~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வீட்டுப் பணியாளர் எனும் இனிப்பு
'லயங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. எங்களால் நல்ல உணவையோ உடையையோ கொடுக்க முடிவதில்லை. நன்கு உண்டு உடுத்தாவது இருக்கட்டும்" என்று சொல்லிச் சொல்லியே தான் மலையகப் பெற்றோர்களில் கணிசமானோர் அவர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புகின்றனர். அவ்வாறு வீட்டு வேலைகளுக்காகச் செல்வோர் உழைப்புச் சுரண்டலுக்கு மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தல்கட்கும் மன உளைச்சல்கட்கும் ஆளாகின்றனர். அவர்களில் வருடாந்தம் பலர் அகால மரணமான செய்திக ளையும் கேட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ம் திகதி இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கழிவு நீர் கால்வாயில் காணப்பட்டன. அவை லக்~பான தோட்டப் பிரிவைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள். அவர்கள் 'வீட்டுப் பணியாளர்களாக" கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்கள். நல்ல உணவை உண்ணவும் நல்ல உடையை உடுக்கவும் சென்றவர்கள். அதனாலேயே கழிவு நீரில் சடலமாக மிதந்தவர்கள்.
அதுமட்டுமல்ல, இறந்த பிறகு அவர்களுக்கு கௌரவப் பட்டமும் கொடுக்கப்பட்டது: அது தன்னினச் சேர்க்கையாளர்கள். ஜீவராணி (13 வயது) சுமதி (14 வயது) ஆகிய சிறுமிகள் வீட்டுப் பணிக்குச் சென்ற இடத்தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் அதற்கு இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் கழிவு நீர்க் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அவர்களின் எஜமானர்கள் கூறுகின்றனர். வீட்டு வேலைக்காகச் சென்றவர்கள் சடலமாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது முதலாவது தடைவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல. 14 வயதானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் சொல்லுகிற போதிலும் வீட்டு வேலைக்காக 14 வயதுக்கு குறைந்தவர்களும் அமர்த்தப் படுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுங் கூட, வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் பாதுகாப்பு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.
பொதுவாக வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் தொழிற் சட்டங்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டவர்களாகவோ அவற்றின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லை. இந் நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் நிலை மிகவும் மோசமானது. மலையகச் சிறார்கள் நிலை பரிதாபகரமானது.
அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சுமதி, ஜீவராணி ஆகியோரை அதே தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் கொழும்புக்கு கொண்டு சென்று 'ரணா ஏஜன்சி" எனும் வீட்டு வேலைக்களுக்கு சிறுவர்களை வழங்கும் முகவர் நிலையத்தில் ஒப்படைக்க அந் நிலையம் அவர்களை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. அத் தோட்டத்தைச் சேர்ந்த தரகருக்கு ஒருவரை வேலைக்கு வழங்கும் போது மூவாயிரம் கொடுக்கப் படுவதாகவும் ரணா ஏஜன்சி ஒருவரை வேலைக்கு கொடுக்கும் போது எஜமானர்களிடமிருந்து ரூபா 10,000 பெற்றுக் கொள்வதாகவும் தெரிய வருகிறது. இந்த ரணா ஏஜன்சி தோட்டங்கள் தோறும் தரகர்களை வைத்திருக்கிறார்கள். அந்தத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியே வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மரண விசாரணை நடத்தும் போது பெற்றோர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தையடுத்து ஆகஸ்ட் 17ந் திகதி புதைக்கப்பட்ட சடலங்கள் ஆகஸ்ட் 27ந் திகதி தோண்டி எடுக்கப்பட்டன. அவை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட 1வது பிரேத பரிசோதனைகள் அறிக்கையின் சடலங்கள் உடல்களில் காயங்கள் இருக்கவில்லை என்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் நீரில் மூழ்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் சடலங்களை அடையாளங் காணும் போது உடலில் காயங்களைக் கண்டதாக சிறுமிகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமதி என்ற சிறுமி எழுதியதாக காட்டப்படுகின்ற கடிதத்தில் அவர்கள் இருவரின் இறப்புக்கும் எஜமானர்களும் எஜமானிகளும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது. இக் கையெழுத்து சுமதி உடையது அல்ல என்று சுமதியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
உண்மை எவ்வாறு இருந்த போதிலும் மரண விசாரணைகளில் அச் சிறுமிகளின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு சிறுமிகளின் மரணங்கள் மலையகத்தை உலுக்கியுள்ளன. சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவது பற்றி சிந்திக்க வைத்துள்ளன எனலாம்.
சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இச் சம்பவத்தை தங்கள் தங்கள் அரசியல் இருப்பிற்கான பிரசாரமாகப் பயன்படுத்தினர். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்திட்ட அறிக்கைகளை தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அப்பால் நேர்மையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
'மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் மலையக தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் பகிரங்க கருத்தரங்கை 'புதிய மலையகம்", செம்ரெம்பர் 6ந் திகதி நடத்தியது. அதில் தொழிலாளர்களின் பிரசன்னம் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. ஆனால் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் சில தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிவிட்டுச் சென்று விட்டனர். கருத்தரங்கின் முடிவுவரை இருந்தவர்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்தனர்.
18வயதுக் குறைந்த மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற பண்பாட்டு ரீதியான முடிவுகளை எடுத்தனர். எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு சிறார்களை அனுப்புவதில்லை என்று மலையகம் எங்கும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களைப் 'புதிய மலையகம்" ஏனைய அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
அதே வேளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தொழிற் சட்ட ரீதியாகவும் விசேட ஏற்பாடுகளின் ஊடாகவும் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப் பட்டது.
சம்பள உயர்வு வேண்டி ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அந்த இரண்டு சிறுமிகளின் மரணம் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் அளவுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதையே வலியுறுத்தி வேண்டியுள்ளது.
எமது நாட்டுச் சூழலில் வீட்டு வேலை என்பது அடிமை வேலையே 'வீட்டுப் பணியாளர்கள்" என்ற அழகு தமிழில் அழைக்கப்பட்;டாலும் வீட்டு வேலை செய்வோர் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதன் மூலம் எதிர்கால அடிமைகளை உருவாக்கவே துணைபோகின்றோம்.
200 வருட மலையக மக்களின் அடிமை வாழ்வு தகர்க்கப்பட போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மேலும் மேலும் அடிமைகளை பயிற்றுவிக்கத் துணை போவதைத் தவிர்ப்போம். சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்தாது இருப்போம்.
(நன்றி: புதிய பூமி, செப்டம்பர் 2009 )
1 comment:
இச் செய்தியை ஏற்கனவே படித்துள்ளேன்; இதில் மேலும் பல விபரங்கள் உள்ளன.
மலயகத்தில் கடைமைபுரிந்தவனெனும் வகையில் இவ்வவலத்தில் வகைதொகை மிக அறிவேன்.
இன்னும் தொடர்வது வேதனையே; தேயிலைத் தோட்டம்; தோட்டப் பாடசாலைகள் தோறும்
விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Post a Comment