Showing posts with label அரேபியர்கள். Show all posts
Showing posts with label அரேபியர்கள். Show all posts

Saturday, September 17, 2016

அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!


இந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. "தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்..." இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.

 2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் "குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்." என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து "நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.

அரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.

குடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை "இந்துக்களின் புனித ஸ்தலமாக" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், "இந்துக்களுக்கு புனிதமான" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.

குடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.

பழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.

குடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்கள். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.

அரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.



ஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான "திருப்பாச்சி அரிவாள்", "வீச்சு அரிவாள்" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.

பண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.

சங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. குடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர்! அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.

குடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

அது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன. 

கோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் "கங்கீ" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.

குடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.

குடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்காலத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.

குடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா? அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா? இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.

குடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். "மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)" அந்தப் பிரிவை சேர்ந்தது. 

இன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை "மாப்பிள்ளைகள்" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.

ஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் "சிரிய கிறிஸ்தவர்கள்" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.

அரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

சேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.

மாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர். 

இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.

அந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்!

கேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே "பியாரி பாஷா" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள். 

எம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்! சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும். 

பண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர். 

ரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் "தேசிய இராணுவம்" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது  தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.

தென்னிந்தியாவில் குடியேறிய ரோமர்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் "யவனர்கள்" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் "இயோனியா" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் "ஜோனகர்கள்" என்று அழைக்கப் பட்டனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் "சோனகர்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது. 

இன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை மேலதிக தகவல்களுக்கு:


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tracing The Exotic Kodavas

Tuesday, February 17, 2015

அரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்

பழைய மரக்கேஷ் நகரம் 

புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தங்களுக்கும் அரேபியருக்கும் இடையில் ஜென்மப் பகை இருப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். தாங்கள் அரேபியரை விட மேலானவர்கள் (அனால், வெள்ளையரை விட கீழானவர்கள்) என்று கருதிக் கொள்வோரும் உண்டு. இது உயர்வுச் சிக்கலும், தாழ்வுச் சிக்கலும் கலந்த மனோவியல் பிரச்சினை. 

பெரும்பான்மைத் தமிழர்கள் இந்துக்கள், பெரும்பான்மை அரேபியர்கள் முஸ்லிம்கள் என்ற மத வேறுபாட்டுக்கு அப்பால், இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையில் பல கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சிலநேரம் 80% சதவீத ஒற்றுமை இருக்கிறதோ என்று ஐயுறும் அளவிற்கு, அவர்களது நடத்தைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அமைந்துள்ளன.

நான் வழமையாக முடி வெட்டிக் கொள்வதற்காக, வீட்டுக்கு அருகில் இருக்கும் மொரோக்கோ - அரேபியர் ஒருவரின் சலூனுக்கு செல்வதுண்டு. அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கே அரட்டை அடிப்பதற்காக கூடுவார்கள். (நம்ம ஊர் சலூன் ஞாபகம் வருகிறதா?) அப்படிக் கூடும் அரபி இளைஞர்கள் பலதையும் பத்தையும் பற்றி அலசுவார்கள். அவர்கள் அரைவாசி அரபி, அரைவாசி டச்சு மொழி கலந்து பேசுவதால், எனக்கும் சிலது விளங்கும். சொற்கள் மட்டுமல்ல, வசனங்கள் கூட இரண்டு மொழிகளிலும் கலந்து  கதைப்பார்கள். 

எனது ஐந்து வயது மகன் செல்லும் ஆரம்ப பாடசாலையில், நிறைய மொரோக்கோ - அரபிக் குழந்தைகள் படிக்கின்றன. அவர்களை கூட்டி வரும் தாய், தந்தையர் தமது பிள்ளைகளுடன், டச்சு மொழியில் மட்டுமே உரையாடுவார்கள். தமிழர்களைப் போன்று தான் அரபுக் காரர்களும். தங்களது பிள்ளை டச்சு போன்ற ஐரோப்பிய மொழி கதைப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள். 

காரணம் கேட்டால், சிறு வயதில் இருந்தே பிள்ளை டச்சு மொழியை கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நன்றாகப் படிக்கும் என்று சொல்வார்கள். எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளை நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால், அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது.

ஒரு தடவை, சுற்றுலாப் பயணியாக மொரோக்கோ நாட்டிற்கு சென்றிருந்தேன். மொரோக்கோ ஒரு காலத்தில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. அகடிர் நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்திருந்த நேரம், தனியாக இருந்த அழகான யுவதியுடன், ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான். 

இருவரும் மொரோக்கோவை தாயகமாக கொண்ட, அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களது அறிமுக உரையாடல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நமது தமிழர்களில் பலர், ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாகக் கருதுவது போன்று, மொரோக்கோ அரேபியர்கள் பிரெஞ்சு கதைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

நான் எந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்றாலும், சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்து சேவையில் பயணம் செய்வது வழக்கம். அகடிர் நகரில் இருந்து மரக்கேஷ் நகருக்கு செல்லும் கடுகதி பேருந்து வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த வண்டி, இடையில் பிரேக் டவுன் ஆகி ஓடாமல் நின்று விட்டது. 

அதனால், வேறொரு வண்டி வரும் வரையில் பயணிகள் எல்லோரும் இறங்கி தெருவில் நின்று கொண்டிருந்தோம். பேருந்து வண்டியில் பயணம் செய்த மொரோக்கோக் காரர்கள், அநேகமானோர் மத்திய தர வர்க்கத்தினர். முன் பின் அறிமுகமில்லாத அவர்களும் தமக்குள் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடினார்கள்!

போர்த்துகேயரின் காவல் கோட்டை,
அகடிர் 
மொரோக்கோவில் அகடிர் நகரத்தை, தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல வருடங்களாக, போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாண்டிச்சேரி மாதிரி அதுவும் ஒரு கடற்கரைப் பட்டிணம். அகடிர் நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு இளம் மொரோக்கோ தம்பதிகள் அறிமுகமானார்கள். 

சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர்கள் என்னுடன் மணிக் கணக்கில் உரையாடினார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எளிமையாக நடந்து கொண்டாலும், அவர்களின் மனதில் ஒரு வகை உயர் சாதிப் பெருமிதம் இருப்பது தெரிந்தது. அதாவது, இறைதூதர் முகமது நபியின் வம்சாவளியினர் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். அது குறித்த தகவல்களை, பரம்பரை பரம்பரையாக கடத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்கள்.

மொரோக்கோ சமூக அமைப்பிற்கும், இந்திய, இலங்கை சமூக அமைப்பிற்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகமாக இருந்ததை, அந்த இளம் தம்பதிகளுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகம், என்று பல மட்டங்களிலும் நிறைய ஒற்றுமைகள் காணப் பட்டன.

மொரோக்கோவில் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளின் பிரதானமான தொழில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவது தான். ஆளும் கட்சி பதவியில் இருக்கும் ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடித்து சேர்த்த பின்னர், அடுத்த தேர்தலில் வென்று வரும் எதிர்க் கட்சி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடிப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஐந்து வருட காலம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மொரோக்கோ நாட்டில் ஒருவர் மட்டும் தனது ஆயுள் காலம் முழுவதும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார். மக்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. அவர் தான் மொரோக்கோவின் மன்னர்!

"உலகில் பெரிய பள்ளிவாசல்",
காசப்பிளாங்கா 
மொரோக்கோவின் மன்னர் காலம் முழுவதும் நாட்டை சுரண்டுவது போதாது என்று, காசாபிளாங்கா நகரில் "உலகில் பெரிய பள்ளிவாசல்" ஒன்றைக் கட்டி, அதிலும் பெரும் பணம் ஊழல் செய்துள்ளார். 

நமது ஊரில் கோயில் நிதி சேகரிப்பது என்ற பெயரில், ஒரு பட்டாளமே திரண்டு வந்து காசு சேர்த்துக் கொண்டு செல்வதைப் போன்று தான் மொரோக்கோவிலும் நடந்துள்ளது. இந்தக் காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக கோயில் கட்ட நிதி திரட்டுகிறார்கள் என்று சாதாரண தமிழ் மக்கள் பேசிக் கொள்வதைப் போன்று தான், மொரோக்கோவில் சாதாரண அரபு மக்களும் பேசிக் கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்?

அரசியலில் மட்டும் தான் ஊழல் என்பதில்லை. வர்த்தக நிறுவனங்களிலும் ஊழல் தான் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, நிறுவனத்தின் முதலாளி அல்லது மனேஜரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். 

அப்படி யாரையும் தெரியாது என்றால், நிறையப் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், திறமை இல்லா விட்டாலும் மனேஜருடன் நெருக்கமாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாவாடை எந்தளவுக்கு உயருகின்றதோ, அந்தளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப் படுமாம்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் எந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்களோ, மொரோக்கோவில் முஸ்லிம் பெண்களும் அந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளதைப் போன்று, இன்னமும் அழியாத நிலப்பிரபுத்துவ கால பழக்க வழக்கங்கள், மொரோக்கோவிலும் உள்ளன. வெளியில் உள்ளவர்கள் அதைப் பார்த்து விட்டு, "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழமைவாத மொரோக்கோ காரர்களும் அப்படி சொல்லிக் கொள்வதுண்டு.

நான் மொரோக்கோவில் எல்லா இடங்களுக்கும் செல்லா விட்டாலும், குறைந்தது மூன்று, நான்கு நகரங்களைப் பார்த்து விட்டேன். எங்கேயும் முக்காடு போட்ட இளம் பெண்களைக் காணவில்லை. மிக மிக அரிதாகத் தான் இளம் யுவதிகள் முக்காடு அணிகிறார்கள். அதற்கு மாறாக, வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் வயதான குடும்பப் பெண்மணிகள் முக்காடு அணிகிறார்கள்.

சரித்திர காலத்தில் இருந்து, பொதுவாக மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் அரேபியர்கள் முக்காடு அணிவதில்லை. அது அவர்களது பண்பாட்டில் இல்லை. ஆனால், இன்று அது பழமைவாத கலாச்சார அடையாளமாக பின்பற்றப் படுகின்றது.

அதாவது, இந்தியாவில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பப் பெண்மணிகள் சேலை அணிந்து செல்வது போன்று தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இளம் வயதில் ஐரோப்பிய பாணி உடை அணியும் நங்கையர்கள், திருமணமாகி குழந்தை பெற்றதும் அடக்கமான உடை (முக்காடு) அணியத் தொடங்கி விடுவார்கள்.

அதே நேரத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளம் மொரோக்கோ பெண்கள் பெருமளவில் முக்காடு அணிகிறார்கள். அந்தப் பழக்கமும் அண்மையில், கடந்த இருபதாண்டுகளுக்குள் தோன்றியது தான். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்களாம். இதிலும் தமிழர்களுடன் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். 

புலம்பெயர்ந்த நாட்டில், "பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம், கோயில் திருவிழா செய்கிறோம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம், தமிழ்ப் பெண்கள் புடவை உடுத்துகிறார்கள்..." என்றெல்லாம் கூறி தமிழ் இனப் பெருமை பேசிக் கொள்வதில்லையா? அதையே தான் அரேபியர்களும் செய்கிறார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து இந்தியாவில் உள்ளதைப் போன்று தான், முஸ்லிம் மொரோக்கோவிலும் பெண்களின் "கற்புக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணம் முடிக்கும் வரையில் கன்னியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலியல் சுதந்திரம் அனுபவிக்கும் ஆண் சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்க மறுப்பார்கள். "படிக்கப் போகிறேன் என்று சொல்லி கண்டவனுடன் காதலித்துக் கொண்டு திரிகிறாயா? வீட்டுக்குள்ளே  இருடி...!" என்று சொல்லி தம்பியே அக்காவை அடக்கி வைக்கும் சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், முன்பிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், பெண்களும் வீட்டுக்கு வெளியே சென்று, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்யும் லிபரல் சமுதாயத்தில், அது சில நேரம் கேலிக்குரியதாகி விடுகின்றது. மொரோக்கோ பெண்களுக்கும் காதலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அவர்களின் காதலில் தலையிடுவது அரசாங்கம் அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள்.

திருமணத்திற்கு முன்னர் காதலிக்கும், சிலநேரம் காதலனுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் நிறையப் பேர் மொரோக்கோவில் உள்ளனர். அவர்களது காதல் திருமணத்தில் முடியாவிட்டால் அதோ கதி தான். இந்திய சமுதாயத்தில் அப்படியான பென்னுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அது அவ்வளவையும் மொரோக்கோ பெண்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணக்கார வீடுகளில், அந்தப் பிரச்சினையை அப்படியே அமுக்கி விடுவார்கள். ஆனால், நடுத்தர வர்க்க, ஏழைக் குடும்பங்களில் கெளரவம் பார்ப்பார்கள். அதனாலேயே குடும்பங்களில் அடிதடிகள் நடக்கும்.

தமிழ் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்தவர்களுக்கு, நான் இங்கே விரிவாக சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறது. தமிழர்கள், அரேபியர்களுக்கு இடையிலான இது போன்ற ஒற்றுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்
அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்
பண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்

Monday, August 04, 2014

உலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது ஏன்?


பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை. 

பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?

மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.

ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.

அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 

"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும். 

ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.

அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை. 

மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 

இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.

Sunday, January 17, 2010

இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

இலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.

நெடுந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.

இந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது. மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது. லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.

துபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் "பெதூயின்" என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர். எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. "எமக்கென்று ஒரு நாடு இல்லையே" என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும்? எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது? எங்கே நிலத்தடி நீர் உண்டு? இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.

அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை "ஷெரீப்" (பன்மை: அஷ்ரப்) என்று அழைத்தனர். பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் "அறியாமையின் காலகட்டம்" எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

அரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

எந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. "உம்மா" என்ற அமைப்பை ஸ்தாபித்தது. ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மதமான இஸ்லாம், இந்த "ஊடகத்தை" திறமையாக கையாண்டது. "இஸ்லாம் என்ற புதிய மதம்" பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.

(தொடரும்)

Wednesday, March 12, 2008

மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.

மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை நகர்த்தியது. இன்று உல்லாச பிரயாணிகளை கவர்ந்திளுக்கும் மொரோக்கோ, fes என்ற நகருக்கு அடுத்தாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மரகேஷ் உல்லாச பிரயாணிகளின் சொர்க்கபுரியக்கி வருகின்றது. இதனால் வருடம் தோறும் வந்திறங்கும் உல்லாச பிரயனிகளுக்காக இன்றைக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப் பட்டு வருகின்றன. மரகேஷ் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, அரச மாளிகை, பள்ளி வாசல்கள், குடியிருப்புகள், அதை சுற்றி கட்டப்பட்ட பாதுகாப்பு மதில் என்பன; பழைய நகரம் எப்படியிருந்திருக்கும் என்று நாம் இப்போதும் நேரே பார்க்கலாம். பழைய நகரத்தின் மதில் சுவருக்கு வெளியே புதிய நகரம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாவனை பொருட்கள் வாங்க கூடிய கடைகள் , அதை மொய்க்கும் இளைஞர் பட்டாளம் என்று இந்த புதிய நகரம் ஒரு சராசரி நவீன நகரமாக காட்சி தருகின்றது. வசதி படைத்தவர்கள் புதியநகரதிலும், வறிய மக்கள் பழைய நகரதிலுமாக மரகேஷ் இரண்டாக பிரிந்துள்ளது.

மொரோக்கோ பல முரண்பாடுகளின் தாயகம். மரகேஷ் நகரில் இருந்து கிழக்கு நோக்கி நூறு கி.மி. சென்றால் பனி படர்ந்த மலைதொடர்கள், மேற்கு நோக்கி நூறு கி.மி. பயணித்தல் அழகிய கடற்கரைகள். தெற்கு நோக்கி இன்னும் சில நூறு கி.மி. பயணம் செய்தல் சஹாரா பாலைவனம். இப்படி நில அமைப்பு மட்டும் மாறவில்லை. மரகேஷ் மொரோக்கோ நாட்டின் மத்தியில் இருப்பதால், அதில் இருந்து மேற்கு, கிழக்கு என்று இரண்டு பிரதேசமாக பிரித்து பார்த்தல் இன,மொழி, பொருளாதார வேற்றுமைகளை கவனிக்கலாம். அட்லாண்டிக் கடலோரம் உள்ள மேற்கு பிரதேசம் அதிவேகமாக நகரமயமாக்க பட்டுள்ளது. தலைநகர் ராபர்ட், வர்த்தக மையம் காசபிலங்கா போன்ற மக்கள் பெருக்கம் கூடிய நவீன நகரங்கள் யாவும் மேற்கு மொரோக்கோவில் உள்ளன. எதிர்பார்த்து போலே பணக்காரர்களும், வசதி படைதோருமான மத்தியதர வர்க்கம் நகரமயமகியுள்ள மேற்குபுறம் தான் காணலாம். இவர்களில் பெரும்பான்மையானோர் அரபு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். படித்தவர்கள் பிரென்ச் காலனி கால பாதிப்பினால், இன்றும் தமக்குள் பிரென்ச் மொழியில் பேசிக்கொள்வது சர்வ சாதாரணம்.

இனி மரகேஷின் கிழக்கு பிரதேசத்தை பார்ப்போம். பெரும்பாலான வறிய மக்கள் அட்லஸ் மலை தொடரை சேர்ந்த கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெர்பர்கள் என்று அழைக்க படுகின்றனர். அவர்களில் பெரும்பன்மயனோருக்கு இன்றும் அரபு மொழி தெரியாது. (ஆனால் அரபு மொழி ஆதிக்கம் காரணமாக, அவர்களது மொழி அடக்கப் பட்டு வந்தது) அரபியர்கள் அவர்களை பெர்பர்கள்(காட்டுமிராண்டி என பொருள்படும் கிரேக்க சொல்) என்று அழைத்தாலும், அவர்கள் தங்களை தமஷிக் என்றும், தங்கள் மொழியை அமஜிக் என்றும் அழைக்கின்றனர். அந்த மொழிக்கென்று வேறுபட்ட எழுது வடிவமும் உண்டு. அந்த மொழியும் தரப்படுத்த படாமல், பிரதேச வேறுபாடுகளை கொண்ட பேச்சு மொழியாக மட்டுமே இன்றுள்ளது. மொரோக்கோ அரசாங்கம் பெர்பர் மக்களை புறக்கணிப்பதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். பலர் வேலை தேடி நகரங்களுக்கு சென்று அங்கேயே குடியேறி அரபியரக மாறி விடுகின்றனர். இதனால் மொரோக்கோவில் தூய அரபியர்கள் மிக குறைந்த வீதத்திலும், அரபியரக மாறிய பெர்பர்கள் குறைந்தது ஐன்பது வீதமகிலும் காணப்டுகின்றனர். மொத்த சனத்தொகையில் பெர்பர்கள் நாற்பது வீதமகிலும் இருக்கலாம்.

பெர்பர்களின் கிராமங்களை அடுத்து "ஹரடீம்" என்ற இன மக்களின் குடியிருப்புக்கள் கானபடுகின்றன. இவர்கள் பெர்பர் மொழி பேசினாலும், கருப்பு நிற தோல் வேற்றினதவர்களாக வித்தியாசம் காட்டுகின்றது. இவர்களும் அரசாங்கத்தால் புறக்கணிக்க பட்டு பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். இந்த கருபினதவரின் முன்னோர்கள் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. ஹரடீம் மக்களின் கர்ணபரம்பரை கதைகளில் ஒன்று, அவர்கள் தான் மொரோக்கோவின் பூர்வீக குடிகள் என்றும், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறிய வெள்ளை நிற பெர்பர்கள், தம்மை அடிமைப் படுத்தி விட்டனர் என்றும் கூறுகின்றனர். பிரெஞ்சு காலனி காலம் வரை ஹரடீம் மக்கள், பெர்பர்களுக்கு சேவை செய்யும் சாதி அடிமைகளாக இருந்தனர். பின்னர் மாற்றமடைந்த நவீன மொரோக்கோவில், படித்து விட்டு உத்தியோகம் பார்த்தும், வர்த்தகம் செய்தும், அல்லது வெளிநாடு போய் உழைத்தோ தமது குடும்பங்களை முன்னேற்றினர். ஹரடீம் மக்கள் மூர் சக்கரவர்த்தியினால் பிற ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இராணுவதிற்காக சேர்க்கப்பட்ட வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சரித்திரம் கூறுகின்றது. நீண்ட காலமாக இந்த கறுப்பின படை சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான சிறப்பு படையணியாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இன மக்கள் அனைவரையும் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே ஒன்று சேர்கின்றது. இதை விட கணிசமான அளவு யூதர்களும் மொரோக்கோவில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் கூட பல்வேறு வர்த்தக துறைகளில் ஈடுபட்டும், பெரிய பதவிகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர். காலங்காலமாக அரபு மக்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தாலும், இஸ்ரேலின் தோற்றம் மொரோக்கோ யூதர்களையும் புலம்பெயர வைத்தது.

இஸ்லாம் கூட இரு வேறு போக்குகளை கொண்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியபடும் "லிபரல் இஸ்லாம்" மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குகின்றது. இதனால் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தோர் ஐரோப்பிய பாணி உடை உடுத்துவதையும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவத்தையும் காணலாம். நகரங்களில் முக்காடு போட்ட பெண்களை பார்ப்பது அரிது. இதற்கு மாறாக கிராமங்களில் வாழும் பெண்கள் மத நம்பிக்கை காரணமாகவோ, சம்பிரதாயம் காரணமாகவோ கலாச்சார ரீதியாக வித்தியாச படுகின்றனர். கிராமங்களில் மத அடிப்படை வாத சக்திகள் மக்களை வென்றெடுக்க பார்கின்றன. இந்த சக்திகள் அரசாங்கத்தால் தடை செய்ய பட்டு, கடுமையாக அடக்கப் பட்டாலும் இவர்களின் செல்வாக்கு கிராம மக்கள் மத்தியில் பெருகி வருகின்றது. இதற்கு அவர்களின் வறுமை, பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணிகள். இதனை என்னோடு கதைத்த சில மத்தியதர வர்க்க மொரோகொகாரர்கள் ஏற்று கொள்கின்றனர்.

மொரோக்கோவில் இப்போதும் மன்னர் தலைமையில் சர்வாதிகாரம் கோலோச்சுகின்றது. மக்கள் தமக்கு முன்னால் நடக்கும் போலிஸ் அத்துமீறல்களை, அதிகாரிகளின் ஊழல்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். "நாம் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து மக்களுக்கும், மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கி தன்னிறைவு காண்போம்." இந்த வாசகங்களை மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கூறி வருகின்றன. ஆனால் அவர்கள் கூறும் தன்னிறைவு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எங்கும் எதற்கும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியமாகும் என்ற நிலைமையால், வறிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மொரோக்கோ பற்றிய கலாச்சார, அரசியல் குறிப்புகளை இத்துடன் நிறுத்தி கொண்டு, நான் சென்று வந்த இடங்களை அறிமுகப் படுத்துகிறேன்.

மரகேஷில் இருந்து அட்லஸ் மலைபிரதேசங்களுக்கு போய் வரும் சுற்றுலக்களே அதிகம். உவாஸர்ஸட் என்ற பண்டைய பெர்பர் நகரம் unesco கலாச்சார பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களிமண்ணும், வைகோலும் கலந்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட அழகிய நகரம் அது. சிறுவர்களின் மாயஜால கதைகளில் வரும் நகரங்களை போலே காட்சியளிக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கை, மனித அழிவுகளுக்கு உட்படாமல் கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றன அந்த செந்நிற கட்டிடங்கள். உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் உவஸர்ஸட் ஒன்றென்றால் அது மிகையாகாது. அந்த நகரின் அருகில் மிகப்பெரிய சினிமா studio ஒன்று உள்ளது. உவசர்சட் வாசிகள் அநேகர் அந்த ஸ்டூடியோவில் தான் வேலை செய்கின்றனர். Ben Hur போன்ற காவியம் படைத்த ஹோலிவூட் திரைப்படங்கள் பல அங்கே தான் தயாரிக்கப் பட்டன. தற்போதும் அமெரிக்கா, ஐரோப்பிய சினிமா தயாரிப்பாளர்களை கவர்ந்திளுகிறது. மலை, பாலைவனம், எகிப்தில் இருப்பது போன்ற செட் போன்ற இன்னோரன்ன விஷயங்களால், அது உலகில் தனித்தன்மை வாய்ந்த ஸ்டூடியோ என்று சொல்லலாம்.

உவசர்சட் நகரம் ஒருகாலத்தில் சஹாரா வாணிபம் காரணமாக செல்வ செழிப்புடன் இருந்தது. இப்போது உள்ளது போல நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. சஹாரா பாலைவனத்திற்கு மறுபக்கம் இருக்கும் நாடோடி மக்கள் அல்லது வணிகர்கள், உற்பத்தி பொருட்களையும், தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களையும் ஒட்டகங்கள் மீதேற்றி ஊர்வலமாக மொரோக்கோ நோக்கி போய் விற்று விட்டு, வேறு பாவனை பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பி வருவார்கள். இந்த வர்த்தக போக்குவரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவும், இடையிலே இருக்கும் நகரங்களில் தங்கி செல்லவுமென, குறுநில மன்னர்களுக்கு கப்பம் செலுத்துவது வழமை. உவசர்சட் பிரதேசத்தை ஆண்ட மன்னன் மட்டுமல்ல, முழு நகரமும், அவ்வாறு இந்த வர்த்தக போக்குவரத்தால் லாபமடைந்தனர். இன்று அதெல்லாம் பழைய கதை.

அட்லஸ் மலை பிரதேச சுற்றுலவிற்குள், அழகிய நீர் வீழ்ச்சியோன்றிற்கு கூட்டி போகின்றனர். ஆபத்தான மலை உச்சிக்கு, ஒடுக்கமான பாதையூடாக போய் வருவது ஒரு த்ரிலான அனுபவம். அதே சுற்றுலவிற்குள் பெர்பர் குடியிருபொன்றை கூட்டிப்போய் காட்டுகின்றனர். அவர்களது வீடு மட்டுமல்ல சில கைப்பணி பொருட்களை செய்யும் இடங்களையும் பார்க்கலாம். இப்படியான சுற்றுலாக்களில் சிலர் வர்த்தக ரீதியாக, உள்ளூரில் உற்பத்தி செய்த எண்ணை, வாசனை திரவியங்கள், கம்பளம் போன்ற பொருட்களை வாங்க சொல்லி எதிர்பார்ப்பதும் நடக்கின்றது. மேலும் உல்லாச பிரயாணிகள் என்றால் அதிக விலை கேட்பார்கள். இப்படி வெளிநாட்டு பயணிகளை ஏமாற்றுவதில் நகரங்களில், டாக்ஸி ஓட்டுனர்களை யாரும் மிஞ்ச முடியாது. இரண்டு கி.மி. போகும் தூரத்திகும் மூன்று மடங்கு விலை கேட்பார்கள். மீட்டர் போட்டால் உள்ள விலை தெரிந்து விடும் என்று போட மறுப்பார்கள். இந்த டாக்ஸி காரர்கள் தங்களை ஏற்றுவதை விட, வெளிநாட்டு பயணிகளை ஏற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக மரகேஷ் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

எனது விடுமுறை முடிவதற்கு சிறிது நாட்களே இருந்த போது, எசயூரா என்ற கடற்கரை பட்டணம் போய் வந்தேன். மொரோக்கோ மக்கள் கூட தமது விதிமுறையை கழிக்க எசயூரா போவது வழக்கம். கருங்கட் பாறைகளை கொண்ட கடற்கரை, அதனருகே கைவிடப் பட்ட போர்த்துகீசிய கோட்டை, கடலுக்குள் போக காத்திருக்கும் மீன்பிடி வள்ளங்கள், வெப்பமான நாட்களிலும் வீசும் தென்றல் காற்று என்று மனோரம்மியமான இடமானதல், வெளிநாட்டு பயணிகளை மட்டுமல்ல, உள்நாட்டு பயணிகளையும் கவர்வதில் வியப்பில்லை.

மரகேஷில் இருந்து கடுகதி ரயில் சேவை காசபிலங்க நகரை இணைகின்றது. காசபிலங்காவிற்கு வர்த்தக நோக்கத்தோடு வருபவர்கள் தான் அதிகம். இருப்பினும் ஹசன் மசூதி மூர்களின் கட்டிடகலையின் நவீன வடிவத்திற்கு சான்று. பிரமாண்டமாக கடற்கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மசூதியை பார்க்க வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் வருகின்றனர். உலகிலேயே (அல்லது வட-ஆப்பிரிக்காவில்) மிகப் பெரிய பள்ளி வாசல் என்று, அரசாங்கத்தால் விளம்பரம் செய்ய படுகின்றது. காலம்சென்ற முன்னால் மன்னன் ஹசன் பெயரில் கட்டப் பட்டுள்ள இந்த பள்ளி வாசல் மில்லியன் டாலர் பணத்தை விரயமாக்கியிருக்கிறது. இதற்கு அனைத்து மொரோக்கோ மக்களிடமும், ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி, பணம் வசூலிக்கப் பட்டது. வர்த்தக நிலையங்கள் நிதியுதவி செய்து பெற்றுக்கொண்ட மசூதியின் படத்தை வைதிருக்கா விட்டால், அவர்களது லைசென்ஸ் மறுக்கப்பட்டது. மன்னர் குடும்பம், என்னதான் இந்த மசூதியினால் பேர் எடுக்க விரும்பினாலும், சாதரண மொரோக்கோ மக்கள் இது தேவையா என்று கேட்கின்றனர். மொத்த சனத்தொகையில் அரைவாசி மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு நாட்டில், இப்படி கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து மசூதி கட்டவில்லை என்று யார் அழுதார்கள்? உலகமெங்கும் ஆளும் வர்க்கம் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். மக்களிடம் சுரண்டி சேர்க்கும் பணத்தில், தங்களுக்கு மாளிகைகளும், இறைவனுக்கு ஆலயங்களும் (கடவுளுக்கே லஞ்சம்?) கட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு தொழில் புரியும் மொரோக்கோ நண்பர் கூறிய வாசகங்கள், அந்நாட்டு அரசியல், பொருளாதார நிலைமையை ஒரு வரியில் சொல்ல போதும். "எமது நாட்டிலும் ஜன நாயக முறையில் தேர்தல்கள் நடக்கும். நான்கு வருடத்திற்கு ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். ஆயியம் கட்சியில் இருப்போர் முடிந்த அளவுக்கு திருடிக் கொண்டு செல்வார்கள். பிறகு அடுத்த தேர்தலில் அடுத்த கட்சி தங்கள் பங்குக்கு திருடுவார்கள். இன்றைக்கும் எமது நாட்டில் ஒரே ஒருவர் மட்டும் நிரந்தரமாக திருடிக் கொண்டே இருக்கிறார். அது தான் மன்னர்! "

வெளிநாடுகளில் இருந்து மொரோக்கோ போகும் உல்லாச பிரயாணிகள், இவை எதை பற்றியும் கவலைப்படாமல் தமது பொழுதை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். எது எப்படியிருந்தாலும் மொரோக்கோ மேற்குலக நட்பு நாடல்லவா? அதனால் அலம் இருண்ட மறுபக்கத்தை கண்டு கொள்வதில்லை. ஒரு விவசாய நாடான மொரோகோ, அதனை அபிவிருத்தி செய்யாமல், உல்லாச பிரயான ஹோட்டல்கள் கட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றது. இதனால் உள்ளூர் தொழில்கள் நலிந்து போக, வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். உலகமயமாதலின் எதிர்வினை என்றும் அழைக்கப்படும் இந்த காட்சியை மொரோகோவிலும் பார்க்கலாம்.

Travel Blogs - Blog Catalog Blog Directory

_____________________________________________

கலையகம்