Wednesday, May 03, 2017

பாரிஸ் 93 ம் வட்டாரம் : ஏழைகளின் தெரிவு கம்யூனிச வேட்பாளர் மட்டுமே


சான் டேனி (Saint-Denis) பாரிஸ் நகரில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கட்தொகை கொண்ட வட்டாரம். பாரிஸ் நகர நிர்வாகத்தில் 93 வது வட்டாரமாக பிரிக்கப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்க, அரேபிய குடியேறிகளை பெருமளவில் கொண்ட பகுதி. ஒருவர் அந்த இடத்தில் முகவரியை கொண்டிருந்தால், பாரிசின் பிற பகுதிகளில் வேலை எடுப்பது மிகவும் கடினம். CV இல் 93 இலக்கத்தை கண்டவுடனே நிராகரித்து விடுவார்கள்.

சான் டேனி பகுதியில் தான், பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களின் சமாதிகள் உள்ளன. ஆனால், உல்லாசப் பிரயாணிகள் யாரும் அங்கே செல்வதில்லை. அதற்குக் காரணம் அந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றது என்ற அச்சம். அங்கே யாரும் வீடு வாடகைக்கு எடுக்கவும் விரும்புவதில்லை. உண்மையிலேயே குற்றச் செயல்கள் பெருகிய பிரதேசம் தான். அதே நேரம், வேலையில்லாப் பிரச்சினை, வறுமையும் அதிகளவில் கொண்ட பிரதேசம்.

எண்பதுகள் வரையில், அதாவது பிரான்ஸ் பொருளாதார நிலைமை நன்றாக இருந்த காலம் வரையில், சான் டேனி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி வெளியுலகில் பலர் அறிந்திருக்கவில்லை. அப்போது எல்லோருடைய கவனமும் "கம்யூனிச நாடுகள் எப்போது கவிழும்" என்பதில் தான் குறியாக இருந்தது. ஒருவேளை சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் நல்ல மாதிரி தொடர்ந்தும் இருந்திருந்தால், மேற்கு ஐரோப்பாவில் அப்போதே மிகப் பெரிய குழப்பங்கள் உண்டாகி இருக்கலாம். அது வேறு கதை.

எண்பதுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவில் பாதிக்கப் பட்ட பிரெஞ்சுப் பகுதிகளில் சான் டேனியும் ஒன்று. அதுவரை காலமும் அங்கு இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் மூடப் பட்டன. அதில் ஒரு பகுதி உற்பத்தி, மீண்டும் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. சான் டேனி பகுதியில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. கூடவே வறுமையும் அதிகரித்தது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. அந்தப் பகுதி முழுவதும் சட்டவிரோத குடியேறிகளின் புகலிடமாகியது. அன்று அதைப் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப் படவில்லை.

காலங்கள் உருண்டோடின. விளிம்பு நிலையில் வாழ்ந்த அரபு - முஸ்லிம் சமூகத்தினுள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் ஊடுருவின. வறுமை, வேலையில்லாப் பிரச்சினைக்கு வடிகாலாக, இளம் சமுதாயம் மதத்திற்குள் மூழ்கியது. 2015 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் ஒரு தீவிரவாத சந்தேகநபரைத் தேடி சான் டேனி வந்தனர். இரண்டு மணிநேர துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் சந்தேகநபரை சுட்டுக் கொன்றனர். இப்போதும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப் பட்ட ஓட்டைகளை காணலாம்.

தற்போது, பாரிஸ் சான் டேனி பிரதேசத்தில் வாழும் வெளிநாட்டவர் சமூகத்தில் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதவாத அரசியல் ஆபத்தானது மட்டுமல்ல, அரசும் அதையே எதிர்பார்க்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ்த் தேசியம் பேசுவதும், பிரான்ஸில் இஸ்லாமிய மதவாதம் பேசுவதும் ஒன்று தான். மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கே நன்மையாக முடியும். அரசின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்ட சான் டேனி பிரதேச மக்கள் தீவிர இடதுசாரி அரசியலை கையில் எடுத்துள்ளனர். ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போடுவோம், இல்லாவிட்டால் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்கின்றனர்.

23 April 2017 நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மெலேன்ஷோன் அதிகப் படியான வாக்குகள் பெற்ற இடம் சான் டேனி மட்டுமே! அன்று நடந்த தேர்தலில்,சான் டேனி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் பின்வருமாறு: 
Jean-Luc Mélenchon : 43,39 
Emmanuel Macron : 23,02 
Marine Le Pen : 10,07 
மெலென்ஷோன் முன்ன‌ர் ஆளும் சோஷ‌லிஸ்ட் க‌ட்சிக்குள் தீவிர‌ இட‌துசாரிய‌ம் பேசிக் கொண்டிருந்த‌வ‌ர். பின்ன‌ர் அதிலிருந்து பிரிந்து "இட‌து க‌ட்சி" என்ற‌ த‌னிக்க‌ட்சி அமைத்து அத‌ன் சார்பாக‌ ஜனாதிப‌தி வேட்பாள‌ராக‌ போட்டியிட்டார்.

வெற்றி பெற்ற முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு, மே 7 அன்று நடைபெறவுள்ளது. யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை பலர் இன்னும் தீர்மானிக்கவில்லை. இரண்டு வேட்பாளர்களும் தமது நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால், பெருமளவு மக்கள் பகிஷ்கரிக்கவுள்ளனர். இனவாதக் கட்சியான FN சார்பில் போட்டியிடும் மாரின் லெபென் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓர் இனவாதியிடம் இருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், இரண்டாவது வேட்பாளர் எமானுவேல் மக்ரோன் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்பது வெளிப்படையானது. அரசின் அதிகாரங்களை குறைத்து, முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கும் திட்டம் ஆபத்தானது. ஏற்கனவே அரசு என்ற ஒன்று பெயருக்காவது இயங்குவதால் தான் ஏழை மக்கள் உயிர்பிழைத்து வாழ முடிகின்றது. அதுவும் இல்லையென்றால் சென் டேனி ஒரு பாலைவனமாகி விடும் என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாட்டில் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம். ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கலாம். ஆனால், காலங்காலமாக சான் டேனி பிரதேசவாசிகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிரான்ஸில் நூறாயிரம் சனத்தொகை கொண்ட மூன்று நகரங்களில் கம்யூனிஸ்ட் மேயர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அதில் ஒன்று சான் டேனி. கம்யூனிஸ்ட் மேயர் லோரன்ட் ருசியே (Laurent Russier) ஐந்தாவது தடவையாக மேயராகப் பதவியேற்றுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு : 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: