Sunday, April 11, 2010

லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - தொடரின் இறுதிப் பகுதி)
லண்டன் நகரின் வாகன நெரிசல் அதிகமுள்ள வீதிகளில் ஒன்று. சிக்னல் தரிப்பிடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதற்கெனவே காத்து நின்றது போல, நடைபாதை ஓரமாக இருபது வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஓடி வருகின்றனர். அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள். வெறியுடன் பாய்ந்து கார் கதவை திறந்து, உள்ளே இருந்தவனை வெளியே இழுத்துப் போட்டு... "சதக், சதக்"... மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கிடையில் காரில் வந்த இளைஞனின் உயிர் பிரிகிறது. பட்டப் பகலில் நடந்த அந்த கொலைச் சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப்பட்டவனும் தமிழர்கள். லண்டனில் வழக்கமாகிப் போன குழுச் சண்டையின் கோரக் காட்சி அது.

லண்டனில் பிறந்த வெள்ளையர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர்களின் "மண் பற்று" நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. லண்டன் மாநகரில் தமிழர் அதிகமாக வசிக்கும் பிரதேசமெங்கும் குழுக்கள் காணப்படுகின்றன. "டூட்டிங் குரூப்", "ஈஸ்ட்ஹாம் குரூப்" என்று பல்வேறு ஊர்காவல் படைகள் ரோந்து சுற்றுகின்றன. அந்தந்த ஏரியாக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில். வேறொரு ஏரியாவை சேர்ந்த குழு வந்து வாலாட்டினால், அவ்வளவுதான். சிறு பொறியே பெரும் மோதலுக்கு வழிவகுத்து விடும். காரணம் எதுவாகவும் இருக்கலாம். "....... நம்மூர் பொண்ணு மேலே கை வைச்சுட்டான், டோய்...?"

பிரிட்டன் எதிர்நோக்கும் முக்கியமான சமூக பிரச்சினைகளில் ஒன்று, இள வயது கிரிமினல் கும்பல்கள், அவர்களுக்கிடையே நடக்கும் கோஷ்டி மோதல்கள். முன்பு வெள்ளையின உழைக்கும் வர்க்க பிள்ளைகளிடையே காணப்பட்ட 'Gang ' கலாச்சாரம், தற்போது பிற இனத்தவர்கள் மத்தியில் பரவியுள்ளது. பெருமளவு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் குடிபெயரத் தொடங்கிய அண்மைய இருபதாண்டுகள் குறிப்பிடத் தக்கவை. இவர்களது முதலாவது தலைமுறை கடின உழைப்பின் மூலம் பணக்காரராகலாம் என நம்பியிருந்தார்கள். வருடக்கணக்காக தினசரி 16 மணிநேரம் உழைத்து, சேமித்து; எதிர்கால வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தை அழித்துக் கொண்டார்கள். இரண்டாவது தலைமுறையிடம் அந்தளவு பொறுமை இல்லை. வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இன்றே அனுபவிக்க வேண்டும். வருடக்கணக்காக காத்திருக்க முடியாது. அதற்கான குறுக்கு வழிகளை தேடியவர்கள், "Gang கலாச்சாரத்தை" கண்டுபிடித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் லண்டனில் பாகிஸ்தான், சீக்கிய இளைஞர்களின் குழுக்களுக்கு எதிர்வினையாக, தமிழ் குழுக்கள் உருவானதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதாவது தாம் தமிழ் சமூகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் ஒன்றே போதும். ஒரு தமிழரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு கார் பெட்ரோல் போட்டுக் கொண்டது. வாகன சாரதியான தமிழ் இளைஞர், கட்டணத்தை செலுத்த கொடுத்த கிரெடிட் கார்ட் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே பெட்ரோல் நிலைய உரிமையாளர் போலிசுக்கு அறிவிக்க தொலைபேசியை தூக்கினார். அதற்கு சற்றும் பதற்றப்படாமல் அந்த இளைஞர்: "தாராளமாக போலிசுக்கு அறிவிக்கலாம். மாலை வீடு திரும்பும் போது மனைவி, பிள்ளைகள் உயிரோடு இருக்க மாட்டார்கள்!"

லண்டனில் பல அந்நிய நாட்டவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள், இந்தியர், பாகிஸ்தானியர், வங்காளிகள், துருக்கியர், ஜமைக்கர் இவ்வாறு பல்லின சமூகங்கள் லண்டனை வதிவிடமாக கொண்டுள்ளன. இந்த சமூகங்கள் அனைத்தும் தமக்குள்ளேயே நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் அந்தந்த சமூகங்களுக்குள்ளேயே நடக்கின்றன. அப்படியான தருணங்களில் பெரும்பாலும் வெள்ளயினத்தவரைக் கொண்ட பிரிட்டிஷ் போலிஸ் தலையிடுவதில்லை.

தமிழ் சினிமாவில் வருவது போல, எல்லாம் முடிந்த பிறகு போலிஸ் வந்து குற்றப்பத்திரிகை பதிவு செய்து கொண்டு செல்லும். போலீசைப் பொறுத்த வரை, "இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. அண்மைக்காலமாக பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கூட, (கிரெடிட் கார்ட் மோசடியில்) பல வெள்ளையினத்தவர்கள் பாதிக்கப்பட்டதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

வெளிநாட்டவர் செய்யும் குற்றச் செயல்கள் மீதான ஊடகங்களின் பார்வையானது இனவெறியை வளர்க்கப் பயன்படுகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் பல வெள்ளையினத்தவர்கள் லண்டனை வெளிநாட்டு குற்றவாளிகளின் கூடாரமாக இனங்காணுகின்றனர். ஆங்கிலேய வெள்ளையர்கள், மொத்த லண்டன் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் நகரை விட்டு வெளியேறி வருவதால், அவர்களின் விகிதாசாரம் குறைந்து வருகின்றது. வசதியற்ற வெள்ளையர்கள் கூட, ஓய்வூதியம் பெறும் வயதிலாவது, சைப்ரஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வீடு வாங்கிக் குடியேறுகின்றனர். எங்காவது "கருப்பன் இல்லாத நாட்டில்" சென்று வாழ்வது அவர்களது குறிகோளாக உள்ளது.

இங்கிலாந்தில் 19 ம் நூற்றாண்டிலேயே சில கறுப்பினத்தவர்கள் வந்து குடியேறியுள்ளனர். பிரிட்டனின் காலனியாக இருந்த கரிபியன் தீவுகளில் இருந்தே அவர்கள் வந்திருந்தனர். காலனிகளுக்கான கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற லிவர்பூல் போன்ற துறைமுக நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெருமளவு கறுப்பினத்தவர்கள் லண்டனை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில், வீடு வாடைக்கு விடுவதாக விளம்பரம் செய்தவர்கள், "கறுப்பர்களுக்கு கிடையாது" என்று குறிப்பிடத் தவறவில்லை.

சரித்திர காலம் தொட்டு இங்கிலாந்து ஒரு குடியேற்ற நாடாக திகழ்ந்துள்ளது. ஆங்கிலேயரின் முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்தும், நோர்வேயில் இருந்தும் வந்து குடியேறியவர்கள். அரச குடும்பத்தினர் பிரான்சில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் ஆங்கில மொழியும், இம் மூன்று மொழிகளினதும் கூட்டுக் கலவையாக உள்ளது. அப்படி இருக்கையில் தாமே பிரிட்டனுக்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுவதும், குறிப்பிட்ட சமூகங்களை அந்நியர்கள் என்று வகைப் படுத்துவதும் விசித்திரமானது. ஐரோப்பிய நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை பிரிட்டனையும் வாட்டுகின்றது. நிற அடிப்படையிலான, இனவிகிதாசாரம் மாறுபடுமே என்ற அச்சம் ஒரு காரணம். கணிசமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் (வெளிநாட்டு) உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை மழுங்கடிப்பது இன்னொரு காரணம். இதனால் அரசு ஒரு பக்கம் அவர்களை நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறது. மறுபக்கம் அவர்களின் மீது "குற்றப் பரம்பரை" முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கிறது.

(முற்றும்)



2 comments:

Anonymous said...

"இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை.


அதீத கட்டுப்பாடுகள் விதித்தால் குறை சொல்கிறோம்.

அதே நேரம் இம்மாதிரியான செயல்பாடுகளே, அரசாங்கம் புதிய புதிய கட்டுபாடுகள் விதிப்பதற்கு காரணமாகிறது.

புலம் பெயர்ந்தவர்களுக்கு தெரிய வேண்டாமா- ஒரு அன்னியதேசத்தில் எப்படி இருக்க வேண்டுமென்று.

இவர்களே அரபு தேசத்திற்கு சென்றால் எப்படி இருப்பார்கள்.

தரப்படும் சுதந்திரத்தை மலிவாக பயன் படுத்துதல், யானை தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொள்வதற்கு சமானம்.

Kalaiyarasan said...

நன்றி கறுப்பு. புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் சட்டம் ஒழுங்கை மதித்து தான் வாழ்கிறார்கள். ஒரு சிறு பிரிவு மட்டுமே தான் நினைத்த படி எல்லாம் நடக்க விரும்புகிறது. குற்றவாளிகள் மீது போலிஸ் நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்லவில்லை. அதை எல்லோரும் வரவேற்கிறார்கள். ஆனால் போலிஸ் அப்படி செய்யவில்லை என்பது முறைப்பாடு. குற்றங்கள் அந்த சமூகத்தின் உள்ளே நடந்தால் போலிஸ் அதிக அக்கறை காட்டுவதில்லை. இவர்கள் வெள்ளையர்களல்ல என்ற இனவாதமே முக்கிய காரணம். தனது சொந்த இனத்திற்கு ஆபத்து நேரிடும் போது மட்டுமே அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகள் போடுகிறது.