குர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம் - ஆவணப்படம்
உலகமயமாக்கலின் பின்னர் இந்தியா வெகுவாக மாறிவிட்டது . லட்சங்களில் சம்பளம் வாங்கும் மத்திய தரவர்க்கமும் பெருகி விட்டது . கைநிறையப் பணம் இருப்பதால் பூலோக சொர்க்க வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள் . வசதியான வாழ்க்கை தேடி அவர்கள் அமெரிக்காவிற்கு செல்லத் தேவையில்லை . இந்தியாவிலேயே , புது டில்லி மாநகரத்திற்கு அருகிலேயே , அவர்களுக்கு என்று குட்டி சிங்கப்பூர் உருவாகியுள்ளது . பத்தாண்டுகளுக்கு முன்னர் தரிசு நிலமாக இருந்த ஹரியானா மாநிலத்திற்கு சொந்தமான நிலத்தில் குர்கான் என்ற நவீன நகரம் முளைத்துள்ளது . பாதுகாப்பு வலயத்தினுள்ளே , அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர வீடுகள் கட்டப்பட்டுள்ளன . இந்த நவீனகுடியிருப்புகளை சுற்றி பாதுகாப்பு வேலி இடப்பட்டுள்ளதால் , திருட்டுப்பயம் இன்றி நிம்மதியாக வாழலாம் . பாடசாலைக்கு சென்ற பிள்ளையை யாராவது கடத்திச் சென்றுவிடுவார்களோ என்று அஞ்சத் தேவையில்லை . குர்கான் குடியிருப்புகளின் உள்ளேயே பாடசாலைகள் அமைந்துள்ளன . அந்த நகரத்தில் குடியிருப்பவர்கள் வேலைக்காகவும் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் யாவும் குர்கானில் அலுவலகங்களை திறந்துள்ளன.வெளி உலகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டு , தங்களை தாங்களே சிறைப்படுத்திக் கொண்டு வாழும் பணக்கார வர்க்கம் . குர்கானில் இருந்து சிறிதுதூரத்திலேயே சேரி அமைந்திருக்கிறது . அங்கே வாழும் ஏழை மக்கள் , பெரும்பாலும் குர்கான் கட்டிடங்களை கட்டிய தொழிலாளர் வர்க்கம் . இந்த இருவேறு உலகங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரித்து வைக்கமுடியும் ? மேலும் குர்கான் வாசிகள் நிறைவான வாழ்வை அனுபவிக்கிறார்களா ? லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக குமுறுகின்றனர் .குர்கான் நகரைப் பற்றிய இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . (வீடியோ ஆங்கில மொழி உரையாடல்களும் , உப -தலைப்புகளும் கொண்டுள்ளது .) I am Gurgaon. The new Urban India
No comments:
Post a Comment