Thursday, May 04, 2017

அமெரிக்கா கொரியாவில் நடத்திய இனப்படுகொலை மறைக்கப் படுவது ஏன்?


எந்தப் பெரிய மதிப்புக்குரிய ஊடகமாக இருந்தாலும், வட கொரியா விடயத்தில் பொய்களையும், புளுகுகளையும் துணிந்து சொல்லலாம். விரும்பியவாறு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடலாம். யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள். மக்களை அந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். 

வட கொரியா பற்றி தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கும் கட்டுக் கதைகளுக்கு "மர்ம மன்னன்", "மர்ம தேசம்" என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். அவற்றைப் பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் திகில் உணர்வுடன் இரசிப்பார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று,மெல்ல மெல்ல நச்சுக் கருத்துக்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டு விடும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் அதிகளவு விற்பனையாகும் ஆனந்த விகடன் சஞ்சிகையில் (26 Apr, 2017 ) மர்ம மன்னன்! என்ற பெயரில் ஓர் அபத்தக் கட்டுரை பிரசுரமாகி உள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பற்றி கிண்டல் அடிக்கிறார்களாம். கட்டுரை எழுத முன்னர் இணையத்தில் தேடிப் பார்த்தார்களாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்ன சாப்பிடுவார்?" "கேக், கம்ப்யூட்டர், கட்டடம், கார் மற்றும் நாய்க்குட்டி." இப்படி எல்லாம் இருந்ததாம். இண்டர்வியூ என்ற ஹாலிவூட் படத்தைப் பார்த்து விட்டும் இப்படி எழுதலாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பொழுதுபோக்கு என்ன?" "நீலப் படம் பார்ப்பது...அழகான பெண்களுடன் கும்மாளம் அடிப்பது..." இப்படி எல்லாம் பாலியல் சுவை ததும்பவும் எழுதலாம். வாசிப்பவர்களுக்கும் கிளுகிளுப்பாக இருக்கும்.

அது சரி. கட்டுரை எழுதுவதற்கு முன்னர் கொஞ்சமாவது ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா? அதெல்லாம் எதற்கு? தமிழர்கள் அந்தளவு அறிவாளிகளா? வட கொரியா பற்றி எப்படிப் புளுகினாலும் நம்புவதற்கு பல வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள். வட கொரியா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அணுவாயுதம் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால், அது அண்மையில் எழுந்த பிரச்சினை என்பது போல கட்டுரையாளர் எழுதும் புளுகுக் கதை அபாரம். 

கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: 
//அமெரிக்காவைச் சீண்டிக்கொண்டே இருப்பது, கிம்முக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சென்ற ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அணு ஆயுதப் பரிசோதனையை வட கொரியா நிகழ்த்தியபோது, அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது. எப்படியாவது அணு ஆயுதப் பரிசோதனையில் வெற்றிபெற வேண்டும் என்று தீராத துடிப்புடன் இருக்கிறார் கிம். அதற்கான காரணம் புரிந்து கொள்ளக் கூடியது தான்.//

கட்டுரையாளரே! உங்களுக்கு இணையம் பாவிக்கத் தெரியும் தானே? கொஞ்சம் தேடிப் பார்க்கலாமே? தொண்ணூறுகளில், அதாவது பனிப்போர் முடிவில், வட கொரியா அணு உலைகள் கட்டுவதாக தகவல்கள் வந்தன. அப்போதே அணுவாயுதம் தயாரிக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. உலகில் எந்த நாட்டுடனும் வர்த்தகத் தொடர்பில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த வட கொரியா, எரிசக்தி தேவைக்காக அணு உலை அமைப்பதாக சொல்லிக் கொண்டாலும், இன்னொரு எதிர்பாராத நோக்கமும் இருந்தது. அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார உதவி பெற்றுக் கொள்வது!

வட கொரியாவும், இந்தியா, இலங்கை மாதிரி ஒரு மூன்றாமுலக வறிய நாடு தான். இருப்பினும், மேற்குலக நாடுகள் இந்தியா, இலங்கைக்கு வழங்குவது வட்டியுடனான கடன். ஆனால், அதே நாடுகள் வட கொரியாவுக்கு கொடுத்தது நன்கொடை! 

வட கொரியாவின் அணு உலைத் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் அழுத்தம் கொடுத்தது. அதன் படி, சர்வதேச மேற்பார்வையின் கீழ் அணு உலை அகற்றுவதற்கு வட கொரியா சம்மதித்தது. அமெரிக்கா அதற்கு பதிலாக இலவச உணவுப் பொருட்களும், பெருமளவு பணமும் கொடுத்திருந்தது. 

நண்பர்களே இவர்களில் யார் புத்திசாலி? மேற்குலகிற்கு சமர்த்துப் பிள்ளையாக நடந்து, வாங்கிய கடனை வட்டியுடன் ஒழுங்காக கட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவா? அல்லது அணுகுண்டை காட்டி மிரட்டி செல்வந்த நாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளும் வட கொரியாவா?

அணுவாயுதம் வைத்திருப்பது தான் பிரச்சினை என்றால், பின்வரும் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா?

1. கொரிய‌ப் போரானது, யுத்த நிறுத்தத்தில் முடிந்து ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாகியும், அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ள் தென் கொரியாவை விட்டு வெளியேற‌ ம‌றுப்ப‌து ஏன்?

2. அமெரிக்கா தனது ஆயிர‌க்க‌ணக்கான‌ ப‌டையின‌ரை ம‌ட்டும‌ல்லாது, அணுவாயுத‌ங்க‌ளையும் தென் கொரியாவில் குவித்து வைத்திருந்தது ஏன்? அவற்றை இப்போதும் அங்கிருந்து அகற்ற மறுப்பது ஏன்?

3. ஏற்கனவே ஜப்பான் மீது அணுகுண்டு வீசி, பல இலட்சம் அப்பாவி மக்களைக் படுகொலை செய்த அமெரிக்கா, கொரியா மீது அணுகுண்டு வீசவும் திட்டமிட்டிருந்தது. இதனை அன்றைய அமெரிக்க படைத் தளபதி மக் ஆர்தர் உறுதிப் படுத்தி உள்ளார். அப்போதே அணுகுண்டு வீச நினைத்த எதிரி இடமிருந்து வேறு எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?

முன்பு சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், சோவியத் யூனியன், சீனா இரண்டுடனும் வட கொரியா நெருக்கமான உறவுகளைப் பேணியது அனைவரும் அறிந்த விடயம். அப்போதே அவ்விரண்டு நாடுகளிடம் இருந்தும் அணுவாயுத உதவி கோரப் பட்டது. ஆனால், இரண்டு சோஷலிச வல்லரசுகளும் அணுவாயுதம் தருவதற்கு சம்மதிக்கவில்லை.

அணுகுண்டு தயாரிப்பதற்கான அறிவு வட கொரியாவுக்கு எப்படிக் கிடைத்தது என்பது இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அனேகமாக, பாகிஸ்தான் மூலமாக கிடைத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. நெதர்லாந்தில் கல்வி கற்ற பாகிஸ்தானிய விஞ்ஞானி கான், அணுத் தொழில்நுட்ப இரகசியங்களை கடத்திச் சென்றிருந்தார். அதை வைத்துத் தான் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தது. அனேகமாக, கான் தனது தகவல்களை வட கொரியாவுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

பனிப்போரின் முடிவில், அமெரிக்கா ஒற்றை வல்லரசாகியது. அது தனக்கு எதிரான நாடுகளை "தீய நாடுகளின் அச்சு" எனப் பிரகடனம் செய்திருந்தது. சர்வதேச சமூகத்தால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப் பட்ட நாடுகளில் வட கொரியாவும் ஒன்று. அப்போதே ஒதுக்கப் பட்ட நாடுகள் ஒன்று சேரத் தொடங்கி விட்டன. தம்மிடமிருந்த வளங்களை பகிர்ந்து கொண்டன. உதாரணத்திற்கு, வட கொரியா கடாபியின் லிபியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்றது. ஈரானிய பாவனைப் பொருட்கள் வட கொரியாவுக்கு ஏற்றுமதியாகின.

சதாம் ஹுசைனின் ஈராக்கும், கடாபியின் லிபியாவும் அணுகுண்டு மாதிரி பேரழிவு தரும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவால் குற்றஞ் சாட்டப் பட்டன. உண்மையிலேயே அங்கு இரசாயன ஆயுதங்கள் இருந்துள்ளன. சர்வதேச அழுத்தம் காரணமாக, ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஈராக்கில் சதாமும், லிபியாவில் கடாபியும் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்டு, அந்த நாடுகள் சின்னாபின்னமாகின.

வட கொரியா தனது அணுவாயுதக் கொள்கைக்கு, ஈராக், லிபியாவில் நடந்தவற்றை காரணமாக சுட்டிக் காட்டுகின்றது. அதாவது, சர்வதேச அழுத்ததிற்கு அடிபணிந்து அணுவாயுதத்தை அழிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், வட கொரியாவும் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல்போயிருக்கும். மேலும் அருகில் சீனா என்ற வல்லரசின் ஆதரவு இருப்பதும் வட கொரியாவுக்கு சாதகமாகப் போய் விட்டது.

சீனாவுக்கு வட கொரியா மீது தனிப்பட்ட பாசம் எதுவும் கிடையாது. முன்பிருந்த சித்தாந்த உறவு இப்போது இல்லை. இன்றைய சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்பதால், பணத்திற்கே முன்னுரிமை. இருப்பினும், வட  கொரியாவால் சீனாவுக்கு சில அரசியல் ஆதாயங்கள் உள்ளன.

முதலாவதாக, வட கொரியா நிர்மூலமானால் அங்கிருந்து வெளியேறும் பெருமளவு அகதிகள் சீனாவில் தான் தஞ்சம் கோருவார்கள். இரண்டாவதாக, கொரியா ஒரே நாடானால் அமெரிக்க இராணுவம் சீன எல்லை வரை வந்து விடும். இந்த அபாயத்தை தடுப்பதற்கு, வட கொரியா தொடர்ந்தும் இருப்பதே சீனாவுக்கு பாதுகாப்பானது.


அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அப்படி என்ன தகராறு? நம்மில் பலருக்கு வரலாறு தெரியாது, அல்லது பழைய வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறோம். 1950 - 1953, இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த போரில் மாத்திரம், கொரிய சனத்தொகையில் இருபது சதவீதம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் அழித்தொழிக்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டிய காரணம் என்ன? அன்று அமெரிக்க படையினர் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தது?

இரண்டாம் உலகப்போரில், ஆசியாவில் ஜப்பானை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா போட்ட குண்டுகளை விட அதிகமாக கொரியா என்ற சிறிய நிலப்பரப்பினுள் போடப் பட்டன. 635,000 தொன் குண்டுகள்! அதைவிட 32,557 தொன் நேபாம் நச்சுவாயுக் குண்டுகள் போடப் பட்டுள்ளன!! வட கொரியாவில் (தென் கொரியாவிலும் சில பகுதிகளில்) இருந்த நகரங்கள், கிராமங்கள் ஒன்று விடாமல் தரைமட்டமாக்கப் பட்டன. மூன்று மில்லியன் பொதுமக்கள் குண்டுவீச்சில் கொல்லப் பட்டனர்.
(ஆதாரம்: Air Force General Curtis LeMay, head of the Strategic Air Command during the Korean War, “we killed off … 20 percent of the population”?)

இருபது, முப்பது அணுகுண்டுகளை போட்டு, கொரியப் போரை பத்து நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்ட அமெரிக்க படைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் (Douglas MacArthur) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர் ஐ.நா. சமாதானப் படையின் தளபதியாகத் தான் கொரியாவில் போரிட்டார்!

வட கொரியாவை விட்டு விடுவோம். தென் கொரியாவில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? தென் கொரியாவில், நோகன்ரீ எனும் இடத்தில், பாதுகாப்புத் தேடி பாலத்தின் கீழ் பதுங்கி இருந்த நூற்றுக் கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். (ஆதாரம்: G.I.'s Tell of a U.S. Massacre in Korean War) இது போர்க்குற்றம் அல்லவா? அதற்காக யாருக்காவது தண்டனை கிடைத்துள்ளதா? இன்று வரையில் இல்லை.

அமெரிக்க‌ப் ப‌டைக‌ள் ஆக்கிர‌மித்திருந்த‌ தென் கொரியாவில், ம‌க்க‌ள் ம‌த்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த‌‌ கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி த‌டை செய்யப் ப‌ட்ட‌து. அங்கு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அடுத்து வ‌ந்த‌ ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌, தென் கொரியாவில் கொடூர‌மான‌ இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்த‌து. தென் கொரியாவில் எண்ப‌துக‌ள் வ‌ரையில் தேர்த‌ல் என்ற‌ பேச்சுக்கே இட‌ம் இருக்க‌வில்லை. க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து. ம‌னித‌ உரிமைக‌ள் மீற‌ப் ப‌ட்ட‌ன‌. கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி மீதான‌ தடை இப்போதும் தொட‌ர்கின்ற‌து.

கொரிய‌ப் போருக்குப் பின் அமெரிக்கா ஆத‌ரித்த‌ கொரிய‌ இராணுவ‌ ஆட்சியாள‌ர்க‌ள், முன்பு கொரியாவை கால‌னிப் ப‌டுத்திய‌ எதிரிக‌ளான‌ ஜ‌ப்பானிய‌ருட‌ன் ஒத்துழைத்த‌வ‌ர்க‌ள். அதாவது ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என அழைக்கப் பட்டவர்கள். அத‌னால் ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆளானார்க‌ள். தென் கொரியாவில், அமெரிக்க அரச ஒத்தோடிகள் செய்த படுகொலைகள் எத்தனை?

ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்ட் சந்தேக நபர்களை தேடிப் பிடித்து, ஜீப் வண்டிகளில் ஏற்றிச் சென்று, வெட்ட வெளிகளில் சுட்டுக் கொன்று, பெரும் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடினார்கள். அன்று பலியானவர்களில்  பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளும் அடங்குவார்கள். அமெரிக்கப் படையினர் அந்தப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். (ஆதாரம்: AP: U.S. Allowed Korean Massacre In 1950)

வ‌ட‌ கொரிய‌ பிர‌ச்சினையில் ப‌ல‌ருக்குத் தெரியாத‌ அல்ல‌து வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விடும் விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. அந் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் மிக‌த் தீவிர‌மான‌ கொரிய‌த் தேசிய‌வாதிக‌ள். வ‌ட‌ கொரியா ஸ்தாபிக்க‌ப் ப‌ட்ட‌ நாளில் இருந்து கொரிய‌ ஒன்றிணைப்பை இல‌ட்சிய‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ட‌ கொரிய‌ தேச‌ வ‌ரைப‌ட‌ம் தென் கொரியாவையும் உள்ள‌ட‌க்கி இருக்கும்! இப்போதும் பாட‌சாலைக‌ளில் கொரியா தீப‌க‌ற்ப‌ம் முழுவ‌தையும் தாய்நாடு என்றே க‌ற்பிக்கிறார்கள். இப்போதும் தென் கொரிய‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ ஆளுந‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப் ப‌டுவ‌து ஒரு ச‌ட‌ங்காக‌ உள்ள‌து. ம‌று ப‌க்க‌த்தில் தென் கொரிய‌ ஆட்சியாள‌ர்க‌ளும் அவ்வாறே ந‌ட‌ந்து கொள்வ‌ர்.

விய‌ட்நாம் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பான‌ நிலைமையும் அவ்வாறே இருந்த‌து. வ‌ட‌ விய‌ட்நாம் சுத‌ந்திர‌ம‌டைந்து சோஷ‌லிச‌ நாடாகிய‌து. ஆனால் தென் விய‌ட்நாம் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. தென் விய‌ட்நாமில் இய‌ங்கிய‌ கெரில்லாக் குழுக்க‌ளுக்கு வ‌ட விய‌ட்நாமில் இருந்து ஆயுத‌ங்க‌ள் அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌. ஏராள‌மான‌ போராளிக‌ள் வட‌ விய‌ட்நாமில் இருந்து சென்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

வ‌ட‌ கொரியாவிலும் விய‌ட்நாம் போர் முடிவு ஆர்வ‌த்தை தூண்டி விட்டிருந்த‌து. இறுதியில் விய‌ட்நாம் ஒரே நாடான‌ மாதிரி கொரியாவும் ஒன்று சேரும் என்று ந‌ம்பினார்க‌ள். ஒரு த‌ட‌வை கெரில்லாப் போராளிக‌ளை, ஒரு சிறு குழுவை அனுப்பிப் பார்த்த‌ன‌ர். ஆனால் எதிர்பார்த்த‌ ப‌டி தென் கொரியாவுக்குள் கெரில்லாப் போர் ந‌ட‌த்த‌ முடிய‌வில்லை.

வட கொரிய பிரச்சினையில் பலர் அடிக்கடி மறந்து விடும், அல்லது மறைக்கும் விடயம் ஒன்றுண்டு. தென் கொரிய மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அதை அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை. அதற்குக் காரணம் தென் கொரிய மக்களில் பெரும்பான்மையினர் வட கொரியா மீதான போரை எதிர்க்கிறார்கள். தென் கொரிய அரசு இந்த விடயத்தில் ஒரு பொம்மை அரசாகவே இருக்கிறது. அதன், இராணுவம், அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனால் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

வட கொரிய ஏவுகணைகள் தாக்கவிடாமல் இடையில் தடுத்து அழிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நவீன ஏவுகணையான THAAD தென் கொரியாவுக்கு கொண்டு வரப் பட்டு பொருத்தப் பட்டது. அப்போது அது சென்ற வழியெங்கும் கூடிய தென் கொரிய மக்கள் கற்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏவுகணைக்கு பாதுகாப்பாக ஆயிரக் கணக்கான படையினர் கூடவே செல்ல வேண்டியிருந்தது.

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா? உங்க‌ள் வீட்டை கொள்ளைய‌ர்க‌ள் தாக்கும் அபாய‌ம் இருந்தால் என்ன‌ செய்வீர்க‌ள்?

இங்கு யார் பக்க‌ம் நியாய‌ம் உள்ள‌து? மிக‌ப் பெரிய ப‌ல‌சாலியான‌ கோலிய‌த்திற்கு எதிரான‌ நோஞ்சான் டேவிட்டின் போராட்ட‌ம் நியாய‌மான‌து. அதை ஆத‌ரிப்ப‌து நீதியான‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை.

அமெரிக்கா தான் வ‌ட‌ கொரியாவை ஆக்கிர‌மிக்கும் எண்ண‌த்துட‌ன் போர்ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்கின்ற‌து. வ‌ட‌ கொரியா அல்ல. அது உலகில் எந்த‌ நாட்டின் மீதாவ‌து படையெடுத்துள்ள‌தா? அது மெக்சிகோ அல்ல‌து க‌ன‌டாவுக்கு த‌ன‌து ப‌டைக‌ளை அனுப்பியுள்ள‌தா?

அமெரிக்காவின் இராணுவ‌ ப‌ல‌த்துட‌ன் ஒப்பிடும் பொழுது வ‌ட‌ கொரியா ஒரு நாள் கூட‌ தாக்குப் பிடிக்க‌ முடியாது. அத‌ற்காக‌த் தான் அணுவாயுத‌ம் வைத்திருக்கிற‌து. அந்த‌ உரிமை எல்லோருக்கும் இருக்கிற‌து. தற்காப்பு உரிமை. விரும்பினால் அதை சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ச‌ர்வாதிகார‌ம் என்ப‌து என்ன‌? பெரும்பான்மை ம‌க்க‌ளின் விருப்ப‌த்திற்கு மாறான‌ ஒரு சிறு குழுவின் ஆட்சி. இன்று ப‌ல‌ நாடுக‌ளில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பெய‌ரில் ச‌ர்வாதிகார‌மே நில‌வுகின்ற‌து. தேர்த‌லில் வோட்டுப் போட்ட‌வுட‌ன் ம‌க்க‌ளின் க‌ட‌மை முடிந்து விடுகிற‌து. ஆளுவ‌து எப்போதுமே ப‌ண‌ம் ப‌டைத்த‌ கிரிமின‌ல் கும்ப‌ல் தான்.

அத‌ற்கு மாற்றான‌ நேர‌டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி பலருக்கும் தெரியாது. வ‌ட‌ கொரியாவிலும் தேர்த‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சமூகத்தின் பல மட்டங்களில் ஜனநாயகப் பொறிமுறை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு தொழிற்சாலை நிர்வாக‌த்தில் தொழிலாள‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியும். அமெரிக்காவில் கூட‌ அத்த‌கைய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் கிடையாது.

3 comments:

immanuel prabhu said...

மீண்டும் மீண்டும் பொய்களை சொல்லி, அவற்றையே உண்மை எனக் காட்டுவது மேற்கத்திய பெரு ஊடகங்களின் பாணி.......பணியும் கூட. தங்கள் எஜமானர்களுக்காக அவர்கள் கூறும் பொய்களை இந்திய ஊடகங்களும் அப்படியே வாந்தியெடுப்பது, அவற்றை ஆமோதிப்பதனால் மட்டுமல்ல, உண்மையான செய்தியை ஆராய்ந்து தரும் பொறுப்பில்லாத்தனமும் கூட. மேலும், பிரபல மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே மொழிப்பெயர்த்து, உடன் கொஞ்சம் மசாலாவும் சேர்த்துவிட்டால், தமிழ் வெகுசன வாசகர்களுக்கான செய்தி தயார் என்பதாக இந்த ஊடகங்களின் பார்வை இருக்கிறது. தேவையான உண்மைச் செய்திகளை தேடிப் பிடித்து அறிய தரும் கலையின் பணி தொடரட்டும். கடந்த ஆண்டு வடகொரிய - அமெரிக்க மோதல் இப்போதிருப்பதைப் போல உச்சத்தில் இருக்கும் போது நான் தினமலரில் எழுதிய பதிவு: http://www.dinamalar.com/news_detail.asp?id=1456289

Unknown said...

நீங்கள் குறிப்பிட்ட உண்மைகளை பொது மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் வடகொரியா ஐ.நா.சபையின் எதிர்ப்பை மீறி அணுவாயுத சோதனைகள் செய்கிறது அது தவறு என்று ஊடகங்கள் ஊதி பெருக்கி மக்களிடம் பரப்பி வருகிறது.
ஐ.நா.சபை சனநாயக அமைப்பா நடுநிலை அமைப்பா அதன் முடிவுகள் எப்படி எடுக்கப் படுகின்றன என்பது அப்பாவி மக்களுக்கு தெரியாது.ஊடகங்ளும் அதுபற்றி விளக்காது.மாபெரும் சனநாயக போராளிகள், அறிஞர்கள் என்று கூறப்படுவோரும் ஐ.நா.அமைப்புகளின் ஜனநாயகம் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
ஐ.நா.வின் முடிவை மீறி வடகொரியா செயல் பட்டால் ஐ.நா.நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டி முடிவெடுக்க வேண்டியது தானே.அதை விட்டு விட்டு அமெரிக்கா பாய்வதேன்?. ஐ.நாவிடம் அனுமதி பெற்றா போர்க்கப்பலை அனுப்பியது, மிரட்டல் விடுக்கிறது.அமெரிக்க படை ஐ.நா. சபையின் அதிகார பூர்வமான படையா?.உலக அமைதியை குலைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா மட்டும் தன்னிச்சையாக எடுக்கலாமா? அதை ஐ.நா வால் தடுக்க முடியாதா?.
உண்மையில் தடுக்க முடியாதுதான்.அப்படியானால் அமெரிக்கா ஆட்டிப் படைக்கும் அமைப்புதான் ஐ.நா.சபை என்பதும் உலகின் அதிகார பூர்வமற்ற அடியாள் என்பது தானே உண்மை. இது போன்றவைகளை அமெரிக்கா ஐ.நா.சபையின் அனுமதியின்றி சட்ட விரோதமாக ஏன் செய்ய வேண்டும். வீட்டோ பவர் கொண்ட நாடுகளை தவிர மற்ற நாடுகள் மீது தன்னிச்சையாக எந்த நடவடிககையும் எடுக்கலாம் என்று ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே.ஐ.நா சபையின் சனநாயகமும் மதிப்பும் காப்பாற்றப் படும்.அமரிக்காவின் சர்வாதிகார நடவடிக்கைகளும் சட்ட பூர்வமாகி விடும். ஏன் தயங்குகிறார்கள் சனநாயக வாதிகள்?.

Unknown said...

நீங்கள் குறிப்பிட்ட உண்மைகளை பொது மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் வடகொரியா ஐ.நா.சபையின் எதிர்ப்பை மீறி அணுவாயுத சோதனைகள் செய்கிறது அது தவறு என்று ஊடகங்கள் ஊதி பெருக்கி மக்களிடம் பரப்பி வருகிறது.
ஐ.நா.சபை சனநாயக அமைப்பா நடுநிலை அமைப்பா அதன் முடிவுகள் எப்படி எடுக்கப் படுகின்றன என்பது அப்பாவி மக்களுக்கு தெரியாது.ஊடகங்ளும் அதுபற்றி விளக்காது.மாபெரும் சனநாயக போராளிகள், அறிஞர்கள் என்று கூறப்படுவோரும் ஐ.நா.அமைப்புகளின் ஜனநாயகம் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
ஐ.நா.வின் முடிவை மீறி வடகொரியா செயல் பட்டால் ஐ.நா.நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டி முடிவெடுக்க வேண்டியது தானே.அதை விட்டு விட்டு அமெரிக்கா பாய்வதேன்?. ஐ.நாவிடம் அனுமதி பெற்றா போர்க்கப்பலை அனுப்பியது, மிரட்டல் விடுக்கிறது.அமெரிக்க படை ஐ.நா. சபையின் அதிகார பூர்வமான படையா?.உலக அமைதியை குலைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா மட்டும் தன்னிச்சையாக எடுக்கலாமா? அதை ஐ.நா வால் தடுக்க முடியாதா?.
உண்மையில் தடுக்க முடியாதுதான்.அப்படியானால் அமெரிக்கா ஆட்டிப் படைக்கும் அமைப்புதான் ஐ.நா.சபை என்பதும் உலகின் அதிகார பூர்வமற்ற அடியாள் என்பது தானே உண்மை. இது போன்றவைகளை அமெரிக்கா ஐ.நா.சபையின் அனுமதியின்றி சட்ட விரோதமாக ஏன் செய்ய வேண்டும். வீட்டோ பவர் கொண்ட நாடுகளை தவிர மற்ற நாடுகள் மீது தன்னிச்சையாக எந்த நடவடிககையும் எடுக்கலாம் என்று ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே.ஐ.நா சபையின் சனநாயகமும் மதிப்பும் காப்பாற்றப் படும்.அமரிக்காவின் சர்வாதிகார நடவடிக்கைகளும் சட்ட பூர்வமாகி விடும். ஏன் தயங்குகிறார்கள் சனநாயக வாதிகள்?.