Sunday, October 01, 2017

அமெரிக்காவின் கதவைத் தட்டினால் தமிழீழம் கிடைக்கும், அல்லேலூயா!


"அமெரிக்காவை நம்பு தமிழினமே!"

"குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்" என்ற தலைப்பில், லண்டனில் வெளிவரும் ஒரு பேப்பர் ஊடகவியலாளர் அ. மாயூரன் முகநூலில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். (https://www.facebook.com/majura.amb/posts/1539005206138165?pnref=story) அதன் சாராம்சம் இது தான்:"அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்தால் தமிழீழம் சாத்தியமே!"

அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இவ்வாறு உள்ளது: 
//இனி தனக்கு விடுதலை சாத்தியமற்றது எனத் தெரிந்திருந்தும் தமது விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்கும் குர்தீஸ் மக்களைப்பார்த்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்கத்தவறினால் என்றோ விடுதலை அடையவேண்டிய ஈழத்தமிழினமான நாம் இனி நடை பிணங்களே அத்துடன் தனக்குத் துரோகமிளைத்த அமெரிக்காவின் கதவுகளைத் தொடர்ச்சியாகத் தட்டி தமது விடுதலைக்கனியை பறித்திருக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு 100 வீதம் பொருந்தும். எமக்கு விடுதலை வேண்டுமானால் துரோகியிடமாவது கூட்டுச்சேர்ந்து எமது விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டியதன் அவசியத்தை குர்தீஸ் மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இவர்களின் பாடங்களிலிருந்து வேற்றுமைகளைக் களைந்து எமக்கான விடுதலையை சாத்தியப்படுத்துவோம்.// (அ.மாயூரன்)

இது தமிழர்களையும் அமெரிக்க அடிமைகளாக்கும் அடிவருடி அரசியல். ஒரு பேச்சுக்கு, ஈராக்கில் குர்திஸ்தான் சுதந்திரம் அடைய அமெரிக்கா தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். அதே அமெரிக்கா துருக்கியில் குர்திஷ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை நின்றதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

துருக்கி- குர்திஷ் விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானை, சிரியாவை விட்டு விரட்டியடித்து, உலகெல்லாம் சுற்ற வைத்து காட்டிக் கொடுத்த அமெரிக்கா, எப்படி குர்து மக்களின் நண்பன் ஆகியது? ஈராக் பொது வாக்கெடுப்பு விடயத்தில் அமெரிக்க நலன்களா அல்லது குர்து மக்களின் விடுதலையா முக்கியமாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மைகள் தெரிய வரும்.

அ. மாயூரனின் கட்டுரையில் இருந்து:

//குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Locked )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. எனவே ஒரு தேசம் நான்கு துண்டாடப்பட்ட நாடுகளிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமின்மை என்பதாலேயே அரசியல் ஆய்வாளர்கள் அது சுதந்திர நாடாக விடுதலை அடைவது சாத்தியமில்லை என்றிருந்தனர்.// (அ.மாயூரன்)

யார் அந்த உலக வரைபடம் காணாத "அரசியல் ஆய்வாளர்கள்"? ஒரு சாதாரண பள்ளி மாணவன் உலக வரை படத்தை எடுத்துப் பார்த்தாலே, எத்தனை "நாலாபுறமும் மூடப் பட்ட தேசங்கள்" இருக்கின்றன என்பது தெரிந்து விடும். இவை எல்லாம் காலனிய காலத்தில் உருவாக்கப் பட்டு, காலனிய நீக்கம் என்ற பெயரில் சுதந்திரம் வழங்கப் பட்டவை. முன்னாள் காலனிய எஜமானும், அயல் நாடுகளும் அவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்த படியால் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன.

குர்திஸ் இன மக்களை "ஒரே தேசம்" என்று கருதினால், உலகில் நூற்றுக் கணக்கான தேசங்கள் துண்டாடப் பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் அனேகமாக எல்லா நாடுகளின் எல்லைக் கோடுகளும் ஏதோவொரு தேசிய இனத்தை பிரிப்பதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைக் கோடு பஷ்டூன் இன மக்களின் தேசத்தை இரண்டு துண்டுகளாக்கியது. இப்படி நிறைய உதாரணங்களை காட்டலாம்.

//இருந்தும் குர்தீஸ் மக்கள் தமது விடுதலை நோக்கி நகர்ந்தனர். முதலில் ஈராக்கிடமிருந்தாவது விடுதலை பெற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகள் செய்த போது தான்...// (அ.மாயூரன்)

இது ஒரு திரிபுபடுத்தல். குர்திய தேசியவாதம் ஒரு பிற்காலத்திய அரசியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டில் தான் குர்திஸ் தேசிய இன அடையாளம் உருவானது. அதற்கு முன்பு பல சிற்றரசுக்கள் இருந்துள்ளன. ஆனால், அன்று யாரிடமும் நாம் குர்தியர் என்ற உணர்வு இருக்கவில்லை. 

மேலும், இனம் அல்ல, மொழி தான் அடையாளத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, கிர்குக், பாக்தாத் ஆகிய நகரங்களில் அரபி மொழியை தாய்மொழியாக பேசும் குர்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இனத்தால், பிறப்பால் குர்தியர்கள். இருந்தாலும், இன்றைய தேசிய இன அரசியல் அவர்களை அரேபியர்கள் என்று சொல்கிறது!

துருக்கி குர்தியருக்கும், ஈராக் குர்தியருக்கும் இடையில் வெளித்தெரியக் கூடிய முரண்பாடுகள் உள்ளன. துருக்கியில் வாழும் குர்தியர்கள் லத்தீன் வரி வடிவத்தையும், ஈராக்கில் வாழும் குர்தியர் அரபி வரி வடிவத்தையும் உபயோகிக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,குர்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈராக்கி குர்திஸ்தானின் வட பகுதியில் குருமாஞ்சி கிளை மொழி பேசும் மக்களும், தெற்கில் சுராணி கிளைமொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அந்த மொழிப் பிரிவினை நவீன கால அரசியலிலும் தாக்கம் செலுத்தியது. பர்சானி தலைமை தாங்கிய KDP இயக்கம், குருமாஞ்சி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. தலபானி தலைமை தாங்கிய PUK இயக்கம், சுராணி மொழி பேசுவோரை பிரதிநிதித்துவப் படுத்தியது. 1994 - 1995 இரண்டு இயக்கங்களும் மோதிக் கொண்டன. அந்த சகோதர யுத்தத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள்.

ஈரான், ஈராக், துருக்கி ஆகிய மூன்று நாடுகளிலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற குர்திஸ் விடுதலை இயக்கங்கள், மூன்று மாறுபட்ட வரலாற்றுக் காலத்தில் தோன்றியுள்ளன. அவை எல்லாம் பொதுவாக குர்திஸ்தான் விடுதலை பற்றிப் பேசினாலும், ஒன்றுக்கொன்று அரசியல் கொள்கை முரண்பாடு கொண்டவை. இவர்கள் எப்படி ஒன்றாக விடுதலையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்?

//அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது குர்தீஸ் மக்கள் அமெரிக்காவிடம் தாம் ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தங்களுடன் துணை புரிவதாகவும் தமக்கு ஈராக்கிடமிருந்து விடுதலையை பெற்றுத் தருமாறும் கேட்டிருந்தனர்... அமெரிக்கா ஈராக் மீதான போரை முடித்ததன் பின்னர் குர்தீஸ் மக்களுக்கான விடுதலையை குடுக்க மறுத்தது.// (அ.மாயூரன்)

ஈராக்- குர்து மக்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமையை புறக்கணித்து விட்டு, அப்போது அங்கு நடந்த சம்பவங்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் குர்திஸ்தான் உள்நாட்டு அரசியல் பற்றித் தெரிய வேண்டும். அது தெரியாமல், "ஈழத் தமிழினம் ஈராக்கி குர்திஸ் இனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தமிழர்களை படுகுழியில் தள்ளிவிடக் கூடாது.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி நடத்திய காலத்திலேயே, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம் உருவாகி, அதற்கான தேர்தல்களும் நடத்தப் பட்டன. அப்போதே ஈராக்கிய இராணுவம் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. அதற்கு காரணம், குவைத் போருக்குப் பின்னர் எழுந்த நெருக்கடி நிலைமை. ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஈராக் மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. அது மட்டுமல்லாது, வடக்கிலும், தெற்கிலும் ஈராக்கிய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அந்த வான் பரப்பில் மேற்கத்திய போர் விமானங்கள் ரோந்து சுற்றின.

இராணுவ ரீதியாக பலவீனமடைந்து, மத்திய ஈராக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பெரும்பாடு பட்ட சதாம் ஹுசைன் அரசு, குர்திஸ்தான் பகுதிகளை விட்டுக் கொடுத்ததில் வியப்பில்லை. அப்போது குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர், சதாம் ஹுசைனுடன் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்து கொண்டார். "குர்திஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக" சதாம் அரசு பீற்றிக் கொண்டது.

வளைகுடா யுத்தம் நடந்த தொண்ணூறுகளில் தான், இன்றைய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்புக்கான அடித்தளம் போடப் பட்டது. அதாவது, ஈராக் எண்ணைக்காக சர்வதேச சமூகம் நடத்திய போரின் ஒரு பக்க விளைவு தான் அது. ஈராக்- குர்து மக்களைப் பொறுத்தவரையில், அது எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவு தான். அயல்நாடான துருக்கியில் வாழும் குர்து மக்களுக்கு கூட இன்று வரையில் அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. இதிலே ஈழத் தமிழினத்திற்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜோசியம் சொல்வது ஒரு சுத்துமாத்து!

ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடந்த நேரம், குர்திஸ்தான் விடுதலையை பெற்றுத் தருமாறு அமெரிக்காவை கேட்டது உண்மை தான். ஆனால், அதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மிகவும் தந்திரமாகப் பேசி போருக்கு சம்மதிக்க வைத்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலம் சில வருடம் நீடித்தது. அப்போதே நினைத்திருந்தால், பிரித்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அமெரிக்கர்கள் அப்படிச் செய்யவில்லை. குர்தியரிடம் நைச்சியமாகப் பேசி, புதிதாக உருவான ஈராக் அரசாங்கத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். "அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்த படியால் தான் இவ்வளவும் நடந்தது" என்பது ஒரு வெகுளித்தனமான பார்வை.

பாக்தாத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசு அதிகாரம் செலுத்திய நேரம் தட்டியும் திறக்காத கதவு இப்போது தான் திறந்து கொண்டதாம்! ஏற்கனவே, குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை எதிர்த்துள்ள அமெரிக்கா, தான் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும், "ஈழத் தமிழினமே அமெரிக்காவின் கதவுகளை தொடர்ந்தும் தட்டிக் கொண்டிரு, தமிழீழம் கிடைக்கும்!" என்று அறிவுரை சொல்வது அயோக்கியத்தனம். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று இயேசு சொன்னதாக, தமிழ்த்தேசிய- அல்லேலூயாகாரர் தினந்தோறும் பிரார்த்தனை செய்தாலும், அமெரிக்க ஆண்டவர் இறங்கி வரப்  போவதில்லை. 

இஸ்ரேல் மட்டும் தான் குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ள ஒரேயொரு நாடு ஆகும். அது தனி நாடாவதை ஆதரிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இஸ்ரேலுக்கு ஒரு புதிய கூட்டாளி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அது தான் இங்கே முக்கியம். ஏற்கனவே, குர்திஷ் படையினருக்கு இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஈரானுடன் பொது எல்லையைக் கொண்டிருப்பதால், அங்கிருந்து ஈரானை வேவு பார்ப்பது இலகு. அது தான் நடக்கப் போகிறது. எதிர்காலத்தில் ஈரானுடன் யுத்தம் வெடிக்குமாக இருந்தால், குர்திஸ்தானில் இருந்து ஊடுருவ முடியும்.

இஸ்ரேல் மட்டுமல்லாது, அமெரிக்காவும் குர்திஸ்தானை தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், ஈராக் அவர்களது கையை விட்டுப் போய் விட்டது. இன்று ஈராக் அரசை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது ஈரான் தான். அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சர்வதேச அரசியல் சூதாட்டத்தில் ஈராக்- குர்திஸ் மக்கள், வல்லரசுகளின் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர். பெஷ்மேர்கா என அழைக்கப் படும் குர்திஸ் இராணுவம், ஏகாதிபத்திய ஒட்டுக்குழுவாகி ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது.இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு: 
25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?

1 comment:

Unknown said...

இலங்கை இராணுவத்தின் போர் குற்றங்களை பகடையாய் பயன்படுத்தி இலங்கை அரசை அச்சுறுத்தி பிழைக்கிறது அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்தில் தம்மை வலுப்படுத்துமே தவிர ஆதரித்து தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடுமா