Tuesday, February 26, 2013

பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்


கடந்த நூற்றாண்டில், அறுபதுகளின் இறுதியில், பிரான்ஸ் ஒரு கம்யூனிச புரட்சியின் விளிம்பில் நின்றது என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய தலைமுறையினர், கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துள்ளனர். இதே மாதிரியான நிலைமை தான், அறுபதுகளில் இருந்த பிரான்சிலும் காணப்பட்டது. ஸ்டாலினின் மறைவின் பின்னர், அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்களும், அதற்கு துணையாக அமைந்த குருஷேவின் அரசியலும், ஐரோப்பிய நாடுகளில் "யூரோ கம்யூனிசம்" என்ற சீர்திருத்தவாத கட்சிகள் தோன்ற வழிவகுத்திருந்தது.

அறுபதுகளில் எல்லோரின் வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரும், அங்கே நடந்த அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்களும் மக்களுக்கு தெரிய வைத்ததில்,  தொலைக்காட்சி பெட்டிகளும் முக்கிய பங்காற்றின. வியட்நாம் போரை எதிர்க்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. அந்த மாணவர்கள் தமது எதிர்ப்பரசியலுக்கு ஒரு கோட்பாட்டை தேடிய பொழுது, மாவோ பற்றி அறிந்து கொண்டனர். இதனால், அன்று தொடங்கிய மாணவர் இயக்கங்கள், பிற்காலத்தில் மாவோயிச கட்சிகளாக பரிணாம வளர்ச்சி கண்டன.

1968 ம் ஆண்டு, பிரான்சில் ஏற்பட்ட மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி, பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளால் அடக்கப் பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் மறைய பல வருட காலம் எடுத்தது. "இடது-பாட்டாளிகள்" (Gauche Prolétarienne)  என்ற ஒரு மாவோயிச அமைப்பு, பிரான்சில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பிரபல கார் கம்பனியான ரெனோல்ட், கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், நிறைய தொழிலாளர்கள் அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை மூலம், வேலை நிறுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் விநியோகிப்பது என்று பல வழிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலை நிர்வாகம், கம்யூனிச தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததால், தொழிற்சாலை போராட்ட களமாகியது.

1975 ம் ஆண்டு, பெப்ரவரி 25  அன்று, பெருந்தொகையான மாவோயிஸ்ட் தொழிலாளர்கள், ரெனோல்ட் தொழிற்சாலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் முற்றுகையிட்டனர். பாசிச எதிர்ப்புரட்சியாளர்கள் தாக்குவதற்கு வந்தால், அதற்கும் தயாராக தற்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 26 பெப்ரவரி  1972, பியேர் ஒவெர்னி (Pierre Overney) என்ற மாவோயிச தொழிலாளி, தொழிற்சாலையின் முன்னால் நின்று கொண்டு, பாசிச எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினால், காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்ட முன்னாள் இராணுவவீரர் Jean-Antoine Tramoni, திடீரென துப்பாக்கி எடுத்து சுட்டார். நெஞ்சில் குண்டடி பட்ட பியேர், அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.

26.02.1972 அன்று பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு கம்யூனிச போராளி பியேரின் மரணம், பிரான்ஸ் நாட்டை உலுக்கியது. அவரது மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரிஸ் நகர தெருக்களில், சுமார் மூன்று இலட்சம் மக்கள், செங்கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர்.  பிரான்சில், இன்னமும் பெருந்தொகையான மக்கள்  மாவோயிச-கம்யூனிச புரட்சியாளர்களை ஆதரவளிக்கின்றனர் என்ற செய்தியை, அந்த ஊர்வலம் உலகுக்கு உணர்த்தியது. அன்று மாலை, பிரான்சின் பிரபல புரட்சிகர பாடகர்,  Dominique Grange கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. மயானத்தில் திரண்ட உழைக்கும் மக்கள் சர்வதேச கீதமிசைக்க, தோழர் பியேரின் பூதவுடல் விதைக்கப் பட்டது.  

இலட்சக் கணக்கான மக்களின் ஆதரவு இருந்த போதிலும், பிரெஞ்சு மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. 1973 ம் ஆண்டு, சில பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை கொண்ட தலைவர்களால் கட்சி சீர்குலைந்தது. அவர்கள், "மாவோ முதல் மோசெஸ் வரை" என்ற புதியதொரு கொள்கையை கண்டுபிடித்து, இஸ்ரேலின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இந்த தலைவர்கள், இன்று அரச இயந்திரத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கின்றனர். இதே நேரம், பாட்டாளிவர்க்க நலன் சார்ந்த, அல்லது அந்த வர்க்க பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், புரட்சிகர இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அதற்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதியினர், சோஷலிச அல்பேனியாவின் என்வர் ஹோஷாவை ஆதரித்தனர். ஹோஷாவின் மறைவுக்கு பின்னர், பெருவின் ஒளிரும் பாதை இயக்கத்தின் போராட்டத்தை ஆதரித்தனர். அந்த தருணத்தில், பிரான்சில் மாவோயிசம் கோட்பாடு வடிவம் எடுக்க ஆரம்பித்தது. 

இன்னும் சில மாவோயிஸ்டுகள், பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், நீண்ட கால கெரில்லா யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அந்தக் குழுவினர்,  Noyaux Armés Pour l’Autonomie Populaire (NAPAP) என்ற பெயரில் இயங்கினார்கள்.  தோழர் பியேரினை படுகொலை செய்த ரெனோல்ட் தொழிற்சாலை காவல்காரரை சுட்டுக் கொன்றமை, அவர்களது முதலாவது தாக்குதலாகும்.  Jean-Antoine Tramoni என்ற அந்தக் காவல்காரர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த போதிலும், அரசின் மெத்தனப் போக்கு காரணமாக விடுதலை செய்யப் பட்டிருந்தார்.  NAPAP இயக்கமும், இன்னொரு புரட்சிகர ஆயுதக் குழுவான Groupes d’Action Révolutionnaire Internationalistes (GARI)   யும் இணைந்து,  Action Directe என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். Action Directe என்ற நகர்ப்புற கெரில்லா இயக்கம், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கூட, ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்திருந்தனர். 

2002 ம் ஆண்டு, பிரான்சில் ஒரு புதிய மாவோயிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டது. இந்திய நக்சலைட் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த வருடம், தோழர் பியேரின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தனர். 

இன்று தோழர் பியேரின் 41 வது நினைவு தினமாகும்.
1972 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த பியர் ஒவெர்னியின் மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதை காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.




பிரான்சில் கம்யூனிச புரட்சி பற்றிய முன்னைய பதிவுகள்: 

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

Monday, February 25, 2013

ஒசாமா பின்லாடன் கதாநாயகனாக நடித்த "விஸ்வரூபம்": ஓர் உண்மைக் கதை


[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்] 
(பாகம் - 6)

விஸ்வரூபம் திரைப் படத்தில், கமல்ஹாசன் ஒரு இந்திய முஸ்லிமாக, ஒரு RAW அதிகாரியாக நடித்திருப்பார். முதலில் பாகிஸ்தான் சென்று, அங்கே முகாமிட்டுள்ள தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவுவார். பின்னர் தலைவர் முல்லா ஒமாருக்கு நெருக்கமான குடும்ப நண்பராக மாறுவார். தாலிபான் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவ பயிற்சி அளிப்பார். தாலிபான் இயக்கத் தலைவர்களின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மதிக்கப் பட்டாலும், அவர் ஒரு RAW உளவாளி என்ற சந்தேகம் யாருக்கும் வராது. தாலிபான் ஆட்சியை அகற்றுவதற்கான அமெரிக்க படையெடுப்பு நிகழும் சமயத்தில், கமல் கொடுத்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தும். தாலிபான் தலைவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை எதிரிக்கு கொடுத்தவர், உற்ற நண்பனாக பழகிக் கொண்டிருக்கும் கமல் தான் என்ற சந்தேகம், அந்நேரம் யாருக்கும் வந்திருக்காது. காலம் தாழ்த்தி தான், அந்த உண்மை தெரிய வரும். இந்தக் கதை, உண்மையிலேயே நடந்த கதை என்று சொன்னால் நம்புவீர்களா?

விஸ்வரூபம் திரைப்படம், ஒரு உண்மைக் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. உண்மையான வரலாற்றுக் கதையில், தாலிபானுக்குள் ஊடுருவியது, ஒரு CIA உளவாளி. அவரும் ஒரு முஸ்லிம் தான். தாலிபான் தலைவருக்கு நெருங்கிய நண்பனாக இருந்தார். அவரது  குடும்பமும், ஒமாரின் குடும்பமும் உறவு முறை கொண்டாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அவர் தான் தாலிபான் போராளிகளுக்கு, கெரில்லா போர்ப் பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது அவரால் தயாரிக்கப் பட்ட பிரச்சார வீடியோவை பார்த்து விட்டு தான், கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் அதே மாதிரியான காட்சிகளை அமைத்தார். அந்த CIA உளவாளியின் பெயரை சொன்னால், இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தான் "ஒசாமா பின்லாடன்"!  கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், ஒசாமா பின்லாடனை தமது மானசீக குருவாக   கருதுகிறார்கள் போலும். தமாஷ்!

"இதெல்லாம் குப்பை...நாங்கள் நம்ப மாட்டோம்..." என்று யாராவது அடம்பிடித்தால், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

 இங்கேயுள்ள படத்தை பாருங்கள். இராணுவ சீருடையில், துப்பாக்கி வைத்திருப்பது யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அவர் தான் ஒசாமா பின்லாடன். அவருக்கு அருகில், ஆலோசனை  வழங்கிக் கொண்டிருக்கும் அந்த அமெரிக்கர் யார்? அவர் பெயர்  பிரெசின்ஸ்கி (Brzezinski). அமெரிக்க அரசின் உயர்மட்ட சி.ஐ.ஏ. அதிகாரி. அவர் இப்போது என்ன செய்கிறார்? இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார். சொல்ல மறந்து விட்டேன். அவர் போலந்தில் பிறந்த யூதர். அவரின் தந்தை சோவியத் யூனியனிலும், பின்னர் கனடாவிலும் தூதுவராக பணியாற்றியவர். போலந்து நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்ததும், அமெரிக்காவில் தங்கி விட்டார்கள். 

பிரெசென்ஸ்கி, ஆப்கானிஸ்தானுக்கான சி.ஐ.ஏ. தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தான், ஜிகாத் போராட்டம் சூடு பிடித்திருந்தது. "Operation Cyclone"  என்ற பெயரில், சி.ஐ.ஏ. பல கோடி டாலர்களை வாரியிறைத்தது. ஒவ்வொரு வருடமும் 20 - 30 மில்லியன் டாலர்களாக இருந்த உதவித் தொகை, 1987 ல் அதன் உச்சத்தை அடைந்தது. அந்த வருடம் மட்டும், 680 மில்லியன் டாலர்கள் ஜிகாத் போராட்ட நிதியாக ஒதுக்கப் பட்டது. பாகிஸ்தானில் உள்ள முகாம்களில் வைத்து, ஜிகாத் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வேண்டிய நவீன ஆயுதங்கள் எல்லாம் அந்த அமெரிக்க நிதியில் இருந்து வழங்கப் பட்டன.  ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள், அன்று பல அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கே கிடைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள சோவியத் படைகளுக்கு கடும் இழப்புகளை உண்டாக்குவதே அமெரிக்காவின்  நோக்கம். இறுதியில், ஆப்கான் போரை வெல்ல முடியாத சோவியத் படைகள் பின்வாங்கிச் சென்றது மட்டுமல்லாது, சோவியத் ஒன்றியமும் நொறுங்கிப் போனது. 

அது சரி, அமெரிக்காவே ஜிகாதிகளுக்கு உதவி செய்தது என்றால், சவூதி அரேபியரான பின்லாடனுக்கு அங்கே என்ன வேலை?  பனிப்போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஆப்கான் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா உதவுவது தெரிய வந்தால், அது சர்வதேச அரங்கில் இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம். அதனை தவிர்ப்பதற்கு, பின்லாடன் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டது. ஏற்கனவே, மேற்குலகிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ராஜதந்திர நெருக்கடி ஒன்று ஏற்பட்டது.  பிரிட்டனின் சிறப்புப் படையணியான SAS பயிற்சியாளர்கள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருந்த பயிற்சி முகாம் ஒன்றில், ஜிகாத் போராளிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அந்த முகாம் சோவியத் படையினரின் தாக்குதல் ஒன்றில் கைப்பற்றப் பட்டது. அங்கிருந்து இரண்டு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜிகாத் போராளிகளை ஸ்காட்லாந்துக்கு வரவழைத்து பயிற்சி கொடுத்தார்கள். 

அமெரிக்காவின் நெருங்கிய  கூட்டாளியான, சவூதி அரேபியாவும் ஜிகாத் போராட்டத்திற்கு நிதியுதவி செய்து வந்தது. தனது வஹாபிச பாணி இஸ்லாமை பரப்ப வேண்டும் என்ற நோக்கமும், சவூதி அரேபியாவுக்கு இருந்தது. ஒரு சவூதி அரேபிய இளவரசர், ஆப்கானிஸ்தானுக்கு வந்தால், போராளிகள் மிகுந்த உத்வேகத்துடன் போர் புரிவார்கள் என்று, ஜிகாத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். சவூதி அரேபியாவில் இருந்து எந்தவொரு இளவரசரும் போராடுவதற்காக ஆப்கானிஸ்தான் செல்லவில்லை. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமான செல்வந்தர்களான பின்லாடன் குடும்பத்தில் இருந்து ஒசாமா என்பவர் வந்தார்.  ஒரு தொழிலதிபரின் மகனான ஒசாமா பின்லாடன், பெருந்தொகைப் பணத்துடனும், அரேபியாவில் சேர்க்கப்பட்ட தொண்டர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.

ஒசாமா பின்லாடன், சவூதி மன்னருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக விளங்கினார். சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய ஒசாமா, சி.ஐ.ஏ. க்கு வேலை செய்தார். சி.ஐ.ஏ. யில் அவருக்கு சூட்டப்பட்ட புனை பெயர்: Tim Osman.  (இதனை நிரூபிக்கும் சி.ஐ.ஏ. இரகசிய ஆவணம் ஒன்று இங்கே இணைக்கப் பட்டுள்ளது.) 

ஒசாமா பின்லாடன் ஒரு CIA உளவாளி என்பதை நிரூபிக்கும் இரகசிய ஆவணம். 






















ஒசாமா பின்லாடனுக்கும், அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பானது, The New Jackals (by Simon Reeve)  என்ற நூலில் விபரமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.  அநேகமாக, சி.ஐ.ஏ. மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து செல்லும் பணம், சரியான இடத்தை சென்றடைவதை கண்காணிக்கும் பொறுப்பு ஒசாமாவுக்கு வைத்திருக்கலாம். எந்தெந்த ஆயுதங்கள் தேவை என்ற பட்டியலையும் அவரே தயாரித்திருந்தார்.  ஆப்கானிஸ்தானில் ஒரு டசின் ஆயுதபாணி இயக்கங்கள், சோவியத் இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தாலும், குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கத்திற்கு தான் பெருமளவு வெளிநாட்டு உதவி கிடைத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ. பணத்தில் அரைவாசி அந்த இயக்கத்திற்கு போய்ச் சேர்ந்தது. சி.ஐ.ஏ. உளவாளியான பின்லாடனும், அதனுடன் தான் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். 

விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் சவூதி அரேபியர் ஒருவர், அபின் வியாபாரம் செய்வதாகவும், அதனை தாலிபான் தலைவர்கள் சாதாரணமாக எடுப்பதாகவும் காண்பித்திருப்பார்கள். அது உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கின்றது. சி.ஐ.ஏ யின் உதவி பெற்ற குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கம், ஹெரோயின் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்தது. இது அன்று, அமெரிக்க அரசு, பாகிஸ்தான் அரசு உட்பட, எல்லோருக்கும் தெரியும். அனேகமாக, முஜாகிதீன் குழுக்கள் சீரழிந்ததற்கு இது போன்ற கிரிமினல் செயற்பாடுகளும் முக்கிய காரணம். அன்று பல முஜாகிதீன் ஆயுதக் குழுக்கள் போதைவஸ்து கடத்தி வந்தன.

அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற "விடுதலைப் போராளிகள்", ஆப்கான்  வர்த்தகர்களிடம், மக்களிடம் கப்பம் வசூலித்து வந்தனர். கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்தால், கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அது போதாதென்று, போராளிக் குழுக்களில் சிறுவர்களையும் பலாத்காரமாக  சேர்ப்பது, பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது....இப்படி அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், குற்றங்கள் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருந்தன. சோவியத் படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், ஆயுதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று அதிகாரத்திற்காக மோதிக் கொண்டன.  மக்களுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான், தாலிபான்கள் உருவானார்கள். சரியாகச் சொன்னால், CIA யும், ISI யும் தாலிபான் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். ஒசாமா பின்லாடனும், அவரை பின்பற்றிய அரபு தொண்டர்களும், புதிய இயக்கத்துடன் சேர்ந்து கொண்டனர். 

ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து, தாலிபான் என்ற இயக்கத்தை உருவாக்கியது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு மாற்று அரசியல் சக்தி இருந்தது. அவர்கள் மேற்கத்திய நாகரீகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதாவது, பெண் கல்வி, ஆண் - பெண் சமத்துவம், மேற்கத்திய கலாச்சாரம், மதச்சார்பற்ற அரசு.... இவற்றை எல்லாம் ஆதரிப்பார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள விருப்பமில்லை. ஏனென்றால், அவர்கள் ஆப்கான் மார்க்சிஸ்டுகள்! அமெரிக்காவை பொறுத்தவரையில், மார்க்சிஸ்டுகள் மேல் நம்பிக்கை வைப்பதை விட, தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுவது சிறந்ததாக பட்டது.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தான் ஆளவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. இப்போது அந்த மார்க்சிஸ்டுகள் எங்கே? உண்மையில், தாலிபான் படைகள் முன்னேறும் வரையில், அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதி தாலிபான் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், அகதிகளாக வெளியேறினார்கள். குறைந்தது பத்தாயிரம் ஆப்கான் மார்க்சிஸ்டுகள், அவர்களது குடும்பங்களுடன் ரஷ்யா ஊடாக நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அந்த நாட்டில், அனைவருக்கும் அகதி தஞ்சம் வழங்கப் பட்டது. அவர்களில் பலரை நான் நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். சிலர் இன்றைக்கும் எனது உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் பற்றிய இந்தக் கட்டுரைகள் எழுதுவதற்கு, அவர்கள் வழங்கிய தகவல்கள் பெரிதும் உதவி உள்ளன. அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

(முற்றும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"
4.அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்
5.அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

Friday, February 22, 2013

அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்

[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்]

(பாகம் - 5)
கடும்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான, ஆப்கான் ஜிகாத் தலைவர்களை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடுகின்றார். (1985)


"நீங்கள் பிறப்பதற்கு முந்திய வரலாறு பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் குழந்தையாகவே இருப்பீர்கள்."Marcus Tullius Cicero (ரோம தத்துவஞானி)

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் உருவான பின்னர் பிறந்த இளைய தலைமுறையினருக்கு கடந்த காலம் பற்றி எதுவும் தெரிந்திருக்கப் போவதில்லை. அவர்கள் தான் பெருமளவில் "விஸ்வரூபம்" திரைப்படத்தை பார்க்கப் போகிறார்கள். அத்தகையோரை ஏமாற்றுவது சுலபம் என்று கமல்ஹாசன் கணக்குப் போட்டிருக்கலாம். தாலிபான் என்றால் என்ன? அல்கைதா என்றால் என்ன? அவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? அந்த இரண்டு இயக்கங்களையும் யார் உருவாக்கினார்கள்? யார் நிதியும், ஆயுதங்களும் வழங்கினார்கள்? ஐம்பது வயதை தாண்டிய கமல்ஹாசனுக்கு அந்த விபரம் எதுவும் தெரியாமல் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவிய, RAW அதிகாரியான கமல்ஹாசன், புறாக்களை வைத்து அமெரிக்காவில் நாச வேலைகளை ஏற்படுத்த நினைக்கும் முல்லா ஓமாரின் திட்டங்களை அறிந்து கொள்கிறார். பிற்காலத்தில், அமெரிக்காவில் வாழும் காலத்தில், தற்செயலாக FBI யினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் நேரத்தில், அந்த தகவல்களை தெரிவிக்கிறார். பின்னர், FBI படையினருடன் சேர்ந்து, ஓமாரின் அணுகுண்டு சதித் திட்டத்தை முறியடிக்கிறார். அது வரைக்கும், அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான FBI க்கும், வெளிநாட்டு புலனாய்வுத்துறையான CIA க்கும், எதுவும் தெரியாது என்று சாதிக்கிறார். திரைக் கதாசிரியர் கமல்ஹாசனின் அப்பாவித்தனத்தை நினைத்து சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை.

2008 ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த தாக்குதலை நடத்த வந்து பிடிபட்ட, கசாப் என்ற இளைஞனுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப் பட்டு விட்டது. ஆனால், நியூயோர்க் 9/11 தாக்குதலைப் போன்றது என்ற அர்த்தத்தில், 26/11 என்று குறிப்பிடப் படும் மும்பை தாக்குதல் தொடர்பாக, David Headley என்ற அமெரிக்க பிரஜை, அமெரிக்காவில் 35 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். இது குறித்து இந்திய ஊடகங்கள் கூட மௌனம் சாதிக்கின்றன. அதற்கு காரணம், அந்த நபர் ஒரு முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி. அந்த குற்றவாளியை விசாரிப்பதற்காக தன்னிடம் ஒப்படைக்குமாறு, இந்திய அரசும் கோரவில்லை. சி.ஐ.ஏ. க்கும், தெற்காசிய நாடுகளில் இயங்கும் ஜிகாதி இயக்கங்களுக்கும் இடையிலான இரகசிய உறவு தெரிந்து விடும் என்பதற்காக, அமெரிக்காவும் ஒத்துழைக்கவில்லை.

தெற்காசியாவிலேயே முதலாவது ஜிகாதி தீவிரவாத இயக்கத்தை யார், எப்போது, எங்கே உருவாக்கினார்கள் என்று தெரியுமா? ஆப்கானிஸ்தானில் 1969 ம் ஆண்டு, சி.ஐ.ஏ. நிதியுதவியில் அவை ஸ்தாபிக்கப் பட்டன. அந்தக் காலத்தில் ஆப்கானிஸ்தானை ஆண்ட, முற்போக்கான சிந்தனை கொண்ட  மன்னர் சாஹிர் ஷா, அயல் நாடான சோவியத் யூனியனின் உதவியுடன் தனது நாட்டை நவீனப் படுத்தி வந்தார். ஆப்கானிஸ்தானின் முதலாவது நெடுஞ்சாலையை கூட, சோவியத் என்ஜினியர்கள் தான் போட்டுக் கொடுத்தார்கள். அப்போது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் சோவியத் செல்வாக்கு உயர்வதை தடுப்பதற்கு விரும்பியது.

ஹெக்மதியார், ரபானி போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், காபுல் பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமான "இஸ்லாமிய மாணவர் அமைப்பை" உருவாக்கினார்கள். 1973 ம் ஆண்டு, ஒரு சதிப்புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, ஆப்கானிஸ்தான் குடியரசானது. அந்த சந்தர்ப்பத்தில், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய ஹெக்மதியாரும், ரபானியும் ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். அது தான் ஜிகாதிக் குழுக்களின் தோற்றம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர விரும்பிய தீவிரவாத இயக்கங்களுக்கு, சி.ஐ.ஏ. வேண்டியளவு நிதியும், ஆயுதங்களும் வழங்கியது.

இதிலே கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு.  1979 ம் ஆண்டு, சோவியத் படையெடுப்புகளுக்கு பின்னர் தான், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தோன்றின என்று நினைப்பது தவறு. உண்மையில், அன்றிருந்த ஆப்கான் அரசு கம்யூனிசத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மன்னராட்சியாக இருந்த போதிலும், சோவியத் உதவியுடன் நாட்டை நவீனமயப் படுத்தியதால் வந்த வினை அது. ஒரு நாடு சோஷலிச நாடாக இல்லாவிட்டாலும், அது சோவியத் முகாமில் கூட்டுச் சேர்வதையும், அதன் உதவியுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதையும் கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதே போன்ற காரணங்களுக்காக, இலங்கையில் பண்டாரநாயக்கவும்,  இந்தியாவில் இந்திரா காந்தியும் கொலை செய்யப் பட்டனர். இந்த அரசியல் படுகொலைகளுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. யின் கரங்கள் மறைந்திருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியாவை கலக்கிக் கொண்டிருந்த, பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளும், காஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகளும், சி.ஐ.ஏ. தொடர்பில் இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

விஸ்வரூபம் படத்தின் இறுதியில், "அமெரிக்காவை பேரழிவில் இருந்து காப்பாற்றிய கமல்ஹாசனை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டுவதாக" ஒரு காட்சியை, அவரால் அமைக்க முடியவில்லை. அந்தளவு தூரம் கமல்ஹாசனின் கற்பனைக் குதிரை பாயவில்லை. ஆனால், அவர் திரைப்படத்தில் யாரை வில்லன்களாக சித்தரித்தாரோ, அந்த சினிமா வில்லன்கள் நிஜத்தில் நாயகர்களாக இருந்த விடயம் கமலுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றைய அடிமை இந்தியர்களை விட, அன்றைய "விடுதலைப் போராளிகளான" ஆப்கான் ஜிகாதிகள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அந்த உறவு எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தது என்றால், 1982 ம் ஆண்டு, அமெரிக்க விண்வெளிக்கு செலுத்திய கொலம்பியா  விண்கலத்தை "ஆப்கான் விடுதலைப் போராளிகளுக்கு"(ஜிகாதிகளுக்கு) அர்ப்பணம் செய்யும் அளவிற்கு இருந்தது.

அது மட்டுமல்ல, அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், தாலிபான் போன்று உடையணிந்த ஜிகாதி தலைவர்களை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து உரையாடினார். 1985 ம் ஆண்டு நடந்த சந்திப்பின் போது, "இவர்கள் அமெரிக்க தேசத்தை நிர்மாணித்த சிற்பிகள் போன்றவர்கள்." என்று, ரீகன் ஜிகாதிகளை சுட்டிக் காட்டி,  புகழாரம் சூட்டினார். விஸ்வரூபம் படமெடுத்து, இந்தியரின் அமெரிக்க விசுவாசத்தை பறைசாற்றிய கமல்ஹாசனுக்கு அந்தப் பெருமை கிடைக்கவில்லை. இதை எல்லாம் கேள்விப் படும் பொழுது, கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், தாலிபான் ஜிகாதிகள் மேல் பொறாமை கொள்வார்கள்.  என்ன செய்வது? சிலநேரம், உண்மைச் சம்பவங்கள் கற்பனைக் கதைகளை விட ஆச்சரியமாக இருக்கலாம். 

அமெரிக்க அரசு, ஆப்கான் ஜிகாதிகளுக்கு எவ்வளவு பணம் செலவளித்திருக்கும்? ஒரு தடவை மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். 1885 ம் ஆண்டு மட்டும், 280 மில்லியன் டாலர்களை சி.ஐ.ஏ. செலவிட்டது. சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் வழங்கிய தொகையை கணக்கிட்டால், அந்த வருடத்தில் மட்டும் 500 மில்லியன் டாலர்கள் ஜிகாதி இயக்கங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்கையில், (சவூதி) அரேபியர்களை மட்டும் தாலிபானுக்கு நிதி கொடுக்கும் புரவலர்களாக, விஸ்வரூபம் படத்தில் கமல் காட்டியிருப்பார். கமல்ஹாசன் அவர்களே! உங்கள் தாய்நாடான இந்தியா, தொன்னூறுகளில் இருந்து தான் அமெரிக்காவின் அடிமை நாடாகியது. அதற்கு முன்பிருந்தே, சவூதி அரேபியா எப்போதும் அமெரிக்காவின் அடிமை நாடு தான். எண்ணை ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும், அமெரிக்க எஜமானர்கள்  அந்தப் பணத்தை எங்கே, எப்படி செலவளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.  

1991 ம் ஆண்டு, குவைத்தை மீட்பதற்கு அமெரிக்கா படையெடுத்தது. ஆனால், அந்த செலவை சவூதி அரேபியா பொறுப்பேற்றது. அதே போல, ஆப்கான் ஜிகாதிகளை ஆதரிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டது. சவூதி அரேபியா நிறைவேற்றியது.  இன்னமும் ஒன்றும் புரியவில்லை என்பவர்களுக்காக சுருக்கமாக சொல்கிறேன். உலகிலேயே அதிகளவு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா. சவூதி எண்ணையில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு விற்பனையாகின்றது. இதனால் பெருமளவு அமெரிக்க டாலர்கள், இலாபமாக சவூதி அரேபியாவின் கஜானாவை நிரப்புகின்றன. அந்தப் பணத்தில் ஒரு பகுதி, ஆப்கானிஸ்தானில் போராடும் ஜிகாதி இயக்கங்களுக்கும், தாலிபானுக்கும் சவூதி நிதியாக போய்ச் சேர்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டு, ஜிகாதி இயக்கங்கள் அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்குகின்றன. இப்போது பணம் எங்கே போகின்றது? அப்பாடா... அமெரிக்காவில் இருந்து சென்ற டொலர்கள், ஒரு வழியாக அமெரிக்காவுக்கே திரும்பி வந்து விட்டன. 

(தொடரும்)

ஆப்கான் ஜிகாதிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம்:


President Ronald Reagan Meeting Some Mujahideen


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"
4.அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

Thursday, February 21, 2013

ஈக்குவடோரின் சோஷலிச சாதனைகள் : மறைக்கும் ஊடகங்கள்


லத்தீன் அமெரிக்காவில் உள்ள எக்குவடோர் (ஆங்கில உச்சரிப்பு: ஈக்குவடோர்)  நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் (17.02.13), ஜனாதிபதி Rafael Correa இரண்டாம் தடவையாக மக்களால் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது பற்றி எந்த செய்தி ஊடகத்திலாவது அறிவித்தார்களா? இல்லை.   அந்த நேரத்தில், தனது காதலியை சுட்டுக் கொன்ற தென்னாபிரிக்க ஒலிம்பிக் வீரரின் செய்தியை பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருந்தன. மக்களுக்கு தேவையான செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், தேவையில்லாத செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும் எமது ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது.

ஜனாதிபதி ராபேல் கொரெயா, இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, அவர் கடந்த ஐந்து வருடங்களாக எகுவடோர் பொருளாதாரத்தில் சோஷலிசத்தை கொண்டு வந்ததற்கு கிடைத்த பலன் ஆகும். (Ecuador's Correa vows to make socialist revolution 'irreversible', http://news.yahoo.com/ecuadors-correa-vows-socialist-revolution-irreversible-224647973.html)  ஜனாதிபதி ராபேல் கொரெயா வின் மொழியில் சொன்னால், "நல்வாழ்வுக்கான சோஷலிசம்", அதன் பலன்களை அறுவடை செய்துள்ளது. ராபேல் கொரெயாவின் சோஷலிசம், எக்குவடோர் நாட்டில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது?

 1. நமது நாடுகளில் ஆட்சி நடத்தும், IMF, உலகவங்கிகளின் அடிமைகள் இந்தக் குறிப்பை கவனமெடுத்து வாசிக்கவும். கொரெயா பதவியேற்ற மறுநாளே, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த மறுத்தார். IMF உடனான பேரம் பேசலின் பின்னர், மொத்த கடன்களில் 70% குறைக்கப் பட்டது. ராபேல் கொரெயா ஒரு பொருளியல் நிபுணர் மட்டுமல்ல, முந்திய அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக இருந்தவர்.

 2. அவர் ஆட்சிக்கு வந்த மறுநாளே, அந்நியர்களுக்கு நாட்டை விற்பதை நிறுத்தினார். வெளிநாட்டு பெற்றோலியக் கம்பனிகள், அரசுக்கு கட்ட வேண்டிய ராயல்ட்டி தொகை, 20% இலிருந்து 85% மாக உயர்த்தப் பட்டது.
(Ecuador: Left-Center Political Regimes versus Radical Social Movements, http://www.globalresearch.ca/ecuador-left-center-political-regimes-versus-radical-social-movements/5322667)

 3. வங்கி உடைமையாளர்களின் அளவுக்கதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. வரி அமைப்பு சீர்திருத்தப் பட்டு, பணக்காரர்கள் அதிக வரி செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

4. வெகுஜன ஊடகங்களை, சக்திவாய்ந்த வணிகர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காக, புதிய ஊடக சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த சட்டத்தின் படி, பெரிய நிதி நிறுவனங்கள், செல்வந்தர்கள், ஒரு  ஊடக நிறுவனத்தின் பங்குதாரராக, அல்லது உரிமையாளராக இருக்க முடியாது.

5. ராபேல் கொரெயா தனது பொருளாதார திட்டத்தை, "நல்வாழ்வுக்கான சோஷலிசம்" என்று அறிவித்துள்ளார்.  சமூகப் பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நான்கு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. மூலதனத்தின் இரும்புப் பிடியில் இருந்து மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார்.

6. குழந்தை தொழிலாளிகளாக இருந்த ஐந்து இலட்சம் சிறுவர்களை மீட்டுள்ளார். அனைத்து தொழில்களுக்கும் நியாயமான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப் பட்டது. ஓய்வூதிய தொகை உயர்த்தப் பட்டது. 

7. எக்குவடோர் நாட்டின் மொத்த சனத்தொகை 14.5 மில்லியன். அதிலே இரண்டு மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.   ஏழையான ஒவ்வொரு பிரஜைக்கும், வாழ்க்கைச் செலவுக்காக  25 டாலர் மாதாந்த கொடுப்பனவு கிடைக்கின்றது. இந்த தேர்தலுக்குப் பின்னர் அந்த தொகை இரட்டிப்பாக்கப் படும். ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசு கடனுதவி கிடைக்கிறது. குடிசைகளில் இருந்தவர்கள், அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் குடியமர்த்தப் படுகின்றனர்.  நமது நாட்டு ஏழைகள் இந்த செய்தியை கேட்டு பெருமூச்சு மட்டுமே விட முடியும்.

8. அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப் படுகின்றது. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இலவச சீருடை கிடைக்கிறது. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. கியூபாவில் இருந்து தருவிக்கப்பட்ட வைத்தியர்கள், பொது மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கின்றனர்.

9. பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 15% மாக குறைந்துள்ளது. 2015 ம் ஆண்டுக்குள் சிறுவர்களின் போஷாக்கின்மையை அரைவாசியாக குறைக்கப் போவதாகவும், குழந்தைகள் விடயத்தில் அதனை அறவே இல்லாதொழிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் 60% மாக இருந்த வறுமை, இன்று 29% மாக குறைந்துள்ளது. எக்குவடோர் நாட்டின் கடந்த நூறாண்டு கால வரலாற்றில், எந்தவொரு ஆட்சியாளரும் இந்தளவு முன்னேற்றத்தை கண்டதில்லை.
(The State of Food Insecurity in the World, http://www.fao.org/docrep/016/i3027e/i3027e.pdf)

10. சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும் ராபேல் கொரெயாவுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக் கிடைத்துள்ளது. "இயற்கையின் உரிமைகளை" அரசமைப்பு சட்டத்தில் சேர்த்துக் கொண்ட ஒரேயொரு நாடு எக்குவடோர் ஆகும். இயற்கை வனப் பகுதிகள் பாதுகாக்கப் படும் இடங்களில், எண்ணைக்  கிணறு தோண்டுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
(Ecuador election: Rafael Correa set to win despite fossil fuel fears, http://www.guardian.co.uk/world/2013/feb/14/ecuador-election-president-rafael-correa?INTCMP=SRCH)

11.அமெரிக்காவில் உள்ள இராணுவக் கல்லூரிக்கு எக்குவடோர் மாணவர்களை அனுப்புவதை நிறுத்தினார். கடந்த காலங்களில், School of the Americas (தற்போது அதன் பெயர் "Western Hemisphere Institute for Security Cooperation"என்று மாற்றப் பட்டுள்ளது.)  என்ற கல்லூரியில் பயின்ற லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பலர், தாயகம் திரும்பியதும்  சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தியமை இங்கே குறிப்பிடத் தக்கது. மேலும், இராணுவ அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கு அமெரிக்கா அனுப்பாமல், லத்தீன் அமெரிக்க நாடொன்றில் இராணுவ கல்லூரி ஒன்றை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்துள்ளார். அந்தப் பிரேரணைக்கு வெனிசுவேலா அதிபர் சாவேசும் ஆதரவளிக்கிறார்.
(Correa firma decreto que prohíbe envío de soldados ecuatorianos a la Escuela de las Américas, http://www.elcomercio.com/seguridad/Correa-soldados-ecuatorianos-Escuela-Americas_0_728327210.html)

 12. சர்வதேச அரங்கிலும் ராபேல் கொரெயா துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே க்கு, லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் வழங்கினார். காஸா மீதான் இஸ்ரேலின் போரை கண்டித்தார். லத்தீன் அமெரிக்காவின் புதிய சோஷலிச நாடுகளுக்கு இடையிலான, மாற்றுப் பொருளாதார அமைப்பான  ALBA வின் உருவாக்கத்திற்காக பாடுபட்டார்.

வெனிசுவேலா போன்று, எக்குவடோரும் எண்ணை வளம் கொண்ட நாடாகும்.  எண்ணை ஏற்றுமதி, மொத்த ஏற்றுமதி பொருளாதாரத்தில் 63% மாகும். அது  30% - 40% அரச கஜானாவை நிரப்புகின்றது. (Ecuador facts and figures, http://www.opec.org/opec_web/en/about_us/148.htm) எண்ணை விற்பனையில் கிடைக்கும் வருமானம், சோஷலிச கட்டுமான செலவினத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. எதிர்காலத்தில், சர்வதேச சந்தையில் எண்ணை விலை வீழ்ச்சியடைந்தால், அல்லது கையிருப்பில் உள்ள எண்ணை வற்றிப் போனால், அது சோஷலிச பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

மேலும், ராபேல் கொரெயாவின் சோஷலிச திட்டங்கள் யாவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் "நலன்புரி அரசை" நினைவு படுத்துகின்றன. ஆழமாக பார்த்தால், முதலாளித்துவத்தின் நிழலின் கீழ் தான் இத்தகைய பொருளாதார திட்டங்கள் நடக்கின்றன. நிரந்தர சோஷலிசத்தை நோக்கி செல்ல வேண்டுமானால், மூலதனத்தின் தொடர்பை அறுப்பது அவசியமானது. அதற்கு மிகவும் கடினமான புரட்சிகர திட்டங்களை அமுல்படுத்த வேண்டியிருக்கலாம்.

Tuesday, February 19, 2013

அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்


[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்]

(பாகம் - 4)

விஸ்வரூபம் என்பது ஒரு வெறும் பொழுதுபோக்குப் படம் தானே? அதனை எதற்கு இவ்வளவு தூரம் நோண்ட வேண்டும் என்று பலர் நினைக்கலாம். சிங்கள இராணுவத்தை, விஸ்வரூபம் பாணியில் "பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாத நல்லவர்கள்" என்று சித்தரித்த பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படத்தையும், "வெறும் பொழுதுபோக்கு படமாக" கருதி ஒதுக்க முடியுமா? பிரபாகரனும், விஸ்வரூபமும் சமூகத்தில் விதைக்கும் நச்சுக் கருத்துக்களை கண்டும்காணாமல் விட்டு விட முடியுமா? ஆப்கானிஸ்தானில் ஒரு இனவழிப்பு போரை நடத்திய அமெரிக்க/நேட்டோ  படையினரின்  போர்க்குற்றங்களை மூடி மறைத்து விட்டு, "அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்," என்று நா கூசாமல் புளுகுவதற்கு, கமல்ஹாசனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?

விஸ்வரூபம் படத்தில், ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொண்டிருப்பார்கள். தப்பியோடிக் கொண்டிருக்கும் பூர்கா அணிந்த பெண்ணொருவர் குண்டடி பட்டு வீழ்வார். உடனே சுட்டுக் கொண்டிருந்த அமெரிக்க படைவீரன், "Shit!" என்று கழிவிரக்கம் கொள்வார். 7 அக்டோபர் 2001,  ஆப்கான் மீதான படையெடுப்பை அறிவித்த மறுகணமே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த Tomahawk ஏவுகணைகள், பெண்களையும், குழந்தைகளையும் இனங்கண்டு ஒதுக்கி விட்டு, தாலிபான் போராளிகளை மட்டும் குறி வைத்துக் கொன்றனவா? குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு தான், அமெரிக்கப் படைகள் தரை வழி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதற்குள் குறைந்தது 20000 ஆப்கானிய பொது மக்கள் பலியாகி விட்டனர். 

ஆப்கான் மக்களை இனப்படுகொலை செய்த, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படவில்லை. ஆனால், ஒரு போர்க்குற்றவாளி எப்போதும் போர்க்குற்றவாளி தான். ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி பத்து வருடங்கள் கழிந்த பின்னரும்,  இது வரையில் எந்தவொரு அமெரிக்கப் படையினரும் போர்க்குற்றச்சாட்டில் விசாரிக்கப் படவில்லை. "Shit" என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால், ஒரு இனப்படுகொலையை மூடி மறைப்பதை, கமலின் இரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், ஈழத்தமிழர் இனப்படுகொலையில் அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

அமெரிக்கப் படைகள் செய்த இனப்படுகொலைகளை பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத விஸ்வரூபம், நியூ யோர்க்  நகரை அழிப்பதற்காக, தாலிபான் தலைவர் முல்லா ஒமார் அணுகுண்டு தயாரிப்பதாக காட்டுவது யாரை திருப்திப் படுத்துவதற்காக? அல்கைதா, "Dirty Bomb" என்று படத்தில் காட்டப்படும் சிறிய ரக அணுகுண்டு  தயாரித்து வைத்திருப்பதாக ஒரு கட்டுக்கதையை, சில வருடங்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. அவிழ்த்து விட்டது. உண்மையில் அல்கைதாவுக்கோ, தாலிபானுக்கோ அந்தளவு வல்லமை இல்லையென்பதால், அமெரிக்காவிலேயே யாரும் அதை ஒரு பெரிய விடயமாக எடுக்கவில்லை. இப்படி ஒரு கதையை வைத்து ஒரு ஹாலிவூட் படம் வந்திருந்தால், அது நிச்சயம் தோல்வியடைந்திருக்கும். அந்தளவுக்கு அமெரிக்க சாமானியர்களே அந்தக் கட்டுக் கதையை நம்பவில்லை.

அமெரிக்க அணுசக்தி துறையில் வேலை செய்யும் இந்தியர்களே, அணுகுண்டு தயாரிப்பதற்கு தேவையான "சீசியத்தை" களவெடுத்துக் கொடுக்கிறார்கள். "எதற்கும் துணிந்த ஜிகாதிகள் வெறுங் கையால் சீசியத்தை எடுத்து அணுகுண்டு தயாரிப்பது...", இருந்தாலும் கொஞ்சம் ஓவர். அப்படியே தயாரித்தாலும், அது நியூயோர்க் நகரம் முழுவதையும் அழிக்கக் கூடிய சக்தி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஒரு நகரம் முழுவதையும் அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த அணுகுண்டு, உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் உள்ளது. அவர்கள் அதனை ஏற்கனவே பாவித்து, பல இலட்சம் மக்களை கொன்றும் இருக்கிறார்கள். 

இன்று வரையிலான உலக வரலாற்றில், அணுகுண்டு போட்டு இலட்சக் கணக்கான மக்களை கொன்ற ஒரேயொரு பயங்கரவாத இயக்கம், அமெரிக்க அரசு தான்.  ஜப்பானில் அமெரிக்க பயங்கரவாதிகள் போட்ட "Dirty Bomb" என்ற அணுகுண்டுகளால், ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்கள் முற்றாக அழிந்தன. அந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். விஸ்வரூபம் படத்தில், உலகிலேயே மிகவும் கொடூரமான, சர்வதேச பயங்கரவாத இயக்கமான அமெரிக்க அரசுக்கு சேவை செய்வதில் கமல்ஹாசன் பெருமைப் படுகின்றார். இந்த கேவலமான அடிமைப்  புத்திக்கு, ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரசிகர் பட்டாளம் வேறு. 

அணுக் கதிர்வீச்சென்றால் என்னவென்று தெரியாத அமெரிக்க மக்களை நினைத்து, கமல்ஹாசன் உருகுகின்றார். ஆனால், ஏற்கனவே அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கான் மக்களைப் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 2001 ம் ஆண்டு, "Operation Enduring  Freedom" என்ற பெயரிலான, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது   Dirty Bombs வீசப் பட்டன. செறிவு குறைந்த யுரேனியம் (Depleted  Uranium) கழிவுகளை கொண்டு தயாரிக்கப் பட்ட குண்டுகள் போடப் பட்டன.  அமெரிக்காவில் அணு ஆலைகளில் வெளியேற்றப் படும் அணுக் கழிவுகளைக் கொண்டு அந்த குண்டுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.

Depleted Uranium (DU) குண்டுகள், ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, ஈராக், கொசோவோவிலும் போடப் பட்டன. போர் நடந்த காலத்தில் போடப் பட்டாலும், ஆக்கிரமிப்புப் போரின் பின்னர் அந்தப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும்  அமெரிக்க இராணுவ வீரர்களும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கையே நூற்றுக் கணக்கில் இருக்குமென்றால், பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் இருக்கும்? DU குண்டுகள் வெடித்தவுடன், அணுக்கதிர் வீச்சுக்களை மட்டும் பரப்புவதில்லை.

DU குண்டு வெடித்த பின்னர், அது வெள்ளைத் தூளாக மாறி விடும். அந்தத் தூள், நீரோட்டத்தில் கலந்து, நாம் குடிக்கும் நீரினால் உட்கொள்ளப் படலாம். கிருமிநாசினி போல பயிர்களில் சேர்ந்து, நாம் உண்ணும் உணவினால் உடலுக்குள் சேரலாம். காற்றில் கலந்து சுவாசிக்கும் பொழுது உள்ளே செல்லலாம். இதன் மூலம் எமது உடல் அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப் படும். அந்தப் பாதிப்பு வெளித் தெரிய வருடக் கணக்காகலாம். இப்போதும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உடல் குறைபாடுகளை கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன.

அமெரிக்கர்கள் போட்ட யுரேனியம் செறிவு குறைந்த குண்டுகளால், உடல் ஊனமாகி பிறந்த ஆப்கான் குழந்தைகள். 
இரண்டு தலைகள், நெற்றியில் மூன்றாவது கண், வீங்கிய வயிறு, விகாரமான முகம்....இப்படியான தோற்றமுடைய குழந்தைகள் உங்களுக்கு கிடைத்தால், உங்கள் மனம் எத்தனை வேதனைப் படும்? அந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்பது யார்? குறைந்த பட்சம் கமல்ஹாசனாவது, தனது விஸ்வரூபம் படத்தில் அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கானிய குழந்தைகளை காட்டி இருக்கலாம். இதை எல்லாம், நான் சொல்கிறேன் என்பதற்காக, நீங்கள் நம்பத் தேவையில்லை. மேற்கத்திய ஊடகங்களிலேயே அது பற்றிய செய்திகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்காக ஒரு சில உதாரணங்கள்:

In the fall of 2002, the UMRC field team went back to Afghanistan for a broader survey, and revealed a potentially larger exposure than initially anticipated. Approximately 30% of those interviewed in the affected areas displayed symptoms of radiation sickness. New born babies were among those displaying symptoms, with village elders reporting that over 25% of the infants were inexplicably ill. How widespread and extensive is the exposure? 

 A quote from the UMRC field report reads: “The UMRC field team was shocked by the breadth of public health impacts coincident with the bombing. Without exception, at every bombsite investigated, people are ill. A significant portion of the civilian population presents symptoms consistent with internal contamination by uranium.” In Afghanistan, unlike Iraq, UMRC lab results indicated high concentrations of NON-DEPLETED URANIUM, with the concentrations being much higher than in DU victims from Iraq. 

Afghanistan was used as a testing ground for a new generation of “bunker buster” bombs containing high concentrations of other uranium alloys.
(http://www.globalresearch.ca/depleted-uranium-far-worse-than-9-11/2374)

A small sample of Afghan civilians have shown "astonishing" levels of uranium in their urine, an independent scientist says. (http://news.bbc.co.uk/2/hi/science/nature/3050317.stm)

ஆப்கானிஸ்தான் செல்லும் கமல்ஹாசன், அங்கு அமெரிக்காவின் செறிவு குறைந்த அணுகுண்டு (Depleted Uranium)  தாக்குதலால் பாதிக்கப்பட்ட, ஆப்கானிய மக்களை காப்பாற்றுவதாக, திரைக் கதையை அமைத்திருந்தால், விஸ்வரூபம் படத்திற்கு உண்மையிலேயே ஆஸ்கார் விருது கிடைத்திருக்கும். உன்னதமான மனிதாபிமான கதைக்காக, சிறந்த கலைப் படைப்பு என்று, உலக மக்களால்  பேச வைத்திருக்கும். ஆஸ்கார் பரிசு வாங்குவதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தையும் தவற விட்டு விட்டீர்களே, கமல்ஹாசன்?

விஸ்வரூபம் திரைப்படத்தில், உண்மையிலேயே "டர்ட்டி பாம்" (Dirty Bomb)  களால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களை, நட்டாற்றில் கைவிட்டு விட்டு ஓடியதாக   காட்டுவது, ஒரு துரோகமாக தெரியவில்லையா? இந்த துரோகச் செயலை கண்டிக்க வேண்டிய இரசிகர்கள், அதை ஒரு பெரும் சாதனையாக கருதி பாராட்டுகிறார்கள். அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கான் ஏழை மக்களுக்கு உதவாமல், சொகுசாக வாழும் அமெரிக்க பணக்காரர்களை பாதுகாக்க கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு ஓடுகின்றார்.  அடடா... உங்கள் எஜமான விசுவாசத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.  ஏற்கனவே, "எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் துரோகி" பாத்திரமாக தான், உங்களை நீங்களே படத்தில் சித்தரித்து இருக்கிறீர்கள். உண்மையிலே, அது மிகவும் பொருத்தமான பாத்திரம் தான்.  

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

Monday, February 18, 2013

அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"

[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்] 
(பாகம் - 3)

விஸ்வரூபம் திரைக்கதை ஆப்கானிஸ்தானில் நடப்பதால், இரசிகர்கள் எல்லோரும் ஒரு பக்கச் சார்பான, முன் அனுமானத்துடன் தான் படத்தைப் பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்திருப்பது தெரிகின்றது. பெரும்பான்மை இரசிகர்கள் ஆப்கானிஸ்தான், அல்லது தாலிபான் பற்றி அதிகம் அறியாமல் இருப்பதால், விஸ்வரூப படக்கதையை அப்படியே நம்பி விடுவார்கள் என்று கமல்ஹாசன் நினைத்திருக்கலாம். அது ஓரளவு சரியென நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, விஸ்வரூபம் கூறும் பொய்யான, திரிபு படுத்தப் பட்ட, அபத்தமான கதை சொல்லலில் மயங்கி விட்டனர். ஆப்கானிஸ்தான் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல், அந்த நாட்டைப் பற்றிய ஒரு திரைப்படம் எடுக்க முடியும், அதனை தமிழ் இரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை, கமல்ஹாசன் நிரூபித்துக் காட்டியுள்ளார். அந்த தைரியத்தை நாம் பாராட்டலாம்.

ஹிந்தி மட்டுமே பேசும் ஒரு வட இந்தியர், தனது மதம் இந்து என்று மட்டுமே அடையாள படுத்திக் கொண்டு, RAW உளவாளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் ஊடுருவ முடியுமா? இதற்கு எல்லோரும் முடியாது என்று ஒரே குரலில் பதிலளிப்பீர்கள். அதே போன்ற ஒரு விடயத்தை, விஸ்வரூபம் படத்தில் முடியும் என்று எங்களை நம்ப வைத்திருக்கிறார்கள். நாங்களும் அதனை நம்பிக் கொண்டிருக்கிறோம். அது... வந்து... புலிகள் மொழிக்காக போராடினார்கள்....தாலிபான் மதத்திற்காக போராடினார்கள்.... இப்படியும் சிலர் நினைக்கலாம்.  அந்தந்த இயக்கங்களின் கொள்கைகள் ஒரு புறம் இருக்கட்டும். விடுதலைப் புலிகள் 100% தமிழ் பேசும் மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்பது எவ்வளவு தூரம் உண்மையோ, தாலிபான் 100% பஷ்டூன் மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்பதும் உண்மையாகும். இரண்டுமே, தமது சொந்த இன மக்களின் ஆதரவில் மட்டுமே தங்கியிருந்தன.

தாலிபான் என்ன தான் "இஸ்லாமிய சர்வதேசியம்" பேசினாலும், அவர்களால் ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து மக்களையும், "இஸ்லாம்" என்ற ஒரு மதக் கொள்கையின் கீழ் ஒன்று திரட்ட முடியவில்லை. பஷ்டூன் மொழி பேசும் மக்களைத் தவிர, வேற்றினத்தவர்கள் ஆதரிக்கவில்லை. இந்தளவுக்கும், ஆப்கானிஸ்தானில் 100% இஸ்லாமியர்கள் என்று துணிந்து கூறலாம். (ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்த சில ஆயிரம் யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அதே போல, சில ஆயிரம் இந்துக்களும், சீக்கியரும் தாலிபானின் வருகையுடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.) சர்வதேச ஜிகாதியர்களான அல்கைதாவின் ஆதரவு இருந்த போதிலும், தாலிபானால் பஷ்டூன் மொழி பேசும் மக்களை  தவிர்த்து, பிற இன மக்களை திரட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம்.

தாலிபான் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை, பஷ்டூன் மொழித் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் இயக்கமாகவே இருந்து வருகின்றது. அதிலே பஷ்டூன் மொழி பேசுவோர் மட்டுமே போராளியாக சேர முடியும், அல்லது சேர்கின்றனர். ஆப்கானிஸ்தானில் வேற்றினத்தவர் ஒருவர், சாதாரண தாலிபான் போராளியாகவேனும் இருக்காத சூழ்நிலையில், தாலிபான் தலைமைக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஒருவராக வருவதை நினைத்துப் பார்க்க முடியுமா?  முடியாது என்பது தான் யதார்த்தம். அப்படி இருக்கையில், "ஒரு இந்திய முஸ்லிம் RAW உளவாளி தாலிபானுக்குள் ஊடுருவி, தலைவருக்கு விசுவாசமானவராக வருகிறார்" என்று, விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் எங்கள் காதில் பூச் சுற்றுகின்றார். விஸ்வரூபம் திரைக்கதையில் நிறைய முரண்பாடுகள். கமல்ஹாசன் தானும் குழம்பி, இரசிகர்களையும் குழப்புகிறார். சராசரி தமிழனுக்கு அந்தளவு பொது அறிவு கிடையாது என்று நினைத்து, தமிழன் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார். 

கமல்ஹாசன், ஆப்கானிஸ்தான் என்ற நாட்டை பற்றி, கொஞ்சமாவது அறிந்து வைத்துக் கொண்டு படத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் முக்கியமான இரண்டு மொழிகள் பேசப் பட்டு வருகின்றன. அரசர்கள் காலத்தில் இருந்து தாலிபான் தோன்றும் வரையில், டாரி (Dari) மொழி பிரதான ஆட்சி மொழியாக இருந்தது. டாரி என்பது, ஈரானில் பேசப்படும் பார்சி மொழி ஆகும். ஆப்கானியர்கள், பார்சியை எழுதுவது போல பேசுவார்கள் என்பது மட்டுமே வித்தியாசம். குறிப்பாக, ஈரான் எல்லையோரம் உள்ள ஹெராட் மாகாணத்தில் வாழும் மக்கள் டாரி (பார்சி) யை தமது தாய்மொழியாக கொண்டுள்ளனர். (விரும்பினால் அவர்களை டாரி அல்லது பார்சி இனத்தவர்கள் என்று குறித்துக் கொள்ளலாம்.)  காபுல் நகரிலும் அவர்கள் தான் பெரும்பான்மையினர். இன்று ஆங்கிலம் போல, மத்திய ஆசியாவில் பார்சி நிர்வாக மொழியாக அமுலில் இருந்தது. அதனால், இன்றைக்கும் பெரும்பாலான ஆப்கானிய, படித்த மத்தியதர வர்க்கத்தினர் டாரி (பார்சி) மொழி பேசுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் மத்திய மலைப் பிரதேசத்தில் ஹசாரா இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பார்ப்பதற்கு சீனர்கள் போன்றிருப்பார்கள். (மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானின் வம்சாவளியினர்.)  ஹசாரா மக்கள் இனத்தால் மாறுபட்டாலும், டாரி மொழியை தாய்மொழியாகக்  கொண்டுள்ளனர். காபுல் நகருக்கு வடக்கே, பாஞ்சீர் பள்ளத்தாக்குப் பகுதியில்  தாஜிக் இன மக்கள் மக்கள் வாழ்கின்றனர். தாஜிக் மொழி, கிட்டத்தட்ட பார்சி போன்றிருக்கும். (தமிழும், மலையாளமும் போன்றது.) அதனால் தாஜிக் மக்களும், டாரி பேசுவார்கள். இவர்களை விட, வட ஆப்கான் மாகாணங்களில், உஸ்பெக், துருக்மென் மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். உஸ்பெக், துருக்மென் இரண்டும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். ஆனால் நீண்ட காலமாக பார்சி மொழி பேசும் அரசர்களால் ஆளப்பட்டதால், அவர்களும் டாரி மொழியை இரண்டாம் மொழியாக பேசுகின்றனர். இன்னும்  நூரி, பலுச்சி மொழிகளை பேசும் மக்கள், இவர்களை விட சிறிய நாடோடி இனங்கள்... இப்படி பல மொழிகளை பேசும் தேசிய இனங்களின் நாடு தான் ஆப்கானிஸ்தான்.

இந்த விபரங்களை எல்லாம் இங்கே எழுதுவதற்கு காரணம், ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக மொழிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அது இலங்கையில் உள்ள சிங்களம், தமிழ் பிரச்சினை போன்று, மிகவும்  கூர்மையடைந்து இருந்தது. டாரி மொழியின் மேலாதிக்கம் பற்றி, அடிக்கடி பஷ்டூன் மக்கள் குறைப்படுவதுண்டு. நாட்டின் மொத்த சனத்தொகையில் அவர்கள் அரைவாசிக்கு சற்று அதிகமாக இருந்தாலும், ஆட்சியதிகாரம் அவர்கள் கையில் இருக்கவில்லை. எப்போதும் டாரி மொழி பேசும் ஆளும் வர்க்கமே, தலைநகரான காபுலில் இருந்து கொண்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் நிர்வகித்து வந்தது. தாலிபான் வருகையின் பின்னர் தான், அந்த நிலைமை மாறியது.

உண்மையில் ஆப்கானிஸ்தான் என்பது, வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியினால் செயற்கையாக உருவான நாடு ஆகும். 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் படையெடுப்பு காரணமாக, பஷ்டூன் மக்களின் பாரம்பரிய தாயக பூமி, இரண்டாக பிரிக்கப் பட்டது. ஒரு பகுதி பிரிட்டிஷ் இந்தியாவுடன் (1947 இலிருந்து பாகிஸ்தான்) இணைக்கப் பட்டது. அன்றிலிருந்து பஷ்டூன் தேசியவாத இயக்கமும் கருக் கொண்டது. ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்ற கோரிக்கை வைத்தது போல, பஷ்டூன் தேசியவாதிகள் "பஷ்டூனிஸ்தான்" என்ற தாயகக் கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆனால், அந்தக் கனவு பலிக்கவில்லை. பஷ்டூன் தேசியவாத இயக்கம் காலப்போக்கில் சீரழிந்து விட்டாலும், அது இஸ்லாமிய மதவாதம் என்ற போர்வையின் கீழ் புத்துயிர்ப்பு பெற்றது.

1979 முதல் 1989 வரையில் சோவியத் படைகளுக்கு எதிராக ஜிகாத் போராட்டம் நடத்திய ஹெக்மதியார் தான் அதன் பிதாமகன். அன்று ஆப்கானிஸ்தான் சோஷலிச நாடாக இருந்ததால், "நாஸ்திகர்களுக்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் புனிதப் போர்" என்று பிரச்சாரம் செய்து தான், கல்வியறிவற்ற கிராமப்புற ஏழை மக்களை போராளிகளாக்கினார்கள். அப்போது அவர்களை "விடுதலைப் போராளிகள்" என்று வானளாவப் புகழ்ந்த அமெரிக்கா, ஆயுதங்களையும், பணத்தையும் வாரியிறைத்தது. (நாஸ்திகத்திற்கு எதிரான ஆஸ்திகர்களின் கூட்டணி?) அமெரிக்கர்கள் தான் பிற்காலத்தில், தாலிபான் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள். பாகிஸ்தான் அகதி முகாமில் தங்கியிருந்த பஷ்டூன் இன இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி, ஆயுதங்களும் கொடுத்தார்கள். இந்த விபரங்களை எல்லாம், ஒரு அமெரிக்க திரைப்படத்தில் மறைத்திருந்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு இந்தியரான கமல்ஹாசனுக்கு, இந்திய சினிமாவில் சொல்வதற்கு என்ன தயக்கம்? இதனை அடிமைப் புத்தி என்று சொல்லாமல்,  வேறெப்படி சொல்வதாம்? 

அமெரிக்கா, ஆப்கான் ஜிகாதி குழுக்களுக்கு வழங்கிய ஆயுதங்கள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடந்ததால், அவை பாகிஸ்தான் சந்தைகளில் விற்பனைக்கு வந்தன. (மலிந்தால் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள்.)  பாகிஸ்தான், பெஷாவர் நகரில் தெருவோரக் கடைகளில், ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக விற்கப் படுவதைக் காணலாம். (அதைத் தான் விஸ்வரூபம் படத்தில் காட்சிப் படுத்தியிருப்பார்கள்.) அங்கே யார் வேண்டுமானாலும் ஆயுதம் வாங்குவதற்கு, எந்தத் தடையும் இல்லை. பிஸ்டல் முதல் ஏவுகணை வரை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கலாம். விடுதலைப் புலிகளும், நீண்ட காலமாக, அங்கே தான் தமக்கு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்தார்கள். குறிப்பாக, இந்திய இராணுவத்துடன் யுத்தம் ஆரம்பித்த பின்னர், அங்கிருந்து தான் ஆயுதங்கள் தருவிக்கப் பட்டன. ஈழப்போர் முப்பது வருட காலம் தாக்குப் பிடிப்பதற்கு, ஆப்கான் போரும் உதவியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

விஸ்வரூபம் படத்தில், கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்ட ஒரு சிறுவன், கையால் தடவிப் பார்த்து எந்த வகை ஆயுதம் என்று சரியாகக் கூறுகின்றான். கமல் நடந்து செல்லும் வழியில், ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகளை பார்க்கிறார். "தாலிபான் ஆட்சியில் எந்தளவு தூரம் ஆயுதக் கலாச்சாரம் பரவியிருந்தது. மக்கள் எந்தளவு ஆயுதங்கள் மேல் காதல் கொண்டிருந்தனர்..." என்று காட்டுவதற்காக அந்தக் காட்சிகளை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தில் கமல் மீண்டும் வரலாற்று உண்மைகளை திரிக்கின்றார். "எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆயுதக் கலாச்சாரம்", கமல்ஹாசன் அடிமையாக சேவகம் புரியும் அமெரிக்காவில் உள்ளது. வருடத்திற்கொரு தடவையாவது, யாராவது ஒரு கிறுக்கன் தானியங்கி துப்பாக்கியுடன் பாடசாலைகளுக்குள் புகுந்து, சிறுவர்களை சுட்டுத் தள்ளிய கதைகளை கேள்விப் படவில்லையா? 

விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப் படுவது போன்ற, துப்பாக்கிகள் விற்கும் கடைகள், ஆப்கான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் நகரங்களில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. தாலிபான் ஆட்சி நடந்த ஆப்கானிஸ்தானில், அப்படியான கடைகள் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், தாலிபானை பொறுத்தவரையில், அவர்கள் மட்டுமே ஆப்கான் மக்களின் ஏக பிரதிநிதிகள். வேறெந்த ஆயுதக்குழுவையும் இயங்க விடவில்லை. அப்படியே இருந்தாலும், ஒட்டுக் குழுக்கள், துரோகக் குழுக்கள், சமூக விரோதிகள் என்று சொல்லி அழித்து விட்டார்கள். மக்கள், அல்லது கோத்திரத் தலைவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் எப்போதிருந்து ஆயுதக் கலாச்சாரம் வந்தது? யார் அதனை அறிமுகப் படுத்தினார்கள்? அதை எல்லாம் கமல்ஹாசன் ஆராய மாட்டார். விஸ்வரூபம் படத்தில் "நல்லவர்களாக" காண்பிக்கப்படும் அதே அமெரிக்கர்கள் தான், ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக ஆயுதக் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில், "இஸ்லாமிய தீவிரவாத இயக்கம்" கட்டுவது ரொம்ப எளிது. அதற்கு நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. "ஆப்கானிஸ்தானில் ஒரு இஸ்லாமிய குடியரசு அமைப்பதற்கான ஜிகாத் போராட்டம் நடத்தப் போகின்றேன்..." என்ற பிரேரணையுடன், வாஷிங்டன்  சென்று வெள்ளை மாளிகை கதவைத் தட்டினால் போதும். அமெரிக்க ஜனாதிபதியே நேரில் வந்து, உங்கள் இலட்சியத்தை பாராட்டி விட்டு, தேவையான பணமும் ஆயுதமும் தருவார்.

எண்பதுகளில் அப்படித் தான் நிறைய ஜிகாதிக் குழுக்கள் உதயமாகின. சவூதி அரேபியாவில் வேலை வெட்டி எதுவுமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த, உதவாக்கரை பின்லாடன் கோஷ்டியினரும், அப்படித் தான் ஆப்கானிஸ்தானுக்குள் நுளைந்தார்கள். விஸ்வரூபம் படத்தில், இந்திய RAW உளவாளியான கமல், அல்கைதாவில் சேருவதாக காட்டியிருந்தால், நம்பகத் தன்மை வாய்ந்த கதையாக இருக்கும். அல்கைதாவில் சேர்வதற்கு இனம், மொழி மட்டுமல்ல, மதம் கூட தடையாக இருக்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அல்கைதாவில் சேர்ந்த பின்னர் முஸ்லிமாக மாறினால் போதுமானது. அப்படித் தான் 20 வயது அமெரிக்க வெள்ளையின இளைஞனான John Walker Lindh, தாலிபான் பக்கம் நின்று சண்டையிட்டு, அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டான். இப்படி உண்மையில் நடந்த சம்பவங்கள் எத்தனையோ இருக்கும் பொழுது, ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற, நம்ப முடியாத கதையை தெரிவு செய்ய வேண்டிய காரணம் என்ன? 

அன்றிருந்த அமெரிக்க அரசுக்கு, ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த சோவியத் படைகளை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. வியட்நாமில் தோற்றதற்காக பழிவாங்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அமெரிக்கர்களின் மனதில் இருந்தது. சாதாரண M - 16 துப்பாக்கி முதல், ஸ்டிங்கர் ஏவுகணைகள் வரை தாராளமாக அள்ளிக் கொடுத்தார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு நேர உணவு கிடைக்கிறதோ இல்லையோ, ஆயுதங்களும், வெடிமருந்துகளும் அனைவருக்கும் தாராளமாக கிடைத்து வந்தன. ஒரு ஏழை நாடான ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களின் புண்ணியத்தினால் ஆயுத வளம் நிறைந்த நாடாகியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஆயுதக் கலாச்சாரம் வளராமல், அஹிம்சைக் கலாச்சாரமா வளரும்?  என்ன கமல் சார், காமடி பண்ணுவதற்கும் ஒரு அளவில்லையா? உங்களின் விஸ்வரூபம் படத்திற்கு,  "இந்த வருடத்தின் சிறந்த காமடிப் படம்" என்ற ஆஸ்கார் விருது கிடைக்கலாம்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************


சினிமா தொடர்பான பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

Saturday, February 16, 2013

விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்


[விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்] 
 (பாகம் - 2)

யுத்த பிரபுக்களுக்கு இடையில் அகப்பட்டு, சின்னாபின்னமாகி சீரழிந்த  ஆப்கானிஸ்தானை விடுதலை செய்வதே, தாலிபானின் குறிக்கோளாக இருந்தது. யுத்த பிரபுக்கள் தமது சுய இலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருந்தனர். அவர்களின் போருக்குள் அகப்பட்ட அப்பாவி மக்கள், சொல்லொனா துயரத்தை அனுபவித்து மரணித்துக் கொண்டிருந்தனர். இதனால், கட்டுக்கோப்பான இயக்கமென பெயரெடுத்த, கொள்கைப் பிடிப்புள்ள தாலிபான்களை, ஆப்கான் பொது மக்கள் வரவேற்றதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

விஸ்வரூபம் திரைப்படத்தில்,  நேட்டோ தாக்குதலால் சேதமடைந்த ஊர்   ஒன்றை, தாலிபான் குழுவினர் பார்வையிடுகின்றனர். அப்போது அங்கே அவர்களை எதிர்கொள்ளும் மூதாட்டி ஒருவர், "முதல்ல இங்லீஷ்காரங்க வந்தாங்க, ரஷ்யாக்காரங்க வந்தாங்க, தாலிபான், அமெரிக்கன், நீங்க..."   என்று திட்டி விட்டு செல்வார். இந்தக் காட்சியில், தந்திரமாக கமல் திணிக்கும், நுணுக்கமான, அயோக்கிய அரசியலை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. ஆங்கிலேயர்கள், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர், ஆப்கான் மக்களால் வெறுக்கப்பட்ட அந்நிய படையெடுப்பாளர்கள். அவர்களுடன், ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போராடும் தாலிபானையும் ஒரே நேர் கோட்டில் வைத்துப் பேசுவதற்கு, கமல்ஹாசனுக்கு எந்தளவு மனோ தைரியம் வேண்டும்? 

புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. கலாச்சார சீரழிவுகள் இருக்கவில்லை. சாதிப் பாகுபாடு இருக்கவில்லை...." என்றெல்லாம் புலிகளின் பொற்காலம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களை சந்தித்திருப்பீர்கள். ஏன், இதை வாசிக்கும் நீங்கள் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். தாலிபான் ஆதரவாளர்களும், அதே மாதிரியான கதைகளை சொல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த கால தாலிபான் ஆட்சியை நியாயப் படுத்தி பேசி வருகின்றனர். இன்றைக்கும், ஈழத்தில்  மட்டுமல்லாது, தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. அதே போல, இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வாழும் பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் தாலிபானுக்கு ஆதரவு உள்ளது.  

தாலிபான் இயக்கம், ஆப்கான் மக்களுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக செய்துள்ளனர், என்றே வைத்துக் கொள்வோம். ஆயுத அதிகாரத்தினால் மக்களை அடக்கி வைத்திருந்தனர். தங்களை மட்டுமே ஆப்கானியர்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். மாற்றுக் கருத்தாளர்களை கொன்றார்கள். அது எல்லாம் உண்மை தான். அதே நேரம், தாலிபான் போராளிகள், பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். பெரும்பான்மை பஷ்டூன் மக்களால் விடுதலைப் போராளிகளாக கருதப் பட்டவர்கள்.

இதிலே நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். இருந்தாலும், தாலிபான் போராளிகள், அவர்களின் குடும்பங்கள், சனத்தொகையில் குறிப்பிட்டளவு விகிதாசாரம், தாலிபானை ஆதரித்திருப்பார்கள் அல்லவா? ஈழத்தில் விடுதலைப் புலிகளின் விடயத்திலும் அதுவே நிதர்சனமாக இருந்தது. ஈழத்திற்கு வெளியே, பிற இன மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழரில் ஒரு பிரிவினர் அவர்களை ஆதரித்தனர் என்ற உண்மையை நாங்கள் மறைக்கக் கூடாது. ஈழத் தமிழர்கள் புலிகளையும், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் என்று பேசுவதும் அபத்தமானது. அந்த அபத்தம் தான் விஸ்வரூபம் படத்தில் அரங்கேறியுள்ளது. 

படத்தில் அதே காட்சியில், அமெரிக்க கைதிகளை தாலிபான் சிறைப்பிடித்து வைத்த இடத்தை தான், நேட்டோ படைகள் தாக்கியதாக காட்டியிருப்பார்கள். இது இன்னொரு அபாயகரமான அரசியல் பிரச்சாரம். முதலில் அமெரிக்க படையெடுப்பு நடைபெறும் வரையில், எந்தவொரு அமெரிக்கரையும் தாலிபான் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர் நடந்த கெரில்லா போரில் தான், அமெரிக்க போர்வீரர்கள் தாலிபானிடம் உயிரோடு பிடிபட்டனர். விஸ்வரூபம் படக்கதை, அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலத்தில் நடக்கின்றது. ஆகவே கைதிகளை மீட்பதற்காக நடந்த இராணுவ நடவடிக்கை போன்று காட்டுவது, ஒரு  வரலாற்றுத் திரிப்பு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது. 

ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கிராமங்கள் மீது குண்டு வீசியதற்கு ஸ்ரீலங்கா அரசு என்னென்ன காரணங்களை கூறியதோ, அதையே கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் ஒப்புவிக்கிறார். "அந்தக் கிராமத்தில் அமெரிக்க கைதிகள் வைக்கப் பட்டிருந்தார்கள். அதனால் தான் அமெரிக்கர்கள் குண்டு போட்டார்கள். அப்பாவி மக்களை கொன்ற பாவம் அமெரிக்கர்களைச் சேரும்..."   என்று விஸ்வரூபம் படத்தில் ஒமாராக நடிப்பவர் கூறுகின்றார்.

அதாவது, அமெரிக்க தாக்குதலை எதிர்பார்த்து, வேண்டுமென்றே பொது மக்கள் வாழும் இடத்தில் அமெரிக்க கைதிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஆகவே, "ஆப்கான் பொது மக்கள் கொல்லப் பட்டதற்கு தாலிபான் பொறுப்பேற்க வேண்டும். விமானக் குண்டுவீச்சு நடத்திய அமெரிக்கர்கள் குற்றவாளிகள் அல்ல." என்ற நியாயத்தை கமல்ஹாசன் முன்வைக்கிறார். அது நியாயம் அல்ல, அநியாயம். விஸ்வரூபம் கூறும் (அ)நியாயத்தை தான், பாலஸ்தீன மக்களின் படுகொலை சம்பந்தமாக இஸ்ரேலிய அரசு கூறுகின்றது. ஈழத் தமிழரின் படுகொலை சம்பந்தமாக, இலங்கை அரசு கூறுகின்றது. 

பொதுவாக, பெரும்பான்மையினமான பஷ்டூன் மக்களின் பிரதேசங்களில் தாலிபானுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், டாரி, ஹசாரா, உஸ்பெக், தஜிக்கி ஆகிய சிறுபான்மை இனத்தவர் வாழ்ந்த இடங்களில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. உஸ்பெக், தஜிக்கி இனத்தவர்கள் தமக்குள்ள இருந்த பகைமையை மறந்து, தாலிபானுக்கு எதிராக கூட்டணி அமைத்தனர். அதுவே "வடக்கு கூட்டணி" என்ற பெயரில் அழைக்கப் பட்டது. அதன் தலைவராக தஜிக்கி இனத்தை சேர்ந்த மசூத் இருந்தார். அவர்களுக்கு CIA யும், RAW வும் பயிற்சியளித்தனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கான, அமெரிக்க படைகளின் தரைவழி நகர்வுகளும், வடக்கே இருந்து தான் தொடங்கின.

வட ஆப்கானிஸ்தானில், தாஜிக் மக்கள் வாழும் பிரதேசத்தை, தாலிபானால் கடைசி வரை வெல்ல முடியவில்லை. அதனால், மசூத்தை ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் தீர்த்துக் கட்டினார்கள். அந்த தற்கொலைக் குண்டுதாரி ஒரு அல்ஜீரிய அரேபியர். அந்த தாக்குதலை,  அல்கைதா நடத்தி இருந்தது. தாலிபான் இயக்க வரலாற்றில், அது ஒரு காலத்திலும் தற்கொலைத் தாக்குதலை நடத்தவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சில வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்பட்ட தாலிபான் கெரில்லா யுத்தத்தை நடத்த தொடங்கிய பொழுது தான், முதன் முதலாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விஸ்வரூபம் திரைப்படத்தில் வரலாற்றை திரிபுபடுத்திக் காட்டுகிறார்கள். தாலிபான் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், படையெடுக்க தயாராக நின்றிருந்த அமெரிக்க கவச வாகனம் ஒன்றின் மீது, தற்கொலைத் தாக்குதல் நடப்பதாக காட்டுவது உண்மைக்கு புறம்பானது.

படத்தில் தற்கொலைக் கொலையாளி, ஒரு பெண் போல பூர்கா அணிந்து செல்கின்றார். பிற்காலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக நடந்த போரில், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லா தற்கொலைக் குண்டுதாரியும் பூர்கா அணிந்து பெண் வேடமிட்டு செல்வதில்லை. அமெரிக்க இராணுவம் ஆப்கான் பெண்களை சோதனையிடுவதற்கு, அவர்களை அவமானப் படுத்துவதற்கு நியாயம் கற்பிப்பது போல, அந்தக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுதாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம், "மூளைச்சலவை செய்யப்பட்ட, போரையும், ஆயுதங்களையும் ஆராதிக்கும் பருவ வயது சிறுவனாக" காட்டுகின்றனர். முன்பு புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றியும், இலங்கை அரசு அது மாதிரியான பிரச்சாரங்களை செய்து வந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்கும் பிற இனத்தவர்கள், இரண்டையும் ஒன்றாகத் தான் புரிந்து கொள்வார்கள். விஸ்வரூபம் படத்தை "ஆஹா...ஓஹோ..." என்று புகழ்ந்த புலி ஆதரவாளர்கள், இவ்வாறு தான் அவர்கள் அறியாமலே சர்வதேச சதிவலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். 

விஸ்வரூபம் திரைக்கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கின்றது என்ற தெளிவு இல்லை. கதையில் நிறைய முரண்பாடுகள். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கின்றதா? அல்லது அமெரிக்க படைகளின் பொம்மை அதிபரான கர்சாய் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கிறதா?  RAW உளவாளியான கமல், பாகிஸ்தானில் வைத்து, தாலிபான் இயக்கத்தில் சேர்வதாக முதலில் காட்டுகின்றார்கள். பாகிஸ்தானில் இருந்து எல்லை கடக்கும் வழியில், ஆப்கான் எல்லைக் காவல் படைவீரனுக்கு கையூட்டு கொடுக்கின்றனர். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில், எல்லையிலும் தாலிபான் காவலர்கள் தான் நின்றிருப்பார்கள். ஆனால், படத்தில் காட்டப்படும் காவலர் அணிந்திருக்கும் சீருடை இன்றைய ஆப்கான் இராணுவ சீருடை போன்றுள்ளது. காவலரணில் பறப்பது, இன்றைய ஆப்கான் தேசியக் கொடி. (தாலிபானின் கொடி, கருப்பு வர்ணத்தில் குரான்  வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.) அப்படியானால், அது அமெரிக்கா நியமித்த பொம்மை அரசு ஆட்சி நடந்த காலகட்டமாக இருக்க வேண்டும். அப்படி நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்து வரும் காட்சிகள் தாலிபான் ஆட்சிக் காலத்தையும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய காலத்தையும் நினைவுபடுத்துகின்றன.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தும் நேரம், "பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..." என்று முல்லா ஒமார் சொல்லி விட்டு, தனது தோழர்களுடன் தப்பிச் செல்லும் காட்சி வருகின்றது. ஆனால், நிஜமோ அதற்கு முற்றிலும் மாறானது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்க முன்னரே, தாலிபான் தலைவர்களும், போராளிகளும், தமது குடும்ப உறுப்பினர்களையும் கூட்டிக் கொண்டு, பாகிஸ்தானுக்கோ, அல்லது வேறு மறைவிடங்களுக்கோ தப்பிச் சென்று விட்டார்கள். அப்படியானால், விஸ்வரூபம் படக்கதை ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக, பாகிஸ்தானில் நடக்க வேண்டும். அமெரிக்க/நேட்டோ படைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் படைகள் தாலிபான் தலைவர்களை வேட்டையாடி இருக்க வேண்டும். ஆனால், "பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, தாலிபானை ஆதரிக்கும் நாடு",  என்று இந்திய இரசிகர்களுக்கு சொல்ல வேண்டும், என்பதே விஸ்வரூபம் தயாரித்தவர்களின் நோக்கம். இந்த அரசியல் சார்புத் தன்மையினால் தான், கதையிலும் நிறைய முரண்பாடுகள். ஆகவே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் இறுதிக் காலத்திற்கு, அமெரிக்க படையெடுப்பு நடந்த காலத்திற்கு, திரைக் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

தனது மனைவியை வைத்தியம் பார்க்க வந்த பிரெஞ்சுப் பெண் மருத்துவர், தலையை மூடாமல் இருப்பதற்காக, முல்லா ஒமார் கடுமையாக கண்டிக்கிறார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தோன்றுவதற்கு முன்னர், முஜாகிதீன் என்ற இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி நடந்தது. வெளிநாட்டுப் பெண்கள் முகத்தை மூடும் பூர்கா அணியா விட்டாலும், தலையை மூடி முக்காடு அணியும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். ஆகவே படத்தில் காட்டுவது போன்ற ஒரு சம்பவம், நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதே காட்சியில், டைரக்டர் கவனிக்காத தவறு ஒன்று நடந்துள்ளது. ஒமார் தனது வீட்டுக்கு ஒரு அந்நியரை (கமல்) அழைத்துச் செல்லும் நேரம், அவர் மனைவி வெறும் முக்காடு மட்டுமே போட்டிருப்பார். இன்னொரு இடத்தில் ஓமாரின் மனைவியையும், மகனையும் தனியான இடத்தில் கமல் போட்டோ பிடித்துக் கொண்டிருப்பார். அப்படி எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.  

கமல் வீட்டுக்கு வரும் தருணங்களில், தன் மனைவி முகத்தை மூடும் பூர்கா அணிந்திருக்க வேண்டுமென்று கண்டித்திருக்க வேண்டிய ஒமார், சும்மா இருக்கிறார். அது எப்படி? சாதாரண ஆப்கான் பெண்கள், தமது குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசுவதற்கு தடை விதித்த தாலிபான்கள், தமது குடும்பப் பெண்களை அந்நிய ஆடவருடன் பேச  விட்டிருப்பார்களா? படத்தில் வரும் கமல்ஹாசன், ஒரு டிஜிட்டல் கமெராவை வைத்து, முல்லா ஒமார், அவர் மனைவி, மகன், பாதுகாவலர்கள், அயலவர்கள் என்று எல்லோரையும் போட்டோ எடுத்து தள்ளுவார். தாலிபான் ஆட்சியில், பெண்களை, ஆண்கள் புகைப்படம் எடுக்க தடை இருந்தது. ஒரு அந்நிய ஆண், தாலிபான் குடும்பப் பெண்ணை புகைப்படம் எடுக்க சம்மதிப்பார்களா? தாலிபான்,  மிகவும் இரகசியமான இயக்கம்.  பொது நிகழ்வுகளை தவிர, வேறெங்கும் போட்டோ, வீடியோ  எடுப்பதை அனுமதித்ததில்லை. தாலிபான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், ஒரே ஒரு தடவை, முல்லா ஒமார் பொது மக்கள் முன்னிலையில் தோன்றிய போது எடுத்த வீடியோ மட்டுமே, இன்று வரை காணக் கிடைக்கின்றது. அந்தளவுக்கு இரகசியம் பேணிய பேர்வழி அவர். முல்லா ஓமாரின் போட்டோ, அல்லது வீடியோ எங்கே தேடினாலும்  கிடைக்காது. 

புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று, தாலிபான் தலைவர் ஒமாரும் எந்தவொரு பொது நிகழ்விலும்  கலந்து கொண்டதில்லை. பொதுக் கூட்டங்களில் பேசுவதில்லை. அவரைப் பார்ப்பதே அபூர்வம்.  தாலிபான் இயக்க உறுப்பினர்களே முல்லா ஒமாரை நேரில் பார்த்ததில்லை. தாலிபான் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், மற்றும் ஒசாமா பின்லாடன், அவருக்கு நெருக்கமான சில அரேபியர்கள் மட்டுமே முல்லா ஒமாரை சந்திக்க முடிந்தது. செப்டம்பர் 2001, நியூ யார்க் இரட்டைக் கோபுர தாக்குதலின்  பின்னர், அன்று பாகிஸ்தானை ஆண்ட முஷாரப் அரசு, அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டது. அன்றிலிருந்து பாகிஸ்தான் அரசு, ISI கூட, தாலிபானின் எதிரிகளாக மாறி விட்டனர்.

அவ்வாறு மாறிவிட்ட கள நிலைமையில் தான், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு நிகழ்ந்தது. அந்தப் படையெடுப்புக்கு பாகிஸ்தான் அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. ஆகவே, விஸ்வரூபம் படத்தில் காட்டப் படுவதைப் போல, ஒரு பாகிஸ்தானிய ISI  அதிகாரி, அதுவும் சீருடையில், முல்லா ஓமாரையும், ஒசாமா பின்லாடனையும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை. அதாவது, செப்டம்பர் 2001 க்கு முன்னர், பாகிஸ்தானிய ISI அதிகாரிகள் மட்டுமல்ல, அமெரிக்க CIA அதிகாரிகள் கூட, ஒமாரையும், ஒசாமாவையும் சந்தித்து இருந்தனர். ஆனால், விஸ்வரூபம் படக்கதை நடக்கும் காலத்தில், அவர்கள் எதிரெதிர் முகாம்களில் இருந்தனர்.   

ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சியாளர்கள் மக்களை எப்படி கொடுமைப் படுத்தினார்கள் என்று, கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் எடுத்துக் காட்டியுள்ளதாக பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில், குறிப்பிட்டுச் சொல்லும்படியான "தாலிபான் கொடுங்கோன்மை" எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. ஒருவரை பொது மக்கள் முன்னிலையில்  தூக்கில் போடும் காட்சி கூட, "ஒரு துரோகிக்கு மரண தண்டனை வழங்குவது" போலத் தான் காட்டியுள்ளார்கள். இது போன்ற பல சம்பவங்கள், ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் நடந்துள்ளன. விஸ்வரூபம் படத்தில் காட்டப்படுவது போல, சமிக்ஞை அனுப்பும் கருவிகளுடன், எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் பலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் இருந்தனர். அப்படியானவர்கள் கையும், களவுமாக அகப்பட்டால்,  ஒரு சந்தியில் வைத்து பொது மக்கள் முன்னிலையில்சுட்டுக் கொன்று, மரண தண்டனை  நிறைவேற்றுவார்கள். 

ஆனால், விஸ்வரூபம் படக்கதையில் ஒரு ஓட்டை உள்ளது. தவ்பீக் என்ற அரேபியர், அமெரிக்கப் படைகளுக்கு சமிக்ஞை அனுப்பும் கருவி வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப் படுகின்றது. அதற்காக பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடுகின்றார்கள். தாலிபான் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த அரேபியர்கள், ஒசாமா பின்லாடனின் அரவணைப்பில் வாழ்ந்தனர். அரேபியர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் தாலிபானுக்கு இருக்கவில்லை. அதிக பட்சம், ஒசாமாவிடம் ஒப்படைத்து தண்டிக்க சொல்லிக் கோரலாம். அவ்வளவு தான். 

படத்தில் காட்டப் படுவதைப் போல, தவ்பீக் போன்ற அரேபிய புரவலர்கள், தாலிபானுக்கு நிதியுதவி செய்தனர் என்பது உண்மை தான். அதற்காகவே அரபுக்காரர்களுக்கு விசேட உரிமைகள் வழங்கப் பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் யாருக்கும் கிடைக்காத சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்தது. சிலநேரம் தாலிபான் உறுப்பினர்களுக்கு கிடைப்பதை விட அதிக சலுகைகள் கிடைத்தன.  தாலிபான் ஆட்சியில், அரேபியர்கள் ஆப்கான் மக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. தாலிபான் தலைமை, அரேபியருக்கு அதிக சுதந்திரமும், சலுகைகளும் கொடுப்பதாக, ஆப்கான் மக்கள் குறைப்பட்டனர். அப்படியான நிலையில், ஒரு அரேபியர் எந்தளவு பாரதூரமான குற்றம் இளைத்திருந்தாலும், இப்படி பகிரங்கமாக தூக்கில் போட்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு தாலிபான்கள் முட்டாள்கள் அல்ல. யாராவது ஒரு அரேபியர் தண்டிக்கப் பட்டால், அரேபியர்களின் பண வருவாய் நின்று போகும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.     

கமல்ஹாசன் எதற்காக இவ்வளவு முரண்பாடுகளுடன் ஒரு படத்தை எடுக்க வேண்டும்? ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் நடந்த, தாலிபானின் கொடுமைகளை பற்றி இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லவா? தாலிபான் போன்ற மட அடிப்படைவாதிகளை எதிர்ப்பதற்காகவா? எதுவுமே இல்லை. உண்மையைச் சொன்னால், கமல்ஹாசனும், அவரை ஆதரிக்கும் பார்ப்பனிய, இந்துத்துவா கும்பலும், இந்தியாவில் ஒரு தாலிபான் ஆட்சியை கொண்டுவர விரும்புகின்றார்கள். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். உன்னிப்பாக கவனித்தால், "தாலிபான்கள் எப்படியான அடக்குமுறை சட்டங்களை ஆப்கான் மக்கள் மீது விதித்தார்கள்,"  என்று  விஸ்வரூபம் படத்தில் எங்கேயும் சொல்லியிருக்க மாட்டார்கள். அது தான் சூட்சுமம். இந்து மத அடிப்படைவாதிகளுக்கும், முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு எதுவும் கிடையாது. அது இஸ்லாமிய தாலிபான், இது இந்து தாலிபான். அது மட்டுமே வித்தியாசம். 

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************


சினிமா தொடர்பான பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

Friday, February 15, 2013

விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்



விஸ்வரூபம் ஒரு சாதாரண திரைப்படம் தான். ஆனால், அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரியது. அதனால் தான் பல்வேறு தரப்பிரனராலும் அது விமர்சனத்திற்குள்ளானது. பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய படம் வெளியான பின்னர், அது சிலரை குஷிப் படுத்தினாலும், பலரை ஏமாற்றமடைய வைத்துள்ளது. உண்மையில், அனைத்து ஊடகங்களினதும், சமூக ஆர்வலர்களினதும் கவனத்தை பெற்ற விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகள் மட்டுமே, அதனுடைய வர்த்தக நோக்கிலான வெற்றி எனலாம். அந்த சர்ச்சைகள் மட்டும் எழுந்திரா விட்டால், படம் ஒரு வாரத்திலேயே திரையரங்குகளை விட்டு தெருவில் ஓடியிருக்கும். 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஆங்கில மொழியில் எடுத்து, அமெரிக்காவில் மட்டும் வெளியிட்டிருந்தால், "தமது தாய் நாட்டை பாதுகாப்பதற்கு மிகவும் விசுவாசமான இந்திய அடிமைகள்" கிடைத்ததை நினைத்து அமெரிக்கர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள். படக் கதை அமெரிக்காவிலேயே நடக்கின்றது. இடையிடையே Flashback ஆக,  ஆப்கானிஸ்தானில் நடந்த சம்பவங்களை காட்டுகின்றார்கள். "ஒசாமா இறந்த பின்னரும், தாலிபான் அல்கைதாவின் வேலையை பொறுப்பெடுத்து செயற்படுகின்றது. அமெரிக்காவை அழிக்கத் துடிக்கும் தாலிபான் பயங்கரவாத அபாயத்தில் இருந்து, அமெரிக்காவை இந்திய ஹீரோ மீட்கிறார்." என்ற பாதையில் கதையை நகர்த்திச் செல்கின்றனர். அமெரிக்க அரசியல்வாதிகள், ஊடகங்களை விட்டு விடுவோம். இதுவரை எத்தனையோ கற்பனைக் கதைகளை படமாக்கிய, எந்தவொரு அமெரிக்க படத் தயாரிப்பாளரும், இப்படியான கோணத்தில் சிந்திக்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவில் சாதாரண பாமர மக்கள்  கூட, இது மாதிரியான தகிடுதத்த கதையை நம்புவார்களா என்று சந்தேகப் பட்டிருப்பார்கள். 

கமல்ஹாசன், தனது தகவல்களுக்கு CNN, FOX, TIMES போன்ற அமெரிக்க ஊடகங்களையே தங்கியிருக்கிறார் என்பது புரிகின்றது. ஒரு சாதாரண மேட்டுக்குடி இந்தியன், அவை கூறும் தகவல்களை உண்மையென்று நம்பும் அப்பாவித்தனத்தை கூட மன்னித்து விடலாம். தன்னை நாலும் அறிந்த அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த விடயத்தில் சறுக்கியுள்ளது மனதுக்கு நெருடலாகவுள்ளது. கமல்ஹாசன் மீது எனக்கிருந்த மதிப்பு, மரியாதையை எல்லாம், விஸ்வரூபம் என்ற இரண்டு மணிநேர திரைப்படம் தகர்த்தெறிந்து விட்டது. தமிழ் மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத, "ஆப்கானிஸ்தான், தாலிபான்" பற்றி ஒரு படம் எடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதற்கு முன்னர் அந்த நாட்டைப் பற்றி, தாலிபானின் போராட்டம் பற்றி, சிறிதளவேனும் கள ஆய்வு செய்திருக்க கூடாதா? இவ்வளவு பணத்தை செலவளிக்கும் பொழுது, ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்வது, படத்திற்கு ஒரு பெறுமதியைக் கொடுக்கும். தாலிபான் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமானால், Ahmed Rashid எழுதிய Taliban: Militant Islam, Oil and Fundamentalism in Central Asia   என்ற நூலை பரிந்துரைக்கிறேன். 

நாயகன் படத்தில், மும்பை தாராவி பகுதி மாதிரி செட் போட்டு அசத்தியது போல, விஸ்வரூபத்தில் கமல் சாதனை படைத்துள்ளதாக பலர் பேசிக் கொள்கின்றனர். ஆனால், நாயகனுக்கு மும்பை போல, விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானை தத்ரூபமாக  காட்டியிருக்கிறதா என்பது சந்தேகமே. விஸ்வரூபம் திரைப்படக் குழுவினருக்கு, ஆப்கானிஸ்தான் பற்றியோ, அல்லது தாலிபான் பற்றியோ அதிகம் தெரியவில்லை என்பது  புலனாகின்றது. ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வாழ்வதில்லை என்றோ, அந்த நாட்டைப் பற்றி இந்தியர்களுக்கு அதிகம் தெரியாதென்றோ, கமல்ஹாசனும் அவரது இரசிகர்களும் நினைத்துக் கொண்டால், அந்த அறியாமையை எண்ணி சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபான் வருவதற்கு முன்னர், நிறைய இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். சுமார் 10000 இந்து, சீக்கிய மதங்களை சேர்ந்த வட இந்தியர்கள், காபுல் நகரத்தில் நீண்ட காலம் வாழ்ந்தனர். ஆப்கானிஸ்தான் முன்னர் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ், சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அவர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. (பனிப்போர் காலத்தில், இந்தியாவும், சோவியத் யூனியனும் நண்பர்களாக இருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.)

ஆப்கானியர்களும் ஓரளவு இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், இந்திய சினிமாக்களும், இசையும், அலங்காரப் பொருட்களும் ஆப்கானிஸ்தானில் அமோகமாக விற்பனையாகின. அதனால் நிறைய இந்தியர்கள் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். சோவியத் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்டு, அவர்களுக்கு எதிராக போராடிய இஸ்லாமியவாத முஜாகிதீன் ஆட்சி ஏற்பட்ட  காலத்தில், சில நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும், இந்தியர்களின்  இருப்பிற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் உதவியுடன் தாலிபான் இராணுவம், பெரும்பகுதி ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், அங்கிருந்த இந்தியர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்தியர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள், உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலத்தில்,  யூதர்கள் தம்மை அடையாள படுத்துவதற்காக,மஞ்சள் நிற  யூத நட்சத்திரம் பொறிக்கப்பட்ட உடை அணிந்திருக்க வேண்டுமென உத்தரவிடப் பட்டது. தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில், இந்துக்கள் காவி நிற உடை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. அன்று இதனை சர்வதேச சமூகமும், மனித உரிமை நிறுவனங்களும் கண்டித்திருந்தன. ஜெர்மனியாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானாக இருந்தாலும், பாஸிச சக்திகள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றன.

தாலிபான் ஒடுக்குமுறை காரணமாக, இந்தியர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். பெரும்பான்மையானோர் இந்தியாவில் அடைக்கலம் கோரினாலும், சிறிதளவு வசதியான இந்தியர்கள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். நான் சில ஆப்கான்-இந்திய அகதிகளை சந்தித்துக் கதைத்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். காபுல் நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். தாலிபான் வருவதற்கு முன்னரே வெளியேறி இருந்தாலும், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அவர்கள் மூலமும் அறிந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூபம் என்ற இந்திய சினிமாவில், ஆப்கான் இந்தியர்கள் குறித்து ஒரு காட்சியெனும் இல்லாமலிருப்பது ஆச்சரியத்திற்குரியது. இது தெரியாமல் ஏற்பட்ட தவறா, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டதா? 

விஸ்வரூபம் படத்தில், RAW உளவாளியான கமல்ஹாசன், காஷ்மீரி என்ற பெயரில் தாலிபான் இயக்கத்தினுள்  ஊடுருவுகின்றார். அவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கின்றார். முல்லா ஒமார், ஒசாமா பின்லாடன் போன்ற உயர்மட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பை பெறுகின்றார். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நாடல்ல. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கென்றொரு வெளியுறவுக் கொள்கை இருப்பதைப் போல, ஆப்கானிஸ்தானிலும் இந்தியாவின் தலையீடு உள்ளது. அமெரிக்கா "அல்கைதாவுக்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்த பின்னர், இந்திய அரசு காஷ்மீர் ஜிகாதி இயக்கங்களையும், அல்கைதாவுடன் தொடர்பு படுத்தி  பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், அமெரிக்கா உட்பட, உலகில் யாருமே அந்தப் பிரச்சாரத்தை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், பாகிஸ்தானை தளமாக கொண்டுள்ள, காஷ்மீர் ஜிகாதி இயக்கங்கள் எல்லாம், ISI அல்லது CIA கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை. 

தாலிபான் இயக்கமானது, முழுக்க முழுக்க அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பாகும். ISI தன்னிடம் இருந்த அமெரிக்க ஆயுதங்களை கொடுத்து, தாலிபானை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பி வைத்தது. ஆரம்ப காலங்களில், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிரதேசங்களில் பாகிஸ்தான் ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டது. ஆகவே, இப்படியான நெருங்கிய கட்டமைப்பிற்குள், ஒரு இந்திய RAW உளவாளி ஊடுருவி, தலைமைக்கு நெருக்கமாக வருவது நம்பக் கூடியதாக இல்லை. தாலிபான் மட்டுமல்ல, அல்கைதா கூட காஷ்மீர் போராளிக் குழுக்களுடன் தொடர்பு வைக்கவில்லை. அதற்கு காரணம், பாகிஸ்தான் அவர்களை எந்த தொடர்புமற்று பிரித்து வைத்திருக்கவே விரும்பியது. தனிப்பட்ட முறையில் ஓரிருவர் தொடர்பு வைத்திருந்தாலும், அவர்கள் ISI அதிகாரிகளால் துன்புறுத்தப் பட்டனர்.

ஈழ விடுதலை இயக்கங்களுக்கு, தமிழகத்தில் வைத்து, இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி கொடுத்தமை, அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பாகிஸ்தான் மண்ணில் வைத்து, தாலிபான் உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். அதைவிட, அல்கைதா அமைப்பில் இருந்த அரேபியர்களும், தாலிபானுக்கு கெரில்லா போர்ப் பயிற்சி வழங்கினார்கள். ஆகவே, விஸ்வரூபம் சினிமாவில் காட்டப் படுவதைப் போல, ஒரு RAW அதிகாரி தாலிபானுக்கு இராணுவப் பயிற்சி அழிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால், தாலிபானுக்கு எதிராக போரிட்ட, இன்னொரு ஆப்கான் போராளிக் குழுவுக்கு பயிற்சி வழங்கி இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. அது பற்றி அடுத்து பார்ப்போம்.

விஸ்வரூபம் திரைப்படத்தில், "இது தான் ஆப்கானிஸ்தான்", "இது தான் தாலிபான்" என்று குறிப்பிட்டு சொல்லிக் காட்டியிரா விட்டால், படக்கதை செவ்வாய்க் கிரகத்தில் நடக்கும், வேற்றுக் கிரகவாசிகளின் கதை என்று தான் நினைக்கத் தோன்றியிருக்கும். ஒருவேளை, இந்தப் படத்தை நிஜத் தாலிபான்கள் பார்க்க நேர்ந்தால், எல்லோரும் கூண்டோடு தற்கொலை செய்திருப்பார்கள். அந்தளவுக்கு, சினிமாவுக்கும், நிஜத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரியது. தாலிபான் போராளிகளும், தலைவர் ஒமாரும் உடுத்தி இருக்கும் உடையும், தலையில் அணிந்திருக்கும் குல்லாயும், அவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமற்றவை. (ஒருவேளை பாகிஸ்தானி தாலிபானை மனதில் கொண்டு, அப்படி ஒரு 'மேக் அப்' போட்டிருக்கலாம்.)


இதிலே மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், "சினிமா தாலிபான்களின்" உடையலங்காரம், நிஜத் தாலிபான்களை  எதிர்த்து போராடிய குழுக்களை நினைவுபடுத்துகின்றன! தாலிபான் தலைவர் ஒமார் அணிந்திருக்கும் குல்லாய், அவரின் பரம எதிரியும் வடக்கு கூட்டணிப் படையின் தலைவருமான மசூத் அணிந்திருந்த குல்லாய் ஆகும். முல்லா ஒமாரும், தாலிபான் போராளிகளும் எப்போதும் தலையில் தலைப்பாகை மட்டுமே கட்டி இருப்பார்கள். ஒரு சினிமாவில், விடுதலைப் புலிகளை, ஸ்ரீலங்கா இராணுவ சீருடையில் காட்டினால், உங்களுக்கு எவ்வளவு அபத்தமாக தோன்றுமோ, அதேயளவு அபத்தமானது விஸ்வரூபம் காட்டும் தாலிபான் பற்றிய சித்திரமும். 

கருப்பு நிற சீருடையில், அல்கைதா உறுப்பினர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை, அல்கைதா மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக விநியோகித்து வந்தனர். அந்த வீடியோ, CNN போன்ற உலகத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப காண்பிக்கப் பட்டது. கமல்ஹாசனின் மனதில் அந்த வீடியோ காட்சிகள் ஆழமாக பதிந்துள்ளன. அவற்றை விஸ்வரூபம் திரைப்படத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றார். சினிமாவில் RAW அதிகாரியாக வரும் கமல், தாலிபானுக்கு பயிற்சி அளிக்கிறாரா? அல்லது அல்கைதாவுக்கு பயிற்சி அளிக்கிறாரா? கமல், தாலிபானையும், அல்கைதாவையும் மாற்றி மாற்றிப் போட்டு, தானும் குழம்பி, இரசிகர்களையும் குழப்புகிறார். விஸ்வரூபம் திரைப்படத்தின் உச்சகட்ட அபத்தம் அது தான். 

(தொடரும்)

விஸ்வரூபம் பற்றிய முன்னைய பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************



சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை