Showing posts with label முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label முஸ்லிம்கள். Show all posts

Sunday, June 23, 2019

இஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்!


இஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான "இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சில பல்கலைக்கழக பட்டதாரிகள் கூட அதை நம்பி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு சமூகத்தில் அறியாமை நிலவுகின்றது. உண்மையில் இது ஓர் ஐரோப்பிய மையவாதக் கருத்து. அது அடிப்படையில் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாமியர் அல்லாத ஆசிய நாட்டவர் அனைவருக்கும் எதிரான நிறவெறிக் கருத்து.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஐரோப்பியர் வருவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அரேபிய நாகரிகம் வந்து விட்டது. அது உள்நாட்டு காலச்சாரத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு ஓர் உதாரணம் யூனானி மருத்துவம். அது தற்போது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்பட்டாலும், அது உண்மையில் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் விரிவாகச் சொன்னால் அரேபிய- கிரேக்க நாகரிகத்தின் விளைவு தான் யூனானி மருத்துவம்.

யூனானி என்ற சொல் கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பண்டைய தமிழகத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைத்தனர். இன்றைய கிரேக்க தேசத்தின் மேற்கத்திய மாகாணமான இயோனியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அரேபியரையும் யவனர்கள் என்றே அழைத்தனர். இன்று முஸ்லிம்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் சோனகர் என்ற சொல் கூட யவனர்களில் இருந்து திரிபடைந்த சொல் தான்.

பண்டைய தமிழர்களுக்கு கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்காலத்திலும் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரையும் சீனர்கள் என்று அழைப்பது சாதாரணமான விடயம். பண்டைய தமிழர்களும் அப்படித் தான் அரேபியரையும் யவனர்கள் என்றனர். அவர்களது உடற்தோற்றம் ஒரே மாதிரி இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் சில நேரம் கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஜோர்டானில் இன்றைக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் பண்டைய நகரமான பேட்ரா, முன்னொரு காலத்தில் கிரேக்க நகரமாக இருந்தது. பேட்ரா என்பது கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பைபிளில் குறிப்பிடப்படும் இயேசுவும் சீடர்களும் வாழ்ந்த காலகட்டம், ரோமர்களின் ஆட்சிக் காலம் ஆகும். அந்த "ரோமர்கள்" பெரும்பாலும் கிரேக்க மொழி பேசிய கிரேக்கர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டத்தில் கிரேக்கம் மட்டுமே ஒரேயொரு நாகரிகமடைந்த பகுதியாக இருந்தது. அன்றைய காலத்தில் மேற்கு ஐரோப்பியர்கள் காடுகளுக்குள் வாழும் காட்டுமிராண்டிகளாக இருந்த படியால், கிரேக்கர்களுக்கு மேற்குலகம் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. அவர்களது நோக்கம் முழுவதும் கிழக்கில் இருந்த நாகரிகமடைந்த சமுதாயங்களை போரிட்டு வெல்வதாக இருந்தது. ஆகையினால், உலகம் முழுவதையும் ஆள விரும்பிய மசிடோனியா மன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்புகள் எல்லாம் கிழக்கை நோக்கியதாகவே இருந்துள்ளன.

அலெக்சாண்டர் வென்ற இடமெல்லாம் அலெக்சாண்ட்ரியா என்ற பெயரில் கிரேக்க நகரங்கள் அமைக்கப் பட்டன. எகிப்தில் இப்போதும் அந்தப் பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கியில் இன்றைக்கும் இஸ்கென்டருன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கி மொழியில் அலெக்சாண்டரை இஸ்கெண்டர் என்று அழைக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் துருக்கியின் மத்திய பகுதியில் கூட பெருமளவு கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய ஆப்கானிஸ்தான், அபிவிருத்தியில் பின்தங்கிய ஏழை நாடாக இருந்தாலும், முன்னொரு காலத்தில் அங்கு கிரேக்க நாகரிகம் செழித்து வளர்ந்தது. கண்டஹார், ஹெராட் ஆகிய நகரங்கள் இன்றைக்கும் கிரேக்க பெயர்களால் அழைக்கப் படுகின்றன. ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களும் கிரேக்கர்கள் தான். அவர்கள் பிற்காலத்தில் பௌத்தர்களாகவும், பின்னர் இஸ்லாமியராகவும் மாறி விட்டனர். பாகிஸ்தானில் இன்றைக்கும் கிரேக்க பாரம்பரியம் பேணும் பழங்குடி இனம் ஒன்றுள்ளது.

கிரேக்கர்கள் இஸ்லாமியராக மாறிய வரலாறு ஆப்கானிஸ்தானுடன் மட்டும் நின்று விடவில்லை. ஹெரோடோடுஸ் எனும் பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் கிரேக்கர்கள் சென்று குடியேறிய இடங்களை அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய யேமன் நாட்டில் உள்ளா சாபா, சானா வரையில் கிரேக்கர்கள் சென்று குடியேறி உள்ளனர். அதற்கு ஆதாரமாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வெண்கலக் கிண்ணங்கள் உள்ளன. தெற்கு எகிப்தில் முகாமிட்டிருந்த இரண்டு இலட்சம் கிரேக்க படையினர், இன்றைய சூடானின் மத்திய பகுதி வரையில் சென்று குடியேறி உள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூகோள அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, நிறைய சூடானிய- கிரேக்கர்கள் சைப்பிரசிலும், கிரீசிலும் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர்.

இந்த வரலாற்றை இங்கு நினைவுபடுத்துவதற்குக் காரணம், இஸ்லாம் என்பது பாலவனத்து அரேபியரின் மதம் என்ற கருத்து எந்தளவு அபத்தமானது என்று நிரூபிக்கத் தான். இஸ்லாமியரின் இறைதூதர் முகம்மது நபி பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே அரேபியாவில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. இன்றைய சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதியில் கூட சிறிதும் பெரிதுமான யூத, கிறிஸ்தவ ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் யேமனில் இருந்த ஷீபா இராணியின் நாடு பற்றி பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ஆகையினால், அரேபியர்கள் என்றாலே முன்பு அவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர்" என்று எப்படிக் கூற முடியும்?

உண்மையில் அந்தக் காலத்தில் அரேபியாவில் இருந்த சமுதாய அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. கணிசமான அளவு அரேபியர்கள் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் பாரம்பரிய மதங்களை பின்பற்றினார்கள். இதனை இயற்கை வழிபாடு, சிலை வணக்கம், சிறு தெய்வ வழிபாடு என்று பலவாறாக அழைக்கலாம். 

மெக்காவில் உள்ள காபா, அதை நோக்கிய ஹஜ்ஜு யாத்திரை கூட இஸ்லாத்திற்கு முந்திய பாரம்பரிய மத வழிபாட்டின் தொடர்ச்சி தான். அந்தக் காலத்திலும் அரேபியாவின் பல பகுதிகளிலும் இருந்து மெக்காவுக்கு யாத்திரை சென்றவர்கள், அந்த இடத்தில் தமக்கிடையிலான பகை மறந்து சமாதானமாக நடந்து கொண்டனர். அதனால் வணிக ஒப்பந்தங்கள் செய்வதற்கு சிறந்த இடமாகக் கருதப் பட்டது.

முகம்மது நபி மெக்காவில் ஆதிக்கம் செலுத்திய குறைஷி இனக்குழுவை சேர்ந்தவர் என்றாலும், தனது சமூகத்தின் பழமைவாத பழக்கவழக்கங்களை எதிர்த்து வந்தார். அனேகமாக பைபிள் பற்றி கேள்விப் பட்டிராத பழமைவாத சமூகத்தில் இருந்து வந்த முகம்மது, மேற்கு அரேபியாவுக்கு சென்று வந்த வர்த்தகர்களின் தொடர்பினால் தான் புதிய மத சித்தாந்தம் பற்றி அறிந்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய பாலஸ்தீனம், ஜோர்டானை உள்ளடக்கிய மேற்கு அரேபியப் பகுதிகளில் தான் ஓரிறைக் கொள்கை கொண்ட யூத, கிறிஸ்தவ மதங்கள் செழித்து வளர்ந்தன.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவராலும் தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட மொசெசிற்கு, இறைவனால் முதல் தடைவையாக இறை வேதம் வெளிப்படுத்தப் பட்டதாக நம்புகிறார்கள். அதைத் தான் யூதர்களால் தோரா என்றும், கிறிஸ்தவர்களால் பைபிள் என்றும் அழைக்கப் படுகின்றது. அதே இறைவேதம் முகம்மதுவுக்கு கப்ரியேல் என்ற தேவதை மூலம் வெளிப்படுத்தப் பட்டதாகவும், அது தான் குரான் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். 

ஆகையினால், இஸ்லாம் என்பது "பாலவனத்தில் வாழ்ந்த அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" என்பது உண்மையானால், கிறிஸ்தவம், யூதம் ஆகியனவும் அதே பாலைவன காட்டுமிராண்டிகளின் மதங்கள் தான்! மொழி அடிப்படையில் பார்த்தாலும், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த யூதர்களின் ஹீபுரு மொழி, கிறிஸ்தவர்களின் அரேமிய மொழி, இஸ்லாமியரின் அரபு மொழி மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பு பட்ட ஒரே மாதிரியான செமிட்டிக் குடும்ப மொழிகள் தான்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இன்றைய சவூதி அரேபியப் பகுதிகளில் வாழ்ந்த அரேபியர்கள் தான். ஆனால், இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு அங்கே தொடங்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாக்தாத் நகரை தலைநகரமாகக் கொண்டிருந்த கலீபாக்களின் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாகரிக காலகட்டம் தோன்றி வளர்ந்தது. உண்மையில் அதை கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாகக் கருத வேண்டும். அதனால், இன்றைக்கு சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை "அரேபிய - ஹெலனிக் நாகரிகம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். ஹெலனிக் என்பது கிரேக்கத்தை குறிக்கும் கிரேக்கச் சொல்.

பாக்தாத்தில் உருவான இஸ்லாமிய நாகரிகத்தை, அரேபிய- ஹெலனிக் நாகரிகம் என்றும் குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் அரேபியா, ஐரோப்பாவை விட நாகரிகத்தில் பல மடங்கு முன்னேறி இருந்தது. ஏற்கனவே அலெக்சாண்டர் காலத்திலும், அதற்குப் பிந்திய கிறிஸ்தவ- கிரேக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் பாக்தாத் நகரம் உன்னத நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது.

இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரபு மொழியும், கிரேக்க மொழியும் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர். அறிவியல் துறையில் அவர்களது சேவை பெரிதும் தேவைப் பட்டது. பண்டைய இந்தியா, பாரசீகம், கிரேக்கத்தில் இருந்து ஏராளமான அறிவியல், இலக்கிய நூல்கள் பாக்தாத்திற்கு கொண்டு வரப் பட்டன. அங்கு அவை யாவும் அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன.

கிரேக்க தத்துவஞானிகளான அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றவர்கள் எழுதிய கிரேக்க தத்துவ நூல்கள் யாவும் முதன் முதலில் அரபு மொழியில் தான் மொழிபெயர்க்கப் பட்டன. அதற்குப் பிறகு தான் ஐரோப்பியர்கள் அவற்றை அறிந்து கொண்டனர். Galenos, Hippocrates, Dioscorides, Euclides, Ptolemeos, Archimedes, ஆகிய தத்துவ அறிஞர்களின் அனைத்து நூல்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இதில் பல பெயர்கள் இன்றைக்கும் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பரிச்சயமாக இருக்கும். உண்மையில், அன்றைக்கு இந்த நூல்கள் அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கா விட்டால், இன்றைக்கு நாம் அறிவியல் அறியாத சமூகமாக இருந்திருப்போம்.

பண்டைய கிரேக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டு, அரேபிய விஞ்ஞானமும், தத்துவ ஞானமும் உருவாகின. அரேபிய அறிவியல் மேற்கத்திய அறிவியலுக்கு பல நூறாண்டுகள் முந்தியது. இபுன் சினா (Ibn Sina), அல் ரழி (Al Razi) ஆகிய அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் தந்தையராக போற்றப் படுகின்றனர். அல் சாஹ்ராவி அறுவைச் சிகிச்சையை கண்டுபிடித்தார். Ibn Butlan, Ibn Haitham, Ibn Rushd என்று இன்னும் பல அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் மூலவர்களாக இருந்துள்ளனர்.

அரேபியர் கொண்டு சென்ற இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம் அறிவியல் நூல்களும் கொண்டு செல்லப் பட்டன. அரேபிய வைத்தியர்கள் மருத்துவத் துறையில் முன்னேறி இருந்த காலத்தில், ஐரோப்பிய வைத்தியர்கள் நோயாளி குணமடைய பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஒரு நோயாளி தீராத தலைவலி காரணமாக வைத்தியரிடம் சென்றால், மண்டையில் ஆணி அடித்து அசுத்த ஆவியை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாக, அரேபிய மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கும் வரையில், ஐரோப்பியர்களின் மருத்துவம் மிக மோசமாக பின்தங்கி இருந்தது.

தெற்கு இத்தாலியில் பாலேர்மோ, ஸ்பெயின் மத்தியில் உள்ள டொலேடோ ஆகிய நகரங்கள் ஒரு காலத்தில் அரேபியர்களின் நகரங்களாக இருந்தன. கிறிஸ்தவ மன்னர்கள் அவற்றைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த அறிவியல் நூல்களை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவ்வாறு தான் நவீன மருத்துவம் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. குறிப்பாக இபுன் சினா (ஐரோப்பியர்கள் அவிசேனா என்றழைத்தனர்.) எழுதிய மருத்துவ நூலும், அல் சஹ்ராவி எழுதிய அறுவைச் சிகிச்சை பற்றிய நூலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப் பட்டன.

ஐரோப்பிய நாகரிகம் வளர்வதற்கு அரேபியர்கள் செலுத்திய பங்களிப்பு பிற்காலத்தில் மறைக்கப் பட்டது. அது ஓர் அரசியல் படுகொலையுடன் ஆரம்பமானது. கிறிஸ்தவ ஐரோப்பாவில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலாக அரேபிய தத்துவ ஞானம் கற்பதற்கான பிரிவு ஆரம்பிக்கப் பட்டது. அதை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் டச்சுக்காரரான Siger van Brabant. அரிஸ்டாட்டில் வழியை பின்பற்றிய அரேபிய தத்துவஞானி அவேரோஸ் (இபுன் ரஷிட்) அவர்களது வழிகாட்டியாக இருந்தார். ஆகையினால், பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்த மாணவர்கள் தம்மை அவேரோயிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர்.

அவேரோஸ் இரண்டு முக்கியமான புரட்சிகரமான தத்துவங்களை முன்வைத்திருந்தார். ஒன்று: இந்த பூமி ஆதியும், அந்தமும் இல்லாதது. (இது பூமியை ஆண்டவன் படைத்தான் என்ற பைபிள் கோட்பாட்டுக்கு முரணானது.) இரண்டு: நாங்கள் மத ரீதியான சிந்தனையை ஒரு பக்கமும், அறிவியல் சிந்தனையை இன்னொரு பக்கமுமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். (இது நவீன கால மதச்சார்பற்ற கொள்கை போன்றது. ஆகையினால் அன்றிருந்த கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு முரணானது.)

மேற்குறிப்பிட்ட தத்துவ வாதங்கள் அன்றைய கிறிஸ்தவ மத மேலாண்மைக்கு எதிராக திரும்பலாம் என வத்திகான் அஞ்சியதில் வியப்பில்லை. பாரிஸ் நகர பிஷப், இது கிறிஸ்தவ விரோதம் என அறிவித்தார். 1283 ம் ஆண்டு, சோர்போன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை அதிபர் ஒரு கத்தோலிக்க மதவெறியனால் படுகொலை செய்யப் பட்டார். அதற்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் அவெரோயிசம் என்ற இறைமறுப்புக் கொள்கையை வேரோடு அழிப்பதில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியரிடமிருந்து பாலஸ்தீனத்தை மீட்பதற்காக போப்பாண்டவர் அறிவித்த சிலுவைப்போர் காரணமாக, அரேபியருடனான எந்தத் தொடர்பையும் கிறிஸ்தவ மதத் துரோகமாக கருதும் நிலைமை உருவானது. அதனால், ஐரோப்பா இன்னும் பல நூற்றாண்டுகள் அறிவியலில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக சிலுவைப்போரினால் சில நன்மைகளும் ஏற்பட்டன. லெபனான், பாலஸ்தீனத்தை இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து மீட்டெடுத்து அங்கு கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை அமைத்தவர்கள் பல புதிய தகவல்களை அறிந்து கொண்டனர். சிலுவைப் போர்வீரர்கள், தாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்திய கிழக்கில் ஒரு நாகரிகத்தில் முன்னேறிய சமுதாயம் இருக்கக் கண்டனர். அவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்றுக் கொண்டனர். இவ்வாறு தான் நவீன அறிவியல் ஐரோப்பாவுக்குப் பரவியது.

Monday, June 17, 2019

இலங்கை இனப்பகையின் எதிர்வினையாக உலக முஸ்லிம்களை பகைப்பது மடமை


முன்பொரு த‌ட‌வை, நெத‌ர்லாந்து கிராம‌ம் ஒன்றில் நாங்க‌ள் இருந்த‌ அக‌தி முகாமில் பெந்த‌கொஸ்தே கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பிரார்த்த‌னைக் கூட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அதை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் ட‌ச்சுக் கார‌ர்க‌ள். க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌மிழ் அக‌திக‌ள். மேற்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில், கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவோர் பெரும்பாலும் அக‌தி முகாம்க‌ளில் தான் பிர‌ச‌ங்க‌ம் செய்து கொண்டிருப்பார்க‌ள். இது எம‌க்கு ப‌ழ‌கிப் போன‌ விட‌ய‌ம்.

அந்த‌ வீட்டில் எம்முட‌ன் ஒரு பொஸ்னிய‌ இளைஞ‌னும் த‌ங்கி இருந்தான். த‌ற்செய‌லாக‌ நாம் பைபிள் ப‌டித்துக் கொண்டிருந்த‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ அந்த‌ இளைஞ‌ன், கிறிஸ்த‌வ‌ போத‌னைக‌ளை கேட்டு குழ‌ம்பி விட்டான். வ‌ழ‌மையாக‌ அமைதியாக‌ இருக்கும் அந்த‌ இளைஞ‌ன் அழுது குள‌றி ஆர்ப்பாட்ட‌ம் செய்து விட்டான். நானும், முகாம் பொறுப்பாள‌ரும் சேர்ந்து அவ‌னை த‌னியே அழைத்து சென்று ஆறுத‌ல் ப‌டுத்தினோம்.

பொஸ்னிய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை சேர்ந்த‌ அந்த‌ இளைஞ‌ன், முன்பு பொஸ்னிய‌- சேர்பிய‌ அக‌திக‌ளுடன் த‌ங்கி இருந்தான். அப்போது பொஸ்னிய‌ போர் உச்ச‌க‌ட்ட‌த்தில் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. அது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எதிரொலித்த‌து. முகாமில் இருந்த‌ அக‌திக‌ளும் கிறிஸ்த‌வ‌- முஸ்லிம் வெறுப்பு அர‌சிய‌ல் பேசி த‌ம‌க்குள் ச‌ண்டை பிடித்த‌ ப‌டியால், இவ‌னை வேறு வீட்டில் த‌ங்க‌ வைத்திருந்த‌ன‌ர்.

பொஸ்னியாவில், கிறிஸ்த‌வ‌- சேர்பிய‌ ப‌டையின‌ரின் வ‌ன்முறைக்கு உற‌வின‌ர்களை ப‌லி கொடுத்த‌ அக‌திக‌ள், அந்த‌ இழ‌ப்புக‌ள் கார‌ண‌மாக‌ க‌டுமையான‌ ம‌ன‌ அழுத்த‌த்திற்கு உள்ளாகி இருந்த‌தை புரிந்து கொள்ள‌ முடியும். ஆனால், பொஸ்னிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளால் ஏற்ப‌ட்ட‌ பாதிப்பு கார‌ண‌மாக‌ உல‌கில் உள்ள‌ அத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளையும் வெறுக்கும் வெகுளித்த‌ன‌மான‌ ம‌ன‌நிலையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டுமென்ப‌தில்லை.

அன்று முகாமில் பைபிள் ப‌டிக்க‌ வ‌ந்த‌ ட‌ச்சு கிறிஸ்த‌வர்க‌ளை க‌ண்ட‌தும் ப‌ய‌ந்து அல‌றிய‌ கார‌ண‌ம் என்ன‌வென‌க் கேட்டேன். "என‌து நாட்டிலும் பைபிள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் தான் எங்க‌ள் இன‌ப் பெண்க‌ளையும், குழ‌ந்தைக‌ளையும் கொடூரமாக‌ கொலை செய்தார்க‌ள்..." என்று அந்த‌ பொஸ்னிய‌ இளைஞ‌ன் ப‌தற்ற‌த்துட‌ன் சொன்னான்.

பொஸ்னியாவில் யுத்த‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் கொலை வெறியுட‌ன் ந‌ட‌ந்து கொண்ட‌ சேர்பிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும், புல‌ம்பெய‌ர்ந்த‌ நாட்டில் யாருக்கும் எந்த‌த் தீங்கும் செய்யாத‌ ட‌ச்சுக் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் இடையிலான‌ வித்தியாச‌த்தை நான் அவ‌னுக்கு புரிய‌ வைப்ப‌த‌ற்கு முய‌ன்றேன். அன்று என‌து ஆறுத‌ல் வார்த்தைக‌ளால் அட‌ங்கிப் போனாலும், அவ‌ன‌து ம‌ன‌தில் இருந்த‌ "பைபிள் ப‌டிக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு" எதிரான‌ வெறுப்புண‌ர்வு எளிதில் ம‌றைந்து விடும் என‌ நான் நினைக்க‌வில்லை. அது இப்போதும் அடி ம‌ன‌தில் த‌ண‌லாக‌ புகைந்து கொண்டிருக்க‌லாம்.

அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தை இங்கே நினைவுகூரக் கார‌ண‌ம், அந்த‌ பொஸ்னிய‌ இளைஞ‌னின் ம‌ன‌நிலையில் தான் இன்று ப‌ல‌ (ஈழத்) த‌மிழ‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர். முன்பு ஈழ‌ப்போர் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ வ‌ன்முறைக‌ளை ம‌ன‌தில் இருத்தி, உல‌க‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரையும் கொடூர‌மான‌வர்க‌ளாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

முப்ப‌தாண்டு கால‌ ஈழ‌ப்போரான‌து, கிழ‌க்கில‌ங்கையில் வாழும் மூவின‌ ம‌க்க‌ளையும் தீர்க்க‌ முடியாத‌ ப‌கை முர‌ண்பாடு கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாற்றி உள்ள‌து. நீங்க‌ள் அந்த‌ப் பிர‌தேச‌த்திற்கு சென்று எந்த‌ இன‌ மக்க‌ளோடு பேசினாலும், அவர்கள் த‌ம‌து இன‌த்திற்கு ஏற்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளை ம‌ட்டும் பேசுவார்க‌ள். த‌மிழ், சிங்க‌ள‌, முஸ்லிம், எனும் இன‌ அடையாள‌ம் ம‌ட்டுமே முக்கிய‌மாக‌க் க‌ருத‌ப் ப‌டும் ஒரு நாட்டில், த‌ன்னின‌ம் சார்ந்த‌ சுய‌ந‌ல‌மே மேலோங்கி இருக்கும்.

குறிப்பாக‌ த‌மிழ‌ர்க‌ள் ஒரு ப‌க்க‌ம் சிங்க‌ள‌வ‌ராலும், ம‌று ப‌க்க‌ம் முஸ்லிம்க‌ளாலும் க‌டுமையாக‌ப் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். முஸ்லிம் கிராம‌ங்க‌ளை புலிக‌ளின் தாக்குத‌ல்க‌ளில் இருந்து பாதுகாப்ப‌து என்ற‌ கார‌ண‌ம் கூறி, அர‌ச‌ இராணுவ‌த்தின் துணைப்ப‌டையாக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌ முஸ்லிம் ஊர்காவ‌ல் ப‌டைக‌ள், த‌மிழ்க் கிராம‌ங்க‌ளை சூறையாடி அப்பாவிப் பொது ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. த‌மிழ்க் கிராம‌ங்க‌ள் மீதான‌ முஸ்லிம் ஊர்காவ‌ல் ப‌டைகளின் நேர‌டித் தாக்குத‌ல்க‌ளின் போது ம‌ட்டும‌ல்லாது, இர‌க‌சிய‌மான‌ ஆட்க‌ட‌த்த‌ல்க‌ளிலும் பெரும‌ள‌வு த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளினதும், அந்த‌க் க‌தைக‌ளை கேள்விப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளினதும் ம‌ன‌தில் எழும் முஸ்லிம்க‌ள் மீதான‌ வெறுப்புண‌ர்வு புரிந்து கொள்ள‌த் த‌க்க‌து.

கிழ‌க்கில‌ங்கையில் க‌ட‌ந்த‌ கால‌த்தில் ந‌ட‌ந்த க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கார‌ண‌மாக‌, அங்குள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து பிர‌தேச‌ முஸ்லிம்க‌ள் மீது ஆத்திர‌ப் ப‌டுவ‌தில் நியாய‌ம் இருக்க‌லாம். அத‌ற்காக‌ த‌மிழ‌ருட‌ன் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ முஸ்லிம் பொது மக்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌கிழ்ச்சி அடைவ‌தில் எந்த‌ நியாய‌மும் இல்லை.

கிழ‌க்கில‌ங்கையில் ந‌ட‌க்கும் த‌மிழ‌ருக்கும், முஸ்லிம்க‌ளுக்கும் இடையிலான‌ தாய‌க உரிமைப் பிர‌ச்சினை, நில அப‌க‌ரிப்புக‌ள், அதனால் ந‌ட‌ந்த‌ கொலைக‌ள் எல்லாம் இன‌ப் பிர‌ச்சினைக்கு உட்ப‌ட்ட‌ விட‌ய‌ம். தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளையும், வ‌ட‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளையும் அதற்குள் இழுத்து முடிச்சுப் போடுவ‌து புத்திசாலித்த‌ன‌மான‌து அல்ல‌. அதை விட‌, அவர்களை உலக‌ முஸ்லிம்க‌ளுட‌ன் சேர்த்து ஒன்றாகப் பார்ப்ப‌து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து.

இல‌ங்கை இந்துவுக்கும், நேபாள‌ இந்துவுக்கும் இடையில் ம‌த‌த்தை த‌விர‌ வேறென்ன‌ ஒற்றுமை இருக்கிற‌து? இல‌ங்கைப் பௌத்த‌ரும் சீன‌ப் பௌத்த‌ரும் ஒரே இன‌த்த‌வ‌ர்க‌ளா? இல‌ங்கை கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அமெரிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் த‌ம்மின‌ ம‌க்க‌ளாக‌க் க‌ருதுகிறார்க‌ளா?

ஒரே ம‌த‌த்தை பின்பற்றும் கார‌ண‌த்தால், க‌லாச்சார‌மும் ஒன்றாக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நிற‌த்தால், இன‌த்தால், ப‌ண்பாட்டால் மாறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஒரே ம‌த‌த்தை பின்ப‌ற்றுவ‌தால் ம‌ட்டும் ஒன்றாகி விடுவ‌தில்லை.

அர‌ச‌ அதிகார‌த்தில் இருந்து ஒடுக்கும் முஸ்லிம்க‌ளும், குடிமக்க‌ளாக‌ ஒடுக்க‌ப் ப‌டும் முஸ்லிம்க‌ளுக்கு இடையிலான‌ வித்தியாச‌த்திற்கு காரண‌ம் வ‌ர்க்க‌ முர‌ண்பாடு. அத‌ன் விளைவாக‌ ப‌ல‌ நாடுக‌ளில் ம‌க்க‌ள் எழுச்சிக‌ளும், யுத்த‌ங்க‌ளும் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள், இஸ்லாமிய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ச‌மூக‌த்தில் நில‌வும் வ‌ர்க்க‌ முர‌ண்பாட்டை க‌ண்டுகொள்ள விடாம‌ல் ம‌த‌த் திரை போட்டுத் த‌டுக்கின்ற‌ன‌ர். முர‌ண்ந‌கையாக‌, இஸ்லாமோபோபியா- இன‌வாதிக‌ளும் இந்த‌ விட‌ய‌த்தில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ளுட‌ன் கொள்கை ரீதியாக‌ ஒன்று சேர்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளும் ம‌த‌ முத்திரை குத்தி அனைத்து முஸ்லிம்க‌ளையும் த‌னிமைப் ப‌டுத்துகிறார்க‌ள். இவ்விர‌ண்டு த‌ர‌ப்பின‌ரும் பாஸிச‌ம் என்ற‌ ஒரே நாண‌ய‌த்தின் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ள் தான்.

Monday, June 10, 2019

"முஸ்லிம் நாடுகள் தலையிடும்" எனும் தப்பெண்ணம்


"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில் "அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்" கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது. அதாவது "தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்..." என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.

இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது. அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.

ஆகையினால் "முஸ்லிம் நாடுகள் தலையிடும்... கேள்வி கேட்கும்..." என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து. நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது. அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.

இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா? வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா? தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.

அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.

அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.

இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல. முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம். அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.

Sunday, June 09, 2019

பூர்காவுக்கு த‌டைவிதித்தால் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடுமா?

"பூர்காவுக்கு த‌டைவிதித்தால் முஸ்லிம் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடும்" என்ற‌ த‌ப்பெண்ண‌ம் ப‌ல‌ரிட‌ம் காண‌ப் ப‌டுகின்ற‌து. பிற‌ ம‌த‌த்த‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாது, முன்னாள் முஸ்லிம்க‌ள் கூட‌ இஸ்லாம் என்ற‌ ம‌த‌த்தை த‌டை செய்து விட்டால் இந்த‌ப் பிர‌ச்சினை தீர்ந்து விடும் என்று பாம‌ர‌த்த‌ன‌மாக‌ நினைக்கிறார்க‌ள்.

எல்லாப் பெண்க‌ளும் ம‌த‌ம் அல்ல‌து ஆண் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் நிர்ப்ப‌ந்திப்ப‌த‌ன் காரண‌மாக‌ பூர்க்கா அணிவ‌தில்லை. தாமாக‌ விரும்பி அணியும் பெண்க‌ளும் உண்டு. சில‌ குடும்ப‌ங்க‌ளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்க்கா அணிந்த‌ ம‌க‌ள்மாரும் உண்டு.

இந்த‌ உண்மைக‌ளை அறியாம‌ல், "ஐயோ பாவ‌ம், இஸ்லாமிய‌ க‌டும்போக்காள‌ர்க‌ளால் முஸ்லிம் பெண்க‌ள் ஒடுக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்" என்று நீலிக் க‌ண்ணீர் வ‌டிப்போர் உண்மையில் அந்த‌ப் பெண்க‌ள் மீதான‌ அக்க‌றையில் அதைச் சொல்ல‌வில்லை. இது போன்ற‌ க‌தைக‌ளை ப‌ர‌ப்பி முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ இன‌வாத‌த்தை வ‌ள‌ர்ப்ப‌தே அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ உள்ள‌து.

வ‌ற‌ட்டுத்த‌ன‌மான‌ வாத‌ங்க‌ளால் மத‌த்தை போட்டுத் தாக்குவோர், பூர்க்கா அணிவ‌த‌ற்கு பின்னால் உள்ள‌ ச‌மூக‌- பொருளாதார‌ கார‌ணிக‌ளை கவ‌னிக்க‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ளை காட்டி விள‌ங்க‌ப் ப‌டுத்த‌லாம்.

"பூர்க்காவில் இருந்து ஆப்கான் பெண்க‌ளை விடுதலை செய்ய‌ப் போவ‌தாக‌" அறிவித்து விட்டுத் தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ப‌டையெடுத்த‌து. அந்தோ ப‌ரிதாப‌ம்! அமெரிக்கா "விடுத‌லை" செய்து ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழிந்த‌ பின்ன‌ரும், இன்றும் பெரும்பாலான‌ ஆப்கான் பெண்க‌ள் பூர்க்கா அணியாம‌ல் வெளியே செல்வ‌தில்லை.

உல‌கிலேயே மிக‌ப் ப‌ல‌ம் வாய்ந்த‌, அமெரிக்காவின் "ஜ‌ன‌நாய‌க‌" இராணுவ‌ம், ஆப்கான் பெண்க‌ளின் பாதுகாப்புக்கு இருக்கிற‌தென்ற‌ தைரிய‌த்தில் யாரும் பூர்க்காவை தூக்கி வீச‌வில்லை. நாட்டு நிலைமை மோச‌மாக இருப்ப‌தால், த‌ம‌து பாதுகாப்பு க‌ருதி தாமாக‌வே பூர்க்கா அணிந்து செல்கிறார்க‌ள். அங்கே எந்த‌ப் பெண்ணும் பிர‌ச்சினைக‌ளை விலை கொடுத்து வாங்கத் த‌யாராக‌ இல்லை.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிர‌மிப்புக்கு பின்ன‌ர் தான் பூர்க்கா க‌லாச்சார‌ம் ப‌ர‌விய‌து என்று சொன்னால், ப‌ல‌ருக்கு ந‌ம்புவ‌து க‌டின‌மாக‌ இருக்கும். உண்மையில், அமெரிக்க‌ இராணுவ‌ம் "விடுத‌லை" செய்த‌ பிற‌கு தான், ஈராக்கில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் மிக‌ வேக‌மாக‌ப் ப‌ர‌விய‌து. ஒவ்வொரு தெருவிலும் அமெரிக்க‌ இராணுவ‌ம் நிலைகொண்டிருந்த‌ கால‌த்தில் தான், ஈராக் பெண்க‌ள் பூர்க்கா அணியாம‌ல் வெளியில் செல்ல‌ அஞ்சினார்க‌ள். அந்த‌ நிலைமை இப்போதும் தொட‌ர்கிற‌து.

ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌ நீடித்த‌ ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில், ஈராக்கில் எந்த‌ இட‌த்திலும் பூர்க்கா அணிந்த‌ ஒரு பெண்ணைக் கூட‌ காண‌ முடியாது. எல்லோரும் ஐரோப்பிய‌ பாணியிலான‌ ந‌வ‌ நாக‌ரிக‌ உடை தான் உடுத்துவார்க‌ள். முக்காடு போடும் பெண்க‌ளைக் கூட‌ காண்ப‌து அரிது. எங்காவ‌து கிராம‌ங்க‌ளில் வ‌ய‌தான‌ பெண்க‌ள் ம‌ட்டுமே முக‌ம் மூடாத‌ பூர்க்கா, அல்ல‌து முக்காடு அணிந்திருப்பார்க‌ள்.

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் சுத‌ந்திர‌மாக‌ திரிந்த‌ ஈராக்கிய‌ பெண்க‌ள், எத‌ற்காக‌ இப்போது பூர்க்காவுக்குள் த‌ம்மை சிறைப் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும்?

ச‌தாம் ஹுசைன் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்தினாலும், அந்த‌க் கால‌த்தில் ஈராக் ம‌க்க‌ளின் த‌னி ந‌ப‌ர் வ‌ருமான‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌ம் உய‌ர்ந்திருந்த‌து. ஏழைக‌ள் குறைவாக‌ இருந்த‌ன‌ர். கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தும் மிக‌க் குறைவு.

அமெரிக்கா "விடுதலை" பெற்றுத் த‌ந்த‌ பின்ன‌ர், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத‌வாறு கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் ப‌ல‌ மட‌ங்கு அதிக‌ரித்த‌ன‌. எங்கு பார்த்தாலும் அள‌வுகட‌ந்த‌ வேலையில்லாப் பிர‌ச்சினையும், வ‌றுமையும் மக்க‌ளை வாட்டிய‌து.

நாட்டில் நில‌வும் பாதுகாப்ப‌ற்ற‌ நிலைமைக்கு கார‌ண‌ம் பொருளாதார‌ பிர‌ச்சினைக‌ள் என்ப‌தை அறிந்திராத‌ அல்ல‌து புரிந்து கொள்ள‌ விரும்பாத‌, ம‌த‌- க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள் பூர்க்கா அணிவ‌தே பெண்க‌ளுக்கு பாதுகாப்பு என்ற‌ன‌ர். அப்பாவி ஆண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, பெண்க‌ளும் அதை ந‌ம்பினார்க‌ள்.

ம‌த‌ உண‌ர்வு வ‌ர்க்க‌ உண‌ர்வை ம‌ழுங்க‌டித்து விடும் என்ப‌தால் அர‌சும் ம‌றைமுக‌மாக‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌த்தை ஊக்குவிக்கும். இத‌ன் மூல‌ம் ம‌க்க‌ளின் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து அர‌சாங்க‌ம் த‌ப்பிக் கொள்கிற‌து.

உல‌கில் எந்த‌ நாட்டிலும் வாழும் பெரும்பாலான‌ ச‌ராச‌ரி ம‌க்க‌ள், உண‌வுக்கு வ‌ழியில்லை என்றால் புர‌ட்சி செய்ய‌ நினைக்க‌ மாட்டார்க‌ள். த‌ம‌து க‌ஷ்ட‌ங்க‌ளை சொல்லி இறைவ‌னிட‌ம் முறையிடுவார்க‌ள். ம‌த‌ ஒழுக்க‌த்தை பேணி வ‌ந்தால் போதும், க‌ட‌வுள் ந‌ல்ல‌ வ‌ழி காட்டுவார் என‌ நினைப்பார்க‌ள்.

மூன்று நேர‌மும் உண்டு கொழுத்திருக்கும், வ‌ச‌தியான‌ மேட்டுக்குடியின‌ருக்கு சாதார‌ண‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் புரியாது. அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து எல்லாம் "ம‌த‌ம்...ம‌த‌ம்...ம‌த‌ம்" ம‌ட்டும் தான்.

Saturday, June 01, 2019

முஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி


பதினைந்தாம் நூற்றாண்டில் "சீன நாட்டு கொலம்பஸ்" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இன்றுள்ளதை போன்று அந்தக் காலத்திலும் சீனாவில் இருந்து அரேபியா வரையில், இந்து சமுத்திரம் ஊடாக வணிகப் போக்குவரத்து கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அவை இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்று பொருட்களை வேறு கப்பல்களுக்கு மாற்றுவதுண்டு.

சீன அட்மிரல் செங்க்ஹோவின் பிரதான நோக்கமும் சர்வதேச வர்த்தகம் தான். ஒரு தடவை இலங்கைக்கு வந்த செங்க்ஹோ சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசித்து விட்டு வந்தார். அதை நினைவுகூர்வதற்காக காலியில் (?) ஒரு கல்வெட்டு செதுக்கி வைத்திருந்தார். அதில் சீனம், அரபி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப் பட்டிருந்தன. சீன மொழி செங்க்ஹோவின் தாய்மொழி. இலங்கையில் இருந்து அரபிக் கடலுக்கு பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அரபு வணிகர்கள். அதனால் அரபு மொழி. மூன்றாவதாக இலங்கையின் உள்நாட்டு மொழியாக தமிழில் எழுத வேண்டிய காரணம் என்ன?

அந்தப் பிரதேசம் கோட்டே ராஜ்ஜியத்திற்கு உட்பட்டது. அங்கு சிங்களம் பேசப் பட்டது. அது சீனர்களுக்கும் தெரியும். ஒரு தடவை கோட்டே மன்னன் வர்த்தகத்திற்கு இடையூறு செய்த காரணத்தால், பெரும் படையுடன் திரும்பி வந்த சீனர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி முப்பதாண்டுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனாவுக்கு கொண்டு சென்று விட்டனர். இந்தப் போர் பற்றிய சீன வரலாற்றுத் தகவல்களில் "சிங்கள மன்னன் அழகேஸ்வரன்"(ஒரு தமிழன்?) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். திரும்பவும் கேள்விக்கு வருவோம். கல்வெட்டில் சிங்களத்தை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அதற்குக் காரணம் அன்றைய சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தினார்கள். (அப்போது அதை தமிழ் என்று சொல்லாமல் மலபார் என்ற பெயரில் அழைத்தனர்.) செங்க்ஹோ ஒரு சீன முஸ்லிம். இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில், இலங்கை முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. அதனால் இலகுவாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஐரோப்பிய காலனியாதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்து வருகின்றது. அவர்கள் அரேபியருடன் வணிகத் தொடர்புகளை வைத்திருந்த போதிலும் எந்தக் காலத்திலும் அரபி மொழிக்கு மாற விரும்பி இருக்கவில்லை. அதற்கான எந்த நிர்ப்பந்தமும் இருக்கவில்லை.

அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். அரேபியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னரே இலங்கையுடன் வணிகம் செய்து வந்தனர். அப்போதும் சர்வதேச வணிக மொழியாக தமிழ் இருந்து வந்துள்ளது. இலங்கையில் இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலமாகவே பரப்பப் பட்டது. மாலைதீவிலும் அப்படித் தான்.

இஸ்லாமியராக மதம் மாறியவர்கள் தமது மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை. அதனால் தான் இந்தியா, இலங்கை, மாலைதீவுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் தமது பூர்வீக மொழிகளை பேசி வருகின்றனர். புள்ளிவிபரக் கணக்கெடுப்பை எடுத்துப் பார்த்தால் கூட, உலகில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள், அரபி அல்லாத பிற மொழிகளைப் பேசுகின்றனர்.

இன்று சவூதி வஹாபிச வழிகாட்டலில் இயங்கும் சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அரபியை இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியாக கொண்டு வரும் கொள்கையை கொண்டிருக்கின்றனர். இது ஒரு நவீன காலத்து மதவாத அரசியல்.

இந்தியாவில் இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வர விரும்புகிறது. (இது அந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளது.) அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும்.

உண்மையில் இது நவீன காலத்து இஸ்ரேலை பார்த்து உருவான அரசியல் கோட்பாடு. காலங்காலமாக ஹீபுரு பேசத் தெரியாமல் இருந்த யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் தான் ஹீபுரு படித்தார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழும் முதலாம் தலைமுறை யூதர்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். ஏன் அரபியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்களும் உள்ளனர். அது மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு செல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் யூதர்களுக்கு இன்றைக்கும் ஹீபுரு தெரியாது.

இது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவின் கொள்கை மட்டுமே. இதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருத்திப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் முஸ்லிம்களின் தாய்மொழியாக அரபி மொழியை கொண்டு வந்தால், அதற்கான முதல் எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் கிளம்பும். இலகுவாக தாய்மொழியான தமிழில் படிக்கும் வசதி இருக்கையில், யாரும் கஷ்டப்பட்டு அந்நிய மொழியான அரபியில் படிக்க விரும்ப மாட்டார்கள். அதை ஒரு பலவந்தமான திணிப்பாகவே உணர்வார்கள்.

இலங்கையை ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலமாக காலனியாக வைத்திருந்தாலும், இலங்கையர் அனைவரும் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசவில்லை. ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால், குறைந்த பட்சம் கிறிஸ்தவரின் தாய்மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவர முடியவில்லை. இன்றைக்கும் அவர்கள் சிங்களம் அல்லது தமிழ் தான் பேசுகிறார்கள். இந்த நிலைமை தான் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படும் அரபி மொழிக்கும் ஏற்படும். ஆகவே நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பதே நல்லது.

Sunday, November 22, 2015

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல!


ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.

விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. 

இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம். ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப் பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij. http://sunnah.com/muslim/12/206http://sunnah.com/bukhari/61/118)   

அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை "இஸ்லாமிய தேசம்" என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் "டாவ்லா" (Dawla) என்கிறார்கள்.

Kitaab Al Fitan நூல், இரும்பு மனம் படைத்த, "டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள். கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது. ISIS தலைவர் அபுபக்கர் அல் "பாக்தாதி", பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. (ISIS and the End of Times;  http://splendidpearls.org/2014/07/04/isis-and-the-end-of-times/)

ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS "இஸ்லாத்தின் பெயரால்" போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லா இராணுவம், ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னர், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி (LCP) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி இருந்தது. கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், தற்போது சிரியா நாட்டு எல்லையோரம் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவும், கடந்த சில வருடங்களாக ISIS எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. (https://www.youtube.com/watch?v=UD_IbVi9eyo)

இருப்பினும், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், கிறிஸ்தவர்கள், டுரூசியர்கள் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக உள்ளனர். (http://www.aljazeera.com/news/2015/09/lebanese-communist-fighters-gear-battle-isil-150919100740425.html



இஸ்லாமிய மதத்தின் பெயரில் இயங்கும், ISIS போன்ற தீவிரவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு, "உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று என்று அறிவுரை கூறும் மேதாவிகளுக்கு ஒரு விண்ணப்பம்.

உலகில் உள்ள எல்லா மதத்தவரையும் போன்று, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகள் அல்லர். மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். சோஷலிசத்தில், கம்யூனிசத்தில் அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதைத் தாங்கள் அறிவீர்களா? நீங்கள் அப்படியான முஸ்லிம்களை ஆதரிக்கலாமே?

உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக, சிரியாவின் வடக்கில் உள்ள குர்திய படையணிகள் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை காலமும் நடந்த யுத்தத்தில், ஆயிரக் கணக்கான ISIS தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.

பெரும்பான்மையான குர்தியர்கள், மதத்தால் முஸ்லிம்கள் தான். ஆனால், மதச்சார்பற்ற, சமதர்ம கொள்கையை நம்பும் முஸ்லிம்கள். ஆகவே, அப்படியான முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு உங்களுக்கேன் தயக்கம்?

"முஸ்லிம்கள் எல்லாம் மதவெறியர்கள்" என்று ஒரு பக்கச் சார்பான கதைகளை கூறி புலம்புவதை விட்டு விட்டு, மதச் சார்பற்ற முஸ்லிம்களை ஆதரிக்கும் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கலாமே?

Sunday, November 08, 2015

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக" முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக" கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்." ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்." சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்" என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை" தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..." நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்." என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்." என்று "அன்பான" உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, August 04, 2014

உலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது ஏன்?


பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை. 

பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?

மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.

ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.

அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 

"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும். 

ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.

அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை. 

மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 

இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.

Monday, June 30, 2014

இணக்க அரசியலின் தோல்வியும் தலித்திய அரசியலின் ஏழ்மையும்

  • இலங்கையில் இணக்க அரசியல் 


இலங்கையில் அண்மையில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களுக்குப் பின்னர், "முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி" குறித்து பல தமிழர்கள் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, "இதற்குத் தான் தமிழன் ஆயுதம் ஏந்தினான் தெரியுமா?" என்று கேட்கிறார்கள்.

இணக்க அரசியல் நடத்துவது, முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையாக கருத முடியாது. ஐம்பதுகளில் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இணக்க அரசியல் செய்தவர்கள் தான். மலையகத் தமிழர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸ், அன்று முதல் இன்று வரை, அரசுடன் சேர்ந்து இணக்க அரசியல் செய்து வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர், ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதே நல்லது என்று நம்புகின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார், கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போன்ற சில பிரபலங்கள் கூட, ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதற்கு தயங்காதவர்கள்.

இன்றைய இலங்கை அரசியலில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமை, உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மை இனங்களுக்கும் பொதுவானது. இணக்க அரசியல் செய்வதும், எதிர்ப்பு அரசியல் செய்வதும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியின் தீவிரத்தைப் பொறுத்தது.

"நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்." என்று மாவோ சொன்னார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட, மாவோவின் மேற்கோளை சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தமிழர்கள் பல தசாப்த காலமாக அஹிம்சா வழியில் போராடிக் களைத்த பின்னர் தான் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." என்று இன்றைக்கும் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் பலர், அதன் படிப்பினைகள் என்னவென்று நினைவுபடுத்திப் பார்ப்பதில்லை. முஸ்லிம்களும் ஆயுதப்போராட்டம் நடத்தினால், அவர்களுக்கும் ஒரு முள்ளிவாய்க்கால் காத்திருக்கிறது என்பதை, சிங்களப் பேரினவாத அரசு 2009 ஆண்டு நிரூபித்துக் காட்டி இருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் விடுக்கப் பட்ட எச்சரிக்கை. அது மட்டுமல்ல, தெற்காசியாவில் தமது இன விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் அனைத்து மக்களுக்குமான எச்சரிக்கை. இதனை, பாகிஸ்தான், இந்திய அரசுகள் வெளிப்படையாகவே தெரிவித்து வந்துள்ளன. பல்வேறுபட்ட அரசாங்கங்கள் தமக்குள் ஒன்று சேர்வதை, ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இடையிலான ஒன்று பட்ட போராட்டம் மட்டுமே, அவர்களின் விடுதலையை பெற்றுத் தரும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

******
ஐம்பதுகளில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம், பிற்காலத்தில் ஈழப் போருக்கு வழிவகுத்தது. தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், சிங்களம் படிக்க மாட்டோம் என்று அடம்பிடித்து ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, அவர்களது முதலாளிய பாசம் காரணமாக, இலங்கையின் பொருளாதரத்தில் பெருமளவு தனியார் தொழிற்துறை வர வேண்டுமென்று விரும்பினார்கள். (அந்தக் காலங்களில் அரசு நிறுவனங்களே அதிகமாக இருந்தன.)

முப்பதாண்டு ஈழப் போர் முடிந்த பின்னர், இலங்கை முழுவதும் எங்கு பார்த்தாலும் தனியார் நிறுவனங்கள் பல்கிப் பெருகிக் காணப் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பொழுது, கல்வித் தகைமையாக ஆங்கிலத்துடன், சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் நிர்வகிக்கப் படும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், "சிங்களம் கட்டாயம்" என்ற கோரிக்கை வைக்கப் படுகின்றது. அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்களாக இருப்பதால், எமது பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு சிங்கள மொழி அறிவு அவசியம்..." என்று வணிக மொழியில் பேசுகின்றார்கள்.

தனியார் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக, இன்று இளந்தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் தாமாகவே சிங்களம் படிக்கிறார்கள். அன்று, அரசு கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக போராடிய தமிழ் தேசியவாதிகள், இன்று மௌனமாக இருக்கிறார்கள். இன்று சிங்கள மொழி மேலாதிக்கத்தை எதிர்த்தால், ஏகாதிபத்தியத்தை பகைத்துக் கொள்ள வேண்டி இருக்கும், என்று தெரிந்து வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அந்தப் பத்தில் தேசியவாதமும் அடங்குகின்றது.


  • இலங்கையில் தலித்திய அரசியல்


மார்க்சிய புரிதலற்ற தமிழ் தேசியம் மட்டுமல்ல, தலித்தியமும் இறுதியில் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கவே உதவும். அவர்களது அரசியல் வறுமை எந்தளவு பாரதூரமான தவறுகளை இழைத்துள்ளது என்பதை, அண்மைக் கால இலங்கை அரசியல் நிலவரம் நிரூபித்து வருகின்றது.

வட இலங்கையில், தலித்திய அரசியல் செய்யக் கிளம்பிய, தலித்திய முன்னணியினரிடம் வர்க்கப் பார்வை கிடையாது. அது மட்டுமல்லாது, சிங்கள தலித் மக்களுடனான தோழமை உணர்வும் கிடையாது. சிங்களவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சினை இருப்பதைக் கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. இதுவும் ஒரு வகை தமிழ்க் குறுந் தேசியம் தான்.

ஒரு பக்கம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியினர் இந்துத்துவாவாதிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியின் மேலாண்மையை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் தலித்தியவாதிகள், சிங்கள வெள்ளாள தலைமையை நட்பு சக்தியாக கருதுவது ஒரு முரண்நகை. அது அவர்களது கொள்கைக்கே முரணானது. அதனால் தான், பொது பல சேனா போன்ற பாசிச சக்திகளினால், தமிழ் ஆதிக்க சாதியவாதிகளையும், தமிழ் தலித்தியவாதிகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்க்க முடிந்தது.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால், வர்க்க முரண்பாடு ஒளிந்திருக்கும். அதை ஆராய மறுப்பவன், ஆளும் வர்க்கத்திற்கே சேவகம் செய்கிறான்.

******

யாழ்ப்பாணத்தில் இன்றைக்கும் சில கிராமங்கள், தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் "தலித் கிராமங்களாக" அடையாளம் காணப் படுகின்றன. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எல்லோருடைய கவனமும் வன்னிப் பிரதேசத்தின் மேல் குவிந்திருந்தது. யாழ் குடாநாட்டில் நடந்த பல சம்பவங்கள் வெளியுலகை அடையவில்லை.

இறுதிப்போர் முடியும் வரையிலும், சிங்கள இராணுவமும், அதன் சட்டத்திற்குப் புறம்பான கொலைப் படைகளும், தினந்தோறும் தலித் கிராமங்களை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தின. சந்தேகத்திற்கு இடமான இளைஞர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றன. இதனால் என்றோ ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.

சிறிலங்கா அரச படைகள் எதற்காக தலித் கிராமங்களை குறி வைத்துத் தாக்க வேண்டும்? மரபு ரீதியாக போர்க்குணாம்சம் மிக்க தலித் இளைஞர்கள் தான், புலிகளின் போராளிகளாக அதிகளவில் உள்வாங்கப் பட்டிருந்தனர். பொதுவாக அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி யாழ்ப்பாணத்தில் ஏற்படுமானால், அது தலித் கிராமங்களில் இருந்தே உருவாகும் என்று அரசு சரியாகவே கணித்து வைத்திருந்தது.

யாழ் குடாநாட்டில், ஆதிக்க சாதியினரை பெரும்பான்மையாகக் கொண்ட கிராமங்களும் ஏராளமாக இருந்தன. அந்தக் கிராமங்களில், அரச படைகளின் அடக்குமுறை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. ஏனெனில், ஓரளவு வசதி படைத்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கூட, போராடப் போவதை விட, வெளிநாடுகளுக்கு செல்வதிலேயே அதிக நாட்டம் கொண்டவர்கள் என்பது அரசுக்கும் நன்கு தெரியும்.

Wednesday, July 20, 2011

யூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி

பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவம் (1819). வரலாற்று உண்மைகளை மறைத்து, மக்களை மூடராக்கும் இனவெறியர்களின் முகமூடியைக் கிழிக்கும் கதை இது.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்களும், முஸ்லிம்களும் வன்மம் கொண்ட எதிரிகளாக காட்டும் பரப்புரைகள் மலிந்து விட்ட காலமிது. தமிழ் இலக்கிய அறிவுஜீவிகளும், மேலைத்தேய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் விஷமப் பிரச்சாரத்தை உண்மையென்று நம்புகின்றனர். ஆனால், கிறிஸ்தவ நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் அடிக்கடி மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக, முஸ்லிம் நாடுகளில் யூதர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஸ்பெயின் கிறிஸ்தவ மன்னர்களால் கைப்பற்றப் பட்ட வேளை, மதச்சுத்திகரிப்புக்கு அஞ்சி ஓடிய யூதர்கள் பொஸ்னியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். 20 ம் நூற்றாண்டு வரையில், அதாவது நாசிகளின் இனப்படுகொலைக் காலம் வரையில், சாராஜெவோ நகரில் ஸ்பானிய மொழி பேசும் யூத சமூகம் வாழ்ந்து வந்தது.

மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட "ஓட்டோமான் துருக்கியர்கள்", இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்திருந்தார்கள். செர்போ- குரோவாசிய மொழி பேசும் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட, பொஸ்னிய மாநிலத்தில் அவர்களின் விகிதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகவிருந்தது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம், அன்றைய ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவும், அரச பதவிகளுக்காகவும் பலர் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல உள்ளூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியதை இங்கே ஒப்பிடலாம்.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில், யூதர்களும், முஸ்லிம்களும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யூத இளைஞன் ஒருவன், மதக்கலவரத்திற்கு காரணகர்த்தா ஆகினான். பெரும்பாலும், புதிதாக மதம் மாறியவர்கள், தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக மதத் தீவிரவாதிகளாக நடந்து கொள்வார்கள். Travnik என்ற நகரில், Moses Chavijo என்ற யூதன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தான். டெர்விஷ் அஹ்மத் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களை யூதர்களுக்கு எதிராக தூண்டி விட்டான். யூத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பிரச்சாரம் செய்த அஹ்மத்தின் பின்னால், சில முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டார்கள். இந்த தீவிரவாதக் கும்பல், யூதர்களை இலக்கு வைத்து தாக்கி வந்தது. யூதர்களும் அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, தீவிரவாத தலைவனான அஹ்மத்தை பிடித்து கொலை செய்து விட்டார்கள். சாராஜெவோ நகர் யூதர்களின் தலைமை மதகுருவான Moshe Danon உம் அந்தப் படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்தார்.

தலைவனை இழந்ததால் ஆத்திரமுற்ற முஸ்லிம் தீவிரவாத கும்பலை சேர்ந்தோர், துருக்கி ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். ஊழல்வாதியான ஆளுநரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் சாய்ந்து விட்டார். யூதர்கள் ஐந்து இலட்சம் தங்கக் காசுகளை, படுகொலைக்கான குற்றப்பணமாக கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றப் பணம் செலுத்தப் படும் வரையில், யூத மதகுருவும், பத்து யூத பிரமுகர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குள் பணம் வராவிட்டால், யூத பணயக்கைதிகள் கொலை செய்யப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முதல் நாள், யூதர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கோரினார்கள். சாராஜெவோ நகர முஸ்லிம் மக்களுக்கும், அந்தத் தீர்ப்பு அநீதியாகப் பட்டது. ஊழல்மய ஆளுனரை முஸ்லிம்களும் வெறுத்தார்கள். மேலும், தீவிரவாதக் கும்பல்களின் வன்முறைகளையும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து நடந்த சம்பவங்கள், மக்கள் சக்தியின் மகத்துவத்தை பறைசாற்றியது. ஆயுதமேந்திய மூவாயிரம் முஸ்லிம்கள், ஆளுநர் மாளிகையை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருக்கும் யூதர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். முஸ்லிம் மக்களின் எழுச்சிக்கு ஆளுநரும், மதத் தீவிரவாதிகளும் அடிபணிந்தார்கள். பிடித்து வைத்திருந்த யூதர்களை உடனடியாக விடுவித்தார்கள். தன்னை விடுவித்த முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, யூத மதகுரு மோஷே டானன் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குறிக்கோள் நிறைவேறும் முன்னரே மண்ணை விட்டு மறைந்து விட்டார். யூத- முஸ்லிம் நல்லுறவுக்காக இதயசுத்தியுடன் வாழ்ந்து மறைந்த மகானின் கல்லறை, இரு மதத்தவரும் வழிபடும் புனிதஸ்தலமாகியது. 1940 ல் நாஜிகளின் படையெடுப்பு அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில் நடந்த கதை, 21 ம் நூற்றாண்டின் இன/மதப் பூசல்களுக்கான தீர்வை சுட்டிக் காட்டுகின்றது. இன/மத/மொழித் தீவிரவாதத்தை வளர்க்கும் நபர்கள், அந்தந்த சமூகத்தினரால் ஒதுக்கப் பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மை இனத்தை/மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு அவசியம். இனங்களுக்கு/மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் வலுவடைந்தால், எதேச்சாதிகார ஆட்சியாளரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும். ஈழத்தமிழரின் விடுதலைக்கு அவசியமான பாடத்தையும், இந்தக் கதையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், தவறை திருப்பிச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.


உசாத்துணை:
1.Die Sephardim in Bosnien(Moritz Levy)(ஜெர்மன் மொழி)
2.Sarajevo Rose: A Balkan Jewish Notebook
3.Moshe Danon

Wednesday, December 01, 2010

ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது.

கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள்.

லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது.

"தமிழர்களின் தலைமை" எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது.

நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன.

ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

  1. சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
  2. முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
  3. நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
  4. அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.


முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. "முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல." வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள்.

 வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது.

இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது.

"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர்.

மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

Wednesday, April 02, 2008

இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

"பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது." இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம். படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும். பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும். இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )

நீண்ட காலமாக இஸ்லாமிய எதிர்ப்பு படம் தயாராகிறது, என்று நெதர்லாந்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும், ஆர்வமாய் எதிர்பார்க்கப் பட்ட பித்னா, இண்டர்நெட்டில் வெளி வந்த அடுத்த நாளே, "அட, இவ்வளவு தானா?" என்று கேட்க வைத்து விட்டது. "இதெல்லாம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான தொலைக்காட்சி ஒளிப்படங்கள், புதிதாக ஒன்றும் இல்லை, என்று முஸ்லிம்கள் கூறி விட்டனர். படம் வெளியானவுடன், உலகமெங்கிலும் இஸ்லாமிய நாடுகளில் கலவரங்கள் உண்டாகும், (வில்டர்சின் கூற்றில்) "காட்டுமிராண்டி முஸ்லிம்கள்" நெதர்லாந்து தூதுவராலயங்களை உடைத்து நொறுக்கி, கொளுத்துவார்கள். அதன் எதிரொலியாக, ஆத்திரமடையும் வெள்ளையின நெதர்லாந்து மக்கள் தந்து கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள். தான் அடுத்த பிரதமர் ஆகி விடலாம், என்றெல்லாம் வில்டர்ஸ் கனவு கண்டிருக்கலாம். ஐயோ பாவம், எதுவுமே நடக்கவில்லை. யாருடனும் நேரடி விவாதத்திற்கு போகாத வில்டர்ஸ், பாராளுமன்றத்தில் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவரின் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காத வேலைகள், சமூகத்தை பிளவு படுத்துவன , யதார்த்தங்களை எதிர்நோக்க துணிச்சலற்றவர், பக்க சார்பானவர், என்றெல்லாம் சக பாரளுமன்ற உறுப்பினர்கள் பொரிந்து தள்ளினர். அதற்கு பதிலளித்த வில்டர்ஸ், தான் மட்டுமே துணிச்சலுடன் "இஸ்லாமிய அபாயத்தை" எதிர் கொள்வதாக தெரிவித்தார்.

பித்னா படத்தில், நெதர்லாந்தில் வருடந்தோறும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். "ஒருகாலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள், வெள்ளையின ஒல்லாந்து காரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக போகின்றனர்." என்ற இனவாத கற்பனை, ஏற்கனவே பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம். அவர்கள், "முஸ்லிம்களையும் (அதற்குள்ளே வெள்ளையின கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள்), கறுப்பர்களையும் (அதற்குள்ளே கறுப்பின கிறிஸ்தவர்களும் அடங்குவர்) நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்று பிரச்சாரம் செய்கின்றனர். வில்டர்சின் பிரச்சாரம், வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அது அனைத்து மூன்றாம் உலகை சேர்ந்த குடியேறிகளுக்கும் எதிரானது. அப்படி இல்லாவிட்டால் ஏன் வில்டர்ஸ் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில், "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்." என்ற முதலாவது வாக்கியத்தை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை கிளப்ப வேண்டும்?

பாசிசம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் "தீய சித்தாந்தங்கள்" என்று கூறும் வில்டர்ஸ், தனது சித்தாந்தமான லிபரலிசம் பற்றி எதுவும் கூறாதது ஏன்? இல்லை...அவரது கூற்றுப்படியே, அது "சுதந்திரம்" என்று வைத்து கொள்வோம். தனது பித்னா படத்தை தடை செய்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறும் வில்டர்ஸ், எவ்வாறு குர் ஆன் தடை செய்யப் பட வேண்டும் என்று கோரலாம்? அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகாதா? கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு இயங்கலாம் , ஆனால் இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என சொல்வது தான் சுதந்திரமா? நாட்டில் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமேயான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல பூச்சாண்டி காட்டுகிறார். இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்தவர்களை சுட்டிக் காட்டும் அதேநேரம், நவ நாகரீக உடையணியும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏன் மறைக்க வேண்டும்? தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக, மிதவாத முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர்வதை விட்டு விட்டு, அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாக காட்டுவதால், சமூகம் இரண்டாக பிளவு படாதா? இந்தக் கேள்விகளுக்கு வில்டர்ஸ் போன்றவர்களிடம் பதில் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுகிய அரசியல் லாபங்கள்.

இவர்கள் தான் அப்படியென்றால், சில முன்னால் முஸ்லீம் புத்திஜீவிகளின் தற்புகழ்ச்சி தேடி அடிக்கும் ஸ்டன்ட்கள் வேறு எங்கள் நிம்மதியை கெடுக்கின்றன. இஸ்லாமிய நாடுகளில் பிறந்து வளர்ந்து, பின்னர் மேற்கு ஐரோப்பா வந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை தமது சொந்த நாட்டில் இருந்து, அம் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு இவர்கள் இஸ்லாமை விமர்சித்து கூறும் கருத்துகளை, இங்குள்ள ஊடகங்கள் மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கின்றன. அதனை தமது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சோமாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார். ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை. இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது. தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.

நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருந்து வருகிறீர்களா? நீங்கள் பிறப்பால் முஸ்லிமா? இந்தத் தகுதிகளுடன், இஸ்லாமிய மதத்தை விமர்சித்து எதாவது எழுதினால், கூறினால், மேற்குலக ஊடகங்கள் உங்களை கண்டு கொள்ளும். தினசரி உங்களை பற்றிய தலைப்பு செய்திகள், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வரும். ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெறலாம். உங்களைப் பற்றிய நூல்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும். இந்த பிரபல்யம் இஸ்லாமை தவிர வேறு மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களுக்கு அவர்கள் மீது நாட்டமில்லை.

நெதர்லாந்தில் நியோ-லிபரிலிச சீர்திருத்தங்கள் காரணமாக எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பொது மக்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைக்க படுகின்றன. மானியங்கள் குறைக்கப் படுகின்றன. வேலை வாய்ப்புகள் குறைகின்றன. வசிக்க வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றது. இதனால் குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்கி, பின்னர் கடன் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தெருவுக்கு வரும் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதன் விளைவு, நாட்டில் ஏழைகள் பெருகி வருகின்றனர். மறு பக்கத்தில் தஞ்சம் கோரும் அகதிகள் மனிதாபிமானமற்ற சட்டங்களால் அவல வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை யாரும் படமாக தயாரிப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அகதிகளின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு வெள்ளையின டச்சு சமூக ஆர்வலர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அரசியல் படுகொலை என்று நிச்சயிக்கப் பட்ட இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுத்து கொலையுண்ட தேயோ வந்கோக் பற்றி ஊடகங்கள் உலகம் முழுக்க அறிவித்தன. நிலைமை இப்படியிருக்கையில், வில்டர்ஸ், ஜாமி, ஹிர்சி அலி போன்றவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டாலும் புகழ் பெறுவார்கள். அவர்களும் அதை தான் விரும்புகின்றனர். ஆகவே முதலில் ஊடகங்கள் இப்படியானவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதுவே உலகை அழிவில் இருந்து மீட்பதற்கான முதல் படி.

முன்னைய பதிவு :

சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


___________________________________________________

கலையகம்