பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.
உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?
பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை.
பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?
மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.
ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.
அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது.
"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும்.
ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.
அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை.
மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.