Showing posts with label இலங்கை இனப்பிரச்சினை. Show all posts
Showing posts with label இலங்கை இனப்பிரச்சினை. Show all posts

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

Saturday, August 25, 2018

"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" - நேர்காணல்

இலங்கையில் வெளிவரும் தேசம் (ஓகஸ்ட் 2018) பத்திரிகையில் பிரசுரமான எனது நேர்காணல்.  



"இனப்பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" 
- எழுத்தாளர் கலை மார்க்ஸ் -  

கேள்வி: அரசியற் செயற்பாடுகளுடனும், கலை இலக்கியத்துறைக்குள்ளும் செயற்பட்டுவரும் நீங்கள் தேசம் வாசகர்களுக்காக வேண்டி உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்க முடியுமா?

பதில்:
நிச்சயமாக, நான் சிறுவயதில் கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கை யாழ்ப்பாண வாழ்க்கை. அதனால் அனைத்து சமூகங்களுடனும் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கு சிறு வயதிலிருந்தே கிடைத்துள்ளது.

எனது குடும்பம் இடதுசாரி குடும்பமல்ல. அவர்கள் வலதுசாரீய தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள். அன்றையக் காலகட்டத்தில் கொழும்பில் தான் தமிழ் தேசிய அரசியல் தொடங்கியதென்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் தான் இது சம்பந்தமான கூட்டங்கள், பிரிவினைக்காக தமிழினத்திற்கான கோஷங்கள் அதிகமாக எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட மத்தியத்தர கொழும்புத் தமிழர்கள் இவ்வாறான கோஷங்களை முன்வைத்து தங்களது வர்க்க நலனுக்காகவும், அரசியற் தேவைகளுக்கும் முன்வைத்தனர். கொழும்பு சார்ந்த தலைமைகளும் இதைத்தான் செய்தனர். இவர்களுக்கான ஆதரவு மக்கள் தளம் யாழ்ப்பாணத்திலிருந்தது. எனது பெற்றோர்கள் மூலம் சிறுவயதிலிருந்து இதைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

எனது பெற்றோர்கள் படித்த மத்தியத்தர வர்க்க சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தனர். எனது தந்தை கொழும்பு நூலகத்தில் விற்பதற்கிருந்த பழைய புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருவார். என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம் என்று அவருக்கே தெரியாது. அதில் கார்ல் மார்க்ஸ் இனுடைய புத்தகங்கள், பெரியாருடைய புத்தகங்கள், மாக்சிம் கோர்கியின் 'நான் பயின்ற பல்கலைக்கழகம்", லெனின் 'ஏழை மக்களுக்கு" போன்ற பல புத்தகங்கள் இருந்தன. அந்த வாசிப்பு எனக்கு வேறுபட்ட அறிவைக் கொடுத்தது.

என்னுடைய 24 வயதில் (1991 ஆம் ஆண்டு) நான் வெளிநாடு சென்றேன். நான் முதலாவதாக சுவிசர்லாந்திற்கே சென்றேன். நான் ஒரு முறை வெளிநாடு செல்லும் போது பிரித்தானிய பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் தமிழ், தமிழர், பண்பாடு, கலாசாரம், மூத்தமொழி என்றெல்லாம் பேசினேன். நான் தமிழ் தேசிய சூழலில் வாழ்ந்திருந்ததால் தேசியவாதியாக பேசினேன். அவர் எல்லாவற்றையும் கேட்டு விட்டு போகும்போது, என்னிடம் ஐரோப்பியர்களுக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஐரோப்பியர்களுக்கென்று வரலாறும் உள்ளது. முதலாவது அதைப் படியுங்கள் என்றார். இவ்வாறான தேசியவாதக் கருத்துக்களினால் தொடர்பு அறுந்துபோனது.

நான் ஐரோப்பாவிற்கு சென்ற காலத்தில் உலகில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அன்றையக்கால கட்டத்தில் தான் பெர்லின் சுவர் விழுந்தது. சோவியத் யூனியன் உடைந்தது. அன்றைய தொலைக்காட்சிகளில் அவை தான் முக்கியமானச் செய்தி. ரோமானியாவின் சதிபுரட்சிக் காரணமாக இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. நான் ரோமானிய விமான நிலையத்திலிருக்கும்போது சுற்றிலும் நிறைய இராணுவத்தினர் இருந்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு எல்லோரும் சோஷலிசம் விழுந்ததென்று மாற்று வழி தேடினர். 

அந்த நேரத்தில் நான் அனாகிட்ஸ்களோடு இணைந்து கொண்டேன். அடுத்ததாக ட்ரொஸ்க்கி அமைப்பினரோடு சேர்ந்தேன். அதன்போது நான் துருக்கி அகதி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ட்ரொஸ்க்கிவாதி. டொனிகிலிப்ட்டின் புத்தகத்தை அவர் துருக்கி மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அதில் லெனின் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் இருந்தன. இவருக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலின் செய்த கொலைகளையெல்லாம் லெனின் செய்த கொலைகள் போன்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். நானும் அவர்களுடைய தொடர்பை விட்டுவிட்டேன்.

நான் 1995 ஆம் ஆண்டு நெதர்லாந்து வந்தேன். நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் உள்நாட்டு அரசியலை மட்டுமன்றி சர்வதேச அரசியலைப் பற்றியும் பேசினர். நான் இக்கட்சியில் கூட்டம் நடாத்தி, ஊர்வலம் சென்று பத்திரிகை விற்று எழுத்துலகிற்குள் பிரவேசித்தேன்.

கேள்வி: இன்றைய பொதுநல இலக்கியப் படைப்புகளுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான உறவு எப்படியாக உள்ளது?

பதில்:
இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் மிக மிகக்குறைந்து போயுள்ளது. அநேகமாக சினிமாவில் தான் மூழ்கிபோயுள்ளார்கள். குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களை மட்டுமே பார்க்கின்ற நிலைமைகளே உள்ளன. இளைஞர்கள் மத்தியில் தேடல் குறைந்து போய் விட்டதாக நான் நினைக்கிறேன். யுத்த நேரத்திலும் குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களையே பார்த்தனர். அவர்களுக்கு அதுபோதும் என்பதுபோல் இருந்து கொள்வார்கள். 

சமூகம் சார்ந்த வாசிப்பு எதுவுமே இல்லை. படித்தவர்கள் மத்தியிலும் வாசிப்பு குறைந்துபோய் விட்டது. இந்த முதலாளித்துவ சிந்தனை சரியானவற்றைத் தெரிந்துக் கொள்ள விடாது. அதேபோல் வாசிக்கவும் விடாது. உழைப்பு, பணம், களிக் கொண்டாட்டத்திற்குள்ளேயே இளைய தலைமுறைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

கேள்வி:
முன்பு சமூகத்தையே புரட்டிப்போட்ட எழுத்தாக்கங்கள் படைக்கப்பட்டன. இன்று அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்:
மார்க்சிம் கோர்க்கியினுடைய காலத்திற் கூட நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அநேகமாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் படித்திருந்தார்கள். அன்றைய மக்களின் சிந்தனை முறை வித்தியாசம். அதைப் புரட்சிகர காலகட்டம் என்றும் சொல்லலாம். லெனின் கூட மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் தான். அவருடைய உறவினர்களும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி வந்தவர் ஏன் இப்படி சிந்திக்க வேண்டும்?

அந்தக் காலக்கட்டமும் வேறு. அந்த நிலைமை இன்று இல்லையென்று சொல்ல முடியாது. மழுங்கடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே அதை செய்திருக்கிறார்கள். முதலாளித்துவ வாதிகளும் முட்டாள்கள் கிடையாது. புரட்சிகள் ஏற்படும்போது எப்படி தடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதை தடுப்பதற்கான திட்டங்களை சிந்தித்து வகுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கான அவர்களின் ஒரு தந்திரோபாயம் தான் வசதி வாய்ப்புகளைக் காட்டி விடுதல்.

ஐரோப்பியர்கள் இலங்கையை வறுமையான நாடாகவே பார்க்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் வசதியான குடும்ப வாழ்க்கையை வாழ்கிறோம் என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையாக எல்லா வீடுகளிலும் மோட்டார் வாகனங்கள் உள்ளன. முதலாளித்துவம் இப்படியான கட்டுக்குள் மக்களை வைத்துள்ளது. முதலாளித்துவத் திட்டம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. வறுமையான குடும்பத்தில் உள்ள ஒருவரை வசதியான ஒரு இடத்தில் விடும்போது, அவர் ஒரே நாளில் மாறிவிடுவார். முதலாளித்துவ வசதிகளை காட்டிவிடுகின்றது.

கேள்வி:
வாசிப்பு பழக்கம் புத்தகத்தில் இருந்து நகர்ந்து சமூக வளைத்தளங்களுக்கூடாக முக நூல் என்று நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இடதுசாரிகளுடைய செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில்:
இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயம். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லலாம். இணையத்தை ஆரம்பிப்பதிலிருந்தே பயன்படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். 1992 இல் இணையம் வந்தது. அந்த நேரம் இணையம் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இணைய பாவனை குறைவாக இருந்த காலத்திலேயே இடதுசாரீய கருத்துக்களும், மார்க்ஸிசம், லெனினிசம் என்று எல்லாவற்றையும் புகுத்திவிட்டன. வர்த்தக மயப்படுத்தி வந்த முதலாளித்துவத் தளத்தை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த தளம் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை இணைக்கிறது.

மக்கள் மத்தியில் பொதுவுடமைச் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்கள். இன்று நிலவும் அரசியல் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை. வர்க்கப் போராட்டத்தை நாம் தெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு ஊடகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மிக இலகுவானதுதான் சமூக வலைத்தளம்.

பத்திரிகையை எங்கு அச்சடிக்கிறார்கள்? எங்கு செல்கிறது? எங்கு வருகிறார்கள்? என்றெல்லாம் தெரியாது. சமூக வலைத்தளங்களை அரசாங்கத்தால் முடக்கமுடியும். அதுவரையில் அதன் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம். மக்கள் மத்தியில் ஊடுருவிச் செல்வோம். ஆனால் இதை அதிகமாக வலதுசாரிகள் தான் பயன்படுத்துகிறார்கள். 'ப்ளொக்" மூலம் பதிவுகளை பதிவிட்டு இத்தாலியில் வலதுசாரிகள் பெரிய கட்சியையே உருவாக்கியுள்ளார்கள். இதுபோன்று இடதுசாரிகளுக்கும் முடியும்.

எங்களுடைய கருத்துக்களை நாம் கதைக்க வேண்டும். அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது முரண்பாடு அதிகரித்து வெடிக்கும்போது தான் போராட்டங்கள் வெடிக்கும். அதுவரைக்கும் இவ்வாறான முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் வெளியில் கொண்டுவர வேண்டும்.

கேள்வி :
புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவும் அரசியற் சிந்தனையும் எவ்வாறு உள்ளது?

பதில்:
உண்மையாக சொல்லப் போனால் அவர்களுக்கு எந்த வித அரசியலும் கிடையாது. யுத்த சூழலில் இருந்து வந்ததால் தமிழ் தேசிய அரசியலோடு நெருக்கம் அதிகம். ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன? அதன் மூலம் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுக்கூட தெரியாதவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார்கள். தனி நாடு வேண்டுமென்றார்கள். தனி நாடு கிடைத்திருந்தாலும் அவர்கள் மறுபடியும் இலங்கைக்கு வரமாட்டார்கள். எரித்திரியாவை உதாரணமாக சொல்லலாம்.

கேள்வி:
இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்:
அவர்கள் பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் இலாபத்திற்கே ஆகும். தீர்க்கவேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ தீர்த்திருக்கலாம். இந்த பிரச்சனைகளினால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இருந்தாலும் அவர்களுடைய இலாபம் கருதி அவர்கள் செய்கிறார்கள். இது ஒரு செயற்பாடு (system)  

கேள்வி:
எவ்வாறானதொரு அரசியலை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:
முதலாளித்துவ ஆட்சியில் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இது இருக்கிறது தான் அவர்களுக்கு சாதகம். இது மாறாது. சிலர் கேட்கலாம் சிங்கப்பூர் மாறவில்லையா? ஹொங்கொங் மாறவில்லையா? என்று. இங்கு நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சீனாவிற்கு பக்கத்தில் ஹொங்கொங் உள்ளது. வியட்நாமிற்கு பக்கத்தில் தான் சிங்கப்பூர் உள்ளது. ஆகவே சோஷலிச நாடுகளுக்கு போட்டியாக ஏகாதிபத்திய நாடுகளால் இந்நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேறொன்றும் அந்த நாடுகளின் மேல் கொண்ட பாசத்தால் அல்ல. ஒரு வேளை இந்தியா சோஷலிச நாடாக இருந்திருந்தால் இலங்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது முதலாளித்துவ ஆட்சியில் ஊழல் என்பது அவர்களுக்குச் சரியானது இங்கு பொருளாதாரத்தை கவனிக்கமாட்டார்கள். இதனால் கடன் வழங்குபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். வட்டிக் கிடைக்கும் என்பதால் வழங்கிய பணத்தில் ஊழல் செய்தாலும் வழங்கியவர்களுக்கு கவலையில்லை. அவர்கள் கேள்வி கேட்காது மறுபடி மறுபடி கடன் வழங்குவார்கள். ஊழல் தொடரும். இவ்வாறான கடன் வழங்கல் மூலம் நாட்டை மறு காலனியாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிர்மறையான சோஷலிச ஆட்சி மலரவேண்டுமென்பதே எங்கள் கனவு.

[நேர்கண்டவர்: சதீஷ்]


Tuesday, August 07, 2018

யாழ்ப்பாணத்தில் இருபதுகளில் உருவான இடதுசாரி இளைஞர் காங்கிரஸ்

இருபதுகளில் யாழ் குடாநாட்டில் தோன்றிய இடதுசாரி அரசியல் இயக்கமான இளைஞர் காங்கிரஸ், இன்றைய வலதுசாரி தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு காலத்தால் முந்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் சமத்துவம், உள்நாட்டு உற்பத்தி போன்ற பல முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, யாழ்ப்பாணத் தமிழரின் இடதுசாரி பாரம்பரியம் பற்றிய வரலாறு, தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றது. அதை முறியடிக்கும் வகையில், சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய "யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்" என்ற நூலை இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன்.

இன்றைக்கும் "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று வலதுசாரிகள் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸை உடைப்பதற்கு இனவாதிகள் முயற்சி செய்துள்ளனர். வட இலங்கையில் தமிழினவாதம் பேசிய ஜி.ஜி. பொன்னம்பலம், தென்னிலங்கையில் சிங்கள இனவாதம் பேசிய SWRD பண்டாரநாயக்கே ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். இவர்கள் ஒரு பக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு; இனவாதம் பேசி சிங்கள, தமிழ் மக்களை பிரித்து வைக்க முயற்சித்தனர். அதன் விளைவுகளை, இலங்கையின் மூவின மக்கள் இன்று வரைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் பல முற்போக்கான தீர்மானங்களை எடுத்த யாழ் இளைஞர் காங்கிரஸ் ஒரு மார்க்ஸிய இயக்கம் அல்ல. அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மார்க்ஸிய சமூக விஞ்ஞானம் பற்றியும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் கல்விகற்ற படியால், உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தனர். அயர்லாந்து விடுதலைப் போராட்டம் உட்பட உலகில் நடந்த காலனிய எதிர்ப்புப் போராட்டங்களை அறிந்து வைத்திருந்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டம், இருபதுகளில் வாழ்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. வட்டுக்கோட்டையில் இருந்த யாழ்ப்பாணக் கல்லூரி, அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியால் நடத்தப் பட்டாலும், மாணவர்களுக்கு சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் தாராளமாக வழங்கப் பட்டிருந்தது. கூட்டங்கள் நடைபெறும் நேரம் தலைமை தாங்கும் மாணவரின் சொல்லுக்கு பாடசாலை அதிபரும் கட்டுப்படும் அளவிற்கு ஜனநாயகம் இருந்தது.

அப்போது இலக்கியக் கூட்டங்களில் நடந்த விவாதங்கள் தான், பிற்காலத்தில் இளைஞர் காங்கிரஸ் தோன்றக் காரணமாக இருந்தது. இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட வேண்டும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை வேண்டும், என்பன போன்ற முற்போக்கான விடயங்கள் விவாதிக்கப் பட்டன. ஐரோப்பிய மையவாத கல்விக்கு பதிலாக, இலங்கை, இந்திய வரலாறுகள் போதிக்கப் பட வேண்டும் என்று வாதிட்டனர்.

அன்றிருந்த மாணவர்கள் இலட்சியவாதிகளாக நீதியான சமுதாயத்திற்காக கனவு கண்டனர். காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதுடன், இறுக்கமான சாதியமைப்பு கொண்ட நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தம்மால் மாற்ற முடியும் என்று நம்பினார்கள். இருப்பினும், அவர்களது தத்துவார்த்த வழிகாட்டிகளாக காந்தி, நேரு போன்றோரே இருந்தனர். 1927 ம் ஆண்டு, இளைஞர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தில் சாதித் தீண்டாமை தலைவிரித்தாடியது. பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் சரிசமமாக உட்கார முடியாது. ஒரே இடத்தில் உணவருந்த முடியாது. இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் முடிவெடுக்கப் பட்டது. அன்றைய ஆங்கிலேய காலனிய அரசும் பாடசாலைகளில் சரியாசன முறையை அமுல்படுத்த தீர்மானித்தது.

சரியாசன முறை அமுல்படுத்துவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த உயர்த்தப்பட்ட சாதியினர், அது "யாழ்ப்பாண சமூக ஒழுங்கை பாதிக்கும்" என்று வாதிட்டனர். சரியாசனத்தை நடைமுறைப் படுத்திய பாடசாலைகளை கொளுத்தினார்கள். இரு மாதங்களில் யாழ்ப்பாணம் முழுவதும் ஒரு டசின் பாடசாலைகள் எரிக்கப் பட்டன. அதற்கு எதிர்வினையாக, தீண்டாமையை கடைப்பிடித்த பாடசாலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் எரித்தனர். இதனால் சில பாடசாலைகள் "நடுநிலையான" முடிவெடுத்தன. தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு தனியான வாங்குகள் ஒதுக்க முன்வந்தன.

சுதந்திரத்திற்கு முந்திய இலங்கைக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்காக டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தது. அப்போது அது முன்மொழிந்த திட்டங்கள் சுயாட்சி அமைக்கும் அளவிற்கு போதுமானதல்ல என்று இளைஞர் காங்கிரஸ் நினைத்தது. அதனால் 1930ம் ஆண்டு நடந்த அரச சபை தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தது. இது "சிங்களவர்களுக்கு எதிரான தமிழரின் இனவாத நடவடிக்கை" என்று SWRD பண்டாரநாயக்கே விமர்சித்தார். அதேநேரம், ஜி.ஜி. பொன்னம்பலமும் காரசாரமாக கண்டித்திருந்தார்.

இதன் விளைவாக, இளைஞர் காங்கிரசின் நிலைப்பாட்டைக் கூறும் "இனவாதமா? தேசியவாதமா?" என்ற நூல் வெளியிடப் பட்டது. அதில் அவர்கள் சிங்கள இனவாதத்தையும், தமிழ் இனவாதத்தையும் நிராகரித்து, இலங்கைத் தேசியத்தை வலியுறுத்தி இருந்தனர். அந்தக் காலத்தில் வெளியான ஈழகேசரி வாரப் பத்திரிகையும் இளைஞர் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது.

1931 ம் ஆண்டு நடந்த, இளைஞர் காங்கிரஸின் ஏழாவது வருடாந்த அமர்வு கமலாதேவி என்ற ஒரு பெண்ணால் தலைமை தாங்கப் பட்டமை ஒரு சிறப்பம்சம் ஆகும். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற சரோஜினி நாயுடுவின் மைத்துனி. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான கமலாதேவி தனது நாவன்மையால் பலரைக் கவர்ந்தார். அத்துடன், முதலாளித்துவ சுரண்டல் பற்றிய மார்க்ஸிய விளக்கங்களால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புதிய திசையில் செல்ல வைத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் இருவகையான குணாம்சங்கள் இருப்பதை கமலாதேவி சுட்டிக் காட்டினார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்களோடு போராடும் குடியேற்ற நாடுகள், தமக்கான ஆட்சியதிகாரத்திற்காக போராடும் சிறிய நாடுகள். பெரும்பான்மையினரின் அட்டகாசத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மையினர். இவற்றுடன் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான போராட்டத்தையும் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் குடியேற்ற நாடுகளில் உள்ள மக்கள் மீது நடத்தி வரும் சுரண்டல் எத்தகையது என்பதையும் எடுத்துக் காட்டினார்.

முப்பதுகளின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சீர்குலைந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. அது காந்தீய வழியில் இயங்கிய இயக்கமாக இருந்தாலும் இடதுசாரித் தன்மை கொண்டிருந்தது. அதனால், பிற்காலத்தில் பல காங்கிரஸ் உறுப்பினர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். இருப்பினும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சேர்ந்தனர். அன்று அது ஒரு இலங்கைத் தேசியக் கட்சி என்ற மாயை பலரிடம் இருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்ப காலங்களில் ஒரு சமூக ஜனநாயக சோஷலிசக் கட்சியாக இருந்தது. தெற்கில் இயங்கிய சூரியமல் இயக்கமும், வடக்கில் இயங்கிய இளைஞர் காங்கிரஸும், இலங்கையில் ஒரு காத்திரமான இடதுசாரிக் கட்சி உருவாகக் காரணமாக இருந்தன. இருப்பினும் அது ட்ராஸ்கிச பாதையில் சென்றதால், பிற்காலத்தில் அதிலிருந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது. ஐம்பதுகளுக்குப் பின்னர் நாட்டில் கூர்மையடைந்த இன முரண்பாடுகள் இடதுசாரி அரசியலை பின்தங்க வைத்தன. அதனால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இலட்சியவாதிகள் கனவு கண்ட சமநீதி காக்கும் சமுதாயம் இன்னும் உருவாகவில்லை. 


நூலின் பெயர் : யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் 
எழுதியவர் : சாந்தசீலன் கதிர்காமர் 
வெளியீடு : குமரன் புத்தக இல்லம் 
விலை : 400 இலங்கை ரூபாய்கள் 

Kumaran Book House
39, 36th Lane, 
Colombo - 6
Tel. 0112364550
E mail: kumbhlk@gmail.com

Wednesday, March 21, 2018

ஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை


வருடாந்தம் தவறாமல் நடைபெறும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூட்டத்தொடரில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஈழத் தமிழர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
  1. தமிழர் தரப்பும், சிங்களவர் தரப்பும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி. 
  2. புலிகளின் படையணிகளில் இருந்த சிறார் போராளிகள் பற்றி கஜேந்திரகுமாரின் வாக்குமூலம்.
மேற்குறிப்பிட்ட இரண்டும், ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள். சிலர் வழமை போல தமது அரசியல் ஆதாயங்களுக்காக பெரிது படுத்துகின்றனரே தவிர, அதைப் பற்றிப் பேசுவதால் எந்த நன்மையையும், தீமையும் கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமே இதனால் ஏற்படும் பலன்.

ஜெனீவாவின் உள்ளே இரு தரப்பிற்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவுக்கு பின்வரும் தலைப்புக் கொடுத்திருந்தனர்."ஜெனீவாவில் தமிழர்களை மிரட்டும் சிங்கள இராணுவத்தினர்!" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர்த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு "ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்!" என்று தலைப்பிட்டிருப்பார்கள்.

கடந்த இருபது, முப்பது வருடங்களாக இது தான் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பினர் சிறிலங்கா இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். அதே மாதிரி, சிங்கள தரப்பினர் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை மட்டும் பேசி விட்டு செல்வார்கள். ஐ.நா. பிரதிநிதிகள் அவற்றை எல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்வார்கள்.

இத்தகைய பின்னணியை வைத்துப் பார்த்தால், புலிகளின் படையணிகளில் சிறார் போராளிகள் சேர்த்துக் கொண்டமை பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடுத்த வாக்குமூலம் ஒன்றும் புதினம் அல்ல. ஹியூமன் ரைட்ஸ் வோச் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பேசியுள்ளன. அதனால், தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கனவே இது பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது புலிகள் இருந்த காலத்திலேயே நடந்தது. கஜேந்திரகுமார் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே, இதை பரபரப்பு செய்தியாக்குகிறார்கள்.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஒன்றுகூடலை, விவாகரத்து செய்யவிருக்கும் கணவனும், மனைவியும் கவுன்சிலிங் போவதுடன் ஒப்பிடலாம். நடுவராக இருப்பவர் இரண்டு பக்க குற்றச்சாட்டுகளையும் கேட்டுக் கொள்வார். ஆனால், யாருக்கும் சாதகமாக பதில் கூற மாட்டார். இரண்டு பக்கமும் பிழைகள் இருப்பதாக சொல்லி முடிப்பார். கவுன்சிலிங் செய்பவர் தனக்கு சார்பாக மட்டுமே தீர்ப்புக் கூற வேண்டும் என்று இரண்டு பேரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. இது தான் ஜெனீவா கூட்டத்திலும் நடக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், சர்வதேச அரசியல் அரங்கில் உண்டாக்கும் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஜெனீவா பற்றிய மாயையில் வாழ்கின்றனர். நாங்கள் ஒரு இலங்கையை மட்டும் பார்க்கிறோம். ஜெனீவா உலக நாடுகள் அனைத்தையும் பார்க்கிறது.

அதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப் போல, இலங்கையில் நடக்கும் அதே பிரச்சினைகள் இன்னும் பல உலக நாடுகளில் நடக்கின்றன. ஜெனீவா மகாநாடு இதுபோன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளில் தலையிட்டு யாருடைய பக்கத்திற்கு சார்பாகவும் தீர்ப்புக் கூறப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக, ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய்வது தான் ஜெனீவா மகாநாட்டின் நோக்கம். மூன்றாமுலக நாடுகள் என அழைக்கப் படும் இந்த நாடுகள் யாவும், முன்னொரு காலத்தில் காலனிய அடிமை நாடுகளாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. காலனிய காலத்தில் "வெள்ளை மனிதனின் கடமை" என்ற பெயரில் இயங்கிய ஐரோப்பியரின் மேலாண்மையை, இன்று "மனித உரிமை" என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகிறார்கள்.

இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், காலனியாதிக்க பிரபுக்களைப் பொறுத்தவரையில் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஜெனீவாவில் தமக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம், சிங்களவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், இரண்டு பக்கமும் தமது பக்க நியாயங்களை அடுக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

உணர்ச்சிவசமான அரசியலுக்குள் இழுபடாமல், மூன்றாவது மனிதராக பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில், செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்த் தரப்பை கடுமையாக சாடி, தமது பக்க நியாயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் பொஸ்னியா என்ற ஒரே நாட்டுக்குள் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இதற்கு இன்னும் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.

இனப் பிரச்சினை நடக்கும் நாடொன்றில் இது சர்வ சாதாரணம். ஒவ்வொரு இனமும் தனது பக்கம் நியாயம் இருப்பதாக வாதாடிக் கொண்டிருக்கும். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எதிரி இனம் என்று குற்றம் சாட்டும். பெரும்பான்மையான மக்கள் இந்த உணர்ச்சிகர அரசியலுக்குள் இழுபட்டு செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில், பேரழிவுகள் தரும் யுத்தம் நடந்த பின்னர், இரண்டு பக்கமும் கசப்புணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏகாதிபத்திய தலையீடு ஏற்படும். நாட்டாண்மை மாதிரி தலையிட்டு, இரண்டு பக்கமும் சமாதானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இலங்கையிலும் அதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி, மனித உரிமைகள் விவகாரம் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அடிகோலும் காரணி என்பதை பலர் உணர்வதில்லை. மூன்றாமுலக நாடுகளில், மேற்குலகின் சொற் கேட்டு நடக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், இயற்கை வளங்களை அபகரிப்பதற்கும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் உதவுகின்றது.

சுருக்கமாக சொன்னால், ஜெனீவாவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ஆனால், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான அந்நிய இராணுவ தலையீடு இடம்பெற்றால், அதனால் தமிழர் உட்பட இலங்கையின் அனைத்து மக்களும் பாதிக்கப் படுவார்கள்.

Saturday, April 23, 2016

வர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்த் தலைவர்கள்!

பண்டாரநாயக்க, சேர் பொன் இராமநாதன் 

"ஈழத் தமிழர்களுக்கு, வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்பை, 1926 ம் ஆண்டே பண்டாரநாயக்க முன்மொழிந்திருந்தார். ஆனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்!" இந்தத் தகவலை, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். (Bandaranaike Proposed Federalism to Isolate Tamils, Charges Wigneswaran)

அவர் மேலும் தெரிவிக்கையில்:"பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு இருந்தனர். நாடு முழுவதும் எந்த இடத்திலும் காணி வாங்க முடிந்தது. உத்தியோகம் பார்க்க முடிந்தது. அதனால், தமிழர்களை வடக்கு- கிழக்கிற்குள் ஒதுக்கி வைக்கும் சமஷ்டி அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தலில் வியப்பில்லை. எது எப்படி இருந்தாலும், 1956 ம் ஆண்டு பண்டாரநாயக்க பிரதமரான பின்னர், தமிழ் சமஷ்டிக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. அப்போது பண்டாரநாயக்க மனதை மாற்றிக் கொண்டு விட்டார். தமிழ் அடையாளத்தை அழிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தார்." என்று கூறினார்.

அண்மையில் பேசிய ஜேவிபி தலைவர் டில்வின் சில்வா, "(விக்னேஸ்வரன் போன்ற) தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே சமஷ்டி கோருகிறார்கள்." என்று குற்றஞ் சாட்டி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாக, "பண்டாரநாயக்கவின் சமஷ்டி கோரிக்கையை" விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டி இருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை கருப்பு - வெள்ளையாக பார்க்க முடியாது என்பதைத் தான், விக்கினேஸ்வரனின் கூற்று தெளிவு படுத்துகின்றது. "வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழரின் தாயகம்" என்று இன்றைய தமிழ் தேசியவாதிகள் உரிமை கோருகின்றனர். ஆனால், அன்றைய தமிழ் தலைவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. தமிழீழம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றிய எண்ணக்கரு தான்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த, அரசால் திட்டமிடப் பட்ட இனக் கலவரங்கள், ஈழத் தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் முடங்க வைத்தது. தென்னிலங்கையில், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பண்டாரநாயக்கவின் சமஷ்டி திட்டம், தமிழர்களை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் ஒதுங்க வைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே பல சம்பவங்கள் நடந்துள்ளன.

1925 ம் ஆண்டு, இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று விட்டு நாடு திரும்பிய பண்டாரநாயக்க, முற்போக்கு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினார். முற்போக்கு தேசியக் கட்சி, ஆங்கிலேயக் காலனியான இலங்கையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு தன்னைத் தயார் படுத்தி வந்தது. பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டித் திட்டத்தின் படி, இலங்கை மூன்று சமஷ்டி அலகுகளாக பிரிக்கப் பட வேண்டும். 
1.கரையோர சிங்களவர்களின் தென்னிலங்கைப் பிரதேசம். 
2.முன்பு கண்டி ராஜ்ஜியமாக இருந்த மத்திய மலைநாடு. 
3.வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்ட தமிழர் பிரதேசம்.

இலங்கைக்கான அரசியல் யாப்பு எழுத வந்த டொனமூர் ஆணைக்குழுவிடம் பண்டாரநாயக்கவின் சமஷ்டித் திட்டம் கையளிக்கப் பட்டது. அன்று பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கும் சென்று, தமிழர்கள் முன்னிலையில் தனது சமஷ்டித் திட்டம் பற்றி உரையாற்றினார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒழுங்கு படுத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், சமஷ்டிக்கு பெரிய வரவேற்பு இருக்கவில்லை.

முற்போக்குத் தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவின் தமிழ் நண்பர் ஜேம்ஸ் ரத்தினமும் அங்கம் வகித்திருந்தார். பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டி அமைப்பை எதிர்த்து வாக்களித்தவர்களில் அவர் முக்கியமானவர். தான் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறேன் என்று, “Ceylon Morning Leader” (19 May 1926) பத்திரிகையில் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் சமஷ்டிக் கோரிக்கை ஒற்றையாட்சியை சீர்குலைத்து விடுமென்றும், பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என்றும் வாதிட்டு இருந்தார்!

இவ்வாறு தமிழர்கள் சமஷ்டி எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கண்டிச் சிங்களவர்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இலங்கை சுதந்திரமடையும் வரையில், கண்டிச் சிங்களவர்கள் தமது சமஷ்டிக் கோரிக்கையை கைவிடவில்லை. ஒற்றையாட்சியின் கீழான இலங்கையில், கரையோரச் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவார்கள் என்று அஞ்சினார்கள். தமது பிரதேசங்களில் கரையோச் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

1927 ம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது. பல்வேறு பட்ட உள்நாட்டு அரசியல் தலைவரகள் ஆணைக்குழுவிடம் தமது பிரேரணைகளை முன்வைத்தனர். தமிழர்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன் இராமநாதன்  தமிழ் லீக் கட்சி சார்பில் தனது ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். 

டொனமூர் ஆணைக்குழு முன்பு சாட்சியமளித்த, அன்றைய "ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர்" சேர் பொன் இராமநாதன், வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான பிரிவினையை கோரவில்லை. குறைந்த பட்சம், அன்று பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டிக் கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அரசியல் தலைமைத்துவத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

சேர் பொன் இராமநாதன், பிரதேச அடிப்படையிலான பிரதிநித்துவத்திற்கு மாறாக இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்தினார். பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்களவர்களுக்கு, மூன்றிலொன்று தமிழர்களுக்கு என்று ஒதுக்கப் பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

ஆனால், டொனமூர் ஆணைக்குழு அந்த யோசனையை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக பிரதேசவாரி பிரதிநித்துவத்தை ஏற்றுக் கொண்டது. அது சிங்களவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று, தமிழ்த் தலைவர்கள் ஆதங்கப் பட்டனர். ஆனால், வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அப்போது கை நழுவ விட்டிருந்தனர்.

ஏன் பிரிட்டிஷ் காலனிய காலத்திலேயே வடக்கு- கிழக்கு சமஷ்டியை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைவர்கள் தவற விட்டனர்? அதற்குக் காரணம், தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள், தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கினார்கள். "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்ற எண்ணம் அன்று அவர்கள் மனதில் இருக்கவில்லை. அதற்கு மாறாக மேட்டுக்குடியினருக்கு உரிய மத்தியதர வர்க்க சிந்தனை மட்டுமே இருந்தது.

அன்றைய காலகட்டத்தில், தமிழ் மேட்டுக்குடியினர் கொழும்பு அல்லது தென்னிலங்கையில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்தனர். அவர்கள் ஒன்றில் அதிகம் சம்பாதிக்கும் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர்களாக இருந்தனர், அல்லது வணிகத் துறையில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டி வந்தனர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் பல காணிகளுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதிகளாக இருந்தனர். இதையெல்லாம் விட்டு விட்டு யாழ் குடாநாட்டுக்குள் முடங்கிக் கொள்ள விரும்புவார்களா?

Thursday, February 05, 2015

ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட "தமிழ்த் தேசிய" தலைவர்கள்!

ஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka)

பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, "சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்" என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், "அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு" பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வரலாறு தெரியாமல், அல்லது அது குறித்து பக்கச் சார்பற்ற ஆய்வு இல்லாமல், இது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் எந்தக் காலத்திலும் இழக்க விரும்பியிராத, இந்தியாவே கையை விட்டுப் போகிறது என்ற கவலையில், இலவச இணைப்பாக வழங்கப் பட்டது தான், இலங்கையின் சுதந்திரம்.

பிரிட்டன் தனது பணக்கார காலனியான சுதந்திர இந்தியாவின் பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் தீராத தலையிடியை உண்டுபண்ணும் நோக்கில், பாகிஸ்தான் பிரிவினைக்காக பாடு பட்டது. அதே நேரம், இலங்கையில் ஈழம் பிரிப்பதற்கு அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

உண்மையில் அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் யாரிடமும் தனி ஈழம் கேட்கும் எண்ணம் இருக்கவில்லை. அதற்குக் காரணம், அன்று யாருடைய மனதிலும் தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. இன்னும் சொன்னால், தமிழர் என்ற இன உணர்வே அப்போது உருவாகி இருக்கவில்லை. 

தமிழ் தேசியக் கருத்தியல், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு, குறைந்தது இரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து முரண்பட்டு பிரிந்து சென்ற, தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் காரணமாக, பிற்காலத்தில் உருவானது தான் தமிழ்த் தேசிய அரசியல். 

சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமைகள் தங்களை ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவர்களாக கருதிக் கொள்ளவில்லை. தாம் சார்ந்த வெள்ளாள சாதியின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுப்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. 

ஆங்கிலேயர் காலத்தில், படித்த மேட்டுக்குடி வர்க்கமாக உருவான வெள்ளாளர்கள் தான், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கொவிகம என்று அழைக்கப் பட்டாலும், மொழி கடந்து திருமண உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு, சாதி அபிமானம் நிலையானதாக இருந்துள்ளது. 

அன்றிருந்த சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினருக்கென சில பொதுவான அம்சங்கள் இருந்தன. அதுவே அவர்களது சாதி - வர்க்க ஒற்றுமைக்கு முக்கிய காரணம். அவர்களின் பூர்வீகம் சிங்களமாக, அல்லது தமிழாக இருந்தாலும், அவர்கள் தமது தாய்மொழியை புறக்கணித்து வந்தனர். அதற்குப் பதிலாக அன்னியரின் ஆங்கில மொழியையே வீட்டிலும் வெளியிலும் பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை தழுவி, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.

அன்றைய சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களும் ஒன்றாகவே இருந்தன. வர்த்தக நலன்களுக்காக, முஸ்லிம்களுடன் முரண்பட்டார்கள். இலங்கையில் முதன்முதலாக தோன்றிய இனக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக, சேர் பொன் இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்கை வாதாடி வென்று கொண்டு வந்தார். நாடு திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள்.

மேற்படி சம்பவத்தை நினைவுகூரும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், "ஒரு தமிழ்த் தலைவரை சிங்களவர்கள் மதித்த காலம்..." என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் அது, அவர் ஒரு தமிழர் என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. இராமநாதனின் சாதிக்கு, அல்லது வர்க்கத்திற்கு கிடைத்த மரியாதை. இலங்கையில் அன்றிருந்த சாதி உணர்வு, வர்க்க உணர்வு என்பன அந்தளவு இறுக்கமானது.

சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் ஒற்றுமைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். அன்று முஸ்லிம்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் கொழும்பு வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வந்த பெருமளவு கூலித் தொழிலாளர்கள், கொழும்புத் துறைமுகம் போன்ற தொழிற்துறைகளில் வேலை செய்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். கணிசமான அளவு தெலுங்கர்கள், மலையாளிகளும் இருந்தனர்.

அன்றைய இலங்கைப் பொருளாதாரம் மலேசியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தது. அதாவது, இன்றைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற பணக்கார நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைப் போன்று, அன்று பல இந்திய தொழிலாளர்கள் பணக்கார இலங்கைக்கு வேலை தேடிச் சென்றார்கள். 

ஒவ்வொரு வருடமும் பெருகிக் கொண்டிருந்த இந்திய குடியேறிகளை தடுப்பதற்காக தோன்றிய சிங்கள இனவாத அரசியல், பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பியது. கொழும்பு இந்தியர்கள் மட்டுமல்ல, மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் குடியுரிமையை பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் வந்த நேரம், "தமிழ்த் தலைவர்" ஜிஜி பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்.

இப்படியான கலாச்சார பின்புலத்தைக் கொண்ட "தமிழ்த் தலைவர்கள்" எவ்வாறு ஈழம் கேட்டிருப்பார்கள்? அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள். எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள்? சிலநேரம், அன்றைக்கு ஒரு புலிகள் இயக்கம் தோன்றி, ஈழப் போராட்டம் நடத்தி இருந்தால், அதை நசுக்குவதற்கு இவர்களே முன் நின்று உழைத்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் "சிங்களம் - தமிழ்" என்று, கருப்பு வெள்ளையாக பார்ப்பது தான், தேசியவாத அரசியல் கோட்பாடு. ஆனால், அது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சூத்திரம் அல்ல. இலங்கையின் சாதிய அரசியல், அதற்குப் பின்னால் மறைந்திருந்த வர்க்க அரசியல், இவற்றை ஆராயாமல் பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிக்க முடியாது.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Monday, June 16, 2014

அளுத்கம இனக் கலவரம் : பாசிஸ அரசு இயந்திரம் ஓய்வதில்லை


இலங்கையில், அளுத்கம எனும் இடத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனக் கலவரம் நடந்துள்ளது.  முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், பொதுபலசேனா குண்டர்களினால் எரிக்கப் பட்டுள்ளன. 1983 க்கு பிறகு நடந்த முதலாவது இனக் கலவரம் இதுவாகும்.

அளுத்கமவில் இன்று நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிய பொதுபல சேனா தலைவர் கலகொட ஞானசேகர தேரோ, "ஒரு சிங்களவன் மேல் கை வைத்தால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவோம்." என்று இனவெறி கக்கும் உரையாற்றி உள்ளார். (https://www.colombotelegraph.com/index.php/video-this-will-be-the-end-of-all-muslims-gnanasara-says-prior-to-riots/ ) அதற்குப் பிறகே, மாலையில் கலவரம் நடந்துள்ளது. 1977, 1983 ளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு முன்னரும், பலர் இதே மாதிரியான இனவெறியை கக்கினார்கள். (https://www.youtube.com/watch?v=qipU2Qf746c&list=UUJt2pSAQ9hF3cvq6slyLo5g )

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே அளுத்கம நகரில், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக ஸ்தாபனம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. வர்த்தகப் போட்டி, பொறாமை காரணமாக, அந்த நகரில் உள்ள சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக, எரிக்கப் பட்ட வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் தெரிவித்தார். (

1983 ம் ஆண்டு கலவரத்தின் போதும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது. இனக் கலவரங்களின் போது தான், முதலாளித்துவ பொருளாதாரமும், இனவாத பாசிசமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொள்கின்றன.

இதே நேரம், "83 இனக் கலவரத்திற்குப் பின்னர், அரசாங்கம் இன்னும் பாடம் படிக்கவில்லையா?" என்று சில அறிவுஜீவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும், இன்றும் அரசாங்கம் தான் படித்த பாடத்தை சரியாகத் தான் நடைமுறைப் படுத்தி வந்துள்ளது. மக்கள் தான் அரசின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல், இனவாத, மதவாத சக்திகள் சொல்வதை நம்பி ஏமாந்து போகிறார்கள். 

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி விட்ட நரேந்திர மோடி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமராகலாம் என்றால், உண்மையில் பாடம் படிக்க வேண்டியவர்கள் யார்?

//தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.// - இவ்வாறு இணையத் தளமொன்றில், ஒரு நண்பர் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். 

எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சுமேந்திரனும், கலவரத்தை கண்டித்துள்ளமை வரவேற்கத் தக்கது. பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த தகவல் ஆங்கிலத்தில், டிவிட்டர் செய்தியாக இருந்தது. தமிழிலும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

மேலும் இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் "தமிழ் தேசியவாதிகள்" அல்லர். இருந்திருந்தால், அளுத்கம கலவரத்தை, அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான கலவரமாக கருதி இருப்பார்கள். சர்வதேச மட்டத்தில் கலவரத்தை தூண்டி விட்ட சிறிலங்கா அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

உதட்டளவில் தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் பலர், மனதளவில் இந்துத்துவா வாதிகள் என்பது இரகசியமல்ல. அவர்களது உண்மையான அரசியல் நிலைப்பாடு, இப்படியான தருணங்களில் வெளிப்படுகின்றது. 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து உள்ளூர மகிழ்ச்சி அடைவதும், பழிவாங்கும் உணர்வை வெளிப் படுத்துவதுமாக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அரசின் வன்முறைகளை நியாயப் படுத்துகின்றனர். சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மிக இலகுவாக பலியாகின்றனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள- பௌத்த பேரினவாதிகளின் வெறியாட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நவநீதம் பிள்ளை, பிரான்சிஸ் ஹாரிசன், எரிக் சொல்ஹைம் ஆகியோர், அளுத்கம கலவரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதுடன், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அரசியல் சக்திகள் யாவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் இருந்து, பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த சர்வதேச ஆதரவு சக்திகள். குறிப்பாக வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் பெரிதும் மதிக்கப் பட்டவர்கள். அவர்களது நாயகர்களாக போற்றப் பட்டவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்த போதெல்லாம், அதனை நன்றியோடு பகிர்ந்து கொண்டவர்கள், இன்று தடம் மாறி, பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத கலவரத்தை மௌனமாக அங்கீகரிப்பது ஏனோ? ஈழத் தமிழ் சமூகத்தில் இருந்து எழும் ஒரு சில கண்டனக் குரல்களையும் அடக்க முனைவது ஏனோ? முரண்பாடுகளின் மொத்த உருவமே குறுந் தேசியவாதம் தானோ?

Tuesday, December 24, 2013

ஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உள்ளதா?

//தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது.// என்று தமது இடதுசாரி அல்லது கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு பின்வரும் காரணங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். //டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாத கூச்சலிட்டவர்கள், இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். மேலும் சிங்கள மொழிக்கு மட்டும் அந்தஸ்த்து கொடுக்கும் இலங்கை யாப்பை எழுதியவரும் கொல்வின் ஆர் டி சில்வா என்னும் புகழ் பெற்ற கம்யுனிஸ்ட். // (குறிப்பு: கொல்வின் ஆர்.டி. சில்வா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ட்ராஸ்கிஸ்ட்)


மேற்குறிப்பிட்ட வாதம் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும், வரலாற்றை திரித்து, மறைமுகமாக தமிழ் மக்கள் மனதில் கம்யூனிச எதிர்ப்பு எனும் நஞ்சை ஊட்டும், விஷமத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.

வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ அல்லது லிபரல் வாதிகளோ, எவையாயினும், அவை இறுதியில் தமிழ், சிங்களமென இரண்டாக பிளவுபட்டுச் சென்றுள்ளமையே, இலங்கையின் வரலாறாகக் காண முடிகிறது. இது தனி மனிதரில் இருந்து, கட்சிகள் வரை பொருந்தும்.

1956 ஆம் ஆண்டு ஐ.தே.க.வில் இருந்து தமிழ் அமைச்சர்கள், தமிழ் எம்.பி.க்கள், தமிழ் உறுப்பினர்கள் வெளியேறியது போல, 1976 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தமிழ் தலைவர்கள் பிரிந்து சென்று, "செந்தமிழர் ஆயிடுவோம்" என்ற தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்களை, குறிப்பாக சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பதற்கு, பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகளையும், இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது. இலங்கையின் முதலாவது பிரதமரும், மேற்கத்திய சார்பு லிபரல்வாதியுமான டி.எஸ். சேனநாயக்க, "ஐம்பதுக்கு ஐம்பது கோரிய" ஜி.ஜி. பொன்னம்பலத்தை தனது அரசாங்கத்தில் அமைச்சராக சேர்த்துக் கொண்டார். அன்று ஆட்சிக்கு வரக் கூடிய அளவு பலத்துடன் இருந்த இடதுசாரிக் கட்சிகளை தடுப்பதும், இடதுசாரி சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பி விடுவதுமே, டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது.

சுருக்கமாக சொன்னால்: "இலங்கையில் இடதுசாரியத்திற்கு எதிராக, சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் கூட்டுச் சேர்ந்தது." துரதிர்ஷ்டவசமாக, டி.எஸ்.சேனநாயக்கவின் தீர்க்கதரிசனம் கொண்ட சூழ்ச்சி பலித்து விட்டது. அதன் மூலம், இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாள நினைத்த, சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேறியது. அதே நேரம், ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற தமிழரை அமைச்சராக வைத்துக் கொண்டே, டி.எஸ். சேனநாயக்க மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்தார்.

" 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய  தேசிய கட்சியுடன், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (இலங்கை சமஷ்டிக் கட்சி) பங்கெடுத்து கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும் பான்மை எட்டாத நிலையில், ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் இடது சாரிகளும் தமிழரசுக் கட்சியும் இணைந்த ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்க கலாநிதி என்.எம்.பெரேரா முயற்சித்தார். அதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன், என்.எம். பெரேரா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கூட்டரசாங்கம் அமைப்பது பற்றிய விடயங்களை கொழும்பில் உள்ள தனது நண்பரான திரு. மு.திருச்செல்வத்துடன் பேசுமாறு செல்வநாயகம் கூறினார். ஆனால் தமிழ் வலதுசாரியான திருச்செல்வம், சிங்கள தரகு முதலாளிய கட்சியான ஐ.தே.க.வுடன் உடன் பாட்டுக்கு வர விரும்பினார். அதனால், என்.எம். பெரேராவுடன் பேசாமலே, திருச்செல்வம் அவரை புறம்தள்ளினார் என்பது உண்மை."   (தகவலுக்கு நன்றி : www.nerudal.com)

இலங்கையின் சிக்கலான இனப் பிரச்சினையை, "சிங்களவர்+தமிழர்=எதிரிகள்" என்று இலகுவாக புரிந்து கொள்வது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சிங்கள வலதுசாரிகள் மட்டுமல்ல, தமிழ் வலதுசாரிகள் கூட ஆரம்பத்தில் இருந்தே, இடதுசாரி சக்திகளை தமது வர்க்க எதிரிகளாக கருதி வந்தனர். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு தமிழ் தேசியக் கட்சிகளும், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதை விட, சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.

பிரிட்டன் உருவாக்கிய பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பூர்ஷுவா அரசுக் கட்டமைப்பும் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டது. தேர்தல் அரசியல் சாக்கடையில் புரண்டெழும் எந்தப் பன்றியும் சுத்தமாக இருக்க முடியாது. வாக்காளர்களை இலகுவாக கவர முடியும் என்பதால், அனைத்து தேர்தல் கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. சிங்களப் பேரினவாத கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்.

சமசமாஜக் கட்சி போன்ற ட்ராஸ்கிசவாதக் கட்சிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சமூக ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தன. அதாவது, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதே ட்ராஸ்கிசவாதிகளின் புரட்சிகர தத்துவம் ஆகும்.தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, கம்யூனிஸ்டுகளுக்கும், ட்ராஸ்கிஸ்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து புரட்சியை நடத்துவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். ஆனால், ட்ராஸ்கிச கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, அரசாங்கத்தை மாற்றி சோஷலிச சீர்திருத்தங்களை (புரட்சி அல்ல) கொண்டு வரலாம் என்று நம்புகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எழுதிய ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரும், முன்னாள் LSSP ட்ராஸ்கிஸ்டுகள் தான் .

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குருஷேவ் முன்மொழிந்த "சமாதான சகவாழ்வு" கொள்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பூர்ஷுவா அரசாங்கத்தில் பங்கெடுப்பது ஊக்குவிக்கப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆயுதேமந்திய புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. குருஷேவ் அதைக் கைவிட்டு விட்டு, அமைதி வழியிலான ஆட்சி மாற்றத்தை முன்மொழிந்தார்.

சர்வதேச கம்யூனிச அகிலத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றம், இலங்கை கம்யூனிஸ்ட் அரசியலிலும் எதிரொலித்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களை கவர்வதற்காக இனவாதம் பேசியது.  மே தின ஊர்வத்தில் "தோசை, மசால வடே அப்பிட்ட எபா" கோஷம் எழுப்பப் பட்டது. உண்மையில், அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே அந்தக் கோஷம் எழுப்பப் பட்டது. ஆனால், அதன் இனவாத உள்ளடக்கம் காரணமாக தமிழ் மக்களை அன்னியப் படுத்தியது.

1972 ம் ஆண்டு, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியை துறந்து குடியரசு ஆனது. ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர்.டி. சில்வா புதிய அரசியல் யாப்பை எழுதுவதற்கு நியமிக்கப் பட்டார். "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, தமிழ் வலதுசாரிகள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அவர் ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான தமிழ் தேசியவாதிகளுக்கு, ட்ராஸ்கிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் வலதுசாரிகள், அந்த யாப்பு சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்ற உண்மையை காண மறுக்கின்றனர். 

1971 ம் ஆண்டு, ஜேவிபி தலைமையில் நடந்த சிங்கள குட்டி முதலாளிய இளைஞர்களின் எழுச்சி, அந்த யாப்பை எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. அதாவது, சிங்கள குட்டி முதலாளிய வர்க்கத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக, அந்த யாப்பு அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது. இதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மட்டுமல்ல, சிங்கள பாட்டாளி மக்களின் அபிலாஷைகளும் புறக்கணிக்கப் பட்டன. இதன் மூலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, தனது சோஷலிசக் கொள்கைக்கே துரோகம் இழைத்தார்.

"தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது." என்பது தமிழ் வலதுசாரிகளின் கற்பனையான அனுமானம். தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. பாராளுமன்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் தங்களது சொந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளையே நம்பவில்லை. அதனால் தான், எண்பதுகளுக்கு பின்னான காலங்களில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு, புலிகள் போன்ற ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். அந்தக் காலங்களில், மார்க்சிய லெனினிசக் கொள்கை கொண்ட விடுதலை இயக்கங்கள் கூட தோன்றின. பெருமளவு தமிழ் மக்கள் அவற்றையும் ஆதரித்தனர்.

தமிழ் மக்களுக்கு சோஷலிசத்தின் மேல் ஈர்ப்பு இருந்த காரணத்தால் தான், 1977 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வட்டுகோட்டை தீர்மானத்தில் "சோஷலிசத் தமிழீழம்" உருவாக்கப் படும் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் கூட தமது பிரசுரங்களில் சோஷலிசத் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறி வந்தனர். தமிழ் மக்களுக்கு சோசலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவம் இருந்தது உண்மையாக இருந்தால், அன்று யாருமே சோஷலிசத் தமிழீழத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்.

Wednesday, February 01, 2012

"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்" - பி.ஏ.காதர்

இலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.

பி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பின்" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8

Wednesday, December 01, 2010

ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது.

கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள்.

லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது.

"தமிழர்களின் தலைமை" எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது.

நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன.

ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

  1. சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
  2. முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
  3. நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
  4. அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.


முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. "முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல." வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள்.

 வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது.

இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது.

"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர்.

மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

Wednesday, June 17, 2009

இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமம் - BBC வரலாற்று ஆவணப்படம்

இலங்கையில் சிங்கள-தமிழ் இனப் போரின் காரணிகளை வரலாற்றுப் பின்புலத்துடன் ஆராயும் BBC ஆவணப்படம்.

Evolution of the Ethnic War
Part 1:


Part 2:


Part 3:

Friday, March 13, 2009

போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா?

பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது.

சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரேமதுங்கே எழுதிய இறுதி வரிகள் இங்கே ஞாபகமூட்டத் தக்கவை: "பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."

விக்கிரமதுங்கே இந்த வரிகளை தான் கொல்லப்பட்ட பின்னர் பிரசுரிக்குமாறு, தனது கணனியில் விட்டு விட்டு சென்றுவிட்டார். தனது மரணம் சம்பவிக்கப் போகின்றது என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதற்கு யார் காரணம் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. இலங்கை அரசே பொறுப்பு என்பதற்காக, தனது மரணசாசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிட்டு எழுதி இருந்தார். சுமார் கால் நூற்றாண்டு காலமாக லசந்தவும், மகிந்தவும் நண்பர்கள் என்பது அந்த சாசனத்தை படித்த பின்பு தான் அவரின் வாசகர்கள் பலருக்கு தெரிந்தது. உண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். "எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."

அமெரிக்காவில் புஷ் நிர்வாகத்தின் கீழ் நடந்ததைப் போல, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சட்டத்திற்கு மதிப்பளிப்பதை இலங்கை நிறுத்தி விட்டது. 1983 ம் ஆண்டில் இருந்து தமிழ்ச் சிறுபான்மை தனியரசு கோரி நடத்திய போராட்டத்தில் இதுவரை 70000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானோர் பொது மக்கள். 2004 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், 14 ஊடகவியலாளர்கள் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் கூட வடக்கு கிழக்கில் சுமார் 15000 சதுர கி.மீ. பரப்பு நிலத்தை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கே ஒரு இறைமையுள்ள நாட்டிற்கே உரிய அனைத்து நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் தளராத இராணுவ நடவடிக்கை, அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்தை சில நூறு கிலோ மீட்டருக்குள் சுருக்கி விட்டது.

ஒரு சில வாரங்களுக்குள், தமிழ்ப் புலிகளின் நிழல் இராச்சியப் பகுதிகள் மறைந்து போகலாம். கேள்விகேட்காமல் கீழ்ப்படிய வைப்பதற்காக, தமிழரையும் கொன்றது மட்டுமல்ல, அவர்களது தற்கொலைக் குண்டுதாரிகளால் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதையே காரணமாக காட்டி, இலங்கை அரசு 1983 க்கு முன்பிருந்த நிலைமைக்கு திரும்ப வேண்டுமென்று நியாயப்படுத்த முடியாது. தமிழர்கள் கிளர்ச்சிக்கு நியாயமான காரணங்களை கொண்டுள்ளனர். தமிழ் பேசும் இந்துக்கள் இலங்கையின் சிக்கலான இன விகிதாசார சமூகத்திற்குள் வாழ்ந்து வந்தனர். ஆனால் மொத்த சனத்தொகையில் 12 வீதத்தையே கொண்டுள்ளனர். 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை முழுவதையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் வரை, தமிழர்கள் சிங்களம் பேசும் பௌத்த பெரும்பான்மையினருடன் சுமுகமான உறவைப் பேணி வந்தனர். ஆனால் அந்தக் காலகட்டத்தின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது.

பிரிட்டிஷாரின் வழக்கமான பிரித்தாளும் கொள்கையின் கீழ், கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்ச் சிறுபான்மையினர் சார்பாக நடந்துகொண்டனர். அதற்கெதிரான சிங்கள அதிருப்தி வளர்ந்து, 1939 ல் கலவரம் ஏற்பட வழிவகுத்தது. கலவரத்தில் தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். 1948 ல் சுதந்திரம் வந்த பின்னர், சிங்களவர்கள் தமது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக அனுமதியிலும், அரச தொழில்களிலும் தமது இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினர். அதே நேரம் சிங்களம் மட்டுமே தேசிய மொழியாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் தேசியவாதங்கள் கூர்மையடைந்த வேளை, 1960 களிலும், 1970 களிலும் தமிழ் விரோத கலவரங்கள் ஏற்பட்டன.


1970 ன் இறுதியில், வட- கிழக்கில் தமிழ் நிழல் அரசு ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது. 1983 ல் யுத்தம் வெடித்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ்ப் புலிகள், போட்டித் தமிழ் பிரிவினைவாத குழுக்களை ஒழித்துக் கட்டியதுடன், தமிழ் மக்களை தமது முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னர், இறுதியில் தமிழ்ப் புலிகளின் இராணுவம் நசுக்கப்பட்டதன் பின்னர், இலங்கை அரசு (நடைமுறையில் சிங்கள அரசு) வெற்றியடைந்துள்ளது. ஆனால் 12 வீத தமிழர்கள், இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கு இதுவே ஏற்ற தருணம். ஆனால் அது நடக்கப் போவதாக தெரியவில்லை.

சிங்கள தேசியவாதம் எதையும் சகித்துக் கொண்டதில்லை, தற்போது வெற்றி பெற்ற மமதை அதனை ஊக்குவிக்கும். மேலதிகமாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் "தேசிய பாதுகாப்பு அரசு" துரித வளர்ச்சி கண்டுள்ளதுடன், ஜனநாயகத்தை தகர்த்து, எதிர்க்கருத்தாளரை வாயடைக்கப் பண்ணியுள்ளது. அதனால் வடக்கில் கெரில்லாப் போராட்டம் திரும்புவதுடன், அரசினதும் தமிழ் தீவிரவாதிகளினதும் கொலைகள் தொடரும் என்று எதிர்வுகூரலாம்.

- Gwynne Dyer is a London based independent journalist whose articles are published in 45 countries.

Thanks to: Cyprus Mail 5/03/2009

Gwynne Dyer's web site

"ஈழப்போர் முடிவுக்கு வருகிறதா?" - தொலைக்காட்சி விவாத அரங்கம்

கனேடிய தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற இலங்கை இனப்பிரச்சினை பற்றிய தொலைக்காட்சி விவாத அரங்கம். இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், மனித உரிமைகள் சபை ஆகிய அனைத்து தரப்பையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் கலந்து கொள்கின்றனர். ஈழப்போரின் இன்றைய நிலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற பல விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

The Debate: The Tear Drop Civil War
Guests
Anna Neistat is a senior researcher with Human Rights Watch's emergencies division. She is a specialist in humanitarian crises, and works to investigate and expose human rights violations in crisis situations on a rapid-response basis.
Lenin Benedict is with the Canadian Democratic Tamil Cultural Association.
Rudhramoorthy Cheran is an assistant professor in the Department of Sociology and Anthropology at the University of Windsor. From 1984 to 1992, Dr. Cheran was a working journalist in Sri Lanka.
David Poopalapillai is director of Public Relations for the Canadian Tamil Congress. He also functions as the national spokesperson for CTC.
Asoka Yapa is a past president of the Sri Lanka Association of Ottawa and past chair of Project Peace for a United Sri Lanka.


Clip 1

Clip 2

Clip 3

Clip 4

Thursday, February 05, 2009

சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்


இறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம்.

"இலங்கைப் பிரச்சினையை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும், என்ன தீர்வு எடுக்க வேண்டும், என்று நாம் வற்புறுத்த மாட்டோம். இது காலனிய காலகட்டம் அல்ல." இவ்வாறு கூறினார், மேற்குலக இராஜதந்திரி ஒருவர். தமக்கு மறுகாலனியாதிக்க அவா கிடையாது என்று வெளியில் சொன்ன போதும், இலங்கை அரசு குறித்த மேற்குலக நிலைப்பாடு அது உண்மையல்ல என எடுத்துக்காட்டுகின்றது. நேரடியாக தெரியாவிட்டாலும், திரைமறைவில் அவர்களின் கண்காணிப்பு இருந்து வந்துள்ளது. இது ஒருவகையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்தது. சில வருடம் நீடித்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், "யுத்தம் மீண்டும் ஆரம்பித்தால், தாம் இலங்கை அரசுக்கு உதவி வழங்குவோம்" என்று அடிக்கடி பேசி வந்தார். ஆகவே சர்வதேசம் எப்போதும் தனது நிலைப்பாட்டை பகிரங்கப் படுத்தியே வந்துள்ளது. இப்போது அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சர்வதேசம் பற்றிய மாயை, தமிழர்கள் மத்தியில் இருந்து இன்னும் அகன்றதாக தெரியவில்லை. படிக்காத பாமரர் முதல், மெத்தப்படித்த முதுநிலைப் பட்டதாரிகள் வரை, ஒரே கோணத்திலேயே சிந்திக்கப் பழகி இருக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்றால் அது சிங்கள ஏகாதிபத்தியம் என்றும், வர்க்கம் என்றால் அது சிங்கள, தமிழ் இனவேறுபாடு என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலத்தில் இருந்தே, வலதுசாரிக் கருத்துக்களுடன் தான், தமிழ் தேசியம் கொள்கை வகுத்து வந்துள்ளது. அப்படி இருக்கையில், ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபோடும், இலங்கை சிங்களப் பேரினவாதப் போர் குறித்து குழப்பங்கள் வருவது தவிர்க்க முடியாதது.

தமிழர் மத்தியில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலின்மை, பல்வேறு தருணங்களில் புலப்படுகின்றது. நான் எழுதிய, மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் கட்டுரைகளைக் கூட, "இப்படி எல்லாம் எழுதலாமா?" என்று பலரை வியக்க வைக்கிறது. விருந்தினராக தங்க வைத்திருக்கும் கனவான்களின் நாட்டில் இருந்து கொண்டு, அவர்களைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று, தமது விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர். ஆமாம், அதைத் தானே சிறி லங்கா அரசும் கூறுகின்றது? தமிழர் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் உரிமைகள் ஏதும் கேட்க வேண்டாம் என்று. இலங்கை அரசு இயந்திரம் பிழை என்றால், அதனை உருவாகிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி சரியாகும்? இலங்கையின் அரசியல் நிர்ணய சட்டம், அரச அலுவலகங்கள், இராணுவம், கல்வி, அவை மட்டுமல்ல இனப்பிரச்சினை, இவ்வாறு பல சொத்துகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்றுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவான பின்னர் தோன்றிய யுத்தத்தினால், பல லட்சம் அரபு மக்கள் இடம்பெயர்ந்தனர். அதுவரை பாலஸ்தீனத்தை தனது பாதுகாப்பு பிரதேசமாக வைத்திருந்த பிரித்தானியா, தனது தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், ஐ.நா. மன்றத்தில் பாரம் கொடுத்தது. அதன்படி லெபனான், ஜோர்டான் போன்ற அயல்நாடுகளில் ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அகதிமுகாம்களை நிறுவி பராமரித்து வருகின்றது. இதனால் பாலஸ்தீன அகதிகள் பெருமளவில் பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுக்கு செல்வது தடுக்கப்பட்டது. அந்த உதாரணம், பின்னர் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகள் செல்வது வழமையாகியது. தொன்னூறுகளில் அகதிகளின் படையெடுப்பு அதிகரித்து காணப்பட்டது. ஈராக்கில் வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய யுத்தபிரபுக்களின் அராஜகம், பொஸ்னியாவில் இன/மத வெறியாட்டம், இலங்கையில் சிங்கள பேரினவாதப் போர் என்பன, அதிகளவு அகதிகளை உற்பத்தி செய்து மேற்குலகிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. தமது முன்னாள் காலனிய நாடுகளின் புத்திஜீவிகளின் மூளைகளையும், தொழிலாளரின் உடல் உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள், தமது இனவிகிதாசாரத்தை மாற்ற விரும்பவில்லை.

போர் நடக்கும் நாடுகள் யாவும், அது பொஸ்னியா, கொசோவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று எங்கே பார்த்தாலும், ஏதாவொரு பக்கத்தில், அல்லது இருதரப்பிலுமே ஏகாதிபத்திய தலையீடு இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட காலம் ஆயுதம் கொடுப்பார்கள், போர் சில வருடம் நீடிக்க விடுவார்கள். பின்னர் தாமே தலையிட்டு ஒரு தீர்வுக்கு வருமாறு வற்புறுத்துவார்கள். ஒன்றில் அவர்கள் திணிக்கும் ஒப்பந்தம் மூலம் (உதாரணம்: கொசோவோ), அல்லது பலாத்கார ஆட்சிமாற்றம் மூலம் (உதாரணம்: ஈராக்), தாம் விரும்பியதை சாதிப்பார்கள். எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் வரை, ஊடகங்கள் போரில் ஏற்படும் மனித அழிவுகளை பரபரப்பு செய்தியாக வெளியிடும். அதன் பின்னர் அவை மறக்கப்பட்டு, அல்லது மறைக்கப்பட்டு விடும்.

இலங்கைப் பிரச்சினை குறித்து,CNN,BBC World, போன்ற சர்வதேச செய்திகளை வழங்கும் ஊடகங்கள் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மற்றும்படி பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு "தெரியாது" என்பதல்ல, அல்லது இலங்கை அரசின் பிரச்சாரமல்ல, மாறாக அந்த செய்தியால் ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்பதே. இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டாலும், அது தலைப்பு செய்தியாக அனைத்து நாடுகளின் ஊடகங்களும் வெளியிடும், ஆனால் இலங்கையில் நூறு பேர் இறந்தாலும், அது ஒரு சிறிய பெட்டிச் செய்தியாக மட்டுமே இடம்பெறும்.

மேற்குல "ஜனநாயக" கட்டமைப்பின் படி ஊடகங்கள் சுதந்திரமானவை, அவை என்ன செய்தியை எப்படி பிரசுரிக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசு தலையிடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுப்பதில் தமது அரசின் பங்களிப்பு என்ன என்பதிலும், அதற்கேற்றால் போல் எப்படி சுயதணிக்கை செய்து கொள்ள வேண்டும் என்பதிலும், பல நாட்டு ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. கற்றோரால் மதிக்கப்படும், நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, ஈராக் படையெடுப்பின் போது, அமெரிக்க அரசை ஆதரித்தமை ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலும் அனைத்து வெகுஜன பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால், ஒரே செய்தி முன்பக்கத்தை அலங்கரிப்பதை காணலாம். வியாபாரப் போட்டி நிறைந்த உலகில் அது எப்படி சாத்தியம்?

ஊடக நிறுவனங்களும், முதலாளித்துவ நலன்பேணும் அரசுகளும் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் போது, முரண்பாடுகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. இவற்றை உணராத, அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள், இன்னமும் ஜனநாயக மாயையில் இருந்து விடுபடவில்லை. மேற்குலக நாடுகள் எந்தக் காலத்தில் மனித அழிவுகளைப் பார்த்து இரக்கப்பட்டார்கள்? காலனியாதிக்க காலகட்டத்தில் விடுதலைக்காக போராடிய மக்கள், பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். ஐரோப்பிய குடியேறிகள் இன அழிப்பு யுத்தம் செய்து தான், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் தமது ஆட்சியை நிலை நாட்டினார்கள். இவை எல்லாம் கடந்து போன பழங்கதைகள் அல்ல. ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பின் பின்னர், இதுவரை பத்து லட்சம் மக்கள் இறந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அனேகமாக அனைத்துலகையும் கவனம் செலுத்த வைக்கும், எதோ ஒரு நாட்டில் மனித அவலம் குறித்த செய்திகள் எல்லாம், ஏகாதிபத்திய பொருளாதார நலன் சார்ந்ததாகவே இருக்கும். ஈராக்கில் தலையிட எண்ணை ஒரு காரணமாக இருந்தது போல, இலங்கையில் எதுவும் இல்லை. அதனால் இலங்கைப்பிரச்சினையில் "என்னவாவது நடக்கட்டும்" என்று மேற்குலகம் பாராமுகமாக இருக்கின்றது. அதிக பட்சம்,பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அது சாத்தியப்படாததால், உலகமயமாக்கலுக்கு தமிழீழ போராட்டம் தடையாக இருப்பதால், தற்போது இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதுவும் இஸ்ரேலுக்கு கொடுப்பது போல நிபந்தனையற்ற ஆதரவல்ல. அவ்வப்போது மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி இலங்கை அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது நடக்கின்றது.

இறுதியாக, மேற்குலக நாடுகளுக்கு இலங்கையில் நடப்பது எதுவும் தெரியாது என நினைப்பது பாமரத்தனம். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. முதல், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் வரை, இலங்கை நிலவரம் குறித்த அறிக்கைகளை வருடாவருடம் வெளியிட்டு வருகின்றன. இதற்கான தரவுகளை, இலங்கையில் இருக்கும் தூதுவராலய ஊழியர்களும், மனித உரிமை நிறுவனங்களும் வழங்குகின்றன. அதைவிட உள்ளூர் ஊடகங்களும் பார்வையிட்டு அலசப்படுகின்றன. இலங்கை அரச சார்பு, புலிகள் சார்பு, இரண்டையும் சேராத நடுநிலை ஊடகங்கள் என பலவற்றையும் பார்வையிட்டு, அவற்றில் இருந்து மேற்கோள் காட்டப்படுகின்றது. இலங்கை தொடர்பாக மேற்குலக அரசுகளின் தீர்மானங்கள் பல, இந்த அறிக்கைகளை ஆதாரமாக கொண்டே எடுக்கப்படுகின்றன.