Tuesday, May 30, 2017

இயற்கை அழிவில் இன்பம் காணும் இனவாதத்தை விட்டொழிப்போம்


சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லில் இய‌ங்கும் ஈழ‌த்து த‌மிழின‌வாதிக‌ள், மீண்டும் ம‌க்க‌ளை பிரித்து வைக்கும் சூழ்ச்சியில் இற‌ங்கி உள்ள‌ன‌ர்.

அண்மையில் தென்னில‌ங்கையில் வெள்ள‌த்தால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை, முள்ளிவாய்க்கால் போரினால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளுட‌ன் ஒப்பிட்டு, "எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌டும் போது பார்த்துக் கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும்..." என்று இன‌வாத‌ப் பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றி அரைகுறையாக‌ அறிந்து கொண்ட‌, அல்ல‌து ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌ப் போரின் ப‌ல்வேறு ப‌ரிமாணங்க‌ளும் தெரியாது.

இறுதிப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ரே, தென்னில‌ங்கையில் அர‌ச‌ அட‌க்குமுறை தொட‌ங்கி விட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சிங்க‌ள‌ அர‌சியல் ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டு சிறைக‌ளில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். "இன‌த் துரோகிக‌ள், புலிக‌ளின் ஒட்டுக் குழுக்க‌ள்" என்றெல்லாம் பிர‌ச்சார‌ம் செய்து ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்நிய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அதைத் த‌விர‌ ஊட‌க‌ங்க‌ள் க‌டுமையான‌ த‌ணிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளை குறிப்பிட்டு க‌ருத்து சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. இத‌னால் ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே தெரியாத‌ நிலை இருந்த‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ளைப் போன்று, சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் இது ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் என்று ந‌ம்ப‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ளில் இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒரு நாட்டில் ம‌க்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்தால், ஆள்வ‌து இல‌குவாகி விடும். ஒவ்வொரு இன‌மும் த‌ங்க‌ள‌து பாதிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து சிந்திக்கும். த‌ங்க‌ள‌து த‌ர‌ப்பு இழ‌ப்புக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே திரும்ப‌த் திரும்ப‌ பேசி ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெறுப்பை விதைப்பார்க‌ள். சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள், த‌மிழ் இன‌வாதிக‌ள், முஸ்லிம் இன‌வாதிக‌ள் எல்லோரும் இதில் கைதேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள‌து அர‌சிய‌ல், கொள்கை, ந‌டைமுறை எல்லாம் ஒன்று தான்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இஸ்ரேலில் காட்டுத்தீ ப‌ர‌வி பெரும் நாச‌ம் விளைவித்த‌து. அப்போது ப‌ல‌ முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ள் "இது அல்லாவின் த‌ண்ட‌னை" என்றார்க‌ள். அதே மாதிரி, த‌மிழ் அடிப்ப‌டைவாதிக‌ளும் பேசுகின்ற‌ன‌ர். தென்னில‌ங்கை வெள்ள‌ அழிவுக‌ள் "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்கிறார்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் வெள்ள‌ அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் த‌மிழின‌வாதிக‌ளுக்கு அதைப் ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் இல்லை. தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளையும் த‌ம‌து ச‌கோத‌ர‌ இன‌மாக‌ க‌ருதாத‌ குருட்டுத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல் பார்வை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

வ‌ட‌க்கில் த‌மிழ‌ரும், தெற்கில் சிங்க‌ள‌வ‌ரும் இரு வேறு உல‌க‌ங்க‌ளில் வாழ்கின்ற‌ன‌ர். இந்த‌ வேறுபாட்டை அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிற‌து. 1971 ம் ஆண்டு தெற்கில் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் வ‌ட‌க்கில் இருந்த‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள்? எந்த‌ எதிர்ப்பும் காட்டாம‌ல் மௌன‌மாக‌ இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு பிற‌ இனங்க‌ளை ப‌ற்றி எந்த‌ அக்கறையும் இருக்க‌வில்லை.

அதே மாதிரித் தானே சிங்க‌ள‌த் தேசிய‌வாதிக‌ளும் ந‌ட‌ந்து கொள்வார்க‌ள்? இவ‌ர்க‌ள் பேசும் மொழிக‌ள் வேறாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌ம் என்ற‌ சுய‌ந‌ல‌வாத‌க் கொள்கை ஒன்று தானே? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள் தானே? ச‌ட்டியை பார்த்து அடுப்பு க‌றுப்பு என்று சொல்லிய‌தாம்.

வெள்ள‌ அன‌ர்த்த‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான். ஈழ‌ப்போரை நட‌த்தி ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் எந்த‌ப் பாதிப்புக்கும் உட்ப‌ட‌வில்லை. இது உண்மையிலேயே "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்றால், உண்மையில் அவ‌ர்க‌ள் அல்ல‌வா பாதிக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்?

இன‌வாத‌ம் பேசுவ‌து ஒரு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல். எந்த‌ அறிவும் அத‌ற்குத் தேவையில்லை. சாதாரண‌ மக்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைப்ப‌தன் மூல‌ம் விடுத‌லை பெற‌ முடியாது. அத‌ற்குப் பெய‌ர் சுய‌நிர்ண‌ய‌மும் அல்ல‌. எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாடும‌ற்ற‌ இன‌வாத‌க் கோஷ‌ங்க‌ள் இறுதியில் ஆள்வோருக்கே ந‌ன்மை உண்டாக்கும்.

இனக்குழுவாத சுயநல அரசியலுக்கு தமிழ்த் தேசியம் என்று பெயர் வைக்காதீர்கள். அது உங்களது அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. நீங்கள் தேசிய அரசியலில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சர்வதேச அரசியலில் ஸீரோ தான்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் மரணமடைந்தும், இலட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் உள்ளனர். இது இலங்கையில் சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்.

தென்னிலங்கை என்றாலே அங்கே சிங்களவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்று தான் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய "அறிஞர்கள்" நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையினால், "முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பழிவாங்கலாக, தற்போது கடவுள் சிங்களவர்களை தண்டிக்கிறார்..." என்று சொல்லிக் கொண்டனர்.

ஒருவர் கவிதையாக எழுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட "சிங்கள" மக்களுக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னார். இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டு, தமிழர்களை இருட்டறைக்குள் வைத்திருக்கவே உதவுகின்றன.

வெள்ள அழிவுகளை ஏற்படுத்திய "கடவுளின் தண்டனை" காரணமாக, சிங்கள மக்கள் விழிப்படைந்து தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக வருந்துவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்பதை சிலர் பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் பல உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றன. உலக நாடுகளில் எல்லா ஊடகங்களிலும் இலங்கையில் நடந்த வெள்ள அனர்த்தம் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.

அதனால், "தமிழ்த் தேசியவாதிகளின்" கோபம் சர்வதேசம் மீது திரும்பியது. "முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த நேரம் இந்த சர்வதேசம் எங்கே இருந்தது? தமிழ் மக்கள் அழிந்த நேரம், ஏன் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?" என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏறாத சில விடயங்கள் உள்ளன. போரில் மனிதனால் உண்டாக்கப் படும் அழிவுகள், அவரவர் அரசியல் நலன் சார்ந்தே பார்க்கப் படும். உலக மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

கொங்கோவில் நடந்த போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட நேரம் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இன்று, யேமன், தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் கொல்லப் படும் மக்கள் பற்றிய தகவல்கள், நமது "தமிழ்த் தேசிய அறிஞர்களுக்கு" கூடத் தெரியாது. ஏனென்றால், அதில் சர்வதேசம் கவனம் செலுத்தவில்லை.

அதே நேரம், வறட்சியால் பாதிக்கப் பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு, அங்கு பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப் படுகின்றன. அதற்கான நிதி சேகரிக்கும் விளம்பரங்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி காண்பிக்கப் படுகின்றன. "போர் நடந்த காலத்தில் எமது இனம் அழிக்கப் பட்ட நேரம், ஏன் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது?" என்று அந்த ஆப்பிரிக்க நாடுகளின் மக்களும் கேட்கலாம்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த போர்கள், தற்போது இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அதாவது, முன்னர் ஐரோப்பியர்கள் பிரிந்து நின்று தமக்குள் யுத்தம் செய்தார்கள். தற்போது மூன்றாமுலக நாடுகளின் மக்களை இன, மத அடிப்படையில் பிரிந்து நின்று யுத்தம் செய்ய வைக்கிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் யுத்தங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யுத்தம் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். கடன் கொடுக்கும் வங்கிகளின் வட்டியால் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். "ஆதலினால் யுத்தம் செய்வீர்!" என்பது முதலாளித்துவ அடிப்படை தத்துவம்.

அதே மாதிரி, இயற்கைப் பேரழிவுகளுக்கும், முதலாளித்துவத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெரும் நிறுவனங்களின் இலாபவெறி காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகிறது. வெள்ள அனர்த்தம் அதில் ஒன்று.

இயற்கைப் பேரழிவுகளால், முதலாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனால், மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெருந்தொகையில் மக்கள் கொல்லப் பாடவும், வீடுகளை இழக்கவும் காரணமாகி விடுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் நிகராகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வந்த வெள்ளப் பெருக்கு, இலங்கையை விட அதிகமான அழிவுகளை உண்டாக்கி இருந்தது.

ஆகவே, போரினால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், மேலைத்தேய முதலாளித்துவம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டுள்ளது. போர் போன்ற செயற்கை அழிவுகள் மனிதனால் உண்டாக்கப் பட்டவை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது சிறு பிள்ளைக்கும் புரியும்.

ஆனால், இயற்கை அழிவுகளில் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்வது இலகு. மெத்தப் படித்தவர்கள் கூட இயற்கை அழிவுக்கு காரணமான காலநிலை மாற்றம் என்ற காரணியை நம்ப மறுப்பார்கள். அதனால் தான் சர்வதேசம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

No comments: