Thursday, February 13, 2025

புலிக்குழு & ஒட்டுக்குழு ஒற்றுமையாக தையிட்டியில் கைகோர்த்த அதிசயம்!


புலிக் குழுவும், ஒட்டுக் குழுவும், சிங்களப் பேரினவாதிகளும், தமிழ்த் தேசிய பெருமைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்துவதை கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நேற்று அந்த அதிசயம் நிஜத்தில் நடந்தது! 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த விகாரையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தேர்தலில் தோல்வியுற்ற எதிர்க் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றின. 

வழமையாக சைக்கிள் கட்சி எனப்படும் TNPF, அதிலும் 10 பேர் மட்டுமே, பௌத்த மதத்தில் புனித நாளான ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் "விகாரை எதிர்ப்பு போராட்டம்" செய்வார்கள். முன்பு இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்த காலத்தில் கட்டிய விகாரையை அகற்ற (இடிக்க) வேண்டும் என்றும், அபகரித்த அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்துகிறார்கள். 

அவர்களுக்கு நஷ்ட ஈடு, அல்லது வேறு இடத்தில் காணி வழங்க ஆளுநர் முன்வந்த போதிலும், கடும்போக்கு சைக்கிள் கட்சியின் அழுத்தம் காரணமாக நில உடைமையாளர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். சைக்கிள் கட்சியும் அவர்களை தனது இனவாத அரசியலுக்கு பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகிறது. 

அது ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது இலங்கையில் ஒரு இடதுசாரி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைத்த பின்னர், வலதுசாரி எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை எதிர்க்க காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. அவர்களது கண்களில் தையிட்டி விகாரை விவகாரம் தென்பட்டது.

பிறகென்ன கேட்கவா வேண்டும்? விகாரை கட்ட அனுமதித்த சிங்களப் பேரினவாத வில்லன்கள், விகாரை கட்டி முடிக்கும் வரை காத்திருந்த தமிழ்த் தேசிய புனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு  பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டார்கள். அடேங்கப்பா!

சிங்கங்களும், புலிகளும் ஒன்று சேர்ந்து நட்பு பாராட்டுவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ஏற்கனவே பிரேமதாசா காலத்தில் பார்த்த விஷயம் தான். என்ன ஒரு வித்தியாசம்? அன்று ஆயுதங்களுடன் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. இன்று வாய்ப் பேச்சு அரசியல் நடக்கிறது. 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியவாதிகள் எழுப்பும் கோஷங்களுக்கு, ஒட்டுக் குழு EPDP மற்றும் சிங்களப் பேரினவாத UNP கட்சியினரும் சேர்ந்து சொன்னார்கள் என்று நேரில் கண்ட ஒருவர் சொல்லி பெருமைப் பட்டார். அட... அட... புல்லரிக்குது!

போராட்ட களத்திற்கு ராஜபக்சே கட்சியினர் மட்டுமே வரவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு யாரும் அழைப்பு அனுப்பவில்லையோ தெரியாது. இல்லாவிட்டால் வடக்கின் எதிர்வினையாக தெற்கில் விகாரை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கலாம். எப்படியாவது மதக் கலவரம், இனக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. 

அது சரி. இறுதியாக ஒரு கேள்வி. ஒரு வேளை சர்ச்சையில் உள்ள விகாரையின் முழுப் பொறுப்பையும் தீவிர தமிழ்த் தேசியவாதி கஜேந்திரகுமார் அல்லது அவரது TNPF கட்சியிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அவர்கள் சொன்ன படி விகாரையை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்புகிறீர்களா? ஒருபோதும் இல்லை! அவர்கள் ஒன்றும் பொன் முட்டை இடும் வாத்தை வெட்டும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. விகாரையை தொடர்ந்தும் வைத்திருந்து தென்னிலங்கை சிங்கள யாத்ரீகர்களை வரவழைத்து பணம் சம்பாதிக்க பார்ப்பார்கள். இது நடக்கா விட்டால் இருந்து பாருங்கள்.

No comments: