Sunday, November 08, 2015

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக" முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக" கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்." ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்." சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்" என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை" தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..." நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்." என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்." என்று "அன்பான" உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: