Tuesday, May 16, 2017

அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சிய தொழிற்புர‌ட்சி


தொழிற்புர‌ட்சியின் இருண்ட‌ ப‌க்க‌ம். அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சி வ‌ள‌ர்ந்த‌ நெச‌வாலைக‌ள். 19ம் நூற்றாண்டு வ‌ரையில் இங்கிலாந்தில், அனாதைச் சிறுவ‌ர்க‌ள் நெச‌வுத் தொழிற்சாலைக‌ளில் அடிமைக‌ளாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

கிறிஸ்த‌வ‌ ம‌டால‌ய‌ங்க‌ள் அனாதைக் குழ‌ந்தைக‌ளை பொறுப்பெடுத்தாலும், ப‌ராம‌ரிப்புச் செல‌வுக்காக‌ ஒரு நெச‌வாலை முத‌லாளிக்கு விற்ப‌து வ‌ழ‌மையாக இருந்தது. அவ‌ர்க‌ளுக்கு 7 வ‌ய‌தாகும் பொழுது வேலைக்கு செல்ல‌ வேண்டும். தொட‌ர்ந்து 14 வ‌ருட‌ங்க‌ள் அடிமையாக‌ வேலை செய்து வ‌ந்தன‌ர்.

அதாவ‌து அந்த‌ சிறார் தொழிலாள‌ருக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌தில்லை. இருப்பிட‌மும், உண‌வும் கொடுத்து இல‌வ‌ச‌மாக‌ வேலை வாங்கினார்க‌ள். ச‌த்துண‌வு கொடுப்ப‌தில்லை. சிறு துண்டு குர‌க்க‌ன் மா ரொட்டி, சூப், பிஸ்க‌ட் இவ்வ‌ள‌வு தான் ஆகார‌ம்.

வேலையும் க‌டின‌மான‌து. காதை செவிடாக்கும் இரைச்ச‌லுட‌ன் இய‌ங்கும் இய‌ந்திர‌ங்க‌ள். பாதுகாப்பு ஏற்பாடுக‌ள் எதுவுமில்லை. அடிக்க‌டி யாராவ‌து விப‌த்தில் சிக்கி ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கும். அவ்வாறு இற‌க்கும் சிறுவ‌ர்க‌ளை தூர‌த்தில் இருக்கும் ம‌யான‌த்தில் கொண்டு சென்று புதைப்பார்க‌ள்.

மெதுவாக‌ வேலை செய்யும் சிறுவ‌ர்க‌ளுக்கு ச‌வுக்கால், அல்ல‌து பிர‌ம்பால் அடித்து த‌ண்ட‌னை கொடுப்ப‌து வ‌ழ‌மை. த‌ப்பியோடி பிடிப‌ட்டால் அடித்து துவைத்து விடுவார்க‌ள். விப‌த்தில் சிக்கி விர‌ல் துண்டிக்க‌ப் ப‌ட்டாலும், ம‌ருந்து க‌ட்டிக் கொண்டு திரும்ப‌ வேலைக்கு போக‌ வேண்டும்.

ஆடை உற்ப‌த்திக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌டும் ப‌ருத்திப் ப‌ஞ்சில் இருந்து வரும் துக‌ள்க‌ள் நுரையீர‌லைத் தாக்கும். நாசித் துவார‌ங்க‌ளை அடைக்கும். புற்றுநோயும் வ‌ர‌லாம். இத‌னால் க‌டும் நோய்வாய்ப் பட்ட‌ சிறுவ‌ர்க‌ள் மர‌ண‌ம‌டைவ‌து சாதார‌ண‌ விட‌ய‌ம்.

சிறுவ‌ர்க‌ள் தானே என்று முதலாளிக‌ள் அது குறித்து இர‌க்க‌ம் காட்ட‌வில்லை. இலாப‌த்தை பெருக்குவ‌த‌ற்காக‌ சொற்ப‌ உண‌வையும் குறைத்து ப‌ட்டினி போட்டார்க‌ள். சிறுவ‌ர்க‌ள் ப‌சிக் கொடுமையால் ப‌ன்றிக்கு கொடுத்த‌ உண‌வையும், இலை குழைக‌ளையும் சாப்பிட்டார்க‌ள்.

அந்த‌க் கால‌த்தில் பிரிட்ட‌னில் பொதுக் க‌ல்வி இருக்க‌வில்லை. 1870 இலிருந்து தான் பெரும்பாலான‌ பிரிட்டிஷ் பிள்ளைக‌ள் ப‌ள்ளிக்கூட‌ம் செல்ல‌த் தொட‌ங்கின‌ர்.

அனாதைக் குழ‌ந்தைக‌ள் அடிமைக‌ளாக‌ வேலை வாங்க‌ப் படுவ‌து பிரிட்டிஷ் அர‌சுக்கு தெரிந்தாலும் க‌ண்ணை மூடிக் கொண்டிருந்த‌து. ப‌ல‌ தொழில‌திப‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌, அல்ல‌து அர‌சிய‌ல் ப‌த‌விக‌ளில் இருந்த‌ன‌ர். அத‌னால் பொது ம‌க்க‌ளுக்கு த‌க‌வ‌ல் செல்ல‌ விடாம‌ல் அமுக்க‌ப் ப‌ட்ட‌து.

தொழிற்சாலை ந‌ட்ட‌த்தில் மூட‌ப் ப‌ட்டாலும், சிறுவ‌ர்க‌ளுக்கு விடுத‌லை கிடைக்காது. அவ‌ர்க‌ளுக்கு 21 வ‌ய‌தாகும் வ‌ரையில் இன்னொரு முத‌லாளிக்கு கீழே வேலை செய்ய வேண்டும்.

த‌ன‌து 21 வ‌து வ‌ய‌தில் விடுதலை அடைந்த‌ Robert Blincoe என்ற‌ இளைஞ‌ன் பிற்கால‌த்தில் உழைத்து சேமித்த‌ ப‌ண‌த்தில் தானே ஒரு தொழிற்சாலை ஆர‌ம்பித்தான். தொழிலாள‌ர்க‌ளை க‌ச‌க்கிப் பிழியாம‌ல் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்று நிரூபித்தான். அவ‌ன் த‌ன‌து அடிமை அனுப‌வ‌ங்க‌ளை நூலாக‌ எழுதி வெளியிட்டான். அதில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல்க‌ள் பிரிட்டிஷ் ச‌மூக‌த்தை அதிர்ச்சி அடைய‌ வைத்த‌ன‌.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: Historia, 4/2017)


1 comment:

Kasthuri Rengan said...

அதிரவைக்கும் தகவல்...
நூல் குறித்து மேலும் பகிருங்கள்