Sunday, June 23, 2019

இஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்!


இஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான "இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சில பல்கலைக்கழக பட்டதாரிகள் கூட அதை நம்பி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு சமூகத்தில் அறியாமை நிலவுகின்றது. உண்மையில் இது ஓர் ஐரோப்பிய மையவாதக் கருத்து. அது அடிப்படையில் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாமியர் அல்லாத ஆசிய நாட்டவர் அனைவருக்கும் எதிரான நிறவெறிக் கருத்து.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஐரோப்பியர் வருவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அரேபிய நாகரிகம் வந்து விட்டது. அது உள்நாட்டு காலச்சாரத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு ஓர் உதாரணம் யூனானி மருத்துவம். அது தற்போது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்பட்டாலும், அது உண்மையில் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் விரிவாகச் சொன்னால் அரேபிய- கிரேக்க நாகரிகத்தின் விளைவு தான் யூனானி மருத்துவம்.

யூனானி என்ற சொல் கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பண்டைய தமிழகத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைத்தனர். இன்றைய கிரேக்க தேசத்தின் மேற்கத்திய மாகாணமான இயோனியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அரேபியரையும் யவனர்கள் என்றே அழைத்தனர். இன்று முஸ்லிம்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் சோனகர் என்ற சொல் கூட யவனர்களில் இருந்து திரிபடைந்த சொல் தான்.

பண்டைய தமிழர்களுக்கு கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்காலத்திலும் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரையும் சீனர்கள் என்று அழைப்பது சாதாரணமான விடயம். பண்டைய தமிழர்களும் அப்படித் தான் அரேபியரையும் யவனர்கள் என்றனர். அவர்களது உடற்தோற்றம் ஒரே மாதிரி இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் சில நேரம் கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஜோர்டானில் இன்றைக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் பண்டைய நகரமான பேட்ரா, முன்னொரு காலத்தில் கிரேக்க நகரமாக இருந்தது. பேட்ரா என்பது கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பைபிளில் குறிப்பிடப்படும் இயேசுவும் சீடர்களும் வாழ்ந்த காலகட்டம், ரோமர்களின் ஆட்சிக் காலம் ஆகும். அந்த "ரோமர்கள்" பெரும்பாலும் கிரேக்க மொழி பேசிய கிரேக்கர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டத்தில் கிரேக்கம் மட்டுமே ஒரேயொரு நாகரிகமடைந்த பகுதியாக இருந்தது. அன்றைய காலத்தில் மேற்கு ஐரோப்பியர்கள் காடுகளுக்குள் வாழும் காட்டுமிராண்டிகளாக இருந்த படியால், கிரேக்கர்களுக்கு மேற்குலகம் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. அவர்களது நோக்கம் முழுவதும் கிழக்கில் இருந்த நாகரிகமடைந்த சமுதாயங்களை போரிட்டு வெல்வதாக இருந்தது. ஆகையினால், உலகம் முழுவதையும் ஆள விரும்பிய மசிடோனியா மன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்புகள் எல்லாம் கிழக்கை நோக்கியதாகவே இருந்துள்ளன.

அலெக்சாண்டர் வென்ற இடமெல்லாம் அலெக்சாண்ட்ரியா என்ற பெயரில் கிரேக்க நகரங்கள் அமைக்கப் பட்டன. எகிப்தில் இப்போதும் அந்தப் பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கியில் இன்றைக்கும் இஸ்கென்டருன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கி மொழியில் அலெக்சாண்டரை இஸ்கெண்டர் என்று அழைக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் துருக்கியின் மத்திய பகுதியில் கூட பெருமளவு கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய ஆப்கானிஸ்தான், அபிவிருத்தியில் பின்தங்கிய ஏழை நாடாக இருந்தாலும், முன்னொரு காலத்தில் அங்கு கிரேக்க நாகரிகம் செழித்து வளர்ந்தது. கண்டஹார், ஹெராட் ஆகிய நகரங்கள் இன்றைக்கும் கிரேக்க பெயர்களால் அழைக்கப் படுகின்றன. ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களும் கிரேக்கர்கள் தான். அவர்கள் பிற்காலத்தில் பௌத்தர்களாகவும், பின்னர் இஸ்லாமியராகவும் மாறி விட்டனர். பாகிஸ்தானில் இன்றைக்கும் கிரேக்க பாரம்பரியம் பேணும் பழங்குடி இனம் ஒன்றுள்ளது.

கிரேக்கர்கள் இஸ்லாமியராக மாறிய வரலாறு ஆப்கானிஸ்தானுடன் மட்டும் நின்று விடவில்லை. ஹெரோடோடுஸ் எனும் பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் கிரேக்கர்கள் சென்று குடியேறிய இடங்களை அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய யேமன் நாட்டில் உள்ளா சாபா, சானா வரையில் கிரேக்கர்கள் சென்று குடியேறி உள்ளனர். அதற்கு ஆதாரமாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வெண்கலக் கிண்ணங்கள் உள்ளன. தெற்கு எகிப்தில் முகாமிட்டிருந்த இரண்டு இலட்சம் கிரேக்க படையினர், இன்றைய சூடானின் மத்திய பகுதி வரையில் சென்று குடியேறி உள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூகோள அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, நிறைய சூடானிய- கிரேக்கர்கள் சைப்பிரசிலும், கிரீசிலும் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர்.

இந்த வரலாற்றை இங்கு நினைவுபடுத்துவதற்குக் காரணம், இஸ்லாம் என்பது பாலவனத்து அரேபியரின் மதம் என்ற கருத்து எந்தளவு அபத்தமானது என்று நிரூபிக்கத் தான். இஸ்லாமியரின் இறைதூதர் முகம்மது நபி பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே அரேபியாவில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. இன்றைய சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதியில் கூட சிறிதும் பெரிதுமான யூத, கிறிஸ்தவ ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் யேமனில் இருந்த ஷீபா இராணியின் நாடு பற்றி பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ஆகையினால், அரேபியர்கள் என்றாலே முன்பு அவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர்" என்று எப்படிக் கூற முடியும்?

உண்மையில் அந்தக் காலத்தில் அரேபியாவில் இருந்த சமுதாய அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. கணிசமான அளவு அரேபியர்கள் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் பாரம்பரிய மதங்களை பின்பற்றினார்கள். இதனை இயற்கை வழிபாடு, சிலை வணக்கம், சிறு தெய்வ வழிபாடு என்று பலவாறாக அழைக்கலாம். 

மெக்காவில் உள்ள காபா, அதை நோக்கிய ஹஜ்ஜு யாத்திரை கூட இஸ்லாத்திற்கு முந்திய பாரம்பரிய மத வழிபாட்டின் தொடர்ச்சி தான். அந்தக் காலத்திலும் அரேபியாவின் பல பகுதிகளிலும் இருந்து மெக்காவுக்கு யாத்திரை சென்றவர்கள், அந்த இடத்தில் தமக்கிடையிலான பகை மறந்து சமாதானமாக நடந்து கொண்டனர். அதனால் வணிக ஒப்பந்தங்கள் செய்வதற்கு சிறந்த இடமாகக் கருதப் பட்டது.

முகம்மது நபி மெக்காவில் ஆதிக்கம் செலுத்திய குறைஷி இனக்குழுவை சேர்ந்தவர் என்றாலும், தனது சமூகத்தின் பழமைவாத பழக்கவழக்கங்களை எதிர்த்து வந்தார். அனேகமாக பைபிள் பற்றி கேள்விப் பட்டிராத பழமைவாத சமூகத்தில் இருந்து வந்த முகம்மது, மேற்கு அரேபியாவுக்கு சென்று வந்த வர்த்தகர்களின் தொடர்பினால் தான் புதிய மத சித்தாந்தம் பற்றி அறிந்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய பாலஸ்தீனம், ஜோர்டானை உள்ளடக்கிய மேற்கு அரேபியப் பகுதிகளில் தான் ஓரிறைக் கொள்கை கொண்ட யூத, கிறிஸ்தவ மதங்கள் செழித்து வளர்ந்தன.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவராலும் தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட மொசெசிற்கு, இறைவனால் முதல் தடைவையாக இறை வேதம் வெளிப்படுத்தப் பட்டதாக நம்புகிறார்கள். அதைத் தான் யூதர்களால் தோரா என்றும், கிறிஸ்தவர்களால் பைபிள் என்றும் அழைக்கப் படுகின்றது. அதே இறைவேதம் முகம்மதுவுக்கு கப்ரியேல் என்ற தேவதை மூலம் வெளிப்படுத்தப் பட்டதாகவும், அது தான் குரான் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். 

ஆகையினால், இஸ்லாம் என்பது "பாலவனத்தில் வாழ்ந்த அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" என்பது உண்மையானால், கிறிஸ்தவம், யூதம் ஆகியனவும் அதே பாலைவன காட்டுமிராண்டிகளின் மதங்கள் தான்! மொழி அடிப்படையில் பார்த்தாலும், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த யூதர்களின் ஹீபுரு மொழி, கிறிஸ்தவர்களின் அரேமிய மொழி, இஸ்லாமியரின் அரபு மொழி மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பு பட்ட ஒரே மாதிரியான செமிட்டிக் குடும்ப மொழிகள் தான்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இன்றைய சவூதி அரேபியப் பகுதிகளில் வாழ்ந்த அரேபியர்கள் தான். ஆனால், இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு அங்கே தொடங்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாக்தாத் நகரை தலைநகரமாகக் கொண்டிருந்த கலீபாக்களின் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாகரிக காலகட்டம் தோன்றி வளர்ந்தது. உண்மையில் அதை கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாகக் கருத வேண்டும். அதனால், இன்றைக்கு சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை "அரேபிய - ஹெலனிக் நாகரிகம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். ஹெலனிக் என்பது கிரேக்கத்தை குறிக்கும் கிரேக்கச் சொல்.

பாக்தாத்தில் உருவான இஸ்லாமிய நாகரிகத்தை, அரேபிய- ஹெலனிக் நாகரிகம் என்றும் குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் அரேபியா, ஐரோப்பாவை விட நாகரிகத்தில் பல மடங்கு முன்னேறி இருந்தது. ஏற்கனவே அலெக்சாண்டர் காலத்திலும், அதற்குப் பிந்திய கிறிஸ்தவ- கிரேக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் பாக்தாத் நகரம் உன்னத நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது.

இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரபு மொழியும், கிரேக்க மொழியும் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர். அறிவியல் துறையில் அவர்களது சேவை பெரிதும் தேவைப் பட்டது. பண்டைய இந்தியா, பாரசீகம், கிரேக்கத்தில் இருந்து ஏராளமான அறிவியல், இலக்கிய நூல்கள் பாக்தாத்திற்கு கொண்டு வரப் பட்டன. அங்கு அவை யாவும் அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன.

கிரேக்க தத்துவஞானிகளான அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றவர்கள் எழுதிய கிரேக்க தத்துவ நூல்கள் யாவும் முதன் முதலில் அரபு மொழியில் தான் மொழிபெயர்க்கப் பட்டன. அதற்குப் பிறகு தான் ஐரோப்பியர்கள் அவற்றை அறிந்து கொண்டனர். Galenos, Hippocrates, Dioscorides, Euclides, Ptolemeos, Archimedes, ஆகிய தத்துவ அறிஞர்களின் அனைத்து நூல்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இதில் பல பெயர்கள் இன்றைக்கும் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பரிச்சயமாக இருக்கும். உண்மையில், அன்றைக்கு இந்த நூல்கள் அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கா விட்டால், இன்றைக்கு நாம் அறிவியல் அறியாத சமூகமாக இருந்திருப்போம்.

பண்டைய கிரேக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டு, அரேபிய விஞ்ஞானமும், தத்துவ ஞானமும் உருவாகின. அரேபிய அறிவியல் மேற்கத்திய அறிவியலுக்கு பல நூறாண்டுகள் முந்தியது. இபுன் சினா (Ibn Sina), அல் ரழி (Al Razi) ஆகிய அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் தந்தையராக போற்றப் படுகின்றனர். அல் சாஹ்ராவி அறுவைச் சிகிச்சையை கண்டுபிடித்தார். Ibn Butlan, Ibn Haitham, Ibn Rushd என்று இன்னும் பல அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் மூலவர்களாக இருந்துள்ளனர்.

அரேபியர் கொண்டு சென்ற இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம் அறிவியல் நூல்களும் கொண்டு செல்லப் பட்டன. அரேபிய வைத்தியர்கள் மருத்துவத் துறையில் முன்னேறி இருந்த காலத்தில், ஐரோப்பிய வைத்தியர்கள் நோயாளி குணமடைய பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஒரு நோயாளி தீராத தலைவலி காரணமாக வைத்தியரிடம் சென்றால், மண்டையில் ஆணி அடித்து அசுத்த ஆவியை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாக, அரேபிய மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கும் வரையில், ஐரோப்பியர்களின் மருத்துவம் மிக மோசமாக பின்தங்கி இருந்தது.

தெற்கு இத்தாலியில் பாலேர்மோ, ஸ்பெயின் மத்தியில் உள்ள டொலேடோ ஆகிய நகரங்கள் ஒரு காலத்தில் அரேபியர்களின் நகரங்களாக இருந்தன. கிறிஸ்தவ மன்னர்கள் அவற்றைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த அறிவியல் நூல்களை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவ்வாறு தான் நவீன மருத்துவம் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. குறிப்பாக இபுன் சினா (ஐரோப்பியர்கள் அவிசேனா என்றழைத்தனர்.) எழுதிய மருத்துவ நூலும், அல் சஹ்ராவி எழுதிய அறுவைச் சிகிச்சை பற்றிய நூலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப் பட்டன.

ஐரோப்பிய நாகரிகம் வளர்வதற்கு அரேபியர்கள் செலுத்திய பங்களிப்பு பிற்காலத்தில் மறைக்கப் பட்டது. அது ஓர் அரசியல் படுகொலையுடன் ஆரம்பமானது. கிறிஸ்தவ ஐரோப்பாவில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலாக அரேபிய தத்துவ ஞானம் கற்பதற்கான பிரிவு ஆரம்பிக்கப் பட்டது. அதை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் டச்சுக்காரரான Siger van Brabant. அரிஸ்டாட்டில் வழியை பின்பற்றிய அரேபிய தத்துவஞானி அவேரோஸ் (இபுன் ரஷிட்) அவர்களது வழிகாட்டியாக இருந்தார். ஆகையினால், பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்த மாணவர்கள் தம்மை அவேரோயிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர்.

அவேரோஸ் இரண்டு முக்கியமான புரட்சிகரமான தத்துவங்களை முன்வைத்திருந்தார். ஒன்று: இந்த பூமி ஆதியும், அந்தமும் இல்லாதது. (இது பூமியை ஆண்டவன் படைத்தான் என்ற பைபிள் கோட்பாட்டுக்கு முரணானது.) இரண்டு: நாங்கள் மத ரீதியான சிந்தனையை ஒரு பக்கமும், அறிவியல் சிந்தனையை இன்னொரு பக்கமுமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். (இது நவீன கால மதச்சார்பற்ற கொள்கை போன்றது. ஆகையினால் அன்றிருந்த கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு முரணானது.)

மேற்குறிப்பிட்ட தத்துவ வாதங்கள் அன்றைய கிறிஸ்தவ மத மேலாண்மைக்கு எதிராக திரும்பலாம் என வத்திகான் அஞ்சியதில் வியப்பில்லை. பாரிஸ் நகர பிஷப், இது கிறிஸ்தவ விரோதம் என அறிவித்தார். 1283 ம் ஆண்டு, சோர்போன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை அதிபர் ஒரு கத்தோலிக்க மதவெறியனால் படுகொலை செய்யப் பட்டார். அதற்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் அவெரோயிசம் என்ற இறைமறுப்புக் கொள்கையை வேரோடு அழிப்பதில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியரிடமிருந்து பாலஸ்தீனத்தை மீட்பதற்காக போப்பாண்டவர் அறிவித்த சிலுவைப்போர் காரணமாக, அரேபியருடனான எந்தத் தொடர்பையும் கிறிஸ்தவ மதத் துரோகமாக கருதும் நிலைமை உருவானது. அதனால், ஐரோப்பா இன்னும் பல நூற்றாண்டுகள் அறிவியலில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக சிலுவைப்போரினால் சில நன்மைகளும் ஏற்பட்டன. லெபனான், பாலஸ்தீனத்தை இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து மீட்டெடுத்து அங்கு கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை அமைத்தவர்கள் பல புதிய தகவல்களை அறிந்து கொண்டனர். சிலுவைப் போர்வீரர்கள், தாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்திய கிழக்கில் ஒரு நாகரிகத்தில் முன்னேறிய சமுதாயம் இருக்கக் கண்டனர். அவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்றுக் கொண்டனர். இவ்வாறு தான் நவீன அறிவியல் ஐரோப்பாவுக்குப் பரவியது.

No comments: