Friday, April 30, 2010

பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்


பத்து வருடங்களுக்கு முன் உலக மக்களனைவரது கவனத்தையும் ஈர்த்த நாடு பொஸ்னியா. மூன்றாம் உலக யுத்தம் ஆசியாவைக் கடித்து, ஆபிரிக்காவைக் கடித்து கடைசியாக ஐரோப்பியாவையே கடிக்க வந்ததை அறிவித்த காலம் அது. மூன்றாம் உலக நாடுகளை வெற்றிகரமாகப் பிரித்தாண்ட மேற்கு ஐரோப்பியர்கள் கடைசியில் அயல்நாடான பல்லின மக்களைக் கொண்ட யூகோஸ்லாவியாவையும் பிரித்தாள வருவார்கள் என யார் நினைத்திருப்பார்கள் ? ஆனால் அது நடந்துவிடடது.

காலஞ்சென்ற டிட்டோ காலத்தில் யூகோஸ்லாவிய சோசலிசக் குடியரசு பல்லின மக்கள் சமாதானமாக சகோதரர்களாக வாழ்வதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் தேசியவாதச் சக்திகளுக்கெல்லாம் இடமிருக்கவில்லை. அல்லது அடக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே சோவியத் யூனியனுடன் உறவுகளை முறித்துக்கொண்ட யூகோஸ்லாவியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளுடன் நடபுறவு பூண்டு கடனுதவிகளைப் பெற்று வந்தது. அதிகம் விளம்பரம் செய்யப்படாத ஒரு சோசலிச நாட்டுக்கான முதலாளித்துவ நாடுகளின் உதவிபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. டிட்டோவின் மரணத்தின் பின்பு, சோவியத் யூனியனும் வீழ்ச்சியடைய யூகோஸ்லாவியாவிற்கான மேற்குலக நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டது.

புதிய ஜனாதிபதி மிலோசவிச் தலைமையிலான யூகோஸ்லாவிய மத்திய அரசாங்கம் பலவீனமடைந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நவதேசியவாதிகள் தம்மை மீள்கட்டமைப்புச் செய்துகொண்டனர். ஸ்லோவேனியா, குரோவேசியா, பொஸ்னியா ஆகிய குடியரசுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதில் பொஸ்னியா மிகவும் சிக்கலான பிரச்சினையை எதிர் நோக்கியது. சேர்பியர், பொஸ்னிய முஸ்லீம்கள், குரோவாசியர் ஆகிய மூன்று இனங்கள் (இனம் என்ற வரையறை சரியா?) அங்கே வாழ்கின்றனர். 

உண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே மொழி பேசும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பிரிப்பது மதம் மட்டும்தான். கிழக்கைரோப்பிய மரபைக்கொண்ட ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் சேர்பியர்கள், கத்தோலிக்கரான குரோவாசியர்கள், துருக்கிய ஒட்டோமான் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களாக மாறிய சேர்பியர்கள் அல்லது பொஸ்னிய முஸ்லீம்கள். இவர்களனைவரும் பேசும் மொழி , சிறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும், சேர்போ-குரொவாசியா என்ற பொது மொழிதான்.

இருப்பினும், 1990 க்குப் பின்பு இம் மூன்று சமுகங்களிலும் தோன்றிய தேசியவாதச் சக்திகள் தனித்தன்மையை வலியுறுத்தின. பொஸ்னியா தனியரசாக அமையும்போது அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸலீம்களின் கைகளில் ஆடசியதிகாரமும், இராணுவமும் போய்விடும் என்ற அச்ச உணர்வு, அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த சேர்பியரையும், குரோவாசியரையும் ஆயுதக்குழுக்களாக மாற்றியது. தேசிய இராணுவம் பொஸ்னிய முஸ்லிம்கள் வசம் வந்தது. 

புதிதாகச் சுதந்திரமடைந்த குரோவேசியாவின் உதவியோடு பொஸ்னிய எல்லைக்குள் வாழ்ந்த குரோவேசியரின் ஆயுதபாணிக்குழுக்கள் உருவாகின. போர் நிச்சயமாகியது. யுத்தம் ஈவிரக்கமின்றி நடந்தது. மூன்று சமுகங்களின் ஆயுதக்குழுக்களும் இயன்ற அளவு மனித உரிமைகளை மீறின. சேர்பியப் படைகள் முஸ்லீம், குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், முஸ்லீம் படைகள் சேர்பிய குரோவேசியப் பொதுமக்களைக் கொன்றதும், குரோவேசியப் படைகள் சேர்பிய முஸ்லீம் பொதுமக்களைக் கொன்றதுமென போர்க்குற்றங்கள் அனைவராலும் இழைக்கப்பட்டன.

சேர்பியக் கிறிஸ்தவர்கள் தாம் முஸ்லீம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் புனிதக் கடமையைச் செய்வதாக நம்பினர். அப்படியே சொல்லியும் கொண்டனர். "கிறிஸ்தவ" மேற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் யாருடைய பக்கம் நின்றார்கள் ? சிலர் புருவத்தை நெரிக்கலாம். ஆனால் அவர்கள் முஸ்லீம்களின் பக்கம் தானிருந்தார்கள். நேட்டோவின் விமானப்படைகள் சேர்பிய நிலைகள் மீது குண்டுகள் போட்டன. அமெரிக்கா முஸ்லீம் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், பின் லாடனின் அல்கைதா உறுப்பினர்களைப் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்ட நான்கு வருடப்போர் இறுதியில் அமெரிக்கத் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. பொஸ்னியா ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, சமாதானமுறையிலான இனப்பிரிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. சேர்பியக் குடியரசில் சேர்பியர் மட்டும், பொஸ்னிய சமஸ்டிக் குடியரசில் முஸ்லீம்களும், குரோவாசியர்களும் மட்டும் என இனஅடிப்படையிலான பிரிவுகள் உருவாக்கப்பட்டன. சேர்பியர்கள் அங்கே, முஸ்லீம்கள் இங்கே எனத்தான் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

போர் முடிவுக்கு வந்தாலும், அந்நிய நாட்டுச் சமாதானப் படைகளின் கீழ் சமாதானம் கொண்டுவரப்பட்டாலும், நிரந்தர அரசாங்கம் அமைத்துவிடாலும் பொஸ்னியர்கள் இன்னமும் பதில் கிடைக்காத கேள்விகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள். அவற்றில் முக்கியமானவை சிரபிரெனிச்சா படுகொலைகள் சம்பந்தமானவை. அங்கே உண்மையில் என்ன நடந்தது ?

1995ம் ஆண்டு போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு பிரச்சினைக்குள் சிக்குப்பட்டுக் கொண்டது. சேர்பிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற என்று கூறி குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டன. 

அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையமான சிரபிரெனிச்சா ஐ.நா சமாதானப்படையின் ஓர் அங்கமாக இயங்கிய "டச்பட்" என்ற ஒல்லாந்து நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியது. மிகவும் பாதுகாப்பான பிரதேசம் என நினத்தவர்களுக்கு ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் காத்திருந்தன. ஐ.நா சமாதானப்படை வீரர்கள் சிலர் சேர்பியர்களால் பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது, ஐ.நா சபை இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகள் என பணிந்து போகும் நிலைக்குள் தள்ளப்பட்டது. அந்தத தருணத்தில் சேர்பியப் படைத்தளபதியும் ஒல்லாந்து "டச்பட்" கொமாண்டரும் சந்தித்துப்பேசினர். என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

சில நாட்களுக்குப் பின்னர் சேர்பிய இராணுவம் சிரபிரெனிச்சா பாதுகாப்பு வலயம் நோக்கி முன்னேறியது. பலரும் அதிர்ச்சியடையும் அளவிற்கு பாதுகாப்பிற்கு நின்ற ஒல்லாந்துப் படையினர் பின் வாங்கினர். எவ்வித எதிர்ப்புமின்றி சிரபிரெனிச்சாவைக் கைப்பற்றிய சேர்பியப் படைகள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லீம்களை ஆண்,பெண் எனப் பிரித்து பெண்களையும் குழந்தைகளையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு, ஆண்களனைவரையும் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்திற்கும் அதிகம். இந்தப் படுகொலைகளை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா ஒல்லாந்துப் படையினரும் குற்றவாளிகள் என்பதைச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன நடந்தது ?

நீண்ட காலம் இழுத்த விசாரணைக் கமிசன் தனது தீர்ப்பில் ஒல்லாந்து சமாதானப் படையினரையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையையோ பெரிதாகக் குறைகூறவில்லை. சமாதானப்படை அனுப்பப்படும்போது சரியாக ஆராயப்படவில்லை. அவ்வாறு அனுப்பியது நெதர்லாந்தின் தவறு என அறிக்கை கூறியது. ஒல்லாந்து அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்று, தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாகப் பதவி விலகியது. இதனால் பல விடயங்கள் வெளிக்கொணரப் படாமலே மூடிமறைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திறகுப் பின்னால் இருந்த பிற சக்திகள் எவை? இத்துயர நாடகம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன ?

அலியா இசபெகோவிச், சிறுவயதிலிருந்தே "இளம் முஸ்லீம்கள்" என்ற அமைப்பின் உறுப்பினர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் அவர் பிரசுரித்த ";இஸ்லாமிய அறிக்கை" நூலுக்காகச் சிறையிலிடப்பட்டவர். 1990 ம் ஆண்டு பொஸ்னியக் குடியரசுத் தேர்தலில், தனியே பொஸ்னிய முஸ்லீம்களைக் கொண்ட கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

பெரும்பான்மை (45 வீதம்) முஸ்லீம்களைக் கொண்ட பொஸ்னியாவை உலக இஸ்லாமிய நாடுகளின் கட்டமைப்பில் சேர்க்க விரும்பியவர். அலியா இசபெகோவிச் பின் லாடனைச் சந்தித்ததாக வதந்திகள் இன்றும் கூட வலம்வருகின்றன. முன் குறிப்பிட்டது போல, அல்கைதா உறுப்பினர்களும் பொஸ்னியாவில் போரிட்டார்கள். அவர்கள் இப்போது பொஸ்னியக் குடியுரிமை பெற்று , உள்நாட்டுப் பெண்களையும் மணந்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

இருப்பினும்.... இனிவரும் தகவல்கள் குழப்பத்தையூட்டுவன. அலியா இசபெகோவிச் இன்றுவரை மேற்குநாடுகளின் மனதுக்கினிய நண்பர். நம்பிக்கையான பொஸ்னிய அரசியல்வாதி என்றெல்லாம் புகழப்படுபவர். அவ்வளவு தூரம் மேற்கத்தைய நாடுகளின் திட்டங்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவும் மேற்கைரோப்பாவும் புனர்நிர்மாணத் திட்டங்களில் ஒரு பகுதியாக புதிய மசூதிகளைக் கட்டிக் கொடுக்கின்றன. போருக்குப் பின்னர் மதத்தை நாடுவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லீம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.

பிற யூகோஸ்லாவியப் பிரச்சினைகளின் போது நடந்ததைப்போல மேற்குலக நாடுகள் பொஸ்னியப் பிரச்சினையிலும் சேர்பிய விரோத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக சேர்பியர்கள் குமுறுகிறார்கள். (மேற்குலகக் கட்டுப்பாட்டில் உள்ள) சர்வதேசத் தொடர்பூடகங்கள் யாவும் சேர்பியர்களைக் கெட்டவர்களாகவும், முஸ்லீம்களை நல்லவர்களாகவும் சித்தரித்தன. ஆனால், திரைமறைவில் நடந்தவைகளோ வேறு விடயங்கள். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளில் கொள்கை வகுக்கும் அதிமேதாவிகளினால் ஓரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. யூகோஸ்லாவியாவிற்கான வெளிநாட்டுக் கடனுதவிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த நாடகம் தொடங்குகின்றது. இதன் முதலாம் கட்டம்: ஸ்லோவேனிய, குரோவேசிய யுத்தங்கள். இரண்டாம் கட்டம்: பொஸ்னிய யுத்தம்.

ஆனால், பொஸ்னியப் பிரச்சினை சிக்கலானது. ஐரோப்பாவில் பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட நாடான பொஸ்னியா இஸ்லாமிய அடிப்படைவாதப் பாதையில் போகவிருந்தது. இத்தகைய காரணங்களால் பொஸ்னியாவில் முஸ்லீம்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காக போர் நீண்ட காலம் தொடரவிடப்பட்டு, சிரபிரெனிச்சாப் படுகொலைகள் போன்ற இன அழிப்புக் கொலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என ஊகங்களும் உண்டு. இதுதவிர, பெரும்பாலும் முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் மேற்கு ஐரோப்பாவில் அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளையினத்தவரான , பெயரால் மட்டும் முஸ்லீமான, இவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் மேற்கைரோப்பியராக உள்வாங்கப்பட்டு விடுவார்கள்.

இதேவேளை பொஸ்னிய முஸ்லீம்களின் தலைவர் அலியா இசபெகோவிச் கூட மேற்குலகச் சார்பாளர் தான். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தள்ளிய, "நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்த, மோட்டார் ஷெல் தாக்குதற் சம்பவங்கள்," இவர் தலைமையிலான படைகளின் வேலை என்று ஐ.நா. வட்டாரங்களிலேயே நம்பப்படுகின்றது. (செய்திகள் இவ்வசம்பாவிதத்தை சேர்பியர்கள தலையில் சுமத்தியிருந்தன.) சமாதான ஒப்பந்தம் கொண்டுவர ஒத்துழைத்த யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசெவிச் அந்தக் காலங்களில் பலர் நினைப்பதற்கு மாறாக சேர்பியப் படைகளை ஆதரிக்கவில்லை. ஆனால், இவருக்கும் முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. நெறியாள்கை செய்தோரின் விருப்பப்படியேதான் நாடகமும் முடிந்தது.

சமாதானப்படை என்ற பேரில் அமெரிக்க மேற்கைரோப்பிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கிவிட, பொஸ்னியா மேற்குலகக் காலனியாகியது. சமாதானப் படையின் உயரதிகாரிகள் கடத்தல் தொழில், விபச்சார விடுதி நடத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் கூட ஈடுபட்டமை அம்பலமாகியிருக்கிறதென்றால் அங்குள்ள நிலைமை எவ்வளவு மோசமானதென ஊகிக்கமுடியும். அப்படியானால் யூகோஸ்லாவியாவில் நிறைவேற்றப்பட்ட நாடக அரங்கேற்றத்தின் பின்ணணி என்ன? ரஷ்ய, மத்திய ஆசிய எண்ணையை ஐரோப்பாவிற்குக் கொண்டுவருதல், மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத்தளம் அமைத்தல் போன்றவையேயாகும். நாடகத்தின் இறுதிக்கட்டம்தான் கொசோவாவில் அரங்கேறியது.

4 comments:

Ben said...

பால்கன் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்தவர்கள். மதங்கள் தாம் அவர்களைப் பிரித்து பாழ்படுத்தி விட்டன.

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

INDIA 2121 said...

visit my blog


www.vaalpaiyyan.blogspot.com

தருமி said...

பெரிய ஆச்சரியம் .. எப்படி இவ்வளவு விஷயங்களை உள்வாங்கி எழுதுகிறீர்கள்? வாசிக்கவே தலை சுத்துது.
நன்றி

Unknown said...

முழுக்க முழுக்க செர்பியா கம்யூனிச கொலை வெறியர்களுக்கு ஆதரவான கட்டுரை.தோழர்.போஸ்னியாவில் நடந்த பல்வேறு முஸ்லிம் இனபடுகொலைகளை அமுக்கி வாசிக்கும் மர்மம் என்ன.இனபடுகொலைகளுக்காக உலக நீதிமன்றத்தில் விசாரிக்கபட்ட செர்பியா அதிபர் மிலோவிக் பற்றியெல்லாம் ஒன்னும் காணலையே.