Wednesday, May 27, 2015

நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!


தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 

சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.****
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்
2. நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
3.தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Sunday, May 24, 2015

அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் 
(பாகம் - ஐந்து) 

வட கொரியாவில் கிம் குடும்பத்தினரின் மன்னராட்சி நடக்கலாம். அதில் சிலநேரம் உண்மையும் இருக்கலாம். குறிப்பாக, மறைந்த கிம் யொங் இல்லின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நூற்றுக் கணக்கான கதைகள் பேசப் பட்டன. ஹாலிவூட் நட்சத்திரங்களின் கிசு கிசு செய்திகளை மிஞ்சும் அளவிற்கு, அவரைப் பற்றிய தகவல்கள் இருந்துள்ளன. 

கிம் யொங் இல் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல காதலிகளுடன் வாழ்ந்துள்ளார். குறிப்பாக அழகான சினிமா நடிகைகள் மேல் மையல் கொண்டு, படுக்கையை பகிர்ந்து கொண்ட கதைகள், மேற்கத்திய ஊடகங்களினால் கிளுகிளுப்பூட்டும் விதத்தில் சொல்லப் பட்டன.

ஹாலிவூட்டை பொறாமை கொள்ளச் செய்யும் கிசுகிசு செய்திகளுக்கு அப்பாலும் ஒரு கொரியா இருந்தது. அது பலரது கவனத்தை ஈர்ப்பதில்லை. இன்றைக்கும் கொரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஸ்தாபகராக கருதப்படும், கிம் இல் சுங் மறைந்த நேரம், பல்லாயிரக் கணக்கான மக்கள் அழுதார்கள். 

தொலைக்காட்சியில் செய்தி வாசித்த அறிவிப்பாளர் கூட அழுதார். மேற்குலகில் அவற்றைக் காட்டி, சர்வாதிகார ஆட்சியாளர்கள் மக்களை கட்டாயப் படுத்தி அழ வைத்தார்கள் என்று கூறினார்கள். உண்மையிலேயே சிலர் கட்டாயத்தின் பேரில் அழுதிருக்கலாம். பெரும்பான்மை வட கொரியர்களைப் பொருத்தவரையில், அது ஒரு பெரும் இழப்பாக கருதப் பட்டது.

உலக நாடுகளில் உள்ள மக்களைப் போன்று தான், பெரும்பான்மையான வட கொரிய மக்களுக்கும் அரசியலில் ஆர்வம் இல்லை. தங்கள் குடும்ப நலன், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிக்கு அப்பால் சிந்திப்பதில்லை. அவர்களிடம் சென்று, "உங்கள் நாட்டில் மேற்கத்திய பாணி ஜனநாயகம் இருக்கிறதா? நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தல் நடக்கிறதா?" என்றெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள்? ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன, மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்று தான் சிந்திப்பார்கள்.

காலங்காலமாக நிலப்பிரபுத்துவ நுகத்தடியின் கீழ் வாழ்ந்த மக்கள், ஜப்பானிய காலனித்துவவாதிகளால் அடிமைப் படுத்தப் பட்ட மக்கள், கிம் இல் சுங் ஆட்சிக் காலத்தை பொற்காலமாகத் தான் கருதுவார்கள். கேழ்வரகுக் கஞ்சி குடித்தவர்களுக்கு, மூன்று நேரம் சோறு சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது பெரிதல்லவா? ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு, கல்வீடு கட்டிக் கொடுத்தால் அது சொர்க்கமல்லவா? 

நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வசதிகளான, மூன்று நேரம் சோறு, சீமேந்தால் கட்டப்பட்ட கல்வீடு போன்றவற்றை, அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வழிவகை செய்து தருவதாக கிம் இல் சுங் வாக்குறுதி அளித்தார். அது வெறுமனே, நமது நாட்டு அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகளாக இருக்கவில்லை. சொன்னதை செய்து காட்டினார்கள்.

"வட கொரியா பற்றி சும்மா புளுக வேண்டாம். அங்கே யார் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப் படவில்லையா?" என்று சிலர் கேட்கலாம். ஆமாம், அடக்குமுறை இருந்தது. யாருக்கு எதிரான அடக்குமுறை? காலங்காலமாக சுரண்டப்பட்ட மக்களுக்கு எதிராக அல்ல. ஏழைகளை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை. "ஆஹ்...வந்து...பணக்காரர்களுக்கும் மனித உரிமை இருக்கிறது..." என்று சிலர் வாதிடலாம். அதை நீங்கள் பாதிக்கப் பட்ட ஏழை மக்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள்.

உலகமெங்கும் சோஷலிச நாடுகளில் நடந்ததைப் போன்று, வட கொரியாவில் நடந்த ஒடுக்குமுறையை, நாங்கள் வர்க்கப் போராட்ட அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். சாதாரண முதலாளித்துவ நாடுகளில், அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும், ஏழைகளை ஒடுக்கும். ஆனால், சோஷலிச நாடுகளில் அது மாறி நடக்கும். அரசு ஏழைகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளும். பணக்காரர்கள் ஒடுக்கப் படுவார்கள். வட கொரியாவிலும் அது நடந்தது.

"ஆளும் தொழிலாளர் கட்சியான, கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே களையெடுப்புகள் நடந்துள்ளன. ஆரம்ப காலத் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் கூடக் கொல்லப் பட்டனர், தெரியுமா?" என்று சிலர் கேட்கலாம். உண்மை. அதுவும் நடந்துள்ளது. ஆனால், கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப கால கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அது தவிர்க்க முடியாதது. 

உலகில் எல்லா நாடுகளிலும், மத்திய தர வர்க்கத்தினர் மத்தியில் தான் அரசியல் விழிப்புணர்வு இருக்கும். ஆனால், அந்த வர்க்கத்திற்கே உரிய ஊசலாட்டமும் இருக்கும். இதை புரிந்து கொள்ள அதிக தூரம் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் காலனிய காலத்தில் தொடங்கப் பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலை என்ன? சாதாரண அரசியல் கட்சியாக ஆட்சியாளர்களுடன் சமரசப் போக்கை பின்பற்றி வருகின்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், அநேகமாக எல்லோரும் பார்ப்பனிய, உயர் சாதி, அல்லது மத்தியதர வர்க்க பின்புலத்தை கொண்டிருந்தனர். அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது என்பதல்ல. ஆனால், எந்தளவு தூரம் வர்க்கப் போராட்டத்தில் தீவிரமாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறி தான். அதனால் தான், நக்சலைட் பாதையை தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்டுகள், அவர்களை "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்று அழைத்தார்கள்.

வட கொரியாவில், களையெடுக்கப் பட்ட, தீர்த்துக் கட்டப் பட்ட, கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மத்தியதர வர்க்கப் பின்னணியை கொண்டவர்கள். வட கொரிய அரசு அறிவித்தது மாதிரி, அவர்கள் சிலநேரம் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம், அல்லது எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளாக கூட இருக்கலாம். கிம் இல் சுங் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், தனது தோழர்களை ஒழித்துக் கட்டி இருக்கலாம். எதுவும் சாத்தியம் தான். 

தொழிலாளர் கட்சிக்குள் நடந்த களையெடுப்புகளுக்குப் பின்னர், ஒரு குறிப்பிடத் தக்க அரசியல்- சமூக மாற்றம் நடந்தது. ஏழைகள், ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள் போன்ற சமூகப் பின்னணி கொண்ட உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக்கு வந்தனர். சுருக்கமாக, கட்சியில் மத்தியதர வர்க்கத் தலைமை மறைந்து, பாட்டாளி வர்க்கத் தலைமை உருவானது.

வட கொரியாப் பிரதேசம் முழுவதும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சி அமைந்ததும், நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் அனைவரும் விரட்டப் பட்டார்கள். சிலரைக் கைது செய்து, மரண தண்டனை வழங்கியதே போதுமானதாக இருந்தது. எஞ்சியவர்கள் எல்லாம் தென் கொரியாவுக்கு ஓடி விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து நன்மையடைந்து வந்த உறவினர்களும் தெற்கே புலம்பெயர்ந்து விட்டனர்.

நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள் தவிர, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களும் விரட்டப் பட்டனர். கொரியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கிம் இல் சுங் குடும்பமும் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தான். அந்தக் காரணம் எல்லாம், கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மீதான தடையை தடுத்து நிறுத்தவில்லை. கிறிஸ்தவ மதம் தடை செய்யப் பட்டாலும், உள்ளூர் மதமான ஷோண்டோ மதம் இயங்குவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப் பட்டது.

கொரியாவில், 20 ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், கிறிஸ்தவ சபைகளின் செல்வாக்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்டது தான் ஷோண்டோ மதம் (Chondoism). பெரும்பாலும் கொரிய தேசியவாதிகள் அதற்குள் புகலிடம் தேடிக் கொண்டனர். ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளும் அதிலிருந்து தான் வந்தனர். அதனால் தான், வட கொரியாவில் அது இயங்க அனுமதிக்கப் பட்டது. ஷோண்டோயிஸ்ட் கட்சி, இன்றைக்கும் வட கொரிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. அதுவும், சமூக ஜனநாயகக் கட்சியும், பாராளுமன்றத்தில் பத்து சதவீத ஆசனங்களை கொண்டுள்ளன.

கடைசியாக நடந்த தேர்தலின் படி, சமூக ஜனநாயகக் கட்சி 50 ஆசனங்களையும், ஷோண்டோயிஸ்ட் கட்சி 22 ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஆனால், தொழிலாளர் கட்சி தொண்ணூறு சதவீத (606) ஆசனங்களை வைத்திருப்பதால், அரசியலில் அதன் மேலாதிக்கம் அதிகமாக உள்ளது. (Politics of North Korea; http://en.wikipedia.org/wiki/Politics_of_North_Korea) சமூக ஜனநாயகக் கட்சியும், ஷோண்டோயிஸ்ட் கட்சியும், சில ஆயிரம் உறுப்பினர்களுடன், பியாங்கியாங் நகரில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

ஷோண்டோயிஸ்ட் மதம் அல்லது கட்சிக்கு கிடைத்துள்ள சுதந்திரமானது, கிம் இல் சுங்கின் சோஷலிச அரசியலில், கீழைத்தேய சிந்தனை மரபு எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. சோவியத் யூனியன் சமுதாயத்தில், ஸ்டாலின் நடத்திய வர்க்கப் புரட்சியை, கிம் இல் சுங் கொரிய மண்ணுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருந்தார். அதனால் தான், "சோங்பன்" (Songbun) அமைப்பு பற்றி வெளிநாடுகளில் இருப்பவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சோங்பன் சமூக அமைப்பு, கொரியாவில் ஆயிரமாயிரம் வருட காலமாக இருந்து வந்துள்ளது. வெளியாரால் அதை புரிந்து கொள்வது சிரமம். கிட்டத்தட்ட, இந்து மதத்தில் "கர்ம வினைப் பயன்" என்று சொல்வதைப் போன்றது. அதாவது ஒருவர் செய்த நன்மை, தீமை, சந்ததி சந்ததியாக தொடர்ந்து கொண்டிருக்கும். அமெரிக்க அறிவுஜீவிகள், அதை சாதி அமைப்பு என்று நினைக்கின்றனர். ஆனால், அது சாதி அல்ல.

கிம் இல் சுங், தனது ஆட்சிக் காலத்தில், சோங்பன் சமூக அமைப்பை, தனது வர்க்க அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அவரைப் பொருத்தவரையில், மொத்த வட கொரிய சமூகத்தில், 
புரட்சிக்கு  ஆதரவான வர்க்க மக்கள்  25%. 
புரட்சிக்கு விரோதமான வர்க்க மக்கள்  20%. 
எஞ்சிய "சாதாரண" மக்கள் 40%. 

யாரெவர் எந்த வர்க்கம் என்பது எப்போதும் தெளிவாகத் தெரிவதில்லை. மேல் தட்டில் இருப்பவரின் அரச விரோத செயல் காரணமாக, அவரது குடும்ப உறுப்பினர்கள் எதிரி வர்க்கமாக அறிவிக்கப் படலாம். அதே  நேரத்தில், எதிரி வர்க்கத்தை  சேர்ந்த ஒருவரின் அரசுக்கு விசுவாசமான செயற்பாடு காரணமாக, அவரது குடும்பத்தினரின் அந்தஸ்து  உயர்த்தப் படலாம். இடையில் உள்ள "நடுத்தர" வர்க்கத்தினர், விசுவாசியாகவோ அல்லது எதிரியாகவோ மாறலாம்.   

இதற்கு பலரும் பலவிதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். மேற்குலகில் உள்ளவர்கள், ஆதரவான வர்க்கத்திற்கு, "அரச விசுவாசிகள்" என்று விளக்கம் கொடுக்கின்றனர். அது உயர்ந்த அந்தஸ்து கொண்ட வகுப்பு தான். ஆனால், அதை நாங்கள் எமது நாட்டில் உள்ள மேட்டுக்குடி வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

சமூகத்தில் மேல் நிலையில் உள்ள வர்க்கத்தில், அரச அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் இருக்கின்றனர். ஐம்பதுகளுக்கு முன்னர் கூலித் தொழிலாளர்களாக அல்லது ஏழை விவசாயிகளாக இருந்த பெற்றோரின் பிள்ளைகளும் உயர்ந்த அந்தஸ்துக்கு வரலாம். 

அது மட்டுமல்லாது, முன்னாள் கெரில்லாப் போராளிகளின் குடும்பத்தினர், கொரிய யுத்தத்தில் பங்கெடுத்த போர்வீரர்களின் குடும்பத்தினர் "உயர் குலத்தை" சேர்ந்தவர்கள். வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் அப்படியான நிலைமை இருந்தது. போராளிக் குடும்பம், மாவீரர் குடும்பம் போன்றவர்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

உண்மையில், சோங்பன் அமைப்பில் மேல் தட்டில் உள்ள வர்க்கத்திற்கு மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னுரிமை கொடுக்கப் பட்டது. சிறந்த கல்வி கற்கும் உரிமை வழங்கப் பட்டது. அதற்கு மாறாக, அடித்தட்டில் இருக்கும் அரசுக்கு விரோதமான வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப் படுகின்றது. அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கப் பட மாட்டாது. அது மட்டுமல்ல, அடிக்கடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுபவர்களும் அவர்கள் தான்.

சமூகத்தில் அடித்தட்டில் உள்ள, "தாழ்த்தப் பட்ட சாதியான" எதிரிகளின் வர்க்கத்தில் இருப்போர் யார்? முன்னாள் நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், இவர்களைப் போன்றோரின் குடும்பத்தினரே அவர்கள். நமது நாடுகளில் உள்ள வர்க்க அமைப்பை, வட கொரியாவில் தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறார்கள். (Are you special, basic or complex? Behind North Korea's caste system; http://www.theguardian.com/world/2015/mar/04/are-you-special-basic-or-complex-behind-north-koreas-caste-system)

இப்படி ஒரு கற்பனை செய்து பார்ப்போம். இந்தியாவில் நடந்த புரட்சியின் பின்னர், நேற்று வரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த உயர் சாதியினர், பணக்காரர்கள், முதலாளிகள், நிர்வாகிகள் போன்றோர், தாழ்த்தப் பட்ட சமூகமாக மாற்றப் படுகின்றனர். நேற்று வரை தாழ்த்தப் பட்ட சாதியினராக, கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்கள், உயர்ந்த அந்தஸ்த்தில் வசதியாக வாழ வைக்கப் படுகின்றனர். 

எம்மைப் பொறுத்தவரையில்,  இப்படி நடப்பது "எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத கனவு". ஆனால், வட கொரியாவில் இந்த சமூக மாற்றம் உண்மையிலேயே நடந்தது. அது தான் சோங்பன்.

வட கொரியாவில், ஒருவர் அரசுக்கு எதிரான குற்றம் புரிந்ததாக தண்டிக்கப் பட்டிருந்தால், அவரது குடும்பத்தினர் அடித்தட்டில் உள்ள எதிரி வர்க்கத்தில் சேர்க்கப் படுவார்கள். இது மூன்று தலைமுறைக்குத் தொடரும். அதனால், குற்றவாளி மட்டுமல்ல, அவரது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கூட தண்டிக்கப் படுகின்றனர். 

அவர்களுக்கு, சமூக ஒதுக்கல், கல்வி மறுப்பு போன்ற தண்டனைகள் கிடைக்கும். சாதாரண மக்களுக்கு இவையெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்புகள். அதனால் தான், முன்னாள் சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகில் பலரால் எதிர்பார்க்கப் பட்டது போன்று, வட கொரிய மக்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியை மாற்றவில்லை.

வட கொரியர்கள் யாரும், ஆட்சி மாற்றத்திற்கான தமது கிளர்ச்சி தோல்வியடையும் பட்சத்தில், தலைமுறை தலைமுறையாக வருந்துவதற்கு தயாராக இருக்கவில்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட பஞ்சத்த்தை பயன்படுத்தி, நிவாரண உதவி என்ற பெயரில், அமெரிக்கா தாராளமாக உணவு தானியங்களை அனுப்பி வைத்தது. 

ஒரு கட்டத்தில், அனைத்து கொரியர்களுக்கும் அமெரிக்கா வருடக் கணக்காக உணவு கொடுத்து வந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த நிவாரண உதவிக்கு பிரதியுபகாரமாக அமெரிக்கா எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உதவி கிடைப்பதை உணர்ந்து கொள்ளும் வட கொரிய மக்கள், கிளர்ச்சி செய்து கிம் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.

வட கொரிய ஸ்டாலினிச அரசு, இன்னும் சில வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கப் போகின்றது என்று, அமெரிக்க அரச மட்டத்தில் நம்பப் பட்டது. ஆனால், இறுதியில் இலவு காத்த கிளி கதை தான் நடந்தது. அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்த "வட கொரிய ஜனநாயகப் புரட்சி" இன்று வரையில் நடக்கவில்லை. இனி வருங்காலத்தில் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

அதிகார வர்க்கத்திற்கு எதிரான கொரிய மக்களின் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அந்த எழுச்சி வடக்கில் அல்ல, தெற்கில் நடந்தது! தென் கொரிய ஆட்சியாளர்களையும், அரசியல் பாதையையும் மாற்றியமைத்தது. உண்மையில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், வட கொரிய "ஸ்டாலினிச அரசு" உலக வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப் படாமல் இருப்பதற்கு காரணமும் அது தான் என்பது ஒரு முரண்நகை.

(தொடரும்) 

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: 
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்

Saturday, May 23, 2015

சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
(பாகம் - நான்கு)

கிம் இல் சுங் காலத்தில், வட கொரியாவில் ஏறக்குறைய சமத்துவமான சமூக அமைப்பு இருந்தது. அதிகளவு சம்பளம் வாங்குவோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நிலைமை அங்கிருக்கவில்லை. அதற்குக் காரணம், உணவுப் பங்கீட்டுத் திட்டம் (ரேஷன்) எல்லோரையும் சமமான நுகர்வோராக வைத்திருந்தது. உயர் அரச அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள், என்ற பாரபட்சம் இல்லாமல், அனைவரும் பொது விநியோக நிலையத்தில் தான் பொருட்களை வாங்கினார்கள்.

நாடு முழுவதும், நகரங்கள், கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்டிருந்த பொது விநியோக நிலையங்களை, நமது நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கட்டுகளுடன் ஒப்பிடலாம். அதாவது, அங்கே உணவு, உடை, வீட்டுப் பாவனைப் பொருட்கள் எல்லாம் கிடைக்கும். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

ஐம்பதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரையில், வட கொரியாவில் அனைத்து மக்களும் ரேஷனில் தான் வாழ்ந்து வந்தனர். மாதத்திற்கு இரண்டு தடவைகள், ஒரு குடும்பத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு, இறைச்சி என்பன அளந்து கொடுக்கப் பட்டு வந்தன. (இறைச்சி எப்போதும் கிடைப்பதில்லை.) 

உணவுப் பொருட்களின் அளவு, செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு, அல்லது வயதுக்கு ஏற்றவாறு மாறு படும். ஒருவருக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பதற்கு அமைய, உணவின் அளவு தீர்மானிக்கப் படும். சுருக்கமாக, உடல் உழைப்பாளிகளுக்கு அதிகளவு உணவு வேண்டும், மூளை உழைப்பாளிகளுக்கு குறைந்தளவு உணவு போதும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. (Special food rations for Chuseok? Reality of North Korea′s rationing system;
https://www.youtube.com/watch?v=BO39QNakB9c)

உதாரணத்திற்கு, கடின உழைப்பை செலுத்தும் சுரங்கத் தொழிலாளிகளுக்கு அதிக அளவும், குறைந்தளவு உடல் உழைப்பை செலுத்தும் அலுவலக ஊழியருக்கு குறைந்தளவும் கிடைக்கும். விமானிகள் போன்ற தொழில் நுட்ப நிபுணர்கள், கட்சித் தலைவர்கள் போன்றோருக்கும் அதிகளவு ரேஷன் உணவு கிடைத்ததை மறுக்க முடியாது. அதே மாதிரி, சிறை முகாம்களுக்குள் அடைக்கப் பட்ட கைதிகளுக்கு மிகக் குறைந்தளவு ரேஷன் உணவு கிடைத்ததென்ற உண்மையையும் மறுக்க முடியாது. (சிறை முகாம்களில் வேலை நேரமும் அதிகமாக இருந்தது.)

பண்டிகை நாட்களில், குறிப்பாக கொரிய பொங்கல் தினத்தில், உணவின் அளவு அதிகரிக்கப் படும். அத்துடன் பண்டிகை கொண்டாடத் தேவையான பிற பொருட்களையும் அரசே கொடுக்கும்.   மேலும், வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள், மின்னணுக் கருவிகள், போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களையும் அரசு ரேஷன் மூலம் விநியோகம் செய்து வந்தது.

ரேஷனில் கிடைக்கும் உணவு போதாமால் இருந்தாலும், யாரும் பட்டினி கிடந்து சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பொருளாதார வளர்ச்சி கண்ட அறுபதுகளில் மட்டும் அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. எழுபதுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் சரிந்து கொண்டு சென்றதால், ரேஷன் அளவும் குறைக்கப் பட்டது.

உண்மையில் உணவுப் பங்கீட்டு முறை சரியாக அமுல்படுத்தப் பட்ட காலத்தில் (அதாவது கிம் இல் சுங் காலம்), அது பொது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தது. வளர்ந்த நாடொன்றில், உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் சராசரி குடும்பம் ஒன்று, ஒரு வாரத்திற்கு தேவையான உணவை வாங்கிக் கொண்டு வருவதில்லையா? அதே மாதிரித் தான், வட கொரியாவில் ஒவ்வொரு குடும்பமும், பொது விநியோக நிலையத்திற்கு சென்று, ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, மொத்தமாக வாங்கிக் கொண்டு வருவார்கள்.

சோஷலிச நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும், முதலாளித்துவ நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும் வேறு வேறானவை. நாங்கள் இரண்டையும் ஒப்பிட்டு ஒன்றெனக் கருதினால் குழப்பமே மிஞ்சும். இவ்வாறு மக்களைக் குழப்பும் வேலையை தான் மேற்கத்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. 

முதலாளித்துவ நாட்டில், சம்பளம் என்ற பெயரில், வாழ்க்கைச் செலவுக்கான பணத்தை கையில் கொடுத்து விடுவார்கள். அதைக் கொண்டு எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சந்தை கூறும் விலைக்கு வாங்க வேண்டும். திடீரென விலைவாசி உயர்ந்து, சம்பளம் உயரா விட்டால், விதியை நொந்து கொண்டு நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கிம் இல் சுங் காலத்தில், ஒரு சராசரி வட கொரிய குடிமகனின் சம்பளம் இருபது டாலர்கள். என்னது, $ 20 ஆ! என்று யாராவது வாயைப் பிளக்காதீர்கள். எங்களது நாட்டில் மாதமொன்றுக்கு இருபது டாலரை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வட கொரியாவின் நிலைமை வேறு. வீட்டுக்கு வாடகை கிடையாது. மின்சாரம், தண்ணீர் கூட அரசு மானியத்தில் கிடைக்கிறது. ரேஷனில் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 0.08 வொன் (வட கொரிய நாணயம்.) அது டாலரில் எவ்வளவு? ஒரு சதம் கூட இல்லை.

உண்மையில், வட கொரியாவிலும் அரிசியின் சந்தை விலை அதை விட பத்து அல்லது இருபது மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அரசு பெருமளவு மானியம் கொடுத்து, அரிசியை மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றது. அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலை, வருடக் கணக்காக உயராமல் அப்படியே இருந்தது. ஆகையினால், $ 20 சம்பளம் என்பது, ஒரு தந்தை தனது பிள்ளையின் கைச் செலவுக்கு பணம் கொடுப்பதைப் போன்றது. அந்தப் பணத்தில், சினிமாத் தியேட்டரில் டிக்கட் வாங்குவதற்கு, அல்லது சில தனிப்பட்ட பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடலாம்.

மேற்படி தகவல்கள், தொண்ணூறுகளுக்கு முந்திய கிம் இல் சுங் காலத்திற்கு மட்டுமே பொருந்தும். அவரின் மறைவுக்குப் பின்னர், வட கொரியா யாரும் எதிர்பாராத அளவு பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அது பற்றி பின்னால் பார்ப்போம்.

மக்கள் முழுமையாக அரசு வழங்கும் உணவில் தங்கியிருந்த படியால், பணத்தின் தேவை இல்லாமல் போனது. வட கொரியாவில் எல்லாக் காலங்களிலும் பணப் புழக்கம் இருந்தது. ஆனால், சந்தைப் பொறிமுறை இல்லாத காரணத்தால், அனைத்து தேவைகளையும் அரசே பூர்த்தி செய்த படியால், எதற்கும் பணம் செலவிட வேண்டி இருக்கவில்லை. அதன் அர்த்தம், வட கொரியாவில் சந்தைகள், கடைகள் இருக்கவில்லை என்பதல்ல.

பலர் நினைப்பதற்கு மாறாக, வட கொரியாவில் எந்தக் காலத்திலும், தனியார் கடைகள், சந்தைகள் தடை செய்யப் படவில்லை. ஆனால், சமூகத்தில் அவற்றின் முக்கியத்துவம் மிகவும் குறைவாக இருந்தது. பொதுவாக ரேஷனில் கிடைக்காத பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் தனியாரின் வியாபார நிலையங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருந்து வந்துள்ளன. அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. தனியார் யாரும் தானியங்களை இறக்குமதி செய்ய முடியாது. அது அரசின் ஏகபோக உரிமை. அது மட்டுமல்ல, இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் யாரும் வியாபாரம் செய்ய முடியாது.

எல்லோரும் அரச நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தால், சந்தைகள், கடைகளை யார் நடத்தி இருப்பார்கள்? கொரிய சமுதாயத்திலும், ஆண் தான் உழைக்க வேண்டும் என்ற பாரம்பரிய பழக்கவழக்கம் இருந்துள்ளது. நவீன கிம் இல் சுங் அரசு, அந்த மரபை பெரியளவில் மாற்றவில்லை. 

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த ஆண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலையாட்கள் தொழிலகத்தை மாற்றுவதும் இலகுவான காரியமல்ல. அந்தக் கட்டுப்பாடு ஒரு வகையில் அரசு பிரஜைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவியது. ஆண் தொழிலாளரின் நிலைமைக்கு மாறாக, பெண்களுக்கு சில சலுகைகள் இருந்தன.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட பின்னர், தான் செய்து வந்த வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க முடிந்தது. வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள், சந்தையில் பொருட்களை விற்பதன் மூலமும், கடை ஒன்றை நிர்வகிப்பதன் மூலமும் மேலதிக வருமானத்தை தேடிக் கொண்டனர். அதனால், இன்று வரைக்கும், வட கொரியாவின் நாட்டுப்புறங்களில் எங்கு சென்றாலும், சந்தைகள், கடைகளில் பெண்கள் தான் விற்பனையாளர்களாக நிற்பதைக் காணலாம். 

இது ஒரு வகையில் இன்னொரு வகையான சுதந்திரத்தையும் கொடுத்தது. தென் கொரியாவில் அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள். ஏனென்றால், பெண்கள் மட்டுமே அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, சீன எல்லை வழியாக தப்பியோட முடிந்தது.


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, May 21, 2015

"ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
 (பாகம் - மூன்று)

உலகில் பொதுவாக, "மார்க்சிய- லெனினிச" சித்தாந்த அடிப்படை கொண்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு பெயரில் ஆட்சி செய்தாலும், அவற்றை கம்யூனிச நாடுகள் என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், சோஷலிச நாடுகளை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆள்வதில்லை. சில நாடுகளில் உள்ள அரசுகள், புரட்சிகரமானதாக, அல்லது முற்போக்கானதாக இருக்கலாம். சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தலாம். லிபியாவில் கடாபியின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய- சோஷலிசம் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதை யாரும் ஒரு கம்யூனிச நாடு என்று அழைக்கவில்லை. அதே போன்றது தான் வட கொரியாவும்.

கிம் இல் சுங் குழுவினர்,  ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்திய ஆரம்ப காலங்களில், குறைந்த பட்சம் மார்க்சிச - லெனினிச கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில், சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஸ்டாலினையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். மேலும், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிச முகாம் இரண்டாகப் பிரிந்த நேரம், கிம் இல் சுங் ஸ்டாலினை ஆதரித்தார். இந்த விடயங்கள் உண்மையானவை தான். 

அதற்காக, வட கொரியா இன்று வரையும் நிலைத்திருக்கும் "ஸ்டாலினிச நாடு" என்று குறிப்பிடுவது பொருத்தமானதா? பெரும்பாலும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தான், அவ்வாறு "ஸ்டாலினிச முத்திரை" குத்தப் படுகின்றது. சில கூறுகள் ஒரே மாதிரி தென்பட்டாலும், அது முற்றிலும் சரியல்ல.

மேற்கத்திய பிரச்சார ஊடகங்கள் "ஸ்டாலினிசம்" என்று எதை கருதிக் கொள்கின்றன? முதலில், சோவியத் யூனியனில் இருந்த ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தையும், வட கொரியாவின் கிம் இல் சுங் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

"ஒரு கட்சி தனது உறுப்பினர்களை கொலை செய்வது ஸ்டாலினிசம்" என்று மேற்குலகில் கூறுகின்றார்கள். ஸ்டாலின் காலத்தில், சொந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் கூட களையெடுக்கப் பட்டனர். அவர்கள் மேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய எதிரி நாடுகளுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.

கிம் இல் சுங் ஆட்சிக் காலத்திலும், அவரது தொழிலாளர் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் மேல், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் நடந்ததைப் போன்று, ஒருவர் கைது செய்யப் பட்டால், அவருடன் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர்.

ஆயினும், மேற்குலகம் கூறுவது போன்று, இது மாதிரியான களையெடுப்புகள், "ஸ்டாலினிசத்தின் சிறப்பம்சம்" அல்ல! தமிழர்களுக்கு நன்கு தெரிந்த, புலிகள் இயக்கத்தினுள், மாத்தையா, கருணா போன்ற தலைவர்களும், அவர்களுடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் களையெடுக்கப் பட்டனர். "RAW உளவாளிகள், சிங்கள அரசின் ஒட்டுக்குழு" என்றெல்லாம் காரணம் கூறினார்கள். அதற்காக, புலிகளை யாரும் "ஸ்டாலினிச இயக்கம்" என்று சொல்வதில்லை.

கூட்டுறவு விவசாயப் பண்ணைகளை (Collective farming) ஸ்டாலினிச கட்டமைப்பு என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறு இல்லை. ஸ்டாலின் பிறப்பதற்கு ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னரே கூட்டுறவுப் பண்ணை அமைப்பு முறை இருந்து வந்துள்ளது. எண்பதுகள் வரையில், இஸ்ரேலிலும் இருந்துள்ளன. 

சோவியத் யூனியனில் இரண்டு வகையான கூட்டுறவுப் பண்ணைகள் இருந்துள்ளன. முற்றுமுழுதாக, அரசினால் நிர்வகிக்கப் படும் பண்ணைகள் (Sovchoz). சுயாதீனமான விவசாயிகளின் பண்ணைகள் (Kolchoz). இருப்பினும், ஒவ்வொரு விவசாயியும் சராசரி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலத்தை கூட சொந்தமாக வைத்திருக்க முடிந்தது. கூட்டுறவுப் பண்ணைகள் மட்டுமல்ல, தனியான விவசாயியும், தமது நிலத்தில் கிடைத்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்க முடிந்தது.

வட கொரியாவில், விவசாயிகள் அனைவரும் கூட்டுறவுப் பண்ணைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. உண்மை. பண்ணைகள் முழுவதும் நேரடி அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்தன. அது மட்டுமல்ல, தனியொரு விவசாயிக்கு சொந்தமாக ஒதுக்கப் பட்ட நிலத்தின் அளவும் மிகக் குறைவு. தமக்கென சொந்தமாக உணவு உற்பத்தி செய்யக் கூடிய விவசாயிகளைக் கூட, அரசாங்கத்தில் தங்கியிருக்க வைப்பதே அதன் நோக்கம்.

வட கொரியாவில், நகர வாசிகள், கிராம வாசிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், யாராக இருந்தாலும், அனைத்துப் பிரஜைகளும் அரசு கொடுக்கும் ரேஷன் உணவுப் பொருட்களை நுகர வேண்டிய கட்டாயம் இருந்தது. ரேஷன் அல்லது உணவுப் பங்கீட்டுத் திட்டம் ஒரு ஸ்டாலினிச கொள்கை என்று சொல்வதும் அபத்தமானது. முதலாம், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரான காலங்களில், மேற்கத்திய நாடுகளில் கூட அனைவருக்கும் ரேஷன் கொடுத்து வந்தனர். இந்தியாவில் பல தசாப்த காலமாக இருந்து வந்தது.

சோவியத் யூனியனில், போர் நெருக்கடி காலங்களிலும், தட்டுப்பாடான உணவுப் பொருட்களுக்கும் மட்டுமே ரேஷன் முறை இருந்தது. இவற்றில் இருந்து, வட கொரியாவின் ரேஷன் முறை எந்தளவு வேறு படுகின்றது? அது தேசத்தின் பொருளாதார விருத்தியில், தனி நபரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அது பற்றி பின்னால் பார்ப்போம்.

வட கொரியா எந்நேரமும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இருக்கும் நாடு என்பதை மக்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். அதற்குச் சில உதாரணங்களை கூறலாம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள், அங்கிருந்து வேறு பிரதேசத்திற்கு செல்ல முடியாமல், அவர்களது நடமாடும் உரிமை கட்டுப் படுத்தப் பட்டது. வேறு மாவட்டத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்கச் செல்வதென்றால், முன் கூட்டியே பொலிஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் இல்லாமல் சென்று பிடிபட்டால், திருப்பி அனுப்பப் படுவதுடன் தண்டனையும் கிடைக்கும்.

நாட்டுப் புறங்களில் வசிப்போர், தலைநகர் பியாங்கியாங் செல்வதை நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கு என்ன காரணம் சொல்லி கேட்டாலும், அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பு தான். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அது கடுமையான அரசு அடக்குமுறையாகத் தோன்றும். ஆனால், எதிரிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக அந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. 

இன்றைக்கும், "வட கொரியா ஒரு மிலேச்சத் தனமான அடக்குமுறை நிலவும் நாடு" என்று சொல்லப்படுவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. அதாவது, இன்றைக்கும் வெளியில் இருந்து யாராலும் ஊடுருவ முடியாத அளவுக்கு கண்காணிப்பு நிலவுகின்றது.

பலர் நினைப்பதற்கு மாறாக, ஸ்டாலின் காலத்து சோவியத் யூனியனில் கூட, மக்களின் நடமாட்டம் கட்டுப் படுத்தப் படவில்லை. மாஸ்கோ போன்ற பெரிய நகரங்களில் வசிக்க விரும்புவோர் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், சோவியத் யூனியனில் மக்கள் எங்கு வேண்டுமானாலும் போவதற்கும், வருவதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.

வட கொரியாவின் பிரயாணக் கட்டுப்பாடுகள், வெளியுலகில் மனித உரிமை மீறலாக கணிக்கப் படலாம். நிச்சயமாக, அது "ஸ்டாலினிசம்" அல்ல. இந்தக் காலத்தில், உலகம் முழுவதும் எங்கள் எல்லோரையும் செய்மதி, இணையம் மூலம் கண்காணிக்கிறார்கள் என்பது வேறு கதை. சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மனிக்கு அகதியாக வந்து தஞ்சம் கோருவோர், தாம் வசிக்கும் மாவட்டத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை இருந்தது.

நாடு முழுவதும், நகரம், கிராமம் எதுவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவு வீடுகள் ஒன்று சேர்ந்த நிர்வாக அலகுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. நகரில் ஓர் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீடுகள் அத்தனையும், அல்லது கிராமத்தில் பத்து பதினைந்து தனி வீடுகள் சேர்ந்த அமைப்பாக அது இருக்கும். அந்த அமைப்பிற்கு அரசால் நியமிக்கப் பட்ட ஒரு நபர் பொறுப்பாக இருப்பார். பெரும்பாலும் நடுத்தர வயதை தாண்டிய பெண்மணி தான் நியமிக்கப் பட்டிருப்பார். 

அந்தச் சுற்றாடலில் வாழும் அனைத்துக் குடும்பங்களையும் பற்றிய தகவல்களை திரட்டி வைத்திருப்பது தான் அவரது கடமை. ஒரு வீட்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்? யார் என்னென்ன செய்கின்றனர்? அந்த வீட்டில் மேலதிகமாக யாராவது தங்கியிருக்கின்றனரா? வருமானத்திற்கு மிஞ்சிய ஆடம்பரப் பொருட்கள் காணப் படுகின்றனவா? இது போன்ற தகவல்களை சேகரித்து வைத்திருப்பார்கள். வேறு இடத்தில் இருந்து புதிதாக யாராவது வந்து தங்கினால் அறிவிக்க வேண்டும்.

இதோ பாருங்கள்! அது தான் "ஸ்டாலினிச அடக்குமுறை" என்று யாராவது சொல்லக் கிளம்பினால், அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். மேற்கத்திய நாடுகளிலும் இது போன்ற "ஸ்டாலினிச கண்காணிப்புகள்" நடைமுறையில் உள்ளன.

பொதுவாகவே, எந்தவொரு மேற்கத்திய நாட்டிலும், யாரும் எந்த இடத்திலும் பதிவு செய்யாமல் தங்க முடியாது. ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பன போன்ற விபரங்கள் யாவும், தற்காலத்தில் அரச கணனியில் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப் படுகின்றன.

அது மட்டுமல்ல, நெதர்லாந்தில் கிராமங்களில் வசிப்போரிடம் இருந்து ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். ஒவ்வொரு கிராமத்திலும், அங்கு வசிக்கும் மக்களை கண்காணிப்பதற்கென்று, ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டிருப்பார். அவரது வேலையும் அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது தான். ஆனால், ஒரு வித்தியாசம் உள்ளது. வட கொரியாவில் ஒரு வீட்டிக்குள் இருக்கும் பொருட்கள் கூட அவர்களுக்குத் தெரியும். நெதர்லாந்துக் கிராமங்களில், யார் அங்கே புதிதாக நடமாடுகிறார்கள் என்று மட்டும் கண்காணிக்கிறார்கள்.

சிறை முகாம்களில் அடைத்து வைத்திருக்கப் படும் கைதிகள் பற்றிய கோரக் கதைகள் தான், மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதையும் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" யுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆமாம், வட கொரிய அரசு மறுத்தாலும், அங்கே சிறை முகாம்கள் உள்ளன. அதைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். 

இங்கே ஓர் உண்மையை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள தேசங்களில் எல்லாம், அவை சுதந்திரமான ஜனநாயக நாடுகளாக இருந்தாலும், சிறைச்சாலைகள் உள்ளன. அமெரிக்காவில் எத்தனை ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்? மொத்த அமெரிக்க சனத்தொகையில் ஒரு சதவீதம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு சிறையில் இருக்கும் கைதிகள் பற்றிய, மிகுதி 99% மக்களின் நிலைப்பாடு என்ன? ஒன்றுமில்லை.

பெரும்பாலான அமெரிக்கர்கள், சிறையில் இருக்கும் சக அமெரிக்கர்கள் பற்றி கவலைப்படாமல், தானுண்டு, தன வேலை உண்டு என்று வாழ்கிறார்கள். பெரும்பான்மையான வட கொரிய மக்களும் அப்படித் தான். அந்த நாட்டில், சிறை முகாம்களுக்குள் அடைக்கப் பட்ட வட கொரியர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை. 

சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தான், பெருந்தொகையான சிறைக் கைதிகள் இருந்தனர். அன்றைய சோவியத் யூனியனின் மொத்த சனத்தொகையில், குலாக் சிறை முகாம்களில் அடைக்கப் பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு? அநேகமாக, மொத்த சனத்தொகையில் 0.5% தான் "ஸ்டாலினிச சிறைகளில்" கைதிகளாக இருந்தனர். வட கொரியாவில் இது சற்று அதிகம். அதாவது 0.8%. இதற்குத் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும்! நான் இங்கே யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், நாங்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, May 20, 2015

சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்


"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
 (பாகம் - இரண்டு)

கொரிய யுத்தம் முடிந்த பின்னர், அன்றைய பனிப்போர் காலத்தில், யாரும் எதிர்பாராத புலம்பெயர் படலம் ஆரம்பமாகியது. பொதுவாக, "சர்வாதிகார கம்யூனிச நாடுகளில் இருந்து, சுதந்திர ஜனநாயக நாடுகளை நோக்கி" அகதிகள் சென்றதாகத் தான் பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். கொரியாவில் அது மாறி நடந்தது. 

அதாவது, அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்த தென் கொரியாவில் இருந்து, பல்லாயிரக் கணக்கான மக்கள், சோஷலிச வட கொரியா நோக்கி தப்பிச் சென்றனர். அதற்கு முக்கிய காரணம், ஜப்பானிய காலனிய கால கட்டத்தில், பெருந்தொகையான மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர். அமெரிக்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. 

முன்பு ஜப்பானியர்களுடன் ஒட்டுக் குழுவாக இருந்தவர்கள், தற்போது அமெரிக்கர்களுக்கு பிரயோசனமாக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் வேட்டையாடப் பட்டனர். அதனால், ஆயிரக்கணக்கான அகதிகள் வட கொரியா நோக்கி ஓடியதில் வியப்பில்லை.

ஐம்பதுகளில் இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. ஜப்பானில் புலம்பெயர்ந்த கொரியர்களின் சமூகம் ஒன்றிருந்தது. பல தசாப்தங்களுக்கு முன்னரே, வேலை தேடி ஜப்பானுக்கு சென்றவர்கள் பெருந்தொகையில் இருந்தனர். அதே நேரம், ஜப்பானிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களால், அடிமை வேலை செய்விக்க கொண்டு செல்லப் பட்ட பிரிவினரும் இருந்தனர். 

ஜப்பானிய கொரியர்கள் சமூகத்தில் ஒதுக்கப் பட்டு வந்த படியால், அவர்கள் மத்தியில், கிம் இல் சுங்கின் ஆதரவாளர்கள் இலகுவாக ஊடுருவி வேலை செய்ய முடிந்தது. வட கொரியாவில் ஒரு சோஷலிச சொர்க்கம் அமைக்கப் படுவதாக, கிம் இல் சுங் ஆதரவாளர்கள் செய்த பிரச்சாரங்களை நம்பி, அங்கு சென்று குடியேறும் நோக்கில், இலட்சக் கணக்கான ஜப்பானிய- கொரியர்கள் கப்பல்களில் புறப்பட்டனர்.

தாயகத்தை கண்ணால் கண்டிராத இரண்டாம் தலைமுறையினர் உட்பட, வடக்கே தலை வைத்தும் படுத்திராத ஏராளமான ஜப்பானிய- கொரியர்கள் கிம் இல் சுங்கின் சோஷலிச சொர்க்கத்தில் குடியேறியமை வரலாற்றில் குறிப்பிடத் தக்க நிகழ்வாகும். நிச்சயமாக, எல்லோரும் ஜப்பானை விட்டு செல்லவில்லை. சிலர் குடும்பத்தோடும், சிலர் தனியாகவும் புலம்பெயர்ந்து சென்றனர். 

ஜப்பானில் தங்கி விட்ட அவர்களது உறவினர்கள், பல வருடங்களாக பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்நிய செலாவணி கிடைக்கிறது என்பதற்காக, வட கொரிய அரசு அதனைத் தடுக்கவில்லை. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், ஜப்பானிய பண வருவாய் குறைந்து விட்டது. அதற்குக் காரணம், உலகில் அனைத்து புலம்பெயர் சமூகங்களிலும் காணப் படும் அதே பிரச்சினை தான். பணம் அனுப்பிக் கொண்டிருந்த உறவினர்கள் வயோதிப காலத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர். இளந் தலைமுறையினருக்கு அந்த எண்ணம் சிறிதும் இருக்கவில்லை.

அறுபதுகளில் வட கொரியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அதனால், சராசரி மக்களின் வாழ்க்கை வசதிகளும் அதிகரித்திருந்தது. அதே அறுபதுகளில், தென் கொரியாவின் பொருளாதாரம் வளரவில்லை. பொருளாதார நெருக்கடிகளும், வறுமையின் அவலமும், கலவரங்களும் சர்வ சாதாரணமாக இருந்தன. ஆனால், அந்த நிலைமை பிற்காலத்தில் மாறி விட்டது. 

தென் கொரியா தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடானதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கை வசதிகள், வட கொரியாவில் இருந்ததை விட உயர்ந்தது. ஆயினும், தென் கொரியா பற்றிய, வட கொரிய ஆட்சியாளர்களின் பிரச்சாரம், அறுபதுகளில் மட்டுமே நின்று விட்டது. அதாவது, தென் கொரிய மக்கள் "வறுமையில் வாடுவதாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் சொல்லொணா துன்பங்களை அனுபவிப்பதாகவும்" வட கொரிய மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

தென் கொரியாவில் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதிலும், வட கொரிய அரசு, ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த விடயத்தில் தென் கொரிய அரசு ஒன்றும் சளைத்தது அல்ல. அதுவும் தனது பிரஜைகளுக்கு, வட கொரியா பற்றி ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களைத் தான் செய்து கொண்டிருந்தது. 

ஐம்பதுகள், அறுபதுகளில் இருந்த தென் கொரியாவைப் பொருத்தவரையில், அந்தப் பிரச்சாரங்களில் உண்மை இருந்தது. அந்தக் காலத்தில், தென் கொரியாவின் மொத்த பொருளாதார உற்பத்தி, சோமாலியாவை விட சற்றுக் குறைவாக இருந்தது. அதை இன்றைக்கு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், பிற்காலத்தில் தென் கொரியா கிழக்கு ஆசியாவின் "Tiger Economy" களில் ஒன்றாக வளர்ந்தது. இராணுவ சர்வாதிகார ஆட்சியும், அமெரிக்காவின் மூலதன பாய்ச்சலும் அதற்கு உதவின என்பதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், வட கொரியா பற்றிய, தென் கொரியப் பிரச்சாரம் எப்படி இருக்கும் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அதைத் தான் நாங்கள் தினந்தோறும் மேற்கத்திய ஊடகங்கள் ஊடாக கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பிரச்சாரங்களுக்கு அப்பால், வட கொரியாவின் உண்மை நிலவரம் என்னவென்பதை பின்னால் பார்ப்போம்.

ஐம்பதுகளில், தனது அதிகாரத்தை ஸ்திரப் படுத்திக் கொண்ட கிம் இல் சுங், தனது தொழிலாளர் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். பெரும்பாலும், சோவியத் யூனியனில் தளம் அமைத்திருந்த காலத்தில், அவருடன் கூட இருந்த சக போராளிகளைத் தான், கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தார். முன்பு கொரிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களும் சேர்ந்திருந்த போதிலும், அவர்கள் தலைமைப் பதவிகளுக்கு வர முடியவில்லை. 

1955 ம் ஆண்டு, வட கொரியாவில் வாழ்ந்து வந்த, கொரிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர், உளவுக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார். அத்தகையை குற்றச்சாட்டுகளை யாராலும் நம்ப முடியாதிருந்தாலும், கிம் இல் சுங் தன்னை ஏக பிரதிநிதியாக்கிக் கொள்வதற்கு அது உதவியது. (இன்றைக்கும் தென் கொரியாவில் வாழும் கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலானோர் கிம் இல் சுங் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை.)

கிம் இல் சுங் அதிகாரத்தை கைப்பற்றியதும், தனக்கு சவாலாக வரக் கூடிய "பழைய கம்யூனிஸ்டுகள்" பலரை தீர்த்துக் கட்டி இருந்தார். அதை விட, தொழிலாளர் கட்சிக்குள் இருந்த, "சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள்", "சீனா சார்பு கம்யூனிஸ்டுகள்" கூட களையெடுக்கப் பட்டனர். இறுதியில் கிம் இல் சுங்கிற்கு விசுவாசமானவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். 

கொள்கை ரீதியான எதிரிகள் யாரும் இல்லாத நிலையில், கிம் இல் சுங்கின் வட கொரியா, உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத புதிய சித்தாந்தம் ஒன்றை கண்டுபிடித்தது. கிம் இல் சுங் தனது சிந்தனையில் பிறந்த "ஜூச்சே (Juche) சித்தாந்தம்" என்ற பெயரில், கீழைத்தேய தத்துவ மரபுடன், கொரிய தேசியவாதம் கலந்த, ஒரு புதுமையான கொள்கையை அரசாளும் தத்துவம் ஆக்கினார். (ஜூச்சே சித்தாந்த நூலில், அதற்கும் மார்க்சியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கிம் இல் சுங்கே எழுதி இருக்கிறார்.)

கிம் இல் சுங், தனது ஜூச்சே தத்துவம் உலகிலேயே தனித்துவமானது என்றும், மார்க்ஸ், லெனின் வழியை பின்தொடரவில்லை என்றும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார். (வெளிநாட்டு இடதுசாரிகளுக்கு மட்டும், இடையிடையே கார்ல் மார்க்ஸ் படம் காட்டி வந்தார்.) "மாபெரும் தலைவர்" கிம் இல் சுங், அவரது மகன் "அன்புத் தலைவர்" கிம் யொங் இல், ஆகியோரை மையப் படுத்திய தனி நபர் வழிபாடும், நவீன கால அரச பரம்பரை ஆட்சியும், உலகம் முழுவதும் தெரிந்த விடயங்கள் தான். அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

முதலாவதும் முக்கியமானதும், கொரிய தேசியவாதம். பண்டைய சாம்ராஜ்யங்கள் நூறாண்டு காலம் நீடித்தது போன்று, கிம் இல் சுங் அரச பரம்பரையின் வட கொரியாவும் நிலைத்து நிற்க வேண்டுமென்ற பேரவா. நமது தமிழ்த் தேசியவாதிகள், ராஜராஜ சோழன் காலத்தை பெருமையுடன் நினைவுகூருவதையும், பிரபாகரனை தேசியத் தலைவராக கூறிக் கொள்வதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டுகள் பலர், அடிப்படையில் தேசியவாதிகளாகவும் இருந்தனர். காலனிய எதிர்ப்புணர்வே பலரை கம்யூனிசத்தின் பால் ஈர்த்தது. ஆகவே, வட கொரியாவை, "ஒரு கம்யூனிச அரச பரம்பரை ஆட்சி செய்வது" மேற்கத்திய நாட்டவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில் வியப்பில்லை. (கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாட்டவருக்கும் அது விசித்திரமாகத் தெரிந்திருக்கலாம்.) 

இரண்டாவது காரணம், சர்வதேச கம்யூனிச அமைப்பில், ஐம்பதுகளில் ஏற்பட்ட மாற்றங்கள். உலகக் கம்யூனிச வல்லரசுகளான, சோவியத் யூனியனும், சீனாவும் பகை முரண்பாடு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அந்த இரண்டு நாடுகளும் தேவை என்பதால், வட கொரியா இரண்டு முகாமிலும் சேராமல், தன்னை தனித்துவமாகக் காட்ட விரும்பியது.

சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் பதவியேற்றதும் பெரும் பூகம்பம் வெடித்தது. குருஷேவின் ஸ்டாலின் தொடர்பான விமர்சனங்களுடன் முரண்பட்டு பிரிந்தவர்கள் மாவோவுக்கு பின்னால் அணிதிரண்டனர். அவ்வாறு தான், வட கொரியா சீனாவை புதிய நண்பனாக ஏற்றுக் கொண்டது. இருப்பினும், காலப்போக்கில் வட கொரியா சந்தர்ப்பவாத நிலையெடுத்தது. 

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது மாதிரி, ஒரு பக்கம் சோவியத் யூனியனுடனும், மறுபக்கம் சீனாவுடனும் நட்புப் பாராட்டினார்கள். சோவியத்-சீன முரண்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இரண்டு நாடுகளிடம் இருந்தும் உதவி பெற்றுக் கொண்டனர். 

அநேகமாக, வட கொரியா தங்களை பயன்படுத்திக் கொள்கிறது என்று, சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் தெரிந்திருக்கும். வட கொரியா இரண்டில் ஒன்றை தெரிவு செய்து விடக் கூடாது என்பதற்காக, அல்லது தங்கள் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக, தொடர்ந்தும் உதவி செய்து கொண்டிருந்தன.

வட கொரியா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இரண்டு நாடுகளிடமும் உதவி பெற்றுக் கொண்டே, "ஜூச்சே தத்துவத்தின் கீழ் தன்னிறைவுப் பொருளாதாரம் கட்டியெழுப்புவதாக" புளுகிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தான், அந்தக் குட்டு வெளிப்பட்டது. 

சர்வதேச கம்யூனிச சகோதரத்துவத்தின் மகத்துவத்தை அன்று வட கொரியா உணர்ந்திருக்கவில்லை. ஒரு பக்கம், ஒன்றுக்கும் உதவாத ஜூச்சே சித்தாந்தமும், மறுபக்கம் கொரிய தேசியவாதமும் வட கொரியர்களின் கண்களை கட்டிப் போட்டிருந்தது. தொண்ணூறுகளில் அந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்குள் இயற்கையும் சதி செய்தது. பஞ்சம் காரணமாக இலட்சக் கணக்கானோர் பலியாகி விட்டிருந்தனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Tuesday, May 19, 2015

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்


வட கொரியா ஒரு "கம்யூனிச" நாடல்ல.  இன்னும் தெளிவாகச் சொன்னால், மார்க்சிய- லெனினிச அல்லது மாவோசிச சித்தாந்த மரபில் ஆட்சி அமையவில்லை. வட கொரிய ஆட்சியாளர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் இல்லை. மார்க்சியம், சோஷலிசம், தேசியவாதம், மனிதநேயவாதம் போன்ற பல தத்துவங்களின் கலவையான "ஜூச்சே கொள்கை" அரசாள்கிறது.

சுருக்கமாக, வட கொரியா ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட புரட்சிகர தேசம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், கடந்த இருபது வருடங்களாக, அதுவும் முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றது. இந்தக் கட்டுரை அது குறித்து மேலும் விபரிக்கின்றது.

வட கொரியா பற்றி மேற்கத்திய நாடுகளில் பரப்பப் படும் தகவல்கள் நம்பத் தகுந்தவை அல்ல என்பது பல தடவைகள் நிரூபிக்கப் பட்டுள்ளன. இந்தத் "தகவல்கள்" பெரும்பாலும் எதிரி நாடான தென் கொரியாவில் இருந்தே வருகின்றன. அவர்களது உளவாளிகள் எப்போதும் சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை. 

சில தினங்களுக்கு முன்னர், மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்ட, வட கொரியா பற்றிய பொய் ஒன்று அம்பலமாகியது.  வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்யோன் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. 30 ஏப்ரல் 2015, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டதாக, தென் கொரிய புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி சொல்லப் பட்டது. அதிபர் கிம் யொங் உன் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் நித்திரை கொண்ட காரணத்தால் மரணதண்டனை விதிக்கப் பட்டதாக, தென் கொரிய புலனாய்வுத்துறை கூறியது. (பார்க்க: வட கொரிய குரூரச் செய்திகள் - எந்த அளவுக்கு உண்மை ?)

மரண தண்டனை மூலம் கொல்லப் பட்டதாக கருதப்பட்ட அமைச்சர் ஹ்யோன் இன்னமும் உயிரோடு இருப்பதாக, பிந்திக் கிடைத்த  தகவல்கள் தெரிவித்தன. அந்த அமைச்சர், "பீரங்கியால் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர்" வட கொரிய தொலைக்காட்சியில் தோன்றினார். 

சிலர் அது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று வாதிடலாம். ஆனால், மரண தண்டனை விதிக்கப் பட்ட "குற்றவாளிகள்" சம்பந்தமான பழைய ஆவணங்கள் யாவும் அழிக்கப் படுவது வழக்கம். நிச்சயமாக தொலைக்காட்சியில் போட்டுக் காட்ட மாட்டார்கள். வட கொரியாவில் உயர் பதவியில் இருந்த ஒருவர் குற்றவாளியாக தண்டனை கொடுக்கப் பட்டால், அவர் முன்பு கலந்து கொண்ட நிகழ்வுகளின் போது எடுத்த படங்கள், வீடியோக்களை அழித்து விடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட தகவலில் இருந்து ஓர் உண்மை தெளிவாகும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். வட கொரியா பற்றி நாங்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம்? பொதுவாக மேற்கத்திய ஊடகங்களினால் தெரிவிக்கப் படும் தகவல்கள் ஒரு பக்கச் சார்பானதாக இருக்கின்றன. அது ஒரு சிலரை திருப்திப் படுத்தலாம். அவர்கள் உண்மைகளைத் தான் சொல்கின்றனரா? 

இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், கியூபா, வியட்நாம் பற்றி எல்லாம் அளவுக்கு மிஞ்சி அறிந்து வைத்திருக்கும் இடதுசாரிகள் கூட, வட கொரியா பற்றி அக்கறை கொள்வதில்லை. வட கொரியா, அமெரிக்காவுடன் மோதல் நிலைக்கு செல்லும் பொழுது மட்டும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைத்துக் கொள்வார்கள். உலகளவில், வட கொரியா வலதுசாரிகளால் வெறுக்கப் படுவதற்கும், இடதுசாரிகளால் அலட்சியப் படுத்தப் படுவதற்கும் காரணம் என்ன?

எனக்குத் தெரிந்த வரையில், நான் திரட்டிய தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். இது வட கொரியா பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. இதை எழுத உதவிய உசாத்துணையாக நான் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். 
1) மேற்கத்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள். 
2) பெல்ஜியத்தில் இயங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிறுவனம் "Anti- Imperialitische Bond"(AIB) வெளியிட்ட சிறு நூல்கள். 
3) கிம் இல் சுங் எழுதிய "ஜூச்சே சித்தாந்தம்" (நூலகத்தில் கிடைத்தது.) 
4) நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) அலுவலக முகவரிக்கு, வட கொரியாவில் இருந்து அனுப்பப் பட்ட சஞ்சிகைகள். 
4) சோவியத் யூனியனில் கல்வி கற்ற நண்பர்கள், வட கொரிய மாணவர்களிடம் கேட்டு அறிந்த தகவல்கள். 
5) வட கொரியா பற்றி, அங்கு வாழ்ந்தவர்களினால் எழுதப்பட்ட  பக்கச் சார்பற்ற நூல்கள்.

இந்தக் கட்டுரையின் நோக்கம், வட கொரியா பற்றி நாம் அறிந்த தகவல்கள் சரியா, தவறா என்று ஆராய்வது மட்டும் தான். அதே நேரம், தமிழ் வாசகர்கள் பலர் அறியாத தகவல்களையும் எழுதவிருக்கிறேன். இதன் மூலம், வட கொரியா அரசை ஆதரிப்பது, அல்லது அதற்காக வக்காலத்து வாங்குவது எனது நோக்கமல்ல. அவர்களது அதிகப் பிரசங்கித்தனத்தை, தவறான முடிவுகளை, நியாயப் படுத்த முடியாத குற்றங்களை அப்படியே எழுதுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. எந்தப் பக்கமும் சாராமல், நடுநிலைமையுடன் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

முதலில், "வட கொரியா" என்று அந்த நாட்டுக்கு வெளியே வாழும் மக்கள் மட்டுமே அழைக்கின்றனர். வட கொரியர்களுக்கு அப்படி அழைப்பது பிடிக்காது. நீங்கள் அங்கே சென்று, "வட கொரியா" என்று சொன்னால், அங்குள்ள அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களும் அதனை திருத்திக் கொள்ளச் சொல்வார்கள். அதாவது, உத்தியோகபூர்வ பெயரான "கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு" (சுருக்கமாக: DPRK) என்று தான் அழைக்க வேண்டுமாம். நாங்கள் இங்கே வசதிக்காக வட கொரியா என்றே குறிப்பிட்டுக் கொள்வோம்.

எழுபதுகள் வரையில், வட கொரிய அரசும், தென் கொரிய அரசும், முழு கொரிய குடாநாட்டிற்கும் உரிமை கோரி வந்தன. தென் கொரிய அரசு, வட கொரிய மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமித்து காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். வட கொரிய அரசு, "மண் மீட்புப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும்" என்று அறிவித்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில், இரண்டு நாடுகளும் சமரசமாகி, ஒன்றையொன்று அங்கீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1910 தொடக்கம் 1945 வரையில், கொரியா ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. 2 ம் உலகப்போரில், சோவியத் படைகள் ஐரோப்பாவில் மட்டும் போரிடவில்லை. கிழக்கே, ஜப்பானுக்கு எதிரான போர்முனையை திறந்து விட்டன. ஏற்கனவே போரின் திசை மாறிக் கொண்டிருந்த படியால், ஜப்பானிய படைகள் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. 

சோவியத் யூனியன் நினைத்திருந்தால், இன்றைய தென் கொரியா வரையில் முன்னேறி இருக்க முடியும். அது மட்டுமல்ல, ஜப்பானை பிடிப்பதற்கும் தயாராக இருந்தது. இருப்பினும், அன்றைய அமெரிக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் நேச நாடுகள் அணியில் இருந்த படியால், ஸ்டாலினின் உத்தரவின் படி, சோவியத் படைகள் இன்றைய வட கொரியாவின் பகுதிகளை மட்டும் கைப்பற்றியதுடன் நின்று கொண்டன. தென் கொரியாவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றுவதற்கு விட்டுக் கொடுக்கப் பட்டது.

2 ம் உலகப்போர் முடிந்த பின்னர், கொரியாவில் நடத்தப் பட்ட தேர்தல்கள் அமெரிக்காவின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை. கொரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி ஐக்கிய முன்னணி பல இடங்களில் வெற்றி பெற்றது. அதனால், ஜெர்மனியில் நடந்த இழுபறிப் போட்டி மாதிரி, கொரியாவிலும் வல்லரசுகள் எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்தன. காலம் கடந்து செல்வதையும், பனிப்போர் ஆரம்பித்து விட்டதையும் உணர்ந்த சோவியத் யூனியன், ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று, செம்படைகளினால் விடுதலை செய்யப் பட்ட வட கொரியாவை ஒரு சோஷலிச நாடாக்க விரும்பியது.

அப்போது ஒரு சிக்கல் எழுந்தது. தென் கொரியா சம தரைகளை கொண்ட பிரதேசம். அதனால், அங்கே சனத்தொகையும் அதிகம். அதற்கு மாறாக வட கொரியா ஒரு மலைப் பிரதேசம். சனத்தொகை அடர்த்தியும் மிகக் குறைவு. அதனால், அங்கு கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருந்தது.

கொரியாவில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி பல தசாப்த காலமாக இயங்கி வந்த போதிலும், அது தெற்கில் மட்டுமே பெருமளவு செயற்பாடுகளைக் கொண்டிருந்தது. அதனால், பியாங்கியாங் நகரில் (இன்று வட கொரியாவின் தலைநகரம்) தளம் அமைத்திருந்த சோவியத் செம்படையினர், அந்த ஊரை சேர்ந்த கிம் இல் சுங் தலைமையிலான குழுவினரை கொண்டு வந்தனர்.

சோவியத் யூனியன் கிம் இல் சுங் குழுவினரை தெரிவு செய்வதற்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். அன்று அது ஒரு கெரில்லா இராணுவமாக, ஜப்பானுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அவர்கள் அப்போது சோவியத் யூனியனுக்குள் தளம் அமைத்து செயற்பட்டு வந்தனர். அங்கிருந்து செம்படையுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். மேலும், கிம் இல் சுங், தான் விரும்புவது போல நடக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். கிம் இல் சுங் குழுவினர், சோவியத் யூனியன் விரும்பியது போன்று, வட கொரியாவில் சோஷலிச அரசு அமைத்த போதிலும், கொரியாவை ஒன்று சேர்க்க விரும்பினார்கள்.

கிம் இல் சுங் பல வருடங்களாக முயற்சி செய்தும், ஸ்டாலினை படையெடுப்புக்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை. ஜப்பானில் அணுகுண்டு போட்டு விட்டு மிரட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவை எதிர்ப்பதற்கு ஸ்டாலினும் விரும்பவில்லை. இருப்பினும், சோவியத் யூனியனும் ஓர் அணுவாயுத வல்லரசானதும், அயலில் உள்ள சீனாவில் மாவோவின் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றியதும், கிம் இல் சுங்கின் படையெடுப்புக்கு பச்சைக் கொடி காட்டப் பட்டது. 

ஆரம்பத்தில், கிம் இல் சுங் எதிர்பார்த்த படி தான் காற்று வீசிக் கொண்டிருந்தது. மிக வேகமாக முன்னேறிய வட கொரியப் படைகள், கண்ணிமைக்கும் நேரத்தில் தென் கொரியாவின் 90% மான பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன.

அமெரிக்கா கொரிய யுத்தத்தில் தலையிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்று ஐ.நா. சபையில் சோவியத் யூனியனும், கம்யூனிச சீனாவும் இருக்கவில்லை. (வேறு ஒரு பிரச்சினையில் சோவியத் யூனியன் பகிஷ்கரித்து வந்தது. சீனாவை தாய்வானில் உள்ள குவாமிந்தாங் அரசு பிரதிநிதித்துவப் படுத்தியது.) 

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து, ஐ.நா. படையணியை தயார் செய்தது. பெருமளவு அமெரிக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஐ.நா. படைகள், தென் கொரியாவில் தரையிறங்கின. தற்போது காற்று எதிர்த் திசையில் வீசியது. அமெரிக்கப் படைகள், வட கொரியப் படைகளை விரட்டிச் சென்று, சீன எல்லைக்கு கிட்டே விட்டன.

எவ்வாறு, கொரிய யுத்தத்தில் அமெரிக்க தலையீடு யாராலும் எதிர்பார்க்கப் படவில்லையோ, அதே மாதிரி சீனத் தலையீடும் எதிர்பார்க்கப் படவில்லை. வட கொரியப் படைகளுக்கு ஆதரவாக, சீனர்கள் போரில் குதித்தனர். சோவியத் யூனியனின் ஆயுத தளபாட உதவியுடன், சீனாவின் தொண்டர் படையினர் உக்கிரமான சண்டையில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்புக் காரணமாக, அமெரிக்கப் படைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம், கொரியா இரண்டாகப் பிரிக்கப் பட்டது. உலக வரலாற்றில், இன்று வரையில், நீண்ட காலம் நிலைத்து நிற்கும் போர் நிறுத்தம் அதுவாகும்.

இங்கே ஓர் உண்மையை பலர் மறந்து விடுகின்றனர். அன்று கைச்சாத்திடப் பட்டது ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே தவிர, சமாதான ஒப்பந்தம் அல்ல. அதன் அர்த்தம், இன்றைக்கும், வட கொரிய அரசு, தென் கொரிய அரசுடனும், அமெரிக்காவுடனும் போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் போர் நடக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விடயம். இருப்பினும், அவ்வப்போது நடக்கும் அசம்பாவிதங்கள் காரணமாக, பதற்றம் நிலவுவதால், வட கொரிய அரசு தனது மக்களை இராணுவ மயப் படுத்தி வைத்திருப்பதுடன், தற்காப்புக்காக அணுவாயுதங்களையும் தயாரித்து வைத்துள்ளது.

(தொடரும்)

Monday, May 18, 2015

தமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒரு மீளாய்வு


ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த அதே கால கட்டத்தில், தமிழ் நாடு விடுதலைப் போராட்டமும் நடந்தது என்ற தகவல், இன்றைக்கும் பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.


  1. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு ஈழத் தமிழரின் பிரச்சினையை, தனது வெளிவிவகார கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அது தனது நாட்டிற்குள் எந்த இடத்திலும் இனப் பிரச்சினை கிடையாது என்று உலகை ஏமாற்றிக் கொண்டிருந்தது. 
  2. ஈழத்தில் தமிழ் பூர்ஷுவா வர்க்கம், சிங்கள பூர்ஷுவா வர்க்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இனப் பிரச்சினையில் வட மாகாண குட்டி முதலாளிய இளைஞர்களும் பாதிக்கப் பட்ட பின்னர் தான், அது முப்பதாண்டு கால ஈழப் போராக பரிணமித்தது.


தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன் முதலாக தமிழ் தேசியத்தை நிறுவன மயப் படுத்தியது. அதன் தாக்கம் ஈழத்தில் பல இடங்களிலும் எதிரொலித்தது. இலங்கையில் வாழும் தமிழர்களும், தமிழக சினிமாப் படங்களின் இரசிகர்களாக, தமிழக சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் ஈழத்திற்கும் கடத்தப் பட்டன. ஈழத் தமிழர்கள், திமுக தலைவர் கருணாநிதியை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முதன்முதலாக தமிழீழக் கோரிக்கை வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தை சுவீகரித்து இருந்தது.

தமிழகத்து பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்த திமுக, தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டதும், அதற்கு பதிலாக உடனடியாக ஒரு மாற்று இயக்கம் தோன்றவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த தமிழரசன் குழுவினர் தமிழ்நாடு விடுதலையை தமிழ் பாட்டாளி வர்க்கக் கோரிக்கை ஆக்கினார்கள். எழுபதுகளுக்குப் பின்னர் ஈழத்தில் எழுந்த குட்டி முதலாளிய வர்க்கத்தின் எழுச்சியின் தீவிரத்திற்கு, த.வி.கூ. வினால் முகம் கொடுக்க முடியவில்லை. அதனால், விரைவிலேயே அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப் பட்டது. ஆனால், ஈழத்தில் எழுந்த மாற்று அரசியல் அமைப்புகள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவித்தன.

எழுபதுகளில் சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டம், வட இலங்கையை சேர்ந்த குட்டி முதலாளிய வர்க்க இளைஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தமிழகத்திலும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அது போன்ற எழுச்சியை உண்டாக்கி இருந்தாலும், அதன் பலன்களை ஏற்கனவே திமுக அறுவடை செய்து விட்டிருந்தது. ஈழத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சி, மிதவாத தமிழ் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. பாராளுமன்ற பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில், த.வி.கூ. தீவிரவாத இளைஞர்களை தனது அடியாட்படையாக வைத்திருக்க விரும்பியது. ஆயினும், தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் பரவிய இடதுசாரிக் கருத்துக்கள் தான், மிதவாத அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டியது எனலாம்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும், எழுபதுகளின் தொடக்கத்தில் தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியும், ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் விதைத்தது. அதே மாதிரி, ஈழப் போராட்ட இயக்கங்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிரொலிகளை உண்டாக்கிய நேரம், தமிழ் நாடு விடுதலைப் படை தோன்றியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பௌதிகவியல் விதிகளுக்கு அமைய அனைத்தும் நடந்துள்ளன. அந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அரசுகள் புரிந்து கொள்கின்றன. அதனால் தான், முப்பதாண்டு கால போருக்குப் பின்னர், மிகக் கொடூரமாக புலிகளை அழித்து, தெற்காசிய பிராந்திய விடுதலை இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறுவதும், அதன் அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாடு விடுதலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட கருத்தாக அதனை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் தலைமை அது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருந்தது. 

இடதுசாரி இயக்கங்கள் கூட, இந்திரா காந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்துமளவிற்கு, இந்தியாவின் கைப் பொம்மைகளாக இயங்கினார்கள். ஆயுதங்கள், நிதிகளை வழங்கி, ஈழ விடுதலை அமைப்புகளை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இறுதியில், இந்தியா விரும்பிய நேரம் அந்த இயக்கங்களை அழிப்பதற்கு வழி வகுத்தது.

ஈழத்தின் விடுதலைப் போராட்டம், தமிழ் பேசும் பூர்ஷுவா வர்க்க கோரிக்கையாக தொடங்கினாலும், அது குட்டி முதலாளிய இளைஞர்களினால் வழிநடாத்தப் பட்டு, பாட்டாளி வர்க்க மக்களின் கைகளில் வந்து சேர்ந்தது. பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவின்றி, முப்பதாண்டுகள் வெற்றிகரமாக போராட முடிந்திருக்காது என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்தப் "பெரும்பான்மை மக்கள்" யார்? ஈழத்தின் தமிழ் உழைக்கும் மக்கள் அல்லவா? 

உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த போராளிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தான் உருவானார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு பலியான, வறுமையினால் பாதிக்கப் பட்டவர்கள், அதாவது இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராடினார்கள். அந்த மக்களை நிறுவன மயப் படுத்துவதும், ஓர் இனத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வைப்பதும், ஈழத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும், அதற்கு அயலில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும்.

Friday, May 15, 2015

USSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு! - மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு


2010 - 2011 ம் ஆண்டு, ரஷ்யத் தொலைக்காட்சியில், கோடிக் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சோவியத் யூனியன் காலத்தில் "குற்றங்களை" புரிந்த கம்யூனிசத் தலைவர்கள் தண்டிக்கப் படவில்லை என்ற ஆதங்கத்தில், தற்கால முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தி இருந்தனர்.

பெரும்பான்மையான ரஷ்ய மக்கள், "கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள்... ஸ்டாலினிச கொடுங்கோன்மையை வெறுக்கிறார்கள்..." என்ற எண்ணத்தில் அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டிருக்கலாம். சோவியத் கால கம்யூனிஸ்ட் தலைவர்களின் "குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு" வழக்கறிஞர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது. பழைய KGB ஆவணங்களை எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். 

"சூட் விரேமேனி" (Sud Vremeni : நீதிபதியின் நேரம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தான் நீதிபதிகளாக தீர்ப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். அதாவது, ஜூரிகள் மாதிரி பார்வையாளர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு, ஒரு குறிப்பிட்ட தலைவரை குற்றவாளி என்று தீர்ப்புக் கூற முடியும்.

நீதிபதிகளுக்கு(மக்களுக்கு) தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும், பழைய சோவியத் ஆவணங்களில் இருந்து எடுத்துக் காட்டினார்கள். வழக்கறிஞர்கள் தமது திறமையை எல்லாம் திரட்டி, ஸ்டாலின் போன்றவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னர், மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா?

"கூலாக் எனும் பணக்கார விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலினின் போர், பேரழிவுகளை உண்டாக்கியது", என்பன போன்ற ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னரும், பெரும்பான்மையான (78%) மக்கள் ஸ்டாலின் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்:
ஸ்டாலினின் கூட்டுத்துவ பண்ணை (Collective Farming) அமைப்பு, விவசாயிகள் மேல் பலவந்தமாக திணிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அது தான் சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது மோசமானதாக இருந்தாலும், சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. அதனால், நியாயமானது. 
அதற்கு மாறாக, வெறும் 22% பார்வையாளர்கள் மட்டுமே அவையெல்லாம் குற்றங்கள் என்று தீர்ப்பளித்தனர்.

2 ம் உலகப்போர் காலத்தில், ஸ்டாலின் - ஹிட்லர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் பற்றி, எதிர்மறையான தகவல்கள் தான் மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்டு வந்தன. அதாவது, "ஸ்டாலினும், ஹிட்லரும் கூட்டாளிகள் என்பதை ஓர் ஒப்பந்தம் மூலம் நிரூபித்து விட்டார்கள்" என்று, மேற்குலகில் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் பட்டது. அதையே, இன்றைய ரஷ்ய முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் எதிரொலிக்கின்றது. ஆகவே, அதுவும் மக்கள் தீர்ப்புக்கு விடப் பட்டது. 

அது ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற உண்மை தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். அந்த ஒப்பந்தம், அந்தக் காலகட்டத்தில் அவசியமாக இருந்தது என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள். வெறும் 9% மட்டும், அது 2 ம் உலகப்போருக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேற்கத்திய சரித்திர நூல்களும், ஊடகங்களும், "ஸ்டாலினிசத்தை அம்பலப் படுத்திய" குருஷேவ்வின் ஆட்சிக் காலத்தை, ஆஹா...ஓஹோ... என்று புகழ்கின்றன. அதே நேரம், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த, பிரெஷ்னேவ் காலகட்டத்தை குறை கூறுகின்றனர். அதாவது, "சீர்திருத்தவாதி" குருஷேவுக்கு மாறாக, பிரெஷ்னேவ் ஒரு கடும்போக்காளர், "ஸ்டாலினிச சர்வாதிகாரி" என்று விமர்சிக்கின்றனர். 

ஆனால், பிரெஷ்னேவ் பற்றி, ரஷ்ய மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா? பிரெஷ்னேவ் காலகட்டம், மக்களுக்கு பல வசதி வாய்ப்புகளை உருவாக்கிய பொற்காலம் என்று, 91% பார்வையாளர்கள் தீர்ப்பளித்தனர்.

இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றிய வாக்கெடுப்பு வந்தது. "சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், ரஷ்ய மக்கள் சுத்ரந்திரக் காற்றை சுவாசித்தார்கள். கம்யூனிச சர்வாதிகாரத்தை நிராகரித்து, மேற்கத்திய ஜனநாயகத்தை தழுவிக் கொண்டார்கள்...." இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. 

சோவியத் கால "கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் அவலங்களை அனுபவித்த" ரஷ்ய மக்கள் என்ன சொல்கிறார்கள்? சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது ஒரு மாபெரும் இழப்பு. அது எமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரவலம் என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள்!


வீடியோ: ரஷ்ய மக்கள் நீதிமன்றமான Sud vremeni தொலைக்காட்சி நிகழ்ச்சி. 
இந்த வீடியோவின் தலைப்பு ரஷ்ய மொழியில்: 
Сталинская система и 1941 год (1941 ம் வருடத்திய ஸ்டாலினிச அமைப்பு): 

Thursday, May 14, 2015

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புரட்சி


ரஷ்யாவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஸ்டாலின் சிலை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், சிலை உடைப்புக் காட்சிகளை காட்டி, கம்யூனிசம் புதைகுழிக்குள் சென்று விட்டது என்று பலர் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால், அங்கே புதிது புதிதாக முளைக்கும் சிலைகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ரஷ்யாவின், வடக்கு ஒசேத்தியா மாநிலத்தில், லிபெத்ஸ்க் (Lipetsk) நகரில் இந்த ஸ்டாலின் சிலை புதிதாக நிர்மாணிக்கப் பட்டது. (http://gorod48.ru/news/314858/) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் லிபெத்ஸ்க் கிளையினர், சிலையை நிர்மாணிப்பதற்கு நகர சபை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தனர். எனினும், கடைசி நேரத்தில் மறுப்புத் தெரிவித்த நகர சபை, சிலையை தெருவில் வைக்காமல், கட்சி அலுவக வளாகத்தினுள் வைக்குமாறு அறிவித்தனர். எனினும், அந்த அறிவித்தல் பிந்தி வந்த படியால், ஏற்கனவே தீர்மானித்த இடத்தில் சிலை வைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.

சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.

"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்களுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.

ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.

Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.

முப்பதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது, அதனோடு சேர்ந்திருந்த ஐரோப்பிய பொருளாதாரமும் சரிந்தது. அதே கால கட்டத்தில், ஸ்டாலின் ஆட்சி செய்த சோவியத் யூனியனின் சோஷலிச பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அன்று ரஷ்ய ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது.

அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கையில், சோவியத் யூனியனின் பொருளாதாரம் கிறங்க வைக்கும் அளவிற்கு துரித கதியில் வளர்ந்தது. நாடு முழுவதும் புதிய புதிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், ரயில் பாதைகள் நிர்மாணிக்கப் பட்டன. ஒன்றுமில்லாத கட்டாந்தரையில் இருந்து புதிய பிரமாண்டமான நகரங்கள் தோன்றின. மேற்கத்திய அறிவுஜீவிகள் கூட, சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சியை நேரில் பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தனர். மொஸ்கோ நகரில் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான மெட்ரோ ரயில் நிலையங்கள், மாளிகைகள் போன்று கட்டப் பட்டன.

சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டம், பெருமளவு தொழில்நுட்ப நிபுணர்கள், முகாமையாளர்களை எதிர்நோக்கி இருந்தது. அரச திட்டமிடல் அமைச்சான Gosplan, 1930 ம் ஆண்டு மட்டும் 435000 பொறியியலாளர்கள் தேவைப் படுவதாக அறிவித்திருந்தது.

சோவியத் பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலின் தனது சமூகப் புரட்சிக்கான களமாக பயன்படுத்த விரும்பினார். புதிய தொழில்நுட்ப நிபுணர்கள் பாட்டாளி வர்க்கப் பின்னணியை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதன் படி, தொழிலாளர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்கப் பட்டனர். ஆரம்பப் பாடசாலைக் கல்வியை கூட முடித்திராத சாதாரண தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து, பொறியியளாராக அல்லது முகாமையாளராக வர முடிந்தது.

சோவியத் யூனியன் முழுவதும், கோடிக் கணக்கான தொழிலாளர்கள், தாம் வேலை செய்த தொழிலகங்களை விட்டு விட்டு படிக்கச் சென்றார்கள். அவர்கள் ஸ்டாலினின் முற்போக்கான அபிரிவிருத்தித் திட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களே ஸ்டாலினிச அரசின் ஆதரவுத் தளமாக இருந்தனர். ஏனென்றால், அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் என்றுமில்லாத முன்னேற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அன்று உருவாகிய பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் "Vydvizjentsy" என்று அழைக்கப் பட்டனர்.

(தகவலுக்கு நன்றி: "Revolutionary Russia", 1891 - 1991, by Orlando Figes)

Tuesday, May 12, 2015

நெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறுத்தப் போராட்டங்களும்


நெதர்லாந்தில், டில்பூர்க் (Tilburg) எனும் நகரத்தில், அடிப்படை வருமானம் தொடர்பான சமூகப் பரிசோதனை ஒன்று நடைபெறவுள்ளது. ரோபோ மயப்படுத்தல் காரணமாக, வருங்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்றவாறு சமுதாய அமைப்பையும் மாற்ற வேண்டி இருக்கும்.

இன்று வரையில், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வேலையற்று இருப்பவர்களுக்கு அரச உதவித்தொகை வழங்கப் படுகின்றது. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான மாதாந்த உதவித் தொகை அது. அந்த உதவித்தொகை பெறுவோர் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்ல, மேலதிக பணம் சேமிப்பில் வைத்திருக்க முடியாது. எந்தநேரமும் அரச கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

டில்பூர்க் நகரசபை, தற்காலிகமாக உதவித்தொகை பெறும் நூறு பேரை தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்யவுள்ளது. அதன் படி, அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப் பட மாட்டாது. அவர்கள் மீதான அரச கண்காணிப்பும் நிறுத்தப் படும். மேலும், பகுதிநேர வேலை பார்த்து சிறிது பணம் கூட சம்பாதித்தாலும், அதை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். (தற்போதைய நடைமுறையில், சம்பளப் பணத்தின் அளவுக்கு உதவித்தொகை குறைக்கப் படும்.)

இந்தப் பரிசோதனை முயற்சியின் நோக்கம் என்ன? இதனால் வேலையற்றவர்களின் மனநலம், உடல்நலம் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறார்கள். (தற்போதைய நிலைமையில், நிறையப் பேர் மன உளைச்சலால், அதனோடு சேர்ந்த உடல் உபாதைகளினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.)

அழுத்தங்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால், ஒருவர் சுதந்திரமாக தனது நன்மை குறித்து சிந்திக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், அவராகவே ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்வதற்கோ, அல்லது நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்கோ முன்வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அடிப்படை வருமானம் தொடர்பான பரிசோதனை முயற்சி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ள, மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நடைமுறைப் படுத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.

ஐந்தாண்டு கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், தற்போது வளர்ந்து வருவதாக சொல்லப் படுகின்றது. அதே நேரம், அடிக்கடி வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன. அண்மையில், ஜெர்மன் ரயில்வே ஊழியர்களும், நெதர்லாந்து காவல்துறையினரும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்!

பொருளாதாரம் வளரும் நேரத்தில் எதற்காக வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் அதற்குக் காரணம். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நேரம், முதலாளிகள் பல சாக்குப் போக்கு சொல்லி சம்பளத்தை அதிகரிக்க மாட்டார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் அது எதுவும் செல்லுபடியாகாது. இலாபத்தில் தமக்கும் பங்கு வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இலாப விகிதம், வருடத்திற்கு எந்தளவு அதிகரிக்கின்றது என்ற துல்லியமான விபரத்தை, பெரிய இடதுசாரி தொழிற்சங்கங்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றன. அதைக் காட்டி, தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று பேரம் பேசுகின்றன. முதலாளிகள் இணங்க மறுக்கும் பட்சத்தில், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

அவ்வாறு தான், நெதர்லாந்து காவல்துறையும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்தது. அதைத் தடுப்பதற்காக அரசு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. "அத்தியாவசிய சேவையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. ஆனாலும், அந்த தீர்ப்பையும் மீறித் தான், காவல்துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நீதிமன்றம் தடை போட்டு விட்டது என்பதற்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா?

ஜெர்மனியில் வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. ஒவ்வொரு தொழிற்துறையும் ஒன்றை அடுத்து மற்றொன்று வேலைநிறுத்தத்தில் குதித்து வருகின்றன. பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், போராடாமல் வாழ்க்கை இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது. உலகில் எந்த முதலாளியும் தானாக சம்பளத்தை உயர்த்தித் தர மாட்டான். அதற்கு நிறுவனமயப் பட்ட தொழிற்சங்க நடவடிக்கை அவசியம்.


நெதர்லாந்தில் கருத்து சுதந்திரம் படும் பாடு

கடந்த வருடம் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் Fuck the King என்று கோஷம் எழுப்பிய ஆர்வலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து, 6-5-2015 அன்று சில இனந்தெரியாத நபர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அரச மாளிகை சுவரில், Fuck the King என்று எழுதி இருந்தனர். நகரசபை நிர்வாகம், உடனே அந்த சுலோகத்தை அழித்து விட்டது. 

மேற்குலகில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது. நம்புங்கப்பா!

Thursday, May 07, 2015

என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...


கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், "புத்தகம் புத்தகமாக வாசிக்க எமக்கு நேரமில்லை" என்றும், "எங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை, சாதாரண மக்களுக்கு எதுவுமே புரியப் போவதில்லை" என்றும், மூலதனம் நூல் பற்றி அறிவுஜீவித் தனமாக நையாண்டி செய்வோர் பலருண்டு.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், மூலதனத்தின் மூலப்பிரதி ஜெர்மன் மொழியில் வெளியான காலத்திலும், அதிகார வர்க்கத்தினர் அப்படித் தான் கருதி வந்தனர். 1872 ம் ஆண்டு, அதன் முதலாவது மொழிபெயர்ப்பு ரஷ்ய மொழியில் வெளியானது.

மூலதனம் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், சார் மன்னனின் தணிக்கை சபையினர் பார்வைக்கு சென்றது. அவர்கள் அந்த நூலை தடை செய்யாமல் விற்க அனுமதித்தார்கள். அதற்குக் காரணம், "அன்றைய ரஷ்யாவில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் சிறிய எண்ணிக்கையிலான படித்தோர் மட்டுமே மூலதனம் நூலை வாசிக்கப் போகிறார்கள். அப்படியே வாசித்தாலும், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியப் போகின்றது."

அப்படி வாசித்துப் புரிந்து கொண்ட "ஒரு சிலர்" மிகப் பெரிய புரட்சியை நடத்துவார்கள் என்று, அன்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது ஒரு பழமொழி.

"தொழிலாளர்கள், கடின உழைப்பின் மூலம், தமது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிலேயே வாய்ப்புகள் உள்ளன. அதனால், புரட்சி அவசியமானது அல்ல!" இவ்வாறு கூறும் பலரை நமது சுற்றாடலில் கண்டிருப்போம். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவிலும் அப்படியானோர் இருந்தனர். சில மார்க்சியவாதிகளும், குறிப்பாக சமூக- ஜனநாயகவாதிகள், அத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று அவர்கள் "பொருளாதாரவாதிகள்" (Economists) என்று அழைக்கப் பட்டனர்.

அன்று லெனின் கூட ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியில் தான் இருந்தார். அதுவே அன்று சார் மன்னராட்சிக்கு எதிரான, பிரதானமான மார்க்சியக் கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் பலர், பிற ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்.1903 ம் ஆண்டு, லண்டனில் நடந்த இரண்டாவது கட்சி மகாநாட்டில், ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற அரசமைப்பை விரும்பிய பிரிவினர், மிகத் தெளிவான சமூக- ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மென்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். ஏற்கனவே, பொருளாதாரவாதிகளும் மேற்கத்திய ஜனநாயகப் பாதை சிறந்தது என்று நம்பினார்கள். மேற்கத்திய ஜனநாயக அமைப்பே சிறந்தது. அதற்குள், தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கொள்கை.

லெனின் தலைமையில் பிரிந்தவர்கள் போல்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் தொழிலாளர் வர்க்கம் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம் என்று நம்பினார்கள். இது தொடர்பாக நடந்த விவாதங்களை, லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"என்ன செய்ய வேண்டும்?" இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற நூலாகும். "தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள், தேர்தல் ஜனநாயகம் மூலம் சில சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாதா?" "மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் சிறந்தது அல்லவா?" இது போன்ற சந்தேகங்களை எழுப்புவோருக்கான பதில்கள் அந்த நூலில் உள்ளன. மின் நூலை இணையத்தில் தரவிறக்கிக் கொள்வதற்கு: http://www.padippakam.com/document/M_Books/m000016.pdf

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் நடந்த போல்ஷெவிக் கட்சியினரின் புரட்சி, ஒரு சதிப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்றே மேற்கத்திய பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்தது தான், உண்மையான புரட்சி என்றும் கூறுகின்றன. பாடசாலைகளில் சரித்திர பாடம் படிக்கும் மாணவர்கள், பரீட்சையில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அப்படித் தான் விடை எழுத வேண்டும். மேற்குலக நாடுகள், அக்டோபர் புரட்சியை நிராகரித்து விட்டு, பெப்ரவரி புரட்சியை வரவேற்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

ஜனநாயகம் மாதிரி, புரட்சி என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சி மட்டுமே பலரால் புரட்சி என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அவ்வாறாயின், அண்மைக் காலத்தில் துனீசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகளும் புரட்சிகள் தான். ஆனால், அதற்குப் பின்னர், அந்த நாடுகளில் ஆட்சியாளர் மாறியதைத் தவிர, பெரியளவு சமூக மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 1917 பெப்ரவரியில் நடந்த புரட்சியில், சார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்த்தப் பட்டது. (எகிப்து, துனீசியா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) அப்போதே சோவியத் அமைப்புகள் தோன்றி விட்டன. தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, கணிசமான அளவு வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள். 

அது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் கணிசமான அளவு மார்க்சியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆயினும், அந்த மார்க்சியர்கள் மேற்கு ஐரோப்பிய சமூக- ஜனநாயகக் கட்சியினர் ஆவர். மென்ஷேவிக்குகள், சோஷலிச புரட்சியாளர்கள் போன்ற கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகளாக இருந்தனர். அதனால், அவர்கள் இன்றுள்ள பல முற்போக்கு பூர்ஷுவாக்கள் போன்றே காணப் பட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றம், சார் மன்னனை பெயரளவில் பாதுகாத்து வைத்திருந்தது. சோஷலிசம் தோன்றுவதற்கு முன்னர், முதலாளித்துவ வளர்ச்சி அவசியம் என்று கருதியதால், ஏற்கனவே இருந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சோவியத் என்ற அமைப்பு தனியாக இயங்கிய போதிலும், அதற்கு எந்த அதிகாரங்களையும் கொடுக்கவில்லை.

அத்தகைய நிலைமையில் தான், அக்டோபர் மாதம் போல்ஷெவிக் கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அன்றைய தலைநகரான பெட்ரோகிராட்டில் (சென் பீட்டர்ஸ்பேர்க் என்பது ஜெர்மன் மொழிப் பெயர் என்தால், ரஷ்ய தேசியவாதிகளினால் அந்தப் பெயர் மாற்றப் பட்டிருந்தது.), அந்த ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரம், பெரும்பான்மை மக்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று சொல்லப் படுகின்றது. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலில், பெரியளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த அரண்மனையில் இருந்தது, கெரன்ஸ்கி தலைமையிலான சமூக- ஜனநாயக அரசாங்கம் தான்.

உண்மையில், அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. செம்படையின் முன்னோடி அமைப்பான செம் பாதுகாவலர் படையில் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். பாராளுமன்றத்தினுள் நுளைந்த செம் பாதுகாவலர்கள், அறிவுஜீவி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியே விரட்டினார்கள். அதன் மூலம், அன்று வரையில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்திடம் இருந்த அரசு அதிகாரம், தொழிலாளர்களின் அமைப்பான சோவியத்திற்கு மாற்றப் பட்டது.

அக்டோபர் புரட்சியின் பின்னர் என்ன நடந்தது? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினர் ஒன்றுமில்லாதவர் ஆக்கப் பட்டனர். கொள்ளைக்காரரக்ளிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என்று உணர்ந்த மக்கள், பணக்காரர்களின் வீடுகளை சூறையாடினார்கள். காலங்காலமாக செல்வத்தில் வாழ்ந்து வந்த பிரபுக்கள், நிலவுடைமையாளர்கள், தங்களது மாளிகை போன்ற வீடுகளில் ஏழை, எளிய மக்களை குடியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த மேட்டுக்குடியினர், தம்மிடம் இருந்த சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உழைக்காமல் சொகுசாக வாழ்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர் கடினமான வேலைகளை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில இடங்களில், அவர்களைப் பிடித்து மலசல கூடம் கழுவ வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. செல்வந்தர்கள் தம்மிடம் இருந்த வைரங்களை விற்று குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு கஷ்டம் ஏற்பட்டது. பல பணக்காரர்கள், சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தான், கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய ஸ்தாபனம் அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்றது. வழமையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக, அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி உறுப்புரிமை வழங்கப் பட்டது. அது வரை காலமும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், போன்றவர்களுக்கு உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. மேட்டுக்குடியினரால் "தோட்டக் காட்டான்கள்" என்று இழிவு படுத்தப் பட்டவர்கள், பாராளுமன்ற ஆசனங்களில் சென்றமர்ந்து கொண்டார்கள்.

இது போன்றதொரு வர்க்கப் போராட்டத்தை தான் லெனின் கனவு கண்டார். அதைச் செயற்படுத்துவதற்கு பல கோட்பாடுகளை எழுதினார். அதனால் தான், அது இன்றைக்கும் மார்க்சிய- லெனினிச சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சியினர், வர்க்கப் போராட்டம் தற்போது தேவையில்லை என்று நினைத்திருந்தால், இன்றைக்கும் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு கட்சியாக அமர்ந்திருப்பார்கள். ரஷ்யாவும் இத்தாலி, ஸ்பெயின் மாதிரி, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடாக இருந்திருக்கும்.