Sunday, December 07, 2014

"தோழர் பிரபாகரன்!" என்று அழைக்கலாமா?


மே 17 தலைமைக்கு நெருக்கமான ஒருவர், புலிகள் இயக்க தலைவரை "தோழர் பிரபாகரன்" என்று அழைக்க வேண்டும் என்கிறார்! இது எப்படி இருக்கு? 

முதன் முதலாக, மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தான் "தோழர் பிரபாகரன்" என்று அழைக்கத் தொடங்கினார். ஆனால், ஈழத்து புலி ஆதரவாளர்கள் யாரும், தங்களது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை தோழர் என்று அழைத்தமைக்காக, திருமுருகன் காந்தியை கண்டிக்கவில்லை.

தமிழ் நாட்டில் புலிகளை ஆதரிக்கும் அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள், "தோழர்" என்ற சொல்லை அடிக்கடி பாவிக்கிறார்கள். ஆனால், தோழர் என்று அழைப்பதை புலிகள் எந்தக் காலத்திலும் விரும்பி இருக்க‌வில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யாரும் தோழர் என்று அழைத்துக் கொள்வதில்லை. அதனால் ஈழத்து புலி ஆதரவாளர்களுக்கும் தோழர் என்ற வார்த்தை பிடிப்பதில்லை. ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணம் மிகவும் அபத்தமானது.

"அரச ஆதரவு ஒட்டுக் குழுக்கள் தமக்குள் தோழர் என்று சொல்லிக் கொள்வதால், புலிகளுக்கு அந்தச் சொல் பிடிக்காது. ஆகவே, தமக்கும் பிடிக்காது" என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இது ஒரு குதர்க்கமான வாதம். ஈழப் போராட்ட வரலாறு தெரியாதவர்களின் பிதற்றல். உலகில் எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது.

ஒரு தூய தமிழ்ச் சொல்லான தோழர், தமிழ் மாணவர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாத இளைஞர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. தோழர் எனும் சொல்லினை, பாராளுமன்றத் தமிழ் தேசியவாதிகளான கூட்டணியினரிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்டப் பயன்படுத்தினார்கள். முதலாவது ஆயுதப் போராளி சிவகுமாரனும் தோழர் என்று அழைக்கப் பட்டார்.

1986 ம் ஆண்டு, ஈழப் போராட்ட இயக்கங்களுக்கு இடையில், யாழ் குடா நாட்டில் நடந்த அதிகாரப் போட்டியின் விளைவு தான், "ஒட்டுக் குழுக்கள்" எனும் அரச ஆதரவு துணைப் படைகளின் தோற்றம். அது வரைக்கும் அரசுடன் இருந்த ஒரேயொரு ஒட்டுக் குழு, தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் தான். 1982 ஆம் ஆண்டில் இருந்தே, புலிகள் "கூட்டணி ஒட்டுக்குழு உறுப்பினர்களை" சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடி ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உண்மையில் சம்பந்தரின் கூட்டணி, சுரேஷ் பிரேமச் சந்திரனின் ஈபிஆர்எல்ப், செல்வன் அடைக்கலநாதனின் டெலோ ஆகிய முன்னாள் ஒட்டுக் குழுக்களின் கூட்டமைப்பு தான். 


1984 ஆம் ஆண்டு நடந்த திம்புப் பேச்சுவார்த்தைகளில், புலிகளும், "ஒட்டுக் குழுக்களும்" சேர்ந்து ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதற்குப் பின்னர் உருவான ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற நான்கு இயக்கங்களின் ஐக்கிய முன்னணியில் புலிகள் இயக்கமும் ஒன்றாக இருந்தது. அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன், "ஒட்டுக்குழுக்களின்" தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருந்தார்.

தோழர் என்ற சொல், எல்லாக் காலங்களிலும் புலிகள் இயக்கத்தில் ஒரு தீண்டத் தகாத சொல்லாக கருதப் படவில்லை. எழுபதுகளில் ஓர் இடதுசாரி தேசியவாத இயக்கமாக காட்டிக் கொண்ட புலிகள் அமைப்பில், தோழர் என்றழைப்பது அனுமதிக்கப் பட்டது, அல்லது கண்டுகொள்ளாமல் விடப் பட்டது.

பிற்காலத்தில் ஒட்டுக்குழுவாக கருதப் பட்ட புளொட் இயக்கம், புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களாலேயே உருவானது. அதன் தலைவர் உமா மகேஸ்வரன், சில வருடங்கள் புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு இயங்கிய புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் கலைக்கப் பட்டதும், பிரபாகரன் சில காலம் டெலோ உடன் சேர்ந்திருந்தார்.

தொண்ணூறுகளில் புளொட் ஒட்டுக்குழுவில் இருந்து வந்த "தோழர்" சிவராம், புலிகளின் உலகப் புகழ் பெற்ற ஊடகவியலாளராக இருந்தார். எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின்னர், மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டார். ஆகவே, எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது.

1976 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவான போது, பிரபாகரனுடன், நிறைய மார்க்சிஸ்டுகள் சேர்ந்திருந்தார்கள். இன்றைக்கும் எல்லோராலும் மதிக்கப்படும், பழைய கம்யூனிஸ்டுகளான "தோழர்" தமிழ்ச் செல்வன், "தோழர்" புதுவை இரத்தினதுரை ஆகியோர், புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பெரியது. பழைய ட்ராஸ்கிஸ்ட் "தோழர்" அன்டன் பாலசிங்கம், புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

எழுபதுகளில், தீவிர மார்க்சிய லெனினிசம் பேசிய ஈரோஸ் இயக்கத்துடன், புலிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வெளிநாட்டுத் தொடர்புகள் மிகக் குறைவாக இருந்த ஒரு காலத்தில், ஈரோஸ் ஊடாக லெபனான் பயிற்சிக்கு ஆட்களை அனுப்பினார்கள். கியூபாவில் நடந்த, சோஷலிச நாடுகளின் மாணவர் இளைஞர் மகாநாட்டில், புலிகளின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

தமக்குள்ளே தோழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் மார்க்சிய ஈரோஸ் காரர்களுக்கும், புலிகளுக்கும் இடையில் என்றைக்குமே பெரிய முரண்பாடுகள் ஏற்படவில்லை. நீண்ட காலமாக மறைமுகமான நட்புறவு நிலவியது. இந்திய இராணுவம் வந்த பின்னர் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், புலிகள் முழுமூச்சாக ஆதரித்த, ஈரோஸ் தோழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டனர்.

1987 ஆயுதங்களை ஒப்படைத்த காலம் முதல் இயங்காமல் இருந்த ஈரோஸ், 1990 ம் ஆண்டு மீண்டும் ஈழப் போர் தொடங்கியதும் கலைக்கப் பட்டது. ஏராளமான ஈரோஸ் தோழர்கள், புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்கள். ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார், புலிகளின் பிரதானமான பேச்சாளராக மாறினார். புலிகளுடன் சேர்ந்த மார்க்சிய ஈரோஸ் தோழர்களும், தலைவர் பாலகுமாரும், இறுதி யுத்தம் வரையில் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள்.

அதே நேரம், புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு ஒட்டுக்குழு ஆனார்கள். அவர்கள் இன்றைக்கும் தமது கட்சியின் பெயரில் (TMVP)"தமிழ்", "விடுதலை", "புலிகள்", ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். புலிகளின் சிவப்பு - மஞ்சள் தேசியக் கொடியை தமது கட்சியின் கொடியாக வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தோழர் என்று அழைப்பது அவர்களுக்கும் பிடிக்காத விடயம்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: