Thursday, December 22, 2016

ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (ஐந்தாம் பாகம்)

மேட்டுக்குடி சிந்தனை கொண்ட மத்திய தர வர்க்கத்தினர், வலதுசாரி அரசியல் கொள்கையை ஆதரிப்பது அதிசயமல்ல. இடதுசாரிகளை தமது எதிராளிகளாக கருதி வெறுப்பதும் அவர்களது அடிப்படை வர்க்கக் குணாம்சம். அதற்காக, "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அளவுக்கதிகமானது. வலதுசாரிகளுக்குப் பிடிக்காதது எல்லாம், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பிடிக்கக் கூடாது என நினைப்பது அபத்தமானது.

அந்தக் காலகட்டத்தில் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக இருந்தார். விடுதலைப் புலிகள், மற்றும் புளொட் ஆகியவற்றின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எயர் லங்காவுக்கு சொந்தமான அவ்ரோ விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், பத்திரிகைகளில் செய்திகளை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்,அதிலிருந்து விலகி ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தார். மாணவர்கள் அவரை "துரோகி" என்று சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று எமது அரசியல் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே தீர்மானித்தது. அவர்கள் யாரையெல்லாம் துரோகி என்றார்களோ, நாங்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகினோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அஹிம்சா வழியில் போராடும் மிதவாதக் கட்சியாகக் காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல. வலதுசாரி கூட்டணித் தலைவர்கள் இனவாதமும் பேசினார்கள், தீவிரவாதத்தையும் ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி இயங்கிய காலம் ஒன்றிருந்தது. இரண்டு தரப்பிலும் அது தொடர்பான புரிந்துணர்வு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டது. புலிகள் தனியாக இயங்கினாலும், அரசியல் கொள்கைகள் யாவும் கூட்டணியிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டவையாக இருந்தன.

ஆயுதப் போராட்ட அரசியல் தனது கையை விட்டுப் போவதை கூட்டணி விரும்பவில்லை. தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலிகள் பிரிந்து சென்று விட்ட படியால், கூட்டணியினர் இன்னொரு ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர். இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, சில இளைஞர்களை திரட்டி தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது சம்பந்தமான திட்டங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து வள்ளுவன் என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். எதிர்பாராத விதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வள்ளுவன் கைது செய்யப் பட்டார். அதனால், கூட்டணி ஆயுதக் குழு அமைக்கும் யோசனையும் கைவிடப் பட்டது.

வள்ளுவன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற படியால், எனக்கு இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அந்தளவுக்கு ஈழப் போராட்டத்திற்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது ஒரே வகுப்பில் கூடப் படித்த மாணவன் ஒருவனின் அண்ணா தான் ஒபரோய் தேவன். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவனான ஒபரோய் தேவன், தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற சிறிய இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1982 ம் ஆண்டளவில் புலிகளால் காரணமின்றி சுட்டுக் கொல்லப் பட்டார். புலிகள் அதனை தவறுதலாக நடந்த விபத்து என்றார்கள்.

யாழ் இந்து விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவன், எனக்கு சீனியரான திலீபன். (உண்ணாவிரதமிருந்த திலீபன் அல்ல.) வன்னியில் கண்டாவளையை சேர்ந்தவர். அந்தக் காலத்தில், ஓரளவு வசதியான, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ் இந்துக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.

திலீபன் படிக்கும் காலத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்தவர். எங்களை மாதிரி சாதாரண பத்திரிகைச் செய்திகளை வாசித்து விட்டு கூட விவாதிப்பதில்லை. அந்தளவுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவர். அவர் பின்னர் கேடில்ஸ் என்ற பெயரில் புலிகளின் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக வந்திருந்தார்.

சாவகச்சேரி பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் கட்டுமானத்தில் கேடில்சின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அரசியல் ஆர்வமற்ற அப்பாவியான திலீபன், மிகக் குறுகிய காலத்திற்குள் எவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட கேடில்ஸ் ஆக மாறினான் என்பது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இவரும் வேறு சில மூத்த புலி உறுப்பினர்களும், கைதடியில் தவறுதலாக நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப் பட்டனர்.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொதுக் கூட்டங்கள் நடத்தின. அதற்கென பயிற்றுவிக்கப் பட்டவர்கள், கிராமம் கிராமமாக சென்று வந்தனர். பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து சமாளிப்பதற்கு அசாத்தியமான திறமை வேண்டும். சாதாரணமான பாமர மக்களிடம் இருந்தும் பலதரப் பட்ட கேள்விகள் எழும்.

ஒரு தடவை, சரசாலை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஈரோஸ் இயக்கத்திற்காக சின்ன பாலா கூட்டம் நடத்த வந்திருந்தார். அங்கு இருந்தவர்களும் சாதாரணமான ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் தான். அப்போது யாழ்நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான். அனுபவம் மிக்க போராளியான சினபாலாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமிருந்த காலத்தில் இயங்காமல் நின்று விட்ட, தமிழ் இளைஞர் பேரவை பற்றிய பல தகவல்களையும் அப்போது தான் அறிந்து கொண்டேன்.

ஈரோஸ், ஈபிஆர்எல்ப், புளொட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள், தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. (அப்போது புலிகளும் மார்க்சிச-லெனினிசம் பேசினார்கள்.) அவை எல்லாம் வழமையான தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தான். 

எது எப்படி இருப்பினும், இடதுசாரி- தேசியவாத இயக்கங்கள் நடத்தும் பொதுக்   கூட்டங்களில் தான் அதிகமான அரசியல் விவாதங்கள் நடக்கும். அன்றைய காலங்களில் தமிழ் உழைக்கும் வர்க்த்தினர் எழுப்பிய அரசியல் கேள்விகள் சில: 
- இந்தியா படை அனுப்பி தமிழீழம் வாங்கித் தருமா?
- சிறிலங்கா அரசு அமெரிக்க சார்புடையது என்பதால் சோவியத் யூனியன் தமிழருக்கு உதவுமா? 
- இலங்கையில் ஏற்கனவே இருக்கும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்? 
- ஜேவிபி உடன் தந்திரோபாய கூட்டு வைக்க முடியுமா?
- எங்களது போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பார்களா? 

மேற்படி கேள்விகளுக்கு ஒவ்வொரு இயக்கமும் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தன. சாதாரண பாமர மக்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்புணர்வு எந்தளவு முற்போக்காக இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இங்கே அவற்றைக் குறிப்பிட்டேன். பிற்காலத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை பரப்பி வந்தன. அந்தக் கருத்தியல் ஆக்கிரமிப்பின் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது.

எந்த இனமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தெரிந்தால், அந்த உயிர் இழப்புகளுக்காக பரிதாபப் பட்ட சிங்களவர்களை கண்டிருக்கிறேன். அரசும், ஊடகங்களும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால் தான் இந்த உணர்வு வெளித் தெரிவதில்லை. அதே மாதிரி, சிங்களக் கிராமங்களிலும் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களுக்காக இரக்கப் பட்ட தமிழர்களையும் கண்டிருக்கிறேன். "அவர்களும் எம்மைப் போன்ற மக்கள் தானே?" என்பது சாதாரணமான தமிழ் உழைக்கும் மக்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம்: "என்னது? ஜேவிபியுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து போராடுவதா? ஐயையோ! அது ஹராம் ஆச்சே? அபச்சாரம்! அபச்சாரம்!!" என்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளலாம். அது தமிழ் மேட்டுக்குடியினரின், வலதுசாரி  அரசியல் கண்ணோட்டம். அதற்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. 

பிற்காலத்தில் ஜேவிபி ஒரு வலதுசாரிக் கட்சியாகி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் இனவாதம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. அது பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கிகள், "ஜேவிபி ஒரு இனவாதக் கட்சி" என்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரிந்த விடயம். 

ஆனால், ஜேவிபி யும் அதே பாணியிலான அரசியலை முன்னெடுத்தது என்பது பலருக்குத் தெரியாத விடயம். அதாவது, "புலிகள் ஒரு இனவாத இயக்கம்" என்று தென்னிலங்கையில் ஜேவிபி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இது போன்ற வழமையான தேர்தல் அரசியலுக்கும், அதற்குமப்பால் உள்ள மக்கள் அரசியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு. வட, கிழக்கு மாகாணங்களில் புலிகள் உட்பட பல ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால், அரச படைகள் நிலைகுலைந்து போயிருந்தன. அதே காலட்டத்தில், தென்னிலங்கையில் ஜேவிபி யும் ஆயுதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதனால், நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படையினர் எல்லோரும் துப்பாக்கிகள் வைத்திருக்குமளவிக்கு பலமாக இருக்கவில்லை. அரசு வடக்கில் தோன்றிய கிளர்ச்சியை நசுக்குவதற்காக படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை புதிதாக படையில் சேர்த்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெருமளவு ஜேவிபி உறுப்பினர்களும் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவு ஜேவிபி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை, அன்று பல ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இருந்தன. இது தொடர்பாக ஏதோ ஒரு இயக்கம், புளொட் என்று நினைக்கிறேன், பகிரங்கமாக துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது. அன்று தமிழ் மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதற்காக அவர்கள் கூறிய காரணம் யதார்த்தமானது.

பெரும்பான்மை சிங்கள இனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசை எதிர்த்துப் போரிட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் தமிழீழம் காணலாம் என்பது ஒரு கடினமான விடயம். அதை சாத்தியமாக்குவதற்கு சிறந்த தந்திரோபாயம் அவசியம். வடக்கில் ஈழ விடுதலை இயக்கங்களும், தெற்கில் ஜேவிபியும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்தால், சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது.

அன்றிருந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இது தான். புலிகளுக்கும், ஜேவிபிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், தமிழீழம் வேண்டுமென்றால் இது போன்ற தந்திரோபாய கூட்டு அவசியமல்லவா? தென்னிலங்கையில் ஜேவிபியின் போராட்டம் வெற்றி பெற்று அரசு கவிழுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் தமிழீழம் பிரகடனம் செய்வது சாத்தியமாகும் அல்லவா? 

இந்த நட்புறவை பேணுவதற்காக, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. சாதாரண தமிழ் மக்கள் ஜேவிபியையும், புலிகளையும் அரச இயந்திரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரே மாதிரியான கெரில்லா இயக்கங்களாகவே கருதினார்கள். அரச ஒத்தோடிகளான தமிழ் வலதுசாரிகள், ஜேவிபி வெறுப்புப் பிரச்சாரம் மூலம் ஈழக் கோரிக்கையை தோற்கடித்தனர் என்பதே உண்மை! எந்த சந்தர்ப்பத்திலும், தமிழ் வலதுசாரிகள் சிறிலங்கா  அரசைக் கவிழ்க்க நினைக்கவில்லை. அதுவும் மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஈழப் போர் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக காய் நகரத்தி விடுதலைப் புலிகளை தனது வலைக்குள் விழ வைத்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுடன் மோத வைத்தது. இதன் மூலம், "இந்தியா வந்து ஈழம் பெற்றுத் தரும்" என்று காத்திருந்த தமிழ் வலதுசாரிகள் தலையில் மண்ணள்ளிப் போட்டது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4.  ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?

No comments: