Showing posts with label தமிழின வாதிகள். Show all posts
Showing posts with label தமிழின வாதிகள். Show all posts

Tuesday, April 25, 2017

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்


சிங்கள இனவாதிகளின் பிதாமகனாக கருதப்படும் அநகாரிக தர்மபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் :

 1. இங்கேயுள்ள படத்தில், விவேகானந்தருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பவர் தான் அநகாரிக தர்மபால. 1893 ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த சர்வதேச மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப் பட்ட படம் அது.

2. அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் "Don David Hewavitharana". அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள மேட்டுக்குடிப் பிரஜை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று, விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்றவர். (சுருக்கமாக: ஒரு சிங்கள ஆறுமுக நாவலர்.)

3. 1886 ம் ஆண்டு, மேலைத்தேய நாட்டவரின் ஆன்மீக சபையான "Buddhist Theosophical Society" இல் இணைந்து கொண்டார். அந்த சபையானது, பௌத்த மதத்தை தழுவிக் கொண்ட ஆங்கிலேயரான Henry Steel Olcott இனால் உருவாக்கப் பட்டது. அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேர்னல் ஆவார். இன்றைக்கும், அநகாரிக தர்மபாலாவுக்கு அடுத்த படியாக, கேர்னல் ஒல்கொட் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நாயகனாக போற்றப் படுகின்றார்.

4. பௌத்த சமயத்தை தழுவிய அநகாரிக தர்மபாலாவும், ஒல்கொட்டும், இலங்கை முழுவதும் பௌத்த மதத்தை மீள் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் தான் மகாவம்சம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. துட்டகைமுனு சிங்களவர்களின் நாயகன் ஆனான்.

5. இலங்கையில் பௌத்த மத புத்துயிர்ப்பில் ரஷ்யப் பெண்மணியான Blavatsky யின் பங்களிப்பும் அளப்பெரியது. Blavatsky யின் தொடர்பினால் தான் அநகாரிக தர்மபாலா பாளி மொழி பயின்றார். Blavatsky யின் ஆரிய இனப்பெருமை பேசும் கருத்துக்கள் ஹிட்லரையும் ஈர்த்தன. Theosophical Society இப்போதும் சென்னை, அடையாறில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

6. இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும் பௌத்த மதத்தை ஒடுக்கி, ஏறக்குறைய அழித்து விட்டார்கள். நாட்டில் எந்தப் பாகத்திலும் பௌத்த மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அநகாரிக தர்மபாலா பெருமுயற்சி எடுத்து, பௌத்த மதப் பாடசாலைகளை உருவாக்கினார். விகாரைகள் புதுப்பிக்கப் பட்டன.

7. அநகாரிக தர்மபால முன்மொழிந்த தத்துவங்கள், பிற்காலத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தோன்றுவதற்கு பெரிதும் உதவியது. அதனால், இன்றைக்கும் சிங்கள தேசியவாதிகள்/மதவாதிகள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

8. மறுபக்கத்தில், தமிழ் தேசியவாதிகள்/இனவாதிகள் அநகாரிக தர்மபாலாவை வெறும் இனவாத குருவாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், அதே நபர்கள் ஆறுமுக நாவலரை மரியாதையுடன் நினைவுகூரும் முரண்நகையையும் அவதானிக்கலாம்.

9. பௌத்தமும், சிங்களமும் வளர்த்த, அநகாரிக தர்மபாலா "ஒரு சிங்கள ஆறுமுகநாவலர்". சைவமும், தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர், "ஒரு தமிழ் அநகாரிக தர்மபாலா". ஆனால், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

10. தெற்கில் பௌத்த மதத்தையும், வடக்கில் சைவ மதத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கம் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால், இன்றைய சிங்கள-தமிழ் இன முரண்பாட்டின் விதைகள் அப்போதே தூவப் பட்டிருக்கலாம். "மக்களை பிரித்தாள்வதன்" மூலமே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நின்றது என்பது வரலாறு.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Saturday, January 07, 2017

முன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக "எழுக தமிழ்" வேலை நிறுத்தம்!


கிளிநொச்சி - இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒன்று சேர்ந்து தமக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பலர், தங்கள் கைக்குழந்தையுடன் வந்து நின்றனர்.

2.1.2017 அன்று, காலை 10.30 மணியளவில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள், தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறும் கேட்டனர்.

ஈழப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும், முன்னாள் புலிப் போராளிகள் வேலை வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவது தொடர்கதையாக உள்ளது. போர் நடந்த காலத்தில், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கோடி கோடியாக பணம் வந்து குவிந்து கொண்டிருந்தது. அதனால் அந்தக் காலத்தில் அங்கவீனர்களான முன்னாள் போராளிகளையும் பராமரிக்கும் பொறிமுறை இருந்தது. அவர்களுக்கான இலகுவான வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட்டன.

ஐந்து வருடங்கள் போராளியாக கடமையாற்றியவர்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தது. முன்னாள் போராளிகளாக கருதப் பட்ட அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தன. இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில், விடுதலைப் புலிகள் இயக்கமே மிகப் பெரிய வேலை வழங்குனராக இருந்தது. அவர்களால் நடத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு வகைப் பட்ட தொழில் வாய்ப்புகள் இருந்தன.

சிறிலங்கா அரசின் முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் சந்தையே தீர்மானித்தது. அதே மாதிரியான பொறிமுறை புலிகளின் "நடைமுறை தமிழீழ அரசில்" இருக்கவில்லை. எல்லாவற்றையும் புலிகள் இயக்கத் தலைமையே தீர்மானித்தது. எந்த நிறுவனம் நடத்த வேண்டும்? எத்தனை தொழில் வாய்ப்புகள்? யாருக்கு வேலை கொடுக்க வேண்டும்? சம்பளம் எவ்வளவு? இது எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்தார்கள்.

போர் முடிந்த பின்னர், பல்லாயிரக் கணக்கான முன்னாள் போராளிகளை பராமரிப்பதற்கான பொறிமுறை இல்லாமல் போனது. அதாவது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல. ஆகையினால் அவர்களை வைத்து பராமரித்து வந்த முகாம் என்ற அமைப்பு தற்போது இல்லை. அப்படியானால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக வேலை செய்ய வேண்டும். ஆனால், இலங்கையின் முதலாளித்துவப் பொருளாதார கட்டமைப்பில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதில்லை. புதிய தொழில்களை உருவாக்குவதற்கான பொறிமுறைகளும் இல்லை. அதை சந்தை தான் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் அரசு தனது கடமையை தட்டிக் கழிக்கிறது.

சிறிலங்கா அரசு முன்னாள் போராளிகளை இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருந்து, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தது. அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளும், அவற்றின் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வந்தன. அவர்கள் வெளியே வந்த பின்னர் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அவர்கள் போராளியாவதற்கு முன்பிருந்த அதே சமுதாய அமைப்பு இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரும்பாலான முன்னாள் போராளிகள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு உதவும் அளவிற்கு பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் வசதி இருக்கவில்லை. அவர்களும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழைகள் தானே?

புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்கும் கடமை தனக்கு இருப்பதாக அரசு கருதுவதாக தெரியவில்லை. நீங்களாகவே வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று கைவிட்டு விட்டது. அதே நேரம், தமிழர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த நிதி ஒரேயடியாக நின்று விட்டது. உள்ளூர் தமிழ் முதலாளிகள், அல்லது தொழில் முனைவோர் யாரும், முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த விரும்பவில்லை.

உள்ளூர் தமிழ் முதலாளிகள் முன்னாள் போராளிகளை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. புலிகளின் ஆட்சிக் காலத்தில் போராளிகளுக்கு பெரும் மதிப்பு இருந்தது. சிலர் பொது மக்களின் மீது அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாக இருந்தனர். அப்போது பலரின் மனதில் ஏற்பட்ட வெறுப்பை வைத்து இப்போது பழிவாங்குகிறார்கள். இரண்டாவது காரணம், முன்னாள் போராளிகளுடன் தொடர்பு கொள்ள பலர் அஞ்சுகின்றனர். தேவையில்லாமல், புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல, தற்போது முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாகவும் சந்தேகப் படுகிறார்கள்.

இது போன்ற காரணங்களினால், ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் முன்னாள் போராளிகள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் அவலம் தொடர்கின்றது. இந்த இடத்தில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். வேலையில்லாதவர்கள் எவ்வாறு இவ்வளவு காலமும் உயிர் வாழ முடிந்தது? சிலநேரம் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்திருக்கலாம். ஆனால், போர் முடிந்த பின்னர் அவற்றின் உதவிகள் வர வர குறைந்து கொண்டே செல்கின்றன. அப்படியானால் வேறென்ன வழி இருந்தது?

இலங்கை மாதிரியான வறிய நாடுகளில் வேலை இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. அவர் இல்லாவிட்டால் யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் அவருக்காக வேலை செய்வார். பெரும்பாலும் இவை தற்காலிகமான வேலைகளாக இருப்பதால், வறுமையில் இருந்து மீள முடியாத நச்சுச் சுழல் ஒன்றிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

"தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை பெற வேண்டும்" என்று இருபத்திநான்கு மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் யாரும், முன்னாள் போராளிகளின் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. சக தமிழனின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். கிளிநொச்சியில் நடந்த முன்னாள் போராளிகளின் வேலை தேடும் போராட்டம் பற்றிய தகவல், சமூக வலைத் தளங்களில் பரவலாக பலரை சென்றடைந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த தமிழ்த் தேசியவாதிகள் கன்னாபின்னாவென்று உளறத் தொடங்கினார்கள். இருப்பினும், ஆய்வு மனப்பான்மை கொண்ட தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் நிலைத்தகவலில் கொடுத்த விளக்கம் மட்டும் பிரச்சினைக்கான தீர்வு பற்றியதாக இருந்தது. தீவிர வலதுசாரி தமிழ்த் தேசிய இயக்கமான தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளராக அறியப்படும் அந்த ஊடகவியலாளர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:

//7 வருடங்களுக்கு முன்னர் எந்த இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதே இராணுவத்திடம் மீள்வாழ்வுக்கு கையேந்தி நிற்க வேண்டிய நிலையை முன்னாள் போராளிகள் எதிர்நோக்கியிருக்கின்றனர். வெளிச்சூழலில் அவர்களுக்குப் பொருத்தமான வேலைகள் இல்லாமயே இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவிடம் வேலை கேட்டுச் செல்லக் காரணம் எனச் சொல்லியிருக்கின்றனர். அப்படியாயின் சிவில் பாதுகாப்பு படையினரிடமே முன்னாள் போராளிகளுக்குப் பொருத்தமான வேலைகள் உண்டு. சிவில் பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் வேலைகள் என்னவெனில், விவசாய பண்ணைகள் செய்தல், கல்லறுத்தல், கட்டுமானப்பணிகளில் ஈடுபடல், உயர்தரம் வரை கல்வி கற்றிருந்தால் முன்பள்ளி ஆசிரியர் இவைகளைத் தான் முன்னாள் போராளிகள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகள் என்கின்றனர். இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா? தாராளமாகவே உண்டு. வன்னியில் பாரம்பரியமான விவசாய கிராமங்களில் விவசாய நடவடிக்கைகளைப் பலரும் கைவிட்டிருக்கின்றனர். அதற்குப் பிரதான காரணம் கூலியாட்கள் இன்மையே. நாளொன்றுக்கு 1500 ரூபா சம்பளம் கொடுத்தும் கூலியாட்களைப் பெறமுடியாத சூழல் இருக்கின்றது. தொழிலாளிகள் இன்மையால் உப உணவுப் பயிர்ச்செய்கை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அவதானிக்கின்றேன்.// (- Jera Thambi; https://www.facebook.com/JERA.jeyarajh/posts/1219723188111232?pnref=story)

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப் படுத்த தயங்காத கடும்போக்கு ஊடகவியலாளர், இந்த விடயத்தில் மட்டும் அரசைக் கண்டிக்காமல் மென்போக்குடன் நடந்து கொள்வது ஆச்சரியத்திற்குரியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலை கொடுக்காத அரசை திட்டித் தீர்ப்பார் என்று எதிர்பார்த்தால், நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

"ஏய், சிங்கள அரசே! முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடு!" என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அறச்சீற்றம் கொள்ள வேண்டிய கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள், மென்போக்காக அடக்கி வாசிக்கிறார்கள். "எழுக தமிழ்" என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தி வட மாகாணத்தை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கலாம். அவ்வாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், முன்னாள் போராளிகளை தனியார் துறையில் வேலை தேடுமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஒரு ஒடுக்குமுறை அரசை பாதுகாக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா?

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவு அரச இயந்திரத்தின் ஓர் அங்கம் என்பது அவர் அறியாதது அல்ல. முன்னாள் போராளிகள் இராணுவத்தில் போர்வீரர்களாக சேர்வதற்காக அங்கே வேலை கேட்டுச் செல்லவில்லை. அதை மேற்படி ஊடகவியலாளர் உறுதிப் படுத்துகின்றார். ஆனால், "எதற்காக அரசிடம் வேலை கேட்டு கையேந்துகிறீர்கள்?" என்பது தான் அவரது "ஆதங்கம்"! அதனால் தான் "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" என்று கேட்கிறார்.

சிங்கள அரசு நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கும் பல தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளர்களாக உள்ளனர். அதற்கு ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். தமிழ்த் தேசிய ஆர்வலர் ஒருவர், பாடசாலை ஆசிரியராக இருந்தாலும், வட மாகாணத்தின் கீழான நிறுவனம் ஒன்றில் வேலை செய்தாலும், அவர் அரசுக்குவேலை செய்கிறார். அதாவது சிங்கள அரசிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறார். பல்கலைக்கழக பட்டதாரிகளான இவர்களுக்கு, "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" சிங்கள அரசுக்கு கீழே அடிமையாக வேலை செய்வதை விட, ஒரு தமிழ் முதலாளியின் கீழ்  வேலை செய்வதை பெருமையாகக் கருதவில்லையா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். நேரடியான வரிகள், மறைமுகமான வரிகள் என்று பலவுண்டு. அரசு மக்களிடம் இருந்து அறவிடும் வரிப் பணத்தை என்ன செய்கிறது? அதை மீண்டும் மக்களுக்கே செலவிட வேண்டாமா? ஆசிரியராக அரசு உத்தியோகம் பார்க்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எங்கிருந்து சம்பளம் வருகின்றது? மக்களிடம் இருந்து எடுக்கும் வரிப்பணம் தானே சம்பளமாக மாறுகின்றது?

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்றால், பத்தாம் வகுப்பை முடிக்காத முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுப்பது எப்படி தவறாகும்? அரசிடம் வேலை கேட்டு போராடுவது எப்படித் தவறாகும்? தனது பிரஜைக்கு வேலை கொடுப்பது அரசின் கடமைகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக, அதன் சாத்தியப்பாடுகள் குறைவு என்பதால், தனிநபருக்கு வேலை கொடுக்காததற்காக அரசின் மீது வழக்குப் போட முடியாது. ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதும், வறுமையில் இருந்து மீளுவதும் மனித உரிமைகள் இல்லையா? குறிப்பாக, அவை தமிழர்களின் உரிமைகள் இல்லையா? அதையெல்லாம் புறக்கணித்து விட்ட, எந்த உரிமைகளுக்காக போராடுகின்றீர்கள்? மனிதன் வாழ்வதற்கான உரிமை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

வாழ்வாதாரத்திற்காக தான் முன்னாள் போராளிகள் போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு வேலை கொடு என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா? அரசு இறங்கி வரவில்லை என்றால், "எழுக தமிழ்" கோஷத்துடன் வேலை நிறுத்தம் ஒன்றை அறிவியுங்கள். சிங்களப் பேரினவாத அரசை பணிய வைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது ஏன்?

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, May 27, 2015

நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!


தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 

சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.



****
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்
2. நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
3.தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Monday, April 13, 2015

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்


தமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.

புலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.

ஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே?

"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: "ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா?


பதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம்? ராஜபக்ச ஒரு "சிங்களப் பிரபாகரனாக" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.

பல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. 

தமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

துரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்?

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ? நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?குறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா? அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா?

வெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா? புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா?

"தமிழ் தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான "கம்யூனிச" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்?

Tuesday, August 19, 2014

புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!


தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.

எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.

ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.

இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.

புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.

1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.

ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?

ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 

அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.

தமிழ் நாட்டில் "ரா"மையாவின் ஆட்டம் ஆரம்பம்.

*****

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்
ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

Sunday, August 10, 2014

"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், "ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!" என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். இது அவர்களது வழமையான இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் Niche market என்று அழைக்கப் படக் கூடிய, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத வெளிநாட்டு குடியேறிகளை குறி வைத்து தான், லைக்கா தனது வியாபாரத்தை ஆரம்பித்தது. செய்மதி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மிகக் குறைந்த செலவில் உலக நாடுகளுக்கு இடையில், தொலைபேசி அழைப்புகள் சாத்தியமாகி உள்ளன. மேற்கத்திய பன்னாட்டு கம்பனிகள், தமது உலகமயமாக்கலை இலகுவாக்கும் நோக்குடன் அது கொண்டு வரப் பட்டது. லைக்கா, லெபரா, அவற்றின் தாய் நிறுவனமான ஞானம் என்பன, அந்த சேவையை வெளிநாட்டு குடியேறிகளுக்கு வழங்கி பிரபலமடைந்தன.

ஞானம், லைக்கா, லெபரா தொலைபேசி அட்டைகள், குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு தொடர்பு படுத்தி தருவதாக விளம்பரம் செய்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது? உலக நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்புக்கு, ஒரு செய்மதி நிறுவனத்திற்கு வாடகை கட்ட வேண்டும். அதே மாதிரி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில், உள்நாட்டு தொடர்புகளுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கு வாடகைப் பணம் செலுத்த வேண்டும். (புலம்பெயர்ந்த நாடொன்றில் வாழும் ஒருவரின் தொலைபேசியில் இருந்து செல்லும் அழைப்பிற்கு, அந்த தேச எல்லை வரையிலான கட்டணம்.) 

மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால், லைக்கா நிறுவனமும் அவற்றில் தங்கி உள்ளது. ஒரு தடவை, லைக்கா பெருந்தொகை வாடகைப் பணம் கட்டவில்லை என்று, சம்பந்தப் பட்ட நிறுவனம் சேவையை துண்டித்து விட்டது.

மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றும் படி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!

நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப் பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும். 

லைக்கா நிறுவனத்தின் அலுவலகங்கள், இலகுவில் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசத்தில் இருக்கும், அல்லது அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக, இடைத் தரகர்களும், சில்லறை வணிகர்களும் தான், பாவனையாளர்களின் கோபாவேசத்திற்கு பலியாகின்றனர். எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர், மக்களிடம் தர்ம அடி வாங்கி இருக்கிறார்கள்.

லைக்கா நிறுவனம் பாவனையாளர்களை மட்டும் சுரண்டவில்லை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையாக சுரண்டப் படுகின்றனர். பெருமளவு தொழிலாளர்கள், லைக்கா சிம் அட்டைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 8 - 10 மணிநேரம், தெருவில் நின்று போவோர் வருவோரிடம் கூவிக் கூவி விற்க வேண்டும். ஏற்கனவே லைக்காவின் திருட்டுக்களை தெரிந்து கொண்டவர்கள், காது கூசும் வண்ணம் நாலு திட்டு திட்டி விட்டு செல்வார்கள். "லைக்கா, லெபரா... இவை எல்லாம் கொள்ளைக் கோஷ்டிகள்...மாபியா குழுக்கள்..." என்று பலர் சொல்வதை என் காதாரக் கேட்டிருக்கிறேன்.

விற்பனைப் பிரதிநிதிகளும் பாவப் பட்ட ஜென்மங்கள் தான். பன்மொழிச் சமூகங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, லைக்கா பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அந்தந்த நாட்டில், எது குறைந்த பட்ச ஊதியமோ, அதைத் தான் சம்பளமாகக் கொடுப்பார்கள். அதற்கு மேலே ஒரு சதம் கூட்ட மாட்டார்கள். விற்பனைப் பிரதிநிதிகள், ஒவ்வொரு நாளும், குறைந்தது பத்து சிம் அட்டைகளை "அக்டிவேட்" செய்ய வேண்டும். அதாவது, தெருவில் போகும் அப்பாவிகளை கையைப் பிடித்து இழுத்தாவது, சிம் கார்ட் அக்டிவேட் செய்து கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், அன்றைக்கான போக்குவரத்து செலவு கிடைக்காது! ஒரு சில பிரதிநிதிகள், ஐம்பது கி.மி. தூரத்தில் உள்ள நகரங்களுக்கும் பயணம் செய்து, அங்கே வேலை செய்து விட்டு திரும்புகின்றனர். அவர்களது நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

விற்பனைப் பிரதிநிதிகளான தொழிலாளர்களை, லைக்கா நேரடியாக பணிக்கு அமர்த்துவதில்லை. அதற்கென்று, "முகவர் நிறுவனங்கள்" இருக்கின்றன. அனேகமாக, லைக்கா மனேஜர் ஒருவரே, தனது பெயரில் ஒரு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வைத்திருப்பார். குறிப்பிட்ட அளவு தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தி இருப்பார். இந்த முகவர் நிறுவனங்களின் ஆயுட்காலம், அதிக பட்சம் ஒரு வருடம் தான். அதற்குள் வரி ஏய்ப்பு மற்றும் பல திருட்டுக்களை செய்து விட்டு, நிறுவனத்தை திவாலாக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, வேறொரு இடத்தில், இன்னொருவர் வேலை வாய்ப்பு நிறுவனத்தை திறப்பார்.

லைக்கா நிறுவனத்தின் வண்டவாளங்கள் இவ்வளவு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னும் பல "தொழில் இரகசியங்கள்" உள்ளன. இல்லாவிட்டால், எப்படி கோடிக் கணக்கில் இலாபம் சம்பாதிக்க முடியும்? பாவனையாளர்களையும், தொழிலாளர்களையும் சுரண்டி சேர்த்த பணத்தை, மென்மேலும் பெருக்குவதற்காக, லைக்கா நிறுவனம் தமிழ்ப் படம் தயாரிக்கிறது. ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் முதலிடுகின்றது. முதலாளித்துவ உலகில் இதெல்லாம் சகஜம். இப்போது தான் லைக்காவின் சுயரூபம் தெரிந்தது மாதிரி பலர் நடந்து கொள்கின்றனர்.

உலகில் எந்த முதலாளிக்கும் இன உணர்வு கிடையாது. அவர்களிடம் உள்ளதெல்லாம் பண உணர்வு மட்டுமே. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யார் காலிலும் விழுவார்கள். நமது நாடுகளில் அரசியலும் முதலாளித்துவத்திற்கு சார்பானது தானே? சிங்கள இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதம் பேசும் சீமானும், முதலாளிகளின் நண்பர்கள் தானே? அவர்களுக்கும் லைக்காவுக்கும் தொடர்பு ஏற்பட்டதில் என்ன அதிசயம் இருக்கிறது?

இன்று ராஜபக்சவை, லைக்காவை எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் அப்படித் தான். இனம் இனத்தோடு தானே சேரும்? போலித் தமிழ் இன உணர்வாளர்களும் முதலாளிய ஆதரவாளர்கள் தான். அதில் என்ன சந்தேகம்? அவர்களே பல தடவைகள் நேரடியாகக் கூறி இருக்கிறார்கள். 

லைக்கா முதலாளி, ராஜபக்ச, சீமான், விஜய், போலித் தமிழ் இன உணர்வாளர்கள்.... இவர்கள் யாருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. மாறாக, வர்த்தகப் போட்டியாளர்கள். நிதி மூலதனத்தில் யாருக்கு எந்தளவு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான போட்டி நடக்கிறது. முதலாளியத்தை ஆதரிப்பவர்கள், தங்களது வர்க்க நலன் சார்ந்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருப்பார்கள். அது இயற்கையானது. அவர்கள் என்றைக்குமே சரியாகத் தான் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மட்டும் தான், இவர்களது சுயரூபம் தெரியாமல் நம்பி ஏமாறுகிறார்கள்.

Friday, December 06, 2013

ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே, ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் தமிழினவாதிகள், யதார்த்தத்தை மறந்து சிந்திப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது புதிதாக முளைத்துள்ள போலி இடதுசாரிகள் சிலர், இடதுசாரியம் பேசிக் கொண்டு, புதிய மொந்தையில் பழைய கள்ளை இறக்கித் தருகிறார்கள். கள்ளில் கம்யூனிச வாசனையுடன் தமிழ் தேசியத்தை கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தேசியமும், சோஷலிசமும் கலந்த இயக்கங்கள் முளைப்பது, வரலாற்றில் இதுவே முதல் தடவை அல்ல. இன்று ரஷ்யாவில் உள்ள, "தேசிய போல்ஷெவிக் கட்சி" யுடன் அவர்களை ஒப்பிடலாம். அந்தக் கட்சியின் கொடியிலும் அரிவாளும், சுத்தியலும் சின்னம் இருக்கும். ஆனால், கொள்கை அளவில் மிகத் தீவிரமான ரஷ்ய தேசியவாதிகள். அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை ஏய்ப்பதற்காக, கம்யூனிஸ்டுகள் போன்று பாவனை செய்கிறார்கள்.

சமரன் குழு என்ற பெயரில், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்வதாக சொல்லிக் கொண்டு, தாமாகவே கற்பனை செய்து புனைந்த கட்டுக்கதைகளை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார்கள். "புதிய ஜனநாயகம்" இதழில், அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தும் கட்டுரைகள் வந்துள்ளன. முகநூலில் "தமிழ் இனியன்" என்ற பெயரில் இயங்கும் ஒருவர், என்னுடன் ஈழம் பற்றிய விவாதத்திற்கு வந்தார். அதில் அவர் தவறாக புனைந்து கூறிய கருத்துக்களை, நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. 

குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், டெலோ, புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இடையில் நிலவிய ஒத்த கருத்துள்ள கொள்கைகள் பற்றிய விவாதம் எழுந்த பொழுது அதை மறுத்துரைத்தார். டெலோ, புலிகள் இவற்றிற்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளாக "இந்திய கைப் பாவைகள்" என்ற அளவுகோலை பயன்படுத்தினார். அதாவது, புலிகளைத் தவிர்ந்த பிற இயக்கங்கள், இந்தியக் கைப் பாவைகளாக இருந்தன என்பது தான், அவரைப் பொறுத்த வரையில் முக்கியமான "கொள்கை வேறுபாடு." அது சரியானதா என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஆகிய இயக்கங்களுக்கு இடையில் காணப்பட்ட, கொள்கை ரீதியான சில ஒற்றுமைகள்


  • இரண்டுமே வலதுசாரி தேசியவாதத்தை கொண்டிருந்தன. உதட்டளவில் கொஞ்சம் இடதுசாரியம் பேசின. இரண்டுமே இராணுவ கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் வகுப்புகள் நடத்தப் பட்டாலும், அரசியல் பிரிவு வளர்வதற்கு ஊக்குவிக்கப் படவில்லை. அரசியல் பிரிவு கூட, இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தான் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. 

  • டெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியமை, அந்தக் காலத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய இராணுவத் தாக்குதல் ஆகும். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில், நாற்பதுக்கும் குறையாத பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. டெலோ அதனை வீடியோ படமாக்கி, அதனை ஊர் ஊராக கொண்டு சென்று காட்டியது. அதன் மூலம், நிறைய புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடிந்தது. இராணுவ வெற்றியால் கவரப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரும் டெலோவுக்கு ஆதரவளித்தனர். 

  • பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். புலிகள் இராணுவ முகாம்களை தாக்கிய போதெல்லாம், வீடியோ படப்பிடிப்பாளர்களும் கூடச் சென்றார்கள். அவர்கள் படமாக்கிய வீடியோக்கள், வெளிநாடுகள் வரையில் பரவின. வீடியோ பிரச்சாரம் மூலம், புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டதுடன், மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கொண்டனர்.

  • இடதுசாரி தன்மை கொண்ட ஈழ விடுதலை இயக்கங்களில், எல்லோரும் அரசியல் பேசுமளவிற்கு பயிற்சியளிக்கப் பட்டது. ஆனால், வலதுசாரி இராணுவவாத இயக்கங்களான டெலோவும், புலிகளும் "அரசியல் ஆலோசகர்" என்ற தனியான பதவியை உருவாக்கினார்கள். டெலோவுக்கு சத்தியேந்திரா அரசியல் ஆலோசகராக இருந்தார். புலிகளுக்கு முன்னர் நித்தியானந்தனும், பின்னர் அன்டன் பாலசிங்கமும் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள்.

டெலோ, புலிகள் இரண்டு இயக்கங்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டியதும், தமிழ் இனியன் பின்வரும் விளக்கம் ஒன்றை தந்திருந்தார். கீழே, தமிழ் இனியனின் கூற்றை அப்படியே தருகிறேன்:

//இரண்டு இயக்கங்களுமே, ஏன் எல்லா இயக்கங்களுமே, தமிழீழ விடுதலையை முன்வைத்தே தோன்றின. அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. ஆனால், பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப் பாவையாக மாறினார்கள். அப்படி ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. எனவே, புலிகளும், டெலோவும் ஒத்த கருத்தில் இருந்தனர் எனச் சொல்வது அபத்தமானது.//

"எல்லா இயக்கங்களும் "தமிழீழ" விடுதலையை முன்வைத்தே தோன்றின." என்று தொடங்குவதே அவரது அரசியல் பாமரத்தனத்தை காட்டி விடுகின்றது. டெலோ, புலிகள், புளொட் ஆகிய மூன்று இயக்கங்கள் மட்டுமே "தமிழீழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயர்களிலேயே தமிழீழம் இருக்கும். ("தமிழீழ" விடுதலை இயக்கம், "தமிழீழ"விடுதலைப் புலிகள், "தமிழீழ"மக்கள் விடுதலைக் கழகம் )  ஈரோஸ், ஈபிஆர்எல்எப் ஆகியன "ஈழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயரிலேயே ஈழம் இருக்கிறது. ("ஈழப்" புரட்சி அமைப்பு, "ஈழ" மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி )

தமிழீழம், ஈழம் இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இருக்கிறது. அது தான் கொள்கை வேறுபாடு.  முதன்முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தான், தமிழீழம் என்ற சொல்லை பயன்பாட்டில் கொண்டு வந்தது. புத்தளம் முதல் அம்பாறை வரையிலான தமிழீழ வரைபடத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். அந்தக் கோட்பாட்டை, டெலோவும், புலிகளும் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டன. புளொட் பிற்காலத்தில் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் ஆகும். ஆகவே அவர்களும், அதே தமிழீழத்தை ஏற்றுக் கொண்டமை புரிந்து கொள்ளத் தக்கது.

எழுபதுகளில், புலிகள் தோன்றிய சம காலத்திலேயே, ஈரோஸ் தோன்றி இருந்தது. ஈரோஸ் இயக்கத்தினர், தமிழீழம் என்ற சொல்லை நிராகரித்து, அதற்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அதற்கு ஒரு விசித்திரமான விளக்கம் கொடுத்தார்கள். "பாலஸ்தீனர்கள் அரபு-பாலஸ்தீனம் கோரவில்லை. அவர்களது தாயகம் பாலஸ்தீனம். அதே போல, நாம் தமிழர்களாக இருந்தாலும், எமது தாயகம் ஈழம்" என்றார்கள்.

அதாவது, தமிழீழம் என்ற பெயரில் இனவாத தொனி காணப் படுவதாகவும், ஈழம் என்பதற்குள் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்பது அவர்களது கொள்கை. ஈரோஸ், ஈழ தேசத்தின் பிரஜைகளுக்கு  "ஈழவர்கள்" என்று பெயர் சூட்டி இருந்தது. பிற்காலத்தில், ஈரோஸில் இருந்து பிரிந்து சென்ற ஈபிஆர்எல்ப் இயக்கம், "ஈழம்" என்ற பெயரை தானும் சுவீகரித்துக் கொண்டது. (ஈழவருக்கு பதிலாக "ஈழ மக்கள்" என்ற பதத்தை பயன்படுத்தியது.)

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புலிகள், புளொட் முன்மொழிந்த தமிழீழ வரைபடத்திற்கும், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் முன்மொழிந்த ஈழ வரைபடத்திற்கும் இடையில் வித்தியாசம் இருந்தது. தமிழீழ வரைபடத்தில் புத்தளம் மாவட்டம் சேர்க்கப் பட்டிருந்தது. ஈழ வரைபடத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, மலையகத் தமிழர்கள் வாழும் மலைநாட்டுப் பிரதேசம் இணைக்கப் பட்டிருந்தது. ஈரோஸும், ஈபிஆர்எல்ப் உம், மலையகத் தமிழ் மக்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். புலிகளும், டெலோவும் அவர்களை அலட்சியப் படுத்தினார்கள். ஈழப்போரின் பிற்காலத்தில், வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் புலிகளில் இணைந்து போரிட்டது வேறு கதை. ஆனால், புளொட் அவர்களை ஏற்கனவே அரசியல் மயப் படுத்தி இருந்தது.

இந்த இடத்தில், இன்னொரு கொள்கை வேறுபாட்டையும் நாம் மறந்து விடலாகாது. உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களிலும், வலதுசாரி, இடதுசாரி வித்தியாசம் இருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்திலும் அது நடந்தது. டெலோ, புலிகள் ஆகியன வலதுசாரி இயக்கங்களாக தோற்றம் பெற்றன. அவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலதுசாரி தேசியவாதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டன. ஆனால், இரண்டு இயக்கங்களிலும் தலைமைப் பொறுப்பில் சில இடதுசாரி உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு, சில இடதுசாரி கோஷங்களை முன்வைத்தார்கள். உதாரணத்திற்கு: சோஷலிசத் தமிழீழம். ஏற்கனவே, வட்டுக்கோட்டை மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையிலும் சோஷலிசத் தமிழீழம் என்றே குறிப்பிடப் பட்டது. இவ்வாறான சில இடதுசாரி கோஷங்களை தவிர, நடைமுறையில் வலதுசாரி அரசியல் தத்துவமே பின்பற்றப் பட்டது.

//அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. // (தமிழ் இனியன்)

அப்படியான பொதுமைப் படுத்தலே தவறானது. ஈழப் போராட்ட வரலாற்றில் எதையுமே கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. டெலோ, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு, "வல்வெட்டித்துறை தொடர்பு" ஒரு காரணமாக அமைந்திருந்தது. டெலோ தலைவர்கள் தங்கத்துரை, குட்டிமணி; மற்றும் புலிகளின் தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா ஆகியோர், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

பல தசாப்தங்களாக, வல்வெட்டித்துறை படகோட்டிகள், அடிக்கடி படகுகளில் தமிழ்நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகளாக இருந்தாலும், அந்த தொடர்புகள் தலைமறைவு இயக்கங்களுக்கும் பிரயோசனமாக இருந்தன. அவர்கள் இந்தியாவில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து விற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டெலோவும், புலிகளும், "வல்வெட்டித் துறை தொடர்புகளை", தமிழீழ அரசியலுக்கு பயன்படுத்தி வந்ததால் தான், ஒரு கட்டத்தில் பிரபாகரன் கூட டெலோ இயக்கத்தில் சேர்ந்து செயற்பட முடிந்தது.

தமிழ் இனியன் குறிப்பிடும் "பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும்", புலிகள் - புளொட் உறவில் இருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இருந்து உமா மகேஸ்வரன், சுந்தரம் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றதும், இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று எதிரிகளாக கருதிக் கொண்டன. "பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது போல, உமாமகேஸ்வரன் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்தார்." சென்னை, பாண்டி பஜாரில், பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த செய்தி. பிளவின் ஆரம்ப காலங்களில், இரண்டு குழுவினரும், மாறி மாறி எதிர் தரப்பு உறுப்பினர்களை கொலை செய்தார்கள்.

//பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப்பாவையாக மாறினார்கள். // (தமிழ் இனியன்)

ஆரம்பத்தில், இந்திய அரசு அவர்களை புறக்கணித்து வந்தது. ஈழ விடுதலை இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டில் புகலிடம் கோரி இருந்தாலும், அங்கும் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் ஏற்பட்ட தொடர்பு ஓரளவு காப்பாற்றியது. அதுவும் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே சாத்தியமானது.

1983 ம் ஆண்டுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. ஜூலை இனக்கலவரம், அதனால் இந்திய-இலங்கை அரசுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை, போராளிக் குழுக்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய மத்திய அரசு, அனைத்து இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சியளிக்க முன்வந்தது. புலிகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியா ஆயுதமும், பயிற்சியும் கொடுத்த காரணத்தினால், ஐந்து பெரிய இயக்கங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

டெலோவுக்கு கருணாநிதியும், புலிகளுக்கு எம்ஜிஆரும் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால், இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தெரிந்தே அதனை செய்தார்கள். டெலோ இந்திய மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்தது உண்மை தான். ஆனால், அந்தக் காலத்தில் அதை யாரும் இழிவாகக் கருதவில்லை. மாறாக, அது "பெருமைக்குரிய விடயமாக" கருதப் பட்டது. டெலோவும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் "இந்திய தொடர்பை"  சொல்லிக் காட்டி, அரசியல் பிரச்சாரம் செய்து வந்தது. ஏனென்றால், இந்தியா படையனுப்பி ஈழம் வாங்கித் தரும் என்ற மாயை, அன்றைய தமிழ் மக்கள் மனதில் இருந்தது. பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்தியாவை "தாய் நாடு" போன்று கருதி வந்தனர்.

இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஏதோ ஒரு வழியில் கட்டுப் படுத்தி வந்தது. தமிழ்நாட்டில் அவர்களை சுதந்திரமாக இயங்க விட்டதாக காட்டிக் கொண்டாலும், RAW வுக்கு தகவல் கொடுக்கும் பலரை இயக்க மேல் மட்டங்களில் வைத்திருந்தது. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் RAW ஊடுருவி இருந்தது. புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.

டெலோ இந்திய மத்திய அரசின் செல்லப் பிள்ளையாக இருந்திருந்தால், எதற்காக புலிகளுடன் மோதல் வெடித்த காலத்தில் அதனை கைவிட்டது? டெலோவை அழித்த புலிகள், பெருந்தொகையான இந்திய ஆயுதங்களை கைப்பற்றியதுடன், "டெலோ இந்தியக் கைப் பாவையாக செயற்பட்டதாக" மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். ஆனால், அப்போதும் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படவில்லை. (பிற்காலத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பொழுது தான், அந்த விரிசல் தோன்றியது.) யாழ்ப்பாணத்தில் டெலோவை தடை செய்த புலிகளை, இந்தியா தனது நாட்டில் தடை செய்யவில்லை. ஆகவே, இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை, இந்தியா முன்கூட்டியே அனுமானித்திருக்கலாம்.

1987-1990 வரையில், இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டீஎல்எப் ஆகியன இந்தியாவின் கைப் பாவைகளாக மட்டுமல்ல, அதற்கும் மேலே கூலிப்படைகளாக பயன்படுத்தப் பட்டன. ஆனால், இந்திய இராணுவம் வெளியேறும் நேரம், அவர்களை புலிகளின் கரங்களில் ஒப்படைத்து விட்டு ஓடி விட்டது. மேற்படி இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட, ஆயிரக் கணக்கான "தமிழ் தேசிய இராணுவ" இளைஞர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்கள். இந்தியா நினைத்திருந்தால், தனது "கைப் பாவைகளை" காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக புலிகளின் கை ஓங்குவதற்கு அனுமதித்தது.

//(இந்தியாவின் கைப்பாவை ) ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. // (தமிழ் இனியன்)

1987 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், புலிகள் இயக்கம் இந்தியாவுடன் முரண்பட்டது. மிகப் பெரிய இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்வதற்கும் துணிந்தது. அதற்கு முன்னர் இந்தியா புலிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தது. முதன் முதலாக இந்தியாவிடம் இருந்து விலகியது புலிகள் அல்ல. எழுபதுகளில் இருந்து, ஈரோஸ் PLO வுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பிட்டளவு இளைஞர்களை லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்பியது. அதே மாதிரி, புளொட் PFLP  இடம்  பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டது.

1984 ம் ஆண்டு, புளொட் இந்தியாவை விமர்சிக்கும் "வங்கம் தந்த பாடம்" என்ற சிறு நூலை, தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்தது. (பங்களாதேஷ் பிரிவினையில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் அந்த நூலில் விபரிக்கப் பட்டிருந்தன.)   புளொட் இயக்கம், இந்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் வாங்கிய ஆயுத தளபாடங்களை, ஒரு கப்பலில் கடத்திக் கொண்டு வர முயற்சித்தது. அந்த விடயம், இந்தியாவுக்கு தெரிய வந்த பின்னர், இந்தியக் கடற்படையினர் புளொட்டின் ஆயுதக் கப்பலை கைப்பற்றினார்கள். ஒரு புளொட் குழுவினர், மாலைத்தீவு வர்த்தகர் ஒருவரின் கூலிப்படையாக சென்று சதிப்புரட்சி மூலம் மாலைத்தீவை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சதிப்புரட்சியை முறியடித்த இந்திய இராணுவம், புளொட் கூலிப் படையினருக்கு கடுமையான தண்டனை வழங்கியது.

இந்தியாவுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையிலான உறவு, அப்படி ஒன்றும் சிறப்பாக இருக்கவில்லை. சென்னையில் இருந்த டெலோவின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, இந்தியாவை விட்டு நாடுகடத்தப் பட்டார். யாழ்ப்பாணத்தில், அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தலில் ஈடுபட்ட ஈபிஆர்எல்எப் மீது, இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுத்தார்.  (சி.ஐ.ஏ. என்று குற்றஞ்சாட்டி கடத்தப்பட்ட அலன் தம்பதிகள், இந்திரா காந்தியின் பயமுறுத்தலின் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.) இந்தியா இன்னொரு முக்கியமான தடைக் கல்லை போட்டது. இடதுசாரி ஈழ விடுதலை இயக்கம் எதுவும், தமிழ்நாட்டில் இருந்த நக்சல்பாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை, இந்தியா விரும்பவில்லை. அந்த இயக்கங்கள் தன்னிச்சையாக எடுத்த, அவ்வாறான முயற்சிகள் யாவும் தடுக்கப் பட்டன. 

தமிழ் இனியன் ஒரேயடியாக 1987 காலகட்டத்திற்கு தாவுகிறார். ஆனால், அப்போது கூட நிலைமை அவர் நினைப்பது போல இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் போய் இறங்கியதும், ஈழத் தமிழ் மக்கள் அவர்களை இரு கரம் நீட்டி, மகிழ்வுடன் வரவேற்றார்கள். அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இந்தியப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்ததும், மக்கள் அதையும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். இந்தியப் படைகளை, யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் வரவேற்றதற்கு காரணம், அவர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு. நீண்ட காலமாக, இந்தியா படையனுப்பி தங்களை காப்பாற்றும் என்று, தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் வருகைக்குப் பின்னர், இரண்டு மாதமாக நிலவிய சமாதானம் குலைந்தது. இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. யுத்த காலத்தில் இந்திய இராணுவம் தனது கோர முகத்தை காட்டியது. இந்தியப் படைகள் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன, புலிகளுக்கு தமிழ்ப் பொது மக்களின் அனுதாபத்தை பெற்றுத் தந்தது. ஒரு காலத்தில் வரவேற்கப்பட்ட இந்திய இராணுவம், அதே தமிழ் மக்களால் வெறுக்கப் பட்டது.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெறுத்தாலும், இந்தியாவை நிராகரிக்கவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் இருந்து அரசியல் தீர்வு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு போன்ற இன்றைய தமிழ்த் தலைமைகள், தமக்கு இந்திய ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். 

அதிகம் பேசுவானேன், புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழகத்தில் நெடுமாறன் , வைகோ போன்ற புலி ஆதரவு அரசியல்வாதிகள், புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள். "தமிழீழம் அமைந்தால், அது ஒருக்காலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படாது." என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.  இப்போதும், "இலங்கையில் சீனா கால் பதிக்கிறது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்."என்று இந்தியாவுக்காக கவலைப் படுகிறார்கள்.

தமிழ் இனியன் சொல்வது போல, "புலிகள் இந்திய கைப் பாவை ஆகாமல் இருந்ததால் தான், மக்கள் ஆதரவை பெற முடிந்தது" என்பது உண்மையானால், இன்று தமிழக தமிழினவாதிகள் அனைவரும், ஈழத் தமிழ் மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.