Showing posts with label புலிகள். Show all posts
Showing posts with label புலிகள். Show all posts

Sunday, August 27, 2023

சாதியால் பிரிந்த முன்னாள் போராளிக் குடும்பம்

 

இது ஓர் உண்மைக்கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு புலிப் போராளிகள் குடும்பத்தின் கதை. கணவன், மனைவி இருவரும் முன்பு போராளிகளாக இருந்த காலத்தில் இயக்கத்திற்குள்ளே சாதி கடந்த கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவன் உயர்த்தப்பட்ட சாதியையும், மனைவி தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. மனைவி தன்னிடமிருந்த நகைகளை விற்று அல்லது அடைவு வைத்து கணவனை சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

கணவன் விடுமுறைக்கு வந்த காலத்தில், அவரது பெற்றோர் சாதியை காரணமாக காட்டி பிரித்து விட்டனர். அவருக்கு உடனடியாக தமது சாதிக்குள் ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைத்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி விட்டனர். இந்த விடயங்கள் யாவும் மனைவிக்கு தெரியாமல் மறைக்கப் பட்டன. தற்போது அவர் கணவரது உதவியுமின்றி தனியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப் படுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இது தான் புலிகள் சாதியை ஒழித்த (ஒளித்த) இலட்சணம். சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வராமல், புலிப் போராளிகளுக்கு மட்டும் கலப்பு மணம் செய்து வைப்பதால் சாதி ஒழியப் போவதில்லை. உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் தொடங்கவேயில்லை.

Sunday, August 06, 2023

ஈழப்போரில் "உரிமை கோரப் படாத" குண்டுவெடிப்புகள்!

ஈழப்போர் தொடங்கிய காலங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகரில் வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தியது புலிகள் அல்ல. அது ஈழப் புரட்சி அமைப்பு(EROS) எனும் இன்னொரு இயக்கம். 1984 ம் ஆண்டு ஒபரோய் ஹொட்டேல் தொடங்கி பல குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள். அவை யாவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். கொழும்பு மத்திய தபால் நிலைய குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட அளவு பொது மக்களும் பலியாகி இருந்த போதிலும், EROS தான் செய்த எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பேற்று உரிமை கோரி வந்தது. 


அப்போது புலிகள் இது போன்ற தாக்குதல்களை முற்றாக நிராகரித்து வந்தனர். "நீங்கள் இலங்கை முழுவதையும் தறிழீழமாக கேட்கிறீர்களா?" என்று கிண்டல் அடித்தார்கள். அந்த காலகட்டத்தில் இயக்கங்களுக்கு ஏதாவதொரு திரைப்படத்தின் பெயர் பட்டப்பெயராக வைக்கப் பட்டது. அவ்வாறு EROS இயக்கத்தை "தூரத்து இடிமுழக்கம்" என்று அழைத்தனர். அதாவது தமிழ் மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அதே நேரம் எந்த பாதிப்பும் இல்லாத இடத்தில் யுத்தம் செய்கிறார்களாம். அதை அன்று புலிகளும் வழிமொழிந்தனர்.
 

பல வருடங்களுக்கு பின்னர், குறிப்பாக 1991 இலிருந்து புலிகளும் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடத்த தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடவை 1987 ம் ஆண்டு கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் குண்டு வெடித்தது. பொது மக்கள் 100 பேரளவில் பலியாகினர். அன்று யாரும் அந்த குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை. இருப்பினும் அதை புலிகளே செய்ததாக நம்பப் படுகிறது. EROS தான் செய்யவில்லை என்று உடனடியாக மறுத்திருந்தது. 1987 ம் ஆண்டு வடக்கில் பிற இயக்கங்களை தடைசெய்து விட்டு புலிகள் மட்டுமே போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். EROS மீது தடை இல்லாத போதிலும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை வெகுவாக குறைத்து விட்டிருந்தனர்.

Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Tuesday, June 06, 2023

டிஸ்கோ நடனத்தை தடைசெய்த புலிகள் & தாலிபான்!

யாழ் குடாநாட்டில், எண்பதுகளின் தொடக்கத்தில், இளைஞர்கள் மத்தியில் டிஸ்கோ நடனக் கலாச்சாரம் பரவி இருந்தது. சிறிய கிராமங்களில் கூட இரவில் மின் விளக்கொளியில் நடனப் போட்டிகள் நடக்கும். 

பெரும்பாலும் தென்னிந்திய திரையிசைப் பாடலுக்கு தான் அபிநயம் பிடிப்பார்கள். தனியாகவும் குழுவாகவும் ஆடுவார்கள். போட்டியில் வெல்லும் இளைஞருக்கு அல்லது குழுவுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பேபி ஷாலினி என்ற ஒரு 8-9 வயது சிறுமி மிகப் பிரபலமான நடனத் தாரகையாக இருந்தார். அவரது நடனத்தை பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அதை விட தனிப்பட்ட முறையில் சில இடங்களில் திருமண, பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் டிஸ்கோ நடன நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு இந்த டிஸ்கோ நடனம் ஈழத்தமிழ் மக்களது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

அப்போது யாழ் குடாநாடு முழுவதும் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லா இயக்கங்களும் சமமான அதிகாரத்துடன் இருக்கையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. யாரும் மக்களின் கலாச்சார நிகழ்வுகளில் தலையிடவில்லை. ஒரு கட்டத்தில், 1986 ம் ஆண்டு, புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அதற்குப் பிறகு தான் கலாச்சாரக் காவலர் வேலையில் இறங்கினார்கள். "இந்திய சினிமாக்களால் ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரம் சீரழிவதாகவும்", குறிப்பாக டிஸ்கோ நடன நிகழ்வுகள் "சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என அறிவித்து விட்டு டிஸ்கோ நடன நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதித்தனர். அதற்குப் பிறகு, யுத்தம் முடியும் வரையில் அங்கே எந்தவொரு நடன நிகழ்வும் நடக்கவில்லை. பிரபல நடனத் தாரகை பேபி ஷாலினியும் அகதியாக வெளியேறி படகு மூலம் இந்தியாவுக்கு சென்று விட்டார். 

இது நடந்து ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தனர். அவர்களும் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் டிஸ்கோ நடன நிகழ்வுகளை தடைசெய்தனர். அதற்கும் அவர்கள் "இந்திய சினிமாக்களால் ஆப்கான் கலாச்சாரம் சீரழிவதாக" ஒரு காரணம் சொல்லித் தான் தடையுத்தரவு போட்டார்கள். தாலிபான் மதத்தின் பெயரால் செய்ததை, புலிகள் இனத்தின் பெயரால் செய்தனர். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, பொதுவாக மக்கள் யாரும் நடனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இனத்தினதும், மதத்தினதும் பெயரால் நடக்கும் அரசியல் தான் மக்களின் கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

Friday, November 20, 2020

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்!

 

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது! சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளுக்கும் சைவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! 

அதற்கான விளக்கத்தை சுருக்கமாக ஆதாரங்களுடன் தருகிறேன்:

1.
 புலிகளின் மாவீரர் வாரம் என்பது போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதுடன், அவர்களது தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும் உள்ளடக்கியது. அதே மாதிரி ஷியா முஸ்லீம்கள் மாவீரர் மாதம் என்று நினைவுகூர்வார்கள். அது சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர்(10 அக்டோபர் 680) ஈராக்கில் நடந்த போரில் மரணமடைந்த ஹுசைன் தலைமையை பின்பற்றிய போராளிகளை நினைவுகூரும் சடங்கு ஆகும். ஷியாக்களை பொறுத்த வரையில் அது ஒரு விடுதலைப் போர். அந்த மாவீரர் மாதம் ஷியாக்களின் தலைவர் ஹுசைனின் பிறந்தநாளை உள்ளடக்கியது. மாவீரர் மாதத்தின் இறுதி நாள் அஷுரா என்று அழைக்கப் படுகிறது. அஷுரா அன்று, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஷியா முஸ்லீம்களும், ஹுசைனின் விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்வார்கள். (இந்த விடயத்தில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் வித்தியாசம் உள்ளது. சன்னி முஸ்லிம்களை பொறுத்தவரையில், இது மோசேஸ் தனது மக்களை இஸ்ரேல் என்ற வாக்களிக்கப் பட்ட பூமிக்கு அழைத்துச் சென்ற நாள்.)


2.
 புலிகளைப் பொறுத்தவரையில் மாவீரர் வாரத்தின் இறுதியில் வரும் நவம்பர் 27 ஒரு விசேட தினம். அதே மாதிரி ஷியாக்களுக்கு முஹரம் மாதத்தின் பத்தாவது நாளான அஷூரா ஒரு விசேட தினம். முஹரம் மாதம் அனைத்து இஸ்லாமியருக்கும் புனிதமானது. முஹரம் என்ற சொல் ஹராம் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்த படியால், அந்த புனித மாதத்தில் பல விடயங்கள் தடுக்கப் பட்டுள்ளன. புலி ஆதரவாளர்களும் இன்று வரை அதே சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

3.
இந்து/சைவ மத சம்பிரதாயத்திற்கு முரணாக புலிகள் தமது இறந்த போராளிகளை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள். அந்த இடம் "மாவீரர் துயிலும் இல்லம்" என அழைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் மாவீரர் துயிலும் இல்லம் புலிக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள் உணர்வு பொங்க நினைவுகூர்வார்கள். இந்த வழக்கம் ஈரான் அல்லது லெபனானில் இருந்து வந்திருக்க வேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் ஈராக்குடன் போர் நடந்தது. அப்போது போரில் கொல்லப் பட்ட வீரர்கள் தனியாக ஓரிடத்தில் புதைக்கப் பட்டனர். அது பார்சி மொழியில் "மாவீரர் துயிலும் இல்லம்" என்றே அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் அந்த நடைமுறையை பின்பற்றியது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் லெபனானுக்கு சென்று பார்க்கலாம். முன்பு புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் என்னென்ன சடங்குகள் நடந்தனவோ அதெல்லாம் ஹிஸ்புல்லாவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பதை நேரில் காணலாம். மாவீரர்களின் உருவப் படங்கள் கட் அவுட்களாக பொது இடங்களில் வைக்கும் வழக்கமும் பொதுவானது.

4.
புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் அதன் முக்கிய உறுப்பினர்கள் லெபனானில் பயிற்சி பெற்றனர். ஆகவே புலிகளுக்கு லெபனான் பற்றியோ, ஷியா முஸ்லிம்களின் சடங்கு பற்றியோ எதுவும் தெரியாது என்று வாதிட முடியாது. இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப் படவும் தேவையில்லை. உலகில் ஒருவர் இன்னொருவரை பார்த்து பின்பற்றுவது வழமையானது. 

5.
மாவீரர்களை புனிதர்களாக வழிபடும் நடைமுறை கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே பாரம்பரியத்தை பின்பற்றும் சகோதர மதங்கள்.) இன்றைக்கும் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் புனித பிரான்சிஸ், புனித மார்ட்டின், புனித நிக்கொலாஸ் ஆகிய தினங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக, ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக தம்முயுரை அர்ப்பணித்த புனிதர்கள். கிறிஸ்தவ மத வரலாற்றில் இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாவீரர்கள் இருந்துள்ளனர். அவர்களது நினைவாக, நவம்பர் 1 அன்று, "அனைத்து புனிதர்களின் தினம்" நினைவுகூரப் படுகிறது.

Monday, June 29, 2020

ஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை

அது ஒரு "புலி ஆதரவுக் குடும்பம்." ஆனால், புலிகளை "நிபந்தனையுடன்" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் முன்பு வன்னியில் வாழ்ந்த காலத்தில், குடும்பத் தலைவியின் தந்தை யாரோ ஒருவரை சாதிப்பெயர் சொல்லி ஏசிய குற்றத்திற்காக புலிகள் அவருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுத்திருந்தனர். அது மட்டுமே அவர்களுக்கு புலிகள் மீதிருந்த விமர்சனம்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், நான் ஐரோப்பா வந்த புதிதில் அந்தத் தமிழ்க் குடும்பத்துடன் பழக்கம் உண்டானது. என்னுடன் நல்ல நட்பாக இருந்தனர். காலப்போக்கில் சாதியம் குறித்தும் என்னுடன் குறித்தும் வெளிப்படையாக உரையாடினார்கள். அப்போது தான் வன்னியில் புலிகள் வழங்கிய தண்டனை பற்றி விவரித்தார்கள். பச்சை மிளகாய் சாப்பிடக் கொடுத்த தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான தண்டனை. ஆனால், அவர்களது ஆதிக்க சாதி மனநிலையானது, அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. "இது மிகவும் கொடுமையான தண்டனை, மனித உரிமை மீறல், புலிகளின் சர்வாதிகாரப் போக்கு..." என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஒருவேளை, பல வருட காலம் நிலக்கீழ் சிறைக்குள்  அடைத்து வைத்திருந்தால், அவர்கள் இப்போது தீவிர புலி எதிர்ப்பாளர்களாக காட்சியளித்திருப்பார்கள்.

நான் புலிகளின் தண்டனையை நியாயப்படுத்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்களால் சாதி சொல்லி ஏசுவதை ஒரு குற்றமாக கருத முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தண்டனையானது அவர்களது எண்ணத்திலும், நடத்தையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. அவர்கள் புலிகளின் செயலை மட்டுமே குறை கூறினார்களே தவிர, மனதளவில் சாதிவெறி குறையாதவர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் தம்மை சாதியால் உயர்த்தப்பட்டவர்களாக நம்பினார்கள். அதற்கு காரணம் கேட்ட பொழுது, "நல்ல சாதி" எனப்படுபவர்கள் சுத்தமானவர்கள் என்றும், "கெட்ட சாதி" எனப்படுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும், "முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை" என்றும் வாதாடினார்கள். "நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதே நோக்கம்" என்று தீண்டாமைக்கு ஒரு  "விஞ்ஞான விளக்கம்" கொடுத்து நியாயப் படுத்தினார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த உலகறிவு இல்லாதவர்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது வழமையானது. நாம் தான் அனுசரித்து போக வேண்டும்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் யார் எந்த சாதி என்று தெரியாத நிலைமை. எடுத்த உடனே நேரடியாக கேட்பது அநாகரிகமாக கருதப்பட்டது. ஆனால், தமிழர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டிய நிர்ப்பந்தம். தாம் (சாதி)"தெரியாதவர்களின்" வீடுகளுக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் தரும் தேநீரை குடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிப்பார்கள். சிலநேரம் கூடவே "தங்களது ஆள்" ஒருவரும் வந்திருந்தால் அவரை குடிக்க சொல்லிக் கொடுப்பார்களாம். இந்த விடயங்களை அவர்களாகவே என்னிடம் கூறினார்கள்.

சாதி பார்த்த காரணத்தால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இந்தக் குடும்பத்தினர் போன்றவர்கள் தான். மிகச் சரியாக சொன்னால், சாதி அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும் வர்க்க ரீதியாக தாழ்ந்திருந்த சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள். புலிகளும் இவர்களைத் தான் பிடித்து தண்டித்தார்கள். இப்படியான தண்டனைகள் பலரது மனதில் சாதிய வன்மத்தை அதிகரித்ததே தவிரக் குறைக்கவில்லை. சாதிப்பிரச்சினையை தனிநபர் சார்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தது தான் புலிகள் விட்ட தவறு.

அறிவூட்டல், பரஸ்பர நட்புறவு, கூட்டு உழைப்பு, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிப்பிரச்சினையை பெருமளவு ஒழிக்கலாம். ஒடுக்கும் சாதியை சேர்ந்த சாதிய உணர்வாளர்கள் பலர், ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்களுடனான பரஸ்பர தொடர்பாடல்களுக்கு பின்னர் மனம் திருந்தி இருக்கிறார்கள். இதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அறியாமையில் இருந்து விடுபட்டவர்கள், ஏனையோரையும் திருத்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த,  சாதிவெறி பிடித்த நிலவுடைமையாளர்கள், அல்லது பணக்காரர்களை புலிகள் என்றைக்குமே தண்டித்ததில்லை. அதிகம் பேசுவானேன். ஐரோப்பாவில் புலிகளின் பெயரில் தீவிரமாக இயங்கிய செயற்பாட்டாளர்கள் கூட அந்தரங்கத்தில் சாதி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படியானவர்கள் குறித்தும் புலிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் புலிகள் கேட்ட போதெல்லாம் பணம் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

ஆதிக்க சாதியை சேர்ந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தான் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். புலிகளைப் பொறுத்த வரையில் அது குறித்து எந்த விதமான புரிதலும் இருக்கவில்லை. அதனால் தான் சாதியம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் சாதியம் என்ற மரத்தை அகற்றுவதென்றால் அதை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். ஆனால் புலிகள் கிளைகளை வெட்டி விட்டு சாதியம் ஒழிந்து விட்டது என்றனர்.

நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கும், சாமானியர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாம் இங்கே நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை தான் எதிர்க்க வேண்டும். அது தான் மிகவும் ஆபத்தானது.

சாதிப் பிரச்சினையை மறுப்பதற்காக, "புலிகள் சாதி பார்க்கவில்லை" என்பதற்கு பலர் காட்டும் "ஆதாரங்கள்" யாவும் சிறுபிள்ளைத்தனமானவை. அவை பெரும்பாலும் சாமானியர்களின் சாதிவெறி தொடர்பானவை. புலிகள் தாம் சிங்கள பேரினவாத அரசை மட்டுமே எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். அதன் அர்த்தம் சாதாரண சிங்களவர்கள், இனவாதம் பேசினாலும் கூட, அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி சாதாரண வெள்ளாளர்கள் சாதியவாதம் பேசினாலும் அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் ஒருநாளும் சாதாரண மக்களுடன் சண்டைக்கு போகக் கூடாது. சாமானியர்கள் இனவெறி/சாதிவெறி கருத்துக்களை தெரிவித்தால், அதை புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் புலிகளிடம் அத்தகைய புரிதல் இருந்துள்ளதா என்பது கேள்விக்குறி. இதனை "புலிகள் சாதி  பார்க்கவில்லை" வக்காலத்து வாங்குவோரே, தாம் அறியாமல் புலிகளின் புரிதலின்மையை  வெளிப்படுத்தி  விடுகின்றனர். உதாரணத்திற்கு, முன்பு புலிகளின் நிர்வாகத்தில் சாதிப்பெயர் சொல்லி திட்டிய காரணத்திற்காக ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள், பச்சை மட்டையால் அடித்தார்கள், பச்சை மிளகாய் உண்ணக் கொடுத்தார்கள் என்று பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
இத்தகைய தண்டனைகளால் சாதியத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் அறியாமையால் செய்த தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வித் தகைமைக்கும், அறிவுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாத சமுதாயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட சாதி சொல்லித் திட்டுவதை கண்டிருக்கிறோம். அவர்கள் யாரும் அறிவுக்காக படிக்கவில்லை. உத்தியோகம் பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தவர்கள். அப்படியானவர்களை மீள் படிப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக பட்ச தண்டனையாக இருக்க வேண்டும். தமது பெற்றோரையும் திருத்தக் கூடிய வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சமதர்ம கல்வி புகட்டுவதும் ஒரு தீர்வாகலாம்.

இதற்கு நாம் Black Lives Matter போராட்டத்தில் இருந்து பாடம் கற்கலாம். அமெரிக்காவில் உள்ள நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவெறியை தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் வெள்ளையின மக்களும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். அத்தகைய நிலைமை அறுபதுகளில் யாழ் குடாநாட்டில் இருந்தது. அப்போது நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி சக்திகளுக்கு வெள்ளாளர்களும் ஆதரவாக நின்றனர். போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தனர். இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் Black Lives Matter போராட்டம் சாமானிய வெள்ளையர்களின் நிறவெறிக் கருத்துக்களுக்காக அவர்களை பகைக்கவில்லை. நாங்கள் எப்போதும் சாதாரண மக்களை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். சாதாரண வெள்ளையர்கள் காட்டும் நிறவெறியை அவர்களது பிள்ளைகளே எதிர்த்துப் போராடுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளால் அறிவு  புகட்டப் பட்டு Black Lives Matter போராட்டத்தில் இணைந்து கொண்ட வெள்ளையினப் பெற்றோர் பலருண்டு. அதே மாதிரி யாழ் வெள்ளாள குடும்பங்களில் நிலவும் சாதிவெறிக் கருத்துக்களை இளைய தலைமுறையினர் கேள்விக்குட்படுத்தி திருத்த வேண்டும். எமது அரசியல் போராட்டம் எப்போதும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சாதிவெறியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நிலப்பிரபுத்துவ கால எச்சங்களான குடிமை சாதித் தொழில் புலிகளின் காலத்திலும் இருந்ததாகவும், அதைப் புலிகள் ஒழித்து விட்டதாகவும் சிலர் வாதாடுகிறார்கள். அவர்கள் குடிமைத் தொழில் எனக் கருதுவது மரண வீடு போன்றவற்றில் செய்யப்படும் சடங்குகளை தான். அதைப் புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மை தான். எனினும் குடிமைத் தொழில் முறை பற்றிய புலிகளின் அறிவு போதாமை காரணமாக "சாதியில் குறைந்ததாக" சொல்லப்படும் தொழில்களை தான் தடுத்தார்கள். "சாதியில் உயர்ந்தவர்கள்" செய்து வந்த குடிமைத் தொழில் அப்படியே இருந்து வந்தன. அவற்றை "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால், அதைச் சுற்றி பல்வேறு குடிமைச் சாதியினர் தொழில் செய்வதைக் காணலாம். கோயிலில் பூசை செய்யும் ஐயர் முதல் மடைப்பள்ளி சமையல்காரர்கள் வரை சாதி அடிப்படையிலானதொழில்களை செய்து வந்தனர். தமிழர் கலாச்சாரம் என்பது, இந்துக் கலாச்சாரமாக இருப்பதால் இன்றைக்கும் அவை தொடர்கின்றன. உண்மையில் புலிகள் அதை ஒழிக்க முனைந்திருந்தால் அங்கு ஒரு பெரும் சமூகப் புரட்சியே நடந்திருக்கும். ஆதிக்க சாதியில் உள்ள பிற்போக்காளர்கள் புலிகளை எதிர்த்து கலகம் செய்திருப்பார்கள். "புலிகள் தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்..." என்று போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அன்று புலிகள் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை எதிர்க்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

உண்மையில் புலிகள் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடியதாக பெருமை பேசிய புலிகளால், உள்ளூரில் இருந்த வெள்ளாள சாதிவெறி அமைப்பை எதிர்க்க முடியவில்லை. அதற்கான துணிச்சலும் அவர்களிடம் இருக்கவில்லை. காரணம் மிக எளிது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலிகளுக்கு நிதியுதவி செய்து வந்த ஆதிக்க சாதி சமூகத்தை எதிர்த்தால் தமது இருப்பு கேள்விக்குரியதாகி விடும் என நினைத்தார்கள். அதற்கான சாத்தியம் இருக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது.

Thursday, June 25, 2020

புலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...


விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட பத்திரிகையில் இருந்து ஒரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதாவது சாதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள படியால், அந்தக் கிராமங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்தால் சாதி ஒழிந்து விடும் என்பது புலிகளின் எண்ணமாக இருந்துள்ளது. இந்த பத்திரிகைத் துணுக்கில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் பூம்புகார் மாதிரிக் கிராம திட்டம் விவரிக்கப் படுகின்றது.

இது தவிர்க்கவியலாது சிறிலங்கா அரசு முன்னெடுத்த கிராமிய அபிவிருத்தி திட்டங்களை நினைவுபடுத்துகிறது. பல கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளன. அதனால் இலங்கையில் வறுமை ஒழிந்து விட்டதா, அல்லது நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதா என்பது நிச்சயமாக கேட்கப் பட வேண்டிய கேள்வி. மேலும் போர் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சே கூறிய, "தமிழர்களின் பிரதேசம் அபிவிருத்தி அடைந்தால் நாட்டில் இனப்பிரச்சினை மறைந்து விடும்" என்ற கூற்றையும் இது நினைவுபடுத்துகிறது. சிறிலங்கா அரசானாலும், விடுதலைப் புலிகள் என்றாலும் வலதுசாரி தாராளவாத பொருளாதார அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களால் இதற்கு மேல் வேறொன்றும் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் பலர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்து விட்டனர். அறுபதுகள், எழுபதுகளில் இந்த மாற்றம் தெளிவாக உணரப்பட்டது. குறிப்பாக இலவசக் கல்வியை பயன்படுத்தி, கஷ்டப்பட்டு படித்து மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அரச அதிகாரிகளாக வந்த ஏராளம் பேரை உதாரணம் காட்டலாம். இப்படியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்தில் இருந்தும் பலர் வசதியாக வாழ்கின்றனர். அவர்களில் ஒரு elite பிரிவினர், தமது மத்தியதர வர்க்க அடிப்படை காரணமாக தமிழரசுக் கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். அது இன்று TNA ஆதரவு வரை தொடர்கிறது.

சிறிமாவோ காலத்தில் கொண்டுவரப்பட்ட கள்ளுத்தவறணை கூட்டுறவு சங்கம் காரணமாக எத்தனையோ மரமேறும் தொழிலாளர்கள் கைகளில் தாராளமாக பணம் புழங்கியது. இந்த தகவலை காலஞ்சென்ற எழுத்தாளர் இரகுநாதன் தனது பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி எனும் நூலில் பதிவு செய்துள்ளார். அதே மாதிரி கரையோரங்களில் மீனவர் சங்கங்கள் மூலமும், வன்னியில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டும் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்தவர்கள் ஏராளம். அத்துடன் கராஜ் போன்ற சுயதொழில் செய்து முன்னேறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பலருண்டு. மேற்குறிப்பிட்ட பிரிவினர் தனிப்பட்ட முறையில் காணி, பூமி, நகை, நட்டு வாங்கி சொத்துக்களையும் சேர்த்துள்ளனர்.

அப்படியானால் ஏன் இன்னமும் சாதிப்பிரச்சினை ஒழியவில்லை? உலகில் எந்த நாடாகிலும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும். பெரும்பாலானோர் வறுமையில் துன்பப் பட வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் முற்றுமுழுதாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

இனப்பிரச்சினை மட்டுமல்ல, சாதிப்பிரச்சினையும் ஒரே அரசியல் பொருளாதார அடித்தளத்தை கொண்டவை தான். அடிப்படையில் இரண்டுமே வர்க்கப் பிரச்சினை தான். இலங்கையில் சிங்கள மொழி பேசும் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதால் தான், அதைப் பாதுகாப்பதற்காக சிங்கள பேரினவாத அரசியல் கட்டமைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் சாதியமும் அப்படித் தான். சாதிய படிநிலையில் மேன்நிலையில் உள்ள வெள்ளாளர்களில் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமது செல்வத்தை மற்றவர்களுடன் பங்கிட விரும்பாத காரணத்தால் தான் இன்று வரைக்கும் சாதிப்பிரச்சினை தொடர்கிறது.

வட மாகாணத்தில் பெருமளவு நிலங்கள் எந்த சாதியின் ஆதிக்கத்தில் இருக்கின்றன? எந்த சாதியை சேர்ந்தவர்களில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் சாதிப் பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து விடும். துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளிடம் அப்படியொரு தூரப் பார்வை இருக்கவில்லை. அதனை சயந்தன் கொடுத்த பத்திரிகை ஆதாரமே நிரூபிக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து அறிந்து வைத்திருந்த புலிகளுக்கு, வெள்ளாள சாதியவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம். ஒடுக்குபவர்கள் யார் என்பதிலும், ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதிலும் புலிகளிடம் தெளிவான அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லை என்பதை இங்குள்ள பத்திரிகை ஆதாரம் எடுத்துக் காட்டுகின்றது.

(படத்திற்கு நன்றி: Sayanthan Kathir)

Thursday, May 14, 2020

புலிப் போராளிகள் ஏழ்மையில் வாழ்ந்த ஓலைக் கொட்டில் வீடுகள்

(படத்திற்கு நன்றி: யோ. புரட்சி)
ஈழப்போர் முடிந்த பின்னர் கவனிக்காமல் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் அவல நிலை குறித்து பலரும் பலரும் கவலை தெரிவித்து விட்டனர். இது குறித்து வட இலங்கையில் வாழும் சமூக சேவை ஆர்வலரான யோ.புரட்சி தனது பேஸ்புக் சுவரில் பகிர்ந்த தகவல்:
//ஒரு பிள்ளை பெண் மாவீரர், ஆண்பிள்ளை கரும்புலி மாவீரர். தனித்து வாழும் விதவைத் தாயார். நீர் வார்த்த குடும்பம் கிணறுமின்றிய நிலை.//

(இது தொடர்பாக அவர் சில படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறி அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

 ******

உங்களில் பலர் அறிந்திராத புலிப் போராளிகள் பிறந்து வளர்ந்த வீடுகள் இப்படித் தான் இருக்கும். எந்த வசதியுமற்ற ஓலைக் குடிசைகள். அதாவது, தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் இன்னொரு இனமான ஏழைகள் வாழும் வீடுகள். அவர்களது அவலம் எப்போதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ் இன உணர்வு அரசியல் பேசும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

இவர்களது தியாகத்தை காட்டி வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள், தாம் "உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டதாக" பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். "உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்..." என்று அடித்த கொள்ளையை நியாயப் படுத்தும் குட்டி பூர்ஷுவா கும்பல் ஒன்று இப்போதும் உண்டு. முதலாளித்துவத்தை ஆராதிக்கும் அந்த வெட்கங் கெட்ட பிழைப்புவாத கும்பல் இலங்கையிலும் உண்டு. தமது பூர்ஷுவா வர்க்க நலனை தமிழ்த் தேசியம் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

"உழைத்து முன்னேறலாம் என்றால் எதற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு உழைக்கும் ஏழைகள் இன்னமும் இது போன்ற குடிசைகளில் வாழ்கிறார்கள்?" என்று கேட்டால் பதில் வராது. அது "கர்ம வினைப் பயன்... கடவுள் அப்படி சிலரை படைத்து விட்டார்..." என்று மதத்தை இழுத்து போதனை செய்வார்கள்.

முதலாளித்துவ சுரண்டல் பற்றிய பேச்செடுத்தால், "கம்யூனிசம் பேசாதே!" என்று வாயடைக்க வைப்பார்கள். இவர்கள் பிரச்சாரம் செய்வது மாதிரி கம்யூனிசம் இன்னும் காலாவதியாகவில்லை. அது இன்னமும் ஈழத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது. உழைத்து உருக்குலைந்த ஏழைத் தமிழ் மக்கள் மனத்தில் இருக்கிறது. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்.

இந்த ஏழைகள் ஈழப் போருக்கு முன்னர் எப்படி வாழ்ந்தனரோ இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். அவர்கள் உழைத்தும் முன்னேற முடியாத காரணத்தால் தான் புலிப் போராளிகளாக மாறி மாவீரர்கள் ஆனார்கள். தமிழீழம் என்ற சமநீதி கொண்ட இன்னொரு உலகம் சாத்தியமே என்று கனவு கண்டார்கள்.

அவர்கள் கண்ட தமிழீழக் கனவு இன்னொரு தேசியம் அல்ல, சோஷலிசம். பாவம், தமிழ் தேசிய அடையாளத்தின் பின்னால் தம்மை மறைத்துக் கொள்ளும் தமிழ் பூர்ஷுவாக்கள் எப்போதும் போன்று முதலாளிகளுக்கே அடிவருடப் போகிறார்கள் என்ற உண்மை அந்த அப்பாவிப் போராளிகளுக்கு தெரியாது. "சுதந்திரத்" தமிழீழத்திலும் மீண்டும் தாம் ஏழைகளாக ஒடுக்கப் படுவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம், புலித் தேசியம் பேசும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, ஏழைகள் எனும் இன்னோர் இனம் தமக்குள் ஒடுக்கப் படுவது தெரியாது. தெரிந்தாலும் எந்த உணர்வும் இன்றி உதாசீனப் படுத்துவார்கள். "தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் பாட்டாளி வர்க்கமா? அப்படி எதுவும் கிடையவே கிடையாது..." என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.

"இந்த ஏழைகள் தான் எமக்காக போராடினார்கள்." என்றால், "ஓ அவர்கள் தமிழர்கள்." என்று இன முத்திரை குத்தி மறைக்கப் பார்ப்பார்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற 99% போராளிகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராட சென்றதற்கு காரணம் வர்க்க உணர்வு என்ற உண்மையை மறைப்பார்கள். அதற்கு இன உணர்வு என்ற சாயம் பூசி மகிழ்வார்கள். இன முரண்பாடுகள் அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் என்பதை புரியும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் அறிவும் போதாது.

"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். 

மடிப்பு குலையாத சட்டையுடன் உத்தியோகம் பார்க்கும் குட்டி பூர்ஷுவா தமிழ்த் தேசியர்கள், தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டு, மீண்டும் இன விடுதலையின் பெயரால் அப்பாவி ஏழைகளை பலி கொடுக்கலாமா என்று பார்க்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்பினால் கோமாளித்தனமாக இருக்கும்.

"குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன். குனியக் குனியக் குட்டுகிறவனும் மடையன்." என்றொரு பழமொழி உள்ளது. இந்த ஏழைத் தமிழர்கள் எப்போதுமே பூர்ஷுவா வர்க்க நலன் காக்கும் வேள்விக்கு பலி கொடுப்பதற்காக வளர்க்கப் படும் ஆடுகளாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் ஆறறிவுள்ள உழைக்கும் வர்க்க மனிதர்கள். அடுத்த கட்ட ஆயுதப் போராட்டம் இன விடுதலைக்கானது அல்ல. அது வர்க்க விடுதலைக்கானது.


- கலையரசன்
 14.05.2020

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Sunday, April 08, 2018

"டட்லி மசாலா வடை சுட்ட கதை" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்

பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் எடுத்துக் காட்டி, கம்யூனிசம் என்பது ஒரு பூச்சாண்டி என்று அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல.

அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் ஈடுபடுகின்றது.

ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், கம்யூனிசமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாக்கி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. LTTE என்ற புலிகள் கூட, ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள்.

அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம்.

ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர்.

அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது " சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஈழத்தமிழர்கள் "அரசியலற்ற விலங்குகள்" என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் இடதுசாரி, வலதுசாரி பிரிவினைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதும் வலதுசாரி அரசியல் தான். தொண்ணூறுகளில் உருவான, தோற்றவர்களுக்கு (இடதுசாரி) எதிரான வென்றவர்களின் (வலதுசாரி) மேலாதிக்க அரசியல்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் இடதுசாரி தலைவர்களை பற்றி கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். ஐம்பதுகளில் உருவான, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன, அன்றைய காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வாக்கோடு இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக தோன்றிய வலதுசாரிக் கட்சிகள்.

"சிங்களவர்களில் இடதுசாரிகள் உண்டு... தமிழர்களில் கிடையாது..." என்ற தவறான கருத்து, தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் காலத்தில் தான் உருவாக்கப் பட்டது. சிங்கள வலதுசாரிக் கட்சிகளும், சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய இதே மாதிரியான பிரச்சாரம் செய்து வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழர்களில் இடதுசாரிகள் இருக்கலாம். ஆனால், "சிங்களவர்கள் இடதுசாரி/வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்ட விலங்குகள்" என்பது அவர்களது வாதம்.

புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஒரு முக்கியமான உண்மையை வேண்டுமென்றே மறைப்பார்கள். எப்போது புலிகள் தமிழீழ அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்களோ, அப்போதே அங்கே இடதுசாரி, வலதுசாரி பிரிவினையும் தோன்றி விட்டது. அரசியல் பிரிவில் வெளிப்படையாக தெரிந்தது. போராளிகள் மத்தியில் மறைமுகமாக இருந்தது.

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் புலிகளை ஆதரித்து வந்த படியால், அவர்களது பிரசுரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விநியோகிக்கப் பட்டன. ஈழத்தில் புதிய தலைமுறையினர் மத்தியில், இடதுசாரி, பெரியாரிய கருத்துக்கள் பரவுவதற்கு, தவிர்க்க முடியாமல் புலிகளும் ஒரு காரணமாக இருந்தனர்.

எண்பதுகளில் புலிகளுக்கு ஆதரவான பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட தளிர் தொடர்ந்தும் இடதுசாரி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளியீடுகள் அடிக்கடி பிடல் காஸ்ட்ரோவையும், கியூப புரட்சியையும் மேற்கோள் காட்டி எழுதி வந்தன. யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர், போராளிகள், ஆதரவாளர்களின் மனோதிடத்தை உயர்த்துவதற்கு, லெனின்கிராட் முற்றுகை பற்றிய தகவல்கள் உதவின.

தமிழ் தேசியமும், இடதுசாரியமும் முரண்பாடான கொள்கைகள் அல்ல.

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன. இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: India Responsible for Dividing Sri Lanka, Training LTTE Terrorists - JR former SL President 1985) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

Thursday, December 22, 2016

ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (ஐந்தாம் பாகம்)

மேட்டுக்குடி சிந்தனை கொண்ட மத்திய தர வர்க்கத்தினர், வலதுசாரி அரசியல் கொள்கையை ஆதரிப்பது அதிசயமல்ல. இடதுசாரிகளை தமது எதிராளிகளாக கருதி வெறுப்பதும் அவர்களது அடிப்படை வர்க்கக் குணாம்சம். அதற்காக, "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அளவுக்கதிகமானது. வலதுசாரிகளுக்குப் பிடிக்காதது எல்லாம், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பிடிக்கக் கூடாது என நினைப்பது அபத்தமானது.

அந்தக் காலகட்டத்தில் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக இருந்தார். விடுதலைப் புலிகள், மற்றும் புளொட் ஆகியவற்றின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எயர் லங்காவுக்கு சொந்தமான அவ்ரோ விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், பத்திரிகைகளில் செய்திகளை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்,அதிலிருந்து விலகி ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தார். மாணவர்கள் அவரை "துரோகி" என்று சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று எமது அரசியல் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே தீர்மானித்தது. அவர்கள் யாரையெல்லாம் துரோகி என்றார்களோ, நாங்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகினோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அஹிம்சா வழியில் போராடும் மிதவாதக் கட்சியாகக் காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல. வலதுசாரி கூட்டணித் தலைவர்கள் இனவாதமும் பேசினார்கள், தீவிரவாதத்தையும் ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி இயங்கிய காலம் ஒன்றிருந்தது. இரண்டு தரப்பிலும் அது தொடர்பான புரிந்துணர்வு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டது. புலிகள் தனியாக இயங்கினாலும், அரசியல் கொள்கைகள் யாவும் கூட்டணியிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டவையாக இருந்தன.

ஆயுதப் போராட்ட அரசியல் தனது கையை விட்டுப் போவதை கூட்டணி விரும்பவில்லை. தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலிகள் பிரிந்து சென்று விட்ட படியால், கூட்டணியினர் இன்னொரு ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர். இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, சில இளைஞர்களை திரட்டி தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது சம்பந்தமான திட்டங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து வள்ளுவன் என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். எதிர்பாராத விதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வள்ளுவன் கைது செய்யப் பட்டார். அதனால், கூட்டணி ஆயுதக் குழு அமைக்கும் யோசனையும் கைவிடப் பட்டது.

வள்ளுவன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற படியால், எனக்கு இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அந்தளவுக்கு ஈழப் போராட்டத்திற்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது ஒரே வகுப்பில் கூடப் படித்த மாணவன் ஒருவனின் அண்ணா தான் ஒபரோய் தேவன். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவனான ஒபரோய் தேவன், தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற சிறிய இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1982 ம் ஆண்டளவில் புலிகளால் காரணமின்றி சுட்டுக் கொல்லப் பட்டார். புலிகள் அதனை தவறுதலாக நடந்த விபத்து என்றார்கள்.

யாழ் இந்து விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவன், எனக்கு சீனியரான திலீபன். (உண்ணாவிரதமிருந்த திலீபன் அல்ல.) வன்னியில் கண்டாவளையை சேர்ந்தவர். அந்தக் காலத்தில், ஓரளவு வசதியான, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ் இந்துக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.

திலீபன் படிக்கும் காலத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்தவர். எங்களை மாதிரி சாதாரண பத்திரிகைச் செய்திகளை வாசித்து விட்டு கூட விவாதிப்பதில்லை. அந்தளவுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவர். அவர் பின்னர் கேடில்ஸ் என்ற பெயரில் புலிகளின் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக வந்திருந்தார்.

சாவகச்சேரி பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் கட்டுமானத்தில் கேடில்சின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அரசியல் ஆர்வமற்ற அப்பாவியான திலீபன், மிகக் குறுகிய காலத்திற்குள் எவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட கேடில்ஸ் ஆக மாறினான் என்பது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இவரும் வேறு சில மூத்த புலி உறுப்பினர்களும், கைதடியில் தவறுதலாக நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப் பட்டனர்.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொதுக் கூட்டங்கள் நடத்தின. அதற்கென பயிற்றுவிக்கப் பட்டவர்கள், கிராமம் கிராமமாக சென்று வந்தனர். பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து சமாளிப்பதற்கு அசாத்தியமான திறமை வேண்டும். சாதாரணமான பாமர மக்களிடம் இருந்தும் பலதரப் பட்ட கேள்விகள் எழும்.

ஒரு தடவை, சரசாலை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஈரோஸ் இயக்கத்திற்காக சின்ன பாலா கூட்டம் நடத்த வந்திருந்தார். அங்கு இருந்தவர்களும் சாதாரணமான ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் தான். அப்போது யாழ்நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான். அனுபவம் மிக்க போராளியான சினபாலாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமிருந்த காலத்தில் இயங்காமல் நின்று விட்ட, தமிழ் இளைஞர் பேரவை பற்றிய பல தகவல்களையும் அப்போது தான் அறிந்து கொண்டேன்.

ஈரோஸ், ஈபிஆர்எல்ப், புளொட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள், தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. (அப்போது புலிகளும் மார்க்சிச-லெனினிசம் பேசினார்கள்.) அவை எல்லாம் வழமையான தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தான். 

எது எப்படி இருப்பினும், இடதுசாரி- தேசியவாத இயக்கங்கள் நடத்தும் பொதுக்   கூட்டங்களில் தான் அதிகமான அரசியல் விவாதங்கள் நடக்கும். அன்றைய காலங்களில் தமிழ் உழைக்கும் வர்க்த்தினர் எழுப்பிய அரசியல் கேள்விகள் சில: 
- இந்தியா படை அனுப்பி தமிழீழம் வாங்கித் தருமா?
- சிறிலங்கா அரசு அமெரிக்க சார்புடையது என்பதால் சோவியத் யூனியன் தமிழருக்கு உதவுமா? 
- இலங்கையில் ஏற்கனவே இருக்கும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்? 
- ஜேவிபி உடன் தந்திரோபாய கூட்டு வைக்க முடியுமா?
- எங்களது போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பார்களா? 

மேற்படி கேள்விகளுக்கு ஒவ்வொரு இயக்கமும் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தன. சாதாரண பாமர மக்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்புணர்வு எந்தளவு முற்போக்காக இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இங்கே அவற்றைக் குறிப்பிட்டேன். பிற்காலத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை பரப்பி வந்தன. அந்தக் கருத்தியல் ஆக்கிரமிப்பின் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது.

எந்த இனமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தெரிந்தால், அந்த உயிர் இழப்புகளுக்காக பரிதாபப் பட்ட சிங்களவர்களை கண்டிருக்கிறேன். அரசும், ஊடகங்களும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால் தான் இந்த உணர்வு வெளித் தெரிவதில்லை. அதே மாதிரி, சிங்களக் கிராமங்களிலும் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களுக்காக இரக்கப் பட்ட தமிழர்களையும் கண்டிருக்கிறேன். "அவர்களும் எம்மைப் போன்ற மக்கள் தானே?" என்பது சாதாரணமான தமிழ் உழைக்கும் மக்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம்: "என்னது? ஜேவிபியுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து போராடுவதா? ஐயையோ! அது ஹராம் ஆச்சே? அபச்சாரம்! அபச்சாரம்!!" என்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளலாம். அது தமிழ் மேட்டுக்குடியினரின், வலதுசாரி  அரசியல் கண்ணோட்டம். அதற்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. 

பிற்காலத்தில் ஜேவிபி ஒரு வலதுசாரிக் கட்சியாகி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் இனவாதம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. அது பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கிகள், "ஜேவிபி ஒரு இனவாதக் கட்சி" என்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரிந்த விடயம். 

ஆனால், ஜேவிபி யும் அதே பாணியிலான அரசியலை முன்னெடுத்தது என்பது பலருக்குத் தெரியாத விடயம். அதாவது, "புலிகள் ஒரு இனவாத இயக்கம்" என்று தென்னிலங்கையில் ஜேவிபி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இது போன்ற வழமையான தேர்தல் அரசியலுக்கும், அதற்குமப்பால் உள்ள மக்கள் அரசியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு. வட, கிழக்கு மாகாணங்களில் புலிகள் உட்பட பல ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால், அரச படைகள் நிலைகுலைந்து போயிருந்தன. அதே காலட்டத்தில், தென்னிலங்கையில் ஜேவிபி யும் ஆயுதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதனால், நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படையினர் எல்லோரும் துப்பாக்கிகள் வைத்திருக்குமளவிக்கு பலமாக இருக்கவில்லை. அரசு வடக்கில் தோன்றிய கிளர்ச்சியை நசுக்குவதற்காக படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை புதிதாக படையில் சேர்த்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெருமளவு ஜேவிபி உறுப்பினர்களும் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவு ஜேவிபி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை, அன்று பல ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இருந்தன. இது தொடர்பாக ஏதோ ஒரு இயக்கம், புளொட் என்று நினைக்கிறேன், பகிரங்கமாக துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது. அன்று தமிழ் மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதற்காக அவர்கள் கூறிய காரணம் யதார்த்தமானது.

பெரும்பான்மை சிங்கள இனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசை எதிர்த்துப் போரிட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் தமிழீழம் காணலாம் என்பது ஒரு கடினமான விடயம். அதை சாத்தியமாக்குவதற்கு சிறந்த தந்திரோபாயம் அவசியம். வடக்கில் ஈழ விடுதலை இயக்கங்களும், தெற்கில் ஜேவிபியும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்தால், சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது.

அன்றிருந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இது தான். புலிகளுக்கும், ஜேவிபிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், தமிழீழம் வேண்டுமென்றால் இது போன்ற தந்திரோபாய கூட்டு அவசியமல்லவா? தென்னிலங்கையில் ஜேவிபியின் போராட்டம் வெற்றி பெற்று அரசு கவிழுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் தமிழீழம் பிரகடனம் செய்வது சாத்தியமாகும் அல்லவா? 

இந்த நட்புறவை பேணுவதற்காக, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. சாதாரண தமிழ் மக்கள் ஜேவிபியையும், புலிகளையும் அரச இயந்திரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரே மாதிரியான கெரில்லா இயக்கங்களாகவே கருதினார்கள். அரச ஒத்தோடிகளான தமிழ் வலதுசாரிகள், ஜேவிபி வெறுப்புப் பிரச்சாரம் மூலம் ஈழக் கோரிக்கையை தோற்கடித்தனர் என்பதே உண்மை! எந்த சந்தர்ப்பத்திலும், தமிழ் வலதுசாரிகள் சிறிலங்கா  அரசைக் கவிழ்க்க நினைக்கவில்லை. அதுவும் மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஈழப் போர் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக காய் நகரத்தி விடுதலைப் புலிகளை தனது வலைக்குள் விழ வைத்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுடன் மோத வைத்தது. இதன் மூலம், "இந்தியா வந்து ஈழம் பெற்றுத் தரும்" என்று காத்திருந்த தமிழ் வலதுசாரிகள் தலையில் மண்ணள்ளிப் போட்டது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4.  ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?

Saturday, September 24, 2016

ஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்


ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான். 

ஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.

அப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.

அந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

புளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான "வங்கம் தந்த பாடம்" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

புளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

மார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.

அது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

இந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று "தீப்பொறி அமைப்பு" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.

அப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.

புளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.

மேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.

அந்தக் காலத்தில், "மாத்தையா குறூப்" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.

இருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். "வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.

முள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.

ஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.

ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், "Lebensraum" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.

மகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.

Saturday, August 20, 2016

திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்



"புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பி இருந்தார். அதில் கலந்து கொண்ட மணியரசனோ, தியாகுவோ சரியான பதிலை வழங்காமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள். (முள்ளிவாயிக்கால் : முன்னும்,பின்னும் 06.06.16 | கேள்வி நேரம் | நியூஸ் 7 தமிழ்)

ஆரம்ப காலத்தில் புலிகள் சோஷலிசத் தமிழீழம் கேட்ட கதைகளை பற்றி தியாகு பேசினார். அதே நேரம், புலிகளின் தலைமையில் இருந்தவர்கள் கூட்டம் கூடி, சோஷலிசம் தற்போது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டதாக மணியரசன் கூறினார். (உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.)

நேரடியாக கேள்விக்கு வருவோம். "புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" புலிகள் எண்பதுகளில் சோஷலிசம் பேசினாலும், நடைமுறையில் உள்நாட்டு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வந்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், "de facto தமிழீழம் (தமிழீழ நடைமுறை அரசு)" என்ற பெயரில் பொருளாதார உற்பத்தி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

புலிகளின் வர்த்தக நிறுவனமான "மக்கள் கடை", எல்லாக் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டது. அதிலே குறைந்த விலையில் பொருட்கள் விற்கப் பட்ட படியால், தனியார் வியாபாரிகள் பலர் நஷ்டப் பட்டு கடையை மூடி விட்டார்கள். சில வருடங்களின் பின்னர், மக்கள் கடைகளிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.

அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு முற்றாக நின்று போனது. அதனால் விவசாயிகளும், மீனவர்களும், உள்ளூர் சந்தையில் விற்றது போக, எஞ்சியவற்றை புலிகளின் கொள்வனவு நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் புலிகளின் கொள்வனவு நிலையங்கள் தமிழீழம் முழுவதும் விற்பனை செய்தன.

அதைத் தவிர, சில கடத்தல்காரர்கள் தடை செய்யப் பட்ட பொருட்களை தென்னிலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்றார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய படியால் மண்ணெண்ணெய் பெருமளவு விற்பனையானது. மோட்டார் சைக்கிள்கள் கூட மண்ணெண்னையில் தான் ஓடின.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "சிங்களவனிடம் மண்ணெண்ணெய் வாங்கி, தமிழனிடம் பத்து மடங்கு விலைக்கு விற்று" பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. மகேஸ்வரன் என்ற கடத்தல்காரன் கோடீஸ்வரனாக வந்த கதை அனைவருக்கும் தெரிந்த படியால், அவருக்கு "மண்ணெண்ணெய் மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. அவர் பிற்காலத்தில், புலிகளின் ஆதரவுடன், பேரினவாத யு.என்.பி. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

2002 ம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், "புலிகள் தாராள பொருளாதாரவாத, திறந்த சந்தைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக" அறிவித்திருந்தார்.

பிரச்சினை என்னவென்றால், புலிகள் மேற்குலக நாடுகளை திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே அப்படி அறிவித்திருந்தனர். நடைமுறையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் தமது இருப்பிற்கே ஆபத்தானது என்பதை உணர்ந்திருந்தனர்.

தலைவர் பிரபாகரன் அறிவித்த போதிலும், எந்தவொரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது சிறிலங்கா நிறுவனமோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவில்லை. கொக்கோகோலா(அல்லது பெப்சி கோலா?) நிறுவனம் மட்டுமே, "வரி" என்ற பெயரில் பெருந்தொகை பணம் கொடுத்து வியாபாரம் செய்ய முன்வந்தது. (சாதாரண தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்து கொக்கோ கோலா குடித்திருப்பார்கள் என்று இங்கே சொல்லத் தேவையில்லை.)

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ் குடாநாட்டில் புலிகளின் சமாந்தரமான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைத்து வணிக நிறுவனங்களும் புலிகள் கேட்ட வரியைக் கொடுத்து வந்தன. அன்றைய சந்திரிகா அரசும், சிங்கள இராணுவமும் அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதில், அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்து வந்தது. அது எந்தளவு உறுதியானது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தருணம் ஒன்று வந்தது. அரசு சுகாதாரத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், தாதியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. யாழ் போதனா மருத்துவமனைக்கு சென்ற புலிகள், அனைவரும் ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு வேலைக்கு திரும்பா விட்டால், அவர்களுக்குப் பதிலாக தமது இயக்கத்தில் உள்ள மருத்துவர்கள், தாதியரை வேலைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

புலிகளின் இந்த முடிவால் சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. எத்தனை வருடம் எதிரிகளாக போரிட்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு பகையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதைத் தான் வர்க்க ஒற்றுமை என்று சொல்வார்கள்.

*****

கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், (தமிழர்களாகிய) நாங்கள் ஏன் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும்?

இந்தக் கேள்வியை அமெரிக்க நலன்களை ஆதரிக்கும் வலதுசாரி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

பனிப்போரின் முடிவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால், சர்வதேச மூலதனத்தினை எதிர்த்து நிற்க முடியாமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருந்தது. இன்றும் கூட, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள், தமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகின்றன.

கியூபாவும், வியட்நாமும், பொருளாதார ஒதுக்குதலில் இருந்து மீள்வதற்கு முயற்சித்தன. அதனால், குறிப்பிட்ட அளவு உள்நாட்டு சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பெயர் Joint Venture முறை. அதாவது, ஒரு நிறுவனத்தில் அரசு 51% முதலீட்டை செய்யும். மிகுதி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு. இன்றைக்கும் அந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழான கலப்புப் பொருளாதாரம் நிலவுகின்றது.

2009 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு முன்னர் நடந்தவற்றை முற்றாக மறந்து விட்டுப் பேசுகின்றார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான "அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல்", 9/11 தாக்குதலுக்குப் பிறகு மிகவும் மோசமான கட்டத்தை வந்தடைந்தது.

நாங்கள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டுப் பேசுகின்றோம். நோர்வேயும், மேற்குலக நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டது. அன்டன் பாலசிங்கமும் அதனை ஒத்துக் கொண்டார்.

நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியதை எடுத்துக் காட்டினார்கள். இந்தோனேசியாவில் தனிநாடு கோரிய, அச்சே விடுதலை இயக்கம் சுனாமிக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. அவற்றை உதாரணமாகக் காட்டி, புலிகளும் அந்த வழிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். உண்மையில் அது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பதை, 2009 ஆண்டு நடந்த துயர நிகழ்வுகள் நிரூபித்தன.

ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்து விட்டார். சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தருணத்தில், "புலிகள் மீண்டும் போருக்கு சென்றால், இலங்கை அரசுடன் சேர்ந்து ஒடுக்கப் படுவார்கள்." என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே மிரட்டினார். இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மறைமுகமாக எச்சரித்தார்.

அப்போதும் கூட, பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், போரில் வீர மரணத்தை தழுவிக் கொள்ள தயாராக இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சரித்திரமாகி விட்டன.

****** 


போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத அமெரிக்கப் படையினர், தென்னிலங்கையில் வெள்ள அழிவுகளால் பாதிக்கப் பட்ட வீடுகளை புனரமைக்க வந்தனர். 

2009 யுத்தம் நடந்த நேரம், இந்த அமெரிக்கப் படையினர் எங்கே போயிருந்தார்கள்? குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா? அவர்களின் கண்களுக்கு தமிழர்கள் மனிதர்களாகவே தெரியவில்லையா? 

எங்கே நமது "தமிழ் தேசியவாதிகள்"? ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை? "தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே? அமெரிக்க டாலர்கள் வாயை அடைக்கப் பண்ணி விட்டனவா? 

அமெரிக்கர்கள் வெளிப்படையாக பாரபட்சம் காட்டினாலும், "அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி வழங்கும்" என்று, உங்களை நீங்களே ஏமாற்றுக் கொள்வதுடன் தமிழ்மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள். சூடு சொரணை இல்லாத அடிமைகளுக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?