Tuesday, May 02, 2017

2017 மேதினம் - மொன்றியல் முதல் மாத்தளை வரை


இவ் வருட மேதினமும் உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்திருந்தது. பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு இம்முறை நடந்த மேதின ஊர்வலத்தில் வன்முறைகள் வெடித்தன. பாரிஸ் மட்டுமல்ல ரோன் போன்ற பிற நகரங்களிலும் கடந்த சில நாட்களாக இனவாதக் கட்சியான FN தலைவி மாரின் லே பென் இன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன.

பாரிஸ் மேதின‌க் க‌ல‌வ‌ர‌த்தில் பொலிசாரும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ரும் மோதிக் கொண்ட‌னர். பொலிஸ் க‌ண்ணீர்ப்புகை குண்டுக‌ளை வீசி பேர‌ணியை க‌லைக்க‌ முய‌ன்ற‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் பெட்ரோல் குண்டுக‌ளை வீசின‌ர். ஒரு பொலிஸ்கார‌ர் எரிகாய‌ங்க‌ளுக்கு உள்ளானார்.

பிரான்ஸில் முன்பு ந‌ட‌ந்த, தொழிலாள‌ர் ந‌ல உரிமைக்கான‌ தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கையின் தோல்வி, பொதுத்தேர்த‌லில் வென்ற‌ இன‌வாத‌க் க‌ட்சிக்கு எதிரான‌ எதிர்ப்புண‌ர்வு போன்ற‌ன‌வே மேதின‌ வ‌ன்முறைக்கு கார‌ண‌ம். மேதின‌ பேர‌ணியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் த‌னித்து நின்ற‌ இட‌துசாரி இளைஞ‌ர்க‌ள் தான் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.


கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத் தலைநகர் மொன்றியலில் நடந்த மேதினப் பேரணியில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், குறைந்த பட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. பல்வேறு கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. (http://montrealgazette.com/news/local-news/montreal-may-day-rallies-call-for-a-minimum-wage-of-15-end-to-capitalism)

கனடாவில் தற்போது வழங்கும் சம்பளம் வறுமையில் இருந்து மீளப் போதுமானது அல்ல. பல உழைப்பாளிகள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ்கிறார்கள். நாம் சம்பள உயர்வைக் கோராமல் பேசாமல் இருந்தால், அவர்களாக கூட்டப் போவதில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 


துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்கள், அடானா, அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய துருக்கியின் பல நகரங்களிலும் இடம்பெற்றன. துருக்கியில் மனிதஉரிமைகளை நசுக்கி வரும், ஜனாதிபதி ஏர்டோகனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் காவல்துறையினரின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 

படத்திற்கு நன்றி: David Suren

இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் பங்கு பற்றின. தென்னிலங்கையில் கூட ஜேவிபி, முன்னிலை சோஷலிசக் கட்சி, மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள் நடத்திய மேதினப் பேரணிகளில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

படத்திற்கு நன்றி: Seelan Saththiyaseelan

இருப்பினும், வழமை போல முதலாளித்துவ ஊடகங்கள், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மறைத்தன. அதற்குப் பதிலாக காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே நடத்திய மேதினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தை காட்டி, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஊடகங்கள் கூட ராஜபக்சவின் கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்கள் மேதினத்தில் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில், முதலாளித்துவ கட்சிகள் அந்த உணர்வை மடைமாற்றும் வேலையில் ஈடுபட்டன.

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/vigneswaran.kajee/videos/1876412175950974/?hc_location=ufi) மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் "சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். "தமிழ்த் தேச தொழிலாளர்கள்" என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.

கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள். 


No comments: