வீடிழந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் படுக்கும் தென்கொரியர்கள். இது தான் "சுதந்திரம்"! |
"கிம் தேசம்" தெரிந்தவர்களுக்கு "சாம்சுங் தேசம்" பற்றித் தெரியுமா? வட கொரியாவில் நடக்கும் மன்னராட்சி பற்றி பாடம் நடத்துவோருக்கு, தென் கொரியாவில் நடக்கும் கம்பனி ஆட்சி கண்ணில் படாததேன்?
அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட பழமைவாதக் கட்சிப் பிரதமர் பதவி விலகி தேர்தல் நடந்தது. சாம்சுங் நிறுவனம் சம்பந்தப் பட்ட ஊழல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மக்கள் எழுச்சிக்குப் பின்னர் பதவி விலகினார்.
இன்று உலகம் முழுவதும் விற்பனையாகும் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் சாம்சுங் கம்பனியை அறியாதவர் எவருமில்லை. ஆனால் அந்தக் கம்பனி தென் கொரியாவை ஆளும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் மயமாக இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் கழகம், சாம்சுங் மருத்துவ மனை, சாம்சுங் பல்கலைக்கழகம், சாம்சுங் துறைமுகம்..... இப்படி முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய பொருளாதாரத்தின் பெரும் பகுதி சாம்சுங் கையில் உள்ளது.
பல்லாயிரக் கணக்கான தென்கொரியர்கள் சாம்சுங் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். "நல்ல சம்பளம், போனஸ்" கிடைக்கிறது என்பதற்காக பலர் திருப்திப் படலாம். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அவலங்கள் வெளியே தெரிவதில்லை.
நாளொன்றுக்கு 14 மணிநேரம் வேலை செய்வது அங்கே சர்வ சாதாரணம். வேலைப்பளு, பிற கெடுபிடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் பலருண்டு.
சாம்சுங் நிறுவனத்தின் 75 வருட கால வரலாற்றில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கவில்லை. தொழிலாளர்களின் நீண்ட கால போராட்டத்தின் பின்னர், சில வருடங்களுக்கு முன்னர் தான் அனுமதித்தார்கள். தொழிற்சங்கத்தை உருவாக்கிய தொழிலாளர் தலைவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அது ஒரு கொலையாக இருக்கலாமா? அதை விசாரிக்கப் போவது யார்? அரசும், காவல்துறையும் சாம்சுங் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் நாட்டில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?
(தகவல்: அவுஸ்திரேலிய SBS தொலைக்காட்சி ஆவணப்படம்.)
******
தென் கொரியா: நரகத்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கும் இளைஞர்கள்
Young South Koreans call their country ‘hell’ and look for ways out. (The Washington Post, January31, 2016)
வட கொரியாவை பற்றி மிக மோசமாக கற்பனை செய்து கட்டுக்கதைகளை பரப்பும் விஷமிகள், தென் கொரியா பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் தென் கொரிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தமது நாட்டை நரகம் என்று வர்ணிக்கிறார்கள்.
பணக்கார குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே, உயர் கல்வி கற்று உயர் பதவி வகிக்கும் வாய்ப்புகளை பெறுகிறார்கள். அந்தப் பிள்ளைகள் தரமான கல்விக்கு செலவிடும் அளவிற்கு வசதியாக உள்ளனர். பண வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் அதையெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது.
"சொகுசான" அலுவலக வேலை செய்யும் மத்தியதர வர்க்கத்தினர் கூட கடும் வேலைப் பளுவினால் அவதிப் படுகின்றனர். அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். சம்பளம் கூட ஒழுங்காக வருவதில்லை.
உலகப் புகழ் பெற்ற பிரான்ட் பொருட்களை உற்பத்தி செய்யும் சாம்சுங், ஹையுன்டாய் போன்ற நிறுவனங்களிலும் பணிப் பாதுகாப்பு கிடைப்பதில்லை. விரும்பிய நேரம் வேலையில் இருந்து தூக்கி வீசப் படலாம். முதுமை அடைந்தால் முன்கூட்டியே பணி நீக்கம் செய்யப் படலாம்.
தென் கொரியாவில் தமக்கு எதிர்காலம் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட இளைஞர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினால் குறுக்கு வழியில் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும், பிற்காலத்தில் அமெரிக்காவில் குடியேறலாம் என நம்புகிறார்கள்.
பிற்குறிப்பு: வட கொரியாவில் மேற்குறிப்பிட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. பல்கலைக்கழகம் வரையில் கல்வி அனைவருக்கும் இலவசம். தொழில் வாய்ப்புகள் நிச்சயம். பணியில் அமர்ந்தால் அது நிரந்தரம். யாரையும் இலகுவில் வீட்டுக்கு அனுப்ப முடியாது. சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை இல்லை. எரிபொருள், போக்குவரத்து செலவும் மிக மிகக் குறைவு.
No comments:
Post a Comment