Showing posts with label கொழும்பு. Show all posts
Showing posts with label கொழும்பு. Show all posts

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

Saturday, November 16, 2013

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு, யாருக்காக?




" எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் குருவே! இலங்காபுரி என்றென்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சிற்றரசாக தொடர்ந்திருக்கும். கென்யா, மலேசியா, இந்த வரிசையில் இலங்கையிலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி, நாட்டை மறுகாலனியாக்க வந்திருக்கும் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மகாராஜாவே, வருக... வருக... "

 ______________________________________________________________________________________


டேவிட் கமெரூனும், சம்பந்தரும், விக்னேஸ்வரனும் யாழ் நூலக மேல் மாடத்தில் (பால்கனி) நின்று கொண்டே, கீழே காணாமல்போன உறவுகளைத் தேடி அழும் தாய் மாரை கண்டு உருகும் காட்சி. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வாகனம், காணாமல்போன சொந்தங்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்தவர்களால் வழிமறிக்கப் பட்டது. வாகனத்தை சூழ்ந்து கொண்டு, மேலே செல்ல விடாது தடுத்த தமிழ் மக்களை, பொலிஸ் பலவந்தமாக வெளியேற்றியது.

டேவிட் கமெரூன், தன் கண்முன்னே கண்ட ஸ்ரீலங்கா பொலிசாரின் அடக்குமுறையை தடுக்காமல், சூழ்ந்து நின்ற பொது மக்களிடம் குறைகளை கேட்டறியாமல், யாழ் நூலகத்திற்கு விரைந்து சென்றார். TNA தலைவர் சம்பந்தரும், வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனும், அங்கே அவருக்காக காத்திருந்தார்கள். No Comment. 
______________________________________________________________________________________

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகு எங்கும் அது குறித்து, மயிர் பிளக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து, ஒரு ஆப்பிரிக்க நாடு விலகிக் கொண்டுள்ளது. அந்தத் தகவல், அமைப்பினுள் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய போதிலும், ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. 

கொழும்பு நகரில் பொதுநலவாய நாட்களின் மகாநாடு நடக்கவிருக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க நாடான காம்பியா அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில், காம்பியாவின் சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் குறித்து, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தது. இருப்பினும், அந்த நாடு விலகிக் கொண்டதை, பிரிட்டனாலும், அந்நாட்டு ஊடகங்களாலும் "புரிந்து கொள்ள முடியவில்லையாம்." "இது பைத்தியக்காரத் தனமான முடிவு" என்று காம்பியா மீது தமது காழ்ப்புணர்வை காட்டி வருகின்றன. 

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் இருந்து விலகியதற்கு, காம்பியா கூறும் காரணங்கள் என்ன? "இது ஒரு காலனிய அமைப்பு. பொதுநலவாய நாடுகள் என்ற பெயரில், பிரிட்டன் தனது நவ காலனிய கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு ஜனநாயக நிறுவனம் அல்ல. அங்கே சர்வாதிகாரம் நிலவுகின்றது. அனைத்து முடிவுகளையும் பிரிட்டனே எடுக்கின்றது." பொதுநலவாய நாடுகள் விமர்சிக்கப் படுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, அதிலிருந்து விலகிய சிம்பாப்வே ஏறக்குறைய அதே காரணங்களை கூறியிருந்தது. உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், இந்தியா நினைத்தால் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை நடத்த விடாமல் தடுக்கலாம் என்று சில தமிழர்கள் நினைக்கின்றனர். அவர்கள் யாரும் பிரிட்டனை நோக்கி சுட்டு விரலை நீட்டுவதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

 ********************

"வட அயர்லாந்து பிரச்சினையில் நடந்ததைப் போன்று, இலங்கையிலும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப் பட வேண்டும். இது ஒரு நீண்ட கால செயற்திட்டம். இனங்களுக்கு, மதங்களுக்கு இடையில் நல்லுறவுப் பாலம் கட்டுவதை, இளைஞர்கள் சிறப்பாக செய்து காட்ட முடியும்." - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு செயலாளர் வில்லியம் ஹேக்.

கொழும்பில் நடக்கும் பொதுநலவாய மகாநாட்டிற்கு வந்திருந்த வில்லியம் ஹேக், மாத்தறை நகரில் "இன நல்லிணக்க நிலையம்" ஒன்றை திறந்து வைத்துள்ளார். அந்த நிலையத்தை "ஸ்ரீலங்கா யுனைட்" என்ற அரசு சாரா நிறுவனம் நிர்வகிக்கின்றது. அந்த NGO வுக்கு நிதி வழங்குவதும், பிரிட்டன் தான். அந்த நல்லிணக்க நிறுவனம், நாடு முழுவதும் மூவினங்களை சேர்ந்த 15,000 பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. "போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை நடந்தால், சர்வதேச சமூகம் தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துத் தரும்" என்று, தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது பிரிட்டிஷ் எஜமான், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய இலங்கை, இணக்க அரசியல் போன்றன, ராஜபக்சவின் "மகிந்த சிந்தனை" மட்டுமல்ல. அவையெல்லாம், தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கும், பிரிட்டிஷ் எஜமானர்களுக்கும் பிடித்த விஷயங்கள் தான். "ஆங்கிலேய அரசு ஐரிஷ் மக்களை அடக்கி ஒடுக்கியது போல, சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது" என்ற கழிவிரக்கம் காரணமாக இருக்கலாம்.

 ******************

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமகாநாடு, முக்கியமாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நடைபெறுவதை, பிரிட்டிஷ் அமைச்சர்களே நேரடியாக கூறியுள்ளனர். குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டனுக்கு இலங்கையில் கிடைக்கும் ஆதாயங்கள் எவை? உலக சுற்றுலா நிறுவனங்களால் சொர்க்கபுரி என புகழப்படும் இலங்கைத் தீவு, உல்லாசப் பயணிகளை சுண்டியிழுக்கும் நீளமான தங்க மணல் கடற்கரைகளை கொண்டது. மேற்கத்திய நாட்டு பயணிகளை கவரும், மலிவு விலை, ஆங்கிலம் பேசக் கூடிய மக்கள், போன்ற கூடுதல் தகுதிகளைக் கொண்டது. ஆனால், முப்பதாண்டு கால ஈழப்போர், பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை வர விடாமல் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தற்போது அந்தப் பிரச்சினை இல்லை. புலிகளின் அழிவில், சர்வதேச முதலாளிகளின் எழுச்சி அலை ஒன்று உருவாகி உள்ளது. பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆடம்பர விடுதிகளையும், ரிசோட்களையும் கட்டுவதற்கு அனுமதி கேட்டு வந்துள்ளார். உலகம் முழுவதும் விடுமுறைகளை கழிக்கச் செல்லும் ஐரோப்பிய நாட்டவரில், பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களை இலங்கைக்கு இழுத்து வருவதும், சுற்றுலாத் துறை நிறுவனங்களின் நீண்ட கால திட்டமாகும்.

எல்லாம் சுபமாக நடந்தால், தாய்லாந்து போன்று, இலங்கையும் மேலைத்தேய உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியலாம். ஆனால், சுற்றுலாத் துறையில் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, அதில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் போய்ச் சேரும்.

*****************

Thursday, July 25, 2013

வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை


1983 ஜூலை மாதம் நடந்த, தமிழருக்கு எதிரான இனக் கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழிவும் 83 கலவரத்தின் போது ஏற்பட்டன. தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒன்று கூட தப்பவில்லை. சிறிய பெட்டிக் கடை முதல், பெரும் வணிக வளாகம் வரையில், தமிழ் உரிமையாளர்களை கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக எரிக்கப் பட்டன.

தமிழ் பணக்காரர்கள் வீட்டில் வேலை செய்த, சிங்கள பணியாளர்கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள். தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிங்கள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளை எரிக்க துணை போனார்கள். இதனால் பல தமிழ் முதலாளிகள் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டனர். தலைநகர வர்த்தகத்தில் தமிழர்கள் கொண்டிருந்த நூறாண்டு கால பங்களிப்பு, ஒரு சில நாட்களில் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையின், மேற்கத்திய பாணி தேர்தல் ஜனநாயகம், தமிழின அழிப்புக்கு உறுதுணையாக அமைந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் கைகளில், தொகுதியை சேர்ந்தவர்களின், வாக்காளர் பட்டியல் காணப்பட்டது. அந்தப் பட்டியலின் படி, தமிழர்களின் வீடுகளை கண்டுபிடிப்பதும், அங்கு வாழ்ந்தவர்களை கொலை செய்வதும் இலகுவாக அமைந்திருந்தது. 

தொழில் வாய்ப்பற்ற, சிங்கள இனவெறியூட்டப் பட்ட, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த காடையர்களே தமிழர்களை தாக்கினார்கள். ஆளும்கட்சியை சேர்ந்த தொகுதி உறுப்பினர்கள், அவர்களை பின் நின்று இயக்கிக் கொண்டிருந்தனர். சிங்கள மத்திய தர வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் தமது வீடுகளில் அடைக்கலம் கோரி வந்த, நீண்ட கால தமிழ் நண்பர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். "படித்தவன் இனவாதியாக இருக்க மாட்டான்" என்ற நம்பிக்கை, அன்று பல தமிழர் மனங்களில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், 13 சிங்களப் படையினர் புலிகளின் திடீர்த் தாக்குதலில் கொல்லப் பட்ட சம்பவம், கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்திருந்தது. உண்மையில், ஆளும் ஐதேக தலைவர்கள், ஏற்கனவே தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டி இருந்தனர். அவர்களுக்கு தேவைப் பட்டது ஒரு தீப்பொறி மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்..." என்று ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அன்றைய தாக்குதலில் சுட்டவர்கள் புலிகள், பலியானவர்கள் அரச படையினர். ஆனால், தென்னிலங்கையில் அது "சிங்களவர்கள் மீதான தமிழர்களின் தாக்குதலாக" பிரச்சாரம் செய்யப் பட்டது. எல்லாவற்றையும் சிங்கள-தமிழ் இனவாத கண்ணாடி ஊடாக பார்க்கும் அரசியல், அடுத்து வந்த முப்பதாண்டு கால ஈழப்போர் கால கட்டத்திலும் தொடர்ந்திருந்தது. கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிக் கிரியைகள் நடந்த, பொரளை கனத்த மயானத்தில், நூற்றுக் கணக்கான சிங்கள இனவாதிகள் ஒன்று திரண்டிருந்தனர். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற வெறி எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தது. 

கனத்த மயானத்திற்கு அருகில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்த, நாரஹென்பிட்டிய தொடர்மாடி குடியிருப்புகளே முதலில் தாக்கப் பட்டன. அங்கு பெரும்பாலான குடியிருப்புகள், அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப் பட்டிருந்தன. முப்படைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அங்கே குடியிருந்தனர். அதனால், "பாதுகாப்பான பிரதேசமாக" கருதப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் தாக்கப் பட்டமை பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால், நாங்களும் அங்கிருந்த வீடொன்றில் தான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக, கலவரம் தொடங்குவதற்கு முன்னர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்று விட்டதால், ஒரு பேரழிவில் இருந்து மயிரிழையில் தப்பினோம். 

இதற்கு முந்திய தமிழ் ஆயுதபாணி இயக்கங்களில் தாக்குதல்களில், பொதுவாக ஒன்றிரண்டு பொலிஸ்காரர்கள் தான் கொல்லப் படுவது வழக்கம். பெருமளவு எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டமை அதுவே முதல் தடவை. தாக்குதல் நடந்த திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு போட்ட படையினர், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் காரணம் தெரியாமலே இறந்து போனார்.

யாழ் குடாநாட்டில், ஒரு சில நாட்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாக கருதப் பட்ட பொலிஸ் நிலையங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெறுமையாக இருப்பதை அறிந்த, அயலில் வாழ்ந்த தமிழர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்தனர். திடீரென, நேரக் கணிப்பு வெடிகுண்டு வெடித்ததால் சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். யாழ் குடாநாட்டில் இருந்த சிறிய பொலிஸ் நிலையங்களே விலக்கிக் கொள்ளப் பட்டன. பெரிய பொலிஸ் நிலையங்கள் பலப் படுத்தப் பட்டன. வேட்டைத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ்காரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப் பட்டன. பொலிஸ், இராணுவ வாகனங்கள் முக்கியமான தெருக்களில் மட்டுமே ரோந்து சுற்றின. 

இதனால், கிராமங்களில் படையினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு தமிழ்ப் போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். ஆர்வமுள்ளவர்களுடன் பேசி, பொதுக் கூட்டங்கள் நடத்தி, இளைஞர்களை சேர்த்தார்கள். ஈழப் போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களை சேர்த்து, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். 

83 கலவரத்திற்குப் பிறகு, இலங்கை அரச வானொலியை கேட்பதை, யாழ்ப்பாண தமிழர்கள் ஏறக்குறைய நிறுத்தி விட்டார்கள். பொய், புரட்டு, இருட்டடிப்பு காரணமாக அதன் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போனது. அதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தகவலுக்காக வெளிநாட்டு வானொலிகளை நம்பி இருந்தார்கள். இந்திய தூரதர்ஷன், பிரிட்டனின் பிபிசி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் வெரித்தாஸ் போன்ற வானொலிகளின் தமிழ்ப் பிரிவினர், மறைக்கப் பட்ட செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் அவை கேட்கப் பட்டன. அன்றாட அரசியல் உரையாடல்களும், அந்த வானொலிகள் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். 

83 ஜூலைக் கலவர சம்பவங்களை ஜூனியர் விகடன் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தது. அந்த இதழ் இலங்கைக்குள் வருவது தடை செய்யப் பட்டிருந்தது. போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதி எடுத்து விநியோகித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசியல் சஞ்சிகைகளையும், படகு மூலம் கடத்திக் கொண்டு வந்து விநியோகித்தார்கள். நிறையப் பேர் அவற்றை விரும்பி வாங்கி வாசித்தார்கள். 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 கலவரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ்ப்பாணம் சென்று வந்தார். அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் கிளைகள் இருந்தன. தமிழ் அமைப்பாளர்கள் அவற்றை நிர்வகித்து வந்தனர். 83 கலவரத்திற்கு பின்னர், யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்டது. ஈழ போராளிக் குழுக்கள் அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம் காரணமாக பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மெல்ல மெல்ல பிற அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பழம்பெரும் தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பகிரங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தேர்தல் அரசியல் மிதவாதமாகவும், ஆயுதபாணி அரசியல் தீவிரவாதமாகவும் மாறியது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திய குழுக்களை, அரச ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, அன்றைய காலத்தில் சிங்கள மக்கள் கூட, தமது அன்றாட அரசியல் உரையாடல்களில் "பயங்கரவாதிகள்" என்ற சொல்லை பாவிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர, TELO, PLOTE, EPRLF, EROS, TELA என்று ஒரு டசின் விடுதலை இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிங்கள மக்கள் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் "கொட்டியா" (புலிகள்) என்று அழைத்தனர். எந்த இயக்கம் தாக்குதல் நடத்தினாலும், அதனை புலிகளே செய்ததாக நினைத்துக் கொண்டனர். 

இதே மாதிரியான நிலைமை, தமிழ் நாட்டிலும் இருந்தது. அவர்களும் எல்லா இயக்கங்களையும் "விடுதலைப் புலிகள்" என்ற பொதுப் பெயர் கொண்டு அழைத்தனர். திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புலிகள் அமைப்பினால் நடத்தப் பட்டது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட ஜூலைக் கலவரம், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வலைகள் காரணமாக, விடுதலை இயக்கங்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்தது. இதன் விளைவாக, எல்லா இயக்கங்களும் பல்லாயிரம் போராளிகளையும், ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார்கள். 

தேசத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 ஜூலைக் கலவரத்திற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழினப் படுகொலையில் இருந்து தனது அரசையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான எதிரிகளாக இருந்த, தமிழ் ஆயுதபாணி இயக்கங்களை அடக்குவதற்காக, பெருந்தொகையான சிங்களப் படையினரை அனுப்பி வைத்தார். அந்த மாகாணங்களில், படையினரின் கண்மூடித்தனமான கொலைகள், வரைமுறையற்ற கைதுகள் தொடர்ந்தன. அதே நேரம், தென்னிலங்கையிலும் சில எதிரிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. 

ஜூலைக் கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று சில பெயர்கள் அரச ஊடகங்களில் அறிவிக்கப் பட்டன. அதனை பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழினப் படுகொலையுடன் எந்த வித சம்பந்தமுமற்ற சில கட்சிகளின் பெயர்கள் வாசிக்கப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தடை செய்யப் பட்டன. அந்தக் கட்சிகளே கலவரத்தை நடத்தியதாக, ஜே.ஆர். அறிவித்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தினார். 

ஒரு பக்கம், சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது மிலேச்சத் தனமான போர் முடுக்கி விடப் பட்டது. மறு பக்கம், அரச எதிரிகளான இடதுசாரிகள் அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். இதன் மூலம், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு கையால் ஈழப்போரை நடத்திக் கொண்டே, மறு கையால் தாராளவாத பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. தமிழ் தேசியவாதிகள், சிங்கள இடதுசாரிகள் மீது ஜே.ஆர். தொடங்கிய போரின் விளைவை, முப்பது வருடங்களுக்குப் பின்னர், தமிழ் - சிங்கள மக்கள் அறுவடை செய்கின்றனர். 

எந்த வித எதிர்ப்புமின்றி, இலங்கை மறு காலனியாதிக்கத்தை நோக்கி தள்ளப் பட்டது. தனியார்மயம் தாராளமாக நுழைவதற்கு தடையேதும் இருக்கவில்லை. ஈழப் போரானது, அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஒடுக்கி, அதி தீவிர போராட்ட சக்தியான புலிகளையும் அழித்து விட்டு ஓய்ந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த தமிழ் சமூகம், இன்றைக்கும் ஒரு பெரும் இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்கள் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜே.ஆரின். சூழ்ச்சிக்கு பலியானதை அறியாத தமிழ் வலதுசாரி தேசியவாதிகள், மேற்குலகில் இருந்து வரவிருக்கும் மீட்பருக்காக காத்திருக்கிறார்கள்.

Monday, May 07, 2012

மொழியால் பிரிந்த இலங்கையின் கிறிஸ்தவ இனம்


[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 3)

கொழும்பு நகரிற்கு வடக்கே, விமானநிலையம் போகும் வழியில் அமைந்துள்ளது வத்தளை. அது கொழும்பு மாநகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. கொழும்பில் வீடு வாங்குவதோ, அன்றில் வாடகைக்கு எடுப்பதோ அதிக செலவு பிடிக்கும் விடயம். அதற்குப் பதிலாக வத்தளையில் பெரிய வீடு கட்டுவதற்கு போதுமான இடம் மலிவாகக் கிடைக்கும். 



போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் வத்தளையில் வந்து குடியேறி விட்டார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் வசதியான வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இதனால் வத்தளை பிரதேசத்தின் சனத்தொகை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. கடந்த இருபாண்டுகளில் புதிதாக வந்து குடியேறிய தமிழர்களை விட, குறைந்தது நூறு வருடங்களாக வாழும் தமிழ்க் குடும்பங்களும் உண்டு. "வத்தளையின் பூர்வகுடிகளான" இவர்களில் ஒரு பகுதியினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்று கூறத் தயங்குவார்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தம்மை "கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

லண்டனிலும், கொழும்பிலும் "கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்த தமிழர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடல், "வழக்கமான" தமிழர்களுடன் உரையாடுவதைப் போன்று அமைந்திருக்கவில்லை. லண்டனில் வதியும் கிறிஸ்தவ இனத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஏதாவதொரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக, அவர்களது இருப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். "இலங்கை சிங்களவர்களுக்கான நாடாகி விட்டது. அதிலும் பௌத்த சிங்களவர்கள் மட்டுமே அங்கே வாழலாம்...." இவ்வாறு சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். பௌத்த-சிங்கள பேரினவாதத்தை கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் யாரும் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பது வியப்பை அளித்தது. சிங்கள அரசை எதிரியாக பார்த்தார்கள், அதே நேரம் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் யாரும் பிரிவினையை ஆதரிக்கவில்லை.

பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும், புலிகளையும் ஏற்காத, இந்த வகை தமிழர்களின் அரசியல் பின்னணி என்ன? கொழும்பில் வத்தளையில் இன்னமும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ தமிழர்களிடம் அதற்கு விளக்கம் கிடைத்தது. "முதன்முதலாக 83 கலவரத்தின் போது எமது வீடும் எரிக்கப்பட்டது... வத்தளையில் கிறிஸ்தவ குடியிருப்புகளை காடையர்கள் தாக்க மாட்டார்கள் என்று நம்பியிருந்தோம்.... ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என்று ஒரு போதும் காட்டிக் கொண்டதில்லை..." அவர்களுடன் உரையாடிய பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. 



ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர். அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக கருதலாம் என்றால், இதுவும் சாத்தியமே. இலங்கையில் கிறிஸ்தவ இன உருவாக்கத்திற்கு பல காரணிகள் உண்டு. காலனிய காலகட்டத்தில், சமூகப் படிநிலையில் வெள்ளையர்கள் மேலே இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், கலப்பின பறங்கியரும், உள்ளூர் கிறிஸ்தவர்களும் இருந்தனர். அரச பதவிகளும், சலுகைகளும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்துக்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் முன்னுக்கு வருவது சிரமமமான விடயமாக இருந்தது. அந்த சமூகங்களில் நிலப்பிரபுக்களும், வியாபாரத்தில் ஈடுபட்டோரும் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கிறிஸ்தவ தமிழர்களின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போதும் ஆங்கிலேயரின் பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே. முதலாளித்துவ, மேற்குலக சார்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் தமது நலன்கள் பாதுகாக்கப் படும் என்று நம்புகின்றனர். ஆனால், கொழும்பை அதிகம் பாதித்த, 77 அல்லது 83 கலவரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையில் நடத்தப்பட்டவை. நான் இது பற்றிய பேச்சை எடுத்த பொழுது, அதனை அவர்கள் கேட்க விரும்பவில்லை. கதையை வேறு திசைக்கு திருப்பினார்கள்.

நீர்கொழும்பில் இருந்து மொரட்டுவ வரையிலான, கொழும்பை உள்ளடக்கிய மேல்மாகாணம் "கிறிஸ்தவ பெல்ட்" என்று அழைக்கப் படுகின்றது. தேர்தல் வரும் காலங்களில், இந்தப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும். இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ள மாகாணமும் அது தான். ஆகவே, தமிழ் கிறிஸ்தவர்களை விட, சிங்கள கிறிஸ்தவர்களே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். இலங்கைக் கிறிஸ்தவர்கள், சிங்களவர், தமிழர், என்று மொழி அடிப்படையில் பிரிந்தனர். அதாவது சிங்கள-கிறிஸ்தவ மேட்டுக்குடியினர், பௌத்த சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சிங்கள பேரினவாத கருத்தியலை உருவாக்கினார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் மேலைத்தேய விசுவாசம் காரணமாக தேசிய அரசியலை புறக்கணித்தார்கள். தமிழ்த் தேசியம், மிகத் தாமதாகத் தான், இலங்கை அரசியல் அரங்கில் நுழைந்தது.

வத்தளையில் "தமிழ் பேசும் கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்தவர்களின் வீட்டில் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். விருந்து முடிந்த பின்னர் சாவகாசமாக உரையாடும் பொழுது, இனப்பிரச்சினை குறித்து அவர்கள் கருத்தை அறிய விரும்பினேன்.
"வேலை வேண்டுமானால் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவே பிரச்சினையின் மூலகாரணம்." என்றார்கள்.
"சிங்களத்திற்கு பதிலாக, அல்லது ஈழப் பிரதேசத்திலாவது தமிழை ஆட்சி மொழியாக்கினால் பிரச்சினை தீர்ந்திருக்குமா?" என்று கேட்டேன்.
"இல்லை, இல்லை... முன்பிருந்ததைப் போல ஆங்கிலமே அரச கரும மொழியாக தொடர்ந்திருக்க வேண்டும்." என்று பதிலளித்தார்கள்.
ஈழம் கோரப்படும் பிரதேசங்களில், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழே அலுவலக அல்லது கல்வி மொழியாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். தமிழில் படிப்பதையும், வேலை செய்வதையும் தரக்குறைவாக பார்ப்பது, அவர்களது பேச்சில் தெரிந்தது. இவர்கள் தமிழீழம் கேட்டால், ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்கி இருப்பார்கள்.


குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். "ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம்" என்று குறிப்பிடுமளவிற்கு இலக்கண சுத்தமானது. "சிறு வயதில் தப்பித் தவறி தமிழில் பேசினால் அம்மா அடிப்பார் ...." என்று கூறினார், தனியார் நிறுவனம் ஒன்றில் காரியதரிசியாக பணியாற்றும் பெண். ஐரோப்பாவில் எனது வேலை குறித்தும் விசாரித்தார்கள். "நெதர்லாந்திலும் அலுவலகங்களில் ஆங்கில மொழி தானே பாவிப்பார்கள்?" என்று அப்பாவித் தனமாக என்னைக் கேட்டார். அவர்களது அரசியல் பாதை தமிழ்த் தேசியமல்ல, மாறாக ஆங்கில சர்வதேசியம், என்பதை தெளிவு படுத்தினார்கள். அவர்களின் குடும்பத்தில் பலர் கலப்புத் திருமணம் செய்திருந்தனர். சிங்கள முதலியார்கள், இஸ்லாமிய மூர்கள் ஆகிய சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களுடன் தான் உறவு கொண்டாடினார்கள். அவர்களுக்கு சாதியோ, அன்றில் இனமோ முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் பூர்ஷுவாத் தன்மை கொண்ட வர்க்க மனப்பான்மை காணப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, வர்க்கம் என்ற சொல்லையே கேள்விப் படாதது போல காட்டிக் கொண்டார்கள்.

கொழும்பின் மத்திய பகுதியை அண்மித்து தான் பணக்கார வட்டாரமான கறுவாத் தோட்டம் இருக்கிறது. இலங்கையின் பெரும்புள்ளிகளும், அரசியல் தலைவர்களும் தமது ஆடம்பர வாசஸ்தலங்களை அங்கே அமைத்துள்ளனர். மேட்டுக்குடியினர் வாழும் பிரதேசம் என்பதால், அதியுயர் பாதுகாப்பு வலையமாக, எப்போதும் போலிஸ் காவல் இருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு, சில மாத காலம் அந்த பகுதிக்கு அருகில் வசித்திருக்கிறேன். "(காலஞ் சென்ற) ஜனாதிபதி ஜே.ஆரின் வாசஸ்தலம் அருகில் இருப்பதால், நாம் பாதுகாப்பாக வாழலாம்," என்று புதிதாக வருபவர்களிடம் கூறி தம்பட்டம் அடிப்போம். கறுவாத் தோட்டம் பகுதி முடியும் இடத்தில் பொரளை ஆரம்பமாகின்றது. பொரளை சந்தியை தொட்டுச் செல்லும் சாலையின் இரண்டு வர்க்கங்களை பிரிப்பதை நேரடியாகக் காணலாம். சாலையின் ஒரு பக்கம் மேட்டுக்குடியினரின் ஆடம்பர வீடுகள், மறுபக்கம் அடித்தட்டு மக்களின் சேரிகள். இரண்டுக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. கொழும்பின் வேறு பிரதேசங்களை விட, பொரளையில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு ஆதரவு அதிகம். அந்த வட்டாரத்தில் பெரும்பான்மையானோர் உழைக்கும் மக்கள். பொரளையில் தான் பிரசித்தி பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ளது. கொழும்பின் பெரிய சுடுகாடான "கனத்த மயானம்" இருப்பதும் அந்தப் பிரதேசத்தில் தான்.

உதாரணத்திற்கு, இலங்கை ஒரு லத்தீன் அமெரிக்க நாடாகவிருந்தால், ஏழைகளும், பணக்காரர்களும் இவ்வாறு அருகருகே வசிப்பது, வர்க்கப் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கும். இலங்கையில் அவ்வாறு எதுவும் நடக்காததற்கு காரணம், சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மனதில் ஊறியுள்ள இனவெறி. இலங்கை அரசியல்வாதிகள், தீர்க்கதரிசனத்துடன் இனவாதத் தீயை மூட்டி விட்டிருந்தார்கள். பொரளையில் வாழும் உழைக்கும் மக்களின் வழக்கமான மேட்டுக்குடியினர் மீதான கோபத்தை, தமிழர்கள் மீது திருப்பி விட்டார்கள். இனக்கலவரம் வெடிக்கும் காலங்களில், பொரளை சேரியை சேர்ந்த காடையர்கள் சில கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தமிழ்க் குடியிருப்புகளை தாக்குவார்கள். கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணம் கிடைப்பது தான் கஷ்டம். அதனை வழிநடத்துவது இலகு.

கொழும்பு நகரில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற விபரத்தை, தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரே எடுத்து தருவார். அந்தப் பட்டியல் கட்சிக்கு விசுவாசமான தாதாக்களுக்கு கைமாற்றப்படும். தாதாக்கள் தமது அடியாட்படையுடன் சென்று தமிழர்களைத் தாக்குவார்கள். கண்ணில் கண்ட தமிழர்களை வெட்டிக் கொன்று, பெண்களை மானபங்கப் படுத்தி, வீடுகளை சூறையாடும் படலம் ஒரு சில நாட்கள் நீடிக்கும். அந்தக் கொடுமைகளை போலிசும் கண்டு கொள்ளாது. இந்தியாவில், குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும் இதே பாணியில் தான் நடைபெற்றது. கொழும்பு கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

83 ம் ஆண்டு ஜூலை மாதம், கனத்த மயானத்தில் 13 இராணுவவீரர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்கள் அவர்கள். அது ஒரு அரசுக்கெதிரான ஆயுதக்குழுவின் செயலாக இருந்த போதிலும், அனைத்து தமிழர்கள் மீதும் பழி விழுந்தது. சிங்களவர்களின் அனுதாபத்தை தமிழர்கள் மேலான துவேஷமாக மாற்றியதில், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு கணிசமான பங்குண்டு. கனத்த மயானத்தில் இருந்து கிளம்பிய காடையர் கூட்டம், அருகில் இருந்த நாரஹென்பிட்டிய தொகுதியை முதலில் தாக்கியது. நாரஹென்பிட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், அருகிலும் நிறையத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, அரசினால் ஒதுக்கப் பட்டிருந்தன.

அவ்வாறான இடத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர் என்றால், மற்ற இடங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. பொரளையில் கடும்பாதுகாப்புக்கு பெயர் போன வெலிக்கடை சிறைச்சாலையில், தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது. தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் சம்பந்தப்பட்ட, பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நபர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வகையில், அரசே அந்தக் கொலைகளை திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. மரணதண்டனை நிறைவேற்ற முடியாத "ஜனநாயக அரசு", சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்த்துக் கட்டியிருக்கலாம். அர்ஜுனின் சினிமாப் படங்களில், தீவிரவாத வில்லன்களை நீதிக்கு புறம்பாக சுட்டுக் கொல்லும் தத்துவம், வெலிக்கடையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில், எனது பெற்றோரின் ஊரைச் சேர்ந்த பணக்கார குடும்பம் ஒன்றும் அந்தத் தொகுதியில் வசித்து வந்தது. கலவரத்தின் போது, அந்தக் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைச் செய்தது வேறு யாருமல்ல. அந்த வீட்டில் வேலை செய்த சிங்கள பணியாளும், அவனது நண்பர்களும். பல சிங்கள அடித்தட்டு வர்க்க மக்கள், தமிழர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து செல்வம் சேர்த்துள்ளனர். சிங்கள ஏழைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழும் அபாயத்தை, சிங்கள மேட்டுக்குடி வர்க்கம் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது. "தமிழர்கள் எல்லோரும் செல்வந்தர்கள். அதனால் தான் சிங்களவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர். தமிழர்கள் எல்லோரும் பதவிகளில் இருக்கின்றனர். அதனால் தான் சிங்களவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை." இத்தகைய தவறான பிரச்சாரங்கள், கல்வியறிவற்ற சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இலகுவாக ஈடுபட்டது. தமிழ்ப் பிரதேசங்களிலும் அது போன்ற மனப்பான்மை நிலவுவதை பிற்காலத்தில் தேர்ந்து கொண்டேன். "அரசு சிங்களவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது... அவர்களில் ஏழைகளே கிடையாது...." என்பன போன்ற தவறான கருத்துகளை தமிழ்த் தேசியவாதிகள் பரப்பி விட்டிருந்தனர்.

கொழும்பு நகரில் தமிழ்த் தேசிய கருத்தியல் கருக் கொண்ட, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப்படும், கொழும்பு நகரின் வெள்ளவத்தை தொகுதிக்குள் அடுத்து நுழைவோம். வெள்ளவத்தையில் அழகிய கடற்கரையோரம், சொகுசு பங்களாவில் வாழும் பாக்கியம் கிட்டியவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது அதிகம் சம்பாதிப்போருக்கு மட்டுமே இயலுமான ஒன்று. ஆரம்ப காலங்களில் "பரம்பரைப் பணக்காரர்கள்" மட்டுமே வாழ்ந்து வந்தனர். போருக்குப் பின்னரான இடப்பெயர்வு காரணமாக, வெளிநாட்டுக் காசில் திடீர்ப் பணக்காரர் ஆனவர்களும் அங்கே குடியேறினார்கள். தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோரும் வெள்ளவத்தையை "இரண்டாவது தாயகமாக்கிக்" கொண்டுள்ளனர். அதனால் தான் அதற்கு குட்டி யாழ்ப்பாணம் என்று பெயரிட்டனர்.

யாழ்ப்பாணத் தமிழர்களுடன், அவர்களது தனித்துவமான கலாச்சாரமும் புலம்பெயர்ந்து விட்டது. யாழ் நகரில் தெரு மூலைக்கு ஒன்றாக காணப்படும் "டியூட்டரிகளும்" வெள்ளவத்தையில் பெருகி விட்டன. பனங்கள்ளில் இருந்து புழுக்கொடியல் வரை இறக்குமதியாகின. எனது வாழ்நாளில் கண்ட மாற்றங்கள் காரணமாக, ஒரு கேள்வி என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. இனக்கலவரங்கள் யாவும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நோக்கம் கொண்டவை. முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போர், தமிழர்கள் பிரிந்து செல்வதை வலியுறுத்திக் கொண்டிருந்தது. முரண்நகையாக, ஈழப்போரின் பின்னர் பெருந்தொகையான தமிழர்கள் கொழும்பு நகரில் வந்து குடியேறிக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கிருந்த படியே "தமிழீழமே தீர்வு!" என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அப்போதே நாடு கடந்த தமிழீழம் என்ற கருத்தியல் தோன்றி விட்டது!

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:

1 இலங்கை என்ற இழந்த சொர்க்கம்
2 இனம் மாறும் தமிழர்கள் !

Wednesday, December 07, 2011

இனம் மாறும் தமிழர்கள் !

[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 2)

கொழும்பு நகரின் மத்தியை அண்மித்துள்ளது கொட்டாஞ்சேனை. சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கொட்டஹென என்று அழைக்கப் படுகின்றது. இன்று கொழும்பில் வாழும் தமிழர்கள் பலர், அந்தப் பெயரை அதிகமாக பாவித்து வருகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாழ்ந்த காலத்தில், "கொட்டாஞ்சேனை" என்ற தமிழ்ப் பெயர் எமது நாவில் அடிக்கடி தவழும். கொழும்பு நகரில், தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் கொட்டாஞ்சேனையும் அடங்கும். தென் கொழும்பில் மத்தியதர வர்க்க குடியிருப்புகளை அதிகமாக கொண்ட வெள்ளவத்தையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. வெள்ளவத்தையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதற்கு மாறாக, கொட்டாஞ்சேனையில் இந்திய வம்சாவழித் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

அவர்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்திய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், நகைக்கடை முதலாளிகள், போன்ற பணக்கார இந்தியத் தமிழர்களும் அங்கே தான் வசிக்கின்றனர். அதே நேரம், அந்தப் பிரதேசத்தை அண்மித்துள்ள கொழும்புத் துறைமுகத்தில் கூலித் தொழில் செய்ய வந்த, வறிய இந்தியத் தமிழர்களும் பெருமளவில் வாழ்கின்றனர். கொட்டாஞ்சேனையில் எந்த தெருவில் நுழைந்து, எதிரில் வரும் எவருடனும் தமிழில் பேசலாம். தமிழ் கடைகள், உணவு விடுதிகள் மட்டுமல்ல, தினசரி தமிழ்த் திரைப்படம் மட்டுமே காண்பிக்கும் மூன்று திரையரங்குகள் உள்ளன. இந்துக் கோயில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, "அற்புதம் நிகழ்ந்த இடமாக" கருதப்படும் அந்தோனியார் தேவாலயத்திலும் தமிழ்க் குரல்கள் ஒலிக்கும்.

கொட்டாஞ்சேனையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழி பேசும் மக்கள் என்பதால், அங்கிருக்கும் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டதில் வியப்பில்லை. வசதியானவர்கள் தமது பிள்ளைகளை கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் கான்வென்ட் பாடசாலைகளுக்கு அனுப்புவார்கள். கீழ் மத்தியதர, உழைக்கும் வர்க்க மக்கள் தமது பிள்ளைகளை, அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். நானும் "கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயத்தில்" தான் ஆரம்பக் கல்வி கற்றேன். பொதுவாக மிஷனரி, அரசுப் பாடசாலைகள் இரண்டிலும், தமிழ் மொழி மூலம் கல்வி அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சில மிஷனரி பாடசாலைகள் அப்போதே சிங்கள மொழி வாரிக் கல்வியை புகுத்தத் தொடங்கி விட்டன.

பல வருடங்களுக்கு பிறகு, கொட்டாஞ்சேனை மிஷனரிப் பாடசாலைகளில் படித்த நடுத்தர வர்க்க தமிழர்கள் பலரை, இங்கிலாந்தில் நான் சந்தித்தேன். அவர்களில் பலர் பாடசாலைக் கல்வி முழுவதும் சிங்கள மொழி மூலம் படித்திருந்தனர். அவர்களின் பெற்றோர் முதலாளிகளாகவும், வியாபாரிகளாகவும் இருந்ததனர். தமது பிள்ளைகள் "அந்தஸ்தில் உயர்ந்த" மிஷனரிப் பாடசாலையில், சிங்கள மொழியில் கல்வி புகட்டுவதை விரும்பினார்கள். தாம் தமிழில் படிக்க முடியவில்லையே என்ற கவலை, பிள்ளைகளுக்கும் இல்லை. அதற்கு மாறாக, அரசு பள்ளிக்கூடமான மகா வித்தியாலயத்தில் தமிழில் படித்த என்னைப் போன்றவர்களை தரக்குறைவாக கருதுவதை உணர முடிந்தது.

இலங்கையில் இனப்பிரச்சினையின் (மொழிப் பிரச்சினையின்?) நதிமூலம் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கொழும்பில் தொழில் புரிந்த நடுத்தர வர்க்க தமிழர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்க மறுத்து போராடினார்கள். அதே நேரம், அவர்களில் ஒரு பிரிவினரும், இந்திய வம்சாவழி நடுத்தர வர்க்கமும், சிங்கள மொழி மூல கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டது. அதற்குக் காரணம் அவர்களது வர்த்தக அபிலாஷைகள். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியில், தமது பிள்ளைகள் பாண்டித்தியம் பெறுவது, எதிர்கால வர்த்தக நோக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினார்கள். (மதத்தால் கத்தோலிக்கர்கள் என்றால் "தமிழ் இனவுணர்வு" அவர்களுக்கு அறவே கிடையாது.) இருந்த போதிலும், இனக்கலவரங்களின் போது, அவர்களது வீடுகள், வர்த்தக ஸ்தாபனங்கள், சிங்களக் காடையரால் தாக்கப்பட்டன.

இந்தியாவில், குஜராத்தில் முஸ்லிம் விரோத கலவரம் நடந்த அதே பாணியில் தான், கொழும்பில் தமிழர் விரோத கலவரங்கள் இடம்பெற்றன. தமிழர்களைக் கொல்வதற்கு, சொத்துக்களை நாசமாக்குவதற்கு சிங்கள உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப் பட்டனர். சிங்கள அரசியல்வாதிகளும், முதலாளிகளும் பின்னுக்கு நின்று அவர்களை ஏவி விட்டனர். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, தமிழர்கள் மீதான இனத்துவேஷத்தின் வெளிப்பாடாகத் தெரியும். உண்மையில் தமிழ் மேட்டுக்குடியினரின், வசதியான மத்தியதர வர்க்கத்தின் செல்வத்தை கொள்ளையடிப்பது உள்நோக்கமாக இருந்தது. அவர்களின் வர்த்தகத்தை சிங்கள முதலாளிகள் அபகரித்துக் கொண்டனர். அவர்களின் பதவிகள், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரிடம் போய்ச் சேர்ந்தது. இலங்கையில் இவ்வாறு தான் சிங்கள மேலாண்மை நிலை நிறுத்தப் பட்டது. வெளிப்பார்வைக்கு அது இனப்பிரச்சினை. ஆழமாக ஆராய்ந்தால், பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்படுத்தல்.

மேற்குறிப்பிட்ட விபரங்களை தந்தவர்கள் எனது கொட்டாஞ்சேனை நண்பர்கள். அவர்களுக்கு தமக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு, அரசியலை பகுத்துணரும் தன்மை இருக்கவில்லை. சராசரி தமிழ்த் தேசியவாதிகளைப் போன்று, சிங்கள அரசின் கொடுங்கோன்மை பற்றி எல்லாம் திட்டித் தீர்த்தாலும், தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. வர்த்தகத்தை மட்டுமே மையப் படுத்திய வாதப் பிரகாரம், தமிழீழம் கிடைத்தால் அவர்கள் இழக்கப் போவது அதிகமாகவிருந்தது. மேற்கத்திய சார்பு, முதலாளித்துவ நலன் பேணும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள்.

கொழும்பு வாழ் தமிழ் சமூகம், இன்றைக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவுத் தளமாகவே உள்ளது. ஐ.தே.க. ஆதரவு அரசியல், வட கொழும்பில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களையும், தென் கொழும்பு யாழ்ப்பாணத் தமிழர்களையும் ஒன்று சேர்க்கின்றது. தமிழ் தேசியம், இன்று கொழும்பு வாழ் தமிழர்களையும் வசீகரித்துள்ளது. அதற்குப் பின்னால், ஐ.தே.க. வின் நுண்ணரசியல் இழையோடியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இது குறித்து பின்னர் விரிவாக ஆராயலாம். அதற்கு முன்னர், இனக்கலவரத்தின் பின்னர் கொழும்பு தமிழரை பாதித்த இனப்பிரச்சினைகளின் கூறுகளை சிறிது பார்க்கலாம்.

இனப்பிரச்சினை எங்கே இருக்கின்றது என்பதை, நான் படித்த பாடசாலைக்கு பழைய மாணவனாக சென்ற பொழுது உணர முடிந்தது. கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலை, வீதியின் இரு மருங்கிலும் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. பாடசாலையின் பெரும் பகுதி, சிங்களப் பாடசாலையாக மாறி விட்டிருந்தது. நாங்கள் விளையாடிக் களித்த மைதானத்தின் ஒரு பகுதியில் புத்த விகாரை எழுப்பப் பட்டிருந்தது. நான் படித்த காலத்தில் அப்படி எதுவும் இருக்கவில்லை. ஒரு கணம், சரியான இடத்திற்கு வந்திருக்கிறேனா? என்ற சந்தேகம் எழுந்தது. பாடசாலையின் உள்ளே சென்ற போது, எங்களை வரவேற்ற அதிபர் ஒரு சிங்களவர். நாம் கொண்டு சென்ற கமெராவினால் படம் எடுக்க விரும்பிய போது தடுத்தாட்கொண்டார். " தமிழர்கள் என்றாலே கெட்டவர்களாக இருப்பார்கள்," என்ற நினைப்பு அவர் மனதில் வந்திருக்கலாம்.

வெளியே வந்து, சுற்று முற்றும் தலையைத் திருப்பிப் பார்த்தேன். வலது பக்க கட்டிடங்களின் முன்னால் இருந்த அறிவுப்புப் பலகையில் "இந்து பாடசாலை" என்று எழுதப் பட்டிருந்தது. அருகிலேயே புதிதாக ஒரு கோயில். குழப்பம் மேலும் அதிகரித்தது. முன்பு கொட்டாஞ்சேனையில் சிங்களவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நான் படித்த காலத்தில், அந்தப் பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர்: "கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை". அன்று அது ஒரு மதச்சார்பற்ற பாடசாலை. இன்று அது, "பௌத்த பாடசாலை", "இந்துப் பாடசாலை" என்று இரண்டாக பிளவுபட்டு விட்டது. இனப்பிரச்சினை மொழி சார்ந்தது மட்டுமல்ல, மதம் சார்ந்ததும் தான். "இந்துப் பாடசாலை" என்று மத அடையாளத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு, "பௌத்த பாடசாலையை" எதிர்க்கும் யோக்கியதை கிடையாது. சிறுபான்மை மதங்களுக்கு சலுகைகள் கொடுத்து வாயை மூட வைத்திருப்பதால் தான், பௌத்த-சிங்கள மேலாதிக்கம் ஆட்சி செய்கின்றது.

கொட்டாஞ்சேனையில் புதிதாக முளைத்த கிறிஸ்தவ சபைகளின் சுவரொட்டிகள் பரவலாக காணப்பட்டன. இதுவும் இருபது ஆண்டுகளுக்குள் நான் கண்ட மாற்றம். முன்பெல்லாம் "மரபுவழி மதங்களை" சேர்ந்தோரே அதிகமாக இருந்தனர். தற்போது வெளிநாட்டு நிதியில் இயங்கும் கிறிஸ்தவ சபைகள் பெருகி வருகின்றன. பௌத்தம், இந்து போன்ற பெரும்பான்மை மதங்களை சேர்ந்தோரே, "புதிதாகப் பிறந்த கிறிஸ்தவர்களாக" ஞானஸ்நானம் பெற்று வருகின்றனர். இவர்களில் 99 % ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க மனப்பான்மை கொண்ட தமிழர்கள், "மதம் மாறிகளை" பரிகசிப்பது வழக்கம். "சாப்பாட்டுக்கு வழியற்றவர்கள்... பணம் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மதம் மாறுகிறார்கள்..." இவ்வாறெல்லாம் இளக்காரமாக பேசி வந்தனர். இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், தனியொருவனுக்கு உணவளிக்க வக்கற்ற மதத்தால் என்ன பிரயோசனம்? மேலும், இந்து மதத்தில் நிலவும் சாதிய கட்டுப்பாடுகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. காலங்காலமாக, உயர்சாதியினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செல்வம்,வசதி,வாய்ப்பு கிடைப்பது எப்படி? ஒரு சாதிய சமூகத்தில் முன்னுக்கு வர வாய்ப்பற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறினால் வாழ்வு வளமாகும் என்பது நப்பாசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவுக்கெட்டிய வரையில் தெரிந்த வழி அது தான். அவ்வாறு மதம் மாறியிருந்த, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிழைக்கச் சென்றவர்களை சந்தித்திருக்கிறேன்.

(தொடரும் )


தொடரின் முதலாவது பகுதி:
1.
இலங்கை என்ற இழந்த சொர்க்கம்

Wednesday, July 28, 2010

ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை! முருகனின் துரோகம்!!

கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகை அசினின் யாழ்ப்பாண விஜயத்திற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழருக்கு துரோகம் செய்த அசின் மீதான கண்டன அறிக்கைகள் நாலா பக்கமும் இருந்து பறந்து வந்தன. ஆனால் முருகப் பெருமான் மீது மட்டும் எந்தவொரு கண்டன அறிக்கையும் காணோம். "தமிழர்கள் முருகனின் திருவிழாக்களை பகிஷ்கரிக்க வேண்டும். பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு செல்லக்கூடாது." என்று தடையுத்தரவு எதுவும் வரவில்லை. இது கடவுளோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்று பயந்து ஒதுங்கி விட்டார்களா?

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து இப்போது தான் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் முருகனுக்கு இந்த கோலாகலமான ஆடி வேல் திருவிழா தேவையா? அதுவும் யுத்தம் காரணமாக கடந்த 15 வருடங்களுக்காக தடைப் பட்டிருந்த திருவிழா அது. கந்தன் ரத பவனி வரும் பாதை கொழும்பின் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி திருவிழா தடுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தலைமையகம், மத்திய வங்கி, அமைச்சகங்கள், தூதுவராலயங்கள் ஆகியனவற்றைக் கொண்ட கொழும்பின் இதயப் பகுதி என்பதால் அத்தனை கெடுபிடி. 15 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றின் பின்னர் தான் ஆடி வேல் ஊர்வலம் தடுக்கப்பட்டது. இருப்பினும் வன்னிப் பேரவலம் இடம்பெற்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த வருடம் ஆடி வேல் திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. தனது திருவிழா மீண்டும் நடப்பதற்கு நன்றிக்கடனாக, முருகப்பெருமான் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்ததை, தமிழ்த் தேசியக் காவலர்கள் எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள்?

"ஆடி வேல் இரதத்தில் பவனி வந்தது ஒரு வெண்கலச் சிலை." என்று ஒரு நாஸ்திகன் கூறலாம், ஆனால் இந்து மதத்தை நம்பும் தமிழர்களுக்கு முருகன் எல்லாம் வல்ல இறைவன். முருகனின் பெயரில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்த கோயில் தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் இதே இந்துக்களின் மதிப்புக்குரியவர்கள். தமிழ் தேசியவாதிகள் முருகன் என்ற கடவுளை பகைத்துக் கொள்ள விரும்பாதிருக்கலாம். (மயில் மீதேறி வந்து வேலாயுதத்தை வீசி விட்டால்? நமக்கேன் வம்பு.) ஆனால் தர்மகர்த்தாக்கள் என்ற மனிதர்களை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கலாம். ஆலய தர்மகர்த்தாக்களும், ஆடி வேல் திருவிழாவுக்கு நிதி வழங்குவதும் பிரபல தமிழ் வர்த்தகப் புள்ளிகள். கொழும்பு நகரில் நகைக் கடைகளின் வீதியான செட்டித் தெரு முதலாளிகள். கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருந்து வந்து நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் செட்டியார்கள். பலருக்கு கொழும்பில் மட்டுமல்ல சென்னையிலும் கடைகள் இருக்கின்றன.

செட்டித்தெருவில் நகைக் கடையில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் கூறினார். ஆடி வேல் திருவிழா செலவுகளுக்காக அனைத்துக் கடைகளிலும் நிதி சேர்க்கிறார்கள். நகை ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுக்கும் சிறு தொழில் முனைவர் கூட குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்கிறார். பெரிய முதலாளிகள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அந்த தெருவில் மொத்தம் ஆயிரம் கடைகளுக்கு குறையாமல் இருக்கும். ஒரு திருவிழாவுக்கு மட்டும் எவ்வளவு பணம் வசூலாகி இருக்கும் என்று நீங்களே கணக்குப் பாருங்கள். இதற்கிடையே ஆடி வேல் திருவிழாவை "உத்தியோகபூர்வமாக" பொறுப்பெடுத்து நடத்தும் சம்மாங்கோடு சிறி கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் வருமானம் தனியானது.

ஆடி வேல் திருவிழா இலங்கைத் தீவின் பழமை வாய்ந்த பாரம்பரிய விழாக்களில் ஒன்று. 1874 தொடக்கம் அது நகைக்கடை முதலாளிகளின் செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை விட புடவை வியாபாரம், இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தமிழ் முதலாளிகளும் ஆடி வேல் திருவிழாவுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். அதற்கு சாட்சியமாக வீரகேசரி பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமும் கொடுத்து விடுகின்றனர். சில நேரம் தமது சாதி அடையாளத்தைக் காட்டியே விளம்பரம் செய்கின்றனர். காமராஜரின் பிறந்த நாளை இலங்கையில் வர்த்தகம் செய்யும் நாடார் சமூகத்தினர் நினைவு கூர்வது ஒரு உதாரணம். இந்திய முதலாளிகள், இலங்கையில் நகை வியாபாரத்தில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய புடவை வகைகள், இரும்பு, உலோகம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்து விற்பதிலும் அவர்களின் ஆதிக்கம் தான். கடந்த 30 வருட காலமாக ஓயாத போர், அவர்களின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருந்தது. தற்போது தமது வணிக சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க தடையேதும் இல்லை என்ற சந்தோஷத்தில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தியிருப்பார்கள்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் தமிழ் தேசியவாதிகளின் வெற்று அறிக்கைப் போர்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கருதும் எல்லோரையும் எதிர்ப்பார்கள், தமிழ் முதலாளிகளைத் தவிர. கூலிக்கு மாரடிக்கும் நடிகர்கள் இலங்கை செல்லக் கூடாது என்று "பத்வா" விதிப்பார்கள். ஆனால் பகிரங்கமாக இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் இந்திய/தமிழ் முதலாளிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தமிழ் தேசியவாதிகள் உண்மையிலேயே இலங்கை அரசை கவிழ்க்க விரும்பினால் வேறொன்றும் செய்ய வேண்டாம். இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.

Friday, October 16, 2009

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ் ஊடகங்கள் வர்க்க பாசத்தால், அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இலங்கையில் "புதிய பூமி" மாதப் பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டுப் பணியாளர் எனும் இனிப்பு

'லயங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. எங்களால் நல்ல உணவையோ உடையையோ கொடுக்க முடிவதில்லை. நன்கு உண்டு உடுத்தாவது இருக்கட்டும்" என்று சொல்லிச் சொல்லியே தான் மலையகப் பெற்றோர்களில் கணிசமானோர் அவர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புகின்றனர். அவ்வாறு வீட்டு வேலைகளுக்காகச் செல்வோர் உழைப்புச் சுரண்டலுக்கு மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தல்கட்கும் மன உளைச்சல்கட்கும் ஆளாகின்றனர். அவர்களில் வருடாந்தம் பலர் அகால மரணமான செய்திக ளையும் கேட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ம் திகதி இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கழிவு நீர் கால்வாயில் காணப்பட்டன. அவை லக்~பான தோட்டப் பிரிவைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள். அவர்கள் 'வீட்டுப் பணியாளர்களாக" கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்கள். நல்ல உணவை உண்ணவும் நல்ல உடையை உடுக்கவும் சென்றவர்கள். அதனாலேயே கழிவு நீரில் சடலமாக மிதந்தவர்கள்.

அதுமட்டுமல்ல, இறந்த பிறகு அவர்களுக்கு கௌரவப் பட்டமும் கொடுக்கப்பட்டது: அது தன்னினச் சேர்க்கையாளர்கள். ஜீவராணி (13 வயது) சுமதி (14 வயது) ஆகிய சிறுமிகள் வீட்டுப் பணிக்குச் சென்ற இடத்தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் அதற்கு இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் கழிவு நீர்க் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அவர்களின் எஜமானர்கள் கூறுகின்றனர். வீட்டு வேலைக்காகச் சென்றவர்கள் சடலமாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது முதலாவது தடைவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல. 14 வயதானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் சொல்லுகிற போதிலும் வீட்டு வேலைக்காக 14 வயதுக்கு குறைந்தவர்களும் அமர்த்தப் படுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுங் கூட, வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் பாதுகாப்பு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பொதுவாக வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் தொழிற் சட்டங்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டவர்களாகவோ அவற்றின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லை. இந் நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் நிலை மிகவும் மோசமானது. மலையகச் சிறார்கள் நிலை பரிதாபகரமானது.

அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சுமதி, ஜீவராணி ஆகியோரை அதே தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் கொழும்புக்கு கொண்டு சென்று 'ரணா ஏஜன்சி" எனும் வீட்டு வேலைக்களுக்கு சிறுவர்களை வழங்கும் முகவர் நிலையத்தில் ஒப்படைக்க அந் நிலையம் அவர்களை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. அத் தோட்டத்தைச் சேர்ந்த தரகருக்கு ஒருவரை வேலைக்கு வழங்கும் போது மூவாயிரம் கொடுக்கப் படுவதாகவும் ரணா ஏஜன்சி ஒருவரை வேலைக்கு கொடுக்கும் போது எஜமானர்களிடமிருந்து ரூபா 10,000 பெற்றுக் கொள்வதாகவும் தெரிய வருகிறது. இந்த ரணா ஏஜன்சி தோட்டங்கள் தோறும் தரகர்களை வைத்திருக்கிறார்கள். அந்தத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியே வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மரண விசாரணை நடத்தும் போது பெற்றோர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தையடுத்து ஆகஸ்ட் 17ந் திகதி புதைக்கப்பட்ட சடலங்கள் ஆகஸ்ட் 27ந் திகதி தோண்டி எடுக்கப்பட்டன. அவை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட 1வது பிரேத பரிசோதனைகள் அறிக்கையின் சடலங்கள் உடல்களில் காயங்கள் இருக்கவில்லை என்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் நீரில் மூழ்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் சடலங்களை அடையாளங் காணும் போது உடலில் காயங்களைக் கண்டதாக சிறுமிகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமதி என்ற சிறுமி எழுதியதாக காட்டப்படுகின்ற கடிதத்தில் அவர்கள் இருவரின் இறப்புக்கும் எஜமானர்களும் எஜமானிகளும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது. இக் கையெழுத்து சுமதி உடையது அல்ல என்று சுமதியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

உண்மை எவ்வாறு இருந்த போதிலும் மரண விசாரணைகளில் அச் சிறுமிகளின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு சிறுமிகளின் மரணங்கள் மலையகத்தை உலுக்கியுள்ளன. சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவது பற்றி சிந்திக்க வைத்துள்ளன எனலாம்.

சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இச் சம்பவத்தை தங்கள் தங்கள் அரசியல் இருப்பிற்கான பிரசாரமாகப் பயன்படுத்தினர். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்திட்ட அறிக்கைகளை தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அப்பால் நேர்மையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

'மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் மலையக தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் பகிரங்க கருத்தரங்கை 'புதிய மலையகம்", செம்ரெம்பர் 6ந் திகதி நடத்தியது. அதில் தொழிலாளர்களின் பிரசன்னம் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. ஆனால் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் சில தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிவிட்டுச் சென்று விட்டனர். கருத்தரங்கின் முடிவுவரை இருந்தவர்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்தனர்.

18வயதுக் குறைந்த மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற பண்பாட்டு ரீதியான முடிவுகளை எடுத்தனர். எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு சிறார்களை அனுப்புவதில்லை என்று மலையகம் எங்கும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களைப் 'புதிய மலையகம்" ஏனைய அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதே வேளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தொழிற் சட்ட ரீதியாகவும் விசேட ஏற்பாடுகளின் ஊடாகவும் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப் பட்டது.

சம்பள உயர்வு வேண்டி ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அந்த இரண்டு சிறுமிகளின் மரணம் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் அளவுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதையே வலியுறுத்தி வேண்டியுள்ளது.

எமது நாட்டுச் சூழலில் வீட்டு வேலை என்பது அடிமை வேலையே 'வீட்டுப் பணியாளர்கள்" என்ற அழகு தமிழில் அழைக்கப்பட்;டாலும் வீட்டு வேலை செய்வோர் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதன் மூலம் எதிர்கால அடிமைகளை உருவாக்கவே துணைபோகின்றோம்.

200 வருட மலையக மக்களின் அடிமை வாழ்வு தகர்க்கப்பட போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மேலும் மேலும் அடிமைகளை பயிற்றுவிக்கத் துணை போவதைத் தவிர்ப்போம். சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்தாது இருப்போம்.

(நன்றி: புதிய பூமி, செப்டம்பர் 2009 )

Sunday, October 04, 2009

தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்



கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி.

சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமக்கு சொந்தம் என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்னார்கள். தமிழர்களோ அதற்கு பதில் சொல்வது போல, தாம் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்றும், சிங்களவர்கள் தமக்குப் பிறகு வந்தவர்கள் என்றும் சொன்னார்கள். சிங்களவர்கள் தமிழர்களை வென்ற துட்ட கெமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்கள் தம்மை நவீன துட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல்லாள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக்கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம், நவீன தமிழீழத்தின் அடிப்படையாகியது.

யாழ்ப்பாணத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருந்த எனது பெற்றோரை போன்றவர்கள், உத்தியோகம் கிடைத்து கொழும்பில் குடியேறிய காலத்தில் இருந்து தமிழ் அடையாளத்தை தேடிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மை சிங்கள இனம் வாழும் கொழும்பு மாநகரில், இந்துக் கோயில்களில் நடக்கும் வெள்ளிக்கிழமை பூசைகளும், திருவிழாக்களும் தமிழ் அடையாளத்தின் பெருமிதங்கள் ஆகின. தமது சொந்த ஊரில் உள்ளதை விட, கொழும்பில் கோயிலுக்கு செல்லும் அதிகமான பக்தர்கள் தமிழ் கலாச்சார உடை அணிவதாக பெருமைப்பட்டனர்.


ஆரம்ப காலங்களில் தமிழ் தேசியவாதக் கருத்துகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கு மாகாணங்களை விட, கொழும்பில் தான் இலகுவில் எடுபட்டது. அதற்குக் காரணம்:
1. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு வெடிக்கும் இனக்கலவரங்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனேகமாக கொழும்பு மாநகரத்தில் மட்டுமே இடம்பெறும். அவர்களது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கும் சிங்களப் போலிசும், குண்டர்களும், தொடர்த்து பிற தமிழர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டுவார்கள். அப்போதெல்லாம் கொழும்புத் தமிழர்கள் பேரினவாத அடக்குமுறைக்கு முகம் கொடுத்த அளவிற்கு, குறிப்பாக வட மாகாணத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.
2. கிழக்கு மாகாணத் தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களினால் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைமையில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் இருந்ததால், சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் முதன்மைப் பிரச்சினையாகவில்லை. மேலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலங்கை ஏழைத் தமிழர்கள்.
3. தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள், அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கொழும்பிலும், சிங்களப் பகுதிகளிலும் நிறைய சொத்துகள் இருந்தன. ஐம்பதுகளில் பண்டாரநாயக்க பிரதமரான பின்னர் நிலா உச்சவரம்புச் சட்டம் மூலம் பெருமளவு காணிபூமிகள் பறிக்கப்பட்டன.
4. கொழும்பில் நகரமயப்பட்ட சமுதாயத்தில், சாதிவேற்றுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அனைவருடனும் கலந்து பழக வேண்டிய நிலைமை. அப்படியான சூழலில் தேசிய இன அடையாளம் உருவாவது இயற்கையானது. யாழ் குடாநாட்டில் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவம் இன்னும் எஞ்சியிருந்தது. அங்கே தமிழன் என்ற இன அடையாளம் ஏற்பட சாதிய அடக்குமுறை தடையாக இருந்தது. இதே நிலைமை புலம்பெயர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்ததை பின்னர் பார்க்கலாம்.

அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு பாடசாலை தொடங்கிய போது, எம்மைப் போல கலவரத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். "அகதிகள் தங்கியிருந்த வகுப்பறைகள்" என்ற யதார்த்தம் பல மாணவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தது. இருப்பினும் கலவரம் பற்றிய தமது அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழங்கிக் கொண்டிருந்த தேசியவாதக் கருத்துகள் எமது பாடசாலைக்குள்ளும் புகுந்து கொண்டது. அவர்களது பெற்றோரிடமிருந்தே அரசியலும் வந்தது. வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைக்கும் கோரிக்கை மாணவர்களையும் வசீகரித்திருந்தது. தமிழ் ஈழம் எப்படி இருக்கும் என்று ஆளுக்கொரு கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத மாணவர்களும் இருந்தனர். அவர்கள் அனேகமாக மலே, அல்லது இந்திய வம்சாவழியினர்.

ஒரு சில வருடங்களுக்குப் பின்னர், "பாதுகாப்புக் காரணங்களுக்காக" எமது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தது. அதாவது ஒரு சிங்கள இடத்தில் வாழ்வதை விட, தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு சில வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறப்போகின்றமை பற்றி அப்போது யாருக்கும் தெரியாது. 1977 ம் ஆண்டிற்கு முன்னரே, வட இலங்கையில் புலிகள் என்ற தலைமறைவு இயக்கம் இயங்கி வருவதை பற்றி ஊடகங்கள் மூலமாக பலர் அறிந்திருந்தனர். ஆனால் 1983 ம் ஆண்டு வரை அரசாங்கமும், மக்களும் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. சில தீவிரவாத இளைஞர்களை பொலிஸ் படை சமாளித்து விடும் என்று நம்பினார்கள். இலங்கை இராணுவமும், விமானப்படையும், கடற்படையும் யாழ் குடாநாட்டில் சிறிய அளவில் நிலை கொண்டிருந்தன. இந்த முப்படைகள் சிறி லங்காவின் சரித்திரத்தில் எந்தவொரு போரிலும் ஈடுபட்டிருக்கவில்லை. வருங்காலத்தில் மிகப்பெரிய போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.

இங்கிலாந்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே செல்லக்கூடிய Oxford பலகலைக்கழகத்தில் பயின்ற ஜூலியஸ் ரிச்சார்ட் என்ற ஜெயவர்த்தன(ஜே.ஆர்.), இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவான காலம் அது. அதற்கு முன்னர் சிறிமாவோ தலைமையில் ஆட்சி செய்த (1970-1977) சோஷலிச அரசு நகர்ப்புறங்களில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டிருந்தது. கடைகளுக்கு முன்னாள் நீண்ட வரிசை நிற்பது அப்போது சர்வசாதாரணம். உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்தன. வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் காட்டில் மழை பெய்தது. யாழ்ப்பாண படித்த வாலிபர்களை கூட வன்னியில் சென்று விவசாயம் செய்யும்படி அரசு ஊக்குவித்தது. இதனால் அரைப் பாலைவனமான யாழ் குடாநாட்டில் விவசாயம் செய்வதை விட வன்னியில் அதிக பயன் பெறலாம் என் கண்டு கொண்டனர். இருப்பினும் 1977 தேர்தலில் மேற்குலக சார்பு ஜெயவர்த்தன ஈட்டிய மாபெரும் வெற்றி, விவசாயிகளின் பொற்காலத்திற்கு முடிவு கட்டியது.

ஜெயவர்த்தனையின் யு.என்.பி. கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய நவ-லிபரல்வாத அரசு, ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவுமணி அடித்தது. தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் தான், திறந்த சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜே. ஆர். மறைவிற்கு அமெரிக்காவின் டைம் சஞ்சிகை அஞ்சலி செலுத்துமளவிற்கு மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. 1983 ம் ஆண்டு தமிழர்க்கெதிரான இனக்கலவரத்தை யு.என்.பி. கட்சி தலைமையேற்று நடத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ஜே.ஆர். கம்யூனிச, அல்லது சோஷலிச கட்சிகளை கலவரத்திற்கு காரணமாக காட்டி தடை செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே அடியில் தமிழர்களையும், சிங்கள இடதுசாரிகளையும் வீழ்த்தினார்.

சர்வாதிகாரம் என கருதப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வந்தது. நவ-லிபரல் அரசு, ஒரு பக்கம் முழு இலங்கை மக்கள் மீதும் தாராள பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமுல் படுத்திக் கொண்டே, மறு பக்கத்தில் தமிழர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் மீது இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழரின் கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்ததை கூட பொறுக்க முடியாமல், விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. சனத்தொகையில் 12 வீதமான ஈழத்தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் அளவுக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவப் படுத்தியமை, அரசின் கண்ணில் முள்ளாக துருத்தியது. அதனால் தரப்படுத்தல் கொள்கை மூலம் யாழ்ப்பாண மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை மட்டுப்படுத்தியது.

________________________________________________________________________________

கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி. "உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.

Monday, February 23, 2009

இலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)

இலங்கையில் சமாதானத்திற்கான தேவையை வலியுறுத்தி தமிழ்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரு பாடல். (Thanks to: Ya TV)