhof Komplex” என்ற ஜெர்மன் மொழி திரைப்படம், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டுமே திரைக்கதையாக அமைத்துள்ளது. அமைதியான ஜெர்மனியை மட்டுமே காணும் இன்றைய இளம்தலைமுறைக்கு, கடந்த காலம் இதற்கு முற்றிலும் மாறாக வன்முறைக் கலாச்சாரத்தை கொண்டிருந்ததை நம்பமுடியாது. ஜெர்மனியில் இடதுசாரி தீவிரவாதத்தின் எழுச்சியும், அதற்கு எதிர்வினையாக ஜெர்மன் அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை காரணமாக அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றின் சுருக்கம் இது. ஜனநாயக ஜெர்மனியின் இருண்ட மறுபக்கம் பற்றிய அறிமுகமும் இதுதான்.

சர்வதேச மார்க்சிய புரட்சி இராணுவமான செம்படையின் பிரிவு என்ற அர்த்தத்தில், தமது அமைப்புக்கு “Rotte Armee Fraktion” (Red Army Faction) என்று பெயர் இட்டிருந்தாலும், பொதுமக்கள் அவர்களை “பாடர்-மைன்ஹொப் குழு” என்றே அழைத்தனர். குழுவுக்கு தலைமை வகித்த அன்ட்றெயாஸ் பாடர், மற்றும் இரண்டாவது தலைவராக கருதப்பட்ட, ஆனால் ஏற்கனவே பிரபலமான ஜெர்மன் ஊடகவியலாளர் உல்ரிகெ மைன்ஹொப் ஆகியோரின் பெயரால் அப்படி அழைக்கப்பட்டு வந்தது. அதுவே இந்தப் படத்தின் தலைப்பாக உள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான உல்ரிகெ, குடும்பத்துடன் நிர்வாணிகள் கடற்கரையில் தமது விடுமுறையை கழிப்பதில் இருந்து படம் ஆரம்பமாகின்றது. முதல் காட்சியே, பயங்கரவாதிகள் எனப்படுவோர்,ஒரு காலத்தில் எவ்வாறு அமைதியான,சாதாரண வாழ்க்கை வாழ்ந்தனர், என்பதை இரசிகர்கள் மனதில் பதிய வைக்கின்றது.

அன்றைய ஈரானிய மன்னர் ஷாவும், பட்டத்து அரசியும் மேற்கு பெர்லினுக்கு இராஜாங்க விஜயத்தை மேற்கொள்வதே, படத்தில் வரும் முதலாவது அரசியல் நிகழ்வு. வியட்நாம் யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஏற்கனவே மார்க்சிய, மாவோயிச சிந்தனைகளால் கவரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஏகாதிபத்திய எடுபிடியான ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்போது ஷா ஆதரவாளர்களுடன் கைகலப்பு ஏற்படும் நேரம், வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் போலிஸ், இடதுசாரி மாணவர்களை மட்டும் துரத்தி, துரத்தி வேட்டையாடுகின்றது. (மேற்கு) ஜேர்மனி ஒரு ஜனநாயக நாடல்ல, மாறாக ஒரு “பொலிஸ் தேசம்” என்ற உண்மையை மாணவர்கள் அன்று அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்கின்றனர்.

1967 ம் ஆண்டு, பெர்லின் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் “ரூடி டூச்கே” என்ற பேச்சாற்றல் மிக்க மாணவர் தலைவன் பின்னால் அணிதிரண்டிருந்தனர். அப்போது டூச்கே தலைமையிலான மாணவர்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கியிருக்கவில்லை. ஆனால் பட்டப்பகலில் நடுத்தெருவில் டூச்கே வலதுசாரி தீவிரவாத இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் தான், பாடர்-மைன்ஹொப் குழு உருவாகின்றது. திருட்டுக் கார் வைத்திருந்த குற்றத்தில் போக்குவரத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவிக்கும், அன்ட்றெயாஸ் பாடரை விடுதலை செய்வதற்காக, அவரது காதலி என்சிலின் உல்ரிகேவின் உதவியை நாடுகின்றார். அவர்களது திட்டம் நிறைவேறியதும், அனைவரும் தலைமறைவாகி விடுகின்றனர்.

வக்கீல் நண்பர் ஒருவரின் உதவியுடன் இந்த தீவிரவாத ஜெர்மன் இளைஞர்கள் லிபியா சென்று இராணுவப் பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் நகர்ப்புற கெரில்லாப் போராட்டத்தை தேர்ந்தெடுத்த பாடர் தலைமையிலான குழுவினருக்கு இந்த போர்ப் பயிற்சிகள் அதிக பயனைக் கொடுக்கவில்லை. ஜெர்மனி திரும்பும் குழு, மூன்று வங்கிகளைக் கொள்ளையடித்து தமது ஆயுதபாணி இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். ஊடகவியலாளர் உல்ரிகெ பத்திரிகைகளுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியை அப்போதிருந்தே பொறுப்பேற்கிறார். “வங்கிக் கொள்ளை பொதுமக்களிற்கு எதிரானதல்ல. அது ஆளும்வர்க்கத்தின் சொத்துகளை அபகரிக்கும் புரட்சிகர செயல்” என்று தொடங்கும் நியாயப்படுத்தல், RAF போராட்ட வரலாறு முழுக்க எதிரொலிக்கின்றது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை அந்த மிருகத்தின் வயிற்றுக்குள்ளே நடத்துவதாக கருதிக் கொள்ளும் RAF, பிராங்க்பெர்ட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு குண்டு வைக்கின்றது. தொடர்ந்து ஜேர்மனிய அரச நிறுவனங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. பாடர்-மைன்ஹொப் குழுவினரை “பயங்கரவாதிகள்” என்று அறிவிக்கும் ஜெர்மன் அரசாங்கம், பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிக்கின்றது. அந்த இயக்க உறுப்பினர்களை நேரே கண்டால் சுட்டுக் கொல்லவும் பொலிசிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அப்படியே சாதாரண வீதிச் சோதனையின் போது மாட்டிக் கொள்ளும் இரு RAF உறுப்பினர்களை, போலீசார் நிதானிக்காமல் சுட்டுக் கொல்கின்றனர்.

RAF இயக்க உறுப்பினர்கள் தாம் இப்போது ஜேர்மனிய அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை உணர்கின்றனர். எதிரி கொலை பாதகச் செயலை செய்யவும் அஞ்சாத வேளை, தாமும் இரக்கம் பாராமல் திருப்பித் தாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. அரச எந்திரத்தை வழிநடத்தும் அதிகாரிகள், குண்டுவைத்தோ, அல்லது திடீர் தாக்குதலிலோ குறிவைக்கப்படுகின்றனர். RAF வழங்கிய கொள்கை விளக்கத்தில் மேற்கு ஜெர்மன் அரச அதிகாரிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஹிட்லரின் நாசிக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்த பலர் தற்போதும் ஜனநாயக மேற்கு ஜெர்மன் அரசில் உயர்பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. RAF தலைமுறையினர் “ஹிட்லரின் குழந்தைகள்” என்றும் அழைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களின் பெற்றோர் ஹிட்லரின் அரசில் கடமையில் இருந்த போதும், இந்த புதிய தலைமுறை நாசிசத்தை நிராகரித்து கம்யூனிச சார்பு சித்தாந்தங்களை பின்பற்றினர். கடந்த காலத்துடன் கணக்குத் தீர்க்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக கருதினர்.

பாடர்-மைன்ஹொப் குழுவினர் சில ஆண்டு காலமே(1970-1972) தலைமறைவாக இருந்து கொண்டு தாக்குதல்களை நடத்த முடிந்தது. பொலிஸ் வேட்டையில் அனைத்து உறுப்பினர்களும் சிக்கிக் கொள்ள, மிகுதிக் காலத்தை தனிமைச் சிறைகளில் கழிக்க வேண்டியிருந்தது. (தற்போது மனித உரிமைகளை மதிப்பதாக காட்டிக் கொள்ளும்) ஜெர்மன் பொலிஸ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தது. அவர்களை விசாரணை செய்த நீதிபதிகள், கைதிகளுக்கான பல அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்ததுடன், கிரிமினல்களுக்கு வழங்குவதை விட மோசமான தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். இதனால் RAF கைதிகள் நீதிமன்றத்தை பாசிச நிறுவனமாக கருதி புறக்கணித்தனர். தமது உரிமைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் சிறைக் காவலர்கள் உணவை வற்புறுத்தி திணித்தனர். RAF கைதிகளுக்கு சிறைச் சாலையில் நடக்கும் கொடுமைகள் பற்றிய தகவல்கள் வெளி உலகத்தை அடைந்த போது, பல ஜெர்மன் இளைஞர்கள் சாவீக போராட்டத்தில் ஈடுபட்டனர். RAF கைதிகளை விடுதலை செய்யுமாறு கோஷம் வலுத்து. ஜெர்மன் அரசு இந்த போராட்டத்திற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால், அது இரண்டாவது தலைமுறை RAF உருவாக வழிவகுத்தது.

இரண்டாவது தலைமுறை RAF அமைப்பின் உறுப்பினர் தொகை, பணபலம், தாக்குதல் திறன் என்பன முதலாம் தலைமுறையை விட அதிகரித்து காணப்பட்டது. ஜேர்மனிய அரசை எதிர்த்து சவால் விட்ட, ஒரு சிறு குழுவினரான RAF வீர சாகசங்கள் பல இளைஞர்களை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் இரண்டாம்தலைமுறை RAF இன் போராட்டம் சர்வதேச மயப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய நிதி மற்றும் ஆயுத உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன. லிபியா, (கம்யூனிச) கிழக்கு ஜெர்மனி என்பன குறிப்பிடத்தக்க ஆதரவு சக்திகள். அதே நேரம் பாலஸ்தீன மார்க்சிய புரட்சி அமைப்பான PLFP, கூட்டு நடவடிக்கைக்கு முன்வந்தது. அதன்படி அப்போது ஜெர்மன் நகர் மியூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த சம்பவத்தில், சிறையில் இருக்கும் RAF தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை தோல்வியுற்ற சில நாட்களுக்கு பின்னர், RAF தலைவர்கள் சிறைக் கூண்டுகளுக்குள் பிணமாக காணப்பட்டனர். ஜெர்மன் அரசு அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றது, ஆனால் பிற RAF கைதிகள் அது அரசு நடத்திய படுகொலை என்றனர்.

வெளியே RAF ஆதரவாளர்களும் அது கொலை என்றே நம்பினர். அன்று ஜெர்மன் அரச கணிப்பின் படி, சனத்தொகையில் 30% , பெரும்பாலும் இளைஞர்கள் RAF கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர். இரண்டாவது தலைமுறை RAF, தமது ஆதர்ச நாயகர்களான சிறையில் இருக்கும் RAF உறுப்பினர்களை விடுதலை செய்ய, பல்வேறு திட்டங்களை தீட்டியது. இந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலர், தமது ஆதர்ச நாயகர்களை பார்த்தே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விதிவிலக்காக அதுவரை அகப்படாதிருந்த, அல்லது விடுதலையான முன்னாள் RAF உறுப்பினர்களும் இருந்தனர்.

ஜெர்மன் அரசு சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வைக்கும் பொருட்டு, சில ஆயுதபாணிகள் சுவீடனில் இருந்த ஜெர்மன் தூதுவராலாயத்தை கைப்பற்றி ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். ஆனால் சுவீடன் அதிரடிப்படை தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டதால் அந்த நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது. சிறிது காலத்தின் பின் ஜெர்மனி “லூப்தான்சா” விமானம் ஒன்று கடத்தப்பட்டது. இந்த விமானக் கடத்தலில் PLFP சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் சோமாலியாவில் தரையிறங்க நிர்ப்பந்திக்கப்பட்ட விமானத்தை, ஜெர்மன் கொமாண்டோ படையினர் கைப்பற்றி பயணிகளை விடுவித்து விட்டனர். இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், எஞ்சியிருந்த RAF கைதிகளும் சிறையில் வைத்து கொல்லப்பட்டனர்.

1977 ம் ஆண்டு RAF, ஜெர்மன் அரச நிறுவனம் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியது. டிரெஸ்னெர் வங்கி தலைமை அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆயுததாரிகளில் ஒருவர் அவரது பெறாமகள் என்ற செய்தி, நாடு முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. தொடர்ந்து RAF கைதிகளுக்கு தண்டனை வழங்கிய தலைமை நீதிபதி நடுத்தெருவில், அவரது வாகனத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக வரும் ஜெர்மன் முக்கியபுள்ளியான ஷேய்லரின் துணிகர கடத்தல் நாடகம், அரசாங்க மட்டத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அரசு கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை. “அனைத்து ஜெர்மனி முதலாளிகளின் சங்க” தலைவரான ஷேய்ளர், முன்பு ஹிட்லரின் நாசிக் கட்சியில் முக்கிய பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் அரசு, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பிடிவாதமாக இருந்து விட்டதால், கொலை செய்யப்பட்ட ஷேய்லரின் பிணம் பிரெஞ்சு எல்லையில் கண்டெடுக்கப்பட்டது.

1998 ம் ஆண்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் ஒன்று வந்தது. “சிவப்பு நட்சத்திரத்தின் மீது AK47 துப்பாக்கி சின்னம்”, அது RAF உத்தியோகபூர்வ அறிக்கை என்று பறைசாற்றியது. 28 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தமது இயக்கத்தை கலைத்து விட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த 28 ஆண்டு கால போராட்டத்தில் இரண்டு பக்கத்திலும் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பின் பின்னர், கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த சில RAF உறுப்பினர்கள் பிடிபட்டனர். ஆயினும் ஒரு சிலர் இன்று வரை பிடிபாமல் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது RAF போன்ற அமைப்பு இயங்குவதற்கு ஏதுவான ஆதரவு தளம் இல்லை என்பதாலும், சர்வதேச அரசியல் வெகுவாக மாறிவிட்டதாலும், ஜெர்மன் அரசு RAF இயக்கத்தை பின்தொடர்வதை நிறுத்தி விட்டது.

ஜெர்மன் அரசு, RAF எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு விட்டது. “பொலிஸ் தேசம்” மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அனைத்து வங்கி ஊழியர்களும் தற்போது கண்ணாடி தடுப்புச் சுவருக்கு பின்னால் தான் பணி புரிகின்றனர். காசாளரிடம் இருக்கும் பெருமளவு பணம் கூட உடனுக்குடன் இரகசிய இடத்திற்கு அனுப்பபடுகின்றது. இதனால் பழைய பாணி வங்கிக் கொள்ளை எல்லாம் இனி படங்களில் தான் பார்க்கலாம். அன்று RAF உறுப்பினர்கள் தலைமறைவாயிருந்த காலத்தில், எல்லாவற்றுக்கும் காசுத்தாள்களை பயன்படுத்தியதால், புலனாய்வு செய்வது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அட்டைப்பணம் புழக்கத்தில் இருக்கும் காலம் இது. மேலும் வீட்டு உரிமையாளர்கள் தண்ணீர், எரிவாயு, மின்சார கொடுப்பனவுகளை வங்கி மூலம் செலுத்துமாறு பணிக்கப் படுகின்றனர். நாட்டு மக்கள் எந்த அளவிற்கு அரச கண்காணிப்பின் கீழே வருகின்றனரோ, அந்த அளவிற்கு RAF போன்ற தலைமறைவு ஆயுதபாணி இயக்கத்தின் இருத்தல் மட்டுப்படுத்தப்படுகின்றது.

ஜேர்மனியின் இன்றைய எதிரி இடதுசாரி தீவிரவாதம் அல்ல, அந்த இடத்தை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் பிடித்து விட்டது. ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தத்தின் கொடூரங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய போது, அது ஜேர்மனிய இளைஞர்களை ஆத்திரப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஜெர்மன் அரசின் அமெரிக்க சார்புத் தன்மை என்பன, ஒரு சிலரை தீவிரவாதத்தை நோக்கி தள்ளியது. சரித்திரம் மீண்டும் திரும்புகின்றது. இன்று ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம், மேற்குலகில் வாழும் முஸ்லீம் இளைஞர்களை ஆத்திரப்படுத்தி, சிலரை தீவிரவாதிகளாக்குகிறது. இரண்டு வகை தீவிரவாதங்களையும் உருவாக்கிய மூலம் ஒன்று தான். ஆயினும் அன்று முழு ஜேர்மனிய சமூகமும் வலது-இடது என்று இரண்டாக பிரிந்து நின்றது. இன்று “ஜேர்மனிய பூர்வகுடிகள்”, “இஸ்லாமிய அந்நியர்கள்” என்ற இனரீதியான பிரிவினை காணப்படுகின்றது.


THE RED ARMY FACTION




The Baader Meinhof Complex (movie trailer)



LINKS
Red Army Faction (Wikipedia)
Baader-Meinhof.com
_____________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy