Wednesday, September 30, 2009

G-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்

ஒபாமாவின் நிர்வாகம் புஷ்ஷை விட சிறப்பாக இருக்கும் எனஎதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கின்றது. செப். 24 . பிட்ஸ்பெர்க் நகரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் G - 20 மகாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடியது. சாத்வீக வழியில் நடந்த ஊர்வலத்தை கலைக்க காவல்துறை அடக்குமுறைக் கருவிகளைப் பயன்படுத்தியது. ‘Long Range Acoustic Device’ என்ற நவீன ஆயுதம் முதன்முறையாக அமெரிக்க மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. இதுவரை காலமும் ஈராக், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நவீன கருவி செவிப்புலனை பாதிக்குமளவு வலி ஏற்படுத்தக் கூடியது. போலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை விரட்ட ரப்பர் தோட்டாக்களால் சுட்டது. ஊர்வலத்தில் சென்ற 210 பேரை காவல்துறை கண்டபடி கைது செய்தது. சில கைது நடவடிக்கைகள் ஏறக்குறைய ஆட் கடத்தல் போலிருந்தன.

அமெரிக்க பொலிஸ் அராஜகத்தை பதிவு செய்த வீடியோ இது:





G-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, USA)

24 செப். 09 அன்று அமெரிக்காவில் Pittsburgh (Pennsylvania) நகரில் நடைபெற்ற G-20 மகாநாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸ் தடுக்க முயன்றது. ஆர்ப்பாட்டக்காரரும், பொலிஸாரும் வீதிச் சண்டையில் இறங்கினர். பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து கூட்டத்தை கலைக்க முயன்றது. ஊர்வலத்தில்அதிகளவு மாணவர்களும் பங்கு பற்றியதால், பிட்ஸ்பெர்க் நகர பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த போலீசார், அங்கேயும் மாணவர்கள் மீது pepper spray போன்ற இரசாயன ஆயுதங்களை பிரயோகித்துள்ளனர். பிட்ஸ்பெர்க் சமர்க்களக் காட்சிகளைக் கொண்ட வீடியோ கீழே.




Pittsburgh Riot Police Trap University Students on a Staircase and Deploy Chemical Weapons (Video)


Monday, September 28, 2009

அகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு

"நாம் இங்கே (பிரான்ஸில்) மிருகங்களைப் போல நடத்தப்படுகிறோம். ஆப்கானிஸ்தானில் எனக்கு அழகான வீடு ஒன்று இருந்தது. இங்கே எந்த வசதியுமற்ற கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். தாலிபான்கள் எனது தந்தையும், சகோதரனையும் கொலைசெய்தனர். தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினேன். ஆப்கானிய அகதிகள்தொழுகை நடத்தும் மசூதியாக பயன்படுத்திய கூடாரத்தையும் பிரெஞ்சுப் போலீசார் நிர்மூலமாக்கினார்கள். வழிபாட்டு ஸ்தலத்தின் புனிதம்குறித்து பிரஸ்தாபித்த போது, இஸ்லாமிற்கு இங்கே இடமில்லை என்றார்கள். எனக்கு இது மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் எமதுகுடும்பம் அமெரிக்க இராணுவத்துடன் நல்லுறவு பேணி வந்துள்ளது. மேற்குலகம்பற்றிய எனது பிரமைகள் இன்றோடு தகர்ந்து போயின." இவ்வாறு கூறினார் முஹமட் கூசி என்ற 20 வயது அகதி.

பிரான்சின் துறைமுக நகரமான "கலே" யின் அருகில் நூற்றுக்கணக்கான அகதிகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரமுகாம்களை பிரெஞ்சுப் பொலிஸ் அப்புறப்படுத்தியது. பிரித்தானியா செல்லவிரும்பும் அகதிகள் பிரெஞ்சுக்கரையோரம் காத்திருக்கின்றனர். கடலைக் கடக்கும் காலம் வரும்வரைஜங்கிள்" என்றழைக்கப் படும் தற்காலிக கூடார முகாம்களில்தங்கியிருந்தனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஆப்கானியர்கள். இஸ்லாமியரின் புனிதப் பண்டிகையான ரமழான் நோன்பின் இறுதி நாளன்றுபோலிஸ் முற்றுகையிட்டது. முகாம் இருந்த சுவடே தெரியாமல் கூடாரங்கள்யாவும் நிர்மூலமாக்கப்பட்டன. 278 அகதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேர் பராயமடையாத சிறுவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சுற்றிவளைக்கப்பட்டதால் யாரும் தப்பிச்செல்லமுடியவில்லை. சில நிமிடங்களுக்குள் அனைத்து அகதிகளும் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட அகதிகள் அனைவரும் தாம் திருப்பியனுப்பப் படுவோம் என அஞ்சுகின்றனர்.

"பலர் இப்போதும் இங்கிலாந்து பாலும் தேனும் ஆறாக ஓடும் நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று நையாண்டி செய்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், கலே முற்றுகையில் பிடிபட்ட எந்தவொரு அகதிக்கும் அரசியல்தஞ்சம் வழங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு சிலருக்கு தஞ்சம்வழங்குவதாகவும், மிகுதியை சுயவிருப்பின் பேரில் திருப்பியனுப்பபோவதாகவும் பிரெஞ்சு குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படையினரை அனுப்பி யுத்தத்தைதொடரதுடிக்கும் மேற்குலக நாடுகள், தமது நாட்டினுள் அடைக்கலம் கோரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்கானிஸ்தான் மீதுகொண்டுபோடுபவர்கள், அங்கிருந்து உயிர் தப்பி வரும் அகதிகளை விரட்டியடிக்கின்றனர். மேற்குலகின் மனிதாபிமான முகமூடி கிழிந்து, அதன் கோரமான சுயரூபம் வெளித் தெரிகின்றது.

கலே அகதி முகாம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்டநிழற்படங்கள் கீழே.

Sunday, September 27, 2009

காதலுக்கு அவமரியாதை! இஸ்ரேலின் இனத்தூய்மை!!

இஸ்ரேலிய- பாலஸ்தீன யுத்தம், கலாச்சார தளத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது . ஒரு காலத்தில் நாசிச ஜெர்மனியிலும், நிறவெறி தென்னாப்பிரிக்காவிலும் நடைமுறையில் இருந்த இனப்பாகுபாடு இன்றையஇஸ்ரேலில் தொடர்கின்றது. வெளிப்பார்வைக்கு மதச்சார்பற்ற நாடாகதோன்றும் இஸ்ரேலில், யூத மத அடிப்படைவாத குழுக்கள் அரசியல்அதிகாரத்தை கைப்பற்றி வருகின்றன. இந்த மதவாத சக்திகளின் அண்மைய இலக்கு "கலப்புத் திருமணங்கள்". இஸ்ரேலில் காலங்காலமாக பின்பற்றப்படும்இனப்பாகுபாடு காரணமாக யூத-அரபு கலப்புத் திருமணங்களுக்கான வாய்ப்பு குறைவு. இஸ்ரேலிய சட்டப்படி மதச்சார்பற்ற சிவில் திருமணங்களுக்கு இடமில்லை. அனைத்து திருமணங்களும் யூத அல்லது இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மத விதிமுறைகளுக்கு உட்பட்டே பதிவு செய்யப்பட வேண்டும். இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் பதிவுத் திருமணம் செய்ய விரும்பினால், இஸ்ரேலை விட்டு வெளியேறி, அந்நிய நாடொன்றில் திருமணம் செய்துவிட்டுவர வேண்டும். அந்த திருமணம் பின்னர் இஸ்ரேலில் சட்டப்படி அங்கீகரிக்கப்படும்.

பொதுவாகவே யூத குடியிருப்புகளும், அரபு குடியிருப்புகளும் பாதுகாப்புவேலியிடப் பட்டு பிரித்தே வைக்கப்பட்டுள்ளன. இரண்டு இனங்களும் "கலந்து" வாழும் பெரு நகரங்களில் கூட, தனித்தனியான குறிச்சிகள் உள்ளன. இருப்பினும் ஜெருசலேமை அண்டியிருக்கும் அரபு புற நகர்ப் பகுதியொன்றில் வாழும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வதிவிட அனுமதி கொண்டவர்கள். இவர்களுக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கமுடியும். அதே போல பல்லின மக்கள் வாழும் டெல் அவிவ் நகரிலும் தொழில்வாய்ப்பு தேடிவரும் அரபு இளைஞர்கள் வசிக்கின்றனர்.

இஸ்ரேலில் காலங்காலமாக இறுகிய மத சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழும் யூத நங்கைகள், அரபு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம்குறைவு. கடந்த இருபதாண்டுகளுக்குள் வந்து குடியேறிய (முன்னாள் சோவியத் யூனியனை சேர்ந்த) ரஷ்ய யூதர்கள் மத்தியில் மதக் கட்டுப்பாடுகள் குறைவு. சுதந்திர மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ரஷ்ய-யூத கன்னிகள், அரபுஆடவருடன் காதல் கொள்வது அதிகரித்து வருகின்றது. காதலிப்பவர்கள் பின்னர் கலியாணம் செய்து கொண்டு, அரபு கிராமங்களிற்கு சென்று தங்கிவிடுகின்றனர். யூத இளம் பெண்களின் சுதந்திரப் போக்கால் கலவரமடைந்த யூத மதஅடிப்படைவாதிகள் கலப்புத் திருமணங்களை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். "அரபு இளைஞர்கள் வேண்டுமென்றே யூத பெண்களை மயக்கி, காதல் வலையில் விழ வைக்கிறார்கள். இதுவும் அவர்களின் யூத இனத்தின் மீதான போர் முறைகளில் ஒன்று." என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

வட இஸ்ரேலிய யூத நகரம் Safed இல், யூதப் பெண்களை எச்சரிக்கும்சுவரொட்டிகள் காணப்படுகின்றன. "அரபுக்களை காதலிக்கும் அப்பாவி யூத நங்கைகள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், விபரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும்" இந்த போஸ்டர்கள் பகிரங்கமாக இனவாதம் பேசுகின்றன. நாசிச ஜெர்மனியிலும் இதே போன்ற போஸ்டர்கள் யூதர்களுக்கு எதிராக ஒட்டப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு யூதநகரமான Pisgat Zeev இல், 35 இளைஞர்களைக் கொண்ட விழிப்புக் குழுவொன்று இயங்கிவருகின்றது. “Fire for Judaism” என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர் பட்டாளம் நகர தெருக்களில் ரோந்து செல்கின்றனர். தெருக்களில் எங்காவது அரபு ஆண்களுடன், யூதக் கன்னிகைகள் காணப்பட்டால் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனர். இருப்பினும் தாம் அரபு இளைஞர்களை தாக்குவதில்லை என்றுஇவர்கள் கூறினாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள்இடம்பெற்றுள்ளன.

"ஜெருசலேம் போஸ்ட்" பத்திரிகைக்கு தகவல் கொடுத்த Pisgat Zeev வாசி ஒருவர், கடந்த பத்தாண்டுகளில் "தனது நகரத்தில் இருந்து அறுபது யூதப் பெண்கள் அரபுகிராமங்களுக்கு சென்று விட்டதாகவும், அதற்குப் பின்னர் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை." என்றார். தென் இஸ்ரேலிய நகரமான Kiryat Gat நகர சபை, பாடசாலைகளில் "விழிப்புணர்வு வீடியோ" ஒன்றை காண்பித்துவருகின்றது. "எதிரியுடன் படுத்தல்" என்ற பெயரிட்ட அந்த வீடியோ, கலப்புத்திருமணங்கள் இஸ்ரேலிய நெறிகளுக்கு முரணானது என்று பரப்புரைசெய்கின்றது.

மேற்குறிப்பிட்ட நகரங்களில் Yad L’achim என்ற யூத மத அடிப்படைவாதஅமைப்பின் உறுப்பினர்கள், இனப்பாகுபாட்டு பிரச்சார இயக்கத்தில் முன்நிற்கின்றனர். இனத்தூய்மை குறித்து வலியுறுத்தும் இந்த அமைப்பு, யூதப்பெண்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற பாடுபடுவதாக கூறி வருகின்றது. பாலஸ்தீன கிராமங்களில் ஆபத்தில் சிக்கியுள்ள யூதப் பெண்கள் தினசரி தமதுதொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதாகவும், பொலிஸ் உதவியுடன்இவர்களை மீட்டு வருவதாகவும், Yad L’achim அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

"ஆரிய இனத்தூய்மை" பற்றி பேசிய ஹிட்லரின் இனப்பிரிவினைக் கொள்கை, இன்று இஸ்ரேலில் நடைமுறைப்படுத்தப் படுவதை, அங்கு இடம்பெறும்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Yad L'achim யூத மத அடிப்படைவாதிகளின் இணையத்தளம்
'Protecting' Jewish girls from Arabs (Jerusalem post)

Saturday, September 26, 2009

உய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்

"ஆயிரத்தொரு இரவுகள்", சிறு பராயத்தில் அனைவரையும் கவர்ந்த மாயாஜாலக் கதைகள். கற்பனையோ, புனைவோ, சில கதைகளில் வரும் இடங்களின் பெயர்கள், மத்திய ஆசியாவை நினைவுபடுத்துகின்றன. குறைந்தது ஒரு கதையாவது வட-மேற்கு சீன மாநிலமான சிஞ்சியானை பின்புலமாக கொண்டு சொல்லப்பட்டிருக்கும். சீனாவில் துருக்கி மொழி பேசும் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் பிரச்சினை, வெளி உலகம் அதிகம் அறியாத ஒன்று. விரிவாகச் சொன்னால், துருக்கியிலும், முஸ்லிம் நாடுகளிலும் உய்குர் பிரச்சினை பற்றி பேசப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் மேற்குலகின் அக்கறையின்மை காரணமாக, உலகின் பிற பாகங்களுக்கு செய்தி கொண்டுசெல்லப்படவில்லை. திபெத் பிரச்சினையில் சீனாவுடன் பகைத்துக் கொண்ட இந்தியா, உய்குர் பிரச்சினையில் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், சீனாவுக்கு உய்குர் போன்று, இந்தியாவுக்கு காஷ்மீர் சில ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பது தான். ஜூலை மாதம் உரும்கி நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களும், அதற்கு மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் கொடுத்த அதீத முக்கியத்துவமும், உலகின் பார்வையை பதிய வைத்தன. இனங்களுக்கிடையிலான வன்மம், இனக்கலவரங்கள் வரை இட்டுச் செல்வது பல நாடுகளிலும் நடப்பது தான். ஆனால் இம்முறை மேற்குலகிற்கே சவால் விட்ட சீனா என்பதால், சர்வதேச ஊடகங்களும் பிரத்தியேக கவனமெடுத்தன. இதனால் உய்குர் சிறுபான்மையினர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப் பட்டாலும், திரைமறைவில் தொடரும் குழிபறிப்பு வேலையையும் கருத்திற் கொள்வது அவசியம்.

சீனா குறித்து நாம் அறிந்திருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரத்திலிருந்து, சிங்ஜியான் மாநிலம் முற்றிலும் வேறுபடுகின்றது. மண்ணின் மைந்தர்களான "உய்குர்" மக்கள், துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி பேசுவதுடன், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். கிட்டத்தட்ட ஈரான் அளவான மாநிலத்தில், பாலைவனத்தையும், அதில் திரியும் அடர்ந்த ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் அங்கே காணலாம். எரிபொருள் தாகம் கொண்ட சீன பொருளாதாரத்திற்கு, சிங்ஜியாங்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணையும், எரிவாயுவும் வரப்பிரசாதங்கள். இதனால் சின்ஜியாங் "சீனாவின் குவைத்" என்று பொருளாதார அறிஞர்கள் செல்லப்பெயர் சூட்டியிருந்தனர். செல்வச் செழிப்புடன் திகழ வேண்டிய மாநிலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இரு வேறுபட்ட இனங்களை எதிரிகளாக்கியுள்ளது. சீனர்களால் சுரண்டப்படுவதாக துருக்கி இனத்தவர்கள் குமுறுகின்றனர். தொழிற்துறை விருத்தி சீனர்களுக்கே சாதகமாக அமைவதாக மனம் வெதும்புகின்றனர். வசதிபடைத்த நகரமயமாக்கப்பட்ட இடங்கள் சீனரின் வாழ்விடமாகவும், ஏழ்மையும், குறைபாடுகளும் கொண்ட குடியிருப்புகளில் உய்குர் மக்களும் இரு வேறு உலகங்களில் வாழ்கின்றனர். திட்டமிட்ட அல்லது பொருளாதார நலன்களுக்காக குடியேறும் சீன மக்கள், மாநிலத்தின் குடிசனப் பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தமது பாரம்பரிய மண்ணில், தாம் சிறுபான்மையினராகி வருவதாக துருக்கி இனத்தவர்கள் முறையிடுகின்றனர். இந்த முறைப்பாட்டில் உண்மையில்லாமல் இல்லை.

உய்குர் பிரச்சினைக்கு சரித்திரப் பின்னணி தேடும் அரசியல் ஆய்வாளர்கள், அண்மைய பொருளாதார மாற்றங்களை கணக்கெடுப்பதில்லை. முன்னொரு காலத்தில் உய்குர் சாம்ராஜ்யம் இருந்திருக்கிறது. எனினும் அது செங்கிஸ்கான் போன்ற ஆசியாவை ஆண்ட துருக்கியின சக்கரவர்த்திகளின் காலத்தில் தான். துருக்கி மொழியின் பூர்வீகம் மொங்கோலியா போன்ற மத்திய ஆசியாவில் இருந்து தொடங்குகின்றது. சீனப்பெருஞ்சுவர் பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும், சீனர்கள் அதைக் கட்டிய நோக்கம் குறித்து அறிந்தவர் சிலரே. வடக்கே இருந்து அடிக்கடி படையெடுத்து வரும், மொங்கோலிய (துருக்கி இனத்தவர்) நாடோடிக் கும்பல்கள், சீனாவின் செல்வத்தை சூறையாடிச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தனர். சீன விவசாயிகள் உழைத்து சேமித்த சொத்துகளை கொள்ளையடித்து செல்வதுடன் நில்லாது, பாதுகாப்பற்ற மக்களை கொடூரமாக கொன்று, கிராமங்களையும் அழித்து விட்டு செல்வார்கள். கொள்ளையரின் படையெடுப்புகளை தடுக்கும் நோக்கில் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டாலும், பிற்காலத்தில் மொங்கோலியர்கள் அதையும் மீறி உள்ளே வந்து சீனா முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள். சில நூறாண்டுகள் மொங்கோலிய துருக்கி இனத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சீனா, பின்னர் ஹான் (சீன) அரச குடும்பத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டது. வட மேற்குப் பிராந்தியத்தில் மொங்கோலியருக்கும், சீனருக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி, கி.மு. 60 ம் ஆண்டளவில் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது அமைக்கப் பட்ட எல்லைப் பாதுகாப்பு நிலையம் "சின்ஜியாங்" (புதிய எல்லை) என அழைக்கப்பட்டது.

சீனாவில் பெரும்பான்மையானவர்கள் "ஹான்" மொழி பேசும் மக்கள். சீனா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட ஹான் அரச வம்ச ஆட்சியின் கீழ், இன்றுள்ள சீன மொழி (மாண்டரின்) பரவியது. அரசகரும மொழியை தமது தாய் மொழியாக வரித்துக் கொண்டவர்களின் சந்ததி, இன்று வரை "ஹான் சீனர்கள்" என அழைக்கப்படுகின்றது. இன்றைய சீனாவில், ஹான் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசியல், பொருளாதார துறையில் செலுத்தும் ஆதிக்கம், மத்திய காலங்களிலேயே நிலை நிறுத்தப்பட்ட தோற்றப்பாடு. மேலைத்தேய கருத்தியலாளர்கள் மாவோவின் கம்யூனிச காலத்தில் ஹான் சீனர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 18 ம் அல்லது, 19 ம் நூற்றாண்டில், " கிங்" அரச வம்சத்தின் காலத்தில், பொருளாதார விருத்திக்காகவும், எல்லைப் பாதுகாப்புக்கும் என, ஹான் சீனர்கள் சின்ஜியாங் பிரதேசத்தில் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டது. சின்ஜியாங் மாநிலத்தில் மட்டுமல்ல, திபெத், மொங்கோலியா (இன்றைய மொங்கோலிய குடியரசல்ல, சீனாவின் மாநிலம்) போன்ற அனைத்து சிறுபான்மையினரின் வாழ்விடங்களிலும் ஹான் சீனர்கள் சென்று குடியேறினார்கள். அமெரிக்க சரித்திரத்தில், 19 ம் நூற்றாண்டில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட கலிபோர்னியா போன்ற மேற்கத்திய மாநிலங்களில் பிரிட்டிஷ் அமெரிக்கர்கள் சென்று குடியேறிய நிகழ்வுடன் இது ஒப்பிடத்தக்கது.

மாவோவின் காலத்திலும் ஹான் சீன குடியேற்றம் தொடர்ந்து கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. அன்று கல்விப் புலமை, அல்லது தொழிற் தேர்ச்சி பெற்றவர்கள் அனேகமாக ஹான் சீனர்களாக இருந்தனர். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. அந்த நிலைமை இன்று வரை தொடர்கின்றது. சின்ஜியாங் மாநிலத்தில், எண்ணை, எரிவாயு அகழும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் ஹான் சீனர்களுக்கே வழங்கப்படுகின்றன. இதனால் சீனாவின் பிற பாகங்களில் இருந்து குடியேறிய ஹான் சீனர்கள், சின்ஜியாங் தலைநகர் உரும்கியில் இன்று பெரும்பான்மை இனமாக(74 %) மாறி விட்டனர். உய்குர் மக்கள் வெறும் 12 % மட்டுமே. நாட்டுப்புறங்களில் மட்டுமே உய்குர் துருக்கியர்கள் அதிகளவு சனத்தொகையை கொண்டுள்ளனர். அதுவும் 45 % மட்டுமே. 41 வீதமான ஹான் சீனர்கள், விரைவில் முழு மாநிலத்திலும் பெரும்பான்மை இடத்தை பிடித்து விடுவார்கள் என்று அஞ்சப்படுகின்றது.

சீனாவின் உய்குர் இனப்பிரச்சினை சரித்திர பின்னணியைக் கொண்டது என்பதை விட, நவீன அரசியல்-பொருளாதார குறைபாடுகளின் விளைவு எனக் கூறுவதே பொருத்தம். மாவோவின் காலத்தில், சீனாவில் எங்கேயும் இனப்பாகுபாடு பற்றிய பிரச்சினை எழவில்லை. அதற்குக் காரணம் அரச சித்தாந்தமான "வர்க்கப் போராட்டம்" அனைத்து இனங்களையும் பாதித்திருந்தது தான். எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், "வர்க்க எதிரி" என்ற பட்டம் கிடைப்பது கெட்ட கனவாக கருதப்பட்டது. முதலாளித்துவ, நிலப்பிரத்துவ பின்னணி கொண்டவர்கள் தீயவர்களாக ஒதுக்கப்பட்டார்கள். இருப்பினும், கலாச்சாரப் புரட்சியின் போது, சிறுபான்மையினங்களின் கலாச்சார பாரம்பரியம் மிக்க சொத்துகள் சில அழிக்கப்பட்டன. நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களை அழித்தல், என்று அதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. உய்குர் மக்களின் தனித்துவமான கட்டடக்கலையை பிரதிபலித்த இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலங்கள் பல அவ்வாறு காணாமல் போயின. தற்போதும், நவீனமயமாக்கல் என்ற பெயரில் சில புராதன கட்டிடங்கள் அழிக்கப்பட்டு, அங்கே 21 ம் நூற்றாண்டு நகரங்கள் உருவாகின்றன.

துருக்கி மொழி பேசும் மக்களைக் கொண்ட மத்திய ஆசியா, நீண்ட காலமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆரம்ப காலத்தில், ஈரானில் இருந்து சென்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், மத்திய ஆசியாவை இஸ்லாமிய மயப்படுத்தினர். காலப்போக்கில் உள்ளூர் முஸ்லிம் அரசர்கள் தோன்றலாயினர். அன்று பாரசீக (ஈரான்) மொழியே ஆட்சி மொழியாக இருந்த போதிலும், துருக்கிய கலாச்சாரமும் கூடவே வளர்ந்தது. உதாரணத்திற்கு "கான்" என்ற பெயரும், "தந்தூரி" சமையலும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்ய காலத்தில் இந்தியாவிலும் பிரபலமாகியது. இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட மத்திய ஆசியாவில், பல்வேறு துருக்கி மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். சீனாவின் வட-மேற்கு சின்ஜியாங் மாநிலத்தின் உய்குர்-துருக்கி மொழி பேசும் மக்களும் ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடிமக்களாக வாழ்ந்தவர்கள் தான். அன்றைய காலங்களில் உய்குர் மக்கள் மேற்கே (மெக்கா) பார்த்து வாழ்ந்து வந்தனர். கிழக்குப்புறமாக இருந்த சீனர்கள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை.

சீனாவில் "கிழக்கு துர்க்கிஸ்தான்" என்ற சுதந்திர நாடாக்குவதற்கான இயக்கம், சின்ஜியாங் மாநிலத்தில் தலைமறைவாக இயங்கி வருகின்றது. இவர்களிலும் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரு பிரிவு இருந்தாலும், "கிழக்கு துர்க்கிஸ்தான்" தேசியவாத சித்தாந்தம், உய்குர் இளைஞர் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. தனித்துவமான உய்குர் (துருக்கி) மொழி, இஸ்லாம் போன்ற அடையாளங்கள் தேசியவாத இயக்கத்திற்கு உந்துவிசையாக உள்ளன. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மசூதிக்கு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால் பல இளைஞர்கள் (தலைமறைவாக இயங்கும்) இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பால் ஈர்க்கப்படுகின்றனர். இதற்கிடையே "கிழக்கு துர்க்கிஸ்தான்" என்ற நாமம், மேற்கத்திய அகழ்வாராய்ச்சியாளரின் கண்டுபிடிப்பு என்று கருதப்படுகின்றது. உண்மையில் கம்யூனிச சீனா, இருபது வருடங்களுக்கு முன்பு முதலாளித்துவ சீனாவாக மாறிய பிறகு தான்; இன்றைய இன, மத முரண்பாடுகள் மேலோங்கி வருகின்றன.

மத்திய ஆசியாவில், நீண்ட காலமாகவே இஸ்லாமிய மதவாத சக்திகள், நிலப்பிரபுக்களுடன் சேர்ந்து கொண்டு புதிய கம்யூனிச ஆட்சியாளருக்கு தலையிடியைக் கொடுத்து வந்துள்ளனர். 1920 ல் கசக்கஸ்தான் போன்ற துருக்கி மொழி பேசும் மத்திய ஆசியப் பகுதிகள் சோவியத் யூனியன் வசமாகிய போது, மதவாத பிற்போக்கு சக்திகள் சீன எல்லையைக் கடந்து உய்குர் மக்களிடம் புகலிடம் கோரின. போல்ஷெவிக் புரட்சியின் போது பல்லாயிரக்கணக்கான அகதிகள் சீனாவின் சின்ஜியாங் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். ஐம்பதுகளில் சீனக் கம்யூனிச புரட்சியின் போது, இஸ்லாமியவாத சக்திகளுக்கு மீண்டும் நெருக்கடி தோன்றியது. இம்முறை அங்கிருந்து, சோவியத் பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். இவ்வாறு இஸ்லாமிய-நிலப்பிரபுத்துவ சக்திகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாலும், தமது இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் சென்றனர்.

தொன்னூறுகளில் ஆப்கானிஸ்தானை தனது இரும்புப் பிடிக்குள் ஆட்சி செய்த தாலிபான்-அல் கைதா கூட்டணிக்கு ஒரு பெருங் கனவு இருந்தது. இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை மீளக் கட்டிஎழுப்ப வேண்டும், அதற்காக நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும். கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கிய தாலிபான் அரசு, மத்திய ஆசியாவின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. வேண்டிய அளவு உறுப்பினர்களை சேர்த்துக் கொடுக்கலாம். அவர்களுக்கு பயிற்சியளிப்பது அல் கைதாவின் பொறுப்பு. விரும்பினால் தாலிபானுடன் யுத்தத்தில் பங்குபற்றி, போர்க்கள அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம். உய்குர் மக்களிடமிருந்து தோன்றிய "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்க" உறுப்பினர்களும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி எடுத்தனர். இவர்களில் சிலர், 2001 ம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, குவாந்தனமோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் "9/11 பயங்கரவாத எதிர்ப்பு போர்" காலகட்டத்தின் போது, போரில் தானும் இணைந்து கொள்வதாக சீனா அறிவித்தது. உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகளை சர்வதேசரீதியாக அடக்க முனைந்தது. ஆனால் சீனாவின் வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. அமெரிக்காவுக்கோ செச்செனிய, உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. பயங்கரவாத தாக்குதல்களை செய்திருந்தாலும், அமெரிக்க வெளிவிவகார கொள்கை அவர்களை விடுதலைப் போராளிகளாக கணித்தது. மேற்கத்திய ஊடகங்கள் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை நேரமெடுத்து சொல்லிக் கொண்டிருக்கும். அதே நேரம், உதாரணத்திற்கு பாலஸ்தீன இயக்கங்களின் வன்முறையை அர்த்தமற்ற பயங்கரவாத பைத்தியக்காரத்தனம் என சித்தரிக்கும். அமெரிக்க அரசின் வெளிவிவகாரத் துறை, "நல்ல பயங்கரவாதிகள்", "கெட்ட பயங்கரவாதிகள்" என்று இரண்டு வகை இருப்பதாக கருதுகின்றது. அமெரிக்காவை அல்லது மேற்குலகை எதிர்ப்பவர்கள் எல்லோரும் கெட்ட பயங்கரவாதிகள். மற்றவர்கள் நல்ல பயங்கரவாதிகள். அதனடிப்படையில், அண்மையில் குவாந்தனமோ சிறையில் இருந்து விடுதலை செய்த உய்குர் தீவிரவாதிகளை சீன அரசிடம் ஒப்படைக்கவில்லை.

உய்குர் தீவிரவாதிகள் சீன எல்லையோரமுள்ள அண்டை நாடுகளான தஜிகிஸ்தான், கசகஸ்தானில் தளம் அமைத்து இயங்கி வருகின்றனர். அங்கிருந்து கொண்டே உய்குர் கெரில்லாக்கள் சின்ஜியாங் மாநிலத்தில், அவ்வப்போது சீன பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இம்முறை (ஜூலை மாதம்) உரும்கியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு "உலக உய்குர் காங்கிரஸ்" (WUC ) என்ற அமைப்பே உரமிட்டது என்று சீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் நிதியில் இயங்கும் NED என்ற தன்னார்வ நிறுவனம், சீனாவில் மனித உரிமைகளை மேம்படுத்தும் தர்மகாரியத்தில் இறங்கியுள்ளது. இதற்காக " உலக உய்குர் காங்கிரஸ்" சிற்கு வருடந்தோறும் இரண்டு லட்சம் டாலர்கள் நிதி வழங்கி வருகின்றது. தலாய் லாமாவிற்கு அடுத்தபடியாக, சீனாவின் தேசிய எதிரி என கணிக்கப்படுகின்ற WUC தலைவி ரெபியா கதீர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஒரு மனித உரிமைவாதியாக அமெரிக்க அரசின் அரவணைப்பில் வாழ்கிறார். இவர் முன்பு சீனாவில், உய்குர் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். உய்குர் விடுதலை கோரும் ஆர்வலர்கள் ஜெர்மனி முனிச் நகரில் WUC தலைமையகத்தை கொண்டுள்ளனர். அங்கிருந்த படியே, சின்ஜியாங் மாநிலத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி வருவதாக சீன அரசு கூறி வருகின்றது. இதற்கிடையே முன்பொரு காலத்தில் ஐரோப்பிய கம்யூனிச நாடுகளுக்கென பிரச்சார ஒலிபரப்புகளை நடத்திக் கொண்டிருந்த "சுதந்திர வானொலி" உய்குர் ஆர்வலர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


அண்மைக்கால சீன வரலாற்றில் இடம்பெற்ற மோசமான இனக்கலவரம் என வர்ணிக்கப்படும், உரும்கி வன்முறை ஆரம்பிக்க காரணம் ஒரு வதந்தி எனக் கூறப்படுகின்றது. ஜூன் மாதம், உரும்கி நகரில் ஒரு தொழிலகத்தில் இரு ஹான் சீனப் பெண்களை, உரும்கி இளைஞர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக ஒரு வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து ஹான் இளைஞர்கள் கோஷ்டியொன்று, உய்குர் தொழிலாளர் விடுதிக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உய்குர் மத்திய சதுக்கத்தில் உய்குர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கும்பல் ஹான் சீனர்களை, அவர்களின் சொத்துகளை குறிவைத்து தாக்கியது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலகத்தடுப்பு போலிசும் இரும்புக்கரம் கொண்டு கலவரத்தை அடக்கியது. கலவரத்தில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக சீன அரசு தெரிவிக்கின்றது. 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக உலக உய்குர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. மேற்குலகில் ஊடக சுதந்திரமற்ற நாடாக காட்டப்படும் சீனாவில், கலவரம் குறித்த செய்திகள் தணிக்கை செய்யப்படாமலே வெளியாகின. முதல் நாள் உலகம் முழுவதும் வலம் வந்த கலவரக் காட்சிகள் யாவும் சீன தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உய்குர் கலவரத்தின் எதிரொலியாக சீனர்களைத் தாக்கப் போவதாக, முஸ்லிம் சகோதரத்துவ கொள்கையை உயர்த்திப் பிடிக்கும், "மஹ்ரெப் அல் கைதா" எச்சரித்துள்ளது. யாரிந்த அல் கைதா? 2001 ம் ஆண்டிலிருந்தே, அல் கைதா என்ற ஆவி, ஊடகங்களின் கற்பனை என்பதை பலர் வலியுறுத்தி வந்துள்ளனர். இவ்வளவு காலமும், "பின்லாடன் அண்ட் கோ" ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் இருந்து கொண்டு அல் கைதா என்ற பன்னாட்டு பயங்கரவாத நிறுவனத்தை நடத்தி வருவதாக நம்பிக் கொண்டிருந்தோம். இப்போது புதிதாக "மஹ்ரெப் அல் கைதா" என்ற ஒன்று முளைத்திருக்கிறது. அரபு மொழியில் "மஹ்ரெப்" என்பது அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய வட ஆப்பிரிக்க பிரதேசங்களைக் குறிக்கும். மிகச் சரியாக சொன்னால், அல்ஜீரியா. அந்த நாட்டில் மட்டும் இருபதினாயிரத்திற்கும் குறையாத சீனர்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளில் கடமையாற்றுகின்றனர்.

அல்ஜீரிய சீனர்களின் உயிருக்கு ஆபத்து என்றால், அபிவிருத்திப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும். சில வருடங்களுக்கு முன்னர், குறைந்தது 50000 பேரை பலி வாங்கிய உள்நாட்டுப் போரில், அல்ஜீரிய அரசுடன் மோதி தோற்றுப் போன இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் "மஹ்ரெப் அல் கைதா" என்று புது அவதாரம் எடுத்துள்ளன. ஒரு தசாப்தமாக தொடர்ந்த போரில் அல்ஜீரிய அரசாங்கத்திற்கு பிரான்சும், இஸ்லாமியவாதிகளுக்கு அமெரிக்காவும் மறைமுகமாக உதவி வந்துள்ளன. பிரான்சை தமது எதிரியாக பிரகடனம் செய்த இஸ்லாமியவாதிகள், இன்று வரை அமெரிக்காவுக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைத்தது கிடையாது. அல்ஜீரியாவை விட்டு பிரெஞ்சுக்காரர்களை விரட்ட முடியாத "மஹ்ரெப் அல் கைதா", சீனர்களை விரட்டப் போகிறதாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

உய்குர் கலவரம் குறித்து மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. பாலஸ்தீன இஸ்லாமிய சகோதரர்களுக்காக இஸ்ரேலை அழிக்கப் போவதாக சூளுரைத்த ஈரானின் அதிபர் அஹமதிநஜாத், உய்குர் முஸ்லிம்களுக்காக அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. லிபரல் எதிர்க்கட்சி தலைவர் ரப்சன்ஜானி மட்டும், சீனாவை பொது மேடையில் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார். அதே போல துருக்கி பிரதமர் குல், "சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலை" செய்யப்படுவதாக கண்டிக்கிறார். யார் எங்கே நிற்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. மேற்குலக சார்பான துருக்கிய 'குல்'லும், ஈரானிய ரப்சன்ஜானியும் சீன எதிர்ப்பு நிலையெடுக்கின்றனர். ஜூலை 5 ம் திகதி உய்குர் கலவரம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், ரஷ்யாவில் "ஷாங்கை கூட்டமைப்பு மகாநாடு" நடைபெற்றது. யகத்தரினாபூர்க் நகரில் நடந்த மகாநாட்டில் ஈரானுக்கு (இந்தியாவிற்கும்) பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரஷ்யா, கசகஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஸ்தாபித்த "ஷாங்கை கூட்டமைப்பு" அமெரிக்காவின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. இது ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பு என்று சொல்லப்பட்ட போதும், ஒருங்கிணைந்த இராணுவ ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. அத்தகைய கூட்டமைப்பில் ஈரானும் பங்கு பற்றுவது, பூகோள அரசியல் களத்தில் பெறும் மாற்றங்களை உருவாக்கும். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. சீனா, உரும்கியில் நடந்த கலவரம் தற்செயலானதா?"
ஷாங்கை கூட்டமைப்பின் பொருளாதார திட்டங்களில் ஒன்று, ரஷ்ய எரிபொருளை சீனாவுக்கு நேரடியாக விற்பது. அசுரகதியில் வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம், தனக்கு தேவையான எரிபொருளை மத்திய கிழக்கில் இருந்து, இந்து சமுத்திரத்தை சுற்றி எடுத்து வருகின்றது. சீனாவுக்கு அருகிலேயே அபரிதமான எண்ணை வளம் கொண்ட கசகஸ்தானும், ரஷ்யாவும் இருக்கையில், எதற்காக அதிக பணம் செலவழித்து கடல்மார்க்கமாக எண்ணை இறக்குமதி செய்யவேண்டும்? சாதாரணமாக உலக வரைபடத்தை நோக்கும் எவருக்கும் இயல்பாக எழும் கேள்வி தான். உலகில் எல்லாமே தலைகீழாக தான் நடந்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு ரஷ்ய/கசகஸ்தான் எண்ணையை கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. புதிதாக குழாய்ப் பாதை அமைக்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட அந்தப் பாதை உய்குர் மக்கள் தனிநாடு கோரும் சின்ஜியாங் மாநிலத்தை ஊடறுத்து செல்கின்றது. யகதரினபூர்க் மகாநாட்டில் இந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டது. எதிர்பாராத விதமாக ஜூலை 5 ம் திகதி உரும்கியில் கலவரம் இடம்பெற்றுள்ளது. எல்லாமே தற்செயல் தானா?


_____________________________________________________________________________________
"உன்னதம்" (August 09)இதழில் பிரசுரமானது.

Friday, September 25, 2009

கிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி

(22 Sep. 09) Greece, Mytilene தீவு சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளும், சட்டவிரோதகுடியேறிகளும் தம்மை விடுதலை செய்யக் கோரி கலகம் செய்தனர். தொலைதூரதீவொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தம்மை விடுவிக்கும் படியும், கிரேக்க தலைநகர் எதேன்சிற்கு செல்லும் விசேஷ அனுமதிப்பத்திரம்வழங்குமாறும் போராடி வருகின்றனர். சிறைமுகாமில் வைக்கப்பட்டிருப்போரில் சில பராயமடையாத சிறுவர்களும் அடங்குவர். அகதிகளின் எழுச்சியின் பின்னர் இவர்களை மட்டும் விடுவிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதமளித்தனர். "No Borders" என்ற கிரேக்க மனிதஉரிமை ஆர்வலர்களின் அமைப்பு கடந்த மாதம் இந்த அகதிகளை விடுவிக்குமாறுதடுப்பு முகாம் அருகில் போராட்டம் நடத்தியது. சிறைமுகாம் கலவரம் பற்றிகேள்விப்பட்ட கிரேக்க ஆர்வலர்கள், முகாமுக்கு வெளியே அகதிகளுக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கிரேக்க ஆர்வலர்களின் போராட்டத்தால் கவரப்பட்ட உள்ளூர் ஊடகங்களும் சம்பவத்தை பதிவு செய்தன. வெளியுலக தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்ட சிறை முகாமில் 650 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதில் 150 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயத்திற்கு முரணான விதத்தில் அகதிகளை தடுத்து வைக்கும் செயலை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கண்டித்துவந்துள்ளன.
Video: Uprising at the detention centre of Pagani, Mytilene

Wednesday, September 23, 2009

வன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)

ஒரு காலத்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இஸ்ரேலின் தோற்றம் மாறுகின்றது. இராணுவத்தில் யூத மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. யூத மதகுருக்கள் தம்மை பின்பற்றும் மதப்பற்றாளருக்கு வன்முறையை நியாயப்படுத்தி போதிக்கின்றனர். அத்தோடு நில்லாது, மத குருக்களே போர்வீரர்களாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தில் கடமையாற்றுவது அதிகரித்து வருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை "இது கடவுளின் போர்". அன்பைப் போதிக்க வேண்டிய மதகுருமார், மனிதர்களைக் கொல்லும் கொடூர யுத்தத்தில் ஈடுபடும் முரண்நகை. "இது யூத மத குருமாரின் ஜிகாத்" என்று சமாதான ஆர்வலர்கள் பரிகசிக்கின்றனர். பி.பி.சி. தயாரித்த இந்த ஆவணப்படம் மதங்களின் இரத்தம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட சிலவற்றை வன்முறையாளரின் மதமாகவும், தமது மதம் அன்பை மட்டுமே போதிப்பதாகவும் அடிக்கடி பாசாங்கு செய்பவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம்.


Part 1


Part 2

Tuesday, September 22, 2009

தமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன? - நேர்காணல்


இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
_____________________________________________________________________________________

இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்தயுத்தம் முடிவுக்கு வந்துள்ளதும் தமிழ் மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வந்தஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமையும் உண்மையே. ஆனால் அத்துடன் யுத்தம் போராட்டம் என்பனவற்றோடு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் விரிவு பெற்றுச்செல்வதற்கு அடிப்படையாக அமைந்த இன முரண்பாட்டு விரிசலும் பேரினவாத ஒடுக்கு முறையும் தொடரவே செய்கிறது. அதாவது இரத்தம் சிந்தும் யுத்தம்முடிவுக்கு வந்திருக்கிறதே தவிர இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் தொடரவேசெய்கிறது. அவ்வாறே பொருளாதார நெருக்கடிகளும் அவற்றின் பாரியசுமைகளும் அனைத்து மக்கள் மீதும் பாரிய சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளன.

இனியொரு : அவ்வாறாயின் “மகிந்த சிந்தனை” அரசாங்கம், நீங்கள் கூறும் அரசியல் யுத்தத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்று கருதுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் அவர்களது பாரம்பரியபிரதேசங்கள் மீதும் ஆயுத அடக்கு முறையைப் பேணிவருவதானது அரசியல்யுத்தத்தின் ஒரு பிரதான பகுதியாகும். அதே போன்று வடக்கில் மூன்று லட்சம்மக்களை முட்கம்பி முகாம்களில் அடைத்து வைத்து தண்டனைக் கைதிகளைவிட மோசமாக நடாத்தி வருவதும் அரசியல் யுத்த அடிப்படையிலேயேயாகும். அத்துடன் இன்றுவரை அதிகாரப் பகிர்விற்கான எந்தவொரு அரசியல் தீர்வையும்முன்வைக்காமலே காலத்தைக் கடத்திச் செல்வதும் அரசியல் யுத்தமாகவேஉள்ளது. “கிழக்கின் உதயம்” “வடக்கின் வசந்தம்என்பன அரசியல் தீர்வைமறுக்கும் வெறும் கண்துடைப்புக்கள் மட்டுமேயாகும்.

இனியொரு : போருக்குப் பின்பான தென்னிலங்கைச் சூழல் எவ்வாறு காணப்படுகிறது? சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் மனநிலை எத்தகையதாக உள்ளது?

தோழர் செந்திவேல் : போரின் வெற்றியும் விடுதலைப் புலிகளின் தலைமைஅழிக்கப்பட்டமையையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பொதுவானவரவேற்பைப் பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாகும். அதற்குக் காரணங்கள்இரண்டு. ஒன்று, தமிழர்கள் நாட்டைப் பிரித்து தனித் தமிழ் ஈழத்தை அமைக்கமுற்பட்டுள்ளனர் என்ற அச்சம் முன்பிருந்தே இருந்து வந்துள்ளமை. இரண்டாவது, புலிகள் இயக்கம் சிங்களக்குடி மக்கள் மீதும் அவர்களது பிரதேசங்களிலும் தொடுத்து வந்த ஆயுதத் தாக்குதல்கள். இவற்றின் காரணமாகமகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தையும் அவர்கள் கூறி நின்ற பயங்கரவாத ஒழிப்பு என்பதையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ளவே செய்தனர். அதேவேளை தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வுநியாயமானதாக வழங்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதியினர் விரும்புகின்றனர் என்பதும் நிராகரிக்கக்கூடியதொன்றல்ல. இருப்பினும் போரின் வெற்றி ஊடாக தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தி தொடர்ந்தும் பதவிகளில் இருந்து வருவதைக்குறிக்கோளாகக் கொண்டே ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் செயல்பட்டு வருகின்ற பிரதான போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. போரின் வெற்றி கொடுத்துள்ள மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதாகவே உள்ளது. இப்போரின் மூலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசு யந்திரத்தின் கோரக்கரங்கள் சிங்கள மக்கள் மீது தமது வலிமையைக்காட்டி அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும் போதே அவற்றின் தாக்கத்தையும் வெற்றிக்கொண்டாட்டங்களின் எதிர் விளைவுகளையும் மக்கள் காண்பர்.

இனியொரு : தென்னிலங்கைச் சூழல் அவ்வாறெனில் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்து வருகின்றது என்பதைக் கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : பொதுவாகவே தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தின் தோல்வியானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்ட பிரிவினர் புலிகள் இயக்கத்தின் மீதான அனுதாபமாகவும் கடுமையானவிமர்சனமாகவும் மக்கள் பார்க்கின்றனர். அதே வேளை தங்களை இவ்வாறு ஒருமோசமான அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டார்களே என்ற வெறுப்பும் ஆத்திரமும் இருக்கவே செய்கிறது. வவுனியா மெனிக் தடை முகாமிலிருந்துஅறுபது வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்காக வெளியே வந்த ஒரு முதியவரைச்சந்தித்தபோது மேற்கூறிய போக்கின் அம்சங்களை அவர் கொண்டிருந்ததைஅவதானிக்க முடிந்தது. அவர் ஒரு முது மொழியையும் கூறிவைத்தார். பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்துவிட்டோம். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் உள்ள சுமார் மூன்று லட்சம்மக்களுக்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கின் தமிழ்த் தேசிய இனம் முழுவதற்கும்பொருந்தக் கூடிய ஒரு எதிர்மறைக் கூற்றாகவே கொள்ளமுடியும்.

இனியொரு : இந்நிலைக்கு யார் யார் காரண கர்த்தாக்கள் என நீங்கள், எவ்வாறு மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் ஊடாகக் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இது தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளாக மட்டும்பார்க்கக் கூடாது. அது நமது நாட்டின் சமூக அமைப்பினதும் ஆளும் வர்க்கம்ஆளப்படும் வர்க்கங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆனால் இதில்தனிநபர்களாகவும் ஆளும் தரப்பு தலைமையாளர்களாகவும் இருந்துவந்தவர்களின் பங்கினையும் பாத்திரத்தையும் நிராகரித்து விடமுடியாது. கடந்தநூற்றாண்டின் ஆரம்பம் முதலே இன்றைய பேரினவாத நச்சு விருட்சத்திற்கானவிதைகள் நாட்டப்பட்டு தகுந்த வழிகளில் தண்ணீர் ஊற்றிப் பராமரித்துவளர்க்கப்பட்டது. அதற்குரிய சூழலையும் நல்ல பசளையும் வழங்கியவர்கள்கொலனித்துவ ஏகாதிபத்திய வாதிகள் அதனை வளர்த்து ஆளும் வர்க்கப்பலாபலன்களைப் பெற்று வந்தவர்கள் நிலவுடைமை வழிவந்த சிங்கள பௌத்தமேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர். மறுதரப்பில் தமிழர் மேட்டுக்குடியினர் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி உயர்வர்க்க அரசியலையே நடாத்தி வந்தனர். மேற் கூறிய இரு தரப்பினரும் சிங்கள தமிழ் உழைக்கும்மக்களின் அபிலாஷகளைக் கவனத்தில் கொள்ளாது விட்டது மட்டுமன்றிஅவற்றிலிருந்து தேசியவாதக் கூக்குரல்களின் மூலம் மக்களைத்திசைதிருப்பியும் கொண்டனர். அவற்றின் எதிர் விளைவுகளையே தமிழ் மக்கள்நேரடியாகவும் சிங்கள மக்கள் மறைமுகமாகவும் அனுபவித்து வருகின்றனர் என்பதே யாதார்த்தமாக உள்ளது.

இனியொரு : இன முரண்பாட்டையும் அதன் காரணமான பேரினவாத ஒடுக்குமுறையையும் அடையாளம் காணும் நீங்கள் அதற்கு எதிரான தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கிறீர்கள். இது ஏன் என்பதை விளக்கிக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : நாங்கள் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை அடையாளம்காண்பதும் எதிர்ப்பதும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயேயாகும். எந்தவொரு தேசிய வாதத்திற்கும் அதாவது பெருந்தேசியவாதமாகிலும்குறுந்தேசிய வாதமாகிலும் அவற்றுக்கு வர்க்க அடிப்படைகள் இருந்துவருகின்றன. அவற்றை மறைத்துக் கொண்டு தேசியவாதம் பேசுவது தவறானநிலைப்பாடு மட்டுமன்றி அபாயகரமானதுமாகும். இதுவே இலங்கையின்துயரமாக கடந்த நூற்றாண்டிலும் இன்றும் தொடர்ந்து வருகின்ற யதார்த்தமாகஉள்ளது. எனவே தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காககொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம் என்பதே நமது நிலைப்பாடாகும்.

இனியொரு : அவ்வாறாயின் தமிழ்த் தேசியவாதம் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்து நிற்கவோ போராடவோ இல்லை என்று கூற முற்படுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : எதிர்த்து நிற்கவில்லை என்றோ போராடவில்லை என்றோ கூறமுற்படுவது முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முற்படும்முட்டாள் தனமாகும். நாம் கூறுவதும் ஏற்கனவே சுட்டிக் காட்டி வந்ததும்என்னவெனில் தமிழ்த் தேசிய வாதம் என்றுமே முற்போக்கான திசையில் பயணித்து அதற்குரிய பாதையில் உரிய கொள்கைகளை வகுத்து முன்செல்லவில்லை என்பதையேயாகும். நமது கண்ணோட்டத்தில்தேசியவாதம் என்பது முதலாளித்துவ அடிப்படைகளைக் கொண்டதும் மக்களைத்தவறான வழிகளில் இட்டுச் செல்லக் கூடியதுமாகும். நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று இலங்கையில் இன்று சிங்கள தமிழ் முஸ்லீம்தேசியவாதங்கள் யாவும் மேற்கூறிய அடிப்படைகளிலேயேமுன்னெடுக்கப்படுகிறது. இவற்றால் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்படுவதுமட்டுமன்றி இன மொழி மத பிரதேச நிலைகளின் ஊடாக ஒருவரோடு ஒருவரைமோத வைக்கவும் முடிகிறது. இந்தப் போக்கின் ஊடாகவே தமிழ்த்தேசிய வாதப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது தவறானதும் பிற்போக்கானதுமாகும். அதுவே இன்றைய அவல நிலைவரை கொண்டு வந்துவிட்டுள்ளது.

இனியொரு : அப்படியானால் தேசியவாதத்தில் முற்போக்கான கூறுகளோ அவற்றை முன்னெடுக்கும் நிலைப்பாடுகளோ இல்லை என வாதிடுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : இல்லை அப்படி வாதிடுவது அறிவீலித்தனமாகும். தேசியவாதத்திற்கு சில அடிப்படைகள் இருப்பது போன்று குறிப்பிட்ட தூரஎல்லைகளும் உண்டு. எனவே பிற்போக்கான கூறுகளைக் கொண்ட தேசியவாதத்தால் அவ் எல்லைகளைச் சென்றடையவோ அன்றி அதனைத் தாண்டிப்பயணிக்கவோ முடியாது. ஆனால் முற்போக்கான கூறுகளைக்கொண்டுள்ளதேசிய வாதத்தால் முன்னோக்கிச் சென்று அதன் எல்லைகளைத் தாண்டியும் சோசலிசப் பரப்புக்குள்ளும் பிரவேசிக்க முடியும். அத்தகைய தேசியவாதம் எதிரியார் நண்பன் யார் என்பதைக் கண்டு பொது எதிரியை எதிர்ப்பதில் ஏனையசக்திகளுடன் ஏற்படுத்தவே செய்யும்.

இனியொரு : நீங்கள் கூறும் முற்போக்கான கூறுகளுடனும் எல்லைகளைத் தாண்டும் பாதையிலும் தமிழ்த் தேசிய வாதம் பயணிக்கவில்லை என்று கூறினால் அது பழைய பாராளுமன்றத் தலைமைகளுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ்ப் போராளி இளைஞர் இயக்கங்கள் நீங்கள் கூறும் முற்போக்கான தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதையிட்டு என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுத்ததாக நீங்கள் கூறும்தமிழ்ப் போராளி இயக்கங்கள் சில ஆரம்பத்தில் முற்போக்கான கூறுகளைஅடையாளம் காட்டுவனவாகத் தோற்றம் தந்தனவே தவிர அவர்களது கொள்கைகோட்பாடுகளில் தெளிவின்மையும் ஊசலாட்டங்களும் இருக்கவே செய்தன. தமிழ் மக்களிடையே காணப்பட்ட உள் முரண்பாடுகளிலும் சிங்கள மக்களைப்பார்த்த பார்வைகளிலும் இந்தியாவை அனுகிய முறையிலும் அவர்களின்நிலைப்பாடு தெளிவற்றதாகி விரைவாகவே பிற்போக்கான நிலைகளுக்குசென்றடைந்தது. இந்தியாவையோ அன்றி மேற்குலகத்தையோ தாங்கள்பயன்படுத்துவதாகக் கூறி இறுதியில் இவர்களே அந்நிய சக்திகளால்பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்களாகினர். ஆதலினால் அவர்கள் பெயரளவில்ஆரம்ப நிலையில் முன்வைத்த முற்போக்கானவை என்று கூறப்படும்சகலவற்றையும் தமிழ்த்தேசிய வாதத்தில் இருந்து வந்த பிற்போக்கானகூறுகளுடன் சமரசமாகி அதற்குள் மூழ்கிப் போகினர். இறுதியில் ஒருவரோடுஒருவர் மோதியதுடன் வழமையான தமிழ் தேசிய பாராளுமன்றசந்தர்ப்பவாதத்துடன் புதிய முகவர்களாகவும் மாற்றமடைந்தனர். இவர்கள்பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுடன் சமரசமாகிக் கொள்ளவும் செய்தனர்.

இனியொரு : நீங்கள் மேற்கூறியது போன்று பல தமிழ் இளைஞர் இயக்கங்கள் சீரழிந்து கொண்டமை போல் அல்லாது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்த் தேசியத்தை வித்தியாசமாக முன்னெடுத்து வந்தது என்று கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கான கூறுகளில் பெரும்பாலானவற்றைக் தங்களுடன்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழீழக் கோரிக்கையை பழைமைவாதப் பிற்போக்குவாத தமிழ்த்தேசியப் பாராளுமன்றத் தலைமையிடம் இருந்தேகையேற்றிருந்தனர். அதேபோன்று சகல பழைமை வாதக்கருத்தியல் நடைமுறைகளையும் உள்ளுரக் கொண்டிருந்தனர். சில விடயங்களில் குறிப்பாக சாதிய முரண்பாட்டில் தாம் முற்போக்கானவர்கள் போன்று காட்ட முற்பட்டனரேதவிர தமிழ் மக்கள் மத்தியில் அந்த முரண்பாட்டை உரியவாறு அனுகவோ தீர்க்கவோ முற்படவில்லை. அப்படிச் செய்வது தமது பலத்திற்குபலவீனமாகிவிடும் என்றே நம்பினர். மேலும் அவர்கள் இறுதிவரை நம்பியது அமெரிக்க மேற்குலக சக்திகளையேயாகும். உலகில் எங்காவது தேசியவிடுதலையை நேர்மையாக விரும்பிய மக்களும் விடுதலை இயக்கங்களும்ஏகாதிபத்தியங்களை நம்பிக்கையான நண்பர்களாகக் கொண்டுள்ளனராஎன்பதைக் காணத்தவறினர். புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரிடம் தனிப்பட்ட முற்போக்கான சிந்தனைகளோநடைமுறைகளோ ஏகாதிபத்திய எதிர்ப்போ இருந்திருக்கக் கூடும். ஆனால்தலைமையின் நோக்கிலும் போக்கிலும் தமிழ்த்தேசிய வாதத்தின் பிற்போக்கானஅம்சங்களே மேலோங்கி இருந்தன. தமிழ்த்தேசிய வாதத்தின் ஆண்ட பரம்பரை அகங்காரம் புலிகள் இயக்கத்திடம் வாரிசுரிமையாகப் பெறப்பட்டிருந்தது. இதனைத் தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கு அம்சங்களை அகங்காரமாக முன்னெடுத்த அமிர்தலிங்கத்திடமும் அவரின் தொடர்ச்சியாகப் பின்பற்றிய பிரபாகரனிடமும் காணக்கூடியதாக இருந்தது. அமிர்தலிங்கம் ஆயுதம் தரிக்காதபிரபாகரன். பிரபாகரனோ ஆயுதம் தரித்த அமிர்தலிங்கம் என்பதாகக் காண்பது பொருத்தமானதாகும். இதன் ஊடாக புலிகள் இயக்கத்தின் பிற்போக்கான தமிழ்த்தேசிய வாதத்தினை அடையாளம் காணலாம். ஆதலால் முப்பது வருடகாலத்தமிழர்போராட்ட வரலாற்றின் ஊடாகக் காணமுடிவது பாராளுமன்றப்பாதையில் இருந்து ஆயுதப் போராட்டத் தடத்திற்கு மாறிய பின்பும் பிற்போக்கான தமிழ்த்தேசியமே முனைப்பாக இருந்து வந்துள்ளது என்பதேயாகும்.

இனியொரு : தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதி நேர நம்பிக்கையான அமெரிக்காவின் தயவை எதிர்பார்த்திருந்த நிகழ்வை நீங்கள் ஏலவே கூறிய கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

தோழர் செந்திவேல் : விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும்மேற்குலகையும் அரவணைத்து நிற்கின்றது என்ற கண்ணோட்டம் முன்பிருந்தேபரவலாக இருந்து வந்த ஒன்று தான். அதற்கு அந்நாடுகளில் வசித்து வரும்தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத்தினர் ஒரு காரணமாவர். அதற்குஅப்பால் யூதர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற எண்கருபோன்றஒன்றை தமிழீழமாக உருவகப்படுத்தி அதனை அமெரிக்க மேற்குலக ஆதரவோடுவென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை புலிகளின் கொள்கை வகுப்பாளர்களிடமும் தலைமையிடமும் உறுதியானதாக இருந்து வந்தது. அதற்கான ஒரு வலுவானஆதாரமாகவே போர்க்களத்தின் இறுதி நாட்களில் அவர்கள் அமெரிக்காவின்ஓபாமா நிர்வாகத்திற்கு விடுத்த பணிவான வேண்டுகோள் அமைந்திருந்தது. இதற்கு மேல் அவர்களது அமெரிக்க விசுவாச நிலைபற்றிக் கூற அதிகம் தேவைஇல்லை.

இனியொரு : தமிழ் ஈழக் கோரிக்கை சாத்தியமற்றது. அது அந்நிய ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தை ஏற்கனவே நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைத்து வந்த நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் இது பற்றி அண்மைக்காலத்தில் மட்டும் எதிர்க் கருத்து முன்வைத்தவர்கள் அல்லர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்தியா முன்னின்று பங்காளதேசத்தை பாகிஸ்தானிடமிருந்து பிரித்தெடுத்து தனிநாடாக்கியமை போன்று இலங்கையிலும் தமிழீழத்தை உருவாக்கலாம் கருத்து நிலை உருவாக்கப்பட்டது. அதனை இந்தியாவின் மூலமாகவோ அல்லது மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்ஊடாகவோ வென்றெடுக்கலாம் என்ற பெரு நம்பிக்கை ஊட்டப்பட்டது. அவ்வேளை இதனுள் உள்ளடங்கியுள்ள அந்நிய ஊடுருவல் பற்றிய அபாயத்தைமுன்னெச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டி தமிழீழம் சாத்தியம் அற்ற ஒன்று என்றும்எடுத்துக் கூறினோம். ஆனால் தமிழ்த்தேசிய வாதத் தலைமைகள் தமதுபாராளுமன்ற ஆசனங்களை அதிகரிக்கும் நோக்கில் இன மொழி உணர்ச்சிகளைமுறுக்கேற்றி இளந் தலைமுறையினருக்கு தமிழீழக் கனவை ஊட்டினர். அவர்களும் யூதர்களையும் இஸ்ரேலையும் முன்னுதாரணமாகக் கொண்டுதமிழீழ மாயையைக் கட்டியெழுப்பினர்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கை பற்றி அன்று நீங்கள் எதிர்க்கருத்தைக் கொண்டிருந்த போதிலும் அதனை மக்கள் மத்திக்கு எந்தளவிற்கு பரப்புரை ரீதியாகக் கொண்டு சென்றீர்கள்?

தோழர் செந்திவேல் : எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழீழம் என்ற கருத்துநிலை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட சூழலில் மாக்சிச லெனினிசவாதிகளாகிய நாம் அதன் அரசியல் பிற்போக்குத் தனத்தையும் சாத்தியமற்றதன்மைகளையும் மக்கள் முன் பரந்தளவில் பரப்புரை செய்தோம். அன்று தோழர்நா. சண்முகதாசன் தலைமையிலான எமது மாக்சிச லெனினிசக் கட்சி தமிழ்மக்களிடையே கணிசமான செல்வாக்குடைய கட்சியாகக் காணப்பட்டதும் , தொழிற்சங்கப் போராட்டங்களும் காரணம். அறுபதுகளின் நடுக் கூறில் இருந்துஎழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை கட்சியின் தலைமையில் சாதியத்திற்கும்தீண்டாமைக்கும் எதிரான வெகுஜனப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்த சூழலாகும். அக்கால கட்டத்தில் தமிழீழம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தி பல கூட்டங்கள் கருத்தரங்குகள் விவாதங்களை எமது கட்சி முன்னெடுத்துவந்தது. அதில் இரண்டு சந்தர்ப்பங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும். முதலாவது விவாதம் ஆனைக்கோட்டையில் பாரதிசனசமூக நிலையத்தினர் ஒழுங்கு செய்த விவாத மேடையில் இடம்பெற்றது. தமிழீழம் சாத்தியம் / சாத்தியமில்லை என்பதே தொனிப்பொருளாகும். சாத்தியம் எனக் கூறி ..ஈழவேந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி சார்பான குழுவும், சாத்தியம் இல்லை என்பதை முன்வைத்து சி.கா.செந்திவேல் தலைமையிலான மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சார்பான குழுவும் கடுமையானவிவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குத் தலைமை தாங்கிய அவ்வூர் தமிழ்ப் பண்டிதர்ஒருவர் மேற்படி விவாதத்தில் முன்வைக்கப்பட்ட தர்க்க நியாயங்களின் படிதமிழீழம் சாத்தியமற்றது எனவாதிட்ட குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர் எனஅறிவித்தார். இதனால் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படவும்செய்தது. அடுத்த விவாதம் சுன்னாகம் சந்தை மைதானத்தில் தோழர் நா.சண்முகதாசனுக்கும் அன்றைய உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.தருமலிங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றது. இதற்கு பிரபல கல்வியாளரும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபருமான ஒரேற்றர் சி.சுப்பிரமணியம்தலைமை தாங்கினார். அவ்விவாதத்தில் தோழர் சண் தமிழீழம் என்பது தமிழ்மக்களுக்கு கண்ணாடியில் நிலாவைக்காட்டி ஏமாற்றுவது போன்றதாகும் எனச்சுட்டிக் காட்டி அதன் சாத்தியமற்ற அம்சங்களைச் கோடிட்டுக் காட்டியிருந்தார். இவ்விரண்டு விவாதங்களும் 1975ஆம் ஆண்டில் இடம்பெற்றன. அதாவது தமிழீழப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பாகவே அதன்சாத்தியமின்மையையும் அந்நிய சக்திகளின் தலையீடுகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

இனியொரு : இவ்வாறு நீங்களும் உங்கள் கட்சியும் தமிழீழக்கோரிக்கையை நிராகரித்த சூழலில் எத்தகைய தீர்வை தமிழர் பிரச்சினைக்கு முன்வைத்தீர்கள்?

தோழர் செந்திவேல் : எமது கட்சி தமிழ் மக்களின் இனமொழி பண்பாட்டுத்தனித்துவங்களை ஏற்றுக்கொண்டு பிரதேச சுயாட்சி அமைப்பின் மூலம் இனப்பிரச்சினையை வளரவிடாமல் தடுத்து நிறுத்தி தீர்வு காணலாம்என்பதையே வற்புறுத்தி வந்தோம். பிரதேச சுயாட்சிக் கொள்கையை கம்யூனிஸ்ட்கட்சி முன்பிருந்தே பின் பற்றி வந்தது. தமிழரசுக்கட்சி சமஷ்டிக்கொள்கையை முன்வைத்த காலத்தில் 1954ல் கம்யூனிஸ்ட் கட்சியின்வல்வெட்டித்துறை மாநாடு பிரதேச சுயாட்சிக் கொள்கைத்திட்டத்தை நிறைவேற்றியது. இதுவே முழுக் கட்சியின் கொள்கையாகவும் பின்பற்றப்பட்டது. அக் கருத்து பரவுவதை தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தீவிர உணர்வுப்பிரசாரத்தால் முறியடித்தன. பிரதேச சுயாட்சியை ஐக்கியப்பட்டஇலங்கைக்குள் இனவாதத்தை வளர்க்காது முன்னெடுக்க வேண்டும்என்பதையே பொதுவாகவே இடதுசாரிகள் அனைவரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பாராளுமன்ற அதிகாரத்திற்குப் போட்டியிட்டு வந்த இரண்டு பேரினவாதமுதலாளித்துவக் கட்சிகள் சிங்கள பௌத்த அத்தகைய தீர்வு ஏற்படுவதை நாசப்படுத்தியே வந்துள்ளமை தான் வரலாறாகும்.

இனியொரு : இலங்கையின் இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினையில் நேர்மையாக நடக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகிறதே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : பொத்தாம் பொதுவாக இடதுசாரிகள் என்று கூறப்படுவது வலதுசாரித் தமிழ்த்தேசியவாத சக்திகளது குற்றச் சாட்டாகும். இந்த நாட்டில்இடதுசாரி இயக்கம் பொதுவாகவே அறுபதுகளின் நடுக் கூறுவரை இனப்பிரச்சினையில் நேர்மையாகவே நடந்து வந்துள்ளன. மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட வேளையிலும் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்னும் பிற தமிழ் முஸ்லீம் மலையக மக்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளின் போதும் இம் மக்களின் பக்கமேஇடதுசாரிகள் உரத்துக் குரல் கொடுத்து வந்தனர். அவ்வேளைகளில் எல்லாம் இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கவோ ஆதரவு தரவோ தமிழர் தலைமைகள்முன்வரவில்லை. அதன் பின் இடதுசாரிகள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத வழியில் செயல்படத் தொடங்கிய காலம் முதல் தேசிய இனப்பிரச்சினையில் சறுக்கல்களையும் ஊசலாட்டங்களையும் கடைப்பிடித்து பேரினவாத சக்திகளின்முன் குரலற்றவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது நிலைப்பாட்டிற்கு அப்பால்நேர்மையான இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு அப்பால் தேசியஇனப்பிரச்சினையில் உறுதியாகவும் நேர்மையாகவும் வழிநடந்து வந்துள்ளனர்என்பது திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இலங்கையின் தேசியஇனப்பிரச்சினையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டினை கனடாவின் மின்ரொபாபல்கலைக்கழகப் பேராசிரியரான ரவி வைத்தீஸ்பரா ஆய்வு செய்த நூல் ஒன்றுபல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனியொரு : உங்களுடைய கட்சி தேசின இனப்பிரச்சினையில் முன்வைத்த கொள்கை நிலைப்பாடும் நடைமுறை வேலைகள் பற்றியும் சுருக்கமாகக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : எங்களுடைய கட்சியான புதிய ஜனநாயக கட்சி 1978ஆம்ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. அது தோற்றம் பெற்ற சூழலானது பௌத்தசிங்களப் பேரினவாதம் ஜே.ஆரின் தலைமையில் ராணுவ ஒடுக்குமுறையாக முன்தள்ளப்பட்ட காலப்பகுதியாகும். அதேபோன்று தமிழ்த் தேசியவாததலைமையிடம் இருந்து ஆயுதப்போராட்ட இளைஞர் இயக்கங்கள் தமிழீழக்கோரிக்கையை தமதாக்கி முன்னெடுத்து வந்த காலமுமாகும். இந்நிலையில்எமது கட்சி ஒடுக்கப்படும் அனைத்து உழைக்கும் மக்களின் கட்சி என்பதால்தேசிய இன ஒடுக்கு முறையையும் எதிர்த்தே நின்றது. அதேவேளைபிரிவினையின் அடிப்படையிலான தமிழீழக் கோரிக்கையை சாத்தியமற்ற ஒன்றுஎன்றும் பிற்போக்கானதென்றும் நிராகரித்துக் கொண்டது. இதன் காரணமாக தேசிய இனப்பிரச்சினையில் சுய நிர்ணய உரிமை பற்றிய வரையறைகளைவளர்த்தெடுப்பதில் தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை யதார்த்தத்தின்வாயிலாகவும் கட்சி தனது நிலைப்பாட்டை முன்வைத்து வலியுறுத்தி வந்தது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு இணைந்தபிரதேசத்தில் சுயாட்சியை கட்சி வலியுறுத்தியது. அத்தகைய சுயாட்சிஅமைப்பின் கீழ் முஸ்லீம் மக்களின் தனித்துவங்களையும் தன்னடையாளங்களையும் பேணரக் கூடிய சுயாட்சி உள்ளமைப்பை ஒருஅலகாகக் கொள்ளல் வேண்டும் என்பதையும் முன்வைத்தது. அவ்வாறேமலையக மக்களுக்கான சுயாட்சி உள் அமைப்புகளை சுயாட்சி அலகுகளாகமலையகப் பிரதேசத்தில் உருவாக்குவதையும் கட்சி முன்வைத்தது. இத்தகையசுயாட்சியானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சி தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் வலியுறுத்தி நின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

இனியொரு : இவ்விடத்தில் உங்கள் கட்சி முன்வைத்துள்ள தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருந்து வருகின்றது என்ற வரையறை எந்தளவுக்கு சரியானது என்பதை விளக்க முடியுமா?

தோழர் செந்திவேல் : தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக வளர்ச்சிபெற்றுள்ளது என்ற எமது நான்காவது தேசிய மாநாட்டின் வரையறுப்பானதுஇலங்கையின் சமூக முரண்பாடுகளினதும் அவை தோற்றுவித்த பாரியபிரச்சினைகளிலிருந்தும் பெறப்பட்ட ஒன்றாகும். அதாவது இலங்கையின் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டின் வளர்ச்சியையும்முனைப்பையும் மழுங்கடிக்கும் வகையில் இனமுரண்பாடு யுத்தமாக்கப்பட்டும் அரசியல் தீர்வு இன்றியும் தொடரப்படுகிறது. சகல முனைகளிலும் தேசியஇனப்பிரச்சினை கூர்மையாக்கப்பட்டுள்ள சூழலிலேயே அது பிரதானமுரண்பாடாகியது. வெறுமனே புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையிலான போராட்டத்தால் மட்டும் அது பிரதான முரண்பாடாகவில்லை. அவ்வாறு யாராவது பார்த்தால் தேசிய இனமுரண்பாட்டின் அடிப்படைகளை மறுத்து தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினையையும் இருப்பையும் எதிர்காலத்தையும் குறுக்கிப்பதாகும். இன்றும்கூட அதாவது யுத்தம் முடிவுற்று புலிகள் இயக்கத்தலைமை அழிக்கப்பட்டபின்பும் கூட இப்பிரதான முரண்பாடு என்பது நீடித்துவரவே செய்கின்றது. இது இன்றைய அரசியல் யதார்த்தமாகவே உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான அரசியல் தீர்வுமுன்வைக்கப்பட்டு அரசியல் அமைப்பு வாயிலாகவும் நடைமுறை வழிகளிலும்செயல்படுத்தப்படும் சூழலிலேயே தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடுஎன்ற இடத்திலிருந்து கீழிறங்கி தாழ்நிலைக்கு வர முடியும். அப்போதேஅடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு முனைப்படைந்து அனைத்துஉழைக்கும் மக்களும் தமது வர்க்க ஐக்கியத்தின் மூலம் வெகுஜனப் போராட்டப்பாதையில் முன்சென்று கொள்ள முடியும்.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பிரதான முரண்பாடாகவும் யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் வளர்ச்சிபெற மூன்று சக்திகள் காரணமாக நின்றன பற்றி நீங்கள் முன்னைய அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதுபற்றி சிறிது கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை கடந்த முப்பதுஆண்டுகளாகக் கொடிய யுத்தமாகவும் அழிகரமான ஆயுதப் போராட்டமாகவும்நீடித்து வந்ததில் மூன்று தரப்பினர் முக்கிய பங்குதாரர்கள் ஆவர். 1 – இலங்கையின் நிலவுடைமை வழிவந்த பௌத்த சிங்களப் பேரினவாதமுதலாளித்துவ மேட்டுக்குடி உயர்வர்க்க ஆளும் வர்க்க சக்திகள். 2 – தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் தொடர்ந்து முன்னெடுத்து வந்த குறுந்தேசியவாதநிலைப்பாடு. 3 – இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் அமெரிக்கமேற்குலகஏகாதிபத்திய சக்திகளும் பின்னால் இருந்து செயற்பட்டு வந்தமையாகும். அதன்மூலம் இம் மூன்று தரப்பினரும் தத்தமது வர்க்க நலன்கள் தேவைகள்தத்தமக்குரிய இருப்பு எதிர்காலம் என்பனவற்றைப் பேணிப்பாதுகாத்தும்கொண்டனர். அதேநேரம் கடந்த முப்பது வருடகால யுத்தம் போரட்டத்தில் ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள்தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் மக்களே இழப்புக்களையும் அழிவுகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையானது பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் முரண்பாடுகளை மேலும் வளர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் முஸ்லீம் உறவுகள் சீர்குலைந்துள்ளன. இவற்றுக்கான காரணங்களை எவ்வாறு இனம் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கைத்தீவில் ஏற்கனவே இனமுரண்பாட்டின் தீவிரத்தாலும் பேரினவா ஒடுக்குமுறையாலும் அதை எதிர்ப்பதாகக் கூறி நின்றனர். தமிழ்த் தேசியத்தின் குறுநிலைக் நிலைப்பாடுகளாலும் தமிழ் சிங்கள உறவுகள் உடைந்து பகைநிலையாக்கப்பட்டன. அதன்பின் தமிழ் முஸ்லீம் உறவு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. இதில் பிரித்தாளும் ஆளும் வர்க்க சூழ்ச்சி ஒருபுறம் என்றால் தமிழ்த் தேசியத்தின் குறுந்தேசிய நிலைப்பாடு குறிப்பாக தமிழீழப் புலிகளின் செயற்பாட்டால் அந்த உறவு உடைக்கப்பட்டது. பலைநிலைக்குத் தள்ளப்பட்டது என்பதே உண்மை நிலையாகும். மேலும் தமிழ் சிங்களமுஸ்லீம் மலையகத் தேசியங்கள் ஒவ்வொன்றும் தம்முள் கொண்டுள்ள பிற்போக்கான கூறுகளை முன் தள்ளியவாறே தேசிய இனப்பிரச்சினையில்கொள்கை வகுத்து நிற்கின்றன. அத்தகைய கொள்கைகள் உயர்வர்க்கவசதிபடைத்தவர்களின் பதவிகளுக்கும் சொத்து சுகபோக வாழ்வுக்குமே வசதியளிப்பனவாக உள்ளனவே அன்றி அனைத்து மக்களினதும் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அல்ல என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களின் ஊடாகத் தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் சாதிய வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது?

தோழர் செந்திவேல் : தமிழீழக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தியவர்களின்பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக வேகமான இன உணர்வை முறுக்கிக் கொண்டவசதி வாய்ப்புகள் பெற்றவர்களும்ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறைஆளவேண்டும்என முழக்கமிட்டவர்களும் வேளைக்கே புலம்பெயர்ந்துகொண்டனர். அவர்களுக்கென்ன போய்விட்டார்கள் அகப்பட்டவர்கள்நாங்களல்லோ என்ற நிலைக்கே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளானார்கள். அவர்களே தமிழீழப் போராட்டத்தின் இடி தாங்கிகளாகுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அழிவுகளையும் இழப்புக்களையும் அதிகளவிற்கு அம்மக்களே பெறவேண்டியதாயிற்று. இதனை தழிழ்த் தேசியவாதத்தின் போலி முழக்கங்களுக்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று சாதிய வர்க்க நிலைகளின் ஊடேகாண்கின்றனர்.

இனியொரு : நீங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் கூறினீர்கள். அப்படியானால் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகின்றீர்களா? அப்படி இல்லையெனில் புலம் பெயர்ந்ததன் மூலம் ஏற்பட்ட சாதக பாதக நிலை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே கூறிய பிரிவினர் தமிழர்கள்மத்தியிலிருந்து சென்ற வசதி வாய்ப்புக்கள் கொண்ட மேட்டுக்குடித் தமிழர்கள்பற்றியே அன்றி நாட்டின் ஒடுக்கு முறையினாலும் குடும்ப சூழலாலும் பல்வேறுதுன்ப துயரங்களுடன் புலம் பெயர்ந்த தமிழர்களை அல்ல என்பது புரியப்படவேண்டும். கடந்த முப்பது வருடகால யுத்த சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்தம் உறவுகளுக்கும் பொது நன்மைகளுக்கும் தாராளமாக உதவி வந்தனர். அதன்மூலம் பட்டினிச் சாவு ஏற்படும் சூழல்கள் தவிர்க்கப்பட்டமை சாதகமான அச்சமேயாகும். அதேவேளை போராட்டத்தின் பெயரால் புலப்பெயர்ந்த மக்களிடமிருந்து நிர்ப்பந்தப்படுத்திப் பெறப்பட்ட பெருந்தொகையான பணம்தேவையற்ற வழிகளில் சமூகப் பயன்பாடற்ற விதத்தில் அழிவுகரமானசெயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டமை பாதகமான அம்சமாகும். புலம்பெயர்வு தனிப்பட்ட குடும்பங்களின் உயர்சிக்கு உதவிய அதேவேளை தமிழ்த்தேசிய இனத்தின் இழப்புக்கும் எதிர்காலத்திற்குமான வேர்களை அறுபடவைத்துள்ளமை பாதகமானதாகும்.

இனியொரு : இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறைக்கு முகம்கொடுத்து வரும் முஸ்லீம் மலையக மக்களின் விடுதலைக்குத் தீர்வாக நீங்கள் எதனை முன்வைக்கின்றீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறை காரணமான தேசிய இனப்பிரச்சினை என்பது தனியே தமிழ்த்தேசிய இனத்திற்குரியபிரச்சினையாக மட்டும் நாம் பார்க்கவில்லை. முஸ்லீம் தேசிய இனத்தையும் மலையகத் தேசிய இனத்தையும் உள்ளடக்கியுள்ள பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. எனவே தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு என்பது அவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; என்பது தீர்வின் முன்நிபந்தனையாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். அத்தீர்வு நிச்சயம் சுயநிர்ணய உரிமைக்குட்பட்ட சுயாட்சித் தீர்வாகவே இருக்க வேண்டும்.

இனியொரு : சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் பேரினவாத மாயைக்குள் சிக்கியிருப்பதால் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்கிற கருத்து நிலைபற்றி உங்கள் கண்ணோட்டம் எத்தகையது?

தோழர் செந்திவேல் : சிங்கள மக்கள் அவ்வாறு பேரினவாத மாயைக்குள் சிக்குண்டு இருப்பதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் பிரதான காரணம். புவிசார் அரசியல் காரணங்களும் அவற்றை ஊதிப் பெருப்பித்து வரும் பேரினவாதசக்திகளின் பரப்புரைகளும் அடுத்த காரணமாகவுள்ளன. இந்நிலையில் இன மதமொழி நிலைகள் சார்ந்த கொள்கை நடைமுறைகளுக்கு அப்பாலான அனைவரும் இலங்கை மக்கள் இலங்கையின் சுபீட்சமும் எதிர்காலம் என்னும்அடிப்படையிலான கொள்கையினை முன்னெடுக்க வேண்டும். இது கடினமானகாரியமாகிலும் சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் புதிய அடித்தளம் பழைய பட்டறிவுகள் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது பல்லினத் தேசியமாகவும் அதனை ஏற்றுக்கொண்ட நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையும்முயற்சியும் அவசியம்.

இனியொரு : நீங்கள் கடந்த முப்பது வருட யுத்தத்திற்கு பங்களித்த மூன்று சக்திகள் பற்றி ஏலவே கூறியிருந்தீர்கள். அதில் ஒன்றான இந்திய அமெரிக்க மேற்குலக சக்திகளின் பாத்திரம் பற்றிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : அன்று 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக தமிழ்ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே அதனை வென்றெடுக்கும் பிரதானநம்பிக்கையாக இந்தியாவே கொள்ளப்பட்டது. அத்துடன் அமெரிக்க மேற்குலக ஆதரவும் அரவணைப்பும் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இக்கோரிக்கையையும் அதற்கு பின்னால் இளைஞர் சக்தி ஆயுதம் தூக்கிநிற்பதையும் வெகுவாக ஆனால் மறைமுகமாக ஆதரித்தன. அதன் மூலம் தமது நீண்டகால உட்கிடக்கைகளை நடைமுறையாக்கி அறுவடையாக்கிக்கொண்டனர். 1. தமிழர்கள் மத்தியில் அறுபதுகளில் உருவாகி வந்த இடதுசாரிப்புரட்சிகரப் போராட்ட சிந்தனையில் இருந்து தமிழ் இளைஞர்களைத் திசைதிருப்புவது. 2. தூர நோக்கில் புரட்சிகர சக்திகளாக வளரக்கூடிய தமிழ்மக்களிடையேயான இளந் தலைமுறையினரை அழிவுகளுக்கு உள்ளாக்குவது. 3. இனமோதலை உக்கிரப்படுத்தி அதன் ஊடாகத் தத்தமது பொருளாதார அரசியல்பண்பாட்டு ஆதிக்கங்களை நிலை நிறுத்துதல். 4 ஆயுத விற்பனையை அதிகரித்தல் முப்பது வருடகால யுத்தத்தை ஒருவர், சமூக நிலைசார்ந்தும்வரலாற்று நோக்கில் காண்பாரானால் மேற்கூறியவற்றை அடையாளம்காண்பதில் சிரமம் இருக்காது.

இனியொரு: சீனாவின் பங்களிப்பு அல்லது உள்நுழைதல் பற்றி என்ன கூறுகிறீர்கள்.

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையின்முப்பது வருட யுத்தத்தில் இந்திய அமெரிக்க மேற்குலக ஆதிக்கப் போட்டியேமுக்கியமானதாகும். அதே வேளை சீனா தடம்மாறிய சோஷலிசப் பொருளாதாரப்பிறள்வுகளுக்கு ஏற்ப தனது பங்கிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாகத்தன்னை வலுப்படுத்தி ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த இடத்தைத்தக்கவைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டது என்பது ஏற்கக் கூடியதாகும். ஆயுதவிற்பனை முதல் அபிவிருத்தித் திட்டங்கள் வரை ஒரு தொடர்ச்சியைச் சீனாகொண்டிருந்தது. அவை இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளின் நோக்கையும், போக்கையும் கொண்டிருந்த அளவுக்கு அல்ல என்பதே இதுவரையானமதிப்பீடாகும். ஆனால் மேற்கூறிய சீனப் பூச்சாண்டியைப் பெரிதாகக் காட்டியேதத்தமது கால்களை மிக உறுதியாக இலங்கையில் பதித்து வருகின்றன என்பதுகாணக் கூடியதேயாகும். எம்மைப் பொறுத்தவரை எத்தகைய அந்நிய ஆதிக்கசக்திகளும் எந்த வடிவில் இலங்கைக்குள் ஊடுருவல் செய்தாலும் அதனை நிராகரிப்பதும் எதிர்ப்பதுமே எமது நிலைப்பாடாகும். அதற்கு சீனாவோ அன்றி பாகிஸ்தானோ எவ்வகையிலும் விதிவிலக்காக இருக்க முடியாது.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் மாக்சிச லெனினிச அடிப்படையிலான கொள்கையும் நடைமுறையும் பற்றிக் கூறுங்கள்.

தோழர் செந்திவேல் : இவ்விடயத்தை எமது கட்சி ஏற்கனவே தனது மாக்சிசலெனினிச நிலைப்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் மூலம் தேசியஇனப்பிரச்சினையின் தீர்வுக்குரிய மார்க்கத்தையும் வகுத்து முன்வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையான தமிழர் போராட்ட வரலாற்றை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தி நான்காவது கால கட்டத்திற்கான பாதையையும் சுட்டிக் காட்டியுள்ளது. 1. பொன்னம்பலம் சகோதரர்களின் காலம்முதல் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைக்கப்பட்டு வெற்றிபெற முடியாது போன காலம்வரை முதலாவது காலகட்டமாகும். 2. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அது வெற்றியளிக்காது தமிழீழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலம் வரை இரண்டாவதுகாலகட்டமாகும். 3. தமிழீழக் கோரிக்கையை தமிழ் இளைஞர் இயக்கங்கள்ஆயுதம் போராட்டம் மூலம் வென்றெடுக்க முற்பட்டு இறுதியில் வே.பிரபாகரன்தலைமையில் போராடி அண்மையில் அழிவுற்றது வரையான முப்பதுஆண்டுகள் மூன்றாவது கால கட்டமாகும். 4. எனவே நான்காவது காலகட்டமாகஅமைய வேண்டியதும் செல்ல வேண்டியதும் தொழிலாளர்கள் விவசாயிகள்மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்தலைமையிலான கொள்கையும் வெகுஜனப் போராட்ட மார்க்கமுமேயாகும். இப்போராட்டத்தின் இலக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயநிர்ணயஉரிமை அடிப்படையிலான சுயாட்சியை வென்றெடுக்க மக்களை ஐக்கியப்படுத்திமுன் செல்வதாகவே அமைய முடியும். தமது சொந்தத் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் இவ் நான்காம் கட்டப்போராட்ட மார்க்கத்தில் சுயாட்சி என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் பிரிவினை அல்ல. அவை சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் முழு இலங்கையின் சுதந்திரத்தையும் சுபீட்சத்தையும் அடிஆதாரமாகக் கொண்டவை என்பதை சிங்கள மக்கள் மத்தியில் விளக்கிப்பதியவைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் வாழ்வுரிமைகளையும் அபிலாஷைகளையும் உள்ளடக்கி நிற்பதனையும் விளங்க வைக்க வேண்டும். இதில் சிங்கள மக்கள் மத்தியிலான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் முக்கிய பாத்திரம் வகிக்குமாறு இணைத்துச் செல்லப்பட வேண்டும். இதனையே எமது கட்சி தேசிய இனப்பிரச்சினைக்குரியதும் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டியதுமான அரசியல்பாதை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

இனியொரு : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் “நாடு கடந்த தமிழீழ அரசு ” பற்றி முன்வைக்கப்படும் கொள்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்நாடு கடந்த தமிழீழஅரசுஉருவாக்குவது என்ற எண்ணக்கரு புலம்பெயர்ந்த தமிழர்கள்அனைவரினதும் விருப்பம் அன்று. அது அங்கு வாழும் மேட்டுக்குடி ஆண்டபரம்பரையினராகத் தம்மைக் கருதும் உயர் வர்க்கத்தினரின் ஆழ்மனவிருப்பேயாகும். இது யூத சியோனிச வழியில் இஸ்ரேலை உருவாக்கியசிந்தனை மரபுக்கு உட்பட்டதாகும். அவ்வாறாயின் அத்தகைய எண்ணக்கருவிற்கு ஏகாதிபத்திய அரவணைப்பும் உள்ளார்ந்த சதி ஆலோசனைகளும் இருக்கவே செய்யும். இத்தகைய போக்கு இலங்கைத் தமிழர்களை அபாயகரமானநிலைக்கு மீண்டும் தள்ளிக் கொள்வதாக அமைவதுடன் நியாயமான அவர்களதுசுயாட்சிக்கான போராட்டத்தையும் அதன் மூலமாகக் கிடைக்கக் கூடியநியாயமான அரசியல் தீர்வையும் இல்லாமல் செய்யக் கூடியதுமாகும். தமிழ்மக்கள் தமது விடுதலைக்கான எதிர்காலக் கொள்கையையும் போராட்ட மார்க்கத்தினையும் தமது சொந்த மண்ணில் கடந்த காலப் பட்டறிவின் ஊடாகத் தீர்மானிக்க வேண்டுமே தவிர புலம் பெயர்ந்த மேட்டுக்குடித் தமிழ்க்கனவான்களும் கனவாட்டிகளும் தீர்மானித்து திணிக்கக் கூடிய ஒன்றாக. இருக்கமுடியாது. சாத்தியமற்ற தமிழீழக் கோரிக்கைக்காகத் தமிழ் மக்கள் கடந்த முப்பதுஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் வரையான உயிர்களை இழந்துள்னர். சுமார் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் விடுதலையின் பெயரால் சகல இயக்கங்களினதும் போராளிகளாகி மடிந்து கொண்டனர். பல ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். ஐந்து லட்சம் பேர்வரை ஏற்கனவே இடம்பெயர்ந்து சொந்த இடங்களை இழந்துள்ளனர். தற்போது மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி முகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். முப்பது வருடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியுள்ள தமது வாழ்வாதாரச்சொத்துக்களை இழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் கணவன்மாரையும், பிள்ளைகளையும் இழந்து பெண்களின் அவலக்குரல்கள் இன்னும் வடக்குகிழக்கில் கேட்ட வண்ணமே உள்ளன. அங்கவீனர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் பேராக உள்ளனர். இத்தனை அழிவுகளின் அவலங்களும்தாக்கங்களும் இரத்தக்கறைகளும் மாறவோ அல்லது மாறுவதற்கான எவ்வித தீர்வோ திட்டமோ ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த அழிவுக்கு வழிகோலும்ஒன்றாகவேநாடுகடந்த தமிழீழ அரசைபுலம்பெயர்ந்த சிலர் முன்வைக்கிறார்கள். இதனை இவர்கள் ஒருமுறை இந்த மண்ணில் வந்து வவுனியாவிலோ வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்கள் மத்தியில் முன்வைப்பார்களானால் என்ன இடம்பெறும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

இனியொரு : இப்பேட்டியின் முடிவாக நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் கொள்கைகளை தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏற்று செயல்படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழர்கள் மத்தியில் இறுகிப்போன பழைமைவாதச்சூழலில் நிலவுடைமை வழிவந்த முதலாளித்துவ உயர் வர்க்கச் சிந்தனையின்தாக்கம் அரசியலிலும் இருந்து வருவது உண்மையேயாகும். இருப்பினும்அவர்கள் மத்தியில் சுரண்டப்படும் உழைக்கும் மக்களும் சாதியரீதியில்அடக்கப்படும் சமூக நீதி மறுக்கப்படும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். அத்தகைய மக்கள் மத்தியில் ஏற்கனவே எமது கட்சிக்கு பரவலான ஆதரவுத்தளம்இருந்து வருகிறது. அதனை விஸ்தரித்து எமது கொள்கைகளை அனைத்து மக்கள் மத்திக்கும் எடுத்துச் செல்வோம் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறது. எனினும் இது கடுமையான எதிர் நீச்சலும் சவாலுமாகும். சமூக முரண்பாடுகளை சரியான படி அடையாளம் கண்டு உரிய கொள்கைகள் மூலம் போராட்டமார்க்கத்தை முன்வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒருமாக்சிச லெனினிசக் கட்சி என்ற நிலையில் எமக்குரியதாகும். அதனை ஏற்பதும்முன்னெடுத்துச் செல்ல முன்வருவதும் மக்களைப் பெறுத்த விடயமாகும் இதில் தமிழ் இளைஞர் இயக்கங்கள் போன்றோ புலிகள் இயக்கம் போன்றோ நாம்மக்களுடன் நடந்து கொள்ள முடியாது. அது நமது மாக்சிச லெனினிசவழிமுறையும் அல்ல நெறிமுறையும் ஆகாது. பொறுமையாகவும் நிதானமாகவும் மக்கள் மத்தியில் கடந்த கால அனுபவாயிலாகவும் பட்டறிவுகளின் ஊடாகவும் வெகுஜன அடிப்படையிலான அரசியல் வேலைகளை முன்னெடுத்துச் செல்வோம் இதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

(நன்றி: தோழர் செந்திவேல் & இனியொரு இணையத்தளம்)