Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

Friday, May 19, 2017

இடதுசாரி வெறுப்பு அரசியலின் எதிர்காலம்

தமிழீழத்திற்கு ஆதரவான ஐரிஷ் இடதுசாரிகளின் சுவரோவியம்.
படத்திற்கு நன்றி: Sinthujan Varatharajah

"வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ எந்த‌ தேசிய‌ இன‌ விடுத‌லைப் போராட்ட‌மும் முழுமைய‌டைய‌ சாத்திய‌மில்லை."
- புற‌ம்போக்கு ப‌ட‌ வ‌ச‌ன‌ம்

தொண்ணூறுகளுக்குப் பின்னரான காலத்தில், மார்க்சியத்தை கைகழுவி விட்டு, புதிய சித்தாந்தங்களை தேடி ஓடியோர் பலருண்டு. சிலர் பின்நவீனத்துவத்தை தூக்கிப் பிடித்தனர். வேறு சிலர் தேசியவாத அரசியலே சமூக விடுதலைக்கான வழியெனக் கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன். தேசியவாதக் கருத்தியலை நியாயப் படுத்துவதற்காக இடதுசாரிகள் மீது சேறடிக்க தயங்காதவர். 

அண்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதி வெளியான "ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்" என்ற நூலிலும், இடதுசாரிகள் மீதான வெறுப்பை காட்டியுள்ளார். 

போலி இடதுசாரி யமுனா ராஜேந்திரனின் திரிபுவாதங்களுக்கு எதிரான எதிர்வினைகள்:

//மார்க்சியரான அப்துல்லா ஒச்சலான் தமது மக்களின் இனவிடுதலைக்காக அமெரிக்க ‘ஏகாதிபத்தியத்தின்’ தலையீட்டைக் கோரும் காலமும், மார்க்சியரான கிழக்குதிமோரின் சனான குசாமா மேற்கத்திய அமெரிக்கத் தலையீடுகளின் பின் கிழக்கு திமோர் எனத் தனிநாடு பெற்றதுமான வரலாறு கொண்ட காலமும் இதுதான்.// 
- (யமுனா ராஜேந்திரன் - மரணத்தின் நிழல்: போராளிகளும் வெகுமக்களும்)

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், மேற்குலக ஆதரவைக் கோருவது தவறல்ல என்பது தான் இவரது வாதம். இவரது உதாரணத்திலேயே முரண்பாடு துலக்கமாக தெரிகின்றது. கிழக்கு தீமோர் விடுதலை அடைய உதவிய அதே மேற்கத்திய நாடுகள், குர்திஸ்தான் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏனோ?

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்று காரணம் சொன்னாலும், ஈராக்கில் சுதந்திர குர்திஸ்தான் உருவாவதை அமெரிக்கா இன்று வரையில் விரும்பவில்லை. இத்தனைக்கும் அங்கு ஒச்சலான் மாதிரி மார்க்சியத் தலைவர் எவரும் இருக்கவில்லை. ஈராக் போரில், குர்திஷ் படையினர் அமெரிக்கப் இராணுவத்துடன் ஒத்துழைத்த படியால் தான், சதாம் ஹுசைனை அகற்ற முடிந்தது. அந்த நன்றிக் கடனுக்காக ஆவது, அமெரிக்கா குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரித்திருக்கலாம் அல்லவா?

//"ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன்"// 
- ('ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' நூலில் யமுனா ராஜேந்திரன்.)

ஸ்டாலின், மாவோ என்று யாருமே விமர்சனம் இன்றிக் கொண்டாடப் படவில்லை. ஸ்டாலின் மீது மாவோ விமர்சனம் வைத்தார். மாவோவும், குருஷேவும் பகைமை வருமளவிற்கு விமர்சனங்களால் முரண்பட்டனர். அந்த விவாதங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் நடந்து வந்தன. அபிமால் குஸ்மான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டிருந்தார்.

அப்துல்லா ஒச்சலான் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்சியம் பேசினாலும், அவரது தீவிர தேசியவாத நடைமுறைகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டார். அதே மாதிரி, யாசிர் அரபாத்தும் வலதுசாரி தேசியவாதம், மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்காக எப்போதும் விமர்சிக்கப் பட்டார். மேற்படி உதாரணங்களில் கடுமையாக விமர்சிக்கப் படாதவர் யாரும் இல்லை.

அப்துல்லா ஒச்சலான், யாசிர் அரபாத் மாதிரி, பிரபாகரனை 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் வேண்டுகோள் விடுக்கிறார். இனத்தின் பேரில், மொழியின் பேரில், பெருமளவு மக்களை அணிதிரட்டும் சக்தி தேசியவாதத்திற்கு உண்டு.

அதுவே தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம். அதாவது, ஏகாதிபத்தியத்தால் முண்டுகொடுக்கப் படும் நவ காலனிய அரசுக்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சமூக மக்களை அணிதிரட்டி போராட வைக்க முடிகின்றது. மார்க்சிய பகுப்பாய்வின் படி, தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு வளர்ச்சிக் கட்டம். அதை யாரும் மறுக்கவில்லை.

தேசிய இன விடுதலைப் போராட்டத் தலைவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், ஏகாதிபத்திய அழுத்தம் காரணமாக மிதவாத நிலை எடுக்கிறார்கள். கிழக்குதிமோரின் சனான குசாமா, பாலஸ்தீனத்தின் யாசிர் அரபாத் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணியாத தலிவர்கள், தனிநாடு சாத்தியமில்லை என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் அப்துல்லா ஒச்சலான், குர்திஸ்தான் தனிநாடாவது சாத்தியமில்லை என்றும், துருக்கியை ஜனநாயக மயப் படுத்தும் குறிக்கோளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். பிரபாகரனும் ஏறத்தாள அதே நிலைமையில் தானிருந்தார். இறுதிப்போரில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, இறுதி மூச்சுள்ள வரை போராடிச் சாவது என்ற முடிவெடுத்திருந்தார்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி புகழ்ந்து பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்பது போல யமுனா ராஜேந்திரன் எழுதி இருப்பது, எந்த வகையான மார்க்சிய பகுப்பாய்வு என்று தெரியவில்லை. புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி வந்தனர். மன்னர்கள் அல்ல, மக்களின் வரலாறே எமக்கு முக்கியம் என்றது மார்க்சியம்.

அந்த வகையில் எந்தத் தலைவரும் முக்கியமல்ல. அவர்களைப் பின்பற்றிய மக்கள் தான் முக்கியம். அந்தத் தலைவர்கள் தம் மக்களுக்கு என்ன செய்தார்கள்? அது தான் முக்கியம். தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதல்ல, புலி இயக்க போராளிகளையும், தமிழ் மக்களையும் புரிந்து கொள்வது தான் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகும்.

கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிடம் இருந்து அயர்லாந்து விடுதலை அடைவதை ஆதரித்திருந்தார். மார்க்சின் "அயர்லாந்து கொள்கையை" அப்படியே ஈழத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமா? 

கார்ல் மார்க்ஸ் காலத்தில், அயர்லாந்து விவசாயப் பொருளாதாரத்தை கொண்டிருந்தது. அங்கிருந்த நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர்கள் அயர்லாந்தில் உற்பத்தியான விளைபொருட்களை, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். இதனால், ஒரு தடவை அயர்லாந்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இலட்சக் கணக்கான ஐரிஷ் மக்கள் பட்டினியால் இறந்தனர். 

மேலும் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில், சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய இடதுசாரி சக்திகளும் பங்கெடுத்திருந்தன. அயர்லாந்து சுதந்திரமடைந்த காலத்திலும், ஐரிஷ் சோஷலிஸ்டுகளின் கை மேலோங்கி இருந்தது. 

தமிழீழ போராட்டத்தை புலிகள் தலைமை தாங்குவதற்கு முன்னர், ஈழத்தில் ஏறக்குறைய அப்படியான சூழ்நிலை இருந்தது. ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் பல சோஷலிச ஈழம் அமைக்க விரும்பின. 

ஆயினும், அயர்லாந்தையும், ஈழத்தையும் எல்லா விஷயத்திலும் ஒப்பிட முடியாது. உதாரணத்திற்கு, ஈழத்தின் விவசாயப் பொருளாதாரத்தை சிங்கள நிலப்பிரபுக்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. அது தமிழ் நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. 

அயர்லாந்து, ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகளும் இருக்கின்றன.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal

Monday, July 13, 2015

பிரபாகரன் மீண்டும் வந்தால் "புலி ஆதரவாளர்களே" காட்டிக் கொடுப்பார்கள்!


தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் பரவாயில்லை. தமிழீழத்தில் மட்டும் காலடி எடுத்து வைத்து விடாதீர்கள்! "இந்த நன்றி மறந்த தமிழர்களுக்காகவா போராடினேன்" என்று, வருந்த வேண்டி இருக்கலாம்!

நீங்கள் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தால், உங்களுக்கும் "புலனாய்வுத் துறையின் கைக்கூலி" முத்திரை குத்துவார்கள். நீங்கள் மீண்டும் ஆயுதமேந்தினால், சிங்கள இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல. நீங்கள் நம்பிக் கெட்ட, அதே "புலி ஆதரவாளர்கள்" தான்! நீங்களே உருவாக்கி விட்ட, தமிழ் முதலாளிகளும், தமிழ் வலதுசாரிகளும், தற்போது சிறிலங்காவின் "ஜனநாயக நீரோட்டத்தில்" ஐக்கியமாகி விட்டார்கள்.

இந்தத் துணுக்கு சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் தான். இலங்கையில் இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலுக்குள் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் பொழுது இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
(பார்க்கவும்: 1.தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?; 2.பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்)

தேர்தல் வரும் காலங்களில் தான், பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கும், போலி ஜனநாயகவாதிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. அவர்களது "ஜனநாயகம்" எப்போதும், இரண்டு கட்சிகளின் சர்வாதிகார ஆட்சி தான் என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது.

இலங்கை அரசியல் நிலவரத்தில், "தனித் தமிழீழத்திற்கான சுதந்திர தாகம்" கொண்ட, போலித் தமிழ் தேசியவாதிகள் கூட, சிங்களப் பேரினவாத SLFP க்கு எதிராக, இன்னொரு சிங்களப் பேரினவாத கட்சியான UNP யை ஆதரிப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா ஜனநாயகம்!" என்பார்கள்.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா தமிழ் தேசியம்" என்பார்கள். எல்லாத் தேர்தல்களிலும் ஒரே கட்சி தான் வெல்ல வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? மெத்தப் படித்த அறிவாளிகளே பதில் கூறுங்கள்.

இலங்கையில் மீண்டும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கூத்துக்கள் ஆரம்பமாகி விட்டன. முன்னர் ஒரு தடவை, ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரம், நான் பொதுத் தேர்தல்களின் ஜனநாயகமற்ற தன்மையை விமர்சித்து எழுதி இருந்தேன்.

அப்பொழுது, முன்னாள் போலித் தமிழ் தேசியவாதியும், இந்நாள் போலி ஜனநாயகவாதியுமான ஒருவர், பின்வருமாறு எதிர்வினையாற்றினார்:
  "மிஸ்டர் கலையரசன், இலங்கையில் ஒரு புரட்சி நடக்கும் என்று கனவு காணாதீர்கள்!"

இந்தப் போலி ஜனநாயகவாதி முன்னொருகாலத்தில் புலிகளை ஆதரித்தவர், அல்லது அப்படி பாசாங்கு செய்தவர். அந்தக் காலத்தில் புலிகள் நடத்தியது புரட்சி இல்லாமல், புடலங்காயா? உங்களது பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்த படியால் தானே புலிகள் ஆயுதமேந்தினார்கள்?

ஏற்கனவே இருக்கும் அரச கட்டமைப்பை மாற்றியமைப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதைப் புலிகள் நடைமுறையில் செய்து காட்டினார்கள். நீங்கள் விரும்பினால் அதற்கு "தமிழ் தேசியப் புரட்சி" என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் புரட்சி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடக்கலாம் என்றால், இலங்கையில் தமிழ் தேசியப் புரட்சி நடக்க முடியாதா?

தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற வாக்குகளால் சாதிக்க முடியாத பல விடயங்களை, புலிகள் ஆயுத பலத்தால் செய்து காட்டினார்கள். சிறிலங்கா பாராளுமன்ற அதிகார மையத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றை உருவாக்கி ஆட்சி நடத்தினார்கள்.

இறுதிப்போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட, புலிகளை ஜனநாயக வழிக்கு திரும்புமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது. ஏன் அதை உதாசீனப் படுத்தினார்கள்? போலி ஜனநாயகவாதிகள் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு சிறந்தது என்றால், அதை அன்று ஏற்றுக் கொண்டிருக்கலாமே?

வசதி படைத்த தமிழ் மேட்டுக்குடியினருக்கு, பதவிகளை அமைத்துக் கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. தமிழ்ச்செல்வன் போன்ற அடித்தட்டு உழைக்கும் வர்க்க சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களும் உயர்ந்த அந்தஸ்துக்கு வருவதற்கு உதவினார்கள். அந்த சமூகத்து மக்களைப் பொறுத்தவரையில், அது ஒரு புரட்சி தான்.

ஈழத் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமும், தமிழ் முதலாளிய வர்க்கமும், புலிகளை தமது கருவிகளாக நினைத்து பயன்படுத்தி வந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவை ஏற்று, சிங்களப் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்தவுடன் புலிகளை கை கழுவி விட்டனர். அதன் விளைவாகத் தான், முன்னாள் புலிப் போராளிகள் தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தில் ஒதுக்கப் படுகின்றனர். இதே நிலைமை, புலிகளுக்கு தலைவராக இருந்த பிரபாகரனுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்
தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்
தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

Sunday, December 07, 2014

"தோழர் பிரபாகரன்!" என்று அழைக்கலாமா?


மே 17 தலைமைக்கு நெருக்கமான ஒருவர், புலிகள் இயக்க தலைவரை "தோழர் பிரபாகரன்" என்று அழைக்க வேண்டும் என்கிறார்! இது எப்படி இருக்கு? 

முதன் முதலாக, மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தான் "தோழர் பிரபாகரன்" என்று அழைக்கத் தொடங்கினார். ஆனால், ஈழத்து புலி ஆதரவாளர்கள் யாரும், தங்களது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை தோழர் என்று அழைத்தமைக்காக, திருமுருகன் காந்தியை கண்டிக்கவில்லை.

தமிழ் நாட்டில் புலிகளை ஆதரிக்கும் அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள், "தோழர்" என்ற சொல்லை அடிக்கடி பாவிக்கிறார்கள். ஆனால், தோழர் என்று அழைப்பதை புலிகள் எந்தக் காலத்திலும் விரும்பி இருக்க‌வில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யாரும் தோழர் என்று அழைத்துக் கொள்வதில்லை. அதனால் ஈழத்து புலி ஆதரவாளர்களுக்கும் தோழர் என்ற வார்த்தை பிடிப்பதில்லை. ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணம் மிகவும் அபத்தமானது.

"அரச ஆதரவு ஒட்டுக் குழுக்கள் தமக்குள் தோழர் என்று சொல்லிக் கொள்வதால், புலிகளுக்கு அந்தச் சொல் பிடிக்காது. ஆகவே, தமக்கும் பிடிக்காது" என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இது ஒரு குதர்க்கமான வாதம். ஈழப் போராட்ட வரலாறு தெரியாதவர்களின் பிதற்றல். உலகில் எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது.

ஒரு தூய தமிழ்ச் சொல்லான தோழர், தமிழ் மாணவர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாத இளைஞர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. தோழர் எனும் சொல்லினை, பாராளுமன்றத் தமிழ் தேசியவாதிகளான கூட்டணியினரிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்டப் பயன்படுத்தினார்கள். முதலாவது ஆயுதப் போராளி சிவகுமாரனும் தோழர் என்று அழைக்கப் பட்டார்.

1986 ம் ஆண்டு, ஈழப் போராட்ட இயக்கங்களுக்கு இடையில், யாழ் குடா நாட்டில் நடந்த அதிகாரப் போட்டியின் விளைவு தான், "ஒட்டுக் குழுக்கள்" எனும் அரச ஆதரவு துணைப் படைகளின் தோற்றம். அது வரைக்கும் அரசுடன் இருந்த ஒரேயொரு ஒட்டுக் குழு, தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் தான். 1982 ஆம் ஆண்டில் இருந்தே, புலிகள் "கூட்டணி ஒட்டுக்குழு உறுப்பினர்களை" சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடி ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உண்மையில் சம்பந்தரின் கூட்டணி, சுரேஷ் பிரேமச் சந்திரனின் ஈபிஆர்எல்ப், செல்வன் அடைக்கலநாதனின் டெலோ ஆகிய முன்னாள் ஒட்டுக் குழுக்களின் கூட்டமைப்பு தான். 


1984 ஆம் ஆண்டு நடந்த திம்புப் பேச்சுவார்த்தைகளில், புலிகளும், "ஒட்டுக் குழுக்களும்" சேர்ந்து ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதற்குப் பின்னர் உருவான ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற நான்கு இயக்கங்களின் ஐக்கிய முன்னணியில் புலிகள் இயக்கமும் ஒன்றாக இருந்தது. அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன், "ஒட்டுக்குழுக்களின்" தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருந்தார்.

தோழர் என்ற சொல், எல்லாக் காலங்களிலும் புலிகள் இயக்கத்தில் ஒரு தீண்டத் தகாத சொல்லாக கருதப் படவில்லை. எழுபதுகளில் ஓர் இடதுசாரி தேசியவாத இயக்கமாக காட்டிக் கொண்ட புலிகள் அமைப்பில், தோழர் என்றழைப்பது அனுமதிக்கப் பட்டது, அல்லது கண்டுகொள்ளாமல் விடப் பட்டது.

பிற்காலத்தில் ஒட்டுக்குழுவாக கருதப் பட்ட புளொட் இயக்கம், புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களாலேயே உருவானது. அதன் தலைவர் உமா மகேஸ்வரன், சில வருடங்கள் புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு இயங்கிய புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் கலைக்கப் பட்டதும், பிரபாகரன் சில காலம் டெலோ உடன் சேர்ந்திருந்தார்.

தொண்ணூறுகளில் புளொட் ஒட்டுக்குழுவில் இருந்து வந்த "தோழர்" சிவராம், புலிகளின் உலகப் புகழ் பெற்ற ஊடகவியலாளராக இருந்தார். எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின்னர், மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டார். ஆகவே, எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது.

1976 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவான போது, பிரபாகரனுடன், நிறைய மார்க்சிஸ்டுகள் சேர்ந்திருந்தார்கள். இன்றைக்கும் எல்லோராலும் மதிக்கப்படும், பழைய கம்யூனிஸ்டுகளான "தோழர்" தமிழ்ச் செல்வன், "தோழர்" புதுவை இரத்தினதுரை ஆகியோர், புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பெரியது. பழைய ட்ராஸ்கிஸ்ட் "தோழர்" அன்டன் பாலசிங்கம், புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

எழுபதுகளில், தீவிர மார்க்சிய லெனினிசம் பேசிய ஈரோஸ் இயக்கத்துடன், புலிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வெளிநாட்டுத் தொடர்புகள் மிகக் குறைவாக இருந்த ஒரு காலத்தில், ஈரோஸ் ஊடாக லெபனான் பயிற்சிக்கு ஆட்களை அனுப்பினார்கள். கியூபாவில் நடந்த, சோஷலிச நாடுகளின் மாணவர் இளைஞர் மகாநாட்டில், புலிகளின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

தமக்குள்ளே தோழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் மார்க்சிய ஈரோஸ் காரர்களுக்கும், புலிகளுக்கும் இடையில் என்றைக்குமே பெரிய முரண்பாடுகள் ஏற்படவில்லை. நீண்ட காலமாக மறைமுகமான நட்புறவு நிலவியது. இந்திய இராணுவம் வந்த பின்னர் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், புலிகள் முழுமூச்சாக ஆதரித்த, ஈரோஸ் தோழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டனர்.

1987 ஆயுதங்களை ஒப்படைத்த காலம் முதல் இயங்காமல் இருந்த ஈரோஸ், 1990 ம் ஆண்டு மீண்டும் ஈழப் போர் தொடங்கியதும் கலைக்கப் பட்டது. ஏராளமான ஈரோஸ் தோழர்கள், புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்கள். ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார், புலிகளின் பிரதானமான பேச்சாளராக மாறினார். புலிகளுடன் சேர்ந்த மார்க்சிய ஈரோஸ் தோழர்களும், தலைவர் பாலகுமாரும், இறுதி யுத்தம் வரையில் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள்.

அதே நேரம், புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு ஒட்டுக்குழு ஆனார்கள். அவர்கள் இன்றைக்கும் தமது கட்சியின் பெயரில் (TMVP)"தமிழ்", "விடுதலை", "புலிகள்", ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். புலிகளின் சிவப்பு - மஞ்சள் தேசியக் கொடியை தமது கட்சியின் கொடியாக வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தோழர் என்று அழைப்பது அவர்களுக்கும் பிடிக்காத விடயம்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.